விவாகரத்துகளுக்கு இன்னென்ன காரணங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் எழுதினால் அதில் முதலாவதாக இருப்பது கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளில் குடும்பத்தவர் தலையிடுவதாகதான் இருக்கும். பெரும்பாலும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள்தாம் அதிகம் என்பதால், ஆரம்ப காலகட்டங்களில் கணவன் மனைவி இருவருக்கு இடையே புரிதல் அவ்வளவாக இருக்காது. திருமணமாகி சில ஆண்டுகள் சம்மந்தப்பட்ட கணவன், மனைவி பிரச்னையில் பெண்ணின் குடும்பமோ பையனின் குடும்பமோ தலையிடாமல் அவர்களாக ஒரு முடிவுக்கு வரட்டும் என்று விட்டுவிட்டாலே பல பிரச்னைகள் சரியாகிவிடும்.

ஆனால், நமது சமூக அமைப்பாகட்டும், குடும்ப அமைப்பாகட்டும் பெரும்பாலும் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடமாக இருப்பதால்தான் பிரச்னைக்குத் தீர்வாக விவாகரத்து எதிர்பார்த்து குடும்ப நல நீதிமன்றம் செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் தலையீட்டால் கணவன் மனைவிக்குள் வரும் விரிசல் ஒருபுறம் என்றால், பெற்றோர் பார்த்து வைக்கும் பல திருமணங்களில் இருவருக்கும் பரஸ்பரம் புரிதல் இல்லாமல், திருமணமான புதிதில் பரஸ்பர ஈர்ப்பில், ஒருவரை இன்னொருவர் கவர, தங்களால் முடியாத செயல்களைக்கூடச் சிரித்த முகத்தோடு வலிய செய்துவிட்டு, பின்னர் தொடர முடியாமல், அதனால் எழும் சிக்கல்களும் குடும்ப உறவில் விரிசலுக்கு காரணமாகி விடுகின்றன.

என் நண்பர் ஒருவர் திருமணம் ஆன புதிதில் மனைவியை விழுந்து விழுந்து உபசரித்தார். இருவரின் பெற்றோரும் தொலைவில் இருக்க, ஹனிமூன்கூட செல்லாமல் மிக சந்தோஷமாக குடும்ப வாழ்வைத் தங்கள் வீட்டிலேயே தொடங்கினர். மனைவி கேட்காமலேயே அனைத்தையும் செய்து, எள் என்றால் எண்ணெயாக நிற்பார், அவர்களைப் பார்க்கவே அவ்வளவு நன்றாக இருக்கும். அந்தப் பெண் படித்திருந்தாலும், வேலைக்குச் செல்லாதவர், வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், சமையல் தவிர பிற வீட்டு வேலைகளுக்கு வேலையாட்களுடன் வாழ்ந்து பழகியவர். அதனாலேயே தமிழ் சினிமா கதாநாயகிகள் போல, காலை குளித்து, கணவனுக்கு காபியில் ஆரம்பித்து தடபுடலாக சாப்பாடு, டிபன் என தான் கற்றிருந்த அத்தனை வித்தைகளையும் சமையலில் காட்டினார். மெஸ், ஹோட்டல் என இருந்த கணவனுக்குப் புது சமையல் ருசியும், புது மனைவியின் அக்கறையும் சேர்ந்து மயக்கம் தர காய் நறுக்கி தர உதவி செய்வதில் இருந்து, மாலை வந்தவுடன் பணிப்பெண் மாடியில் காய வைத்துச் சென்ற துணி எடுத்து வைப்பது வரை மனைவி மறுக்க மறுக்க ஓடி ஓடி உதவி செய்வார்.

ஆனால், ஓர் ஆறு மாதம் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் எழ ஆரம்பித்தது. வீட்டில்தானே இருக்கிறாய், நீ போய் துணி எடுத்து வர வேண்டியதுதானே என்பதில் ஆரம்பித்து, சமையல் தட்டுக்கு வந்தால் சாப்பிடுவது என்ற நிலை வரை தொடர்ந்தது.

அந்தப் பெண்ணுக்கு ஆரம்பத்தில் இருந்தே கணவர் அப்படி இருந்திருந்தால் பெரிதாகத் தெரிந்து இருக்காதோ என்னவோ, ஆனால் ஆரம்பத்தில் விழுந்து விழுந்து உதவி செய்த கணவனின் இந்த மாற்றம் அவருக்குள் பூதாகரமாக உருவெடுக்க தொடங்கியது.

இயல்பிலேயே சற்று பருமனான உடல்வாகு வாய்க்கப் பெற்று இருந்த அவர், தன் உருவம் குறித்தும், தன் கணவருக்கு தன் மீது சலிப்பு தட்டிவிட்டது, தனக்கு இன்னும் கரு தரிக்கவில்லை என்பதால் எனப் பல மன சிக்கலுக்குள் உழல தொடங்கிவிட்டார். இருவருமே பிரச்னைகளைப் பேசித் தீர்க்காமல் தங்களுக்குள் பகைமையை வளர்த்துக் கொண்டு எலியும் பூனையுமாக வலம் வரத் தொடங்கினர்.

இதனிடையே அந்தப் பெண்ணுக்குக் கருத்தரிக்க, கணவர் மீண்டும் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். வளைகாப்பு முடிந்து மனைவி தாய் வீடு சென்று விட, சிசேரியன் காரணமாக ஆறு மாதம் கழித்து, கிட்டத்தட்ட ஒரு வருடம் போல் தாய் வீட்டு வாசம் முடித்துதான் கணவர் வீட்டுக்குத் திரும்பினார்.

இதற்கிடையே மனைவி இல்லாது ஒரு மினி பேச்சிலர் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்ட கணவனும், தாய் வீட்டில் அனைத்தையும் அம்மா தலையில் சுமத்தி ஓய்வாக இருந்த பெண்ணும் குழந்தை வளர்ப்பு தனியாக என்று வரும்போது பெருஞ்சிக்கலைச் சந்தித்தனர். மனைவி பகல் முழுவதும் தான் குழந்தையைப் பார்த்துக்கொள்வதால், இரவு தனக்கு ஒய்வு வேண்டும் எனக் கூற, நீண்ட நாள் மனைவியின் பிரிவு, குழந்தையின் அண்மை கொடுத்த மகிழ்ச்சி காரணமாக ஆரம்பத்தில் கணவர் இடையிடையே எழுந்து குழந்தைக்குப் பால் ஆற்றிக் கொடுப்பது, விழித்துக் கொண்டால் தூக்கி வைத்துக் கொஞ்சுவது என்று இருந்தாலும், அலுவலகத்தில் வேலை அதிகம் இருக்கும் நாட்களில் எரிச்சல் அடைய தொடங்கியதுடன், நான் வேலைக்குச் சென்று இரவுதான் வருகிறேன். இரவில் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. வீட்டில் இருக்கிறாய், பகலில் குழந்தை தூங்கும் போது நீ தூங்க முடியும், நான் ஆபிஸ் போய் தூங்க முடியுமா என்று ஆரம்பித்து, சண்டை முன்னிலும் உக்கிரமாகத் தொடங்கியது.

இந்தப் பிரச்னையின் ஆணி வேர் எதுவெனப் பார்த்தால் இருவருமே தங்களால் என்னென்ன செய்ய முடியும், வேலைகளை எப்படிப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதைப் பற்றியும் தெளிவான திட்டமிடல் இல்லாமல், ஒருவரை இன்னொருவர் இம்ப்ரெஸ் செய்வதற்காக முடியாததை எல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்திருக்கிறார்கள். அதுதான் அவரவர் இயல்பு போல என இருவரும் புரிந்துகொண்டதால், அப்படித் தொடர முடியாமல் போகும் போது இருவருக்குள்ளும் பிரச்னைகள் முளைவிடத் தொடங்கின.

அப்போதாவது இருவரும் சற்று ஆராய்ந்து பிரச்னைகள் குறித்துப் பேச ஆரம்பித்திருந்தால், அதில் இருந்து வெளிவர வழி கிடைத்திருக்கலாம். ஆனால், அதை விடுத்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, பிரச்னையைப் பெரிதாக்கி, குழந்தை முன் சண்டையிட்டு, வீட்டையே நரகமாக்கி வாழ்கிறார்கள். அவர்களின் சண்டையைப் பார்த்தபடி வளரும் குழந்தை எப்படிச் சந்தோஷமாக வளரும்?.

பரஸ்பரம் காதலித்து திருமணம் செய்துகொண்டால் பிரச்னைகளே இருக்காதா எனக் கேட்டால், வாய்ப்பு குறைவு. திருமணத்திற்கு முன் காதலிக்கும் போதே ஒருவரை இன்னொருவர் புரிந்துகொள்ள அதிக வாய்ப்பு இருப்பதுடன், இருவரும் கலந்து பேசி ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லை பிரிந்துவிடலாம். காதல் பற்றிய பத்தாம்பசலித்தனமான பல கருத்துகளை மூட்டை கட்டிவிட்டு, ஆணும் பெண்ணும் யதார்த்த வாழ்க்கையில் சந்திக்க இருப்பதையும், அதை இணைந்து எப்படிக் கடக்க வேண்டும் என்பதையும் சம்மந்தப்பட்ட இருவர் மட்டுமே தெளிவுப்படுத்திக்கொண்டு, அதன் பின் வாழ்க்கையைத் தொடங்குவது மட்டுமே இனிவரும் காலத்தில் திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த உதவும்.

முதலாவதாகக் கூறிய உதவி பேராசிரியர் வேலைக்கு செல்கிறார், அவர் ஒருவித பிரச்னையை எதிர்கொள்கிறார். இரண்டாமவர் வீட்டில் இருக்கும் பெண், அவரும் ஒருவித பிரச்னையை எதிர்கொள்கிறார். இருவரும் வெவ்வேறு விதமான பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்றாலும், குழந்தை வளர்ப்பு என்பது பெண்ணுக்கே உரித்தானது என்றான திணிப்புதான் பிரச்னைக்கு ஆணி வேராக இருப்பது புரியும்.

இன்று பெரும்பாலும் தனிக்குடித்தனம் என்று ஆகிவிட்ட நிலையில், ஒரு பெண் வேலைக்குச் சென்றாலும் சரி, செல்லவில்லை என்றாலும் சரி குழந்தைப்பேறு, குழந்தை வளர்ப்பு என்பதை கணவன், மனைவி இருவரும் உட்கார்ந்து பேசி, விளைவுகள் குறித்து ஆலோசித்து, அதன்பின் குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி முடிவெடுப்பது நன்றாக இருக்கும்.

‘என்ன கல்யாணமாகி ஒரு வருசமாயிடுச்சு, இன்னும் குழந்தை இல்லையா’ என்று கேட்பதற்காகவும், குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் தன்னைப் பிறர் கேலியோ கிண்டலோ செய்யக்கூடும், அல்லது தன்னுடன் திருமணமானவர்களுக்கு குழந்தை பிறந்துவிட்டது, அதனால் விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றோ குழந்தை பெற்றுக்கொள்ளும் பலர் தங்கள் வாழ்க்கையைக் கடும் சிக்கலுக்குள் தள்ளுகின்றனர். குழந்தை பெற்று வளர்ப்பது என்பது கடமை அல்ல, அது மிகப்பெரிய பொறுப்பு.

அதே போல என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.

(தொடரும்)

படைப்பாளர்:

கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.