ஒரு நிழற்தாங்கல் மட்டுமல்ல; பல நிழற்தாங்கல்கள் சமீப காலத்தில் திருக்கோயில்களாக இந்துத்துவவாதிகளால் மாற்றப்பட்டு வருகின்றன. ஏனென்றால் நிழற்தாங்கல்கள் இந்துத்துவம் வெறுக்கின்ற ஒரு பெயர். புத்த விகாரைகள், சமணப்பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற பிற மத வழிபாட்டுத்தலங்களின் பெயர்களை வெறுப்பதைப் போல, இந்துத்துவத்தின் சனாதன தர்மம்  நிழற்தாங்கல், பதி என்ற பெயர்களையும் வெறுக்கிறது. விகாரைகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகளை அழிக்கத் துடிப்பதைப் போல, சனாதன இந்துத்துவம், நிழற்தாங்கல்களையும் பதிகளையும்கூட அழிக்கத் துடிக்கின்றது.

காரணம் என்னவென்றால், நிழற்தாங்கல்களும் பதிகளும் தாங்கி நிற்கும் வரலாறு, ஆதிக்கசாதிகளின் கடந்த கால அட்டூழியங்களை நினைவுபடுத்துவதாக உள்ளது. அடிப்படை உண்மையில் பதிகள் மற்றும் நிழற்தாங்கல்கள் மூலம் அய்யா வைகுண்டர் பரப்பிய கருத்துகள்,  சனாதனக் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானவை.

அய்யா வைகுண்டர்  மூன்று வழிகளில் சனாதன தர்மத்தை ஒழிக்கிறார்,

 1. சனாதன பார்ப்பன பூசை முறைகளை தவிர்த்து, ஒழிக்க வலியுறுத்துவதன் மூலம் அய்யா வைகுண்டர் சனாதனத்தை ஒழிக்கிறார்.
 2. நாட்டு தெய்வம் அல்லது குலதெய்வ வழிபாட்டினை புறக்கணிக்கச் சொல்வதன் மூலம், அய்யா வைகுண்டர்  சனாதனத்தை ஒழிக்கிறார்.
 3. சாதி, மத பேதமற்ற சமத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் நால்வர்ணக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட சனாதனத்தை அய்யா வைகுண்டர் ஒழிக்கிறார்.

முதலில் சனாதன பார்ப்பன பூசை முறைகளை தவிர்த்து ஒழிக்கின்ற  அய்யா வைகுண்டரின் போதனைகளையும், அய்யா வழி மரபுகளையும் காணலாம். என்னிடம் இணையதளத்திலும், நேரிலும் அய்யா வைகுண்டர் பற்றி விவாதம் செய்த அனைவருமே, அய்யா எழுதிய அகிலத்திரட்டில் உன் வாதத்திற்கு சாட்சி இருக்கிறதா? என்றே வினவினார்கள். எனவே இந்துத்துவ சனாதனத்தை ஒழிக்கும்  அகிலத்திரட்டின் கருத்துக்களை, பெரும்பான்மையான சாட்சிகளாகப் பகர்கிறேன்.

அகிலத்திரட்டு, அய்யா வைகுண்டர் சொல்லக் கேட்டு, அவரது சீடர்களில் ஒருவரான ரா. அரிகோபாலன் எழுதிய நூல். கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை 27ஆம் தேதி [10.12.1841] அன்று அகிலத்திரட்டு எழுதத் தொடங்கப்பட்டது. அய்யாவழி மக்கள் அய்யா வைகுண்டரால் வழங்கப்பட்ட அகிலத்திரட்டையும் அருள் நூலையும் தங்களின் புனிதமான வேதங்களாகக் கருதுகின்றனர். அய்யாவழியை பின்பற்றும் ஒவ்வொருவரும் தத்தம் பூஜையறைகளில், அகிலத்திரட்டு மற்றும் அருள் நூலை வைத்திருப்பார்கள். ஆனால் அனைவரும் படிக்கிறார்களா என்பது கேள்விக்குரியது.

வீடுகளில் அசைவ உணவு சமைக்கும் நாட்களிலும், பெண்களுக்கு மாத விலக்காகும் நாட்களிலும் அய்யாவழி மக்கள் அகிலத்திரட்டை கைகளால் தொடுவதுமில்லை. வாரத்தில் வெள்ளி, மற்றும் ஞாயிறு நாள்களில், அய்யா வழியினர் அசைவ உணவு சமைக்கக்கூடாது என்பது எழுதப்படாமல் கடைபிடிக்கப்படும் அய்யாவழி மரபு. ஆனால் இப்போதிருக்கும் நடைமுறை நிதர்சனம் யாதெனில், ஞாயிற்றுக்கிழமைகளில், விடுமுறையை சந்தோஷமாகக் கழிக்க, கோழி, ஆடு போன்ற அசைவ உணவுகளும், மீன் குழம்புக்கு விடுமுறை அளிக்க, கருவாடு உணவுகளும் சமைக்கும் பழக்கம் கொண்ட அய்யாவழியினரின் எண்ணிக்கை அதிகம்.

அய்யா வழி மரபுகளை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கும் மக்களைத்தவிர, மற்ற அய்யா வழி மக்கள், தமிழ் மாதங்களின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர, மற்ற ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் சமைத்து உண்பவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ் மாதங்களின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில், பதிகள் மற்றும் நிழல்தாங்கல்களில் சிறப்பு பணிவிடைகளும் அன்ன தர்மமும் நடைபெறும். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அசைவ உணவை சமைப்பதில்லை. ஆகையால் அய்யாவழி மக்களுக்கு அகிலத்திரட்டை படிக்கும் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

அசைவ உணவைத் தவிர்த்து, விரதம் மேற்கொள்ளும் கிழமைகளிலும் பெரும்பாலான அய்யாவழி மக்கள், அகிலத்திரட்டை படிப்பதாகத் தெரியவில்லை.

பதிகள் மற்றும் நிழல்தாங்கல்களில் கார்த்திகை மாதம் நடைபெறும் ‘திரு ஏடு வாசிப்பு’ திருவிழாவில், முதல் பதினேழு நாட்கள் அகிலத்திரட்டின் பதினேழு அத்தியாயங்களையும் வாசிப்பார்கள். அதைக் கேட்கும் மக்களில் பலரும்  அதை, தெய்வீகப்பாடல்களாக கருதுகிறார்கள். ஆனால் அப்பாடல்களின் பொருள் உணர்ந்த மக்கள், வெகுசிலரே!

அகிலத்திரட்டு என்பது புனிதமான ஆன்மீக நூலாகக் கருதப்படுவதால், பெரும்பாலான அய்யாவழி மக்கள் அந்நூலுக்குப் பணிவிடை[பூஜை] செய்கிறார்களேயன்றி, அதை யாரும் ஆராயவும், அறிந்து கொள்ளவும் விரும்புவதில்லை.

ஆனால் பல நூற்றாண்டுகளாக, புனிதம், பக்தி என்ற கட்டமைப்புக்குள் மறைக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்ட வரலாறுகள் எண்ணிலடங்காதவை. எனவே அகிலத்திரட்டு ஆராயப்பட வேண்டிய ஒரு நூலாகும்.

அகிலத்திரட்டு என்பது கன்னியாகுமரி வட்டார வழக்குத் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள அம்மானைப் பாடல் நூல் என்பதால், அதன் வரிகள் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையிலேயே அமைந்துள்ளன என்றாலும், சில பாடல்களுக்கு விளக்கமும் கொடுத்துள்ளேன்.

திருக்கோயில்களின் சித்தாந்தங்களும் நிழல்தாங்கல்களின் சித்தாந்தங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வத் திருக்கோயில்களில் ஒலிப்பதைப்போல், நிழற்தாங்கல்களிலும் பதிகளிலும், சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிப்பதில்லை. அகிலத்திரட்டு மற்றும் அருள்நூல் வாசகங்கள் மட்டுமே தமிழில் பாடப்படுகின்றன. இந்துக் கோயில்களில் நிகழ்வதைப் போல், பார்ப்பனப் பூசாரிகள், பதிகளிலும் நிழற்தாங்கல்களிலும் பூசை நிகழ்த்த அய்யா வைகுண்டர் வகுத்த அய்யா வழி மரபு இடம் தராது. நிழற்தாங்கல்கள் மற்றும் பதிகளில் அய்யாவுக்கு செய்யப்படும் வழிபாட்டு முறையை ‘பணிவிடை’ என்றே சொல்வர். பூஜை என்று சொல்வதில்லை.

நாட்டு தெய்வ வழிபாடு போல், எந்த சாதி மக்கள் நிழற்தாங்கலை நிறுவி, நிர்வகிக்கிறார்களோ அந்த சாதி மக்களே நிழற்தாங்கலில் பணிவிடைகள் செய்வார்கள். ஆனால், நாட்டு தெய்வங்களில் குறிப்பிட்ட தெய்வங்களின் பெயர்களை அறிவதன் மூலம், குறிப்பிட்ட சாதியை கண்டறியும் யுக்தி நிழற்தாங்கல் மற்றும் பதிகளில் நடக்காது. ஏனென்றால் பதி மற்றும் நிழற்தாங்கல்களில் ஒரே தெய்வம்தான்! அய்யா!

அய்யா வைகுண்டர், நாராயணர் போன்ற பெயர்களில் மட்டுமே பதிகள் மற்றும் நிழற்தாங்கல்கள் செயல்படுகின்றன. அதனால் அய்யாவழி என்பது நாட்டு தெய்வ வழிபாடுகளிலிருந்தும் வேறுபட்டு நிற்கிறது. எனவே அய்யாவழியில் இன்ன சாதி என்று, சாதியைக் கண்டறிய வழியில்லை.

சாதியை வெளிப்படையாகக் கண்டறிய முடியாத ஓர் ஆன்மீக நிறுவனத்தை, சனாதன இந்துத்துவம் ஏற்றதாக வரலாறு இல்லை.

எலுமிச்சம்பழம் வெட்டிப் போடுதல், எலுமிச்சம்பழம் நசுக்குதல், பூசணிக்காய் உடைத்தல், தேங்காய் உடைத்தல், திருஷ்டி கழித்தல், வேள்வி வளர்த்தல் போன்றவை அய்யா வழியின் வழிபாட்டு முறையில், மூடநம்பிக்கைகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. ஊதுபத்தி மற்றும் சாம்பிராணி கொளுத்துதல், சூடம் ஏற்றுதல், தீபாராதனை காட்டுதல், எள் படையல், நல்லெண்ணெய் தீபம், அபிஷேகங்கள் போன்ற சனாதன இந்துத்துவ வழிபாட்டு முறைகள் நிழற்தாங்கல் மற்றும் பதிகளில் நிகழ்வதில்லை, நிகழ்த்தக் கூடாது என்று அகிலத்திரட்டு பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

‘சீமைக்கொருயிருள்சி செல்லுங்கோ ஆண்டியென

தாழ்மைப்பரதேசி தானாக வீற்றிருந்து

பூசைபெலிகள் பீடமிட்டுஏராதிருந்து

ஆசைக்கருத்தை அறுத்துவொரு நினைவாய்’1

என்ற அகிலத்திரட்டு வரிகள், ஐம்பத்து ஐந்து ரிஷிகளுக்கு, திருமால் உபதேசிப்பதாகச் சொல்கின்றன. இதில் பூசை, பலிகள் ஏற்காதீர்கள் என்றுரைக்கிறது அகிலத்திரட்டு. இதில் சீமைக்கொருயிருள்சி என்ற வார்த்தை ‘அம்பலப்பதியின் நற்பணி மன்றம்’ வெளியிட்டுள்ள ‘அகிலத்திரட்டு’ நூலில் ‘சீமைக்கொரு இருஷி’ என்றும், நா.விவேகானந்தன் எழுதிய அகிலத்திரட்டு உரை புத்தகத்தில் ‘சீமைக்கொரு ரிஷி’ என்றும் இருக்கிறது.

‘எனக்காகும்பேர்கள் இனம்கேளு மாமுனியே

புனக்காரமில்லை பூசை முறையுமில்லை

கோவில்கள்வைத்துக் குருபூசை செய்யார்கள்

பூவதுகள்போட்டு போற்றியே நில்லார்கள்

ஆடுகடாய்கோழி அறுத்து பலியிடார்கள்

மாடுமண்ணுருவை வணங்கித் திரியார்கள்

என்பெயரு சொல்லி யாதொருவர் வந்தாலும்

அன்போடவரை ஆதரிக்கும் பேராகும்

இரப்போர்முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும்

பரப்போரைக் கைசேர்த்துப் பணிவதுமே நன்றாகும்

என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்’2

மேற்கண்ட அகிலத்திரட்டின் வரிகள், தன்னை ஏற்றுக்கொண்ட மக்கள் வாழ வேண்டிய முறைமைப் பற்றி திருமால் சொல்வதாக அகிலத்திரட்டில் வருகின்ற வரிகளாகும்.

பூசை புனஸ்கார முறைகள் அய்யாவழி மக்களுக்குக் கிடையாது என்கிறது அகிலத்திரட்டு. கோயில்கள் வைத்து குருபூசை செய்யும் வழக்கம், பூப்போட்டு வணங்கும் வழக்கம், ஆடு, கோழி போன்றவற்றை அறுத்து பலியிட்டு பூசை செய்யும் வழக்கம் போன்றவற்றை அய்யா வழி மக்கள் செய்யமாட்டார்கள் என்று திருமால் சொல்வதாக அகிலத்திரட்டு எடுத்தியம்புகிறது. அய்யா வழி மக்கள் மாடு[பசு, கோமாதா], மண்ணுரு[உருவச்சிலைகள்] போன்றவற்றை வணங்கித் திரிய மாட்டார்கள் என்று திருமால் என்னும் மாயோன் கூறுவதாக அகிலத்திரட்டு கூறுகிறது.

இவ்வாறிருக்க, ‘சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்காகத்தான், அய்யா வைகுண்டர் தோன்றினார்’ என்று, தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் R.N. ரவி அவர்கள், 04.03.2024 அன்று, அய்யா வைகுண்டரின் 192வது பிறந்த நாளன்று பேசியது எவ்விதத்தில் சரியாகும்?

மேலும், ‘ஏழைகள் முகம் பார்த்து ஈவது நன்று என்றும், என் கருத்துக்களை பரப்புபவர்களை பணிந்து மதிப்பது நன்று’ என்றும் திருமால் அகிலத்திரட்டில் கூறுகிறார். அத்துடன் ‘என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்’ என்ற வரி உற்று நோக்கத்தக்கது. முத்திரி என்றால் ‘முத்திரிக்கிணறு’.

https://www.maalaimalar.com/devotional/worship/tarakamantra-of-ayya-vaikunder-705369

சாதிய அடக்குமுறைகள் தலைவிரித்தாடிய பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள், கோயில் குளங்கள், கிணறுகள் போன்றவற்றின் அருகில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. மற்றும் உயர்சாதியினர் என்று தங்களை நினைத்துக் கொண்டவர்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறுகள், பொதுக்குளங்கள் போன்ற நீர்நிலைகளில் நீர் எடுக்கவும், நீர் அருந்தவும் தாழ்த்தப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட மக்கள் சுத்தமாகக் குளித்து, சுத்தமான உடை உடுத்தி வாழ்வதையும் ஆதிக்க சாதியினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சாதிக்கொரு கிணறு என்ற கட்டமைப்பு இருந்த சமூகச் சூழலில், அனைத்து மக்களும் சாதி, மதப் பாகுபாடின்றி, நீர் எடுக்கவும், நீர் அருந்தவும், தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்ட மக்களும்கூட குளித்து, துவைத்து சுத்தமாக வாழவும் அய்யா வைகுண்டரால் உருவாக்கப்பட்ட சமத்துவக் கிணறுதான் ‘முத்திரிக்கிணறு’. சாமிதோப்பில் இருக்கும் தலைமைப் பதியின் கிணற்றை இன்றும் முத்திரிக் கிணறு என்றே சொல்கின்றனர். முத்திரிக்கிணறு என்பது திரிந்து முந்திரிக்கிணறு என்றும் சொல்லப்படுவதைக் காணலாம்.

‘என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும்’ என்னும் வரியின் பொருள் ‘அய்யா வைகுண்டரின் பெயரால் முத்திரிக் கிணறுகள் அமைப்பது நன்றாகும்’ என்பதாகும். இவ்வாறு சமத்துவத்துக்கு வித்திடுவதன் மூலம், சாதியப்படிநிலையை பாதுகாக்கத் துடிக்கும் சனாதனத்தை ஒழிக்கிறார் அய்யா வைகுண்டர்.

‘தோணிக்கச்சிந்தை துலங்கிவெளிக்காட்டுமல்லால்

காணிக்கை யென்றயிறை காணாதே’3

‘சிந்தை தெளிந்து துலங்குவதால் மட்டுமே, வெளிச்சமான இறையறிவைக் காண முடியுமேயன்றி, காணிக்கை என்னும் வரிப்பணத்தால் காண முடியாது’ என்பதே மேற்கூறிய அகிலத்திரட்டு வரிகளின் பொருள். இங்கு இறை என்பதை வரிப்பணம்[கைக்கூலி] என்று பொருள் கொள்ள வேண்டும்.

இறைவனை அடையும் வழி மனத்தூய்மையேயன்றி காணிக்கை அல்ல என்றுணர்த்தும் அய்யாவழி மரபு எப்படி காணிக்கை என்னும் கூலிக்கு பூசை செய்யும் சனாதனத்திற்குப் பொருந்தும்?

‘வேண்டாம் வேண்டாம் காணிக்கையும் மிகவே வேண்டாம் கைக்கூலி

ஆண்டார் நாராணர் தமக்கு அணுப்போல் வேண்டாம் காவடியும்

வேண்டாம் எனவே நிறுத்தல் செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருக்க

இரண்டாம் விஞ்சைஇது மகனே’4

என்று திருமால், முத்துக்குட்டி என்ற சம்பூரணதேவனுக்கு விஞ்சை வழங்குவதாக அகிலத்திரட்டு கூறுகிறது. சம்பூரணதேவன்தான் மனிதனாகப் பிறந்து அய்யா வைகுண்டராக விஞ்சை பெற்றதாக  அகிலத்திரட்டு கூறுகிறது.

‘காணிக்கையும், கைக்கூலியும், காவடியும் வேண்டாம் என்று அன்புவழி மக்களுக்குச் சொல்லி, இப்போதிருக்கும் மூடவழக்கங்களை நிறுத்தம் செய்து, சிறையிருப்பாய் என் மகனே’ என்று திருமால்[இறைவன்] சம்பூரணத்தேவனுக்கு[முத்துக்குட்டிக்கு]  விஞ்சை வழங்குவதாக வரும் அகிலத்திரட்டின் இவ்வரிகள் புரட்சி வரிகளன்றி வேறென்ன?

https://www.scribd.com/document/382400998/1128-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-ID-28

‘காணிக்கைவேண்டாதீங்கோ கைக்கூலிகேளாதுங்கோ

மாணிக்கவைகுண்டம் வல்லத்தான்கண்டிருங்கோ

பூசையேராதிருங்கோ பெலிதீபமேராதிருங்கோ

ஆசைவையாதிருங்கோ அவகடஞ்செய்யாதிருங்கோ

பொய்கொண்ட தேரோட்டம் புனக்காரமேராதிருங்கோ

தாதி கை காட்டல் சப்பிரங்களேராதிருங்கோ

கொளுந்து மஞ்சணை மாலைக்குப்பையுடன் சந்தனமும்

விழுந்துநமஸ்காரமுதல் வேண்டாமென்றுசொல்லிடுங்கோ

கூவென்று உரையாதுங்கோ கொக்கரித்து பேசாதுங்கோ

ஓவென்று உரையாதுங்கோ ஓமமுறை ஏராதுங்கோ

தீவரணைகாணாதுங்கோ திருநாளைப்பாராதுங்கோ’5

என்றெல்லாம் திருச்செந்தூர் முருகனுக்கு அய்யா வைகுண்டர் கட்டளை பிறப்பித்ததாக அகிலத்திரட்டு கூறுகிறது. ஓமமுறை என்பது ஹோமம் என்னும் வேள்வி வளர்க்கும் முறை ஆகும். வேள்வி வளர்ப்பதையும் அகிலத்திரட்டு எதிர்க்கிறது.

அதே அகிலத்திரட்டு நூலில் வைகுண்டர், அய்யாவழி மக்களுக்கு கூறும் தர்மநீதி என்ன என்பதை பார்ப்போம்.

‘ஒன்றுபோல் எல்லோரும் ஒருபுத்தியாய் இருங்கோ

காணிக்கையிடாதீங்கோ காவடி தூக்காதீங்கோ

மாணிக்கவைகுண்டம் வல்லத்தான் கண்டிடுங்கோ

வீணுக்குத்தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ

நாணியிருக்காதீங்கோ நன்னறிவுள்ள சான்றோரே

அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்தாண்டிடுங்கோ

எவனெவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாமே’6

இதுதான் அய்யாவழி மக்களுக்கு வைகுண்டர் கூறும் அறிவுரை.

மேலே முருகனுக்கு கட்டளை பிறப்பித்ததைப்போல அய்யா வைகுண்டர் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கும் கீழ்க்காணும் கட்டளை பிறப்பிக்கிறார்,

‘என்றன் திருச்சம்பதியும் இதுமுதலாய்

எந்தெந்த நாளுக்கும் இனிக் காணிக்கை நிறுத்தல்

ஆனதினால் நீயும்,

உன்னோடு இத்தனையும் உபதேசமாய் உரைத்தேன்

என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்

அன்று பகவதியாள் அறைக்குள் அடைத்திருந்தாள்’7

என்ற அகிலத்திரட்டு வரிகளில், ‘அன்று பகவதியாள் அறைக்குள் அடைத்திருந்தாள்’ என்ற வரி, அன்றைய காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்ற கொடிய வரலாற்றை உணர்த்துகிறது.

பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில், ஆரியக்கடவுளர் கோயில்கள், மற்றும் கோபுரக்கலசங்கள் வைக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்குள், தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல தடையிருந்தது. அதில், சுசீந்திரம் தாணுமாலையர் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.8

பூசை வாங்கும் தெய்வங்களான முருகனிடமும், கன்னியாகுமரி பகவதி அம்மனிடமும், பூசை, காணிக்கை, காவடிகளைக் கேட்காதீர்கள் என்று கட்டளையாகச் சொல்லிவிட்டு, அந்த தெய்வங்களை வணங்கும் பக்தர்களான மக்களிடமும், பூசை, காணிக்கை, காவடிகளை கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறும் அகிலத்திரட்டு கற்பிப்பது என்ன? மூடநம்பிக்கைகளை ஒழிப்பதைத்தான் அல்லவா? இது முற்போக்கு சிந்தனை கொண்ட புரட்சியன்றி வேறென்ன?

அய்யா வைகுண்டர் பூசை, காணிக்கை, பலிகளை மட்டும்தான் எதிர்த்தாரா? இல்லை! சனாதனம் கற்பித்துத் தந்த நடைமுறை மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்தார் முத்துக்குட்டியாகிய  அய்யா வைகுண்டர்.

அய்யா வழியின் கல்யாணச் சடங்குகள், இந்துத்துவ மக்களின் கல்யாணச் சடங்குகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அய்யா வழி கல்யாணங்களில் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்குவதில்லை. தமிழில், அய்யா வழி மக்களின் கல்யாணங்களுக்கென்று வைகுண்டர் வழங்கிய அம்மானை கல்யாண வாழ்த்துப் பாடல் மட்டுமே பாடப்பெறும்.

அய்யா வழி திருமண வாழ்த்துப் பாடல்

பொதுவாக பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாத இந்துக்களின்  கல்யாணங்களில், திருமணமேடை கிழக்கு முகமாக அமைக்கப்பட்டு, மணமக்கள் கிழக்கு திசை நோக்கி உட்கார வைக்கப்படுவார்கள். அய்யா வழி சமயத்தில், கல்யாண மேடை தெற்கு முகமாக அமைக்கப்பட்டு, மணமக்கள் தெற்கு திசை நோக்கி உட்கார வைக்கப்படுவார்கள்.

சனாதன இந்துக்களின் நம்பிக்கையின் படி, தெற்கு திசை நல்ல காரியங்களுக்கு உகந்த திசை அல்ல. ஏனென்றால் அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவரான, உயிரைப் பறிக்கும் எமன், தெற்கு திசையில் இருப்பதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதையே பார்ப்பனர்களும், ஏனைய பெரும்பாலான இந்துக்களும் நம்புகிறார்கள். ஆனால் அய்யாவழி மக்கள் சுபகாரியங்களுக்கு தெற்குத் திசை உகந்தது என்று நம்புகிறார்கள். அய்யாவழி சனாதன இந்துத்துவத்தின் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியும் ஓர் ஆன்மீகக் கோட்பாடு என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த சான்று.

‘மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கும் அப்போது

மாயக்கலிசெய்த மாயங்கேளன்போரே

சாஸ்திரத்தை ஆறாய்த் தான் வகுத்து வேதமதை

மாத்திரமே நாலாய் வைத்தனர் காணம்மானை

நச்சேத்திரத்தை நல் இருபத்தேழாகப்

பொய்ச்சேத்திரமாய் பிரித்தான் காணம்மானை

கோளொன்பதுக்குக் கூடு பன்னிரெண்டாக

நாளேழுவாரம் நாட்டிவைத்தானம்மானை

பக்கமதுபத்தஞ்சு ஆகப்பவம் பிரித்துத்

தக்கமது லோகம் தானாண்டிருக்கையிலே

மந்திரத்தால்செய்த வறுமைகேளன்போரே’9

என்ற அகிலத்திரட்டின் வரிகள், ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் வகுத்தது கலி என்று அறுதியிட்டு கூறுகிறது. எனில் அகிலத்திரட்டு ‘கலி’ என்றும் ‘நீசன்’ என்றும் வசை பாடுவது யாரை?

[குறிப்பு: அரிகோபால் சீடர் எழுதிய தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை புத்தகத்தில் மட்டும்

‘மாயக்கலி செய்த மாயங்கேளன்போரே’ என்ற வரிக்கு அடுத்து,

‘ஈசன் சக்தியையும் இணைபிரித்து வைத்தான்

தேசக்கலி சாதிதனைப் பதினெட்டாய் பிரித்து வைத்தான்’ என்ற இரண்டு வரிகள் உள்ளன. என்னிடம் இருக்கும் மற்ற 4 அகிலத்திரட்டு அம்மானை புத்தகங்களிலும் இவ்விரண்டு வரிகள் இல்லை.]

ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் வகுத்தவன் யாரோ, இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும், பதினைந்து திதிகளையும், பன்னிரெண்டு ராசிகளையும், ஒன்பது கோள்களையும், வாரத்துக்கு ஏழு நாள்களையும் உருவாக்கி, ஜோதிட சாஸ்திரம் வகுத்தவன் யாரோ, அவனே ‘மாயக்கலி’ என்கிறது அகிலத்திரட்டு. அவன் யாரென்று தெரிகிறது இல்லையா?

ஜோதிட சாஸ்திரத்தின் ‘இருபத்தி ஏழு நட்சத்திரங்களையும் பொய்ச்சேத்திரங்கள்’ என்று அகிலத்திரட்டு சொல்லும்போது, அய்யாவழி ஜோதிட சாஸ்திரத்தை ஏற்கிறது என்று கூறுவது எப்படி? ஜோதிடத்தை மூடப்பழக்கம் என்று போதிக்கும் அய்யாவழி சித்தாந்தம் எப்படி சனாதன சித்தாந்தத்தோடு பொருந்தும்?

இறந்தவர்களை வடக்கு முகமாக உட்கார வைத்து புதைக்கும் பழக்கம்தான் அய்யா வழி மக்களுக்கு அய்யா வைகுண்டர் பரிந்துரைத்த பழக்கம் ஆகும். பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத இந்து மதத்தினரைப் போல, அய்யா வழியினர் இறந்த உடல்களை எரிப்பதில்லை. தென்னிந்தியத் திராவிட மக்களிடையே இறந்த உடல்களை புதைக்கும் பழக்கமே ஆதி காலந்தொட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்சநல்லூர் தொடங்கி, தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட பல அகழ்வாராய்ச்சிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளே இதற்கு சான்று.

முதுமக்கள் தாழிக்குள் அடக்கப்பட்ட உடல், படம் நன்றி: தீக்கதிர்

ஆனால் அய்யாவழியில் நினைவுச்சின்னம், நடுகல் போன்றவை எழுப்பும் வழக்கம் இல்லை. இதிலிருந்து அய்யாவழி நாட்டுதெய்வ வழிபாடு மற்றும் குருபூசைகளை உருவாக்குவதைத் தவிர்க்கிறது என்று உணர முடியும்.

மேலும் இறந்த உடல்களை, குழிக்குள் வடக்கு முகமாக உட்கார வைத்துப் புதைக்கும் அய்யா வழியினரின் பழக்கத்தை மிக முக்கியமாகக் குறிப்பிட்டாக வேண்டும். இந்துக்கள் வடதிசையில் செல்வத்தின் அதிபதியாகிய குபேரன் இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அய்யா வழியினர் இறந்த சடலங்களை வடக்கு முகமாக உட்கார வைத்துப் புதைக்கிறார்கள்.

சமண சமயத்தவர் பொறுக்க முடியாத மனவேதனை, பிணி, மூப்பு இவை உண்டாகும் போது, தருப்பை புல்லின் மீது, வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு, உயிர் விடும் வழக்கத்தை ‘சல்லேகனை’ என்றழைப்பர்10. அதன் நீட்சியாகவே சங்ககாலத்தில் தமிழ் மன்னர்களும் வீரர்களும் வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறந்த செய்திகளை, சங்க இலக்கிய நூல்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.11

தமிழ்நாட்டுச் சிற்றூர்களில் உள்ள வீரர் நடுகற்களைக் கொண்ட கோயில்கள் பலவும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன.12 தமிழ்நாட்டு சிற்றூரிலுள்ள, பெரிய கண்களையும், பெரிய மீசையையும் கொண்டு பயமுறுத்தும்படியாக இருக்கும் காவல் தெய்வங்கள் பலவும் வடக்கு நோக்கி இருப்பதற்கு காரணம் தமிழர்களின் பொது எதிரி வடக்கிலிருக்கிறான் என்பதற்காக என்று கருதலாம்.13 எனவே வடக்கிருத்தல் என்பது, மன்னன் அல்லது வீரன், தன்னுடலில் உயிரிருக்கும் இறுதி நொடிவரை எதிரிகளிடமிருந்து தன் மக்களை பாதுகாப்பதை குறிக்கிறது. அய்யாவழியில் வடக்கு முகம் நோக்கி புதைக்கும் பழக்கத்திற்கு காரணம், தர்மயுகம் மலரும் மட்டும் அந்த சடலம் தவம் இருப்பதாக பொருள் கொள்வதால் ஆகும்.14 எனவே மேற்கூறிய பழங்காலத் தமிழர்களின் வடக்கிருத்தல் நிகழ்வையும், அய்யாவழியில் இறந்த சடலங்களை வடக்கு முகமாக சமாதி செய்து புதைக்கும் பழக்கத்தையும் பொருத்திப் பார்க்கலாம்.

சனாதன இந்துத்துவம் தெற்கு திசையைத் தீமையாகவும், அய்யாவழி தெற்குதிசையை நன்மையாகவும் கருதுகிறது. சனாதன இந்துத்துவம் வடக்கு திசையை குபேர திசையாகவும், அய்யாவழி வடக்கு திசையை தீமையாகவும் கருதுகிறது என்பது தெளிவு.

அய்யா வழி மக்கள், பூப்பெய்திய குழந்தைகளை தெற்கு திசை நோக்கி நிற்க வைத்துதான், சடங்கு நிகழ்த்துகிறார்கள். சடங்கு என்பது பெரிதாக ஒன்றுமில்லை. குழந்தை பூப்பெய்தி நாற்பத்தியொரு நாள்கள் கழித்து, பதி அல்லது நிழல்தாங்கலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று, குழந்தைக்கு ‘முத்திரிப்பதம்’ கோரி எறிவதையே சிறப்பு என்கிறது அய்யாவழி மரபு. அவ்வளவுதான்! விழாவாக நடத்தினால் குத்து விளக்கு ஏற்றி வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பூப்பெய்திய குழந்தைக்கு பதம்[முத்திரி நீர்] தெளித்து, நாமம் இடுவார்கள்.

பார்ப்பனக் குடும்பங்களில் நிகழ்வதைப் போல், தீட்டுக் கழிக்க வேள்வி வளர்க்கும் பழக்கமும், பார்ப்பனரல்லாத, அய்யாவழியை ஏற்காத இந்துக்களைப் போல, வண்ணாத்தி மற்றும் நாவிதர்களைக் கொண்டு தீட்டுக் கழிக்கும் வழக்கமும் அய்யா வழி மக்களுக்கு அய்யா வைகுண்டர் பரிந்துரைக்கவில்லை.

அதாவது தீட்டுக் கழிக்கவென்று சில சாதிகளை உருவாக்கி, ஒதுக்கி வைப்பதில் அய்யா வைகுண்டருக்கு உடன்பாடு இல்லை. இன்ன சாதிக்கு இன்ன தொழில் என்ற சனாதனத்தின் கோட்பாட்டையும் அய்யாவழி முழுமூச்சாக அழிக்கிறது.

முன்பொருமுறை எனக்கு மாமி உறவுமுறை கொண்ட வயதான பெண்ணொருத்தி கூறியது நினைவுக்கு வருகிறது. எனக்கு திருமணமான புதிதில், “மாதந்தோறும் மாதவிடாய் நேரங்களில் உடுத்திய துணிகளை வெளுக்க, வண்ணாத்தி நம் ஊரில் உண்டா?” என்று நான் கேட்டபோது அந்த வயதான பெண்மணி சொன்னாள்,

“அவங்கவங்க வேலையை அவங்கவங்க செய்யணும்னு அய்யா சொல்லிருக்காரு. நீ உடுத்தின துணிய வெளுக்க இன்னொருத்தரை தேடுறது தப்பு. உன் அழுக்குத் துணிய நீயே அலசிக்கோ” என்று. அப்போது அந்த மாமி சொன்னதன் அர்த்தம் முழுமையாக விளங்கவில்லை எனக்கு. இப்போது அய்யா வைகுண்டரை படித்த பிறகு விளங்குகிறது. அழுக்குத்துணிகளை வெளுக்கவென்றே ஒரு சாதியை உருவாக்குவதை அய்யா வைகுண்டர் ஏற்கவில்லை, தன் அன்புவழி மக்களுக்கு பரிந்துரைக்கவும் இல்லை.

சாதிக்கோட்பாடுகளை தகர்த்தெறியும் அய்யாவழி மரபுக்கும், தலையில் பிறந்தவனென்றும், காலில் பிறந்தவனென்றும் பிறப்பால் சாதி பிரிக்கும் சனாதனத்துக்கும் எங்ஙனம் பொருந்தும்?

எனவே ஆரிய சனாதன பழக்கவழக்கங்களுக்கும் அய்யா வைகுண்டர் உருவாக்கித் தந்த அய்யாவழியின் பழக்கவழக்கங்களுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை.

இனி கணவனை இழந்த பெண்கள் வாழ வேண்டிய நெறி பற்றி அய்யா வைகுண்டர் சொல்வதென்ன? நாட்டு தெய்வ வழிபாடு பற்றி அய்யா வழி சொல்வதென்ன? அய்யா வைகுண்டர் ஏன் சனாதன பூசை முறைகளை அடியோடு அழித்தார்? கேள்விகளுக்கான பதில்கள் அடுத்தடுத்த கட்டுரைகளில்!

தொடரும்…

படைப்பாளர்:

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

தரவுகள்:

 1. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, 1* – பக்கம் எண் 132, 2* – பக்கம் எண் 216, 3*- பக்கம் எண் 221, 4*- பக்கம் எண் 248, 5*- பக்கம் எண் 279, 6*- பக்கம் எண் 314, 7*- பக்கம் எண் 288, 9*- பக்கம் எண் 120
 2. பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 1*- பக்கம் எண் 101, 2*- பக்கம் எண் 170, 3*-பக்கம் எண் 174, 4*- பக்கம் எண்-197, 5*- பக்கம் எண் 222&223, 6*- பக்கம் எண் 251, 7*- பக்கம் எண் 230, 9*- பக்கம் எண் 92
 3. முனைவர்.ஜெ. விஜயரத்னகுமார்.Ph.D., [ஐயாக்குட்டி ஜெயக்குமார்] எழுதிய ‘திருவிதாங்கூர் அரசாட்சி [கி.பி1800 முதல் 1956 வரையிலும்] சமூக நீதியும் விடுதலையும்’, 14.05.2022, முனைவர். நா. ராஜப்பன், Ph.D, [பேராசிரியர்(ஓய்வு), ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நாகர்கோவில்] வெளியீடு, 8*- பக்கம் எண் 50.
 4. சமணமும் தமிழும், மயிலை வேங்கடசாமி, முதற்பதிப்பு 2013, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, 10* & 11* பக்கம் எண் 169.
 5. டாக்டர்.பா. அறவாணன் எழுதிய தமிழரின் தாயகம், முதல் பதிப்பு, 1984, 12* & 13*- பக்கம் எண் 79
 6. பொறிஞர்.ஆ. கிருஷ்ணமணி எழுதிய ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, முதல் பதிப்பு, 04.03.2014, அய்யா வைகுண்டத்திருப்பதி வெளியீடு 14*- பக்கம் எண் 58.

மேலும் ஒப்பீடு பார்த்த புத்தகங்கள்:

7. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1 & 2.

8. அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலபதி’, வெளியிட்டுள்ள ‘திருஏடு என்னும் அகிலத்திரட்டு அம்மானை’ நான்காம் பதிப்பு, 2020. பதிப்பித்தவர், ஆ. அரிசுந்தரமணி.

9. பொ.மு.ச.பா.த.பா. சங்குமன்னன் அவர்களால் அச்சிலியற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, பதின்மூன்றாம் பதிப்பு.

  10. அகிலத்திரட்டு அம்மானை, பாராயண உரை, ஆ. அரிசுந்தரமணி, B.Sc..B.T, மூன்றாம் பதிப்பு, 2016.

  11. 1874 Census Of Travancore Report, pages 162 to 164.

  https://new.census.gov.in/nada/index.php/catalog/27951

  12. The Land of Charity, Rev.Samuel Mateer, 1871, Page no 27.