“என்ன மேடம் அன்னிக்கும் நீங்க வரும் போது மழை பேஞ்சது? இன்னிக்கும் மழையோட வந்திருக்கீங்க?” மழையில் சொட்ட சொட்ட நனைந்தவாறே   இருசக்கர வாகனத்தை நிறுத்தியதைப் பார்த்த, அந்த அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் வைரமணி அண்ணா, ஒரு வருடத்திற்கு முன்பு பார்த்ததை நினைவு வைத்து சிரித்தவாறே, உள்ளிருந்து ஓடிவந்தார்.

ஆண்டிபட்டி அரசு ஆண்கள்  மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதான வளாகத்தில் இருக்கிறது தேனி மாவட்ட அரசு அருங்காட்சியகம். பொதுவாக அருங்காட்சியகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கண்டெடுக்கப்படும் தொல்லியல் பொருள்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் முதன் முறையாக தேனி மாவட்டத்தில் மட்டுமே, சொந்த மாவட்டம் சார்ந்த தொல்லியல் பொருள்களை மட்டுமே கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்தால்,  பிரத்தியேக விளக்குகளின் ஒளியில், வழிந்தோடும் மெல்லிய இசையுடன்  வரலாற்றுக் காலத்திற்குள் மூழ்கியெழுந்து வரலாம்.  அது மட்டுமல்ல, வைரமணி அண்ணா சிரித்த முகத்துடன், மிகுந்த ஆர்வத்துடன் ஓடி ஓடி  விளக்குகளைப் போடுவதும், தனக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டுமெனவும் பிரயாசைப்படுகிறார். ஆனால் வந்து  பார்க்கத்தான் ஆளில்லாமல், எப்போதும் வெறிச்சோடிக் கிடக்கிறது. சினிமாவின் பொய் பிம்பங்களைக் கண்டு மகிழ்ந்திருக்கும் மக்களுக்கு, சொந்த நிலத்தின் மெய் வரலாற்றை அறிவதில் விருப்பமிருப்பதில்லை என்பதே கசக்கும் உண்மை.

வைரமணி அண்ணாவிடம் நலம் விசாரித்துக்கொண்டே உள்ளே நுழைகிறோம். முன்னாள் இராணுவ வீரர், பல்வேறு இடங்களில் பணி கிடைத்தும் வரலாற்றின் மீதிருக்கும் காதலால் இப்பணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  “இதப்பாருங்க, இது தேவைப்படும் உங்களுக்கு, இதை போட்டோ எடுத்துக்கோங்க, இதைப்பற்றி எழுதுங்க” என வழக்கம்போல, ஒவ்வொரு அறையாகக்  கூடவே வருகிறார்.

தேனி மாவட்டத்திற்குள் மீட்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள் சீராக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. முதாதையர் வாழ்வியலை அறிந்து கொள்ளும் ஆவலில் நான் குறிப்பெடுத்துக் கொண்டிருக்க, மகள் பூஷிதா, தோழர் நிவேதிதாவின் வழிகாட்டல்படி புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறாள். “நம்ம ஊரு மதுரை மாவட்டத்துக்குள்ள இருந்ததால, நம்ம ஊரு தொல்லியல் பொருள்கள் நிறைய மதுரை அருங்காட்சியகத்துல இருக்கு மேடம், தரமாட்டேங்கறாங்க” குரலில் ஏமாற்றம் தொனிக்கக் கூறுகிறார்.

ஒவ்வொரு மாதமும் ஒரு அரிய பொருள் சிறப்புக் காட்சிக்கு வைக்கப்படுமாம். இரும்புக் குண்டு, சந்தனக் காவடி, வளரி, குலுக்கை, மாய சாடி, கடம், செப்புப் படிமம், நீர் இறைக்கும் கமலை, வரலாற்றுச்செய்தியுடன் கூடிய இந்தியாவிலுள்ள அனைத்து அருங்காட்சியகத்தின் படங்கள் என  அடுக்கிக்கொண்டே போகிறார். மாவட்டத்திற்குள் இருப்பவர்களே தங்களிடம் இருக்கும் அரிய பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து, காட்சிக்கு வைக்கிறார்களாம். சந்தன மரத்தில் செய்யப்பட்ட காவடி கலை நயத்துடன் கூடிய சிற்பச் செதுக்கல்களுடன் கண்களைக் கவர்கிறது.  

சுற்றிக்கொண்டிருக்கையில், பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர்கால வரைபடத்தைப் பார்த்ததும் சட்டெனெ நிற்கிறேன். தேனி குறித்து வாசித்தறிந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த தேனி மாவட்ட வரலாறு அன்றைய ‘மதுரைச்சீமை’யின் வரலாற்றுடனே பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

பொ.ஆ.300 க்கு முன்பாகச் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி செய்த தென்தமிழகப் பகுதிதான் பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டது. மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவை பாண்டிய நாட்டுப்பகுதிகளாக இருந்தன. பாண்டிய நாட்டை, களப்பிரர்கள் பொ.ஆமு. 250 முதல் பொ.ஆ.600ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர். பொ.ஆ. 570 ம் ஆண்டு, ‘இலங்கை மன்னன் விஜயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக’ இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுவது மதுரைதான் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். தமிழ் இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு போன்ற நூல்களில் ‘கூடல்’ என்றும், ‘மதுரை’ என்றும் மதுரை குறித்த குறிப்புகள் உள்ளன. சங்க காலத்தில் ‘நான்மாடக்கூடல்’ என்று குறிப்பிடப்பட்டதும் மதுரையே. 

முற்காலப்பாண்டியர்கள் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. பத்தாம் நூற்றாண்டு வரை பாண்டிய நிலப்பகுதியை ஆட்சி செய்ய,   அடுத்த மூன்று நூற்றாண்டுகள் பாண்டிய நிலம் சோழர்கள் கைவசமானது.  மீண்டும் பொ.ஆ. பதிமூன்றாம் நூற்றாண்டில்,  இரண்டாம் பாண்டியப்பேரரசு ஆட்சியமைத்தது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசுகளான சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அரியாசனத்திற்காக எதிரெதிர் திசையில் நின்று, வீரபாண்டியன் தனது சகோதரனுக்கு எதிராக வாள்பிடித்தார். தனக்கு உதவ, தில்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் காபூரின் துணையை அவர் நாடியதாக, அப்துல்லா வசாஃப், அமீர் குஸ்ரோ போன்ற வராலாற்றாளர்களின் குறிப்புகள் கூறுகின்றன. பாண்டிய நாட்டில் உள்நாட்டுப்போர் தலை விரித்தாடி ஊர் ரெண்டு பட்டால்? பிறகென்ன..? கொண்டாட்டமாகிப்போன தில்லி படைகள், குஸ்ரோ கான் தலைமையிலும் (1318), உலூக் கானின் (1323) தலைமையிலும் மதுரையை சூறையாடின. முடிவில் உலூக்கான் மதுரையை தில்லி சுல்தானகத்துடன் இணைத்து விட்டார். விளைவு,  மதுரை உள்ளிட்ட பாண்டிய சாம்ராஜ்யம் பொ.ஆ.1323ஆம் ஆண்டில்  தில்லி சுல்தானியகத்தின் மாகாணமாக மாறியது.  

1325ஆம் ஆண்டு உலூக் கான் தில்லி சுல்தானாக முடிசூடினார். உலூக்கான் என்பது வேறு யாருமல்ல, நமக்கு நன்கு அறிமுகமான ‘முகமது பின் துக்ளக்’ தான். அவரது நல்லாட்சியில்(!) கருவூலம் காலியாக, படையினருக்கு ஊதியம் வழங்க முடியா நிலையில், எல்லையோரப் பிரதேசங்கள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. மாபார் (மதுரை சுல்தானகம்) ஆளுநர் ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையை சுதந்திர நாடாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான 1335ஆம் ஆண்டு மதுரை சுல்தானகம் தோன்றிய ஆண்டாகக் கருதப்படுகிறது. மதுரை சுல்தானகம் வெளியிட்ட நாணயங்கள், இதற்கு சான்று பகர்கின்றன.

மொரோக்கோ நாட்டு வரலாற்றாளர் இபுனு பதூதாவின் குறிப்புகளும், கங்கதேவி எழுதிய மதுரா விஜயம் நூலும் மதுரை சுல்தான்கள் குறித்து விரிவாக விளக்குகின்றன. 1334க்குப் பிறகு, சுல்தானகம் வலுவிழக்க, விஜயநகரப் படைகள் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் தலைமையில் சம்புவரையர்களை வென்று, ஸ்ரீ ரங்கத்தைக் கைப்பற்றி, மதுரையை நோக்கி முன்னேறின. இறுதி யுத்தத்தில் கம்பண்ணர், மதுரை சுல்தானான சிக்கந்தர் ஷாவுடன் போரிட்டு, சுல்தான்  தலையை வெட்டி சாய்த்ததாக மதுரா விஜயம் கூறுகிறது. 1377 – 78  ல் மதுரை சுல்தானகத்தின் அழிவின் முடிவில், மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டன.

1509ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசரான கிருஷ்ண தேவராயர் காலத்தில் நடந்த சோழ – பாண்டிய ஆதிக்கத்தின் உள்நாட்டுக் குழப்பத்தின் விளைவாக, கிருஷ்ண தேவராயர், விசுவநாத நாயக்கரை பாண்டி மண்டலத்தின் ஆளுநராக நியமித்தார். அந்த விசுவநாத நாயக்கரின் வழி வந்து ஆட்சி செய்தவர்களே, மதுரை நாயக்கர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். நாளடைவில் நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். 1736 ல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்து, ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை வந்தது. ஆர்காடு நவாப் சந்தா சாகிப் மற்றும் மருதநாயகம் ஆகியோரால், 1725 மற்றும் 1764 காலகட்டத்தில் மதுரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. 1801ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை மாகாணத்துடன் மதுரை இணைக்கப்பட்டது. ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதற்கு பதிவுகள் உள்ளன. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகர் அரசியல் தொழில்துறை நகராக வளர்ந்ததுடன், அன்றைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் இருந்தது.

பாண்டிய மண்ணின் நீண்ட, நெடிய வரலாற்று நிகழ்வுகளை அசை போட்டுக்கொண்டே,  பாண்டியர்கள்  அப்போது தங்களது நிர்வாக வசதிக்காக தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளை பல ‘நாடு’களாகப் (பிரிவுகளாக) பிரித்துக்கொண்டதை வரைபடத்தைப் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொள்கிறேன்.

பரந்து விரிந்த பாண்டிய நாட்டின் இன்றைய தேனி மாவட்டப் பகுதிக்குள் மேனெடுங்களநாடு, அழநாடு, துறையூர் நாடு, வரிசை நாடு என நான்கு நாடுகள்  இருந்திருக்கின்றன.  இன்றைய வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், தேவாரம், உப்பார்பட்டி, குள்ளப்புரம், டொம்பிச்சேரி போன்ற பகுதிகள் அழநாட்டிலும், கோட்டையூர்க்குடி, முந்தல் போன்ற பகுதிகள் துறையூர் நாட்டிலும்,  பெரியகுளம், மேல் மங்கலம், கீழ்மங்கலம் போன்ற பகுதிகள் மேநெடுங்கள நாட்டிலும், மயிலாடும்பாறை, வரிசைநாடு போன்ற பகுதிகள் வரிசை நாட்டிலுமாக இருந்ததாக அந்த வரைபடமும் குறிப்புகளும் கூறுகின்றன.

தேனியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பிடும்போது, அளநாடு – அழநாடு என்று வெவ்வேறு ஆவணங்களில், இருவேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டாலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத்துறை பேராசிரியர் ஜெயக்குமார்* அவர்கள், இது ‘அழநாடு’ தான்  என்று உறுதி செய்துள்ளார். அதற்கு விளக்கமாக அவர் கூறுவது, அளர் என்பது உப்பளத்தைக் குறிப்பதாலும், அழம் என்பது அழர்காய் என்னும்  மிளகைக் குறிப்பதாலும்,  மலைப்பகுதியான தேனிக்கு அளம் என்பது பொருந்த வாய்ப்பில்லை, மேலும் இப்பகுதி கேரளத்தை ஒட்டி இருப்பதால, அழநாடு என்பதே பொருந்தும் என விளக்குகிறார். ஆண்டிபட்டி கணவாய் முதல் மலைநாடு என்று அழைக்கக்கூடிய கூடலூர் வரை ‘அழநாடு’ என அழைக்கப்பட்டதாக வீரபாண்டி, சின்னமனூர் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.

*அழ நாடு – உமர் பாரூக்

அகநானூற்றுப் பாடல் ஒன்று (149), ‘சுள்ளியாறு என்று வழங்கப்பட்ட பேரியாற்றில் நுரை கலங்கும்படி யவனர்கள்(கிரேக்கர்)  நல்ல மரக்கலங்களை ஓட்டிச்சென்று பொன்னைக்  கொடுத்து, மிளகை வாங்கிச் சென்றனர்’ என்கிறது. இன்றும் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மிளகு செழிப்பாக விளைகிறது. வணிகப் பெருவழிகள் வழியே இந்த மிளகு மேற்குக் கரை பேரியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம், யவனர்கள் இங்கு உள்நாட்டு வழி வந்திருக்கலாம். மேலும் பேரியாற்று நதிக்கரையில் ரோமானியர்கள் சங்க காலத்தில் வணிகம் செய்ததை உறுதிப்படுத்தும் விதமாக, ரோமானியர்களின் ‘அகஸ்டஸ் நாணயம்’ கம்பம் பள்ளத்தாக்கில் உத்தமபுரம் எனும் இடத்தில்  கிடைத்துள்ளது.

ரோமாபுரி அரசவையில் பொ.ஆ. தொடக்கத்தில் பாண்டிய மன்னனின் தூதுவர்கள் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. வரலாற்றுக் காலத்தில் மதுரைக் கோட்டையைக் காவல் காக்கும் பணியில் கிரேக்க வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். பாண்டிய மன்னனுடைய அந்தப்புரத்தில் யவனப் பெண்கள் மெய்க்காவலர்களாக இருந்திருக்கிறார்கள் என சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது. அதே போன்று  சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் கோயிலின் பிற்காலக் கல்வெட்டின் மூலம், அழ நாட்டில் சோழர்களின் ஆதிக்கம் பற்றி அறிய முடிகிறது. 

மதுரையை எரித்தபின் கோபமடைந்த கண்ணகி வைகை ஆற்றின் வடகரை வழியைப் பின்பற்றி, 14 நாள்கள் கால்நடையாக நடந்து நெடுங்குன்றம் பகுதியில் உள்ள விண்ணேற்றிப் பாறையில் ஏறி, விண்ணகம் புகுந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. நெடுங்குன்றம் எனவும் நெடுவேல் குன்றம்  எனவும் இலக்கியங்கள் பலவும் குறிப்பிடுவது கேரள – தமிழ்நாட்டு எல்லையில் உள்ள தேனி மாவட்டம் நெடுங்குன்றம் ஆகும்.

நெடுங்குன்றம் கண்ணகி கோயில்

இயற்கை வளம் கொழித்துக்கொண்டிருந்த அழ நாட்டை, பந்தள மகாராஜாவும், பூஞ்சார் மன்னரும், சேர, சோழ பாண்டிய மன்னர்களும் ஆற்காடு நவாபும் சுல்தான்களும் விஜயநகர பேரரசர்களும்  நாயக்கர் மன்னர்களும் ஆட்சி செய்ததற்கான போதிய தரவுகள் நம்மிடையே உண்டு.  

இலக்கியங்களில் மட்டுமல்லாது, கண்முன் சாட்சியாகவும் பழைய கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுக்காலம், இடைகாலம் என எல்லாவற்றுக்குமான தொல்லியல் சின்னங்கள் அழ நாட்டின் பகுதியெங்கும் விரவிக்கிடக்கின்றன. பழைய கற்காலச் சான்றுகள் சின்னமனூருக்கு மேற்கில் வல்லிங்கரீஸ்வரன் மலை அடிவாரத்திலும், நுண்கற்காலச் சான்றுகள் பொட்டக்குடி (போடி) அணைக்கரைப்பட்டி, கொட்டடோடைப்பட்டி  ஆற்றின் கரையிலும், புதிய கற்காலச் சான்றுகள், கூடலூர், சுருளிப்பட்டி, கம்பம் ஏகலூத்து, பூதி மேடு, காத்தானடை மேடு மற்றும் சிலமலையிலும், பெருங்கற்காலச் சான்றுகள்,  வைகை ஆறு மற்றும் சுருளி யாற்றின் கரைகளிலும், மூணாண்டிபட்டி பாறை ஓவியங்களிலும் கிடைத்துள்ளன. ஆண்டிபட்டி அருகே புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள நடுகற்கள், இந்தியாவின் மிகப் பழைமையான நடுகற்களாக அறியப்படுகின்றன.

சேர மன்னன் எழுப்பிய மங்கள்தேவி கண்ணகி கோவில், பென்னிகுயிக் கால்பதித்த முல்லைப் பெரியாறு அணை, மாவீரன் கான்சாகிபு  அமைத்த கம்பம் சாலை, கான்சாகிபின் கால் அடக்கம் செய்யப்பட்ட நவாபு பள்ளிவாசல், பெரியகுளம் என அழநாட்டின் வரலாற்றுக்குப் பஞ்சமில்லை. தமிழர்களின் மூத்த தாயான மூதேவி – தவ்வை எனும் தாய்தெய்வம் சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவில் போகும் வழியில்  சிற்பமாக நிற்கிறார்.

ஆண்டிபட்டி மலைத் தொடருக்கும் மேகமலைத் தொடருக்கும் இடையே உள்ள பள்ளத்தாக்குதான் அன்றைக்கு வரிசைநாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய வருசநாடு.  இப்பகுதியில் கற்காலம் முதல், குறிப்பாக புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகிய கால கட்டங்களில் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக இங்கு காணப்படும் பாறை ஓவியங்களும், நெடுங்கற்களும், கற்பதுகைகளும் முதுமக்கள் தாழிகளும் சான்று பகர்கின்றன. பொ.ஆ. பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த நினைவுத்தூண் ஒன்றைக் காட்டுகிறார் காப்பாளர் வைரமணி அண்ணா.

“செத்துப்போனவுங்க நினைவா வைக்கிற கல் மேடம், இதுபோல நாலு இருக்கு வருசநாட்டுல, அவுங்க சாமியா வைச்சு பூசை பண்ணி கும்பிடறாங்க, அதனால கொடுக்க மாட்டேனுட்டாங்க, ஒண்ணு மட்டும் எப்படியோ வாங்கிக் கொண்டு வந்துட்டாங்க” என்கிறார் ஆதங்கத்துடன். அந்த கல்லில் ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஆண் பெண் தெய்வங்களும், விலங்குகளும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்படுள்ளன. 

“(உத்தம)பாளையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுத்தூண் மேடம், வட்டெழுத்து தெரிஞ்சா, இதை வாசிக்கலாம், உங்களுக்குத் தெரியுமா?” என ஆவலுடன் கேட்கிறார். இல்லையென்று உதடு பிதுக்கி விட்டு, புகைப்படம் எடுத்து நகர்கிறேன். 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் ‘இடம் அறியப்பட வில்லை’ என்ற அறிவிப்புடன் நிற்கிறது. “சதி என்னும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தென் தமிழகத்திலும் இருந்திருக்கிறது, அதிலிருந்து இன்று எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கின்றோம்?” என பெருமூச்சுடன் நினைத்துக்கொண்டேன்.

வரிசை நாட்டின் கடமலைக்குண்டு, வெம்பூர், குத்துக்கல்தேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களை புதைந்த இடங்களில் வட்ட வரிசை குத்துக்கற்கள் மீட்டெடுக்கப் பட்டுள்ளன. வருசநாட்டு நிலக்கிழார் அரண்மனை, கோம்பை அரண்மனை, பெரியகுளம் அரண்மனை, போடி அரண்மனை, எரசக்க நாயக்கனூர் அரண்மனை  என அத்தனையும் வரலாற்றோடு வரலாறாக உள்ளது. கம்பம் மணிகட்டி ஆலமரத்தடியில் புதைந்து கிடக்கும் வரலாறு, கம்பம் ஏகலூத்து நாட்டார் தெய்வங்கள், வருசநாடு முருக்கோடை பாறை ஓவியங்கள் என காலத்தால் மிகப் பழமையான தொல்லியல் சான்றுகளை கொண்டுள்ளது தேனி மாவட்டம்.     

இந்திய தொல்லியல்துறையினர் 2013 – 14 ஆம் ஆண்டில் வைகை நதியின் பிறப்பிடமான தேனி மாவட்டம் தொடங்கி,  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வழியே 250 கி.மீ தூரம் ஓடி கடலில் கடக்கும் இராமநாதபுரம் மாவட்டம் வரை  வைகை நதியின் இருகரைகளிலும் உள்ள 400 கிராமங்களில் ஆய்வை மேற்கொண்டனர். வைகை நதிப் பாதைகளில் 293 பகுதிகள் களஞ்சியங்கள், வணிகத்தலங்கள், துறைமுகங்கள், வாழிடங்கள், கோயில்கள் என  இனம் காணப்பட்டது. அதில் வாழ்விடங்களாக கீழடி, மாரநாடு, சித்தர் நத்தம், டொம்பச்சேரி, அல்லிநகரம், ராஜ கம்பீரம், பாண்டிக்கண்மாய், அரச நகரி ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு அதன் முடிவில் தான் கீழடி, மாரநாடு, சித்தர் நத்தம் ஆகிய மூன்று கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இன்று கீழடி  வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை உலகிற்கு எடுத்துக் காட்டிக்கொண்டுள்ளது. இத்தொல்லியல் களம் பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டிற்கும் பொ.ஆ.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் எனக் கணித்துள்ளனர். இதற்கு முன்னதாக வருச நாட்டிலும் சிறிய அளவிலான அகழ்வாய்வுகள் செய்யப்பட்டிருந்தன.

மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக  தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும்  நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது.  தனது நிலத்தினுடைய பண்பாட்டின், மொழியின், நாகரிகத்தின் விழுமியங்களை அறிவதும் அவற்றை பேணிக்காப்பதும்  ஒவ்வொரு மனிதனின் கடமையாக இருக்கிறது. ஏனெனில் கொஞ்சம் அசந்தால், ஒரு நாகரிகத்தின் மொழியை அழித்து, பண்பாட்டை சிதைக்க காலம் சிலரை அனுப்பிக்கொண்டே இருக்கிறது.  

“மறுபடியும் வரவேண்டியிருக்கும் அண்ணா” என்றவாறே விடைபெறுகிறேன். “அன்னிக்காவது மழையைக் கூட்டிவராம, நீங்க மட்டும் வாங்க” சொல்லிச் சிரிக்கிறார்.

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.