பால்புதுமையினர் அறிமுகக் கட்டுரைகள் – 4

அணியம் அறக்கட்டளையால் பால்புதுமை மக்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பால்மணம் மின்னிதழில் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற‌ திருநங்கை சோலுவுடனான நேர்காணல் இங்கு மீள் பதிவாக வெளியாகிறது. பால்மணம் மின்னிதழில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க, பால்மணம் இணையதளத்தைப் பார்க்கவும்.

திருநங்கைகள் இந்த சமூகத்தில் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாதித்து வரும் திருநங்கைகளை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த ‘திண்ணை’ பகுதி. சோலு அவர்கள் நல்ல ஒரு பிஸியோதெரபிஸ்டாக மாற்று திறனாளி குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொண்டு சமூகத்தில் நல்ல ஒரு திருநங்கையாக திகழ்கிறார். ஆகவே சோலு அவர்களை இந்த திண்ணை பகுதியில் நேர்காணல் செய்வதில் பால்மணம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.

1. வணக்கம் சோலு எப்படி இருக்கீங்க?

வணக்கம். நான் நலமாக இருக்கிறேன்.

2. நம்முடைய வாசகர்களுக்காக உங்களைப் பற்றி நீங்களே சொல்லுங்க.

என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் பெயர் சோலு, நான் ஒரு திருநங்கை. நான் ஒரு பிசியோதெரபிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர்.

என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டேன். பள்ளிப்படிப்பை முடித்து 2008-ல் என்னுடைய கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில்தான் நான் படித்தேன். நான் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது நான் ஒரு திருநங்கை என்பதை உணர்ந்து என்னை ஒரு திருநங்கையாக மாற்றிக் கொண்டேன். இந்த நேரத்தில் கல்லூரி நிர்வாகம் நான் ஒரு திருநங்கை என்பதால் என்னை முழுமையாக எதிர்த்தது.

மூத்த திருநங்கை சகோதரிகளின் ஆதரவோடும் மற்றும் எனக்கும் படிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்ததால், இந்த சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்ற இலட்சியத்தோடு மீண்டும் என்னுடைய கல்லூரி படிப்பைத் தொடங்கினேன். ஆண்கள் அணியும் உடையை மட்டுமே அணிந்து வரவேண்டும், ஒரு ஆணாகவே கல்லூரி படிப்பை முடிக்கவேண்டும் என்ற விதிமுறைகளை கல்லூரி நிர்வாகம் எனக்கு அளித்தது. கல்லூரியில் யாரும் என்னிடம் பேச மாட்டார்கள் அதோடு பேராசிரியர்கள் கூட பேசாமல் இருந்தது எனக்கு மிகுந்த சிரமத்தை தந்தது. இத்தனை தடைகளையும் தாண்டி நான் 2013-ல் படித்து முடிக்கும்போது தமிழ்நாடு அளவில் யுனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் மற்றும் நான் ஒரு gold medalist  என ஒரு திருநங்கையாக கூறிக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

3. பல திருநங்கைகளைப் பற்றி பேட்டி எடுத்து விட்டோம் பெரும்பாலும் ஒரே மாதிரியான கசப்பான அனுபவங்களை அவர்கள் எதிர்கொண்டு உள்ளார்கள். அப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் பெற்ற கசப்பான அனுபவம் என எதை நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் ஒரு திருநங்கை என்பதை தெரிந்த உடனே என்னுடைய அம்மா தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டார். இது என்னுடைய வாழ்க்கையில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வு ஆகும். நான் ஒரு எட்டு நபர்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் எல்லோருக்கும் பிடித்த ஒரு செல்ல பிள்ளையாக வளர்ந்தேன் ஆனால் நான் ஒரு திருநங்கை என தெரிந்து கொண்ட பிறகு அவர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. இதுவரை ஒன்பது வருடங்கள் ஆக போகிறது என் தாயின் இறப்பு அவர்கள் அனைவரையும் பாதித்தது அதோடு அவர்கள் வீட்டிற்குள் என்னை அனுமதிக்கவில்லை. இது என் வாழ்வின் கசப்பான அனுபவங்கள் ஆகும்.

4. கசப்பான அனுபவங்களுக்கு இணையாக மகிழ்ச்சியான அனுபவங்களும் பல இருந்திருக்கும். உங்களுடைய அனுபவத்தில் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியான அனுபவம் என்றால் எது?

என்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியான அனுபவம் என்றால் நான் மாற்றுத்திறனாளி  குழந்தைகளுடன்  வேலை பார்த்துக் கொண்டிருப்பதுதான். அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) சார்பில் கல்வித்துறை மூலமாக ஒரு யூனியனுக்கு ஒரு பிஸியோதெரபிஸ்ட் என என்னை நியமித்தார்கள். மதுரை மாவட்டத்தில் மொத்தம் 15 யூனியன் உள்ளது. என்னை செல்லம்பட்டி யூனியனில் நியமித்தார்கள். செல்லம்பட்டி யூனியன் மொத்தம் 125 கிராமங்களை  உள்ளடக்கியது. இந்த 125 கிராமங்களில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவரும் என்னுடைய பொறுப்பில் இருந்தனர். இந்த குழந்தைகளுக்கு தேவையான அரசு சலுகைகள், திட்டங்கள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மாதாந்திர குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்த வேளையில், நான் வேலைக்குச் சேர்ந்த இரண்டரை வருடங்களில் 23 மாற்றுத் திறனாளி குழந்தைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தவழ்ந்து கொண்டிருந்த குழந்தைகள் நடக்க ஆரம்பித்தனர். வாய் பேச முடியாத குழந்தைகள் ‘அம்மா’, ‘அப்பா’ என பேசத்தொடங்கினர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

இந்தக் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மதுரை மாவட்டம் என்னை  ஒரு சிறந்த ‘சமூக சேவகர்’ என பாராட்டு சான்றிதழ் அளித்துள்ளது.

நான் ஒரு மருத்துவராக மருத்துவமனையில் வேலை பார்ப்பது ஒருபோதும் மகிழ்ச்சியை அளிக்காது. ஆனால் பல மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு ஒரு அம்மாவாக தினந்தோறும் பயணிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

5. நீங்கள் பார்க்கும் இந்த அரசு பணியில் சேருவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் என்னென்ன?

இந்த வேலை கல்வித்துறை மூலமாக நிரப்பினார்கள். Chief Education Officerக்கு கீழ எங்களோட வேலை. நான் முதலில் கோயம்புத்தூரில்இருந்ததால் அங்கேயே அப்ளை பண்ணிணேன் ஆனால் சீனியாரிட்டி வரிசையில் வாய்ப்பு மிக குறைவாக இருந்தது. அதன்பிறகு மதுரைக்கு அப்ளை பண்ணினேன் அங்கேயும் அதையேக் கூறினார்கள். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராய் அவர்களிடம் என்னுடைய பிரச்னையை விளக்கினேன்; அவர்  சென்னையில் உள்ள higher authority -யை சந்திக்குமாறு கூறினார். இதற்கு உதவியாக இருந்தவர் ப்ரியாபாபு. ப்ரியாபாபுவினுடைய வழிகாட்டுதல் எனக்கு உதவியாக அமைந்தது.

டெல்லியில் உள்ள MHRD தலைமை அதிகாரியை சந்திப்பதற்காக டெல்லி சென்றிருந்தேன், அப்பொழுது சென்னை State Project Director-ரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. SPD அலுவலகத்தில் interview முடித்து மாவட்ட ஆட்சியர் என்னோட சான்றிதழ் எல்லாவற்றையும் சரிபார்த்து என்னைப் பணியில் நியமித்தார்கள். என்னை பணியில் சேர்க்கும் பொழுது மாவட்ட ஆட்சியர்  சொன்னாங்க, ‘இதுவரைக்கும் நாங்க எந்தவொரு திருநங்கையையும் பணியில் அமர்த்தவில்லை. இருந்தாலும் உங்களோட studies மற்றும் careers ரொம்ப நல்லா இருக்கு. அதனால நான் உங்கள அப்பாய்ண்ட் பண்றேன்’, என்று கூறினார்கள்.

எனக்கு வேலை கிடைப்பதற்கு முழு ஆதரவு கொடுத்தவர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ்ராய் ஆவார். இந்த வேலையில் என்னோடு கூட இருந்த உயர் அதிகாரி ஒருவர் கூட நான் பணியில் சேரக்கூடாது என்பதற்காக பல இடையூறுகளைத் தந்தார். இவை எல்லாவற்றையும் தாண்டி செல்லம்பட்டி யூனியனில் வேலைக்கு சேர்ந்தேன். நான் வேலைக்கு சேர்ந்தபொழுது அங்கு வாழும் மக்களால் பல சிரமங்களுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளானேன்.

6. உங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் உங்களை எப்படி நடத்துகிறார்கள்?

எனக்கு அருமையான நல்ல சக நண்பர்களை தந்ததற்காக கடவுளுக்கு மிகப்பெரிய நன்றி என்று சொல்லுவேன். நான் மிக சுலபமாகச் சொல்ல வேண்டும் என்றால் யாருமே என்னை ஒதுக்கியது கிடையாது. “நீங்க என்கூட பேசமாட்டிங்களா?”, “நீங்க என் பக்கத்துல உட்கார மாட்டிங்களா?, “நீங்க என் கூட வெளில வர மாட்டிங்களா?” என்று ஏங்குபவர்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு நானும் சக உழியர்களோடு மரியாதையாக நடந்து கொள்கிறேன்.

என்னோடு நிறைய பெண்கள் வேலை பார்க்கிறார்கள்; அவர்களோடு மூன்று ஆண் ஆசிரியர்களும் வேலை பார்க்கிறார்கள். அவர்களும் என்னை அவர்களுடைய ஒரு குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர். என்னுடைய உயர் அதிகாரி லதா மேடம் என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு எனக்கு தேவையான சுதந்திரம் கொடுப்பாங்க. எந்தச் சூழ்நிலையில் எப்படி நடக்கவேண்டும் என அட்வைஸ் பண்ணுவாங்க. சக ஊழியர்கள் மட்டும் இல்லாமல், நான் வேலை பார்க்கும் கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் என்னோடு அன்பாக பழகுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நானும் அவர்களோடு அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்கிறேன்.

pc: transresource.blogspot.com

7.குழந்தைகளுக்கும் உங்களுக்குமான உறவு பள்ளியில் எப்படி இருக்கிறது?

நம் எல்லோருக்கும் தெரியும் சாதாரணமான குழந்தைக்கும் மாற்றுத் திறனாளி குழந்தைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. கால், கை மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடு என பல்வேறு மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர். இந்த மாற்றுத் திறனாளி குழந்தைகளோடு தினந்தோறும் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய யூனியனில் மொத்தம் 325 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர். நான் முதல் நாள் வேலைக்கு சேர்ந்தபொழுது எல்லா குழந்தைகளும் என்னை பார்த்து பயந்தனர். அடுத்த பத்து நாள்களுக்கு பிறகு அவர்கள் அனைவரும் என்னிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள். அவர்கள் என்னை பார்க்கும் சிரிப்புடன் கூடிய முகம் அவர்கள் மீதான அவர்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற உந்துதலை எனக்குத் தந்தது.

மற்ற யூனியனில் உள்ள குழந்தைகளைவிட என் யூனியனில் உள்ள குழந்தைகள் மிக சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். JK Fenner Company MD, General Manager எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் குழந்தைகளுக்குத் தேவையான furniture, fan, pouch மற்றும் uniform எல்லாம் வழங்கப்பட்டு சாதாரண குழந்தையைப் போல் நடத்தப்படுகின்றனர். பல்வேறு கிராமங்களில் பல மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒதுக்கப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகப்பெரிய பாரமாக எண்ணி அவர்களுடைய பெற்றோர்களே குழந்தைகளைக் கொலை செய்து, அதோடு அதை இயற்கையான மரணம் போல சித்தரிக்கின்றனர்.

இதனைத் தடுக்கும் விதமாக எல்லா யூனியனிலும் உள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் பெற்றோரை வரவழைத்து எப்படிக் குழந்தைகளைக் கையாளவேண்டும், எப்படி அவர்களிடம் அன்பாகப் பழகவேண்டும் என counseling கொடுத்து வருகிறேன். இதுவரை 20க்கும் ஏற்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைமுறை மாறி இருக்கிறது. என் யூனியன்ல இருக்கிற எல்லா குழந்தைகளின் மனதிலும் நான் ஒரு நெருக்கமான இடத்தைப் பிடித்து இருக்கிறேன் என்று என்னால் சொல்ல முடியும்.

8. விருப்பம் இருந்தால் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் நீங்கள் சொல்லலாம்?

என் குடும்பத்தைப் பற்றி நான் கண்டிப்பாக சொல்ல வேண்டும். என்னுடைய இந்த 27 வயதிற்குள்ளான என் வாழ்க்கையில் நிறைய அவார்ட்ஸ், நிறைய இன்டர்வியூஸ், நிறைய மேடைகள், நிறைய பாராட்டுகள் என என் வாழ்க்கையில் பரிபூரணமாகக் கிடைத்தாலும் என்னுடைய குடும்ப விஷயத்தில் மட்டும் எனக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை.

நான் வளர்ந்தது ஒரு கிராமம், எனக்கு சொந்த பந்தங்கள் அதிகம். அதோடு எல்லோருமே பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்தவர்கள். என்னுடைய வீட்டில் மொத்தம் எட்டுபேர். நான் கடைசிக் குழந்தை என்பதால் என் அம்மாவால் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டேன். நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய பெண்தன்மை எல்லோருக்கும் தெரிய வந்தது. என்னுடைய பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் என எல்லோருக்கும் என்னைப்பற்றித் தெரிந்து பல்வேறு வகையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.

என்னுள் பெண்மைத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பொட்டு வைப்பது, வளையல் போடுவது, நெய்ல் பாலிஷ் போடுவது என என்னை நானே மாற்றிக்கொண்டேன். இதனால் என்னுடைய அண்ணன்களின் பல விதமான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். ஒருமுறை ladies inner wear அணிந்து சட்டை போட்டதால், என்னுடைய தந்தை எனக்கு சூடு வைத்து இரவு முழுவதும் fan-ல் தலைகீழாகத் தொங்கவிட்டார். இப்படி இருக்கையில் பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு என்னை படிக்க வைக்க யாருக்கும் விருப்பமில்லை.

இந்த நேரத்தில் என்னுடைய அம்மா முழு ஆதரவாக இருந்து என்னை படிக்க வைத்தார். நான் கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜில் முதலாமாண்டு பிஸியோதெரபிஸ்ட் படித்து கொண்டிருந்தபோது என்னுடைய பெண்மை தன்மையை உணர்ந்து, மூத்த திருநங்கை சகோதரிகளின் ஆதரவோடு பெங்களூர் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

கல்லூரி முடித்து gold medal வாங்கி வீட்டிற்குத் திரும்பிச் சென்றபொழுது, நான் ஒரு முழுமையான திருநங்கையாக மாறி இருப்பதை அனைவரும் அறிந்து கொண்டனர். இதனால் என் அப்பா என் அம்மாவை கொடுமை செய்தார். மனமுடைந்த என்னுடைய அம்மா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். என் அம்மாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூட என்னை அனுமதிக்கவில்லை. என் குடும்பத்தில் உள்ளவர்கள், ‘நீ வந்தால் உன்னை வெட்டி விடுவோம்’, என்று கூறினார்கள். என் அம்மாவினுடைய மறைவுக்குப் பிறகு இத்தனை வருடங்கள் ஆகியும் என்னை வீட்டுற்குள் அனுமதிக்கவில்லை. என்னுடைய கடைசி அக்கா மட்டும் என்னுடன் தொடர்பில் உள்ளார்.

9. நீங்கள் இந்த அளவிற்கு ஒரு எடுத்துக்காட்டான திருநங்கையாக இருப்பதற்கு உங்களுடைய முன்மாதிரி யார் என்று தெரிந்து கொள்ளலாமா?

எங்களுடைய திருநங்கை சமுதாயத்துல இருக்கிற மூத்த திருநங்கை சகோதரிகள்தான் என்னுடைய ரோல் மாடல். நான் இந்த அளவுக்கு சாதித்து இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னுடைய மூத்த திருநங்கை சகோதரிகள்தான். Education & employment  திருநங்கைகளுக்கு மிக முக்கியம் .இவை இரண்டும் கிடைக்க வேண்டும் என்றால் மிக முக்கிய பலமாக இருப்பது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த திருநங்கைகள். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் காரணம் என்னுடைய மூத்த திருநங்கைகள்தான்.

என்னுடைய மூத்தத் திருநங்கை ருத்ரா அம்மா எனக்கு மனரீதியாக மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார். படித்து நல்ல வேலைக்குப் போகவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதனால ருத்ரா அம்மா, முனியம்மா நாயக் இவங்கதான் ‘உனக்கு நல்ல திறமை இருக்கு, நீ படித்து கண்டிப்பா வேலைக்கு போகணும்’ அப்படினு சொல்லி என்னை ஊக்குவித்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் இல்லை என்றால் கண்டிப்பாக என்னால் சாதித்து இருக்க முடியாது. என்னுடைய மூத்த திருநங்கை சகோதரிகளுக்கு போதிய கல்வியறிவு கிடைக்காததால் மற்ற திருநங்கைகள் சமூகத்தில் ஓர் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என அனைவருக்கும் மிகப்பெரிய உந்துதலாக இருந்தனர்.

என்னுடைய குடும்பம் என்னை கைவிட்ட நிலையில் எனக்கு மனரீதியாக மிகப்பெரிய ஆறுதலாக இருந்தார்கள். இது எல்லாவற்றையும் தாண்டி மதுரையில் எந்த விஷயங்களை எப்படி செய்ய வேண்டும், எவை எல்லாம் செய்ய வேண்டும், எவை எல்லாம் செய்ய கூடாது என என்னுடைய எல்லா செயல்களுக்கும் ஊக்கம் கொடுத்தவர் ப்ரியாபாபு. நிறைய அனுபவங்களை ப்ரியாபாபுவிடம் இருந்து கற்று கொண்டேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வோரு அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு சென்றவர் ப்ரியாபாபு.

12. திருநங்கைகள் தவிர்த்து மற்ற சமுதாயத்தினருக்கு திருநங்கை சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

நன்றி: DTNext

நான் பொதுச்சமுதாயத்திற்கு சொல்ல நினைக்கிற செய்தி என்னவென்றால் திருநங்கைகளாக இருக்கட்டும், திருநம்பியாக இருக்கட்டும் அவர்களுடைய உணர்வுகளுக்காக அவர்கள் மாறிக்கொள்கிறார்கள். அவர்களுடைய உணர்வுகளை  பொது சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு ஆணாகப் பிறந்தேன்; ஆனால் என்னுடைய பெண்மை தன்மையை உணர்ந்து என்னை ஒரு பெண்ணாக மாற்றிக்கொண்டேன்.

என் குடும்பத்தில் உள்ள யாரும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை உருவாக்கியது என் பெற்றோராக இருந்ததால், அவர்களால் என்னை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் அனைத்துப் பெற்றோர்களிடமும் பொதுசமுதாயத்தினரிடம் கேட்டுக் கொள்வது ஆண் பெண் இருவரும் ஒரு மெச்சூரிட்டி ஸ்டேஜ் வந்த பிறகு gender identify பண்ணுவதற்கு அவர்களுக்கு உரிமை கொடுக்க வேண்டும்.

அவ்வாறு உரிமை கொடுக்கப்பட்டு திருநங்கையோ திருநம்பியோ என முடிவு செய்த பிறகு அவர்களை வீட்டிலிருந்து அனுப்பாமல் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யவேண்டும் அல்லது அவர்களுக்கு மறைமுகமான ஒரு ஆதரவாக இருக்கவேண்டும். இப்படிச் செய்யும்போது எந்த ஒரு திருநங்கையும் பிச்சை எடுப்பதற்கோ பாலியல் தொழில் செய்வதற்கோ செல்லமாட்டார்கள். திருநங்கைகள் திருநம்பிகள் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஏற்றவாறு அவர்களை மாற்றிக்கொள்கிறார்கள், எனவே அவர்களுடைய உணர்வுகளுக்கு பொதுச்சமுதாயம் மதிப்பு கொடுக்கவேண்டும்.

13. தற்போது நீங்கள் அரசுப்பணியாளர் என்பதால் உங்களுக்கு அரசு செய்யும் சலுகைகள் என்னென்ன? எந்த மாதிரியான சலுகைகளை நீங்கள் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

என்னை பணியில் நியமிக்கும்பொழுது தற்கால பணி மருத்துவராகவும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர பணியாளராக ஆக்குவதாகக் கூறி வேலையில் நியமித்தனர். மூன்று ஆண்டுகள் முடிந்த நிலையில் Medical Requirement Board மூலமாக அரசு மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட் நியமிப்பதற்காகத் தேர்வு வைத்தார்கள். 77 பேர் மட்டுமே தேவையான இந்த பணிக்கு 5000 பேர் தேர்வு எழுதினர், அதில் 1500க்கும் மேற்ப்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். நானும் அந்த தேர்வை கடந்த நவம்பரில் எழுதி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். இதை வைத்து என்னுடைய பணியை நிரந்தரமாக்கக் கூறி தலைமை செயலகம், பாராளுமன்றம் வரை சென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

என்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களும் பணி நிரந்தரமாக்கப் பட்டுள்ளனர். ஆனால் எனக்கு எல்லா தகுதியும் இருந்தாலும் என்னைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. இதுவரை அரசாங்கமோ மற்ற யாருமோ சரி என்னுடைய பணியை நிரந்தரமாக்க முயற்சி எடுக்கவில்லை. இந்தப் பணியில் எனக்குப் போதுமான அளவு பணம் கிடைத்தாலும், நானும் பணியை சரியாக செய்து வந்தாலும் என்னுடைய பணி நிரந்தரமானால் எனக்கு சந்தோஷமாக இருப்பதோடு மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என ஒரு ஸ்கூல் கட்டி அவர்களுக்கு free service கொடுத்து அவர்கள் வாழ்க்கையை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காக இப்போது Phd படித்து கொண்டிருக்கிறேன். அரசாங்கம் என்னுடைய பணியை நிரந்தரமாக்கும் என்று நம்புகிறேன்.

14. நீங்கள் திருநங்கை ஆகவே திருநங்கை சமுதாயத்திற்கு கூறவேண்டிய வாழ்த்துச் செய்தி ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்

நான் ஒரு திருநங்கையாக திருநங்கை சமுதாயத்திற்கு சொல்ல விரும்புவது நாம் யாரும் எந்த ஒரு பாவமும் பண்ணல. திருநங்கைகள் அனைவரும் இந்த ஜென்மத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் திருநங்கையாகவும் இருப்பதால் அடுத்த ஜென்மம் மனிதப் பிறவியாக இருக்காது என சிலர் கருதுகின்றனர். எது எப்படி இருந்தாலும், எல்லா திருநங்கைகளுக்கும் உள்ளே ஒரு அற்புதமான திறமை இருக்கிறது. அழகாக நடனம் புரிவது, பாட்டு பாடுவது, பீயூட்டிசியன் ஒர்க் மற்றும் கிராமங்களில் தோட்டக்கலை அமைப்பது என ஒவ்வொரு துறையிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

எத்தனையோ படித்த திருநங்கைகள் இன்னும் பிச்சை எடுக்கும் தொழிலிலும் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு திருநங்கைக்கும் ஒரு சக்தி ஒரு திறமை இருக்கிறது. அதை நாம் வெளிக்கொண்டு வரும்போதுதான் இந்த உலகத்திற்கு ஒரு புதிய நட்சத்திரமாகத் திகழ்வோம். நான் அனைத்து திருநங்கை தோழியர்களிடம் கேட்டுக் கொள்வது தன்னுடைய திறமைகளை வெளிக்கொண்டுவந்து இந்த சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

15. இந்த இன்டர்வியூ அல்லது அணியம் பற்றி நீங்கள் கூற விரும்புவது என்ன?

இந்த அழகான ஒரு தருணத்திற்காக அணியம் பவுண்டேஷன்க்கு  என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள். அணியமும் மற்றும் அணியம் மூலம் இயங்குகிற பால் மணம் மின்னிதழ் பல கட்ட முயற்சிகளை  மேற்கொண்டு வருகின்றது. இதேபோல் இன்னும் தொடர்ந்து வளர பால் மணம் மின்னிதழுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி.

***

சந்திப்பு- யு.ம.தேவராஜ்

உயிர் அறிவியல் மாணவர்.

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு, படம் நன்றி:

அணியம் அறக்கட்டளை.