மனிதனைப் படிப்போம் – 2

மனிதன் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி பின் உலகம் முழுதும் இடம் பெயர்ந்து வாழ்கிறான் என்று அனைவரும் அறிவர். பரிணாம வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து இன்றைய நவீன தொழில்நுட்ப காலம் வரை வந்தடைய மனிதன் எடுத்துக்கொண்ட காலமானது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகள்.[1]

இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் மனிதனிடம் மாறாத குணங்களில் ஒன்று தேடுதல். முதலில் உணவுக்காக தேடி அலைந்தான்; பின் நல்ல வாழ்விடம், நல்ல நீர்நிலை, நல்ல விளைநிலம் என்று அவன் சிறப்புற வாழ தேவையான அனைத்தையும் தேடி அலைந்தான்.

அவனுடைய தேடுதல் பயணம் முழுவதும் அவன் பயன்படுத்திய பொருள்களுடன் சேர்த்து அவனுடைய நினைவுகளையும் மூட்டை கட்டிக்கொண்டு செல்கிறான்.

இக்கட்டுரை மூலம் மனித நினைவுகளின் எச்சங்களில் ஒன்றான இடப்பெயர்களை அடிப்படையாக வைத்து அவனுடைய பயணப்பாதையை ஆய்வாளர்கள் எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதை நாம் அறியலாம்.

பொதுவாக அறியப்படாத நாகரிகத்தை அம்மக்கள் பேசியமொழியில் இருந்து துல்லியமாக அடையாளம் காணமுடியும். ஏனெனில், மொழி ஒரு நாகரிக கலாச்சாரத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். ஆனால், சிந்து சமவெளி பண்பாட்டின் மொழியும், இந்த மொழியை பேசிய மக்கள் சென்ற பாதையும் இன்னும் துல்லியமாக கண்டறியப்படவில்லை.

பண்டைய எகிப்திய நாகரிகத்தின் ரொசெட்டா கல் (ஒரு செய்தி இரு மொழியில் பொறிக்கப்பட்ட கல்) போன்ற இருமொழி ஆதாரங்கள் இல்லாததால் சிந்துவெளிப் பண்பாட்டின் முத்திரைகளின் குறியீடுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.[2]

எனவே, சிந்துவெளிப் பண்பாட்டின் பிற கலாச்சார மற்றும் தொல்பொருள் சான்றுகளை விளக்குவதன் மூலம் மட்டுமே அந்த நாகரிகத்தின் மக்களைக் கண்டறிய முடியும். உலகெங்கிலும் உள்ள பண்டைய மனிதர்களின் இடப்பெயர்வைக் கண்டுபிடிப்பதில் மரபணு ஆய்வுகளின் பரிணாமம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோல், இடப்பெயர்களை ஆராய்வதன் மூலம், சிந்துவெளிப் பண்பாட்டின் மூதாதையர்கள், அந்த நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு எங்கு இடம்பெயர்ந்தார்கள் என்பதைக் கண்டறிய முடியும் என்று இந்தியவியல் ஆய்வாளர் திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய ஆய்வுப் புத்தகமான “Journey of a Civilization: Indus to Vaigai” நூலில் குறிப்பிடுகிறார். இந்தத் தரவுகள் மூலம், இடப்பெயர் ஆய்வுகளின் முக்கியத்துவத்தை நம்மால் அறியமுடிகிறது.

PC: harappa.com

இடப்பெயருக்கு இரண்டு தன்மைகள் உண்டு; ஒன்று நகரும் தன்மை; மற்றொன்று தொடர்ச்சி. இவ்விரு தன்மைகளும், இடப்பெயர்கள் மனித நினைவுகளுக்குள் ஊறிப்போனவை என்பதை உணர்த்துகிறது.

மனிதன் நடந்த இடத்திற்கெல்லாம் இடப்பெயர்களும் நகர்ந்தன. அதாவது, மனிதர்கள் இடம் பெயர்ந்தபோது, அவர்கள் தங்கள் இடப் பெயர்களை எடுத்துச் சென்றனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[3]

உதாரணத்திற்கு, ஐரோப்பிய நாடுகளின் இடப்பெயர்களை அமெரிக்கா முழுவதும் உள்ள சின்ன கிராமங்களில் இருந்து பெரிய நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் எளிதில் காணலாம். குறிப்பாக, அமெரிக்காவின் அர்கான்சாஸ் மாகாணத்தில், ‘இங்கிலாந்து’ என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது. ஆனால், இங்கிலாந்து என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு நாடாக மட்டுமே பொதுவில் பார்க்கப்படுகிறது. இது போன்ற பல உதாரணங்களை உலகம் முழுவதும் காணலாம். ஏனெனில், இந்த பெயர்கள் ஐரோப்பிய காலனிய ஆதிக்கத்தினால் உலகம் முழுவதும் கொண்டுச்செல்லப்பட்டன. இதன் மூலம் இடப்பெயர்களுக்கு நகரும் தன்மையும் தொடர்ச்சியும் உள்ளது என்று நிரூபணமாகிறது. இது, toponymy (இடப்பெயர்கள்), anthroponyms (மக்கள் பெயர்கள்) மற்றும் ethnonyms (பழங்குடிகள் மற்றும் குலங்களின் பெயர்கள்) ஆகியவற்றுடன் சேர்த்து ‘ஓனோமாஸ்டிக்ஸ்’ (onomastics) எனும் அனைத்து வகையான இயற்பெயர்களின் பரந்த துறையின்பால் நம்மை அழைத்துச் செல்கிறது.

பொதுவாக இடப்பெயர் மாற்றம் மூன்று வழிகளில் செயல்படுத்தப்படுகிறது.

முதல் வழி:

மக்கள் இடம்பெயரும்போது, பழைய இடத்தின் அதே பெயரையோ அல்லது முன்னொட்டு சேர்க்கப்பட்ட பழைய பெயரையோ, புதிய இடத்திற்கு மாற்றுவார்கள்.

இரண்டாவது வழி:

மக்கள் புலம்பெயர்ந்த பிறகு, இடப்பெயர்களை ஒருவரின் பெயராகவோ அல்லது குடும்பப்பெயராகவோ மாற்றுவார்கள்.

மூன்றாவது வழி:

மக்கள் இடம்பெயர்ந்த பிறகு, அந்த மக்களின் இனத்தையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் குறிக்க ஒரு மொழியின் பெயரைப் பயன்படுத்துவார்கள். இம்மூன்று வழிமுறைகளையும் புரிந்து கொள்வதன் மூலம், இடப்பெயர் ஆய்வுகள் அவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று நாம் அறியலாம்.

இந்தியவியல் ஆய்வாளரான திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள், இது குறித்து எவ்வாறு விளக்குகிறார் என்று விரிவாக பார்க்கலாம்.

முதல் வழி:

ஐரோப்பியர்கள் மட்டும் அல்லாது, ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வரப்பட்டபோது, அவர்களும் தங்கள் இடப்பெயர்களுடன் வந்தனர். இதன் விளைவாக, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லிட்டில் எத்தியோப்பியா, கணிசமான எத்தியோப்பிய மக்களைக் கொண்டுள்ளது. சில இடங்களில், நியூயார்க்கில் இருப்பது போல முன்னொட்டு (நியூ) சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, “நியூயார்க்”கிற்குப் பெயர் வைத்த மக்கள் அவர்கள் அதற்கு முன்னால் வாழ்ந்த இடமான “யோர்க்”கை நினைவுகூரும் வகையில் அதே சமயம் இது புதிதாக வந்தடைந்த நிலம் என்றும் அடையாளப் படுத்துவதற்காக, “நியூ” என்ற முன்னொட்டை சேர்த்தனர்.

PC: TechnoCrazed

இதே போன்ற உதாரணம் இந்தியாவிலும் உள்ளது. இந்தியாவின் தலைநகரமான “புது தில்லி”யும் “நியூயார்க்” உருவான அடிப்படையிலேதான் பெயரிடப்பட்டது. அதேபோல், ஸ்ரீலங்காவின் யாழ்ப்பாணம் நகரில் உள்ள திருநெல்வேலி என்ற இடப்பெயர் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியின் பெயரால் அழைக்கப்பட்டிருக்கலாம். இந்த சான்றுகள் மூலம், மக்கள் இடம்பெயரும்போது பழைய இடத்தின் அதே பெயரை புதிய இடத்திற்கு சூட்டுவார்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளமுடிகிறது.

இரண்டாம் வழி:

ஒரு குடும்பம் அல்லது இனக்குழு உருவான பகுதியின் பெயரை குடும்பப்பெயர்களுக்குள் உள்ளடக்குவது என்பது உலகின் பல பகுதிகளில் மிகவும் பொதுவானது.

பல நிகழ்வுகளில், இனக்குழுவின் பிறப்பிடமான இடத்தின் பெயர் (அல்லது முந்தைய குடியேற்றத்தின் பெயர்), வேறு புவியியல் இடத்தில் உள்ள நபர் அல்லது குடும்பப் பெயர்களுக்கு சரியாக (அல்லது கிட்டத்தட்ட) மாற்றப்படுகிறது. உதாரணத்திற்கு பார்சி குடியேற்றத்தைப் பார்க்கும்போது, ஈரானில் உள்ள டாடா, நாரிமன், ஃபிர்தௌசி, நௌருசி, ருஸ்தம், போர்ஜ், பெரம், டேன்ஸ்ஃபான், டெலேவரி, பலஞ்ச் போன்ற இடப்பெயர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் டாடா, நாரிமன், ஃபிர்தௌசி, நௌரோஜி, ருஸ்தம்ஜி, போர்ஜி, பெரம்ஜி, தனேஷ்வர், டெலாவர், பழஞ்சி என தனிப்பெயர்களாகத் தக்கவைக்கப்படுகின்றன. இந்த சான்றுகள் மூலம், மக்கள் புலம்பெயர்ந்த பிறகு, இடப்பெயர்களை ஒருவரின் பெயராகவோ அல்லது குடும்பப்பெயராகவோ மாற்றுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

மூன்றாம் வழி:

பொதுவாக, ஒரு மொழியின் பெயர் அந்த மொழியைப் பேசுபவர்களின் நிலப்பரப்பின் பெயரிலிருந்து வேறுபட்டதாக இருக்கும். உதாரணத்திற்கு, ஆங்கிலம், தமிழ், ரஷ்யன் ஆகிய மொழிகளை பேசும் மக்களின் நிலப்பரப்பை குறிக்கும்போது, இங்கிலாந்து, தமிழ்நாடு, ரஷ்யா என்று அந்த நிலத்தில் பேசப்படும் மொழியின் பெயரிலிருந்து சிறிது வேறுபட்டதாக இருக்கின்றது. ஆனால், சில இடங்களில் மொழி, மக்கள் மற்றும் பிரதேசம் ஆகிய மூன்றுக்குமே ஒரே பெயர் சூட்டப்படுகிறது (எடுத்துக்காட்டு: பிரஹுயி – Brahui).

flynote.com

பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் எனும் மாகாணத்தில் வசிக்கின்ற மக்களில் சிலர், பிரஹுயி என்ற மொழியைப் பேசுவதோடு, தங்களை பிரஹுயி இனத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த சான்றுகள் மூலம், இடம்பெயர்ந்த பிறகு, அந்த மக்களின் இனத்தையும் அவர்கள் வாழும் பிரதேசத்தையும் குறிக்க ஒரு மொழியின் பெயரைப் பயன்படுத்துவார்கள் என்பதைப் புரிந்துக்கொள்ளமுடிகிறது.

இதுபோன்ற வழிமுறைகளைப் போலவே, ஒப்பீட்டு முறை என்பதும் இடப்பெயர்களைப் படிக்க உதவும் சக்திவாய்ந்த முறைகளில் ஒன்றாகும். இரண்டு புவியியல் பகுதிகளின் இடப்பெயர்களை ஒப்பிடும்போது, மக்கள்தொகை மாற்றங்கள் மற்றும் கலாச்சாரங்களின் இடம்பெயர்வுகள் தெளிவாகின்றன. இதுபோன்ற ஒப்பீட்டு முறைகள் இடப்பெயர் ஆய்வுகளில் பல வழிகளில் உதவுகிறது.

PC: tnarchsites.blogspot.com

இதேபோல், சிந்து சமவெளியில் அடையாளம் காணப்பட்ட இடப்பெயர்களின் குறிப்பிடத்தக்க தொகுப்பு, கொற்கை-வஞ்சி-தொண்டி (KVT) வளாகம் எனப்படும் ‘இடப்பெயர் வளாகமாக’ ஆர். பாலகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. அதாவது, இன்றைய தமிழக நிலப்பரப்பில் உள்ள கொற்கை-வஞ்சி-தொண்டி போன்ற இடப்பெயர்கள், கொத்துக் கொத்தாக சிந்து வெளி பகுதியில் கண்டறியப்பட்டன. இந்த தரவுகள் மூலம், KVT வளாகத்தின் பின்னணி ஆய்வு செய்யப்பட்டு, பண்டைய தமிழ் நாகரிகம் தோன்றியதில் இருந்து தொடர்ச்சியாக புலம்பெயர்த்துள்ளனர் என்று நிறுவப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், தமிழ் மொழியின் நிலம் சார்ந்த எல்லை, தமிழ் நாடு தாண்டியும் பறந்து விரிந்திருந்தது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இடப்பெயர் ஆய்வுகள், மனிதனின் பழைய பயணப்பாதையை அறிவதற்காக மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அவை, சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்த கருத்துக்களுடன் குடியேற்றங்களின் தீவிரம், மொழியியல் எல்லைகள், தோற்றம் மற்றும் உறவுகள் பற்றிய துல்லியமான முடிவுகளை வழங்குகின்றன. சமகாலத்தில், புலம்பெயர்ந்தோர் எங்கு சென்றாலும் தங்களின் கலாச்சாரம், மொழி, இடப்பெயர் மற்றும் பிற இனம் சார்ந்த அம்சங்கள் போன்றவற்றை தங்களுடன் எடுத்துச்செல்வார்கள். பொதுவாக புலம்பெயர்ந்தோர், தங்கள் இனத்தின் வேர்களை அறிவதற்காக அவர்களின் கலாச்சாரம் மற்றும் மொழி குறித்து செய்யப்படும் ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவார்கள்.

அதனால், இடப்பெயர்வு ஆய்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இடப்பெயர்கள் மனித கலாச்சார பாரம்பரியத்தின் மிகப் பழமையான அம்சத்தை குறிக்கின்றன. ஏனெனில், அவை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன.

சமீபத்தில், இந்த கருத்துக்களை தமிழ்நாடு அரசு உணர்ந்ததாகத் தெரிகிறது. [4]ஏனெனில், தமிழ் மொழிக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையே உள்ள உறவை நிலைநாட்டும் நோக்கில், சொற்பிறப்பியல் அகராதியைத் தயாரிக்க, தமிழ் சொற்பிறப்பியல் வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்படும் என்று 2022-23 தமிழ் நாடு மாநில பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செயல்பாடு, இடப்பெயர் ஆய்வுகளுக்கு நேரடியாக தொடர்புடையது இல்லை என்றாலும் சொற்பிறப்பியல் ஆய்வுகளில் தொடங்கி படிப்படியாக இடப்பெயர் ஆய்வுகளுக்கும் கவனம் செலுத்தப்படும் என்று நம்புகிறேன்.


தொடர்புச் சுட்டிகள்:

[1] https://www.newscientist.com/article/dn9989-timeline-human-evolution/

[2] R. Balakrishnan, Journey of a civilization: Indus to Vaigai

[3] https://www.sciencedirect.com/science/article/pii/S0341816221007700?casa_token=WxKwx5cvw90AAAAA:rzLsiwmF_jnhSArL0bELQRELYSMTd2Yq1JERbHb-5LwBHru1e-RmW4HbQngSJl3kbwhz7SmOVpM

[4] https://www.thehindu.com/news/national/tamil-nadu/tn-budget-panel-to-prepare-etymological-dictionary/article65237158.ece

தொடரின் முந்தைய கட்டுரையை வாசிக்க:

படைப்பு:

தீபிகா தீனதயாளன் மேகலா

தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ