என் வாழ்நாளில் அப்படி ஒரு நாள் வரும் என்று அன்றுவரை நினைத்ததே இல்லை. சுமார் பத்தாயிரம் பேர் அந்தத் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தோம். அதில் நானும் என் மூன்று பிள்ளைகளும் இருந்தோம். ஒரு வாரம் கழித்து, ஆயுதம் ஏந்திய மனிதர்கள் திரள்திரளாக தேவாலயத்துக்குள் வந்தார்கள். வெறிகொண்டு எங்களைத் தாக்கத் தொடங்கினார்கள்.
அது ஒரு பயங்கரமான அனுபவம். எங்கும் கத்திகள், கோடாரிகள், கைக்குண்டுகள், துப்பாக்கிகள்—அவற்றின் சத்தமும் காயமடைந்தவர்களின் அலறலும் தேவாலயத்துக்குள் எதிரொலித்துக்கொண்டே இருந்தது. சுவரில் படிந்திருக்கும் ரத்தத்தின் முதல் அடுக்கே இன்னும் உலரவில்லை. அதன் மேல் வெட்டப்பட்ட உடல்களிலிருந்து பீறிட்ட ரத்தம் தேவாலயச் சுவர்களையே உதிரச்சாயம் பூசியதுபோல் சிவப்பாக்கியிருந்தது.
தரையில் எங்குக் கால் வைத்தாலும் பிசுபிசுப்பாக இருந்தது. பயத்தில் நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் நெருக்கமாக நின்றுகொண்டோம். அவர்கள் கூட்டத்துக்குள் நுழைந்து ஒருவரை இழுத்து வெட்டினார்கள். எங்களின் மிரண்ட விழிகளும் நடுங்கிய தேகமும், அவர்களை வெறியேற்றியது. ஒருவரைக் கொன்றவுடன் உடலை ஓரமாக இழுத்துவைத்தார்கள். மீண்டும் ஒருவரை இழுத்து துடிக்க துடிக்கக் கொன்றார்கள். குவித்து வைத்திருந்த உடல் மேல் இழுத்துப் போட்டார்கள். உடல் மேல் மற்றோர் உடலென்று அடுக்கிக் கொண்டே போனார்கள். அடுத்து அவர்களுக்குள் போட்டியுணர்வு தோன்றியிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஆளுக்கொரு விதமாக கொல்லத் தொடங்கினார்கள். அந்தக் காட்சியை முழுமையாக விளக்க முடியாது. சத்தம், அழுகை, அலறல்… கொலைகள் நிற்கவே இல்லை.
சுமார் எட்டு மணி நேரம் தொடர்ந்து கொன்றபின் அவர்கள் களைத்துப் போனார்கள். அப்போதுதான் கொலைகள் நின்றது. இறப்பின் விளிம்பிலிருந்து இன்று தப்பித்துவிட்டோம் என்று நினைத்தபோது, உயிருடன் இருந்த பெண்களைத் தேர்ந்தெடுத்து பாலியல் வன்முறைக்கு உட்படுத்தத் தொடங்கினர். உடல் அங்கங்களை மறைத்துக் கொள்ள ஏதுமில்லாமல் நீள்தரையில் பல நிர்வாணங்கள்.
அந்தப் பெருங்கூடத்தில் எண்ணற்ற வன்புணர்வுகள் நிகழ்ந்தன. இறந்த உடல்கள் அகற்றப்படாததால் அவை அழுகத் தொடங்கின. அவற்றின் அருகிலேயே நாங்கள் தங்க வேண்டியிருந்தது.
மூன்றாம் நாளில் அவர்கள் கொலை செய்யவில்லை. தேவாலயத்தின் பல மூலைகளில் இருந்த பெண்களை நாள் முழுவதும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினர். நான் அந்த நாளில் பலியானவள். என் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர்கள் என்னை வன்புணர்ச்சி செய்தனர். பல வன்புணர்வுகளுக்கு சாட்சியாக இருந்ததால், நானும் தயாராகிவிட்டதுபோல் தோன்றியது. முதல் ஐந்து பேரை மட்டுமே நினைவில் வைத்திருக்கிறேன். அதன் பிறகு என் உணர்வு மங்கிவிட்டது. நான் மயக்கத்தில் இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்தனர்.
அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. மூன்று குழந்தைகளையும் அழைத்துச் செல்வது சாத்தியமில்லை. மனத்தில் ஒரு போராட்டம் நடந்தது. ஒரே ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடினால் பிழைக்கலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
என் மூன்று குழந்தைகளையும் பார்த்தேன். யாரைத் தேர்ந்தெடுப்பது என்று மனம் உடைந்தது. இறுதியில் மனம் சொன்னபடி முதல் குழந்தையை எடுத்துக்கொண்டு தேவாலய வாசலை நோக்கி ஓடினேன். பலரும் என்னுடன் ஓடிக்கொண்டிருந்தனர். திடீரென நான் விழுந்தேன். என் மகனைக் காப்பாற்ற என் உடலைக் குறுக்கி அவன் மிதிபடாதபடி காத்தேன்.
அப்போது மக்கள் என்மேல் பல அடுக்குகளாக விழுந்தனர். ஆயுதம் ஏந்தியவர்கள் மேலிருந்தவர்களை வெட்டிக் கொன்றனர். முதல் அடுக்கு, இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு… அடுத்ததாக நான் தான் என்று உணர்ந்தேன்.
மனிதர்களை வெட்டியபோது அவர்களின் ரத்தம் எங்கள்மேல் சொட்டியது. நான் மிகவும் தாகமாக இருந்ததால், என் வாயில் வந்த ரத்தத்தை குடித்தேன். அதன் சுவை உப்பாக இருந்தது. அவர்கள் என் அடுக்கை அடைந்தபோது, “இவள் ஏற்கனவே இறந்துவிட்டாள்” என்று ஒருவன் சொன்னான். நான் இறந்தவளாக நடித்தேன்.
களைப்பில் மயங்கிய நான், விழித்தபோது காலை மூன்று மணி ஆகியிருந்தது. நான் எங்கு இருக்கிறேன் என்று புரியவில்லை. பின்னர் தேவாலயமும் சுற்றியிருந்த உடல்களும் நினைவுக்கு வந்தன. மெதுவாக எழுந்து, இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மிதித்தபடி நடந்தேன். என் மகன் உயிருடன் இருந்தான். ஆனால் பின்னால் விட்டுச் சென்ற என் மற்ற இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதாகப் பின்னர் அறிந்தேன்.
இது வெறும் கதையல்ல. ஒரு பெண்ணின் அனுபவம். surf survivor fund எனும் இயக்கம் மூலம் ஒரு பெண் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார்.
இந்தக் கொடூர சம்பவம் நடந்தது 1994 ஆம் ஆண்டு. உலக வரலாற்றில் மிகப்பெரிய இனப்படுகொலைகளில் ஒன்றாக ருவாண்டா படுகொலைக் குறிப்பிடப்படுகிறது. ஹுட்டு இனத்தவர்கள் டுட்சி இன மக்கள்மேல் நடத்திய கொடூரம் அது. உலக நாடுகள் பெரும்பாலும் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தன.
சுமார் எட்டு லட்சம் பேர் கொல்லப்பட்டதாகக் கணக்கிடப்படுகிறது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அந்த வன்முறையின் விளைவாகப் பிறந்தவர்கள். இனப்படுகொலையில் பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட மிகக் கொடூரமான நிகழ்வாக இது நினைவுகூரப்படுகிறது.
இந்த இனப்படுகொலையிலிருந்து மீண்டு வந்த பெண்களின் கதைகள் ஒவ்வொன்றும் மனதை உலுக்குகின்றன. அவர்களின் துயரம் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் பிறகான வாழ்க்கை இன்னும் பெரிய போராட்டமாக இருந்தது.
மனித வரலாற்றில் பெண்கள்மீது நிகழும் வன்முறை புதிதல்ல. அது சமகாலப் போர்களில் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கதைகளிலும் காவியங்களிலும் அதன் நிழல் காணப்படுகிறது.
நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம்.
உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான கில்கமெஷ் காவியத்தில் வரும் பெண்களின் நிலை பற்றிப் பார்க்கலாம்.
கில்கமெஷ் காவியம் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. உலகின் பெரும் மதங்கள் தோன்றியிராத காலம்.
இளம்பிராயத்தில் பெரிய வீரனாயிருக்கிறான் கில்கமெஷ். காளையைப் போன்ற சக்தி வாய்ந்த உடலைக் கொண்டிருக்கிறான். உண்மையில் இந்த வரியை படிக்கும்போது, நூறு பேரை அசட்டையாக அடித்துக் கொள்ளும் சமகால ஆண் நாயகர்கள் தோன்றாமல் இல்லை. ஆண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இந்தச் சித்தரிப்பு இன்றுவரை தொடர்கிறது.
அவனை வெல்ல யாருமில்லை என்கிற இறுமாப்பில், பார்க்கும் பெண்களையெல்லாம் அடைய ஆசைப்படுகிறான். மக்களுக்கு அவனுடைய செயல்கள் மேல் அதிருப்தி வருகிறது. அவனை நேரடியாக எதிர்க்க முடியவில்லை. அதனால் அருரு என்னும் பெண் தெய்வத்திடம் முறையிடுகிறார்கள்.
அருரு, கில்கமெஷை எதிர்க்க அவனைப்போல பலம்வாய்ந்த ஒருவனைப் பூமிக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்கிறாள். கொஞ்சம் களிமண்ணை எடுத்துப் பிசைந்து எறிகிறாள். அது பூமியில் விழுந்து ’என்கிடு’ என்கிற மனிதனாகப் பிறக்கிறது.

என்கிடுவுக்குள் போர்க் கடவுளான நினுர்தாவின் ஆவி இருந்ததாக நம்பப்பட்டது. என்கிடு நீண்ட கூந்தலையும், முடி நிறைந்த உடலையும் கொண்டவர், மேலும் அவர் ’மனிதகுலத்தின் அப்பாவி’ என்று விவரிக்கப்படுகிறார். இயற்கையில் வளர்ந்ததால், அவருக்கு நாகரிகம் பற்றி எதுவும் தெரியாது என்றும் கதையில் வருகிறது. இங்கு என்கிடுவைப் பற்றிய சித்தரிப்பு, காட்டில் வாழ்ந்த தொல்பழங்கால மனிதனை நினைவு படுத்துகிறது.
என்கிடுவைப் பற்றிய தகவல் கில்கமெஷுக்குத் தெரிய, ஒரு பாலியல் தொழிலாளரை நிர்வாணமாக என்கிடு முன் நிறுத்தி, அவனை மோகம்கொள்ளச் செய்கிறான். தாதியின் அழகில் மயங்கிய என்கிடு அவளுடன் ஏழு பகல் ஆறு இரவுகள் உறவுகொள்கிறான் என்று கதை நகர்கிறது.
காளையைப் போன்ற வீரம் படைத்த ஒருவன் மற்றொரு வீரனை எதிர்க்க ஒரு பெண்ணையே பகடையாகப் பயன்படுத்துகிறான். இந்தச் சம்பவமும் தற்காலக் கதைகளில் வரும் வில்லன்கள் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
என்கிடு காட்டில் வாழ்ந்து காட்டிற்கு மட்டுமே பழக்கப்பட்டவர். பெண்ணுடன் உறவுகொண்டதில் அவருடைய சக்தி குன்றிவிட்டதாகக் கதையில் வருகிறது. பின் கில்கமெஷைச் சந்திக்க உருக் நகரத்திற்குச் செல்கிறான் என்கிடு.
அப்பொழுது கில்கமெஷின் ஆணவமும் அதிகாரமும் மிகவும் அதிகமாகிறது. மக்கள் மன்னனை எதிர்த்து நிற்கின்றனர். திருமணமாகப் போகும் ஒவ்வொரு மணப்பெண்ணுடனும் முதலில் அவன்தான் உறவுகொள்ள வேண்டும் என்று அவன் இயற்றிய சட்டத்தை வெறுத்தனர் மக்கள். என்கிடு மட்டுமே கில்கமெஷை எதிர்க்க முடியும் என்று நினைக்கின்றனர்.
இருவருக்கும் போர் மூளுகிறது. போரில் என்கிடு தோற்றாலும், கில்கமெஷ் என்கிடுவின் பலத்தால் ஈர்க்கப்படுகிறான். அவனிடம் நட்பு பாராட்ட விழைகிறான். என்கிடு கில்கமெஷுக்கு அவனுடைய தவறுகளைப் புரியவைக்கிறான்.
மக்கள் அவர்கள் இருவரையும் ஏற்றுக்கொள்கின்றனர். இஷ்தர் என்கிற பெண் கடவுள் கில்கமெஷ் மீது காதல்கொள்கிறாள். ஆனால் அவனோ மறுத்துவிடுகிறான். கோபம்கொண்ட இஷ்தர், கடவுளர்களின் காளையை கில்கமெஷ் மீது ஏவிவிடுகிறாள். நண்பர்கள் இருவரும் அந்தக் காளையை அடக்க முற்பட்டனர். நடந்த போரில் என்கிடு இறந்துவிடுகிறான். என்கிடுவின் இறப்பு கில்கமெஷைப் பெரிதும் பாதிக்கிறது.
இந்தக் காவியத்தில் வரும் முக்கியப் பெண்கள் அருரு, ஷம்ஷாத், நிம்சன், இஷ்தர்.
அருரு படைப்புக் கடவுள். அவள்தான் என்கிடுவை உருவாக்குகிறாள். களிமண்ணையும் தண்ணீரையும் கொண்டு என்கிடுவைப் படைத்ததாக இதிகாசம் கூறுகிறது.
ஷம்ஷாத் கோயில் தேவதாசி. அவள்தான் என்கிடுவை மோகம்கொள்ளச் செய்கிறாள். என்கிடு உருக் நகரத்திற்கு வரக் காரணமாக இருக்கிறாள்.
நிம்சன் கில்கமெஷின் அன்னை. கில்கமெஷ் தனக்கு வரும் கனவுகளை அன்னையிடம் கூறுகிறான். அதற்கான பொருள் கூறுகிறாள். அவனை வழிநடத்துவதாகக் கதையில் வருகிறது.
இஷ்தர் என்பவள் காதலுக்கான பெண் கடவுள். அவள் கில்கமெஷ் மீது காதல் கொள்கிறாள். ஆனால் கில்கமேஷ் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அதனால் என்லில் (காற்று) கடவுளிடம் முறையிடுகிறாள். சொர்க்கத்தின் காளையை உருக் நகரத்திற்கு அனுப்புகிறாள்.
மேலே கூறப்பட்ட கதைச் சுருக்கத்தில் இருந்த பெண்களின் முக்கியத்துவம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தால், அவர்கள் அனைவரும் குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் போல் தோற்றமளிப்பார்கள்.
தன்னை வீரன் என்று நிரூபணம் செய்த ஆண்மகன், முதலில் செய்யும் காரியம் இதுதான். பார்க்கும் பெண்களையெல்லாம் அடைய நினைப்பது. அதைத்தான் கில்கமெஷ் செய்தான்.
கில்கமெஷ் மூன்றில் இரண்டு பங்குக் கடவுளாகவும், மூன்றில் ஒரு பங்கு மனிதனாகவும் சித்தரிக்கப்படுகிறான். அரைபுராண மன்னன், பெண்களின் மீது பெரும் மோகம் கொண்டவனாகவும், அடக்குமுறைகளின் ஏகாதிபதியாகவும் இருக்கிறான். நம் மொழியில் அவனை நிச்சயம் கடவுள் என்று கூறமாட்டோம். அவனை அரைக்கடவுளாக சித்தரிப்பதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது ஒன்றுதான். நான்காயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையை மக்கள் பெரும் தவறாகப் பார்க்கவில்லை. மக்கள் அனைவரும் கடவுளிடம் முறையிட்ட பின் அருரு என்னும் பெண் தெய்வம், என்கிடுவைப் படைக்கிறாள். என்கிடுவின் பழக்கத்திற்குப் பின் கில்கமெஷ் மேன்மை பொருந்திய மன்னனாக மாறியதும், மக்கள் கில்கமெஷை ஏற்றுக் கொள்கின்றனர். அதுவரை அதிகாரம் செய்ததும், பெண்களைத் துன்புறுத்தியதும் ஒரு பொருட்டே அல்ல என்பதுபோல.
என்கிடுவும் கில்கமெஷும் நண்பர்கள்தானா என்கிற சந்தேகம்கூட இருக்கிறது சில ஆய்வாளர்களுக்கு. ஏனெனில், அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டு சண்டையின் இறுதியில் நண்பர்கள் ஆயினர்.
இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இஷ்தர் என்னும் பெண் தெய்வத்தை கில்கமேஷ் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாகக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். அக்கேடியன், அசிரியன் இன மக்களுக்கு அவள் பெரும் கடவுளாக இருந்திருக்கிறாள்.
அன்னுனாக்கி என்பது வான் கடவுளர்கள். நம்முடைய தேவர்களைப் போல. அனு – சூரியன், கீ – பூமி, என்லில் – காற்று என்று கடவுளர்களின் தொகுப்பில் அவளும் ஒருத்தி. ஆனால் பின்னொரு காலத்தில் கில்கமெஷ் மேல் அவள் ஆசைகொண்டது போல் சொல்வதில் இருக்கும் மறைமுகமான கருத்து ஒன்றுதான். ஒரு கடவுள் மனிதனான கில்கமெஷ் மேல் காதல்கொண்டு, அதை அவன் புறக்கணித்தான் என்று கூறுவதில், அவனுடைய நாயகத்தன்மை கூடுகிறது. மீநாயகனாக உருவெடுக்கிறான்.
கில்கமெஷ் கதையில் அவன் அசாத்திய நாயகனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். அவனுடைய நாயகத் தன்மையை ஏற்றிக் கூற, கடவுளாகிய இஷ்தரின் குணாதிசயம் இப்படிச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.
மேலும் தன்னுடைய ஆளுகைக்குக் கீழ் இருந்த உருக் நகரத்தில், நினைத்த நேரத்தில் எல்லாம் நினைத்த பெண்களுடன் உறவு கொண்டவன், இஷ்தரை நிராகரிக்க என்ன காரணம் இருக்கிறது. அவன் என்கிடுவைச் சந்தித்த பின்னர் மனம் மாறிவிட்டான் என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஆராய்ச்சியாளர்கள் இன்னொரு காரணமும் கூறியிருக்கிறார்கள். என்கிடு அருரு என்னும் தாய் தெய்வத்தால் உருவாக்கப்பட்டவன். அவன் காட்டுக்குள் விலங்குகளுடன் வாழ்ந்தபோது பலமற்றவனாக இருந்திருக்கிறான். ஆனால் கோயில் பாலியல் தொழிலாளருடன் உறவு பூண்டதால் நாகரிகம் உள்ள மனிதனாக மாறிவிட்டான் என்றும் கதையில் வருகிறது. ஒருவேளை என்கிடுவும் கில்கமெஷும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருக்கலாம் என்றுகூட கூறுகின்றனர். பெண்களின்பால் கில்கமெஷுக்கு இருந்த ஆர்வம் குறைந்துவிட்டதால் மட்டுமே இப்படி ஒரு முடிவுக்கு அவர்கள் வரவில்லை. கதையில் என்கிடுவும் கில்கமெஷும் சண்டையிட்டு முடிந்தபின்னர், முத்தமிட்டுக் கொள்வதாகவும் கட்டியணைத்துக் கொள்வதாகவும் வருகிறது. ஒரு மணமகளைப் போல் என்கிடுவை கில்கமெஷ் விரும்பினான் என்றும் வருகிறது.
உலகத்தின் மிகப்பழைய இலக்கியமான கில்கமெஷ் காவியம், உண்மையில் கில்கமெஷ் என்னும் அசாத்திய நாயகனை உலகிற்கு உணர்த்தவே எழுதப்பட்ட காவியம். ஒரு கோட்டை பெரிதாகக் காட்ட, பக்கத்தில் ஒரு சிறிய கோட்டைப் போட்டால் போதும். அந்த வகையில்தான் இரண்டாயிரம் வருடங்களாக வணங்கப்பட்ட இஷ்தர் என்னும் பெண் கடவுளை கில்கமெஷ் என்னும் காவியம் சிறுமைப்படுத்திக் காண்பிக்கிறது.
கில்கமேஷ் காவியம் அவருடைய காலத்திற்கு பின்னால் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதிகரத்தை மீட்டெடுக்கவும், சமூக கட்டமைப்பை பாதுகாக்கவும், கில்கமேஷ் என்ற நாயகன், மீநாயகனாக மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.
உலகின் மிகப் பழமையான இலக்கியங்களில் ஒன்றான கில்கமெஷ் காவியம், ஒரு வீரனின் கதையை மட்டும் சொல்லவில்லை. அந்தக் கால சமூகத்தின் அதிகார அமைப்பையும், அதில் பெண்கள் எவ்வாறு பார்க்கப்பட்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தும் ஒரு வரலாற்றுக் கண்ணாடியாகவும் அது நிற்கிறது.
அதிகாரம் மற்றும் ஆணவத்தின் கருவியாகப் பெண்ணை வன்புணர்வுக்குள்ளாக்கும் இழிசெயல் மனித வரலாறு தொடங்கிய காலத்திலிருந்தே தொடர்ந்துவருவதுபோலத் தோன்றுகிறது.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட காவியங்களிலிருந்து இன்றைய போர்கள்வரை, பெண்களின் உடல் இன்னும் அதிகாரத்தின் போர்க்களமாகவே இருந்து வருகிறது.
(இஷ்தரைப் பார்க்கும்போது நமது துர்கையின் நினைவு வருகிறது. துர்கை சிங்கத்தின் மீது அமர்ந்திருப்பாள். இஷ்தர் சிங்கத்தின் மீது ஒரு காலை வைத்திருக்கிறாள். பல கைகளும் பல ஆயுதங்களும் இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. புராணக் கதைகளில் இம்மாதிரி இருக்கும் ஒற்றுமைகள், கதை ஓரிடத்தில் உருவாகியிருக்கிறது என்பதை நமக்கு கூறுகிறது. கதை சொல்லிகளான மனிதர்கள், தங்களின் கற்பனைத் திறனைச் சேர்த்து, அதைப் பல தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார்கள்.)
படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.





