காதலே… காதலே…
தனிப்பெரும் துணையே !
புத்தாண்டு வாழ்த்துகள் தோழமைகளே!
அனைவரும் நலம்தானே?
மறுபடியும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நலம் என்றதும் நமக்குத் தோன்றுவதெல்லாம் உடல் நலம்தான். ஆனால், மனநலமே எல்லாவற்றிற்கும் ஆதாரம். மனம் நலமாக உள்ளதா தோழமைகளே?
நல்ல மனநலத்திற்கு ஒரு முக்கியக் காரணி காதல். காதல், அன்பு, நேசம் என்று எந்தப் பெயரில் வேண்டுமானாலும் சொல்லலாம்.
நம் அனைவருக்கும் தான் நேசிக்கப்படுகிறோம் என்பதில் ஓர் அலாதி கர்வமும், தான் நேசிக்க ஓர் உயிர் இந்த உலகத்தில் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியும் நிச்சயம் உண்டு. அப்படி யாரும் இல்லாதவர்கள் வெறுமையும், தனிமையும் அதிகமாகி வாழ்க்கை கசந்து போவதுமே மனநலம் கெடுவதற்கு முக்கியக் காரணமாகிறது.
நீங்களே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் காதல் வயப்பட்டிருந்த நாட்களில் உலகம் எவ்வளவு அழகாக இருந்தது! வாழ்க்கை இத்தனை சுவாரசியமா என்று ஆச்சரியத்தோடு மகிழ்ந்து அனுபவித்த நாட்கள் இப்போது ஏன் இல்லை?
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது
எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது
எந்தன் வானத்தில்
முப்பது நாளும் முகூர்த்தம் ஆனது
எந்தன் மாதத்தில்
முள்ளில்
கூட தேன்துளி கசிந்தது
எந்தன் ராகத்தில்
இது எப்படி எப்படி நியாயம்
எல்லாம் காதல் செய்த மாயம்.
அதேதான், அந்த மாயத்தை இளமையில் அனுபவிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்போது அந்த மாயம் எங்கே போயிற்று?
அப்படி மாய்ந்து மாய்ந்து காதல் புரிந்த நாமே, அவர்களையே திருமணம் செய்த பின்னரும் அந்த மாயாஜாலத்தை ஏன் தொலைத்தோம்?
வாழ்க்கை ஓட்டத்தில் துள்ளலை, காதலை அது தரும் கிளர்ச்சியை நாம் அனைவருமே தொலைத்ததுதான் நிஜம்.
இதுதான் நான் முன்வைக்கும் கேள்வி.
உங்களின் காதல் ஆழமானதெனில் இப்போது எங்கே போனது அந்த ஆழம், ஏன் மணிக் கணக்கில் பேசிய அதே நபரோடு இன்று ஐந்து நிமிடம் சேர்ந்தார்போல பேச முடிவதில்லை? பேசினாலும் அது ஒரு சண்டையில் போய் முடிவதேன்? அன்று ஐந்து நிமிடம் பார்க்க அரை மணி நேரம் காத்திருந்த நாம் இன்று அதே ஐந்து நிமிட தாமதத்திற்குக் கொதித்துப் போகிறோம். அதுவும் நாம்தான், இதுவும் நாம்தான். ஏன் இந்த மாற்றம்?
ஒரே விடைதான், மாற்றமே உலகில் மாறாத விஷயம். எதை அதிகமாக விரும்புகிறோமோ அதுவே சலித்துப் போவதும் நடக்கும். இதில் விதிவிலக்குகளும் உண்டு.
பின் கடைசி வரை மாறா காதல் எதுதான்? சுய நேசம்தான். நம்மை நாமே நேசிப்பது மட்டுமே வாழ்வு முழுவதும் மாறாத நேசம். நம் வாழ்க்கை முழுக்க உடனிருக்கப் போவது நம் உடலும் மனமும் மட்டுமே. மற்ற அனைவருமே அவரவர் வழியில் இறங்கிக் கொள்ளும் வழிபோக்கர்கள்தாம்.
எந்த உறவின் ஆரோக்கியமும் நாம் நம்மை எவ்வளவு தூரம் நேசிக்கிறோம் என்பதிலிருந்தே தொடங்குகிறது.
ஒருவேளை நாம் அன்பு காட்ட, நம்மிடம் அன்பு காட்ட யாருமே இல்லாவிடினும் நமக்காக நாம் இருக்கிறோம் என்பதே மனதிற்குப் பெரிய பலம். நம் மேல் நமக்கிருக்கும் அந்தக் காதல் போதும் வாழ்வை ரசிக்க, உலகை ஜெயிக்க.
நம்மை நாமே லவ் பண்றதா? என்ன காமெடியா இருக்கு என்று யோசிக்காதீர்கள். நாம் பேசப் போவது ரொம்பவே சீரியஸான விஷயம். உலகின் எல்லா வெற்றியும் ஆரம்பிக்கும் சிறு புள்ளி சுய நேசம்தான்.
ஒரு சிலரைப் பார்த்த உடன் அவர்களிடம் பழகத் தோன்றும், அவர்களின் உற்சாகம் நம்மிடமும் தொற்றிக்கொள்ளும். சந்தேகமே இல்லாமல் முடிவு செய்யலாம், அவர்கள் சுய நேசம் அதிகமுள்ளவர்கள் என. தன்னை நேசிப்பவர்கள் இயல்பாகவே மற்றவர்களை, வெற்றியைத் தன்னை நோக்கி ஈர்க்கிறார்கள்.
சுய நேசம், சுயமதிப்பைக் கூட்டுகிறது. செய்யும் செயலைத் திருத்தமாகச் செய்ய வைக்கிறது. அவர்களின் நேரத்தின் மதிப்பை உணர வைக்கிறது, மொத்தமாக அவர்களை வெற்றியாளராக்குகிறது.
அதைப் பற்றித்தான் வார வாரம் பேசப் போகிறோம். அதை எப்படிச் செயலில் கொண்டு வருவது எனப் பார்க்கப் போகிறோம்.
தொடர்ந்து பேசுவோம், நம்மைக் கொண்டாடுவோம்; வாழ்வை கொண்டாடுவோம்!
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ’உன்னை அறிந்தால்…’ ‘உணர்வு சூழ் உலகம்’ ஆகிய தொடர்கள், ஹெர் ஸ்டோரிஸில் புத்தகங்களாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளன.
நம் மேல் நமக்கிருக்கும் அந்தக் காதல் போதும் வாழ்வை ரசிக்க, உலகை ஜெயிக்க// Awesome, Thozhar.