“ஹாய்! எல்லாரும் எப்டி இருக்கீங்க?” ஆரவாரமாக வந்தமர்ந்தாள் ஜெனி.

“ஹாய் ஜெனி. என்ன இன்னிக்கு எக்ஸ்ட்ரா உற்சாகமா இருக்கே?” அவளது முதுகைத் தட்டியபடி வரவேற்றாள் யாமினி.

“ஸ்கூல் லீவு விட்டாச்சுல்ல? காலைலதான் ராமையும் குழந்தைகளையும் ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணேன்.”

“ஆஹா, ரெண்டு மாசம் பேச்சலரெட் லைஃபா? எஞ்சாய்!” – இது வருண்.

“ஹி…ஹி… ஆமாம் வருண். நீங்க ஊருக்குப் போகலியா?”

“எங்கே? இன்னும் லீவ் கிடைக்கல. நேத்துதான் அப்ளை பண்ணிருக்கேன்.”

“ஹும். ஆம்பளைங்கல்லாம் சம்மர் லீவ்ல ஜாலியா ஊருக்குப் போயிடுறீங்க. உங்க வேலையும் சேர்த்து நாங்க பண்ண வேண்டி இருக்கு. இன்னிக்கு நானே சமைச்சேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்று தனது லஞ்சைப் பகிர்ந்தாள் ஜெனி.

“வாவ்! சூப்பரா இருக்கு ஃப்ரைட் ரைஸ்! ராம் நிஜம்மா லக்கிதான் ஜெனி.”

“எங்கே அவன் ஊருக்குப் போனாதான் நான் சமைக்க முடியும். இல்லாட்டி என்னை கிச்சனுக்குள்ளேயேவிட மாட்டான். ஆச்சாரம் அது இதுன்னு உயிரை எடுப்பான் இடியட்.”

“நிஜம்மாவே நல்லாருக்கு. அப்ப ஒரு மாசம் நீங்கதான் சமையலா?”

“ஹய்யய்யோ இந்த வெயில்லயா? இன்னிக்குச் சும்மா ட்ரை பண்ணேன். நான் ஒரு மாசமாச்சும் வெளில நல்ல சாப்பாடு சாப்டலாம்னு பார்த்தா, ராம் வத்தக்குழம்பு, பருப்புப் பொடி, மாவுன்னு ஒரு பெரிய லிஸ்டே ரெடி பண்ணி ஃப்ரிஜ்ல வெச்சிட்டுப் போயிருக்கான். அதைத்தான் சாப்டணும்னு. எங்க இருந்தாலும் டார்ச்சர் பண்றாங்கப்பா” என்று தோளைக் குலுக்கினாள் ஜெனி.

வருண், சாதிக் உட்பட எல்லாரும் கலகலத்துச் சிரித்தனர்.

ராம் அதிகம் படிக்காதவன். காதல் திருமணம் செய்தாலும் ராமையும் அவன் குடும்பத்தையும் எப்போதும் மட்டந்தட்டிப் பேசுவாள் ஜெனி. யாரும் கண்டுகொள்வதில்லை.

“வருண், இன்னிக்கு ப்ரான்ஸ் செஞ்சேன். உனக்கு ரொம்பப் பிடிக்குமே.”

“ஹய்யோ, சாதிக், இன்னிக்கு தர்ஸ்டே. மறந்துட்டியா?”

“ஓ… ஆமாம்ல சாரி. என்ன விரதம்?”

“சாய்பாபா.”

“ராகவேந்திரருக்குத்தானே வியாழக்கிழமை விரதம் இருப்பாங்க.”

“அவர் இப்ப அவுட் ஆஃப் ஃபேஷன். சாய்பாபாதான் இப்ப ட்ரெண்டிங்.”

வருணும் சம்ஸும் அதிர்ச்சியானார்கள். ஆனால், யாமினியின் வசீகரமான சிரிப்பில் சட்டென்று நெகிழ்ந்தார்கள். யாமினியின் மீது அலுவலகத்தில் பல ஆண்களுக்கு ரகசிய கிரஷ்.

“ஹாய் யாமினி!”

“ஹாய் சாதிக். என்ன ப்ரான்ஸா. யம்மி! சூப்பரா பண்ணிருக்கீங்க.”

“தாங்க்யூ” என்று வெட்கத்துடன் சிரித்தான் சாதிக்.

“நல்லாருக்கு. இதுல ரெண்டு பச்ச மிளகா கீறிப் போட்டீங்கன்னா இன்னும் சூப்பரா இருக்கும். எங்கப்பா அப்படிதான் செய்வார்.”

தலையாட்டிச் சிரத்தையுடன் கேட்டுக் கொண்டான் சாதிக்.

“அப்புறம், இவ்ளோ பெரிய ப்ரான்ஸ் டேஸ்ட் இல்ல. சின்னச் சின்ன ப்ரான்ஸ்தான்” என்று எடுத்து ரவுண்டு கட்டிக் கொண்டே விமர்சனத்தை அள்ளி வீசிக் கொண்டிருந்தாள் யாமினி.

அவள் சாப்பிடும் அழகை ரசித்த வாறே, “நான் எங்கே போனேன்? என் ஒயிஃப் காலைல வாக்கிங் போயிட்டுத் திரும்பும் போது ஆசையா இருந்துச்சுன்னு வாங்கிட்டு வந்துட்டாங்க. ஆல்மோஸ்ட் சமைச்சு முடிச்சிருந்தேன். அதுக்கப்புறம் இதை அவசர அவசரமா உரிச்சு சமைச்சு எடுத்துட்டு வரதே பெரிய வேலை. இன்னும் சின்னச் சின்னதா இருந்திருந்தா அவ்ளோதான்.”

“ஏன் உங்க ஒய்ஃப் ஹெல்ப் பண்ண மாட்டாங்களா?”

“ம்ச்… கேட்காதீங்க. நாங்க ரெண்டு பேர் மட்டும் இருந்தா வெங்காயம் உரிச்சுத் தரது, வீடு க்ளீன் பண்றது இதெல்லாம் செய்வாங்க. ஆனா, ஊர்லேருந்து மாமனார், மாமியார் வந்திருக்காங்க. அவங்களுக்கு மகளை நான் வீட்டு வேலை வாங்குறதைப் பார்த்தா ரத்தம் கொதிச்சிடும்.”

“எல்லார் வீட்லயும் இந்தக் கதைதான். உனக்காவது எப்பவாச்சும் வராங்க, எனக்கு…” என்று பெருமூச்சு விட்டான் வருண்.

இரக்கத்துடன் வருணின் தோளை அணைத்துக் கொண்டான் சாதிக். இவர்கள் பேச்சைக் கவனிக்காதவாறு மொபைலை நோண்டத் தொடங்கினார்கள் யாமினியும் ஜெனியும்.

**

“ஹலோ… ஆமாமா, வீட்ல சாமி கும்புடுவாங்க. அப்பாவுக்கும் வருணுக்கும் கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. அவங்களோட தனி மனித உரிமைகள்ள நான் தலையிடறதில்ல. ஹும்… இந்த ஆண்களுக்கு என்னிக்குதான் அறிவு வருமோ தெரியல!” ஆறாவது கொழுக்கட்டையை விழுங்கிக் கொண்டே பால்கனி ஊஞ்சலில் ஆடியபடி தோழியிடம் அரட்டையடித்துக் கொண்டிருந்தாள் நிலா.

அதிகாலையில் எழுந்து கோலம் போட்டு, குளித்து, பூஜை அறையைச் சுத்தம் செய்து, மாமா தொடுத்துக் கொடுத்த பூச்சரங்களைச் சாமி படங்களுக்கெல்லாம் போட்டு, பூரணம் வைத்து கொழுக்கட்டை செய்து, சுண்டல் செய்து, முழுச் சமையலையும் முடித்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க வந்த வருண், “கொஞ்சம் ஹெல்ப் பண்ணக் கூடாதா? ஒத்த ஆளா மாரடிச்சிட்டு இருக்கேன் காலைலேருந்து. உங்கப்பா அதைச் செய், இதைச் செய்னு விரட்டிக்கிட்டே இருக்கார். நீ லீவ்னு எவ்ளோ ஹாயா உட்காந்திருக்கே? எனக்கும் லீவ்தான். ஆனா, ஆபிஸ் நாளைவிட ஹெக்டிக்கா இருக்கு.”

“பேபி! நான் தெளிவா உன்கிட்ட விளக்கிச் சொல்லிட்டேன், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு. அப்படியும் ஏதோ கோயில், குளம்னு கூப்டா ஜாலியா அவுட்டிங்னு வரத்தானே செய்றேன். இந்த விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி எல்லாம் எப்பேர்பட்ட ஃப்ராடு பண்டிகைன்னு பல தடவை சொல்லியும் உனக்குப் புரிய மாட்டேங்குது.”

“ஐயையோ… சாமியைப் பத்தித் தப்பா பேசாத நிலா” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான் வருண்.

ஊஞ்சலில் இருந்து எழுந்து அவனைக் கட்டிக்கொள்ள முயன்ற நிலாவைப் பிடித்துத் தள்ளிவிட்டான் வருண்.

“ஐயோ… நீ இன்னும் குளிக்கக்கூட இல்லை. போ, பூஜைக்கு நேரமாயிடுச்சுன்னு மாமா சத்தம் போடுறாங்க. போ, போய்க் குளிச்சிட்டு வந்து தீபாராதனை காட்டு.”

“ஓகே… ஓகே… கணவன் கொண்டு வந்து கொடுத்த சுத்தமான டவலுடன் குளியறைக்குள் சீட்டியடித்தபடி நுழைந்தாள் பகுத்தறிவுவாதி நிலா!

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.