“மேடம், இது திராட்சை ஊறுகாய், சாப்பிட்டுத்தான் பாருங்களேன்…”

“என்னது? திராட்சையில ஊறுகாயா?” முகத்தைச் சுழித்தவளை வற்புறுத்தி சுவை பார்க்கச்சொல்லி உள்ளங்கையில் சாறும் காயுமாய் ஊறுகாயை வைத்தார் அந்த திராட்சைத் தோட்டத்தில் பணிபுரியும் சகோதரி.

ரத்தச்சிவப்பில் உள்ளங்கையில் பரவிக்கிடந்த சாற்றை, விருப்பமில்லாமல் நுனிநாக்கில் மெல்லிதாக வைத்தவளின் நாவின் உணர்வு மொட்டுகளை, புளிப்பும் உறைப்பும் இனிப்பும் கலந்த அந்தச்சுவை தூண்டிவிட, கண்களை மூடி சப்புக்கொட்டுகிறேன்.

இறுதியாக சாற்றில் ஊறிக்கிடந்த உலர் திராட்சையை கடிக்கையில்…ஸ்ஸ்ஸ்… ஆத்தீ… என்னவொரு சுவை? “இந்த திராட்சை சோப்பை யூஸ் பண்ணிப்பாருங்க, திரும்ப இதை வாங்குவதற்காகவே இங்க வருவீங்க…” நானும் ஆனந்தியும் ஒருவரையொருவர் பார்த்து அப்பெண்ணின் வியாபாரத்திறனை வியந்துகொண்டே ஆளுக்கொரு சோப்பை வாங்கிக்கொள்கிறோம். அழகான திராட்சை நிறத்தில், ஓவல் வடிவத்திலிருந்த அந்த சோப்பிலிருந்து அப்படியொரு திராட்சை மணம்! இது மட்டுமல்ல, திராட்சை ஜாம், திராட்சை சர்பத், திராட்சை ஜூஸ், திராட்சை டீ, திராட்சை கெட்டி சர்பத், திராட்சை ஒயின், உலர் திராட்சை என திராட்சையால் மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் நிரம்பி வழிகின்றன அந்த திராட்சைக்கொடிகளின் கீழமைந்த விற்பனையகத்தில்.

சித்திரை மாத கடும் வெப்பத்தில், ஒப்பனையோடு சேர்ந்து உடலும் உருகிக்கொண்டிருக்கையில்தான், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் திராட்சைக் கொடிகளின் நிழல்கள் எங்களைத் தற்காலிகமாகக் காப்பாற்றின. பெங்களூரிலிருந்து வந்திருந்த தோழி ஆனந்திக்கும், சாத்தூரிலிருந்து வந்திருந்த மல்லிகா அக்காவிற்கும் அடர் ஊதா நிறமும் பழுப்பு நிறமும் கலந்து புது நிறத்தில், கொத்துக்கொத்தாய் தொங்கிக்கொண்டிருந்த பழங்களைப் பார்க்கப் பார்க்க அத்தனை ஆசை! அவர்கள் மட்டுமல்ல, விருந்தினராக வீட்டிற்கு யார் வந்தாலும் எங்கள் ஊர்சுற்றல் பட்டியலில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும் இந்த கம்பம் திராட்சைத் தோட்டங்கள். அந்தப் பெண்கள், சுடச்சுட(!) பழங்களைப்பறித்து பெட்டியில் அடைத்துத் தர, அத்தோடு ஜாம், சர்பத், சோப், பழங்கள் என வேண்டியதை வாங்கிக்கொண்டு, திராட்சை மணம்கமழ வெளியேறினோம்.

வருசநாடு, கொடைக்கானல், தேக்கடி என மூன்று மலைகளுக்கு இடையில் சொகுசாக அமைந்துள்ளது தென்னிந்தியாவின் மிகவும் வளமான நிலங்களில் ஒன்றான கம்பம் பள்ளத்தாக்கு. அங்குள்ள சுருளி மலைச்சாரல் பகுதிகளில் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, புதுப்பட்டி, கம்பம் உள்ளிட்ட கிராமங்களைச்சுற்றி, சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது.

தேனியிலிருந்து கம்பம் நோக்கிச் செல்லும் வழியெங்கும் தென்னையும் வாழையும், பச்சை போர்த்திய வயல்களும் கண்களுக்கு விருந்தளித்து வரவேற்கின்றன. உடலோடு சேர்ந்து உள்ளத்தையும் ஈரமாக்கும் சுருளி அருவியின் சாரல் தெறிக்க, திரும்பும் திசையெங்கும் திராட்சைப் பந்தல்கள். இங்கு பயிரிடப்படும் திராட்சை மஸ்கட் ஹாம்பர்க் (Muscat Hamburg) வகையைச் சேர்ந்தது. அதற்கு நாம் வைத்த செல்லப்பெயர்தான் பன்னீர் திராட்சை!

மஸ்கட் ஹம்பர்க் என்ற பன்னீர் திராட்சை உலகின் பழமையான திராட்சை வகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1850ஆம் ஆண்டு, இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷயர் வெஸ்ட் பார்க்கில் ( West Park, Bedfordshire) ஏர்ல் டி கிரே என்பவரின் தலைமைத் தோட்டக்காரரான சீவர்ட் ஸ்னோ (Seward Snow) என்பவர் சியாவா குரோசா (Schiava Grossa) மற்றும் அலெக்சாந்திரியா மஸ்கட் (Muscat of Alexandria) என்ற இரண்டு வகையான திராட்சை வகைகளை இணைத்து, இந்த மஸ்கட் ஹாம்பர்க் என்ற புதிய திராட்சை வகையை உருவாக்கினார். 

ஐரோப்பாவில் உருவாக்கப்பட்ட இந்த திராட்சை வகை, பின்னர் இந்தியா, தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா என பல நாடுகளுக்கும் பயணம் செய்தது. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கி, இன்று புவிசார் குறியீடு பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது பன்னீர் திராட்சையின் பயணம்.

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் சமயப் பணிகளுடன் தங்கள் வேலையை முடித்துக்கொள்ளாமல், புதிய விவசாயப் பயிர்களையும் இங்கு அறிமுகப்படுத்தினர். அப்படியாகத்தான் இந்தியாவில் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி என்ற கிராமத்தில் திராட்சை முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. பின்னர் ஃபாதர் லார்னி (Fr. Larney) என்கிற பிரெஞ்சு இயேசு சபை பாதிரியாரால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேனி மாவட்டத்திலுள்ள மைக்கேல்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிர்செய்யப்பட்டது.

திராட்சை வளர்ப்பிற்கும் ஒயின் தயாரிப்பிற்கும் புகழ்பெற்ற பிரான்சு நாட்டு மரபில் வந்த பாதிரியார்கள், தங்களது திருப்பலி சடங்குகளுக்குத் தேவைப்படும் ஒயினைத் தயாரிக்கும் நோக்கில்கூட இந்த திராட்சைகளை இங்கு அறிமுகப்படுத்தி இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த பிரெஞ்சுப் பாதிரியார் போட்ட விதை, தமிழ் மண்ணில் வேர்விட்டு, இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விருட்சமாகியுள்ளது.

பிரெஞ்சின் மஸ்கட் ஹாம்பர்க், தமிழ்நாட்டு பன்னீர் திராட்சையாக மாறிய பெயர்க்காரணமும் சுவாரஸ்யமே. இந்த திராட்சைப் பழங்களைச் சாப்பிடும்போது இயற்கையாகவே அதில் வீசும் லேசான பன்னீர் (ரோஜா நீர்) வாசனையும் அதை உண்பதால் உடலுக்குக் கிடைக்கும் குளிர்ச்சியின் காரணமாகவும் உள்ளூர் மக்களால் சூட்டப்பட்ட பெயர்தான் பன்னீர் திராட்சை. இனிப்பும் மிக இலேசான புளிப்பும் பன்னீர் மணமும் கலந்த அதன் சுவை, வேறெந்த திராட்சை ரகத்திலும் சுவைக்கக் கிடைக்காத ஒன்று. விதையில்லா திராட்சைகள் பெருமையாய் வலம் வரும் காலத்திலும் விதைகொண்ட இத்திராட்சைகள் தனக்கென உள்ள பிரத்தியேக சுவையினால் பழம்விரும்பிகளை ஈர்க்கின்றன.

 கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் ஆண்டிற்கு கிட்டத்தட்ட 90000 டன் பன்னீர் திராட்சையை உற்பத்தி செய்கிறார்கள். அதாவது மாநிலத்தின் திராட்சை உற்பத்தியில் கிட்டத்தட்ட 85 சதவீதம் தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. இதன்மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் 280 கோடி. இந்தியாவின் பிற பகுதிகளில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே திராட்சை கிடைக்க, விவசாய உலகமே வியக்கும் அதிசயமாய் கம்பம் பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் திராட்சை விளைகிறது. இந்தத் தொடர் அறுவடைக்குக் காரணம் தேடினால், செம்மண்ணும் சரளையும் கலந்த மண்ணின் தன்மை, இங்கு நிலவும் மிதமான வெப்பநிலை, பகல் மற்றும் இரவு நேர தட்பவெப்ப மாறுபாடுகள், முல்லைப் பெரியாறு நீர் ஆதாரத்தினால் கிடைக்கும் நல்ல நீர்ப்பாசனம், கொடிகளைத் தகுந்த நேரத்தில் கவாத்து செய்தல் (கிளைகளை வெட்டி விடுதல்) வருடம் முழுவதும் புதிய துளிர்கள் உருவாகி, பூத்து, காய்த்து, கனிவதற்கான சூழலை உருவாக்கும் விவசாயிகள் என மிக நீண்ட பட்டியல் கிடைக்கிறது.

இதன்மூலம், சர்வதேச அளவில் ஆண்டுதோறும் திராட்சை விளையும் பகுதி என்கிற பெருமையை கம்பம் பள்ளத்தாக்கு பெற்றுள்ளது. மண்ணும் நீரும் சுவையைக் கூட்டியுள்ள இந்தத் திராட்சைகளில் டார்டாரிக் அமிலம் வைட்டமின் சி, வைட்டமின் கே, பி காம்ப்ளக்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன.

திராட்சையின் நறுமணம் மாறாமல், மதுவை உற்பத்தி செய்யும் ஒரே திராட்சை வகை மஸ்கட் ஹாம்பர்க் என்கிறார்கள். 2007இல் அன்றைய துணை முதல்வராக இருந்த திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த ஒயின் தொழிற்சாலை, திராட்சை விவசாயிகளுக்கு மிகுந்த பலனுடையதாக இருக்கிறது.

தனித்துவமான, குறிப்பிட்ட ஒரு புவியியல் பகுதியில் மட்டும் கிடைக்கக்கூடிய பொருள்களுக்கு, மத்திய அரசு 1999 முதல் புவிசார் குறியீடு (Geographical Indication Tag) கொடுத்து வருகிறது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும்போது அப்பொருளின் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பதால், அதனை சந்தைப்படுத்துவது எளிதாவதுடன் சட்டப்பூர்வ பாதுகாப்பும் கிடைக்கிறது. அத்தோடு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. கம்பம் பள்ளத்தாக்கில் பயிரிடப்படும் பன்னீர் திராட்சை அப்படியான புவியியல் குறியீட்டை பெற்றுள்ளதன் மூலம் இன்று உலக வரைபடத்தில் தனக்கான நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது.

கம்பம் பன்னீர் திராட்சை வெறும் விவசாய விளைபொருள் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டின் வளமான வேளாண்மையின் வரலாற்று அடையாளம். மேற்குத்தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் செழித்தோங்கும் திராட்சைத் தோட்டங்கள், மனித உழைப்பிற்கும் இயற்கைக்கும் இடையிலான ஒரு அழகிய கவிதை.

வீட்டிற்கு வந்து நாங்கள் தயாரித்த கம்பம் பன்னீர் திராட்சை ரசத்தின் சுவையில் முல்லைப் பெரியாற்றின் குளிர்ச்சியும் செம்மண் மணமும் வருடம் முழுவதும் ஓய்வின்றி உழைக்கும் அந்த விவசாயிகளின் அர்ப்பணிப்பும் கலந்திருந்தது.

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இவரின் ‘போர்களின் தேசத்தில்’ நூல், 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூல் பரிசை வென்றுள்ளது.