நியு ஆர்லியன்ஸில் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி நடனமாடி உல்லாசமும் உற்சாகமுமாகப் பிரிந்து கொண்டிருந்த கூட்டத்தின் மேல் ஏறியது வாகனம் ஒன்று. தொடர்ந்தது துப்பாக்கிச்சூட்டு ஒலி. காவலர்களும் ஆம்புலன்சின் ஒலிகளும் முன்பிருந்த சூழ்நிலையை நிமிடத்தில் மாற்றின. வாகனமோடு மோதி 14 பேர் இறந்து போனதோடு, புத்தாண்டு பிறந்தது. இறந்து போனவர்கள்  யாரென்றே வாகனத்தோடு மோதி உயிர்விட்டவனுக்குத் தெரியாது. பகையோ உறவோ இல்லை. மதத்தின் மீதான பற்று எங்கோ யாரோ பற்றவைத்த நெருப்பு. தன்னையே அழித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறது. தீவிரவாதியின் குடும்பத்திற்கும் ஆறாத துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இறந்துபோன மற்றவர்களின் குடும்பத்தையும்  ஆறாத்துயரில்  ஆழ்த்தியிருக்கிறது இந்தச் செயல். யாருக்குத் தேவை இத்தனை வன்முறை?

சென்னையில் கல்லூரி மாணவியின் மீது பாலியல் கொடுமை. உலக அளவில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கொரு முறை ஒரு பெண் வன்முறையால் தாக்கப்பட்டு இறந்து போகிறார். நாளொன்றுக்கு 140 பேர். கடந்த வருடத்தில் 85,000 பெண்களை அவர்களுடன் நட்பும் காதலும் அன்பும் பாராட்டியவர்களே கொன்றிருக்கிறார்கள்.

பெற்றோர் குழந்தைகள் என வயது வித்தியாசம் இன்றி, உறவு பேதம் இன்றி வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் பல நேரம் இது அதீத அன்பின் வெளிப்பாடாகவே செலுத்தப்படுவதுதான்.

முன்பெல்லாம்  பள்ளிகளில் நீதிபோதனை வகுப்பென்று உண்டு. அதையும் தவிர பொதுவாகவே ஆசிரியர்கள் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். சின்ன சின்ன கவலைகள் தீர்ப்பவர்களாக, வாழ்வியலுக்குத் தேவையான மனோ தைரியத்தை, தன்னம்பிக்கையை வளர்ப்பவர்களாக, சவால்களை எதிர்கொள்ளச் செய்பவர்களாக, நல்வழிப்படுத்துபவர்களாக இருப்பார்கள். பெற்றோரும்  ஆசிரியர்களிடத்து  மிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருந்தார்கள்.

அமெரிக்காவில் சமீபத்தில் பாடத்திட்டங்களை மறு ஆய்வு செய்யும் போது வாழ்வியலுக்குத் தேவையான மென்கலைகளைப் பயில்விக்காமல்,              வெகுதூரம் வந்துவிட்டோமா என்று மீள் ஆராய்ச்சி செய்து அதைச் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மாணவர்களுக்குத்                      தோல்வியைக் கண்டு துவளாமல் எதிர்கொள்ளத் தெரிந்திருக்கத் தன்னம்பிக்கை கொண்டிருக்கவும் தைரியமான மன உறுதியும் வேண்டும்.

மருத்துவப் படிப்பு கிடைத்து மருத்துவராக முடியாத போது வேறு என்ன வழிகளில் மருத்துவத் துறையில் பணியாற்ற முடியும் என்பதைச் ல்லித்தர ஆசிரியர்களும்  பயிற்சிக்கழகங்களும் வேண்டும்,  பல்வேறு பாதைகள் இருக்கின்றன, உயிரை மாய்த்துக்கொள்வதைத் தவிர. இந்தப் படிப்பு படித்துப் பெற்றோரின் கனவை நினைவாக்குவது உன் கடமை என்று பிள்ளைகளிடம் சொல்வதும்கூட வன்முறைதான். அதேபோல மதிப்பெண்களை  ஒப்புநோக்கிப் பேசுவதுகூட வன்முறைதான்.  ஆராய்ச்சித் துறை,   மருத்துவர்களுக்கே போதிக்கும் ஆசிரியர்களாக உயரவும்கூட முடியும். செவிலியர், அதில் ஆராய்ச்சி, மருந்துத் துறை, அறுவை சிகிச்சையில் பல்வேறு பணிகள் இன்னும் பல தொழில்நுட்ப மேல்படிப்பு கிடைக்கவில்லை என்றாலும்கூட,  பிடித்த பணி கிடைக்கவில்லை என்றாலும், கடன் தொல்லை அதிகரித்தாலும் எப்படி வாழ்க்கையைப் போராட்டங்களிடையே மீட்டெடுக்க முடியும் என்பதற்கான கலையை, மனப்பான்மையைப் பெறுவதைக்கூடப் பாடங்களிடையே சொல்லித்தருவதுகூட ஒரு சிறந்த ஆசிரியராகத்தான் இருக்க முடியும்.

சென்ற வருடம் இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக 1, 39,123 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் மாணவர்களும் அடக்கம். அமெரிக்காவிலும் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 132 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். நினைத்தால் நாம் எல்லாருமேகூட நல்ல ஆசிரியராக மாற முடியும். தோல்வியோ சற்றே பின்னடைவோ வரும் நேரத்தில் நம் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பதுவே அது! வாழ்க்கையையும் உயிரையும்விடப் பெரியது, உலகில் எதுவும் இல்லை!

இந்தப் பதிவின் நோக்கம் வாழ்வியலின் மென்கலைகளைக் கற்பதும் கற்பிப்பதும் தன்னம்பிக்கையை வளர்ப்பதைப் பற்றியுமே! கிளி பறந்தது என்பதற்காகக்கூட 10 வயது சிறுமி தற்கொலை செய்துகொள்கிற அளவு எது எண்ணங்களைத் தூண்டுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

வன்முறைகள் பலவகைப்படும். சொல் வன்முறை, பாலியல் வன்முறை, பொருளாதார வன்முறை, அடக்குமுறை, உடல்ரீதியான வன்முறை, மத நம்பிக்கை அடிப்படையிலான வன்முறை, மொழி, இன அடிப்படையிலான  வன்முறை, உணவுப்பழக்க வழக்கங்களிலான வன்முறை எனப் பட்டியலிடலாம்.

வன்முறை செய்பவர்களும் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களும் ஒரு வன்முறைச் சக்கரத்துக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். இதில் பல படிகள் உண்டு. முதல் நிலை பாதிப்புக்கு ஆளாகும்  நபரைத்  தன்வயப்படுத்துதல்,  இரண்டாம் நிலை, அவரை அடக்கித் தன் சக்திக்குக் கீழே கொண்டு வந்து அடக்குமுறை செய்தல், மூன்றாம் நிலை தேன்நிலவு நிலை. இப்போது அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரைத் தன் மீது இரக்கம் காட்ட வைத்தல். பிறகு அவர் மீதே குற்றம் சாட்டி அவரைச் சுயப் பரிதாபத்துக்கும் தன்னைத்தானே குற்றம் சுமத்தும் அளவுக்கும்  ஆளாக்குதல். இந்தத் தேனிலவுக் காலம் சில காலம் நீடிக்கும்.

எப்படி வன்முறை பலவகைப்படுமோ அதேபோல வன்முறை செலுத்துதலும் பலவகைப்படும். அவற்றைப் புரிந்து கொண்டால்தான் நாம் வன்முறையைத்  தடுக்க முடியும். வன்முறையைப் பற்றிப் புரிந்துகொள்வது அவசியம். இது தனி மனிதர் பிரச்னை அல்ல. சமூக, பொது நலப் பிரச்னை.

வன்முறை, காயப்படுத்துவதாக  மட்டும் இருக்க வேண்டியதில்லை. ஒருவரின் சுயமதிப்பீட்டைப் படிப்படியாகக் குறைப்பது,  நட்பு வட்டங்களிலிருந்து தனிமைப்படுத்துவது எனப் பல நிலைகள் இருக்கின்றன.

பெருகிவரும் தற்கொலைகளை, கொலைகளைத் தடுக்க வேண்டுமானால் வன்முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எது பாலியல்  அத்துமீறல்களுக்குக் காரணமாகிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டும். பாடல் வரிகளில், சின்ன சின்ன வாக்கியங்களில், தாவர உணவா, புலால் உணவா என உண்ணும் உணவைக் கேலி பேசுவது முதல் எங்கே நம்மை அறியாமலே வன்முறையைச் செலுத்துகிறோம் என்கிற புரிதல் வேண்டும். நகைச்சுவைகளில் எழுதும் கட்டுரைகளில் என நாள்தோறும் மைக்ரோ  அக்ரெஷன் எனப் புரியாமலே பலர் சின்ன சின்ன செய்கைகளால் வன்முறையைக் கலந்தே எழுதுகிறார்கள். அதைப் புரிந்துகொள்ளவும் தெளிந்து வன்முறைகளைக் களையவும் இந்தக் கட்டுரைகள் உதவலாம். தொடர்ந்து கற்றுக்கொள்வோம்!

(தொடரும்)

பத்மா அர்விந்த்

மருத்துவத்தில் முனைவர் பட்டமும் நிர்வாகவியலில் மேலாண்மை பட்டமும் பெற்றவர். அமெரிக்க மத்திய மாநில அரசின் மனிதவள மற்றும் உடல்நலத் துறையின் கொள்கை மாற்ற ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அமெரிக்க அரசியல் குறித்து மெட்ராஸ் பேப்பர் வார இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘கனவுகள் மின்னும் தேசம்’ எனும் புத்தகம் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறது.