பூங்காவனம் என்கிற புனைப்பெயரில் எழுதிவரும் இந்த இளம் பெண் எழுத்தாளர், கல்வி நிலையங்களில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிச்சம் போட்டு உலகுக்குக் காட்டுகிறார். ‘கல்விச் சுவர்களுக்குள்’ என்கிற இந்தப் புதிய தொடர் வாரமொருமுறை வெளிவரும்!

அரிவாளுக்கு மட்டுமல்ல, அறிவாளிகளுக்கும் பெயர் போன ஊரை முத்துப்பாண்டி வாத்தியார் தனது பெயரிலும் அடைமொழியாகக் கொண்டிருந்தார்.

எந்தப் பாடம் நடத்தினாலும் தன்னைப் ‘பாண்டிய மன்னர்கள் பரம்பரை’ என்று ஒவ்வொரு வகுப்பிலும் சொல்லிக் கொண்டிருப்பார். அதனால் தன் பெயரை நெல்லை முத்துப்’பாண்டியன்’ என்று மாற்றிக்கொண்டார். அவர்தான் தங்களுக்குப் பொறுப்பாசிரியர் என்று தெரிந்தபோது கலைச்செல்விக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. எரிச்சலும் கோபமும் வந்தது.

‘புகழ்பெற்ற நிறுவனத்தில் எம்.ஃபில் படிக்கப் போகிறோம்’ என்று பெருங்கனவோடு வந்திருந்த அவளுக்குச் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, ‘இவங்கள்லாம் படிச்சிட்டுதா வந்தாங்களா, இல்ல காச குடுத்து வந்துட்டு, நம்ம உயிரை எடுக்குறாங்களா’ என்றே தோன்றும். அன்றைக்கு ஆய்வியல் நெறிமுறைகள் பாடத்தில் ‘கருதுகோள்’ எனும் தலைப்பை நடத்திக் கொண்டிருந்தார் முத்துப்’பாண்டி.’

இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் காட்டுக் கூச்சலாகக் கத்தும் முத்துப்பாண்டி வாத்தியாரின் ஆண்ட பரம்பரைப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் காக்கைகள் கரைவதுகூடக் காதுகளுக்கு இனிமையாக இருக்கும். ஜன்னல் வழியாகச் சில்லென்று வீசும் குளிர்க்காற்று முகத்தில் மோதித் திரும்பும்போது வாழ்க்கையின் பேரின்ப பெருவெள்ளமே உள்ளத்தில் குதூகலிக்கும். குருவிகளும் அணில்களும் தங்கள் குஞ்சுகளோடு கொஞ்சிக் குலவிடும் ஓசைகள் அவளை வேறோர் உலகத்திற்கு அழைத்துச் சென்றிருந்தன.

‘‘ஆய்வு செய்யும்போது நாம் முதலில் ஒன்றைக் கருத வேண்டும். பிறகு அதை நிரூபிக்கச் சான்றுகளைத் தேட வேண்டும். ‘மீண்டெழும் பாண்டிய வரலாறு’ன்னு ஒரு புத்தகம்…’’ என்று முத்துப்’பாண்டியர்’ கத்தும்போது, சற்றே மனதையும் காதுகளையும் வாத்தியாரின் பக்கம் திருப்பினாள்.

‘‘அவ்வளவும் புனைசுருட்டு, நாடாண்டவர்கள் யார்? தமிழ்த்தேசிய மரம் எது? அந்த மரத்தோடு தங்கள் வாழ்வியலை இணைத்து இயற்கையைக் காத்துக் கொண்டிருக்கும் அரணாக விளங்குபவர்கள் யார்? இன்றைக்குத் திராவிடம் நம்மைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழனை அழித்துவிட்டார்கள், எவனும் படிக்கறதே இல்ல, கால்டுவெல்ல படிச்சா வெளங்குமா?’’ என்று முடியும்போது, சீதாவும் மாரியும் தங்கள் புருவங்களை ஏற்றி, ‘யப்பா… கரெக்டா வந்துட்டார்யா பாயிண்டுக்கு…’ என்று எண்ணிக் கொண்டனர்.

‘‘வர திங்க கெழம எல்லாரும் ‘கருதுகோள்’ பத்தி அசைன்மெண்ட் எழுதிட்டு வரணும். படிச்சுப் பார்த்துத் திருத்தி மார்க் போடுவேன், ஒழுங்கா எழுதிட்டு வாங்க’’ என்று கிளம்பினார்.

மறுநாள் முதல் ஒவ்வொருவராக அசைன்மெண்டைக் கொடுக்கத் தொடங்கியிருந்தனர். பெரும்பாலும் கு.வெ.பா எழுதிய ஆய்வியல் நெறிகள் எனும் நூலில் கருதுகோள் எனும் தலைப்பில் அமைந்த பகுதியைப் பார்த்து பலரும் எழுதிக் கொடுத்துள்ளனர் என வகுப்பில் பேச்சு போய்க்கொண்டிருந்தது. அதுதான் பாடப்புத்தகம்.

‘‘இதக் கொடுத்தாதா இண்டர்னல் மார்க் போடுவாராம்’’ என்றான் சரண்ராஜ். அவன் முடித்துவிட்டான் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற அறிவிப்பாகவே அது அமைந்தது, குறிப்பாக சீதாவைப் பார்த்து. கடைசி வரிசையில் இருந்த சீதா,

‘‘ஹ்ம்ம்ம்… நா பாத்துக்கற’’ என்றாள்.

‘‘ஏப்பா, எப்பவும் மாதிரி ஓ அதிகப் பிரசங்கித்தனத்தை அவர்ட்ட காட்டாத, அவரு ஒரு மாதிரியான ஆளு’’

‘‘போடா… நா பாத்துக்கற… இப்பதான் படிச்சுகிட்டிருக்கிற’’

‘‘படிக்கிறியா’’

‘‘ஹ்ம்ம்ம்’’

‘‘வெளங்குன மாதிரிதா’’

என்று சொல்லி வெளியே போய்விட்டான்.

‘திங்கள் கடைசிநாள். இன்றே லைப்ரரி போய் ரெண்டு மூணு புத்தகத்தை ரெஃபர் பண்ணி சனி, ஞாயிறுல எழுதிருவோம்’ என்று நினைத்து அன்று மதியமே தமிழண்ணல், பொற்கோ, பஞ்சாங்கம் ஆகியோரின் புத்தகங்களை எடுத்து வந்திருந்தாள்.

பாடப்புத்தகமாக உள்ள கு.வெ.பா நூலையும் சேர்த்துப் பிற நூலாசிரியர்கள் சொல்வதையும் படித்து ஒரு ஆறு பக்கத்திற்கு எழுதி, திங்களன்று பாண்டி வாத்தியாரைச் சந்திக்கச் சென்றாள். எப்போதும் சார்த்தப்பட்டே இருக்கும் அவரது அறைக்குள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் கதவைத் தட்ட வேண்டும். தனியாகச் செல்வதற்குப் பயந்து, உடன் மாரியையும் அழைத்துச் சென்றிருந்தாள். அவன் முன்னரே அசைன்மெண்ட் ஒப்படைத்திருந்தான்.

கதவைத் தட்டி…

‘‘அய்யா…’’

‘‘உள்ள வா…’’

சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரிடம்,

‘‘அசைன்மெண்ட் அய்யா’’

‘‘முன்னாடியே கொடுக்க முடியாதோ, கடைசி நாள்தா கொடுப்பீகளோ, ஒங்களுக்கெல்லாம் மார்க்க கம்மி பண்ணுனாதா அடங்குவீக… அங்க வை’’

‘‘இல்ல சார்… போன வாரம்…’’

‘‘இங்க வச்சு ஒவ்வொரு பக்கமா திருப்பு’’ என்றவர், மாரியிடம் அந்தத் தேங்காய் சட்னியைப் பொங்கலில் ஊற்றுமாறு சைகை செய்து, மீதமிருந்த கொஞ்சம் பொங்கலையும் வழித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அசைன்மெண்டை அருகில் வைத்து அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்கான உத்தரவை எதிர்பார்த்து அவரின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் சீதா. பொங்கலின் ருசி அசைன்மெண்டை மறக்கச் செய்தது. சூடான பொங்கல் இலையில் வைக்கப்பட்டதால் வாடியிருக்கும் அந்த இலையின் மணம் அவர்கள் இருவரின் மூக்கையும் சீண்டிப் பார்த்தது. காலையில் உண்ட பழைய கஞ்சியும் மல்லாட்டையும் மறந்துபோய், பசியுணர்வு தோன்ற ஆரம்பித்தது. 

எழுந்து கை கழுவிவிட்டு அசைன்மெண்டை கையில் எடுத்தவர்,

‘‘ஆறு மணியானா ஹாஸ்டலுக்குள்ள போகமாட்டீங்களோ, டீக்கடைல அந்தப் பயலுவளோட என்ன சோலி?’’

‘சிக்கிட்டீயே சீதா’ என்று உள்ளூர எண்ணிய மாரி, திருவிழாவில் அறுக்கப்போகிற ஆடு மாதிரியே முழித்து சீதாவைப் பார்த்தான்.

‘நீயெல்லாம் ஒரு ஆளு’ என்கிற தோரணையில் நின்று கொண்டிருந்தாள் சீதா.

அடுத்த பக்கத்தைத் திருப்பியவர் திடீரென்று கடுப்பாகி ஏதோ தமிழ் ஆய்வையே அவள் கேவலப்படுத்திவிட்டது போல, ‘‘என்ன இது? ஏதேதோ எழுதி வச்சுருக்க? போய் ஒழுங்கா எழுதிட்டு வா. நா என்ன சொன்னனு கவனிக்கலையா, அதிகப் பிரசிங்கித்தனமா நடந்துக்கறது. படிக்கணும். போ… போய் ஒழுங்கா எழுதிட்டு வா’’ என்று அசைன்மெண்டைக் கசக்கி டேபிளிலேயே தூக்கிப் போட்டார்.

‘‘என்ன மாரி… நீ முடிச்சுட்டல்ல… எப்டி எழுதணும்னு இவளுக்கு சொல்ல மாட்டியா’’

‘‘சொல்றங்கய்யா’’

‘‘போமா… போய் ஒழுங்கா பாத்து எழுதிட்டு வா’’

‘‘சரிங்கய்யா’’ என்று வெறுப்பாகி வெளியே வந்தவள், மாரியோடு வகுப்பிற்குள் நுழைந்தாள்.

வாத்தியாரின் அறையில் நடந்ததையெல்லாம் வகுப்பில் சொல்லிக் கொண்டிருந்தான் மாரி. குறுக்கிட்ட சரண்ராஜ், ‘‘எனக்கு பாண்டி அய்யா ‘மிக மிக நன்று’ன்னு போட்டார். நீ என்ன பண்ணு, கு.வெ.பா புக்குல 275ம் பக்கத்துல இருந்து 277ம் பக்கம் வரைக்கும் இருக்குறத அப்டியே பாத்து எழுதிட்டு போ. ஓகே சொல்லிடுவாரு’’ என்றான்.

‘‘சரி தம்பி… நா பாத்துக்கற’’ என்ற சீதா ‘அந்தாளு ஒரு அர லூசு. இவன் ஒரு முழு லூசு. ரெண்டு லூசுப்பயலுவளும் சேந்து நம்ம உயிர எடுக்குறானுவ’ என்ற எரிச்சலுடன் அன்றைய வகுப்பிலிருந்து ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள்.

அன்று இரவே உட்கார்ந்து சில மேற்கோள்களையெல்லாம் நீக்கிவிட்டு மறுநாள் தனியாகவே ‘பாண்டியரின்’ அறைக்குச் சென்றாள்.

‘‘அய்யா… திருத்தி எடுத்திட்டு வந்திருக்க அய்யா’’

‘‘கொண்டா பாப்போம்’’

இம்முறை நேராக மூன்று பக்கங்களைக் கடந்து புரட்டிக் கொண்டிருந்தார்.

‘‘ஒனக்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதாமா?’’ என்று அதையும் கசக்கியவர், ‘‘கு.வெ.பா புத்தகத்துல 275ல இருந்து 277ம் பக்கம் வரைக்கும் இருக்குறத அப்டியே பாத்து எழுதிட்டு வா… நீ கிளாசுக்குப் போ. நா வர… சொல்லும்போது கவனிக்குறதில்ல. அப்றம் என்னத்தயாச்சும் எழுதிட்டு வரது, நீயெல்லாம் ஏம்மா படிக்க வர?’’

சீதா வகுப்பிற்குச் செல்ல, அவளின் பின்னாலேயே வகுப்பிற்கு வந்த ‘பாண்டியர்’, ‘‘அசைன்மெண்ட் கொடுக்கலைனா இன்டர்னல் மார்க் போடமாட்டேன். இன்னம் நிறைய பேரு கொடுக்காம இருக்குறீங்க. அப்றம் ஒங்க இஷ்டத்துக்கு எழுதக்கூடாது. சரண்ராஜ்ட்ட கேளுங்க. அவன் அசைன்மெண்ட வாங்கிப் பாருங்க’’ என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

உச்சகட்ட கோபத்திலிருந்த சீதா, ‘தெரியாத்தனமா வந்து இவனுவள்ட்ட சிக்கிடோமுடா’ என்று சரண்ராஜின் அசைன்மெண்டைக் கேட்டு வாங்கிப் பார்த்தாள். முதல் பக்கம் நெற்கதிர்களின் படம் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டப்பட்டிருந்தது. அதன் மேல் ‘மிக மிக நன்று’ என்று பச்சை மையினால் எழுதப்பட்டு கையொப்பமும் இடப்பட்டிருந்தது.

சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாமல் விழிபிதுங்கி அந்தப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்த சீதா…

‘‘அடேய்… கருதுடா… நெல்லுக் கருதுடா’’ என்று விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள். அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

‘‘அடப்பாவிகளா… கருதுகோள பத்தி எழுதச் சொன்னா, இவன் நெல்லுக் கதிர ஒட்டி வச்சிருக்காண்டா… அந்தாளும் அதுமேல ‘மிக மிக நன்று’ன்னு போட்டிருக்காருடா’’ என்று கீழே விழுந்து தரையில் கையைத் தட்டித் தட்டிச் சிரிக்க ஆரம்பித்தாள்.

வகுப்பறையே சிரிப்பலையில் அல்லோலப்பட்டுப் போனது. அதன்பிறகு யார், எப்போது கருதுகோளைப் பற்றிப் பேசினாலும் அவளால் சிரிப்பை அடக்க முடிவதில்லை!

  • பூங்காவனம்