காணாமல் போனவர்கள் – 2

கால ஓட்டத்தில் காணாமல் போன சிறு வணிகர்கள் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது.

உப்பு வணிகர்

உப்பு விற்பவர்கள் சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இன்றும் ஊருக்கு ஊர் ‘உப்புக்காரர் குடும்பம்’ என சிலர் இருப்பார்கள். உப்பு விளையும் களத்துக்கு அளம் என்று பெயர். சம்பா நெல்+ அளம் இரண்டும் சேர்ந்த வார்த்தை தான் ஒருவர் செய்யும் வேலைக்கான ஊதியமாக சம்பளம் என்ற பெயரில் இன்றும் வழங்கப்படுகிறது. மளிகைக் கடைகளில், உப்பு, கடைக்கு வெளியே தான் பெரும்பாலும் இருக்கும்.

“உப்புவேலி” என்கிற ஆவணம் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. கிழக்கில் இருக்கும் ஒரிசா தொடங்கி சிந்து நதி வரை, உப்பு எங்கெல்லாம் விளைவிக்கப் பட்டதோ, அந்த இடங்களை நாட்டின் பிற பகுதிகளிடமிருந்து பிரித்து ஆங்கில அரசு வேலி போட்டுள்ளது. இதன் மூலம் சுங்கம் என கொள்ளையடித்து உள்ளது. இதைத் தான் அவர் ஆவணப் படுத்தி உள்ளார்.

உப்பு விற்பவர்கள், படம்: Nativespecial.com

எங்களுக்கு அருகாமையில் இருந்த உப்பளம் (உப்பு விளையும் இடம்) என பார்த்தால், கன்னியாகுமரி அஞ்சுகிராமம் ஊர்களுக்கு இடையில் இருந்த பால்குளம் உப்பளம் தான். சாலையில் பயணிக்கும் போதே நாம் குவியல் குவியலாக உப்பைப் பார்க்கலாம். இன்று அது இல்லை. அங்கிருந்து வாங்கி வரும் வணிகர்கள், சாக்குகளில் வைத்து தெருக்களில், ‘உப்பு வாங்கலையோ உப்பு’ என கூவிக் கூவி விற்பார்கள். மெதுமெதுவாக உப்பு பாக்கெட்கள் கடைகளுக்கு வரத்தொடங்கின. அவை தான் தரமானவை என மக்கள் மனதில் பதிந்ததால், உப்பு வணிகர்கள் என்னும் உமணர்கள் தெருக்களில் வருவது நின்று போனது.

தயிர் /மோர் விற்கும் பெண்கள்

நாங்கள் சிறு வயதாக இருக்கும் போது தயிர் வீட்டில் வைக்கும் வழக்கமே கிடையாது. வெள்ளிக்கிழமை தவிர அனைத்து நாட்களும் ஒரு அம்மா தயிர் மோர் கொண்டு வந்து விற்பார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் அவர்கள் வள்ளியூர் சந்தைக்குப் போய்விடுவார்கள். அவர்களிடம், தேவையான நாள் மட்டும் நாங்கள் மோர், தயிர் வாங்கிக் கொள்வோம்.

வள்ளியூர் சந்தை, படம்: Chettikulam nellai memes fb page

வள்ளியூர் சந்தை மற்றும் மோர் விற்கும் பெண்கள் பற்றி நினைக்கும் போது எனக்கு ஒரு வரலாறு நினைவிற்கு வருகிறது. 1985-87 காலகட்டத்தில் எழுத்தாளர் உமா கல்யாணி எழுதிய ‘வெகுளித்தனத்தால் வீழ்ந்த கோட்டை’ என்ற நிகழ்ச்சி, திருநெல்வேலி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதன் சாரம் இதுதான். வள்ளியூரில் பாண்டியர்களின் கோட்டை இருந்துள்ளது. தெலுங்கு மன்னர் கோட்டையை முற்றுகை இட்டுள்ளார். முற்றுகையின் போது பொதுமக்கள் கோட்டையினுள் சென்று வரலாம். அவ்வாறு கோட்டைக்குள் தயிர் விற்க சென்ற ஒரு பெண், கோட்டைக்கு வெளியே இருந்த தெலுங்கு படை வீரனுக்கு மோர் கொடுத்துள்ளார். அப்போது அவர் மோர் அளப்பதற்காக வைத்திருந்த பாத்திரம் கை தவறி கீழே விழுந்து விட்டது. அதை அருகில் இருந்த குளத்தில் கழுவும் போது மீண்டும் கை தவறி தண்ணீரினுள் விழுந்து விட்டது. அப்போது அந்த படைவீரன் என்னால் உனது பாத்திரம் போய் விட்டதே என்றிருக்கிறார். அதற்கு அப்பெண் எப்படியும் இந்த பாத்திரம் இந்த தண்ணீர் வழியாக கோட்டைக்குள் வரும்; அப்போது எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தான் கோட்டைக்குள், இந்த தண்ணீர் தான் போகிறது என தெலுங்கு படைக்குத் தெரிந்திருக்கிறது. அவர்கள் தண்ணீரை அடைத்து விட்டார்கள். தண்ணீர் இல்லாததால் பாண்டிய மன்னர் வெளியே வந்து சண்டை போட்டிருக்கிறார். போரில் கோட்டை அழிந்து விட்டது. இதை ஆதாரமாக வைத்து, பிற்காலத்தில் எழுத்தாளர், எஸ் பாலசுப்ரமணியம் தேவி பத்திரிகையில் நெடுந்தொடர்கதை ஒன்றை எழுதினார். இது ஒளிபரப்பாகும் போது எங்களுடன், பக்கத்து வீட்டு பாட்டியும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன செய்தி, ஏறக்குறைய 1950 கள் வரை, அந்த மோர்க்கார அம்மாவின் சந்ததியினர் வெள்ளிக் கிழமை சந்தைக்கு வருபவர்களுக்கு, வள்ளியூர் கோட்டையடி பகுதிக்கு சிறிது தெற்கே இருந்த ஆலமரத்தின் அடியில், இலவச மோர் கொடுப்பார்களாம். இப்போது கடைகளில் மோர் தயிர் விற்பதால், தயிர் மோர் விற்கும் பெண்கள் தெருக்களுக்கு வருவது இல்லை.

பொட்டண வணிகர்

இப்போது வடநாட்டு இளைஞர்கள் தலைச்சுமையாக, சைக்கிள்களில் துணி கொண்டு வந்து விற்கிறார்கள். அப்போதெல்லாம் நம் அருகாமை ஊரைச் சார்ந்தவர்கள், மிகப் பெரிய பொட்டணமாக தோளில் சுமந்து வருவார்கள். சிலர் சைக்கிளில் வருவதும் உண்டு. அவர்களிடம் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து துணிகளும் இருக்கும். அந்தந்த ஊரில் விழாக்களுக்கு ஏற்றாற்போல அவர்களின் வரத்து கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும். பெரும்பாலும் கடனுக்கு கொடுப்பார்கள். அதனால் அவர்களை நம்பி, விழாக்கள் கொண்டாடிய ஏழைகள் அதிகம்.

யாராவது ஒருவர் துணி வாங்க என இறக்கினால் போதும். தெருவில் வசிக்கும் பெண்கள் அனைவரும் சூழ்ந்து கொள்வார்கள். பார்த்த உடன் அவர்களுக்கு சில பொருட்கள் தேவை என ஆகி விடும். அதனால் எப்படியும், இறக்கினால் போதும்; விற்பனை களைகட்டும் என வணிகர்கள் தங்கள் பொட்டணத்தை (மூட்டையை) இறக்குவதற்கு முயற்சி செய்வார்கள். கூறையிட்ட பரந்த திண்ணையில் அவர்கள் அமர்வார்கள். வீடுகளில் பாய் வாங்கி விரித்து, துணியை அதில் பரப்பி வைத்து காட்டுவார்கள். வசதியான திண்ணை கிடைக்கவில்லை என்றால், வீட்டின் முன் அறையில் வைத்து தங்கள் வணிகத்தை நடத்துவார்கள். தொடர்ச்சியாக வருவதால், பெரும்பாலும் குடும்ப நண்பராக அவர்கள் மாறி இருப்பார்கள்.

வளையல் வாங்கலையோ

“வளையல் வாங்கலையோ அம்மம்மா வளையல் வாங்கலையோ”, என்ற வள்ளித் திருமணம் பாடல் முதல், “வளையல் அம்மா வளையல்” (காவேரி), “கல்யாண பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்” (படகோட்டி) , “இள வயசுப்பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்” (பாண்டி நாட்டுத் தங்கம்) என வளையல் தொடர்பான பல பாடல்கள் திரைப்படங்களில் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக கதாநாயகன் மாறுவேடத்தில் நாயகியின் வீட்டிற்குள் நுழைவதற்கு இது தான் சிறந்த வேடமாக காட்டப்படுகிறது. இதிலிருந்து வளையல் காரர்கள் எவ்வளவு தூரம் குடும்பத்துடன் ஒன்றி இருந்தார்கள் என அறிந்து கொள்ளலாம்.

இப்போது போல, எப்போதும் வளையல் வாங்கும் விதமாக கடைகள் அப்போது கிடையாது. திருவிழாவிற்கு வரும் கடைகளோடு சரி. மற்றபடி வளையல், பொட்டு, கண்மை, ஹேர்பின், ஊக்கு போன்றவை வாங்க வேண்டுமென்றால் அவ்வப்போது வரும் வளையல் காரர்களையே எதிர்பார்த்து, காத்திருக்க வேண்டும்.

வளையல் காரர், படம்: சித்தத்தூர் கிருஷ்ணசாமி ஃபேஸ்புக்

வளையல் தாத்தா ஒரு பெரிய பெட்டியின் மேல் பக்கம் பல உருளைகளில் வளையல்களை அடுக்கி வைத்திருப்பார். கீழ்ப்பக்கத்தில் பொட்டு, கண்மை, ஹேர்பின், ஊக்கு போன்ற பொருட்களை வைத்திருப்பார். பார்த்த உடனேயே இது சின்னது, பெரியது என சொல்லிவிடுவார். அவரிடம் ஏனோ யாரும் பேரம் பேச மாட்டார்கள். வளையல் தாத்தா பெட்டியை சைக்கிளில் இருந்து இறக்கினால் போதும், தெருவே அங்கு கூடி விடும். பொதுவாக கண்ணாடி வளையல் தான் வாங்கி உடனே போடுவோம். அவரே போட்டு விட்டு விடுவார். கண்ணாடி வளையல் உடைந்து விட்டால், பிறகு கை வெறுமையாக இருக்கக் கூடாது என்பதற்காக ரப்பர் வளையல் ஒருசில சோடி வாங்கித் தருவார்கள். ஆடையின் நிறத்திற்குத் தகுந்தாற்போல போட வேண்டும்
என பல நிறங்களிலும் அரக்கு வளையல் வாங்குவதும் உண்டு.

அப்போது நாங்கள் ஒரு விளையாட்டு விளையாடுவோம். இரண்டு அடி விட்டத்தில் ஒரு பெரிய வட்டம் போடுவோம். அதனுள் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப்பரப்பி விட்டு, வேறு ஒரு வளையல் துண்டு மீது கை படாமல் சோடி சோடியாக வளையல் துண்டுகளை எடுக்க வேண்டும். அந்த விளையாட்டிற்காக உடைந்த வளையல் துண்டுகளை சேகரித்து கொண்டு வந்து தருவார். வாங்க முடியாத ஏழை சிறுமிகளுக்கு கைக்கு மூன்று என அரை டஜன் வளையல் போட்டு விடுவார். அவர்கள் கையைக் குலுக்கி கண்ணாடி வளையல் சத்தத்தைக் கேட்டு பரவசமடைவதை ஆனந்தமாகப் பார்ப்பார்.

வளையல்காரர்கள், மனைவி தவிர அனைவரையும் தாயாய், சகோதரியாய் நினைப்பேன் என்று குல சாமி கோவிலில் சத்தியம் செய்து தான் இந்தத் தொழிலுக்கு வருவார்கள் என கி.ரா. அவர்கள் சொன்னதாக எங்கோ படித்த நினைவு.

இதுவே அவர்களுக்கும் மக்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்தி இருக்கலாம். சீமந்தம், வளைகாப்பு என கர்பிணிப் பெண்களுக்கு வளையல் அடுக்குவது எல்லாம் எங்கள் ஊரில் கிடையாது. ஆனாலும் குடும்பத்தில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளில் அவரின் பங்கு மறைமுகமாக இருக்கும். அவர் பேசி முடித்த திருமணங்கள் பல உண்டு. பெண்கள் மற்ற ஆண் வணிகர்களிடம் பழகுவதை விட இவர்களிடம் மனம் விட்டுப் பேசுவதை, பழகுவதைப் பார்க்கலாம். இன்றும் ஊருக்கு ஊர் ‘வளையல் காரர் குடும்பம்’ என சிலர் இருப்பார்கள். இன்று வளையல் காரர்கள் வருவது என்பது அறவே நின்று விட்டது.

ஏலம்

ஏலம் என்பது, வணிகர்கள் தங்கள் பொருளுக்குத் தாங்களே விலையை நிர்ணயம் செய்யும் முறை. சந்தைகளில் மீன், காய்கறிகள், பழங்கள், பூ என பல பொருள்களை ஏலம் விடுவதைப் பார்த்திருக்கலாம். வங்கிகள், அடமானம் வைத்த பொருள்களை ஏலம் போடுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் எங்கள் இளமைக்காலத்தில் வேறு விதமான ஏலம் பார்த்திருக்கிறோம்.

திடீரென ஒரு இரவில் ஏலம் போடுபவர் வருவார். தெருவின் சந்தியில் (நடுவில்) மூலையில் தனது கடையை விரிப்பார். காடா விளக்கு (நடைபாதையில் வியாபாரம் செய்பவர்கள் பயன்படுத்தும் தடித்த திரி போட்ட, சிம்னி இல்லாத தகர விளக்கு) வெளிச்சத்தில் தனது வணிகத்தைத் தொடங்குவார். உடனே மக்கள் கூடத் தொடங்குவார்கள். பொதுவாக போர்வை போன்ற பொருட்களும் நேரியல் என சொல்லப்படும் ஆண்கள்
தோளில் போடும் துண்டு போன்றவையே பெரும்பாலும் அவர் ஏலம் போடுவார். இந்த நேரியல்கள் பளபளப்பாக இருக்கும். அதற்கு அவர் கொடுக்கும் வர்ணனைகள் அபாரமாக இருக்கும். பிதாமகனில் சூர்யா சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்பாரே, அதேபோல் இவரும் பேசுவார்.

நூறு ரூபாய் பொருள் ஒரு ரூபாய் என வர்ணனையோடு, அவர் தனது ஏலத்தைத் தொடங்குவார். சுற்றி உள்ளவர்கள் தங்கள் விலையை ஒருவர் மாறி ஒருவர் கேட்பார்கள். விலை சரியென நினைத்தால் விற்பார். அப்படி இல்லை என்றால் கமிஷன் என கடைசி விலையின் சிறு சதவிகிதத்தைக் கொடுப்பார். அந்த கமிஷன் பணத்திற்காக ஏலம் கேட்கப் போய் பொருளை வாங்க வேண்டிய (வாங்கி கட்டிக்கொள்ள வேண்டிய) சூழ்நிலை உருவாவதும் உண்டு. இவ்வாறாக ஏலம் விடுபவர்களை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நான் பார்த்ததில்லை.

பானை சட்டி தாத்தா

Photo by VARAN NM from Pexels

பொதுவாக கோவில் வளாகத்தில், அந்தந்த கால கட்டத்தில் விளையும் மாம்பழம், சக்கப்பழம் (பலாப்பழம்), சீனிக்கிழங்கு போன்றவை விற்கும் வணிகர் பலர் வருவர். ஓரிரு நாள்கள் இருந்து அனைத்துப் பொருள்களையும் விற்று செல்வர். அதே மாதிரி பானை, சட்டி விற்கும் தாத்தா ஒருவரும் அவ்வப்போது தான் உற்பத்தி செய்த மண்பாண்டங்களை கொண்டு வந்து விற்பார். வந்த முதல் நாள், தனது கைகளில் ஓரிரு பானைகளை வைத்துக் கொண்டு தெருத்தெருவாக “சட்டி, பானை” என குரல் கொடுத்துக் கொண்டே வருவார். சிலர் அதை வாங்குவர். சிலர் மறுநாள் கோவில் வளாகத்திற்குப் போய், பல பாண்டங்களையும் பார்த்துத் தெரிவு செய்து வாங்குவர்.

மாடு அதன் அருகில் வந்தால், உடைத்து விடக்கூடாதே என பார்க்கும் யாராவது விரட்டுவார்கள். மற்றபடி, எத்தனை நாள் இருக்கிறாரோ அத்தனை நாளும் பானை சட்டி எந்த பாதுகாப்பும் இன்றி தான் இருக்கும். திருடு போகுமா என்பதெல்லாம் தெரியவில்லை. இப்போது மண்பாண்டங்கள் கிராமத்து சந்தையில் கிடைப்பதோடு சரி.

விளக்குமாறு விற்கும் பெண்கள்

படம்:oochappan, flicker

வாரியல், துடைப்பம், என ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கப்படும் விளக்குமாறு, இப்போது கடைகளில் விற்பனைக்கு வந்து விட்டது. ஆனால் முன்பெல்லாம் கடைகளில் கிடைக்காது. பெண்கள் கையால் செய்து கொண்டு வந்து விற்பார்கள். தென்னை விளக்குமாறு தென்னை ஓலையின் ஈர்க்கில் (ஓலையின் நரம்பு) இருந்து செய்யப்படுவதால் ஈக்கு (ஈர்க்கு) விளக்குமாறு எனப்படும். அது அன்றும் இன்றும், சொரசொரப்பான தரையை தூய்மை செய்யப்பயன்படுகிறது. வீட்டினுள், பளபளப்பான தரையை சுத்தம் செய்ய ஏரிப்புல்லில் செய்த கைப்பிடியுடன் கூடிய விளக்குமாறு இப்போது பயன்படுத்தப்படுகிறது. இவை கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

நாங்கள் வீட்டினுள் சுத்தம் செய்ய, புல் விளக்குமாறு மற்றும் பூஞ்சட்டை விளக்குமாறு பயன்படுத்தினோம். புல் விளக்குமாறு மிகவும் மெல்லிய அருகம்புல் போன்ற கணுக்கள் கொண்ட ஒரு புல்லில் செய்வார்கள். ஒரு கை
அளவில் புல்லை எடுத்து, V வடிவத்தில் மடக்கி கட்டி தருவார்கள். விளக்குமாறு, ஏறக்குறைய ஒன்று ஒன்றரை அடி தான் இருக்கும். அதனால் குனிந்து தான் பெருக்க வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீர் ஓடும்
வாய்க்கால்களின் ஓரத்தில் இந்த புல் வளரும் என்பதால், அந்த காலகட்டத்தில் மட்டுமே கொண்டு வருவார்கள். இந்த விளக்குமாறு மிக நீண்ட காலத்திற்கு தேய்ந்து போகாது. மிகவும் சிறிதாக ஆனபின் கூட, விறகு அடுப்பின் முன் சாம்பலை எடுப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள். அதை குத்தி விளக்குமாறு
என்பார்கள்.

பூஞ்சட்டை மற்றொரு வகை மெல்லிய புல். அந்த புல் கணுவே இல்லாமல் வழவழப்பாக இருக்கும். நுனியில் நரிவால் (Foxtail) போன்ற மெல்லிய கம்புகளின் தொகுப்பு இருக்கும். அது காய்ந்த பின் உதிர்ந்து விடும். அவ்வாறு காயவைத்து உதிர்ந்த பின் ஒரு கை அளவு எடுத்து கட்டி விற்பார்கள். அது ஓரளவு நீளமாக இருக்கும். அதனால் குனியாமல் பெருக்கலாம். இன்று விளக்குமாறு விற்கும் பெண்கள் வருவது என்பது அறவே நின்று விட்டது.

விறகு விற்பவர்

படம்: Abdullah Asam, flicker

வீடுகளில் விறகு அடுப்பு இருந்த காலகட்டத்தில் விறகு என்பது வீட்டின் இன்றியமையாத தேவைகளில் ஒன்று. சிலர் தாங்களே காடுகளில் போய் விறகு பொறுக்கிக் கொள்வர். விளை நிலம் உள்ளவர்கள் தங்கள் விளைகளில் உள்ள மரங்களை வெட்டி சேமித்து வைத்துக் கொள்வர். சிலர் விலைக்கு வாங்கி பயன்படுத்துவர். அவர்களுக்காக, விறகு விற்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் தெருவிற்கே மாட்டு வண்டியில் கொண்டு வந்து விடுவார். அவரவர்க்குத் தேவையான எடை என்ற அளவிற்கு எடை போட்டுக் கொடுப்பார். ஒரு எடை என்பது பத்து கிலோ. அவர் வரும்போது கூடவே ஒரு விறகு வெட்டியும் வருவார். அவர் வாங்கிய விறகை கோடரி கொண்டு கீறிக்கொடுப்பார். இப்போது விறகின் பயன்பாடு குறைந்து விட்டதால், இவர்கள் வருவது இல்லை.

பாத்திரக்காரர்

படம்: பிரதீபா வேல்முருகன்

இப்போது வடநாட்டு இளைஞர்கள் பாத்திரம் கொண்டு வந்து விற்கிறார்கள். அப்போதெல்லாம் நம் அருகாமை ஊரைச் சார்ந்தவர்கள், சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டி அதற்கு மேல் பம்பரக் கயிறு போன்ற கயிறால் வலை போல பின்னி வைத்திருப்பார். அந்த வலையினுள் பாத்திரங்களை வைத்துக் கட்டி வைத்திருப்பார். பார்ப்பதற்கு பறக்கும் பலூன் போன்ற அமைப்பில் இருக்கும். அவர்களிடம் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து அலுமினியப் பாத்திரங்களும் இருக்கும். நாம் நமக்குத் தேவையான பாத்திரத்தை காட்டினால், அதன் அருகில் இருக்கும் முடிச்சை அவிழ்த்து அதை எடுத்து தருவார். நம்மிடம் இருக்கும் உடைந்த பழைய அலுமினிய பாத்திரங்களை வாங்கி, எடை போட்டு அதற்கான விலையை குறைத்து தருவார். இப்போது இவர்கள் பெருமளவில் வருவது இல்லை.

இப்படிப் பல வணிகர்கள் இன்று நலிவடைந்து காணாமல் போனாலும், தண்ணீர் விற்பவர், சிம் கார்ட், போன் விற்பவர், வீடுவீடாக புத்தகங்கள், சோப்பு, சமையல் பொடிகள், ஊறுகாய் விற்பவர்கள் என பல வணிகர்கள் புதிதாக வந்துள்ளனர்.

கட்டுரையின் முந்தைய பகுதி:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.