இதுவரை வன்முறையின் பல வகைகளைப் பார்த்தோம். இன்று அதிகாரம் செலுத்தும் வன்முறையை அறிமுகப்படுத்துகிறோம். அமெரிக்காவில் மத்திய அரசின் அலுவலகங்களில் மேற்பார்வை நடந்துகொண்டிருக்கிறது. எனவே குழு அமர்வுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. அவரவர் பணி செய்யலாம் என்றாலும் கூடி விவாதிக்க முடியாது. இதனால் பல பணிகள் தடைப்பட்டுப் போயிருக்கின்றன. இது அதிகாரம், தனக்குக் கீழே செயலாற்றும் பல்லாயிரக்கணக்கானோர் மீது அவரவர் செயல்களைச் செய்யவிடாமல் தடுக்கும் வன்முறை. மன உளைச்சலையும் மனச் சோர்வையும்கூட ஏற்படுத்தும் செயல். ஆங்காங்கே அதிகாரிகளுக்கு மன நல மருத்துவர்களும் சமூக நலப் பணியாளர்களும் உதவிக்கொண்டே இருக்கிறார்கள்.

எப்படி ஒரு வன்முறையை எதிர்கொள்வது அல்லது தடுப்பது? வன்முறை இல்லாத ஒரு வீட்டை, இடத்தை அல்லது சூழலை நாம் பசுமை அல்லது அமைதி நிறைந்த இடமாக (க்ரீன் டாட்) குறிப்பிடலாம். அதே நேரம் வன்முறை நிறைந்த அல்லது அவ்வப்போது வன்முறை உள்ள இடத்தைச் சிவப்பு நிறத்தால் குறிப்பிடலாம். நமது குறிக்கோள் என்ன?  எல்லாச்  சிவப்பு  நிறப்புள்ளிகளையும் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்பதே! அப்போதுதான் இந்தச் சமூகம் அமைதி நிறைந்ததாக மாறும்.

ஒரு வழிப்போக்கனாக எப்படி வன்முறையை நம்மால் நிறுத்த முடியும் எனத் தெரிந்துகொள்ளும் முன் நாம் குறைந்த அளவு வன்முறையை அடுத்தவர் மீது செய்யாமல் இருப்பதும் முக்கியம். நம்மை நாமே கேள்விகள் கேட்டுக்கொள்வதும் அதிமுக்கியம்.

நமக்குச் சினம் வரும்போது தேவையில்லாமல் அடுத்தவர் மீது அதைச் செலுத்துகிறோமா, நம் குழந்தைகள் நம்மிடம் பணி செய்பவர்கள் மீது தேவையே இல்லாமல் நேரத்திற்கும் அவர்கள் திறமைக்கும் மீறிய செயல்களைச் செய்யக் கூறுகிறோமா? அல்லது அவர்கள் திறன்களை மதிக்காமல் பேசுகிறோமா என எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் அவற்றைக் குறைத்துக் கொள்ள, நம் பழக்கங்களை மாற்றிக்கொள்ள முயல வேண்டும்.

பழக்கங்களை மாற்றிக்கொள்ளுதல் கடினமானது. சினம்கொள்வதை விட்டுவிட வேண்டும் என நினைக்காமல்,  நமக்குப் பிடிக்காத ஒன்று நடக்கும் போது சினம்கொள்வது இயல்பு என ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்தச் சினத்தை எப்படி வெளிக்காட்ட வேண்டும் அல்லது கைக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் அறிந்து கொள்ள வேண்டும். சில நல்ல வழிமுறைகள் தனிமையில் இருப்பது, நீர் அருந்துவது, தியானம் செய்யப் பழகுவது, நல்ல காற்றோட்டமான இடத்தில் நடை பயிலுவது அல்லது பிடித்த நூல்களைப் படிப்பது, பாடல் கேட்பது என எதையாவது செய்து நம்மை நாமே ஆற்றுப்படுத்திக்கொள்ளலாம். இது போலத் தான் க்ரீன் டாட் பல வகை வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. ஒரு வழிப்போக்கனாகப் பல வகை வன்முறைகளுக்குச் சில முறைகளைப் பழகிக் கொள்ளுவது எப்படி என. ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்கும் வழிகளைக் கற்க. இப்போதே நாம் ஒரு கலாச்சார மாற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் நம்மை அறியாமலே. அது என்ன என்றால், வன்முறை நடக்கும் போது, கண் எதிரே ஒரு வன்புணர்வு நடக்கும் போது, அதைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் அதைக் காணொளியாக எடுத்துச் சமூக வலைத்தளத்தில் பரப்பும் மாற்றம். அதனால் கிடைக்கும் பரபரப்பு. அதனால் கிடைக்கும் சில கூடுதல் பின்தொடர்பாளர்கள் என.

க்ரீன் டாட் சொல்வது வேறுவகையான கலாச்சார மாற்றம். கிரீன் டாட்  வன்முறை தடுப்பு உத்தி சமூகத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது, நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் பார்வையாளராக இருப்போம். பசுமையாக இருந்த இடம்கூட ஏதேனும்  ஓர் இடத்தில் சிவப்பாக மாறக்கூடும். அப்படி நடக்க முற்படும்போது நாம் இந்த க்ரீன் டாட் உத்திகளைப் பயன்படுத்தி அதைத்         தடுக்கலாம். எனவே இந்தத் தடுப்பு உத்திகள் ஒரு கலாச்சார மாற்றத்தை  உருவாக்கச் செயல்படுகிறது.

தனிநபர்கள் ஒவ்வொருவரும் வன்முறைக்கு எதிராகச் சில தேர்வுகளை எடுக்கும் போது தானாகவே ஒரு சக்தி உருவாகிறது. அப்போது அதுவாகவே ஒரு வேகம் பிறக்கிறது. இந்தத் தேர்வுகள் பின் கலாச்சார விதியாக மாறி வன்முறையைச் சகித்துக்கொள்ள மற்றும் பொறுத்துக்கொள்ளாத ஒரு சமுதாயமாக மாறுகிறது. இதைப் போல ஒரு சமுதாயத்தைத்தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகாத ஒரு கிராமமாக, பாலசந்தர் தன்  திரைப்படத்தில் காட்டியிருப்பார். ( உன்னால் முடியும் தம்பி).

பொதுவாக உள்ள பல தடுப்பு முறைகள் ஆண்களைக் குற்றவாளிகளாகவும் பெண்களைப்                                 பாதிக்கப்பட்டவர்களாகவுமே அணுகுகின்றன. ஆனால் உண்மை அது அல்ல. அதனால் அவை அங்கீகரிக்கப்படுவதும் அல்ல. வெளியில் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை என்றாலும் பல ஆண்களும் சொல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.

க்ரீண்டாட் முறை ஆண்கள், பெண்கள் குழந்தைகள் எனப் பலரையும் பொதுவாகக் கையாள்கிறது. முறையான க்ரீன் டாட் திட்டம், டேட்டிங் பாலியல் வன்முறை, பாலியல் பின்தொடர் வன்முறை (stalking) ஆகியவற்றைத் தடுக்க ஒரு கல்லூரிச் சூழலில் உருவாக்கப்பட்டது. ஆனால், பெற்றோர் குழந்தைகளிடம், இளம் தம்பதியினர் முதியோரிடம் காட்டும் வன்முறையைத் தடுக்கவும் இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படும்.

இந்தத் திட்டம் தனி நபரின் பங்களிப்பை நம்பி இருக்கிறது.  அது தொடங்கி ஒவ்வொருவராகச் சமூகத்தில் பரவும் போது சக்தி பெற்று  அமைதிச் சூழலை உருவாக்குகிறது.

அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட தனிநபர் வன்முறையைக் குறைக்க நமக்கு ஒரு கலாச்சார மாற்றம் தேவை. அத்தகைய கலாச்சார மாற்றத்தை உருவாக்குவதற்காக, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் வன்முறை குறைவாக நீடித்திருக்கும் நடத்தை மாற்றத்தில் ஈடுபட மக்களின் மன மாற்றம் அவசியம். பொதுவாகத் தனிநபருக்குத் தயக்கம் அதிகமாக இருக்கும். ஒரு வன்முறைச் சம்பவத்தைக் காணும்போது அதைத் தடுக்கத் தயக்கமும் அச்சமும் ஏற்படும். நாம் இதைக் காவலரிடம் சொன்னால், அந்தச் சினம் நம் மீது ஏற்படுமா? இதனால் நமக்கு  பாதிப்பு ஏற்படுமா? அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினையோ? இதில் நாம் ஏன் தலையிட வேண்டும்?  அப்படித் தலையிட்டு நமக்குப் பாதிப்பு வந்தால் பரவாயில்லை, நம் குடும்பத்தாரைப் பாதித்தால், அல்லது நம் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால்? இது என்ன நம் வேலையா போன்ற கேள்விகள் ஆக்கிரமித்துக்கொள்ளும். அதுவும் முறைகேடாக ஏதேனும் நடந்துவிட்டால், நாம் காவலரிடம் புகார் அளிக்க வேண்டியிருந்தால் அது என்னனென்ன நடைமுறைச் சிக்கல்களில் கொண்டுவிடும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கும். வழக்கு என்றெல்லாம் நீதிமன்றங்கள் செல்ல வேண்டியிருந்தால் சாட்சியாகப் போக வேண்டியிருக்குமா, விடுமுறை எடுக்க வேண்டியிருக்குமா என்றெல்லாம் அநாவசியமான மனத்தடைகள். இவை அனைத்துமே தேவையில்லாத அச்சங்கள். ஒரு வழிப்போக்கனாக நாம் செய்ய வேண்டியது அந்த நேரத்தில் அந்த வன்முறையைத் தடுக்க ஏதேனும் ஒரு வழியைத் தேடி உதவ வேண்டியதுதான். அது என்ன வழி, எப்படி என்பதை வரும் பகுதிகளில் காணலாம்.

எடுத்துக்காட்டாக, சற்றே பயந்த நிலையில் தனியாகப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணைச் சில வழிப்போக்கர்கள் தொல்லை செய்வது தெரிந்தால், நாம் துணையாகக் கொஞ்ச நேரம் அங்கே நிற்பதாலோ அல்லது பேச்சுக்கொடுப்பதாலோ ஒன்றும் நேர்ந்து விடாது. ஒவ்வொரு வன்முறை வகைக்கும் வழிப்போக்கனாக நாம் எப்படி அதைத் தடுக்க முடியும் என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு க்ரீன் டாட் எப்படிக் கையாள்கிறது என விரிவாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.