பால் புதுமையினர் அறிமுகக் கட்டுரைகள் – 2
அணியம் அறக்கட்டளையால் பால்புதுமை மக்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பால்மணம் மின்னிதழில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடம்பெற்ற திருநங்கை அனுஷ்யாவுடனான நேர்காணல் இங்கு மீள் பதிவாக வெளியாகிறது. பால்மணம் மின்னிதழில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க, பால்மணம் இணையதளத்தைப் பார்க்கவும்.
முன்னேற்றம் வாழ்வின் ஒவ்வொரு படிநிலைகளிலும் வேறுபடுகிறது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் பயணங்கள் முடிவதில்லை. முயற்சியை கைவிடாமல் இலக்கை நோக்கி பயணிக்கும் போது, தடைகள் தவிடுபொடியாகின்றன. கண்களுக்கு காட்சிப்பிழை விதிவிலக்கல்ல. காகிதப் பூக்கள் தொடரின் இரண்டாவது பகுதி இது.
இதன் மூலம் திருநங்கைகள் பற்றிய பொதுப் பார்வையில் மாற்றம் ஏற்படுத்தும் என நம்புகிறோம். இதற்காக அகமகிழ் குழு பன்முகத்தன்மை கொண்ட திருநங்கை செல்வி. அனுஷ்யா அவர்களை சந்தித்து நேர்காணலை மேற்கொண்டது. அனுஷ்யா என்பதை விட ‘ஆட்டோ அனுஷ்யா’ என்றால் தான் இன்னும் பிரபலம். அவருடன் செலவிட்ட இனிமையான தருணங்கள் உங்களுக்காக..
உங்களை பற்றிய சிறு அறிமுகம்?
எனக்கு சொந்த ஊர் திருச்சி. இப்போ கோயம்பத்தூர்ல இருக்கேன். நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, ஆறாம் வகுப்பு வர படிச்ச ஒரு சாதாரண ஆள். ஆரம்பத்துல நல்லா படிச்சுட்டு இருந்தேன், ஆனா அதுக்கப்புறம் என்னோட சூழ்நிலைகள் காரணமா என்னால படிக்க முடியல. சின்ன வயசுல இருந்தே பசங்கள விட பொண்ணுங்களோடதான் அதிகம் பழகுவேன். அதுக்காகவே ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க. படிப்பை நிறுத்தன அப்பறம் ஹோட்டல்ல வேலை செஞ்சேன். நிறைய இடத்துல வேலை செஞ்சு எல்லா வேலையும் நல்லா கத்துக்கிட்டேன். அப்பறம் 2008 ல பெங்களூரு வந்தேன். அங்க சில நாள் இருந்துட்டு, மும்பை போய் ஆபரேஷன் பண்ணிட்டு மறுபடியும் கோயம்பத்தூர் வந்துட்டேன். இப்போ ஆட்டோ ஓட்டி, சுயமா சம்பாதிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்.
தொழில் முனைவராக நீங்கள் மாறுவதற்கான காரணங்களும், உதவிகளும் எப்படிப்பட்டதாக இருந்தது?
சரியா சொல்லணும்னா எனக்கு ஒரு எண்ணம் திடமா இருந்துது, நான் ஒரு திருநங்கை சமுதாயத்தை சேர்ந்தவ, அதோட எனக்குனு ஒரு குடும்பப் பின்னணியும் இருக்கு. என்னோட திருநர் சமூகத்துல ஒரு எடுத்துக்காட்டா வாழணும்னு தோணுச்சு. ஆரம்பத்துல குடும்பமா ஹோட்டல் கடை வச்சு நடத்தினோம். ரொம்பவே புறக்கணிப்புகளை ஆரம்பத்துல சந்திச்சேன். இருந்தாலும், முயற்சியை கைவிடாம கடுமையா உழைச்சேன். ஒரு கட்டத்துல என்னைச் சேர்ந்தவங்க கஷ்டப்படக்கூடாதுனு அந்த தொழிலை விட வேண்டியதாச்சு. எனக்கு ட்ரைவிங் தெரியுங்கிறதால இமயம்னு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கிட்ட ஆட்டோ வாங்கித்தர சொல்லி உதவி கேட்டேன். அவங்களோட உதவியால இன்னைக்கு சொந்தமா ஆட்டோ ஓட்டுறேன்.
உங்களோட நடன நிகழ்ச்சிகள் பற்றி சொல்ல முடியுமா?
நடனம் மேல எனக்கு ஆர்வம் அதிகம். கோவில் விழாக்கள், கலை நிகழ்ச்சிகள்னு நெறைய இடங்களில் நடனமாடிருக்கேன். ஆனா இப்போ ஆட்டோ ஓட்றதால நேரம் கிடைக்கறதில்ல. இப்போவும் சில நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்கேன்.
ஒரு திருநங்கையாக ஆட்டோ ஓட்டுறப்போ சவாரிகள் அதிகம் கிடைக்குமா, அப்படி சவாரி வருபவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள்..?
ஆரம்பத்துல எல்லாரும் கொஞ்சம் பயந்தாங்க. குறிப்பா பெண்கள் கொஞ்சம் தயக்கம் காட்டினாங்க. அதுக்கப்புறம் நான் என்னோட ஏரியாவில நடந்துக்கற விதத்தை பார்த்து, எல்லாரும் சவாரி வந்தாங்க. இப்போ அனுஷ்யா இல்லாம ஆட்டோல போகறதுக்கே யோசிக்கறாங்கன்னா பாருங்களேன்.
தொழில் முனையும் திருநங்கைகள் பாலியல் சீண்டலால் பாதிக்கப்படுகிறார்களா?
கண்டிப்பா. நான் ஸ்கூல் விட்டு வந்ததுக்கு இதுவும் ஒரு காரணம். ஹாஸ்டல்ல பாலியல் சீண்டல்கள் அதிகமாவே இருந்துது. தொழில் பண்றப்போ இதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே அதிகம்னு சொல்லலாம். என்னோட தொழில்ல எனக்கு இந்த மாதிரியான சீண்டல்கள் இருக்கு, ஆனா அதிகம்னு சொல்லமுடியாது.
தொழில்முனைய விரும்பும் திருநங்கைகளுக்கு நீங்கள் ஏதும் கூற விரும்புகிறீர்களா?
நிச்சயமா. தொழில் ஆரம்பிக்கணும்னு நினைக்கறவங்களுக்கு மனஉறுதி ரொம்ப முக்கியம். ஆரம்பத்துல நெறைய புறக்கணிப்புகளை பாக்க வேண்டியதா இருக்கும். அதுல துவண்டு போகாம அடுத்து என்ன வழின்னு யோசிக்கணும். திருநங்கைகள் சமுதாயப்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கணும். வருமானம் குறைவா இருந்தாலும் மனநிறைவோட வாழ இது வழிவகுக்கும். நான் என்னோட சார்புல ஆட்டோ ஓட்ட நினைக்கற திருநங்கைகளுக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சியும், உதவியும் செய்யத் தயாரா இருக்கேன். நம்மள எவ்ளோ மிதிச்சாலும் மீண்டு வரணும்ற எண்ணத்தோட செயல்படணும்.
அரசாங்க உதவிகள் தொழில் முனைவோருக்கு உதவியாக உள்ளதா?
நிச்சயமா. ஆனா அதோட தாக்கம் வெறும் பத்து சதவிகித திருநங்கைகள்கிட்ட தான் போய் சேருது. பல திருநங்கைகள் தொழில் முனைவதற்கு முன் வருவதில்லை. நெறைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்து உதவி செய்யறாங்க. நம்ம திருநர் சமூகம் இதை கண்டிப்பா உபயோகபடுத்திக்கணும்.
ஆட்டோ சவாரியின் போது மறக்க முடியாத சோகமான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் ஏதேனும் உண்டா?
மறக்கமுடியாத சம்பவங்கள் நெறைய இருக்கு. சோகமான விஷயம் மேட்டுப்பாளையம் சவாரி போனப்போ பிரேக் புடிக்காம விபத்து ஏற்பட்டது. சந்தோஷமான விஷயம் சவாரி முடிச்சு வரும் போது வயசானவங்களுக்கு இலவசமா ஆட்டோ ஓட்றது.
மக்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
திருநங்கைகள மட்டம் தட்டாதீங்க. முடிஞ்சா அவங்க முன்னேற்றத்துக்கு ஒரு உற்சாகத்தை அவங்களுக்கு குடுங்க. அவங்களோட திறமைகளுக்கு ஒரு வாய்ப்பு குடுங்க. எல்லா சமூகம் மாதிரியும் இங்கயும் பாலியல், திருட்டுனு சில குறைகள் இருக்கத்தான் செய்யுது. ஆனா அவங்க யாரும் வேணும்னு பண்றதில்ல, அவங்களோட சூழ்நிலையை உருவாக்கனதே நம்ம தான். தயவு செஞ்சு வீட்டுல யாரது திருநங்கைகள் இருந்தா அடிச்சு தொரத்தாதீங்க, எந்த குழந்தையும் உங்களோட குழந்தைதான் எப்படி இருந்தாலும். நீங்க உதவி பண்ணா அவங்க நெறைய சாதிப்பாங்க.
– அகமகிழ் செய்திகள் பிரிவு , அணியம்.
படைப்பு, படம் நன்றி:
அணியம் அறக்கட்டளை