பால்புதுமையினர் அறிமுகக் கட்டுரைகள்- 3

அணியம் அறக்கட்டளையால் பால்புதுமை மக்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பால்மணம் மின்னிதழில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற‌ திருநங்கை மாயூராவுடனான நேர்காணல் இங்கு மீள் பதிவாக வெளியாகிறது. பால்மணம் மின்னிதழில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க, பால்மணம் இணையதளத்தைப் பார்க்கவும்.

கண்ணோட்டம்….

ஒவ்வொருவர் பார்வையும் வேறுபாடானது. ரோஜாவில் முள்ளும், ஊமத்தம்பூவில் நறுமணமும் இல்லாமல் இல்லை. பார்க்கும் பார்வையில் இரண்டும் ஒன்றே.  விழுந்துவிட்டோமென எழாமல் இருப்பவர்களும் உண்டு. அதையும் உடைத்து எறிபவர்களும், மீண்டு எழுந்து ஓடி ஜெயிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவரை, உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அவருடனான தருணங்கள் உங்களுக்காக…

உங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.                                                        

என்னுடைய பெயர் பாரா மயூரா, நான் இன்ஜினியரிங் கோல்டு மெடலிஸ்ட், நான் SPI Edge இல் Acquisition managerஆகப் பணியாற்றி  வருகிறேன், மேலும் மற்ற திருநங்கைகள் அனைவருக்கும் என்னுடைய நண்பர்கள் மூலமும் எனக்குத் தெரிந்த நிறுவனங்கள் மூலமும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன். இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து அலுவலகங்களிலும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் இயல்பாக வேலை பார்க்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. நான் தனியாகவே வாழ்கிறேன்.

பெற்றோரின் அரவணைப்பு இருந்தபோதிலும், நான் நண்பர்களுடன்  தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மேலும் நான் ஒரு பரதநாட்டிய நடனக்கலைஞர். மதர் தாரா ஃபேஷன் அகாடமி என்ற நிறுவனத்தின் மூலம் திருநங்கைகளுக்கு அழகு மற்றும் மற்ற திறமைகளை ஊக்குவித்து அவர்களை தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வைத்து வெற்றி பெறத்தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன். இந்த  நிறுவனத்தின் இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறேன்.

உங்களுடைய குடும்ப சூழல் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்ததா?

நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆண்கள் பள்ளியில் தான் படித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை நான் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவளாக இருந்தேன், ஆசிரியர்களும் என் நடனத்தை பார்த்து ஊக்குவித்தார்கள். ஆனால் ஆறாம் வகுப்பிற்கு மேல் செல்லும் போது அனைவரும் என்னுடைய நடனத்தைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தார்கள். நான் அந்த வயதில் வசித்தது ராயபுரம் என்ற பகுதியில் , அப்பகுதியில் நடுத்தர குடும்பங்கள் வசித்து வந்தனர். அந்தப் பகுதி நண்பர்கள் என்னுடைய ஒத்த வயதுடைய நண்பர்கள்.

முன்னே விட்டு பின்னே பேசுவது கேலி செய்வது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர்.  அந்த தருணத்தில் தான் அதிகமாக கேலிகளுக்கும் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கும் உள்ளாக நேர்ந்தது. அப்போது ஒன்பதாம் வகுப்பு கடைசி தருணம், நாம் அதிகமாக பெண் தன்மையுடன் இருப்பதால் தான் இவர்கள் நம்மை கேலி செய்கிறார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். பிறகுதான் சில மூத்த திருநங்கைகளுடன் பழகும்வாய்ப்பு கிடைத்தது, அப்போது நான் சிறு பையனாக இருந்ததால்,  அவர்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள சிறிது தயக்கம் காட்டினர். இருந்தபோதிலும் அவர்கள் கொடுத்த புரிதலின் அடிப்படையிலேயே திருநங்கைகள் பற்றி கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய நேர்ந்தது.

மேலும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அதிகமாக திருநங்கைகளுடன் எனக்கு பழகும் வாய்ப்பு இருந்தது. அதன்பின்தான் என்னை நான் ஒரு முழு பெண்ணாகவே உணர்ந்தேன். நான் விரும்பிய பெண் போல அவ்வப்போது நடந்துகொண்டதை என் அப்பா பார்க்க நேர்ந்தால் வீட்டில் மிகப்பெரிய சண்டை ஏற்படும். அந்தத் தருணத்தில்தான் நான் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன், அதீதமான மன உளைச்சல் மற்றும் சில காரணங்களால் நான் பன்னிரெண்டாம் வகுப்பில் கணிதப் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் அப்பாடத்தை எழுதித் தேர்ச்சி பெற்றேன்.

கல்லூரியில்  சேர்வதற்கான முயற்சியைமேற்கொண்டேன். கல்லூரிகளுக்கும் என்னை ஒரு திருநங்கையாகவே அடையாளப்படுத்திக் கொண்டு ஏறி இறங்கினேன்.  எனக்கு எந்தக் கல்லூரியும் இடம் தரவில்லை. படித்தே தீர வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. அதன்படி என்னுடைய ஆண் பெயரிலேயே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து என் படிப்பைத் தொடர்ந்தேன். படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கும் தருவாயில் எனக்கு மாணவர்கள் மத்தியில் சிறிது இடையூறு  ஏற்பட்டதன் விளைவாக, கல்லூரி நிர்வாகம் என்னை அழைத்து கேள்விக் கணைகளால் தாக்கியது. அப்போது அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நான் சொன்ன ஒரே பதில், ஆம் நான் திருநங்கை என்பது தான்.

அதன்படி கல்லூரி நிர்வாகம் எனக்கு ஏராளமான அறிவுரைகளை வழங்கியது. ஆனால் என்னுடைய ஒரே இலக்கு படித்த, வேலைக்கு செல்லக்கூடிய ஒரு திருநங்கையாகத்தான் கல்லூரியை விட்டு வெளியே வர வேண்டும் என்பதாகவே இருந்தது. அதனால் சில விதிகளுக்குட்பட்டு கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தேன். கல்வியை முடித்த ஆண்டில் என்னுடைய பாலின மாற்று அறுவை சிகிச்சையும் செய்துமுடித்தேன்.

நான் பதினொன்றாம் வகுப்பில் இருந்து கற்க ஆரம்பித்த என்னுடைய நடனத்தை மெருகேற்றிக்கொண்டே இருந்தேன்.என்னுடைய நடன ஆசிரியர் நிச்சயமாக ஒரு திருநங்கையாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி எனக்கு குருவாக திருநங்கை பொன்னி அவர்கள் அமைந்தார்கள். அவர்களே என்னை  மெருகேற்றக் காரணமாய் அமைந்தவர். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் அவர்களிடம் நான் நடனம் கற்று வருகிறேன்.

மயூரா, நன்றி: பால்மணம்

முதல் திருநங்கை கோல்டுமெடலிஸ்ட் என்ற சாதனையை பெற்ற பயணம் எப்படிப்பட்டதாக இருந்தது?

எல்லாவற்றிலும் தடங்கல் இருக்கத்தான் செய்யும். ஆம் என்னுடைய படிப்புக்கும் பலவாறாக தடங்கல் ஏற்பட்டது. சக மாணவர்களின் துன்புறுத்தல்,  பெற்றோர்களின் அரவணைப்பின்மை, அதையும் மீறி ஒரு திருநங்கையாக, அதுவும் படித்த திருநங்கையாக வெளியே வரும்போது வாய்ப்புகள் அந்த அளவிற்கு கிடைப்பதில்லை.

என்னுடைய  திறமை மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டு இருக்க வேண்டும் என்பதற்காக வெறித்தனமாகப் படித்தேன். மற்றவர்களெல்லாம் 4 மணி நேரம் படித்தால் நான் எட்டு மணி நேரம் படித்தேன்.

மற்றவருக்கு நிகராக இல்லை,  அவர்களைவிட எந்த வகையிலும் நான் குறைந்தவளல்ல என்பதற்காகவே வெறித்தனமாகப் படித்தேன். பொறியியல் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்ற முதல் திருநங்கை மாணவி நான் என்று இறுதியில்தான் எனக்குத் தெரியவந்தது. அதற்கு என் தோழி முக்கிய காரணம் என்று சொல்வேன்.

தங்களுடைய முன்மாதிரி (role model) அல்லது ஊக்கம் கொடுப்பவர்களாக எவரேனும் உள்ளனரா?

எனக்கு ரோல் மாடல் என்று சொல்லுகிற மாதிரி யாரும் கிடையாது. இருந்தாலும் தூண்டுதலாக நிறைய பேர் இருக்காங்க. பொன்னி, அஞ்சலி, செல்வி, ஓல்கா, கல்கி. இவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் சாதனை படைத்தவர்கள். அவர்கள் திறமையைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நானே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்றுதான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் தங்களுக்கு எந்த வகையில் அவை பயனுள்ளதாக உள்ளது?

சூழல் சார்ந்து என்னுடைய நண்பர்கள், தோழிகள்,  அண்டை வீட்டார்கள் அனைவருக்கும் நான் வேலைக்கு செல்கிறேன் என்று தெரியும். அதைத் தாண்டி என்னை இந்த உலகத்திற்கு தெரியப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும். என்னுடைய இருப்பை இவ்வுலகத்திற்கு காண்பிக்க வேண்டும் என்பதற்காகவே அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவிட்டு என்னுடைய பதிவுகளை செய்துவருகிறேன். அசமூக வலைதளங்கள் மூலமாக எனக்கு நிறைய தொடர்புகளும் கிடைத்தது. தொடர்புகள் மூலம் என்னை மெருகேற்றிக் கொள்ளவும், சமூக வலைதளம் எனக்கு ஊன்று கோலாக உள்ளது.

நீங்கள் இயக்குனராகப் பணிபுரியும் MTFA பற்றிக் கூறுங்கள்.

Mother Thara fashion Academy என்பது இறந்த திருநங்கை தாரா அவர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிறுவனர் திருநங்கை ரகசிய ஆயிஷா, நான் இந்நிறுவனத்தின் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறேன். இந்த நிறுவனத்தின் முக்கிய பணி அழகுத் துறையில் திருநங்கைகளுக்கான வாய்ப்பைப் பெறுதலே ஆகும். இந்நிறுவனம் தேசிய அளவில் அழகுப் போட்டியில் பங்கேற்கும் திருநங்கைகளுக்கு உதவவும், அழகுக்கலை சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்கும் செயல்பட்டு வருகிறது. திருநங்கைகளால் தொடங்கப்பட்டு, திருநங்கைகளுக்காகவே செயல்பட்டு தன்னுடைய பணியை இந்நிறுவனம் செவ்வனே செய்து வருகிறது.

தங்களுடைய கருத்தரங்குகள் பற்றிக் கூற முடியுமா?

கருத்தரங்குகளுக்கு செல்லும்போதெல்லாம் எனக்கு மிகப்பெரிய படிப்பினையை வருபவர்கள் தருகிறார்கள். நானும் கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்குத் தருகிறேன். நிறைய கேள்விகள் பாலினம் சார்ந்து கேட்கிறார்கள். அவ்விடத்தில் நான் தனிநபராக என்னைப் பிரதிபலிக்காமல், என் ஒட்டு மொத்த திருநங்கை சமுதாயத்தைப் பிரதிபலித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.

மேலும் அவர்களிடம் வெறும் வாய் சொல்லாகவே உங்களுடைய செயல்பாடு இருக்கக்கூடாது, செயலளவில் திருநங்கைகள் மீதான மரியாதையும், மதிப்பும் சக மனிதனைப் போல் நடத்த வேண்டும் என்ற அக்கறையும் தெரியவேண்டும் என்பதை ஆணித்தரமாக ஒவ்வொரு கருத்தரங்கிலும் தெரிவிப்பேன்.

அதேபோல் இதுபோன்ற கருத்தரங்குகள், கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மற்ற கார்ப்பரேட் அலுவலகங்களிலும் பாலினம் சார்ந்த மற்றும் திருநங்கை சார்ந்த கலந்துரையாடல்கள் மிக அவசியம் என நான் கருதுகிறேன். அதனால் எனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு கலந்துரையாடல் வாய்ப்பையும் நிராகரிக்காமல் கலந்து கொள்வேன்.

தங்களுடைய human library பற்றி பகிர்ந்து கொள்ள முடியுமா?

Human library என்பது தமிழில் மனித நூலகம் என்று சொல்வார்கள். பொதுவாக புத்தகங்கள் உள்ள நூலகத்திற்கு செல்லும் பொழுது, நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள வார்த்தைகளைஉள்வாங்குகிறார்கள். ஆனால் மனித நூலகம் என்பது சக மனிதனை எப்படிப் படிப்பது என்பதே ஆகும். மனிதனை படிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த மனிதன் வாழும் உலகத்தை நான் கருதுகிறேன். இதன் மூலம் ஏகப்பட்ட விசயங்கள் என்னால் மக்களுக்கு பேச்சு மொழியாகவே  கொண்டு செல்ல முடிந்தது. மனிதன் நூலகத்தில் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களும் உள்ளன.

தாங்கள் இப்பொழுது பணிபுரியும் நிறுவனம் பற்றி கூற முடியுமா?

நான் இப்ப பணிபுரியும் நிறுவனத்தில் திருநங்கைகளுக்குனு திறமையை வெளிப்படுத்த ஒரு இடத்தை உருவாக்கித் தராங்க. திறமைக்கு பாலினம் முக்கியம் இல்லை அப்படிங்கறதுல ரொம்ப தெளிவா இருக்காங்க. என்னோட பின்னோக்கு புத்தியை மாத்தி முன்னோக்கு புத்தியா செயல்பட வச்சாங்க. எனக்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து என்னோட திறமைகளை வளர்க்க உதவி செஞ்சாங்க. அதுல திரு. ரத்தீஷ்கிருஷ்ணன் முக்கிய பங்கு வகித்தார். என்னோட சொந்தக்காலில் என்னை நிக்க வச்சாங்க.

திருநங்கைகளின் ஜமாத் அமைப்பில் இருந்து விலகி இருப்பதற்கு காரணம் எதுவும் உள்ளதா .

திருநங்கைகளின் ஜமாத் அமைப்பு என்பது என்னுடைய வாழ்வியல் அமைப்புக்கு முற்றிலும் மாறுபட்டதாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தது. மூத்த திருநங்கைகளுக்கு நான் மரியாதை கொடுக்கிறேன். அதே சமயம்  அவர்களின் விதிகளுக்குட்பட்டு வாழ முடியவில்லை,  வாழவும் என் மனம் ஏற்கவில்லை. எனவே ஜமாத் அமைப்பில் இருந்து முற்றிலுமாக வெளிவந்துவிட்டேன். ஆனால் என்னுடன் சேர்ந்து பயணிக்க, என்னுடன் சேர்ந்து வாழ விருப்பமுடைய திருநங்கைகளை என்னுடன் ஏற்றுக் கொள்வேன். அதற்காக அவர்களை நான் அடிமை போல் பாவிப்பது கிடையாது. கோயம்புத்தூரில் இருந்த ஒரு திருநங்கை தோழியை என்னுடைய வீட்டிலேயே தங்க வைத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்து, என்னுடனே வைத்துள்ளேன். ஒருவேளை அவர்கள் என் வீட்டிலிருந்து செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் செல்லலாம், மீண்டும் சொல்கிறேன் நான் மூத்த திருநங்கைகளுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால் ஜமாத் போன்ற அமைப்பில் இருக்க என் மனம் துளியும் இடம் அளிக்கவில்லை.

மற்ற திருநங்கைகளுக்கு நீங்கள் கூற விரும்புவது?

திருநங்கைகளுக்கு நான் கூறிய வேண்டியதெல்லாம், நாமெல்லாம் அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறியது மிகப்பெரிய சாதனை. எனினும் இச்சாதனை மட்டும் போதுமானதாக இருக்காது. ஒவ்வொரு சக மனிதனை போல் நாம் எப்படி இங்கு வாழப்போகிறோம் என்ற எண்ணம் நம் அனைத்து திருநங்கைகளுக்கும் வேண்டும்.

நான் இங்கு பிச்சை எடுப்பதையும் ,  பாலியல் தொழில் செய்வதையும் தவறு என்று சொல்லவில்லை. அதுதான் அவர்களுடைய வாழ்வாதாரமாக உள்ளது. அத்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டு தங்களுடைய வாழ்வை மேம்படுத்த என்ன வழிகள் உண்டோ அதை செவ்வனே செய்ய வேண்டும். சாதனை செய்த திருநங்கைகள் போல் மற்ற திருநங்கைகளும் முன்னேறி வரவேண்டும் என்பதுதான் சக திருநங்கைகளுக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது.

தங்களுடைய குறுகிய மற்றும் நீண்ட நாள் கனவுகள் பற்றி?

என்னுடைய குறுகிய கால இலக்கு குறைந்தது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்குள் முப்பது திருநங்கைகள் பணியில் அமர வைக்க வேண்டும் என்பதே. என்னுடைய நீண்டகால இலக்கு – நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அந்த நிறுவனத்தில் ஆண், பெண், திருநங்கைகள், திருநம்பிகள் என்று பாலின வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு கொடுக்க வேண்டும்.  அந்நிறுவனத்தில் திருநங்கைகளும், திருநம்பிகளும் மிகப்பாதுகாப்பான சூழலில் வேலை செய்ய வேண்டும். இது என்னுடைய  நீண்டகால கனவாக உள்ளது. நிச்சயம்  அதற்கான வேலைகளையும் செய்துகொண்டு வருகிறேன். ஒருநாள் இந்தக் கனவு நிஜமாக மாறும் என்ற எண்ணம் மட்டும் எனக்கு நிறைவாக உள்ளது.

இளைப்பாறுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

அகமகிழ்செய்திகள் பிரிவு.

படைப்பு, படம் நன்றி:

அணியம் அறக்கட்டளை.