“பொண்ணுக்கு புடவைதான் அழகு”, “ஸாரி கட்டும்போது வரும் அழகே தனிங்க”, “பெண்ணுக்கான நளினம் புடவையில் தான் இருக்கு”, இப்படியெல்லாம் புடவை பற்றிய கமெண்ட்டுகளை தினமும் கடந்து செல்கிறோம். அதுவும் சுடிதார், குர்தாவில் வேலைக்குப் போகும் பெண் என்றாவது புடவை கட்டிக் கொண்டு போனால், ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளுவார்கள். ‘சூப்பரா இருக்கு, தினமும் புடவை கட்டிட்டு வாங்க’ என்று அட்வைஸ் வேறு வரும்.

பெரும்பாலான இந்தியப் பெண்களின் தினசரி உடையான புடவை, பார்ப்பதற்கு அழகாக, வண்ணமயமாக இருக்கிறது. ஆனால், பெண்கள் உழைப்பதற்கு வசதியாக இருக்கிறதா, என்று கேட்டால் நிச்சயமாக இல்லையென்பது தான் உண்மை. அஞ்சரை மீட்டர் துணியால் உடலைச் சுற்றிக் கொண்டு, தடுக்கி விழாமல் ஓடியாடி உழைக்க முடியுமா ? முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு வீட்டு வேலை செய்யும் போதும், சமைக்கும் போதும், வீடு பெருக்கித் துடைக்கும் போதும், வேகமாக செய்யவிடாமல் இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.

“நாங்கள் புடவை கட்டிக் கொண்டுதானே இத்தனை வருடமாக செய்கிறோம், எங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லையே”, என்று மூத்த பெண்கள் சொல்லலாம். நீங்கள் புடவையை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டீர்கள், அதனால் உங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை, தோழியரே ! எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது. அடித்தட்டுப் பெண்கள், புடவையினால் அதிகம் சிரமப்படுகிறார்கள். வயல் வேலை, கட்டிட வேலை செய்யும் பெண்களெல்லாம், புடவை வசதியாக இல்லை என்பதால், மேலே ஆண்களின் ஷர்ட் ஒன்றை அணிந்து கொள்கிறார்கள், முந்தானையை சரி செய்யும் தொல்லையிலிருந்து தப்பிக்க. ஆனால், ‘மொபிலிட்டி’ எனப்படும் சரளமாக விரைந்து நடக்கும், ஓடும் தன்மையை, புடவையும், உள்பாவாடையும் தடை செய்கின்றன.

நன்றி: அவள் விகடன்

உயரமான இடங்களில் கட்டிட வேலை செய்யும் போது, புடவைக் கட்டிக் கொண்டு பெண்களால் ஏணியில் எளிதாக ஏறமுடியாது. அதனால் அந்த மாதிரி வேலைகள் அவர்களுக்குக் கிடைக்காது, அதற்குத் தகுந்த மாதிரி கூலியும் குறையும்.

அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்களுக்கும் புடவை சிரமமாகத்தான் இருக்கிறது. முந்தானையை சரிசெய்வது, இடுப்பு தெரியாமல் ஏற்றி விடுவது, இறுக்கிப்பிடிக்கும் ப்ரா, ப்ளவுஸ், வேகமாக நடக்கும் போது தடுக்காமல் இருக்க கூடுதல் கவனம் என்று வேலையை விட உடையில் தான் அதிகம் கவனம் இருக்கும்.

புடவை கட்டிக் கொண்டு பஸ்ஸை, ட்ரெயினைப் பிடிக்க ஓடுவது மிகவும் சிரமம், சமயங்களில் ஆபத்தாகவும் முடிகிறது. கூட்ட நெருக்கடியில், பஸ், ட்ரெயினில் முந்தானையை ஒருபுறமும், கைப்பையை ஒருபுறமும் பிடித்துக் கொண்டு, விழுந்துவிடாமல் இருக்க பெண்கள் பெரிய சர்க்கஸே செய்ய வேண்டியுள்ளது. (இதற்கிடையில் சபல ஆண்களின் பார்வையையும், சேஷ்டைகளையும் சமாளிக்க வேண்டும்.) புடவை கட்டிக் கொண்டு டூவீலர் ஓட்டுவதும் கடினம்.

புடவைக்கு ஆகும் செலவை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. புடவையுடன், அதற்கு ஒத்த வண்ணத்தில் உள்பாவாடை, மேட்சாக ப்ளவுஸ் (அதனை தைக்கும் செலவு, சில சமயங்களில் புடவை விலையை விட அதிகம்), ப்ரா என்று எத்தனை உப ஆடைகளை வாங்க வேண்டியிருக்கிறது. சரி, இத்தனை செலவு பிடிக்கும் ஆடை, குறைந்தபட்சம் தற்சார்புடனாவது இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் இல்லை. பெண்கள் வெளியே செல்லும் போது எடுத்துச் செல்லும் வீட்டுச்சாவி, பர்ஸ், செல்போன் வைக்கக்கூட புடவையில் எந்த வசதியும் இல்லை. அதற்காக தனியே கைப்பையை எடுத்துச் செல்ல வேண்டும். (ஆண்களின் சட்டை, பேண்ட்டும் – சட்டையில் உள்புறம் 2 பாக்கெட், வெளிப்புறம் 2 பாக்கெட், பாண்ட்டின் இருபுறமும் பாக்கெட்டுகள் என்று வசதியாக, தனியே கைப்பை எடுக்க அவசியமில்லாமல், வடிவமைக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள்.)

இத்தனை அசவுகரியங்களுடன் எதற்கு இந்த புடவையை தினமும் அணிய வேண்டும் ? “என்னங்க இப்படி கேட்டுட்டீங்க, புடவை நம்ம கலாச்சார உடையாச்சே”, என்று பதில் சொல்கிறார்கள் ஆண், பெண் தோழர்கள். புடவை நமது கலாச்சார உடையா என்பதே விவாதத்துக்குரிய விசயம். போகட்டும், ஒரு பேச்சுக்கு கலாச்சார உடையென்றே வைத்துக் கொண்டாலும், அதை ஏன் தினசரி உடையாக வைத்திருக்க வேண்டும் தோழர்களே? இங்கு மட்டுமல்ல உலகெங்கிலும் பெண்களுக்கான கலாச்சார உடைகள், அணிவதற்கும், உழைப்பதற்கும் வசதியாக இல்லை என்பது தான் உண்மை (சாம்பிளுக்கு ஜப்பானின் கிமோனோ உடை). அதனால்தான், வெளிநாடுகளில் பெண்கள் கலாச்சார உடையை விழாக்காலங்களில் மட்டும் அணிகிறார்கள். அவர்களின் தினசரி உடை, உழைப்பதற்கு ஏற்றதாக, உடலுக்கு வசதியான ஆடையாக இருக்கிறது.

இந்தியப் பெண்களின் தினசரி உடையும் ஏன் இது போல வடிவமைக்கப்படக் கூடாது? பேண்ட், சர்ட்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பாக்கெட்டுகளுடன் கூடிய சுடிதார், குர்தி, பாட்டம் என்று ஏன் இருக்கக் கூடாது? ஏற்கனவே பெண்களின் ஒரு பகுதியினர் இத்தகைய உடைகளுக்கு மாறிவிட்டனர். ஆனால், பெரும்பான்மை பெண்களிடம் இந்த மாற்றம் இன்னும் வரவில்லை. அவர்களின் அன்றாட உடை இன்னும் புடவையாகத்தான் இருக்கிறது. பெண்கள் மாற வேண்டியதுதானே? என்ன பிரச்சனை? என்று கேட்கலாம். பெண்களுக்கு, உடை உட்பட, எல்லா விசயங்களுக்கும் முதலில் குடும்பமும், பிறகு சமுதாயமும் ஒப்புதல் தரவேண்டியிருக்கிறது.

தன் விசயங்களில் முடிவெடுக்கக் கூடிய சுதந்திரமும், உரிமையும் இன்னும் எல்லாப் பெண்களுக்கும் வாய்க்கவில்லை. ஒரு சுடிதார் வாங்குவதற்கு, இன்னும் பல வீடுகளில் பெண்கள், குறிப்பாக கல்யாணமான கிராமத்துப் பெண்கள், போராடிக் கொண்டு இருக்கிறார்கள். கல்யாணமான பெண் புடவைதான் கட்டவேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதி. வயல் வேலை, கட்டிட வேலை செய்யும் பெண்களுக்கெல்லாம், பெட்ரோல் பங்க் பெண்களைப் போல, நாம் இன்னும் பேண்ட் சர்ட் யூனிபார்ம் கொடுக்கவில்லை. குரலற்ற இவர்களுக்கு நாம் எல்லோரும் சேர்ந்துதான் குரல் கொடுக்க வேண்டும். பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை, நம்மை சுற்றியிருக்கும் பெண்களிடம், ‘உனக்கு வசதியான உடையை தினமும் அணிந்து கொள், புடவையை என்றாவது ஒரு நாள் விரும்பினால் கட்டிக் கொள்ளலாம்’, என்று சொல்ல ஆரம்பிக்கலாம்.

உடலை மறைப்பதற்கு உடை தேவை. அது, பெண்கள் தற்சார்புடனும், உழைப்பதற்கு வசதியாகவும், ஆளுமையை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். வேறு சாய்ஸ் இல்லாததாலும், பழக்கத்தினாலும்தான் பெரும்பான்மை பெண்கள் புடவை கட்டுகிறார்கள். வசதியான, எளிய மாற்று உடைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவோம், பழக்கப்படுத்துவோம் தோழர்களே!

புரட்டுவோம்!

முந்தைய கீதா பக்கங்கள் இங்கே:

கட்டுரையாளர்

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.