சுய மதிப்பீடென்பது உலகம் நம்மை எப்படி மதித்தாலும், நாம் நம்மை எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொருத்துதான் அமையும்.

தன் மீது மதிப்பும் தன்னம்பிக்கையும் உள்ள ஒருவர் உலகத்தை அநாயாசமாக கவர்கிறார். அவரிடம் அறிவு, அழகு, கல்வி, செல்வம், ஆற்றல் எல்லாம் நிறைந்திருக்க வேண்டுமென எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனாலும் நமக்கு அவரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். ஏன்?

அவர் மீது அவருக்குள்ள பார்வை, அந்த உயர் மதிப்பீட்டின் மூலமாக அவர் செய்யும் செயலின் முழுமை, அது தரும் தன்னம்பிக்கையின் பயனாக அவரிடம் மலரும் புன்னகை. பார்ப்பவரைக் கட்டாயம் அவர் பால் ஈர்க்கும்.

எந்தத் துறையானாலும் அதில் வெற்றி பெற்றவரை காணும் போது அவரிடம் ததும்பும் தன்னம்பிக்கையே நம்மைக் கவர்ந்துவிடும். அவரைப் பற்றி நமக்கு எதுவுமே தெரியாவிடினும் நம்மை அவர் பால் ஈர்த்தது எது?

அவரைப் பற்றி அவருக்கு இருந்த நல் எண்ணம், உயர்ந்த மதிப்பு அதனால் விளைந்த தன்னம்பிக்கை. ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் போதோ பிறருக்கு நம்மாலான உதவி செய்யும் போதோ உங்களை அறியாமலேயே உங்கள் மனம் நிறைவாக உணரத் தொடங்கும். அப்போதெல்லாம் உங்கள் முகம் மலர்ந்து, உடல் நிமிர்ந்து ஒரு நேர்மறையான சக்தி உள்ளிருந்து வெளிபடும்.

அந்த நேரத்தில் உங்கள் நடை, பாவனை, சிந்தனை அனைத்திலும் அந்தத் தன்னம்பிக்கை பிரதிபலிக்கும். அதன் பிரதிபலிப்பு மற்றவரிடமும் பரவும். அனைவரும் உங்களை அதே மதிப்போடும் மரியாதையாடும் பார்ப்பர். அனைவருக்கும் தன் மேல் உள்ள மதிப்பின் அளவீடு அவ்வப்போது மாறுபடும், நமது மனநிலை, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும்.

நேர்மறையான மனநிலை எப்போதும் நிலைக்க நமக்கு நம் மீதான ஆழமான நேசமும் உயர்ந்த எண்ணமும் தேவை.

சிறிய வயதில் படித்த ஒரு கதை.

கோபரத்தின் உச்சியில் உள்ள ஒரு சிறிய சிலையில் மிக சிறிய அளவில் தவறு நேர்ந்துவிட மற்றுமொரு சிலையைச் சிற்பி வடிக்கலானார். அதைப் பார்த்த ஒருவர் அத்தனை உயரத்தில் இருக்கும் சிலையை யாரும் பார்க்கப் போவதும் இல்லை, பார்த்தாலும் இந்தச் சிறிய குறை கண்ணில் அகப்படப் போவதும் இல்லை. பின் எதற்காக இந்தச் சிரமம் எனக் கேட்டார். சிற்பி, உண்மைதான் யாருக்கும் தெரியாது. ஆனால், எனக்குத்தெரியுமே என்றாராம்.

தன் மீது உயர்ந்த மதிப்பு உடையவர்களால், எதைச் செய்தாலும் ஏனோ தானோவென்று செய்ய இயலாது. பாராட்ட யாருமே இல்லாவிடினும், ஏன் பார்க்கவே யாருமே இல்லா விட்டாலும் அவர்களின் பணி நேர்த்தி குறையாது. சாலை ஓரத்தில் பூக்கும் மலர்களைப்போல. தன் உயர்ந்த சுய மதிப்பின் காரணமாகச் செய்யும் செயலில் நேர்த்தி, அது ஈன்று தரும் சமூக மதிப்பு, அதனால் இன்னும் உயரும் சுய மதிப்பீடு என இது ஓர் அழகிய வட்டம்.

எனதருமை தோழிகளுக்கு, இதில் ஒரு சிறிய எச்சரிக்கை. உயர்வான சுயமதிப்பீடு எதைச் செய்தாலும் செம்மையாகச் செய்ய உதவும். ஆனால், எல்லாவற்றையும் செய்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. நம் அனைவருக்கும் வரம்புகள் உண்டு. அதை நாம் மதித்தால்தான் நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மதிப்பார்கள். இல்லாவிடில் நாம் அனைத்தையும் நம் தலையில் சுமந்துகொண்டிருப்போம்.

முதலில் உங்களை பற்றிய உங்களின் எண்ணங்களை எழுதுங்கள்.

1. உங்களிடம் பிடித்த விஷயங்கள்

2. மாற்ற வேண்டிய விஷயங்கள்

3. எந்தச் சூழ்நிலையில் நீங்கள் நேர்மறையாக உணர்கிறீர்கள்?

4. எந்தச் சூழ்நிலையில் நீங்கள் எதிர்மறையாக உணர்கிறீர்கள்?

5. இந்தச் சுய அலசல் ஒரு தெளிவைத் தரும்.

உங்களிடம் உங்களுக்குப் பிடித்ததைக் கொண்டாடுங்கள்.

பிடிக்காததை மாற்றவோ மெருகேற்றவோ முடியுமெனில் அதற்கான முயற்சி செய்யுங்கள்.

மாற்ற முடியாதெனில் அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். குறை இல்லாத மனிதர் இல்லை, எனில் நாம் மட்டும் விதிவிலக்கல்ல.

நீங்கள் மிகவும் நேசிக்கும் உறவோ நட்போ அவர்களிடம் ஏதும் குறை இருந்தால், அவர்களை விட்டு விலகுவதில்லை, அவர்களைத் தாழ்வாக எண்ணுவதில்லை. மாற்றாக அதைக் களையவே முயல்வோம், முடியாத பட்சத்தில் அவர்கள் அப்படித்தான், ஆனாலும் என் நேசம் குறையாதென ஏற்றுக்கொள்வோம்.

பின், எவரையும்விட அதிகமாக நேசிக்க வேண்டிய நம்மை, சில குறைகளுக்காகத் தாழ்வாக ஏன் நினைக்க வேண்டும் ?

சிலருக்கு இயல்பிலேயே தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை இருக்கும்.

இதற்கு குடும்பச் சூழல், வளர்ப்பு, சுற்றுப்புறம், உறவுச் சிக்கல்கள், சமுதாயத்தில் பணியிடத்தில் யதார்த்தமற்ற எதிர்பார்புகள், சக மனித அழுத்தம் எனப் பல காரணிகள்.

காரணிகள் ஆயிரம் இருந்தாலும் அதைக் களைவது நம் கையில். எங்கிருந்து தொடங்குவது மாற்றத்தை?

நம் உடலில் இருந்துதான். ஆரோக்கியமான உடல்தான் மன ஆரோக்கியத்திற்கு அடிப்படை.

1. உங்களால் முடிந்த உடற் பயிற்சியைத் தொடங்குங்கள். உற்சாகமான மனம் உங்கள் வசம்.

2. உங்களுக்கு முடியாது, வேண்டாம் எனச் சொல்ல தோன்றும் போது, அதைத் தைரியமாகவும் அதே நேரம் அமைதியாகவும் சொல்லப் பழகுங்கள். ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் போகப் போக உங்களின் மீதான மரியாதை உங்களுக்குக்கூடும்.

உயர்ந்த சுய மதிப்பீடுள்ள எந்தப் பெண்ணும் யாருக்காகவும் எதற்காகவும் தவறு என நினைத்ததைச் செய்வதில்லை.

அதற்கு ஈடாக எதை இழந்தாலும் சுயத்தை இழப்பதில்லை. பொள்ளாச்சி நிகழ்வை ஆராய்ந்தால், அந்தச் சிறுமிகளின் சுய மதிப்பீடு உயர்வாக இருந்திருந்தால் அவர்களை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்தி இருக்க முடியாது. யாரை இழந்தாலும் சுய மரியாதயைக் குறைக்கும் ஒரு செயலைச் செய்திருக்கமாட்டார்கள்.

3. உங்களிடம் நேர்மறையாகப் பேசுங்கள். நீங்கள் உங்களிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் ஆழ்மனம் கேட்கும், செயல்படுத்தும். உங்களின் குறைகளை நேர்மையான சுய சிந்தனையின் மூலம் சரிசெய்யலாம். உங்களுக்கு கணக்கோ ஆங்கிலமோ வராதென்றால் எனக்கு வராது என்று சொல்லாமல் கற்றுக்கொண்டிருக்கிறேன், விரைவில் தேர்ந்துவிடுவேன் என நினைக்க, சொல்லப் பழகுங்கள். தீவிரமாகப் பயிற்சி செய்யுங்கள்.

உங்களின் முன்னேற்றத்தைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

4. உங்கள் முன்னேற்றத்தை அவ்வப்போது அளவிடுங்கள்.

5. உங்களின் சின்னச் சின்ன வெற்றியைக் கொண்டாடுங்கள். இந்தக் கொண்டாட்டங்கள் உங்களை அறியாமலேயே சுயமதிப்பீட்டை உயர்த்தும்.

6. உங்களைச் சுற்றி உள்ளவர்களைத் தேர்ந்தெடுங்கள். உங்களின் சுய மதிப்பீட்டில் பெரும் பங்கு அவர்களுடையது.

7. உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளவற்றில் மட்டும் கவனம் செலுத்துங்கள். வெளிக்காரணிகள் எப்படி ஆனாலும், அதைப் புறந்தள்ளிவிட்டு, உங்களின் முன்னேற்றத்தை, மன நிலையை மட்டும் மனதில் இருத்துங்கள்.

உங்களின் அகமும் புறமும் மலர்ந்து நீங்கள் ஜொலிப்பதை ரசிக்க தயாராகுங்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.