அனைவருக்கும் வணக்கம்.

ஹெர் ஸ்டோரிஸ் தளம், உண்மைகளை சுதந்திரமாக எழுதுவதற்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வாய்ப்பின் பலனாக, சுற்றி நடக்கும் சம்பவங்களால் மனதுக்குள் மூண்ட சீற்றத்தை, ‘பார்ப்பன கடைநிலையிலிருந்து ஒரு குரல்’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதினேன்.

அப்பொழுது, இதைத் தொடரும் நோக்கமெல்லாம் எனக்கு இல்லை. ஆனால், அதைத் தொடர்ந்த கருத்துப் பரிமாற்றங்கள், என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டியுள்ளன.

பார்ப்பனர் என இங்கே பொதுவாக சாதிப் பெயர் வழங்கினாலும், இதன் உள்ளே எக்கச்சக்கமான உட்பிரிவுகள் இருக்கின்றன. அதில் அதிகம் தெரிந்த பிரிவுகள் இரண்டு.

ஐயர் (ஸ்மார்த்த / சைவப் பார்ப்பனர்கள்)
ஐயங்கார் (வைணவ பார்ப்பனர்கள்)

இதல் ஐயரில் வடமா, வாத்திமா என இரு பிரிவுகள் உண்டு. ஐயங்காரில் வடகலை, தென்கலை என இரு பிரிவுகள் உண்டு.

ஐயர், ஐயங்காரில் பொதுவாக எல்லோருமே கோவில் கைங்கர்யங்கள் செய்தாலும், குருக்கள்(சைவம்) மற்றும் வைகானச பட்டாச்சாரியார்கள் (வைணவம்) ஆகிய மரபினர், இன்றைய தலைமுறைவரை கோயில் கைங்கர்யம் செய்வதை மட்டுமே ஒரே தொழிலாக செய்கின்றனர். இவர்களுள் வெகு சிலரே நவீன கல்வி மற்றும் வேலை என மாறியிருக்கிறார்கள். இவர்கள் தவிர, தெலுங்கு பார்ப்பனர், மராத்திய பார்ப்பனர், கன்னட பார்ப்பனர்(ராவ்ஜி) போன்ற பல பிரிவினரும் தமிழ்நாட்டில் உள்ளனர்.

இருப்பதே மூன்று சதவிகிதத்தினர், இதிலே இவ்வளவு பிரிவுகள், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு விதமான சம்பிரதாய பழக்கவழக்கங்கள் என இருக்கின்றன. இதில், பெருவாரியாக நான் நேரில் கண்டு உணர்ந்த உண்மைகளை மட்டுமே இந்த கட்டுரைத் தொகுப்பில் எழுதுகிறேன். இதில் மாற்றுக் கருத்து இருப்பின், அதற்கான தரவுகளுடன், முன்வைக்கபட்டால், அதையும் இந்தத் தொகுப்பில் இணைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

கடந்த அத்தியாயத்தில் பிராம்மணார்த்த பார்ப்பனர்களைப் பற்றி எழுதியிருந்தேன். அவர்களைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம்.

பார்ப்பனர் எல்லோருமே, கிராமத்து அக்கிரகாரங்களில் வசித்த காலகட்டத்தில், பிராம்மணார்த்தம் எல்லாம் வைதீக காரியங்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. ஒரு உதவி மனப்பான்மையுடன், உறவினர்களுக்குள்ளேயே ‘எனக்கு நீ உனக்கு நான்’ எனும் சூழலில் ஒருவருக்கொருவர் பிராம்மணார்த்தம் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது. தக்ஷிணை எனும் விஷயம் பெரும் பொருட்டாக இருந்ததில்லை என வீட்டுப் பெரியவர்கள் புலம்பிக் கேட்டிருக்கிறேன்.

ஒருவர் இறந்து இறுதிச் சடங்குகள் செய்யும்போது மட்டுமே நான் குறிப்பிட்ட ஆறு பேர் பிராம்மணார்த்தம் கணக்கு.

அந்த ஆறு ஸ்தானங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
ஏகோதிஷ்டம் / சவுண்டி (ஆதி காலத்தில், ஒருவர் இறந்த முதல் நாளில், இறந்தவரின் உடலினை இடது கையால் தொட்டபடி, இடுகாட்டில் அமர்ந்து சாப்பிடுவார்களாம். இப்பொழுது இதை பதினோராம் நாள் செய்கிறார்கள். இறந்த உடலுக்கு பதில், மாவினால் பிரேதம் செய்து, அதைத் தொட்டபடி சாப்பிடுகிறார்கள்)
பிரேதம் (இறந்தவருடைய சடலம்)
பித்ரு (அவர்கள் குடும்பத்து மூதாதையர்கள்)
விஷ்ணு
விஸ்வேதேவர்
சோதகும்பம்
பிராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களை மந்திரம் மூலம் இந்த ஸ்தானங்களில் வரித்து, பின் சாப்பிட அழைப்பார்கள்.

அதன் பிறகு வசதிக்குத் தகுந்தபடி, மூன்றுபேர் (3,4,5) இரண்டுபேர் (3 & 5) அல்லது ஒரே ஒருவர் மட்டும், அதாவது பித்ரு மட்டும் என்று நியமித்துக் கொள்ளலாம். இன்றைய காலகட்டதில் இது முழுக்க முழுக்க ஒரு வணிகமாக மாறிவிட்டதால், மூன்று அல்லது இரண்டு பேரை நியமித்தே ஆகவேண்டும் என கட்டாயமாக்கப் பட்டுவிட்டது.

பொதுவாக இதெல்லாம் நம்பிக்கையும் பயமும் கலந்து பார்க்கப்படும் விஷயமாக உள்ளதால், அதுவும், ஒரு பெரும் சதவிகிதத்தினர் (லௌகிக) நவீன வாழ்க்கைக்குள் வந்துவிட்டதால் அடிப்படையே அறியாமல், ஒருவர் செய்வதைப் பார்த்து எல்லோருமே செய்கிறார்கள்.

விவரம் தெரிந்தவர்கள் மட்டும், விதிவிலக்குகளை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

பொதுவாக திவசத்துக்காக தயாரிக்கப்படும் உணவுகள், பிரண்டை, பலாப் பிஞ்சு, விளாம்பழம், மாங்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு, கொத்தவரைக்காய், புடலங்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை பயன்படுத்தி சமைக்கப்படுகின்றன. பிரண்டை துவையல், கூட்டு, சுண்டைக்காய் போட்டு குழம்பு, ரசம், பருப்பு, பாயசம், பச்சடிகள், வடை, அதிரசம், தேன்குழல், எள்ளுருண்டை, சுழியன் என அதிகமான உணவுப் பண்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கூடவே நெய், தேன் மற்றும் பழங்களும் பரிமாறப்படும்.

பிராம்மணார்த்தம் சாப்பிட ஒப்புக்கொண்டு இருப்பவர்கள், அனைத்தையும் ஒன்று விடாமல் சாப்பிட வேண்டும். இலையில் எதையும் மீதம் வைக்ககூடாது.

பிராம்மணார்த்தம் சாப்பிட ஒப்புக்கொள்கிறவர்கள் காலை எதுவும் சாப்பிடக் கூடாது. திவசம் செய்பவர்கள் வீட்டுக்கு வந்து, அங்கேயே குளித்து, அதன் பின் முக்கிய சடங்குகள் முடிந்து, பிறகுதான் சாப்பிட இயலும்.

பொதுவாக திவசங்களை மதியம்தான் தொடங்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஒரு சிலரைத் தவிர யாரும் அதை கடைபிடிப்பதில்லை. அப்படி இருந்தாலும் கூட, பிராம்மணார்த்தகாரர்கள் சாப்பிடவே ஒரு மணியாவது ஆகிவிடும். அதன் பின் அவர்கள் இரவு உணவு சாப்பிடக் கூடாது.

மேலும் பிராம்மணார்த்தம் சாப்பிட்டவர்கள் பிராயச்சித்தமாக, அவர்கள் ஏற்ற ஸ்தானத்துக்கு தகுந்த வகையில், குறிப்பிட்ட எண்ணிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். அதன் பின், குறிப்பிட்ட சில தினங்கள் வரையில் வேறு பிராம்மணார்த்தம் சாப்பிடக் கூடாது என்கிற கணக்கெல்லாம் இருக்கிறது. இதில், திருமணம் ஆகாத பிரும்மச்சாரிகள், தந்தை இருப்பவர்கள் பிராம்மணார்த்தம் சாப்பிடக் கூடாது.

ஏன் இதெல்லாம் குறிப்பிடுகிறேன் என்றால், பிராம்மணார்த்தம் சாப்பிட ஒப்புக்கொண்டு வருபவர்கள் இளம் வயதினராக இருப்பதில்லை.

நடுத்தர வயதில் உள்ளவர்களும், வயோதிகர்களும் மட்டுமே பெரும்பாலும் இதில் ஈடுபடுகிறார்கள். இதில், சக்கரை நோயாளிகள், இதய நோய் உள்ளவர்கள் பலரும் சாப்பிட வருவதை பார்த்து அதிகம் வருந்தி இருக்கிறேன்.

இதையே முழு நேர தொழிலாக செய்பவர்கள், விதிகளைக் கடைபிடித்து அதிகம் தங்களை வருத்திக் கொள்வதில்லை. ஆனால் மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட பலரும், பயபக்தியுடன் அனைத்தையும் கடைபிடிக்கவே செய்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம், உணவுக் கட்டுப்பாடு தேவையில்லையா? நேரம் தவறாமல் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லையா? ஆனாலும் ஏன் இதைத் தேர்ந்தெடுத்து வருகிறார்கள்? ஏற்கனவே நான் சொன்னதுதான். அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே!

பிள்ளைகள் நல்ல நிலையில் இருந்தாலும்கூட, இப்படி ஓடிக் கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் பலருக்கும் இருக்கிறது. இதில், இதை முழு நேர தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர், ஒரே நாளில் இரண்டு, மூன்று பிராம்மணார்த்தம், சாப்பிடும் கதையெல்லாம் பலர் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன்.

ஒரு இடத்தில் சாப்பிட்டு முடித்துவிட்டு, தொண்டைக்குள் கை விட்டு அதை வெளியேற்றிவிட்டு அடுத்த இடத்திற்கு போவார்களாம். இதை, உள்ளே இருப்பவர்களேகூட அறியாத ஒரு இருண்ட பக்கம் எனலாம்.

வீட்டில் யாருக்கேனும் திவசம் வருகிறது என்றால், ஒரு மாதத்துக்கு முன்பே பதற்றம் தொற்றிக் கொள்ளும். தினமும் அதைப் பற்றிய சிந்தனையுடனேயே நடமாடிக் கொண்டிருப்பர். அந்த சமயம் பார்த்து உடல் நலம் சரியில்லாமல் போனால், குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள்.

குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்க்கான நாள்களாக இருப்பின், அதைத் தள்ளிப்போட மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள். பிரமோலட்-N என்கிற மாத்திரை பார்ப்பனப் பெண்களிடம் மிக மிகப் பிரபலம்.

என் உறவினர் ஒருவர், தொண்ணூறு வயதைக் கடந்தவர், சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டு நினைவு தப்பிப்போய் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். இந்த நிலையிலும், அவர் தினமும் ஒரு முறையேனும், ‘நாளைக்கு என்னோட அப்பா சிரார்த்தம், கார்த்தால சீக்கிரம் எழுப்பி விடு’ என்று சொல்வதாக அவரது மகள் மூலம் கேள்விப்பட்டேன்.

கோவிட் பெருந்தொற்று சமயத்தில், நிறுத்தாமல் திவசம் செய்து, குடும்பம் முழுவதும் தொற்றுக்கு ஆளான சம்பவமெல்லாம் பார்த்திருக்கிறேன்.

ஒவ்வொரு பார்ப்பனர் குடும்பத்திலும் வருடத்துக்கு, ஒன்று அல்லது இரண்டு திவசங்களாவது கட்டாயம் செய்கிறார்கள். சிலர் அதற்கு மேலும் செய்வதுண்டு. சாப்பாட்டுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு போல திவசத்திற்கு செய்யப்படும் செலவும் அத்தியாவசிய செலவாகப் பார்க்கப் படுகிறது.

தாயோ, தகப்பனோ உயிருடன் இருக்கும்போது அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை தட்டிக்கழிக்க பலரும் தயங்குவதில்லை.

கண்ணுக்குப் புலப்படாத ஒரு உலகத்தில் வசிக்கும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய காரியங்களில் ஒருவர் குறை வைத்தால், அவர்களது அடுத்த சந்ததியை அது பாதிக்கும் என சொல்லிச் சொல்லியே ஒரு அதீத பயத்தை ஒவ்வொருவருக்குள்ளும் விதைத்து வைத்திருப்பதால், இதையெல்லாம் சுருக்கிக் கொள்ள யாருமே துணிவதில்லை. எனவே இது சம்பந்தமான வேலைகளை செய்பவர்களுக்கான தேவைகள் இருந்துகொண்டே இருக்கின்றன.

ஆனால் இதில் பெண்களுக்கான வாய்ப்புகள் என்று பார்த்தால், சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் இல்லை. திவசங்களில் சொல்லப்படும் மந்திரங்கள்கூட பெண்களுக்கு பாதகமாகவே அமைந்திருகிறது என்பதே ஒரு வேதனை என்றால், இதை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கியப் பணியை சிரமேற்கொண்டு செய்வதே பெண்கள்தான் என்பது அதை விட வேதனை.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய ‘இந்து மதம் எங்கே போகிறது’ மற்றும் ‘சடங்குகளின் கதை’ ஆகிய இரண்டு புத்தகங்களைப் படித்து ஆராய்ந்தால் போதும், பார்ப்பனீயத்தின் உள்ளே இருக்கிற பல முரண்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும்! அதிலிருந்து ஒரு துளி-

”என்மே மாதா ப்ரவது லோபசரதி அன்னனுவ்ரதா தன்மே ரேதஹா
பிதா வ்ருந்த்ததாம்| ஆபுரண்யஹா அவபத்ய நாம…”

இன்றுவரை திவசத்தில் சொல்லப்படும் இந்த மந்திரத்தின் பொருள்:

ஏ தந்தையே, ஒரு வேளை என் தாயானவள் பதிவிரதா தர்மத்தை மீறி, வேறு ஒருவருடன் இணைந்து என்னை பெற்றிருந்தாலும், அவளை என் அப்பாவின் மனைவியாக ஏற்று இந்த திவசத்தை செய்கிறேன். எனக்கு கோத்திரம் தந்த உமக்கு இந்தப் பிண்டம் செல்லட்டும்!

இன்னும் எழுதுவேன்…

  • உள்ளிருந்து ஒரு குரல்