தென் தமிழகத்தில் இயற்கையின் மடியில் துயிலும் தேனியும் தேனி சார்ந்த நிலப்பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலங்களால் சூழபட்ட அழகும் வனப்பும் நிறைந்ததொரு வாழ்விடம். மலைகள், ஆறுகள், அருவிகள் என இயற்கை ஒரு புறம் பங்களிக்க, தொன்மையான பாறை ஓவியங்கள், நடுகல் பண்பாடு, எல்லைக்கற்கள், குகை ஓவியங்கள், சமணர் மலைகள், பௌத்த சிற்பங்கள், வெண்பனி மாதா தேவாலயம், இராமாயண மூலிகை ஓவியங்கள், வளரி, கற்கால மனித வாழ்வின் எச்சங்கள் என தொல்லியல் அதிசயங்கள் மறுபுறமும் குவிந்து கிடக்கின்றன.

இவை தவிர ஜமீன்கள், பளியர்கள் எனும் பழங்குடிகள், பொருளாதாரம், கலை,  இலக்கியம், வரலாறு என   தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாறுக்கு தேனியும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. பிறந்த மண்ணின் பெருமை பேசுவது பெண்களின் இயல்பெனினும், நடுநிலை நோக்குடன், நாகரிகமும் தொன்மையும் கொண்ட நான் ரசித்த, ருசித்த  தேனியின் பண்பாட்டு வரலாறை, வாழ்வியலை, பதிவு செய்ய விரும்பியதன் விளைவே இக்கட்டுரைத் தொகுப்பு.

 ஆண்டிபட்டி கணவாய்

தஸ்… புஸ்…. என்று மூச்சிரைப்பதை வெளியே காட்டிக் கொள்ளாமல்  மேற்குத் தொடர்ச்சி மலை என்ற பிரமாண்டத்திலிருந்து சிதறிய  ஒரு துளியின்மீது  ஏறிக்கொண்டிருந்தேன். உடன் வந்த தம்பி சரவணன், அந்தக் குன்றின் உச்சிக்குச் சென்று பாரதிராஜா போல லொகேஷன் பார்த்து வளைத்து வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தான். “ஆண்டிபட்டி கணவாய் காத்து ஆள் தூக்குதே…”  மகள் பூஷிதாவும், தம்பி மகன் ரத்தீஷும் சூழலுக்கு ஏற்ற பாடலை பாடிக்கொண்டே முன்னால் தாவித்தாவிச் சென்று கொண்டிருந்தார்கள். பதிலுக்கு நானும், “தென்மேற்கு பருவக்காற்று தேனிப்பக்கம் வீசும்போது சாறல்… இன்பச்சாறல்…” என இசைப் பாட்டுப் பாட ஆசைப்பட்டாலும், சத்தம் வரவில்லை. மூச்சு இறைத்தது. ஒரு வழியாக மலை முகட்டுக்கு ஏறிவிட்டோம்.

உச்சியிலிருந்து பார்க்கும்போது விரிந்து கிடக்கும் இந்த இயற்கைதான் எத்தனை அழகு? சுற்றிச் சுற்றி மலைகள் பெரிதும் சிறிதுமாக…

“ஆஹா… தேனி எப்படி மலைகளுக்கு நடுவில் பாதுகாப்பாய் பம்மிக்கிடக்கிறது?” கூட வந்த மற்றொரு தம்பி கணேஷ் பார்த்து பார்த்து வியக்கிறான். கீழே ஏதோ சத்தம் கேட்க, குனிந்து பார்க்கிறோம். மேற்குத் தொடர்ச்சி மலையை இரண்டாகப் பிளந்து கொண்டு, உலோகப் பாம்பென வளைந்து நெளிந்து செல்லும் அந்த ரயில் தண்டவாளத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் ட்ராலியை  உந்தி உந்தி தள்ளுவதும், உடனே மேலேறி உட்கார்ந்து சிறிதுதூரம் செல்வதும் மீண்டும் தள்ளுவதுமாய்  சென்று கொண்டிருக்கின்றனர்.

காற்று மலைகளில் மோதி, மரங்களை உரசி… எங்களைத் தீண்டும்போது அடடா! இப்படியாக ஒரு கிறிஸ்துமஸ் நாள் எங்களுக்கு ஆண்டிபட்டி கணவாயில் விடிந்திருந்தது.

மதுரையிலிருந்து தேனிக்குச் செல்லும் வழியில் உசிலம்பட்டி கடந்தவுடன், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி குறுக்கிடுகிறது. அந்த மலையைக் கடந்துதான் ஆண்டிபட்டி வழியாக தேனிக்குள் நுழைய முடியும். மலை முகடுகளின் ஊடாக உருவாக்கப்படும் பாதைகளைத்தான் கணவாய்கள் என்கிறோம். சிறு வயதில் ‘கைபர் போலன் கணவாய்’ பற்றி படிக்கும்போது ஆண்டிபட்டி கணவாய்தான் என் மனத்திரையில் ஓடியிருக்கிறது. இரண்டு சிறிய மலைகளின் மடிப்புகளுக்கு நடுவில் 2 கி.மீ. நீளத்திற்குக் கிடக்கிறது இந்தக் கணவாய். தரைமட்டத்தில் இருந்து மலைப்பாதைக்குச் செல்ல மூன்றே மூன்று கொண்டை ஊசி வளைவுகள் அடுத்தடுத்து உள்ளன.

சாலையின் அகலம் குறைவாயிருந்த எங்கள் சின்ன வயதுக் காலத்தில்,   வளைந்து வளைந்து செல்லும் குறுகலான சாலையில் பயணிக்கும்போது, டிரைவர்  சாய்ந்து சாய்ந்து கஷ்டப்பட்டு ஸ்டியரிங்கை வளைக்க, அதற்கேற்ப பயணிகளும் இடதும் வலதுமாய் சாய… அது ஒரு த்ரில்லான பயணமாக இருக்கும். இப்போது சாலை மேல் சாலை போட்டு, அதையும் அகலமாக்கியதில், மலை ஏறும் அந்தக் கால அனுபவம் சுத்தமாக இப்போது இல்லை. வண்டி கணவாய்க்குள் நுழையும்போதே எத்தனை சித்திரை மாத ‘வெக்கையும்’ மாறி சிலுசிலுவென காற்று முகத்தில் அறைய ஆரம்பிக்கும்.         

கணவாயைப் பேருந்தில் கடக்கும்போது இளையராஜா பாடல்களுடன் கடப்பது சுகமெனில், ரயிலில் கடக்கும்போது, கண்கள் நிறைய இயற்கையை அமைதியாய் ரசித்துச் செல்வது பரமசுகம்.

தேனிப்பகுதி முழுவதும் அடர்ந்த காடாக இருந்த காலத்தில் இந்த இடம் ஒற்றையடிப் பாதையாக இருந்திருக்கிறது. போடிமெட்டு, மேகமலை, குரங்கணி போன்ற காடுகள் நிறைந்த பகுதியிலிருந்து உசிலம்பட்டி சமவெளிக்கு வர வேண்டுமானால், அந்தக் காட்டுப்பாதையில் மலையைக் கடந்துதான் வரவேண்டும். மாவீரன் கான்சாகிபும், ஆர்காடு நவாபும், மதுரை சுல்தான்களும், மாலிக்காபூரும், மதுரை நாயக்கர் மன்னர்களும் அப்படித்தான் வந்திருக்க வேண்டும். ஜமீன்தார்கள் காலத்தில் ஒற்றையடிப்பாதை வண்டிப்பாதையாக வளர்ந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில்தான் முதன்முறையாக ரயில் போக்குவரத்துக்காக மலை குடையப்பட்டிருக்கிறது.

தேனி – மதுரை மாவட்டங்களின் எல்லையாக இருக்கும் கணவாய்ப் பகுதியில் உசிலம்பட்டியிலிருந்து மேலே ஏறும்போது வலது புறத்தில் இருக்கிறது கணவாய் மாதா கோவில். மாதாவுக்கு ‘ஹாய்’ சொல்லி, கிறிஸ்துமஸ் குடிலை ரசித்துவிட்டு, குறுகலான படிகள் வழியாக மேலேறினால், இயேசுவை மடியில் கிடத்தியபடி கருணை பொங்கப் பார்க்கும் மாதாவின் மிகப்பெரிய சிலை. வணங்கி விட்டு, அங்கிருந்து மலை உச்சியின் மேலே ஏறித்தான் இப்படி பராக்கு பார்த்துக்கொண்டிருந்தோம்.

அங்கிருந்து பார்க்கும்போது இரண்டு இடங்களில் மலை குடையப்பட்டு பாதை ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. திரும்பிய பக்கமெங்கும் பச்சைப் பசேல் என இயற்கை தன் தாராள மனதைக் காட்டியிருந்தது. அருகிலிருக்கும் மைதானத்தில் வெள்ளைச் சீருடை விளையாட்டு வீரர்கள் ரொம்ப சீரியஸாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் பொதுப் பணித் துறைக் கட்டடம் ஒன்று புதிதாக முளைத்திருந்தது. மாவட்ட எல்லை என்பதால் ரயில்வே கிராசிங்கை ஒட்டியிருந்த  சோதனைச் சாவடியில், கேரளா வண்டிகள் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ஈரம் கலந்த குளிர்காற்றால் நுரையீரலை நிரப்பிக்கொண்டு, வந்த வழியே  திரும்பாமல்  மலையிலிருந்து செங்குத்தாக தண்டவாளம் நோக்கி இறங்கினோம்.  ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ என பாடிக்கொண்டே,  பால்ய நினைவில் தண்டவாளத்தின்மீது நடந்து கொண்டிருக்கும்போதே ரயில் சத்தம் கேட்டு, பக்கவாட்டில் குதித்து ஒதுங்கி நிற்க, வேகமாக எங்களைக் கடக்கிறது அந்த ரயில்…

ஆம் அதே ரயில் தான் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், பிதாமகன், கேப்டன் பிரபாகரன் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான ரயில். கூ… சுக்குச்சுக்கு சுக்குச்சுக்குவென பாஞ்சாலிக்காக பரஞ்சோதியிடம் தூதுபோன ‘கிழக்கே போகும் ரயிலைப்’ பார்த்ததும், இந்த மலைப்பகுதிக்கு  ரயில் பாதை வந்த வரலாறு நினைவுக்கு வருகிறது.

அன்றைய  பிரிட்டிஷ் ஆட்சியில் இன்றைய தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகள், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்தன. மதுரை மாவட்டத்திற்குள் இருந்தாலும், கேரளாவைக் காதலுடன் தொட்டுக்கொண்டிருந்த தேனி மலைக்காடுகளில் காபி, ஏலக்காய், மிளகு போன்ற நறுமணப் பொருள்கள் எக்கச்சக்கமாக விளைந்தன. அப்போது தொட்டப்ப நாயக்கனூர் ஜமீன், கண்டமனூர் ஜமீன், உத்தமபாளையம் ஜமீன், தேவாரம் ஜமீன், கோம்பை ஜமீன், போடையநாயக்கர் (போடி) ஜமீன் போன்ற குறுநில பகுதிகளைக் கண்காணித்து வந்த ஜமீன்தார்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு நிலவரி வசூல் பணத்தைச் செலுத்துவதும், சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து விபரங்களை மதுரை மாவட்ட பிரிட்டிஷ் அதிகாரிக்கு தெரிவிப்பதும் கட்டாய நடைமுறையாக இருந்தது. அதனால் நிர்வாகக் காரணங்களுக்காக ஜமீன்தார்கள் மதுரை வந்து செல்லவும், கம்பம், போடி மெட்டு, இடுக்கி பகுதிகளில் சாகுபடி செய்த நறுமணப் பொருள்களை அந்த மலைக்காடுகளிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கும் ரயில் போக்குவரத்து தேவையாக இருந்தது. இதனை உணர்ந்த பிரிட்டிஷ் அரசின் முயற்சியால், 610 மி.மீ. கொண்ட மிகக்குறுகிய தண்டவாளப்பாதை (Narrow gauge) 1909ஆம் ஆண்டு போடப்பட்டுள்ளது.

ஜமீன்தாரர்களின் கோரிக்கைக்காக இல்லாவிடினும், இடுக்கி, குரங்கணி மலைக் கிராமங்கள் அமைந்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் விளைவித்த ஏலக்காயை, போடிக்குக் கொண்டு வந்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக என முழுக்க முழுக்க வணிக ரீதியான பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டதே மதுரை-போடி இடையிலான ரயில் பாதை. போடிக்கும், மதுரைக்குமிடையேயான அந்தக் குறுகிய ரயில்பாதை குமுளி, லோயர் கேம்ப் மற்றும் திண்டுக்கல் சந்திப்போடு இணைக்கப்பட்டது. ஆனால் 1914ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் உலகப்போர் காரணத்தால், பாதை மூடப்பட்டு தண்டவாளங்கள் அகற்றப்பட்டன.

ஜமீன்தார்கள் தொடர்ந்து ரயில் பாதைக்காக கோரிக்கைகள் வைக்க, மதுரை – போடி வரையிலான 90.41 கிலோமீட்டர் நீள ரயில்பாதையை சரி செய்து மீண்டும் அமைக்க பிரிட்டிஷ் அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனாலும் வேலை இழுத்துக் கொண்டே சென்றது. இறுதியில், ‘தி சவுத் இந்தியன் ரயில்வே கம்பெனி லிமிடெட்’  1926ல் மதுரை – போடி ரயில்பாதை வேலையைத் தொடங்கி 1928  நவம்பரில் 762 மி.மீ. குறுகிய தண்டவாளப் பாதையைப் போட்டு முடித்தது.  1928, நவம்பர் 20 அன்று  சென்னை மாகாணத்தின் செயல் ஆளுநரான (Acting Governor) சர் நார்மன் எட்வர்டு மார்ஜோரி பேங்ஸ் இத்தடத்தில் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து, தொடக்கி வைத்தார்.

90 கி.மீ. நீளம் கொண்ட அந்தப் பயணத்தில் இடை நிறுத்திச்செல்வதற்காக நாகமலை, செக்கானூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், ஆண்டிபட்டி, வல்லாந்தி ரோடு, தேனி, பூதிப்புரம், போடி நாயக்கனூர் என் பத்து ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அன்றைய கணக்குப்படி 52.27 லட்சம் செலவில் திட்டம் முடிவு பெற்றது. விவசாய பூமியான தேனி பகுதியிலிருந்து ஏலக்காய் மட்டுமல்லாது, காய்கறிகள், பழங்கள், இலவம் பஞ்சு உள்ளிட்டவையும் ரயிலில் கொண்டு செல்லப்பட்டன. பிற நறுமணப்பொருள்களைக் காட்டிலும், ஏலக்காய் வர்த்தகமே முதன்மையாக இருந்ததால் இந்த தடத்தில் இயங்கும் ரயிலுக்கு கார்டமம் எக்ஸ்பிரஸ் (ஏலக்காய் எக்ஸ்பிரஸ்) எனவும் பெயரிட ஜமீன்தார்கள் முடிவு செய்து, பிரிட்டிஷ் அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பினர். ஆனால் பதில் வரவேயில்லை. ஒப்புதல் வராவிட்டாலும் ‘கார்டமம் எக்ஸ்பிரஸ்’ என்றே செல்லப்பெயரிலேயே ஏலம் மணக்க மணக்க ரயில் போக்குவரத்து நடந்திருக்கிறது.

மூணாறு பகுதியில் விளையும் டீ, காபி, ஏலம் போன்ற பொருள்களை  போடி அருகே உள்ள குரங்கணி வரை கொண்டு வருவதற்கு  விஞ்ச் அமைக்கப்பட்டது. இங்கிருந்து போடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு, ரயில் மூலமாக, வாரணாசி, லக்னோ, டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அனுப்ப மதுரை – போடி ரயில் பாதை பயன்படுத்தப்பட்டது. இடுக்கி அணை கட்டும் சமயங்களில் மதுரையிலிருந்து தேனி வரை ரயிலில் சிமின்ட் கொண்டுவரப்பட்டு, பின்னர் லாரியில் அணைகட்டும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

1942 ல் இரண்டாம் உலகப்போர் காலத்தில் மீண்டும் தண்டவாளம் அகற்றப்பட்டு, பாதை மூடப்பட்டது. 1954 அக்டோபரில் இந்திய ரயில்வே, மதுரை முதல் போடி வரையிலான பாதையை 1000 மி.மீ  மீட்டர்கேஜ் (Meter gauge)  ரயில்பாதையாக மாற்றியபின், ஒரே ஒரு பயணிகள் ரயில் விடப்பட்டது.  1972 முதல் 2 பயணிகள் ரயில் விடப்பட்டன. 2011ல் மீண்டும் ரயில்பாதை மூடப்பட்டு 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1923 ல் அகல ரயில்பாதையாக மாற்றம் பெற்றுள்ளது. இப்படி இந்தியாவிலேயே மூன்று முறை தண்டவாளங்கள் அகற்றப்பட்ட ஒரே பாதை என்ற வரலாறுடன் ஒரு நாளைக்கு இருமுறை என தடதடத்துக் கொண்டிருக்கிறது இந்த கிழக்கே போகும் ரயில்.

மாதா கோயிலை ஒட்டியிருக்கும் ஒரு சிறு குடிசையில் கோயிலை கவனித்துக்கொள்ளும் பாட்டியும் தாத்தாவும். “இங்கு தனியாக இருக்க பயமில்லையா?” எனக்கேட்கிறேன்.  “என்ன பயம்? கூடவே தான் மேரியம்மா இருக்காளே?” சுருக்கம் விழுந்த முகத்தில் பயத்தின் சுவடு சிறிதும் இல்லை.  “இரவானால் விலங்கெல்லாம் வருமே?” “ஆமாந்தாயி, அதுக்கென்ன செய்றது? நேத்து கூட கதவை திறக்கறேன், முகத்துக்கு முன்னால் ஒரு நல்லவன் (நல்ல பாம்பு) தொங்கிட்டு இருக்கான்? நம்மை என்ன செய்யப் போறான்? அவன் வழியில போயிடுவான்”  

என்னது..? நல்லவனா..? பயந்து போய் இரண்டடி தள்ளி நிற்கிறேன். கால் கூசுகிறது. பாட்டி தொடர்கிறார். “நாலு நாளா பாவம், கரடி ஒண்ணு குட்டியோட சுத்திகிட்டே இருக்கு, அப்பப்ப வரும், போகும்”  சாவகாசமாகச் சொல்ல, “அம்மா, கிளம்புவோமா?” என்கிறாள் மகள் பயத்துடன்.  “செத்த இருங்க தாயி, காட்டுக்குள்ள போனேன், முருக்கைக்காய் பறிச்சிட்டு வந்தேன், நிறைய இருக்கு, கொண்டு போறீயா தாயி?” கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பாராமல், குடிசைக்குள்ளிருந்து 10, 12 முருக்கைக்காய்களை கொண்டு வந்து கைகளில் திணிக்கிறார். மறுக்க முடியாமல் வாங்குகிறேன். ஒவ்வொன்றும் புடலை அளவிற்கு உருண்டு திரண்டு இருக்கிறது. காட்டு முருங்கையாம். “பத்திரமாக இருங்கம்மா” சொல்லி விட்டு நகர்கிறோம்.

சில நிமிட நடை தூரத்தில் இடது புறத்தில் இருக்கிறது தர்மசாஸ்தா கோயில். ஊர்க்காவல் தெய்வமாகப் போற்றப்படும் அய்யனார் ஜம்மென்று வீற்றிருந்தார். குழந்தை குட்டிகளோடு ஒரு குடும்பம் சந்தோஷமாகப் பேசிக் களித்திருக்க, நான்கைந்து கார்கள் அணிவகுத்திருக்கின்றன. கோயிலுக்குப் பக்கத்தில் சாலையோரத்தில்  சில பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நமது மூதாதையர்கள்(!) அங்குமிங்கும் துள்ளிக்குதித்து வருவோர் போவோரின் பைகளைப் பறிப்பதும், சாவகாசமாக சாலையைக் கடப்பதுமாக வண்டியோட்டிகளுக்கு கிலி ஏற்படுத்தி, ஜாலி பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சுக்கொடுக்கிறேன். ‘புத்தகம் எழுதுவதற்கு’ என்று சொன்னதும் ஆர்வமாக கோயில்  கல்வெட்டைக் காட்டி சொல்ல ஆரம்பிக்கிறார்.  ஒற்றையடிப்பாதை, வண்டிப்பாதையானபோது, மாட்டு வண்டிகளில்தான் மக்கள் இப்பகுதியைக் கடந்திருக்கிறார்கள். பருத்தியும், தானியங்களும் மதுரையிலிருந்து தேனிக்கு மாட்டு வண்டிகளில் கொண்டுவரப்பட்டன. கோயிலின் முன்புள்ள சாலை வளைவாகவும், ஏற்றமாகவும் இருந்ததால் மாடுகளுக்கு பெரும் சிரமமாக இருக்கவே, இக்கோயில் பகுதிக்கு வந்ததும் மாடுகளுக்கும் ஓய்வு கொடுத்து, தாங்களும் களைப்பாறிய பிறகே வண்டியோட்டிகள் பயணத்தைத் தொடர்வார்கள். தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, அந்த சாலையைக் கடப்போர்கள் ஒரு சிறிய பீடத்தில் கல்லும்  அரிவாளும் வைத்து தங்களைக் ‘காப்பானாக’ வழிபட்டிருக்கிறார்கள். காலப்போக்கில் அது கோயிலாக உருவாகி விட்டது. வண்டிகள் நிறுத்தப்பட்டு மாடுகள் ஓய்வெடுத்ததால் இந்தகோவில் ஆரம்பத்தில் ‘வண்டி சாத்தா கோவில்’ என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் ‘தர்மசாத்தா’ வாக மாறி,  இப்போது ‘தர்ம சாஸ்தா’வாகி விட்டது.    1957 வரை பீடமும் கல்லும் அரிவாளும் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மையத்தில் குதிரையில் கம்பீரமாக அமர்ந்து சாட்டையை சுழற்றிய நிலையில் சாஸ்தா அருள்பாலிக்க, வேட்டை நாயுடன் கருப்பசாமியும், இன்னபிற சிலைகளும் இருக்கின்றன.

படம் நன்றி: இந்து திசை தமிழ்

இங்குள்ள எறிகாசு காணிக்கை விநோதமானது. இந்தக் கோயிலைக் கடக்கும் பேருந்துகள் அனைத்தும் சாஸ்தா கோயில் அருகே ஒரு நிமிடம் வண்டியை மெதுவாக நகர்த்த, காசை தயாராக எடுத்து வைத்திருக்கும் பயணிகள் சாஸ்தாவை நோக்கி தூக்கி எறிகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்டி நிறுத்தப்பட்டு கோயில் பூசாரி ஒருவர் பயணிகளுக்கு தீப ஆசி வழங்கி திருநீறு கொடுத்துச் செல்வார். தற்பொழுது அந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது. வண்டியில் போவோர், வருவோர் காணிக்கையாக காசுகளை எறிவதால் எப்போதும் தரையில் காசு விழும் ஓசை ‘க்ளிங் க்ளிங்’ என  கேட்டுக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை இக்கோயிலைக் கையகப்படுத்திய பிறகு இந்த காசுகளை சேகரிப்பதற்கு குத்தகை விடப்படுகிறதாம்.  அருகில் உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்களே பெரும்பாலும் குத்தகை எடுக்கின்றனர்.  

கோயில் வாசலில் அமர்ந்திருந்த இந்த ஆண்டு குத்தகைதாரர், 28 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளதாகக் கூறி ஆச்சரியப்படுத்தினார். நீண்ட குச்சியில் காந்தத்தை இணைத்து காசுகளை சேகரித்துக் கொண்டிருந்த அண்ணன்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே, சுடச்சுட நெய் வழியும்  பொங்கலை ருசிக்கிறோம்.

மாவட்டம் முழுவதுமே புதியதாக எந்த வாகனம் வாங்கினாலும் சாஸ்தாவுக்கு படையலிட்டு சாமி கும்பிடுவது வழக்கமாக இருக்கிறது.  தேனி மாவட்டத்தின் எல்லைச்சாமியாக இருக்கும் இந்த சாஸ்தா தங்களை விபத்தின்றி காப்பான் என்பது மக்களின் நம்பிக்கை. தேவையான புகைப்படங்களை எடுத்துவிட்டு,  வீடு திரும்ப மனமின்றி மிதந்துவரும் காற்றை அனுபவித்தபடி நிற்கிறோம். பேரனின் புது மோட்டார் பைக்கை சாஸ்தாவுக்கு முன்னால் நிறுத்தி மாலை போட்டு ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்த பாட்டி குறிப்பறிந்தது போல சொல்கிறார்…

“சித்திரை, வைகாசி கொளுத்தற வெயில் காலத்துலகூட மதுரையிலிருந்து தொறத்திட்டு வர வெயிலு கணவாய்க்கு கெழக்க ஆணியடிச்சாப்புல நின்னிரும். கணவாய்க்கு மேக்கே(மேற்கே) நம்மள கூப்பிட்டு போக மேக்காத்து (தென் மேற்கு பருவக்காற்று) ஒத்தாசைக்கு வந்திரும்”.  

தொடரும்…

படைப்பாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், முன்னாள் அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றது. 2014, 2015ஆம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ‘அடுக்களை டூ ஐநா’ தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். ‘இலங்கை – எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களையும் ‘என்ன செய்கிறது ஐநா – பெண் கல்வித் தடைகள் உடைபடும் தருணங்கள்’ என்கிற கட்டுரைத் தொடர்களையும் நம் வலைதளத்தில் எழுதினார். இம்மூன்று தொடர்களும் நூலாக்கம் பெற்று, ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடுகளாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

‘போர்களின் தேசத்தில்’ என்ற பயணக் கட்டுரை நூல் அவரது பயண அனுபவங்களைப் பேசுகிறது. இது தவிர, ‘பிள்ளையாரும் 22 நண்பர்களும்’ என்ற இளையோர் நாவலையும் ‘குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்’ என்ற சிறார் பற்றிய சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். பயணக் கட்டுரைகள், சிறுகதைகள், சிறார் எழுத்து, கல்வியியல் கட்டுரைகள் என பல தளங்களில் எழுதும் ஆற்றல் மிக்கவர். ‘தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்’ இவர் ஹெர் ஸ்டோரீஸ் வலைதளத்தில் எழுதும் ஆறாவது தொடர் ஆகும்.