“என் புள்ளைய நான் சரியா வளர்த்துருக்கேனா, நான் ஒரு நல்ல அம்மாவா இருக்கேனா” எனப் பல சந்தர்ப்பங்களில் 99.9% அம்மாக்கள் தங்களைத் தாங்களே கேள்வி கேட்பதுண்டு. குறிப்பாக இந்திய சமூக அமைப்பில் வாழும் அம்மாக்களின் அன்றாடங்களில் இந்தக் கேள்வி வந்து போகாத நாட்கள் அபூர்வமானவைதான். தங்களின் பிள்ளை வளர்ப்பின் மேல் பல சந்தர்ப்பங்களில் அம்மாக்களுக்குச் சந்தேகம் எழும். ஒரு சிறு உதாரணம், ஒரு நாள் காலை சிறிது நேரம் அதிகமாகத் தூங்கிவிட்டால், காலையில் செய்யும் வேலை சிறிது தாமதமாக நடக்கும். அதில் அவசரமாகச் சமைத்து குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பும் போது, குழந்தை அன்று ஸ்கூல் வண்டியைத் தவறவிட்டுவிடுகிறது. பின் வேறு ஒரு வண்டியில் பள்ளி செல்கிறது என்றால், நான் நேரம் தவறி எழுந்ததால்தான் என் குழந்தை பள்ளிக்குச் செல்லும் வாகனத்தில் செல்ல முடியவில்லை. நான் என் குழந்தையைப் பற்றி யோசிக்காமல் சுயநலமாக உறங்கியதால்தான் இப்படி நடந்தது என்பதில் இருந்து குற்றவுணர்வு கொள்ள ஆரம்பித்து, பிள்ளைகள் பரிட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கும் போது நான் சரியாக அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை அல்லது அவர்கள் படிப்பில் நான் அலட்சியமாக இருந்துவிட்டேன், குழந்தைகள் சரியாகச் சாப்பிடாதபோது நான் நன்றாகச் சமைக்கவில்லை, என் குழந்தைக்கு நல்ல சுவையான சாப்பாட்டைக்கூட என்னால் கொடுக்க முடியவில்லை, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போது நான் என் குழந்தையைச் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என அந்த குற்றவுணர்வும் அதற்கான காரணங்களின் பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.

இப்படிப் பெரும்பான்மையான தாய்மார்கள் சிந்திக்க முதல் காரணம், குழந்தை வளர்ப்பு என்பது என்னுடைய பொறுப்பு, இன்னும் சொல்லப்போனால் அது என்னுடைய பொறுப்பு மட்டும்தான் எனும் எண்ணம் அந்தப் பெண்களின் மனதில் ஆழமாக இருப்பதுதான். இந்த எண்ணம் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் வந்துவிடாது. ஒரு பெண் குழந்தை பிறந்ததில் இருந்து பெற்றோரும் வீட்டிலுள்ள பெரியவர்களும் ஊராரும் இந்தச் சமூகமும் தொடர்ந்து பெண்ணிற்கென சில கடமைகளை வரையறுத்து வைத்துக் கொண்டு, அதை ஒரு பெண் செய்தால் மட்டும்தான் அவள் சிறந்த பெண் எனும் சிந்தனையை ஊட்டிதான் வளர்க்கிறார்கள். அப்படி ஒரு பெண் சமையலில் உப்புப் போடுவதில் தொடங்கி குழந்தை வளர்ப்பு வரை, நூறு சதவீதம் தனக்கென வரையறுக்கப்பட்டுள்ள எல்லாக் கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடனேயே வளர்கிறாள் அல்லது வளர்க்கப்படுகிறாள்.

இப்படியான சமூகக் கட்டமைப்பில் வளருவதால் குழந்தை வளர்ப்பு என்பது தன்னுடையது மட்டுமான பொறுப்பு என எண்ணிக்கொண்டு, குழந்தை வளர்ப்பில் தன் இணையரின் பங்கையும் தன் குடும்பத்தினரின் பங்கையும் அவள் மறந்து போகிறாள். அதிலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் என்றால் தன்னுடைய குழந்தை வளர்ப்பு குறித்து இன்னும் அதிகமான குற்ற உணர்ச்சிக்கு ஆளாவார்கள். குழந்தைக்குச் சிறிய காய்ச்சல் தும்மல் என்றால்கூட, தான் தன்னுடைய குழந்தையைச் சரியாகக் கவனித்துக்கொள்ளவில்லை, அதனால்தான் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என எண்ணி மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். சில தாய்மார்கள் மனஉளைச்சல் அடையவில்லையெனினும் இந்தச் சமூகம் அவளை நோக்கி, “கல்யாணம் பண்ணி குழந்தை வந்ததுக்குப் பிறகு வேலைக்குப் போனா, குழந்தையை ஒழுங்கா பார்த்துக்க முடியாது, அப்போ இப்படியான பிரச்னைகள் வரும்” எனச் சொல்லி அவளுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்த முயற்சிக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்துக் கொண்டாலும்கூட, அந்தக் குழந்தைக்கும் காய்ச்சல் சளி என வரத்தான் செய்யும். ஏனெனில் அவர்கள் குழந்தைகள், உலகில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் உடல்நலக் குறைவு ஏற்படுவது இயல்புதான். ஆனால், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கு முழுக் காரணமும் இந்தத் தாய்மார்கள்தாம் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்படுகிறது, காரணம், அந்தப் பெண் இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள வரம்புகளை மீறிச் செயல்படுகிறாள் என்பது மட்டும்தான்.

இப்போதெல்லாம் அப்படி இல்லை சமூகம் மாறிவிட்டது எனச் சொல்லலாம். சரிதான் சமூகம் மாறியுள்ளது ஆனால், குறிப்பிடத் தகுந்த அளவு மாற்றம் நிகழவில்லை என்பதுதான் நிதர்சனம். 25 ஜனவரி 2023 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது, அதில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்களின் குற்றவுணர்வு குறித்துச் சொன்னதைப் பகிர்ந்திருந்தார்கள், அதில் ஒரு கருத்து, “32 வயதான சமஸ்கிருதி தினமும் வேலைக்குச் செல்லும்போது தன் குழந்தை அழுவதைக் கண்டு, தன்னுடைய பணி நிமித்தம் தான் எவ்வளவு நன்றாக இருந்தாலும், ஒரு தாயாகத் தான் சிறந்த தாய் அல்ல என நினைக்கிறார். தான் வேலைக்குச் செல்லும்போதெல்லாம் தன் குழந்தை தாய் அன்பை இழந்துவிடுவதாக அவர் உணர்ந்து குற்றவுணர்விற்கு உள்ளாகிறார்.” இது வெறும் உதாரணம்தான், இது போன்ற பல கதைகள் பல பெண்கள் சொல்லி நம்மால் கேட்க முடியும்.

“இந்திய அளவில் மொத்தம் 20% பெண்கள்தாம் வேலைக்குச் செல்கிறார்கள், தேசியக் குடும்ப சுகாதார ஆய்வு (National Family Health Survey (NFHS) அறிக்கையின் அடிப்படையில் வேலைக்குச் செல்லும் பெண்களில் வெறும் 32% பெண்கள்தாம் திருமணத்திற்குப் பிறகும் வேலையில் தொடர்கிறார்கள். வேலை செய்யும் திருமணமான பெண்களில் 15% பேருக்குச் சம்பளமே இல்லை என்பது மற்றோர் அதிர்ச்சியான தகவல் (இது ஆண்களில் வெறும் 4% மட்டும்தான்). இப்படி ஏற்கெனவே குறைவான பெண்களே திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்கிறார்கள். திருமணமான வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் மகப்பேறு விடுப்பு (Maternity Leave) முடிந்து மீண்டும் பணியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை வெறும் 27% மட்டும்தான். இந்தக் குறைவான எண்ணிக்கையில் உள்ள திருமணமான வேலைக்குச் செல்லும் பெண்களில் 94% பெண்கள் தங்களின் குழந்தை வளர்ப்பில் திருப்தி இல்லாமல் குற்றவுணர்வில் உள்ளனர். இவர்கள் மட்டும்தான் குற்றவுணர்வில் இருக்கிறார்களா எனக் கேட்டால், இல்லை, வீட்டிலிருந்து குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் தாய்மார்களுக்கும் இந்தக் குற்றவுணர்வு இருக்கிறது, அவர்களும் தங்களின் குழந்தை வளர்ப்பில் சந்தோஷமாகவோ திருப்தியாகவோ இல்லை, அவர்களில் சுமார் 50% தாய்மார்கள் தங்களின் குழந்தை வளர்ப்பு குறித்து குற்றவுணர்வில்தான் உள்ளனர்.

ஒரு தாய்க்குத் தன் குழந்தை வளர்ப்பில் இவ்வளவு குற்றவுணர்வு ஏற்படுவதற்கு முதல் காரணமாகச் சமூக கட்டமைப்பைப் பார்த்தோம். இரண்டாவது காரணம் ஒரு பெண் முதன் முதலில் தாயாகும் போது ஏற்படும் பாதுகாப்பின்மை உணர்வு. தான் அனைத்தையும் சரியாக செய்து விடுவோமா, நூறு சதவிகிதம் நல்ல அம்மாவாக இருப்போமா என்கிற அச்ச உணர்வு (ஏனெனில் நூறு சதவீதம் சமூக வரையறையைப் பூர்த்தி செய்பவள்தான் Ideal தாயாக இந்தச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவாள் எனும் கற்பிதம்). முதலில் நாம் இங்கு புரிந்துகொள்ள வேண்டியது யாரும் எதிலும் எப்போதும் எடுத்த எடுப்பிலேயே நூறு சதவீதம் சரியாக இருக்க முடியாது, அப்படி இருக்க முயற்சிக்கலாம் ஆனால் அப்படி இருப்பது நடக்காத காரியம். தெரிந்தோ தெரியாமலோ சிறு தவறு நடக்க வாய்ப்புள்ளது. எனவே நூறு சதவீதம் நான் சரியாக இருந்தே ஆக வேண்டும் எனும் விடாப்பிடியான எண்ணத்தை விடுத்து, படிப்படியாக நம் நிறை குறைகளைத் தெரிந்து, அதை மேம்படுத்திக் கொண்டு பொறுப்பான அம்மாவாக இருக்க முயற்சி செய்வதும், சிறுசிறு தவறுகள் நடக்கும்போது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதைக் கடந்து செல்ல முயற்சிப்பதும்தான் குழந்தை வளர்ப்பு குறித்த தாய்மார்களின் அச்ச உணர்வில் இருந்து அவர்களை விடுவிக்கும்.

சரி, அதற்காகத் தாய் எதற்காகவும் பதற்றம் கொள்ளக் கூடாதா எனும் கேள்வி வரலாம். ஒரு தாய் பதற்றப்படுவது சில நேரத்தில் தம் தவறை உணரவும் எதிர்காலத்தில் அது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் உதவும். இப்படித் தன்னுடைய செயலை ஆராய்ந்து பார்த்து, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் நடந்த தவறையே நினைத்து குற்றவுணர்வு கொள்வதில் இருந்து விடுபட வேண்டும். ஏனெனில் குற்றவுணர்வு நம்மைச் சிந்திக்க விடாது.

அடுத்ததாக பெண்கள் தங்களுடைய குழந்தை வளர்ப்பில் சந்தேகம்கொள்ள முக்கியக் காரணம், வேறு குழந்தைகளுடன் தம் குழந்தைகளை ஒப்பிடுவது. குறிப்பாகச் சமூகவலைத்தளங்களில் பல பிரபலங்களும் இன்ஃபுளுவன்சர்களும் அவர்களின் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறார்கள் என்பதைப் பார்க்கும் சூழல் இப்போது உள்ளது. அப்படிப் பார்க்கும் போது அவர்கள் போல நாம் இல்லையோ, அவர்கள்தாம் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்கிறார்களோ, நாம் நம்முடைய குழந்தைகளை வளர்ப்பது சரியில்லையோ எனும் சந்தேகம் ஏற்படும். அது அவர்கள் போல நம்மால் ஏன் நம் குழந்தைகளை வளர்க்க முடியவில்லை எனும் மனத்தாங்கலை ஏற்படுத்துகிறது. இந்த மனத்தாங்கல் காலப்போக்கில் குற்றவுணர்வாக உருமாற்றம் கொள்கிறது. இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, ‘ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்து அவர்களின் மனநிலையும் செயல்பாடும் தனித்துவமானதாகத்தான் இருக்கும்.’ அதனால் ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையை ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு என்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும் போது தங்களின் குழந்தை வளர்ப்பு குறித்துப் பல தாய்மார்களுக்கும் ஏற்படும் குற்றவுணர்வு விலகும். மேலும் குழந்தை வளர்ப்பு என்பது தாயின் கடமை மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் தந்தை குடும்பம், சுற்றம், பள்ளிக்கூடம், இந்தச் சமூகம் என அனைவரும் சேர்ந்துதான் ஒரு குழந்தையை வளர்க்கிறோம் எனும் உண்மையை உணர்ந்து, ஒரு கூட்டு முயற்சியில் குழந்தைகளை வளர்ப்பதும் தாய்மார்களின் குற்றவுணர்வைக் களைய வழிவகுக்கும்.

சரி, ஒரு தாய்க்குக் குற்றவுணர்வு ஏற்பட்டால் என்ன? அதில் என்ன பெரிய பின்விளைவுகள் ஏற்படப் போகின்றன என்றுகூடச் சிலருக்குத் தோன்றலாம். ஒரு தாய் தன் குழந்தை வளர்ப்பின் பேரில் குற்றவுணர்வு கொள்ள ஆரம்பித்தால், அது ஆரம்பகாலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், காலப்போக்கில் அதுவே குழந்தைகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். ‘பக்கத்து வீட்டு குழந்தை பரிட்சையில் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்து, தன்னுடைய குழந்தை பக்கத்து வீட்டுக் குழந்தையைவிடக் குறைவான மதிப்பெண் வாங்கியிருந்தால், தன்னுடைய குழந்தையும் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும். நான் என் குழந்தையை நல்ல மதிப்பெண் வாங்க வைத்தே ஆக வேண்டும். இல்லையெனில் நான் நல்ல தாய் அல்ல எனும் எண்ணத்தில் அந்தத் தாயால் குழந்தைக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்படும்.’ இது குழந்தைகளின் மனநிலையையும் பாதிக்கும். மேலும் இந்தக் குற்றவுணர்வு காரணமாக தன்னுடைய குழந்தை வளர்ப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளங்களில் சொல்லப்படும் அறிவுரைகளைப் பின்பற்றத் தொடங்குவார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று சமூக வலைத்தளங்களில் துறைசார் வல்லுநர்கள் அல்லாத இன்ஃபுளுவன்சர்களிடம் குழந்தை வளர்ப்பு பயிற்சி வகுப்பு எனும் பெயரில் தங்களின் பணத்தை இழக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. பணத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் குழந்தை வளர்ப்பு குறித்த தவறான புரிதல்கள் ஏற்பட்டு, அது குழந்தைகளின் வாழ்வில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த காரணமாக அமையவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

குழந்தை வளர்ப்பு என்பது நாம் ஒவ்வொருவரும் சுயமாக அனுபவத்தின் மூலம்தான் கற்றுக்கொள்ள முடியும், நம் குழந்தைக்கு என்ன தேவை, எது சரி என்பதைக் குழந்தைகளிடம் உரையாடுவதன் மூலமும் குழந்தைகளின் உடல்மொழியைக் கவனிப்பதன் மூலமும் ஓரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதைவிட கூடுதலாக தெரிந்துகொள்ள விரும்பும்போது குழந்தைகள் நல மருத்துவரிடமோ, குழந்தை உளவியலாளரிடமோ (Child Psychologist) துறைசார் வல்லுநரிடமோ ஆலோசனை கேட்பதும் அவர்களின் உதவியை நாடுவதும்தான் சரியான அணுகுமுறை. கல்லூரிக்குச் சென்று அனைவரும் ஒரே சிலபஸில் உள்ள பாடத்தைப் படித்து, ஒரு பட்டம் பெறுவது போன்ற ஒற்றைவழி செயல்பாடு அல்ல குழந்தை வளர்ப்பு எனும் உண்மையை உணருவதும், சமூக அழுத்தங்களுக்கு செவிமடுக்காமல் குழந்தை வளர்ப்பில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையைக் கடைபிடிப்பதும்தான் தாய்மார்களின் குற்றவுணர்வில் இருந்து அவர்களை விடுவிக்கும். இந்த வழிமுறைகள் சற்று சிரமம்தான், சமூகத்தில் பெரும்பான்மையாகச் சரி எனச் சொல்லப்படும் ஒன்றை மீறி செயல்படுவது யதார்த்தத்தில் முடியாத காரியம்தான். ஆனால், தேவையற்ற அறிவுரைகளைக் கேட்டு நம் மனநிலையையும் குழந்தைகளின் மனநிலையையும் பாதிப்படைய வைப்பதற்குப் பதில் சற்றுச் சிரமமாக இருந்தாலும் சரியான முறையில் குழந்தை வளர்ப்பை அணுக முயற்சிப்போம். தேவையற்ற குற்றவுணர்வுகளுக்குப் பலியாகாமல் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாப்போம் எனத் தாய்மார்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே போல ஒரு குழந்தை சார்ந்துள்ள குடும்பமும் சுற்றமும் பள்ளியும் சமூகமும் குழந்தை வளர்ப்பு என்பது தாயின் பொறுப்பு மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்டு, அந்தக் குழந்தையின் நலனில் அக்கறை கொண்டு தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து, அந்தக் குழந்தை வளர ஒரு பாதுகாப்பான இடமாக தங்களைப் பரிணமித்துக் கொண்டு, குழந்தை வளர்ப்பில் தங்கள் பங்கை சரிவர செய்யும்போதுதான் ஒரு தாயால் அவர்களின் குழந்தை வளர்ப்பு குறித்த குற்றவுணர்வில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.

“தாய்மை என்பது விலைமதிப்பற்றதுதான். ஆனால், தாய்மையால் மட்டுமே உங்களை மதிப்பிடாதீர்கள், ஒரு முழுமையான மனிதராக இருக்க முயற்சியுங்கள். அதனாலேயே உங்கள் குழந்தைகள் பயனடைவார்கள்.”

~ சிம்மாமண்டா கோஸி அடிச்சி(Chimamanda Ngozi Adichie)”

படைப்பாளர்:

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். நாத்திகவாதி. பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.