‘ அய்யா வைகுண்டர் ஒரு சாமான்ய மனிதர், சாதுவானவர், எனவே, நிபந்தனைக் கடிதம் கொடுத்தாலன்றி, மாபெரும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சிறையிலிருந்து அவர் வெளியே வந்திருக்க முடியாது’, என்ற பொதுப்புத்தியில் சிந்திப்பதாலேயே பலரும் அய்யா வைகுண்டர் நிபந்தனைக் கடிதம் கொடுத்து விட்டுதான் வெளியே வந்திருப்பார் என்று யூகத்தின் அடிப்படையில் நம்புகிறார்கள், ஆராய்வதில்லை.
ஆனால் அரசியல் களம் என்பது சாமான்ய மனிதனையும்கூட கணப்பொழுதில் சமூகப் போராளியாக மாற்றி விடும் வல்லமை கொண்டது என்பதை மறந்துவிடக்கூடாது.
சாவர்க்கர் முதலான மன்னிப்புப் போராளிகளின் வரிசையில் அய்யா வைகுண்டரையும் சேர்த்து, அவரது போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கத்தில், பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியல் சூழலுக்கும், அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளுக்கும் சற்றும் பொருத்தமற்றபடி அய்யா வைகுண்டர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லி பொய்யைக் கட்டமைக்கும் பணி, சமீப காலத்தில் நிகழ்ந்து வருவதைக் காண முடிகின்றது. அய்யா வைகுண்டர் பொறுமைசாலி, சாது, ஆன்மீகவாதி, அஹிம்சாவாதி என்று மனதில், தமக்குத்தாமே கற்பனையாக வரித்துக் கொண்டவர்களும், மற்றும் அவ்வாறுக் கட்டமைக்கத் துடிப்பவர்களும், வைகுண்டர் மன்னிப்புக் கடிதம் எழுதியவர் என்ற கருத்தை ஏற்கிறார்கள்.
ஆனால், மக்களின் அறப்போராட்டம் என்பது எந்த சூழலிலும், சர்வாதிகாரத்திற்கு அடிபணியாத போராட்டம் என்பதுதான் வரலாற்று உண்மை. மக்கள் கூட்டத்தின் ஒற்றுமைக்கு உரித்தான ஆற்றல், சர்வாதிகாரத்தை நடுநடுங்கச் செய்யும் ஆற்றலாகும். அத்தகைய மக்கள் கூட்டத்தின் ஆற்றலுடன் பொதுவுடைமை பேசிய அய்யா வைகுண்டரின் அறப்போராட்டம், சர்வாதிகாரத்தையும் ஆதிக்கவாதிகளையும் நடுநடுங்க செய்தது என்பதை வரலாற்றின் சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள், தீண்டத்தகாதவர் என்று ஆதிக்கவாதிகளால் கருதப்பட்ட ஒருவரை, ஆதிக்கசாதியினர் சாலையில் எதேச்சையாகக் கண்டு விட்டால், தங்களுக்கு தீட்டுப்பட்டு விட்டதாகக் கருதி, அந்த தீண்டத்தகாதவரைக் (அவ்வாறு கருதப்பட்டவர்), கொலை செய்ய, ஆதிக்க சாதியினர் அக்காலத்தில் அதிகாரம் பெற்றிருந்தனர். ‘பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நாயர் சாதியைச் சேர்ந்த ஒருவர் புலையர் சாதியைச் சேர்ந்த ஒரு நபரைப் பார்க்க நேர்ந்தால், நாயர் வீரன் தனக்குத் தீட்டுப் பட்டு விட்டதாகக் கருதி, தான் கண்ட புலையரைக் கொலை செய்து விட முடியும்’ என்ற நிலை இருந்தது.1*
சாதிக்கு சாதி புழங்கும் தூரம் கூட சாதிய விதிகளாக வரையறுக்கப்பட்டிருந்த காலம் அது. நாயர் ஒருவர் நம்பூதிரி பிராமணர் அருகே செல்ல முடியும், ஆனால் அவரைத் தொட முடியாது. ‘நம்பூதிரி பிராமணர்களிடமிருந்து, அவர்ணர்களில் கடைநிலையில் இருந்த புலையர்கள் 96 அடி தூரத்தில் நின்றே பேச வேண்டும். அவர்ணர்களில் முதல் சாதியான நாடார்கள் 36 அடி தூரத்தில் நின்றே நம்பூதிரி பிராமணர்களை அணுக வேண்டும். நாயர் சாதியினரை புலையர் சாதியினர் 66 அடிகள் விலகி நின்றே அணுக முடியும். நாடார் சாதியினர் 12 அடிகள் தூரத்தில் இருந்தே நாயர் சாதியினரிடம் உரையாட முடியும்’2* போன்ற கட்டாய சாதிய விதிமுறைகள் மீறப்படும் போது, குற்றம் செய்ததாகப் பிடிபட்டவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளான காலகட்டம் அது. குறிப்பாக குற்றவாளிகளாகப் பிடிக்கப்பட்ட கீழ்சாதியினராகக் கருதப்பட்ட மக்கள், அடிமைகளாக விற்கவும் அல்லது அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் மன்னருக்கு மட்டுமின்றி உயர் சாதியினராக வரையறுக்கப்பட்ட சாதியினருக்கும் அதிகாரம் இருந்தது.3* அத்தகைய காலக்கட்டத்தில்தான், நம்பூதிரி பிராமணர்கள் முதலான உயர் சாதியினர் உருவாக்கி வைத்திருந்த சாதியக் கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து அனைத்து சாதி மக்களையும் ஒன்று திரட்டி சமத்துவம் பேசினார், அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி.
அய்யா வைகுண்டர் தவமிருந்த காலகட்டத்தில், பூவண்டர் தோப்புக்கு (சுவாமி தோப்புக்கு) அவரைக் காண வரும் மக்கள் உணவு சமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வருவது வழக்கம்.4* இப்போதும் சுவாமிதோப்புக்கு வருகின்ற மக்கள் அரிசி, தேங்காய் போன்றவற்றைக் காணிக்கையாகக் கொண்டு வருவதைக் காணலாம். அவ்வாறு சாதி மத பேதமின்றி, அனைத்து மக்களும் தருகின்ற பொருள்களைக் கொண்டு சமையல் செய்யச் சொன்னார் வைகுண்டர்.
தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்டவர் கொண்டுவந்த காய்களும், உயர்சாதியினர் என்று கருதப்பட்டவர் கொண்டு வந்த தானியங்களும், பார்த்தாலே தீட்டு என்று கருதப்பட்டவர்கள் கொண்டு வந்த உப்பும் சமையலில் இரண்டறக் கலந்திருக்கும்.
மேல் சாதியினர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டவரின் கிணற்றில் கீழ்சாதி என்றுக் கருதப்பட்டவர் நீர் எடுக்கக்கூடாது, குடிக்கக்கூடாது என்ற சாதியக் கட்டுப்பாட்டை4* நொறுக்கி எல்லா சாதியினருக்கும் ஒரே கிணறு என்று முத்திரிக் கிணற்றை உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கிய கிணற்றின் நீரெடுத்து மேற்சொன்ன சமத்துவ சமையலை செய்யச் சொன்னார். சுவாமி தோப்பில் காணப்படும் கிணறு இன்றும் முத்திரிக் கிணறு என்றுதான் அழைக்கப்படுகிறது.

‘சங்கடங்கள் இல்லா தர்மப் பதி அருளி
கிரீடமும் செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும்
வீரியமாய் தந்து’5* என்று நாடார் இனத்தில் பிறக்க தேவர்கள் நாராயணரிடம் வரம் கேட்டதாக அகிலத்திரட்டு கூறுகிறது.
‘அன்னம் அளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன்தன் பேரால் முத்திரிகள் இட்டதனால்
சென்ற இடமெல்லாம் சிறப்பு அதிகம் உங்களுக்கு’ என்று துவையல் தவசில் பங்கேற்ற மக்களிடம் அய்யா வைகுண்டர் கூறுவதாகச் சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.6*
‘சாதி பதினெட்டும் தலமொன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில்’ என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளையும் இவ்விடத்தில் நினைவு கூர்க.
அவர்ணர் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் சுத்தமற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்கிற ஆதிக்க சாதியினரின் கட்டமைப்பை உடைத்தெறிந்து, முத்திரிக் கிணற்றின் நீர் மூலம் குளித்துத் துவைக்க மக்களைப் பணித்தார் வைகுண்டர். இன்றும் அய்யா வைகுண்டரின் பதிகளில் இருக்கும் முத்திரிக் கிணறுகளில் மக்கள் குளிப்பதைக் காணலாம். நோய்ப்பட்டும் ஆதரவிழந்தும் அய்யா வைகுண்டரின் சுவாமி தோப்புப் பதியில் தங்கியிருக்கும் மக்கள், முத்திரி கிணற்றில் குளித்துத் துவைத்து சுத்தமாகிறார்கள்.
தற்காலத்தில் சுவாமி தோப்புப் பதியில், முத்திரிக் கிணற்றின் அருகே, அய்யா வைகுண்டருக்கு ஒரு பள்ளியறை (கருவறை) அமைக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியறையின் சுவற்றில் காணப்படும் வரிகள் புகைப்படத்துடன் கீழே.

‘அய்யாவின் காலத்து பக்தர்கள் பெருந்திரளாய் வந்து வணங்கி நலம் பெற்றனர். பொறுக்காத ஆதிக்க சாதியினர் பக்தர்கள் குளித்து குடித்து வணங்கும் முத்திரிக் கிணற்றில் கொடிய விஷமிட்டனர். ஐயமின்றி பயமின்றி நம்பிக்கையுடன் அனைவரும் குளித்து குடிக்கவும் சொன்னார். பக்தர்கள் பலர் குளித்து பதம் குடித்து வலம் வந்தனர். சிலர் மயங்கி விழுந்து விட்டனர். செய்தி அய்யாவிடம் சொல்லப்பட்டது. நம்பி ஒரு புத்தியாக குடித்தவர்களுக்கு விஷம் செயல் அற்று பலன் மிக்க பதமாக நலம் செய்தது. இரு புத்தியாய் ஐயமுடன் குடித்தவரே மயங்கி கிடக்கின்றனர். ஒரே புத்தியாக முழு நம்பிக்கை கொண்ட மக்கள் பதம் கோதி மயங்கிய மக்கள் முகத்தில் தெளியுங்கள். உங்கள் நம்பிக்கை அவர்களை எழச் செய்து விடும் எனப் பணித்தார். மயக்கம் தெளிந்து அவர்களும் எழுந்தனர்.’
பதம் = முத்திரிக் கிணற்றின் நீர் பதி மற்றும் நிழற்தாங்கல்களில் பதம் என்றே சொல்லப்படுகின்றது.
‘அதிசயங்கள் வளரும் அரிய கிணற்றின் பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
மாபாவி அதை அறிந்து யாதோ காரியம் என்று
பாலில் மோசம் செய்தானே சிவனே அய்யா
நஞ்சிட்ட பாலை மக்கள் நற்பால் என்று எண்ணி உண்ண
பாலாய் இருந்தது அய்யோ சிவனே அய்யா’7* என்ற அருள் நூலின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்சொன்ன வாக்கியங்கள் எழுதப்பட்டிருக்கலாம்.

மேல்சாதிக்காரனாகத் தன்னைக் கருதிக்கொண்டவர்களுக்கு வரவேற்பறையில் மேசையில் அமர்ந்து விருந்து, கீழ்சாதிக்காரனாக வரையறுக்கப்பட்டவர்களுக்கு கொல்லைப்புறத்தில் கொட்டாங்குச்சியில் கஞ்சி என்ற சாதியக் கொடுமைகள்8* அரங்கேறிக் கொண்டிருந்த 18, 19ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், எல்லா சாதி மக்களையும் ஒன்றாக ஒரே பந்தியில் உட்கார்ந்து ‘சமபந்தி’ உண்ண வைத்தார் அய்யா வைகுண்டர்.
பகல் நேரத்தில் பள்ளிக்கூடங்களாகவும் சமபந்தி உணவுச் சாலைகளாகவும், இரவில் வழிபாட்டு மன்றங்களாகவும் இயங்கி வந்த நிழற்தாங்கல்கள் பலவற்றை, தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய சீடர்கள் மூலம், நிறுவச் செய்தார் அய்யா வைகுண்டர்.9*
இடுப்புக்கு மேலே உடம்பை மறைக்க உரிமையில்லாமல் கிடந்த ஆண்களிடம், தலைப்பாகைக் கட்டி தலைநிமிர்ந்து நடக்கும்படி அறிவுரை கூறிய வைகுண்டர், மார்பை மறைக்க அரசுக்கு வரி கொடுக்க இயலாத பெண்களும், இடுப்புக்கு மேலே தோள் சீலை அணியும்படி அறிவுரை வழங்கினார்.
‘பூமக்கள் நீதமுடன் போட்ட தோள்சீலை தன்னை
போடாதே என்றடித்தானே சிவனே அய்யா
என் மக்கள் சான்றோர்கள் இடுப்பிலெடுத்த குடம்
ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா’10* என்ற அருள்நூலின் வரிகளைக் கூர்ந்து கவனிக்க!
மேற்சொன்ன சமூக சீர்திருத்தங்கள் அனைத்தும் திருவிதாங்கூர் அரசின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் அய்யா வைகுண்டர் சமுதாயத்தில் செய்த பெரும்புரட்சிகளன்றி வேறென்ன?
இத்தகைய சாதிய விதி மீறல்களை துணிந்து செய்த அய்யா வைகுண்டர், திருவிதாங்கூர் அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெறும் 110 நாள்கள் சிறைத் தண்டனையுடன் வெளியே வந்தது மிகுந்த ஆச்சரியமான சம்பவமாகவேக் கருதப்படுகிறது. ஆன்மீக நம்பிக்கையாளர்களுக்கு அந்த ஆச்சரியமான சம்பவம் கடவுள் நிகழ்த்திய அதிசயம் என்று கற்பிக்கப்படுகின்றது. ஆனால், அய்யா வைகுண்டருக்குப் பின்னால் திரண்ட மக்கள் புரட்சிக்கு பயந்ததால்தான், திருவிதாங்கூர் அரசு, முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டரை, மரண தண்டனை கொடுக்காமல் விடுதலை செய்தது என்பதே உண்மை.
அய்யா வைகுண்டரின் உயிர் பறிக்கப்பட்டால், பெரும் மக்கள் புரட்சி உருவாகி, மன்னராட்சியின் அடித்தளத்துக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற அரசியல் சூழல் உருவாகியிருக்கக் கூடும். அதனால்தான் எந்த அரசியல் பின்புலமும் இல்லாத வைகுண்டரை, திருவிதாங்கூர் அரசு சிறையிலிருந்து உயிருடன் விடுதலை செய்திருக்கக்கூடும் என்பது எனது அபிப்பிராயம்.
எனவே, அகிலத்திரட்டு அம்மானையில் அய்யா வைகுண்டரிடம் திருவிதாங்கூர் அரசர் நிபந்தனைக் கடிதம் கேட்ட காட்சியானது கீழ்க்கண்டவாறே:
திருவிதாங்கூர் அரண்மனையின் அருகே, மக்கள் கூட்டம் ஒன்று, அய்யா வைகுண்டரின் விடுதலைக்கான கோரிக்கையுடன் தர்ணா போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. மக்கள் புரட்சி பெரியதாகி விடக்கூடாது என்று பதட்டம் கொண்டது திருவிதாங்கூர் அரசாங்கம். எனவே அரசர் சுவாதித் திருநாள் மகாராஜா, வேறு வழியின்றி அய்யா வைகுண்டரிடம் நிபந்தனைக் கடிதம் வாங்கிக் கொண்டு வைகுண்டரை விடுதலை செய்ய முடிவு செய்தார். அரசர் நிபந்தனைக் கடிதத்தில் (ஓலையில்) கையெழுத்திடச் சொல்ல, அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி நிபந்தனை ஓலையை கிழித்தெறிந்து விட்டு, “நீ சொன்ன தேதியில் போவேனோ, நான் விடுதலையாக வேண்டும் என்று நான் நினைத்த தேதியில் போவேன்” என்று அரசரைப் பார்த்து சொல்கிறார். பிறகு தன் விடுதலைக்காகத் தர்ணா போராட்டத்தில் மக்களைப் பார்த்து, “வீரத்துடன் இருங்கள்! நான் நினைத்த தேதியில் கிழக்கு நோக்கி செல்வோம்” என்று கூறினார். இதுவே வரலாற்று நிகழ்வுகளோடும், அகிலத்திரட்டு வரிகளோடும் பொருந்துகின்ற உரை என்பது எனது கருத்து.
1833-1839 காலகட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசியல் சூழல் பல சாமான்யர்களைப் போராளிகளாக உருவாக்கிக் கொண்டிருந்தது என்ற வரலாற்று உண்மையை, அய்யா வைகுண்டர் கைதான சம்பவத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகும். அதற்கு தோள் சீலைப் போராட்ட நிகழ்வைப் பற்றி அறிய வேண்டியதும் தேவையாகும்.
கி.பி 1806ஆம் ஆண்டு ரிங்கல்தொபே என்ற கிறிஸ்தவ மத போதகர், ஆதிக்க சாதியினரால் கீழ்சாதியாகக் கருதப்பட்டப் பெண்களுக்கு செய்த ஓர் உதவியானது, மாபெரும் புரட்சிக்கான முதல் விதை எனலாம். அப்படி ரிங்கல்தொபே என்ன உதவி செய்து விட்டார்?
மேலாடை அணிய உரிமையின்றி வாழ்ந்து கொண்டிருந்த பெண்கள் சிலருக்கு அவர்களுடைய மார்பகத்தை மறைக்க ஆடைகள் கொடுத்தார்.11* இந்த சிறிய உதவி மிகப்பெரும் கலவரங்களுக்கும் புரட்சிகளுக்கும் காரணமாக இருந்தது. தோள்சீலைப் போராட்டம் என்பது நாஞ்சில் நாட்டின் வரலாற்றுச் சுவடுகளில் மறக்க முடியாத மற்றும் மறைக்க முடியாத வலியாகும். இந்த தோள்சீலைப் போராட்டம் 1812 முதல் 1859 வரை நீடித்த போராட்டமாகும்.
தோள் சீலைப் போராட்டம் மூன்று பகுதிகளாக நடைபெற்றது எனலாம்.
- 1806 முதல் 1812 வரை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பெண்கள் குப்பாயம் என்ற ரவிக்கை அணியும் போராட்டம்.
- 1812 முதல் 1828 வரை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினரைப் போல் மேலாடை அணியும் போராட்டம்.
- 1828 முதல் 1858 வரை கிறிஸ்தவ மத்த்திற்கு மதம் மாறிய பெண்கள் மேலாடை அணிவதைப் பார்த்து, மதம் மாறாமல், இந்து மதத்திலேயே தங்கிவிட்ட ஒடுக்கப்பட்ட பெண்கள் தோள் சீலை அணியத் தொடங்கியதும், அதைத் தொடர்ந்த போராட்டங்களும், வெற்றியும்.12*
இவற்றில் அய்யா வைகுண்டர் கைது செய்யப்பட்டது 1837, 1838ஆம் ஆண்டுகள்’14* என்பது மதம் மாறாமல் இந்து மதத்திலேயே தங்கிவிட்ட ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான தோள் சீலைப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டமாகும்.
தொடரும்…
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.
தரவுகள்:
1* – திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் J. விஜயரத்னகுமார், முதல் பதிப்பு: 04.05.2022, refered from native life in Travancore, பக்கம் எண் : 47 & NATIVE LIFE IN TRAVANCORE, REV.SAMUEL MATTEER, 1883. PAGE NO: 34.
2* – THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER F.LS, 1871, PAGE NO: 32.
3* – திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் J. விஜயரத்னகுமார், முதல் பதிப்பு: 04.05.2022, பக்கம் எண் : 49.
4* – திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் J. விஜயரத்னகுமார், முதல் பதிப்பு: 04.05.2022, பக்கம் எண் : 87. THE LAND OF CHARITY, REV . SAMUEL MATTEER F.LS, 1871, PAGE NO: 27.
5* – பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் : 104.
6* – பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் : 283.
7* – பகவான் வைகுண்டர் அருள் நூல், பதிப்பாசிரியர்: த. பாலராமச்சந்திரன் மகன் சங்கு மன்னன், பக்கம் எண் : 26.
8* – THE LAND OF CHARITY, REV. SAMUEL MATTEER F.LS, 1871, PAGE NO: 27.
9* – அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ. செந்தில் வேலு, சூரன்குடி அ. இன்பக்கூத்தன் ஆகிய இருவரின் கள ஆய்வில் எழுதப்பட்ட புத்தகம், முதல்பதிப்பு 2011, 13 – பக்கம் எண் : xi (அறிமுகவுரை).
9-10* – பகவான் வைகுண்டர் அருள் நூல், பதிப்பாசிரியர்: த. பாலராமச்சந்திரன் மகன் சங்கு மன்னன், பக்கம் எண் : 31.
11* – திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர். J. விஜயரத்னகுமார், முதல் பதிப்பு: 04.05.2022, பக்கம் எண் : 116.
12* – திருவிதாங்கூர் அரசாட்சி (கி.பி 1800 முதல் 1956 வரையிலும்) சமூகநீதியும் விடுதலையும், முனைவர் J. விஜயரத்னகுமார், முதல் பதிப்பு: 04.05.2022, பக்கம் எண் : 116 முதல் 128 வரை.
தமிழக நாடார்கள் ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம் : எஸ்.டி ஜெயபாண்டியன், முதல் பதிப்பு 2019, பக்கம் எண்: 78 முதல் 92 வரை.
13* – ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு (4.3.2014), 4 – பக்கம் எண்: 22