கலையும் எழுத்தும் பொழுதுபோக்கிற்கானதல்ல மக்களின் வலிகளை உணர்த்துவதற்கானது என்பதற்கு மற்றுமொரு சாட்சி மரப்பாச்சியின் ஸ்திரீ பர்வம். மரப்பாச்சியும், எம்.எஸ் சுவாமிநாதன் ஆய்வு மையமும் இணைந்து இயக்கிய ஸ்திரீ பர்வம் நாடகம் சென்னை எம்.எஸ். சுப்புலட்சுமி அரங்கத்திலும், வானம் திருவிழாவிலும் அரங்கேறியது.
மகாபாரதக் கதையைக் கருவாகக் கொண்ட ஸ்திரீ பர்வ நாடகம் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் விளக்குகிறது. இதுவரை தொலைக்காட்சிகளில் வெளியான தொடர்களில் துரியோதனன், தர்மன் போன்ற அரச குடும்பத்து மைந்தர்களை முன்னிருத்திய கதைகளைத் தான் கண்டிருப்போம். ஆனால் மரப்பாச்சியின் ஸ்திரீ பர்வம் போர் நடப்பதற்கு எந்தவிதத்திலும் காரணம் இல்லாத வீரர்கள் அரச குடும்பத்தின் கட்டளையினால் இறந்ததற்கான நீதியைக் கேட்கிறது.
மகாபாரதப் போரில் கணவனை இழந்த மனைவிமார்களின், மகனை இழந்த தாய்மார்களின் சகோதரனை இழந்த சகோதரிகளின் அழுகுரல்களும், போரைத் தன் பேராசைக்கு நிகழ்த்திய ஆட்சியாளர்களை நோக்கிப் பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பும் கேள்விகளை நாடகம் முன்னிருத்துகிறது. ”காதலால் நிரம்பிய கண்கள் இல்லாமல் இருப்பதையும் மோதிரம் அணிவித்த கைகள் முண்டமற்று கிடைப்பதையும், அன்பு வார்த்தைகளைப் பேசிய உதடுகளில் ஈ மொய்ப்பதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ” என்கிற போது பார்வையாளர்கள் உணர்வலைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
மகாபாரதக் கதையை முன் வைக்கும் ஸ்த்ரீபர்வம் இரவில் போர்களை நிகழ்த்துவது அறமற்றது என்று பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைச் சுட்டிக்காட்டுகிறது. திராட்சைகளையும இனிப்புகளையும் உண்டு, பட்டங்களை வானில் பறக்கவிட்டு மகிழ்ந்த குழந்தைகள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முதலாளித்துவ மற்றும் பாசிச நாடுகள் துணை போகின்றனர். அந்நாடுகளில் இந்திய அரசும் ஒன்று. இந்தியாவிலிருந்து வீரர்களும், போர்க் கருவிகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஸ்திரீ பர்வ நாடகக் கலைஞர்கள் தங்களின் நடிப்பாலும் உணர்வுபூர்வமான பாலஸ்தீன ஆதரவான வார்த்தைகளாலும் உலக நாடுகளின் கூட்டுமனசாட்சியை உலுக்குகிறார்கள்.
சர்வாதிகார அரசாட்சிக்குக் குழந்தைகள் இறப்பு வெறும் எண்ணிக்கைதான். எந்தப் பாவமும் அறியாத பச்சிளம் குழந்தைகளை இஸ்ரேலின் தாக்குதலால் இழக்கும் தாய்மார்களின் வலிகளை விவரிக்க வார்த்தைகள் இனி தான் புதிதாகக் கண்டுபிடிக்க்க வேண்டும். ஆற்ற முடியாத வலிகளைச் சுமக்கும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தற்போதைய இந்திய அரசின் நிலைபாடு நீக்க முடியாத வரலாற்று இழுக்கு.
இந்தியாவின் இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டுக்கு எண்ணற்ற காரணங்கள் இருந்தாலும் இஸ்லாமிய வெறுப்பு தான் முதன்மைக் காரணம். தான் பிறப்பால் இஸ்லாமியர் என்பதற்காகவே சொந்த நாட்டிலேயே அவர்கள் சிறுபான்மையினராகக் கொடுங்கோண்மைகளை எதிர்கொள்கின்றனர்.
சர்வாதிகாரம் , பாசிசம், ஆணவம், வளங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்காக ஆட்சியாளர்களால் நடத்தப்படும் போர்கள் எந்தப் பாவமும் அறியாத சாமானியர்களின் உயிர்களைப் பறிக்கின்றன. எல்லாவற்றையும் அழித்துவிட்டு பிணங்களை ஆட்சி செய்யத் துடிக்கிறார்கள் சர்வாதிகாரிகள் என்பதை நாடகம் அழுத்தமாகக் கூறுகிறது.
உயிர்களை இழந்தவர்களைக் காட்டிலும் உறவுகளை இழந்தவர்களின் அகப்போராட்டம் வலிமிக்கது என்கிறது ஸ்திரீ பர்வம். இரவில் களைப்பு மறந்து, கவலை மறந்து தூங்குபவர்களைத் தாக்குவது மனசாட்சியற்ற மதவெறி பிடித்தவர்களால் மட்டுமே முடியும்.
வெறுப்பும், லாபநோக்கும் கொண்ட இவ்வுலகில் மக்களின் உயிர்களுக்கும் அவர்களின் உரிமைகளுக்கும் இங்கு இடமில்லை. இச்சூழ்நிலையைத்தான் அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்லப் போகிறோமா என்று காண்போரைச் சிந்திக்க வைக்கிறது நாடகம்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்களை இன்று வரை நிறுத்தவில்லை. மாவு வாங்கச் சென்ற தாய் ஒருவர் வீடு திரும்பிய போது தன் குழந்தை இறந்ததைக் கண்டு பரிதவிக்கிறார். செய்தி சேகரிக்கும் பத்திரிக்கையாளர் தன் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழக்கிறார். சின்னஞ்சிறு குழந்தைகள் ரத்தக் காயங்களுடன் அழுதுகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் காணும் போது மனிதத்தின் மீது மிச்சமிருக்கும் நம்பிக்கையும் உடைகிறது.
ஆனால் உலகில் எங்கோ நிகழும் அநீதிகளுக்கு, உலகின் மற்றொரு மூளையில் சிறு குழுக்களாகவோ, தனி மனிதர்களாகவோ, பெருந்திரள் அமைப்பாகவோ போராடிக்கொண்டிருப்பவர்கள் மனிதத்தை மீட்க முயற்சிக்கிறார்கள்.
அவ்வகையில் மரப்பாச்சியின் ஸ்திரீ பர்வம் நாடகமும் ”வெறுப்புகள் அகன்று அன்பு உலகமெங்கும் பரவும் ” என்கிற நம்பிக்கையை நமக்களிக்கிறது.
படைப்பாளர்:
கு.சௌமியா
, பத்திரிகையாளர்
Very good review of the play. We need many such plays to expose the cruelty of the fascist forces. We must put an end to war mongering.