பெற்றோர் மட்டும் கலந்துகொண்ட ஒரு பயிற்சி வகுப்பில், பெற்றோரில் ஒருவர், “இந்தக் காலத்துப் பசங்க” என்று ஆரம்பித்ததால் அவர்களிடம் இந்தக் கேள்வியை வைத்தேன்.

“உங்கள் குழந்தைகள், உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?”

கீழே வருபவை அதற்கான பதில்களாக இருந்தன.

“அவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும்.”

“காலை எழுப்பக் கூடாது; பத்து மணிவரை தூங்க விடவேண்டும்.”

“கேட்கும் போதெல்லாம் பணம் தரவேண்டும்.”

“கேள்வியே கேட்கக் கூடாது; முழு சுதந்திரமும் தர வேண்டும்.”

இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு பெற்றோராக இருந்து, உங்கள் பதில்களும் இவை மாதிரியானவை என்றால் உங்களிடம் என் அடுத்த கேள்வி,

“நீங்கள், குழந்தைகளாக இருந்தபோது, உங்கள் பெற்றோரிடம் என்ன எதிர்பார்த்தீர்கள்?”

சரி , பதில் சொல்ல சிரமமாக இருந்தால், யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் வெளியூரிலிருந்து கைபேசியில் அழைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்கள் அம்மாவோ அப்பாவோ அலைபேசியை எடுத்து சந்தோஷமான குரலில் மகிழ்ச்சிக்குரிய விஷயங்களைச் சொன்னால், உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்? அந்த மகிழ்ச்சி உங்களுக்கு எவ்வளவு மன நிறைவையும் உற்சாகத்தையும் தரும்?

அதே அம்மாவோ அப்பாவோ கைபேசியில், உடல் வலியோ அல்லது வேறு பிரச்னைகளையோ சொல்லி வருத்தப்பட்டார் என்றால் உங்கள் உணர்வுகள் எப்படி இருக்கும்? அதைக் கேட்ட பின்னரும் உங்களால் முன்னிருந்த வேகத்தோடு செயல்பட முடியுமா?

இப்போது சொல்லுங்கள், நம் பெற்றோரிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கிறோம்?

அவர்களின் மகிழ்ச்சியைத் தானே?

இப்போது மட்டுமல்ல நாம் குழந்தைகளாக இருந்த போதும், அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தது அவர்களின் மகிழ்ச்சியைதான்.

ஆக, இதையேதான் நம் பிள்ளைகளும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள்.

குழந்தையாக இருக்கும்போது அவர்களுக்குத் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிவுப்பூர்வமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உணர்வுபூர்வமாக உங்களை, உங்கள் மனதை, நன்றாகவே உணர்ந்துகொள்ள முடியும்.

மகிழ்ச்சி குறைந்த அல்லது மகிழ்ச்சியாக இல்லாத ஒரு பெற்றோரைப் பார்த்து, அவர்கள் இயலாதவர்கள் மற்றும் கையாளத் தெரியாதவர்கள் என்றே குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியும்.

ஏனென்றால் குழந்தைகளுக்கு அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தெரியும். அவர்களுக்கு அது எளிதானதும் கூட; அதை அவர்கள் எப்போதும் நன்றாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, குழந்தைகள் தம்மை திறமையானவர்கள் எனவும், பெற்றோரை திறமையற்றவர்களாகவும் நினைத்துச் செயல்படத் துவங்குவார்கள். வளர வளர இந்த எண்ணமே அவர்களிடம் வேரூன்றிவிடும்.

உண்மைதானே?

தன்னையே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளத் தெரியாத ஒருவரை, புத்திசாலி என ஒரு குழந்தை எப்படி நம்ப முடியும்?

தனக்கான சந்தோஷங்களைத் தேடிக்கொள்ள இயலாத ஒருவரைத் திறமையானவர் எனக் குழந்தைகளால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

குழந்தைகள் உங்களிடம் வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் இதுதான்,

தன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியாத ஒருவரிடம் எதற்காக அவர்களுடைய பிரச்னைகளுக்காகத் தீர்வை எதிர்பார்க்கப் போகிறார்கள்?

தன் பார்வையில் இயலாதவராகத் தோன்றும் ஒருவரிடம் ஏன் தன் இயலாமையைக் கூறி, உதவி கோரப் போகிறார்கள்?

தன் கண்களுக்கு மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பவரிடம், எதற்காக அவர்கள் விஷயங்களைப் பேசி விடைகளை எதிர்பார்க்கப் போகிறார்கள்?

அவர்கள் சொல்வதே சரி எனவும், அவர்கள் சொல்வதற்கெல்லாம் நீங்கள் தலையாட்ட வேண்டும் எனவுமே நினைப்பார்கள். மேலும் அவர்கள் பேசுவது உங்களுக்குப் புரியாது  என்றும் நினைப்பதுண்டு.

ஆகவே, நாம் செய்யவேண்டிய முக்கியமான கடமை, நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது. குழந்தைகளுக்கு நாம் செய்ய வேண்டியது, அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதுமே ஆகும்.

ஆனால், நாம் செய்துகொண்டிருப்பது எல்லாம்

கடமை என்ற பெயரில் நம் கருத்துகளை அவர்கள் மேல் திணிக்கிறோம்.

நம் குழந்தைகள் என்பதற்காகவே நம் மத, சமூக நம்பிக்கைகளை அவர்களையும் பின்பற்றச் சொல்லி வலியுறுத்துகிறோம்.

குழந்தைகளின் பொறுப்பு நாம்தான் எனச் சொல்லிக்கொண்டு கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.

முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டுவதை விட்டுவிட்டு அறிவுரைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

Illustration of a hilltop with a mother comforting her child

நாம் எடுத்துக்காட்டாக இருப்பதை விட்டுவிட்டு, அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன் ஒப்பீடு செய்து கொண்டிருக்கிறோம்.

அவர்களின் படைப்பாற்றலை நமது பழம்பெருமை பேசி மதிப்பிழக்கச் செய்கிறோம். அவர்களின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்க வாய்ப்பு அளிப்பதில்லை.

சிந்திப்பதற்குத் தைரியத்தையும் பாதுகாப்பையும் கொடுப்பதில்லை.

அவர்களின் பாதுகாப்பு நாம்தான் எனச் சொல்லிக்கொண்டு, கொடுப்பது என்னமோ வரையறைகளைத் தான்.

எனவேதான், நாம் எவ்வளவு செலவு செய்து, அது கோடியில் இருந்தாலும் சரி, வாங்கித்தரும் எந்தப் பொருளும், அதற்குரிய பலனையும் மாற்றத்தையும் பிள்ளைகளிடம் உருவாக்குவதில்லை.

உங்கள் பிள்ளைகளை உண்மையில் நீங்கள் நேசித்தால் உங்களை மகிழ்ச்சியாக வையுங்கள். ஏனென்றால்,

நீங்கள் கோடிகள் சம்பாதித்துவிட்டு பெருமிதப் புன்னகையுடன் நிற்கும் போதும் சரி, உலக சாதனை படைத்துவிட்டு மார்தட்டி புகழின் உச்சியில் மிதந்து கொண்டிருக்கையிலும் சரி, வெற்றிகளைக் குவித்து, பெரிய சபைகளில் விருதுகளைப் பெற்று கௌரவம் கொள்கையிலும் சரி, பிள்ளை மனங்கள், உங்கள் கண்களில் தேடுவது எல்லாம், உங்களின் உள்ளார்ந்த மகிழ்ச்சி. அது மட்டுமே. ஏனென்றால், அந்த மகிழ்ச்சியில் தான் நீங்கள் அவர்களின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும், நீங்கள் வாழ்க்கையின் மீது வைத்திருக்கும் உறுதிப்பாட்டையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். அதுவே அவர்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம். அதுவே அவர்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

உங்கள் குழந்தைகள், எந்த வயதாக இருந்தாலும், ஆறு மாதமாக இருந்தாலும் சரி, அறுபது வயதாக இருந்தாலும் சரி, அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சி மட்டுமே.

டாரதி மில்லர் என்ற பிரபல எழுத்தாளர், “மகிழ்ச்சியான குழந்தைப் பருவம் தான், இந்த வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டகரமான பரிசாக இருக்க முடியும்” எனச் சொல்வார். குழந்தைப் பருவம் என்பது மனித வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான காலக்கட்டம். மகிழ்ச்சியான பெற்றோரால் மட்டுமே அதை மகிழ்ச்சியான பருவமாக அமைத்துத் தர முடியும்.

வளர்ந்த பின்னரும்கூட, பெற்றோர் மகிழ்ச்சியாக இருந்தால் தான் பிள்ளைகளால் ஆரோக்கியமான குடும்பங்களை உருவாக்க முடியும். நாம் சேர்த்து வைக்கும் சொத்துகள் யாவும், நாம் இந்த உலகைவிட்டுச் சென்ற பிறகும் கொடுக்க முடியும். ஆனால், நாம் வாழும்போது மட்டுமே கொடுக்க முடிந்த எளிதான, மிக அதிர்ஷ்டகரமான அன்பளிப்பு தான் நம் மகிழ்ச்சி.

பிள்ளைகளுக்கான பரிசாக, பிள்ளைகளின் மீதான நேசத்தை, நம் மகிழ்ச்சியின் மூலமாகக் கொடுக்க ஆரம்பித்து, வாழ்வைக் கொண்டாடலாம், வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.