கால ஓட்டத்துக்கு ஏற்ப மனிதன் செய்யும் தொழில்கள் மாறிக்கொண்டே வருகின்றன. கடந்த தலைமுறை பார்த்த நிறைய தொழில்கள் இன்று இல்லை. அவற்றைக் குறித்து இரு பகுதிகளாக வெளிவருகிறது ‘காணாமல் போனவர்கள்’ சிறப்புக்கட்டுரை.

நெல் குத்தி அரிசி ஆக்குதல்

உரலில் குத்துதல், படம்: Wikipedia

என் அம்மா காலத்தில் அரிசி விற்பவர்களுக்கு சிலர் கூலிக்கு நெல் குத்தி அரிசியாக்கிக் கொடுத்தார்கள். அது ஒரு தொழிலாக இருந்து வந்தது. பின் அரிசி ஆலை வந்தது. கடைகளில் விற்கும் அரிசி, அரிசி ஆலைகளில் நெல் அவிக்கப்பட்டு குத்தப்பட்டது. ஆலைகளில், அவர்கள் எரிபொருள் சிக்கனத்திற்காக தொட்டிகளில் நெல் ஊறவைத்து அரைத்தனர். அது தொட்டி அரிசி என்றே வழங்கப் பட்டது. அதைப் பலரும் விரும்பியதில்லை.
அதனால் சிலர் பாரம்பரிய முறைப்படி நெல்லை ஊறவைக்காமல், வேகவைத்து, காய வைத்து அரைத்து விற்பனை செய்தார்கள். இந்த அரிசி, கடையில் வாங்கும் அரிசியை விட மிகவும் வாசனையாக இருக்கும். இப்போது இதை ஒரு தொழிலாக செய்பவர்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.

பாத்திரம் அடைக்கிறது ஈயம் பூசுறது”

‘பாத்திரம் அடைக்கிறது ஈயம் பூசுறதே…’ இப்படி குரலை கேட்காதவர்கள் எங்கள் காலகட்டத்தில் இருக்கவே முடியாது. இவர்கள் பொதுவாகவே கணவன் மனைவியாக, சில சமயம் குழந்தைகளுடன் வருவார்கள். வெண்கலப் பாத்திரத்தில் புளிப்பான பொருட்கள் சமைத்தால் இரசாயன மாற்றம் உருவாகும். அதைத் தடுக்க பாத்திரத்தின் உட்பகுதியில் ஈயத்தை (Tin) உருக்கிப் பூசுவார்கள். அந்த பூச்சு தொடர்ச்சியான பயன்பாட்டால், அங்கும் இங்குமாக கழன்று விடும். அவ்வாறு கழன்று விட்டால், மீண்டும் மீண்டும் பூசுவார்கள். ஈயம் பூசுவதற்கு யாராவது பாத்திரம் கொடுத்தால், ஈயம் பூசுபவர், அந்த இடத்திலேயே ஒரு சிறு உலையை அமைத்துக் கொள்வார். உலையில் காற்றை செலுத்தி நெருப்பை அதிகப் படுத்தும் துருத்தி என்னும் ஒரு வகை தோல் பையைப் பயன்படுத்துவர்.

ஈயம் பூசுதல், படம் நன்றி: தினகரன்

எங்கள் காலத்தில் சமையலில் வெண்கலப் பாத்திரத்தின் பயன்பாடு பெருமளவில் குறைந்துவிட்டது. ஆனால் தண்ணீர் பிடித்து வைக்கும் குடம், மற்றும் சருவச்சட்டி எனப்படும் முற்றம் தெளிக்கும் பாத்திரம் இரண்டும் வெண்கலப் பாத்திரங்களாக இருந்தன. சமையலில் அலுமினிய பாத்திரங்கள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஏதாவது துவாரம் இருந்தால், அதை அடைப்பதே அவர்களின் முதன்மை தொழிலாக மாறியது. பிற்காலத்தில் அவர்களே பிளாஸ்டிக் குடம், வாளிகளை அடைக்கத் தொடங்கினர். ஆனால் அவர்கள் குரல் கொடுப்பது என்னவோ, ‘பாத்திரம் அடைக்கிறது ஈயம் பூசுறதேதே’ என்பது தான்.

இப்போது இவர்கள் வந்து நான் பார்ப்பதில்லை.

மாட்டு மந்தை

எங்கள் ஊர் மிகவும் வறண்ட பூமி. பண்ணை அளவில் மாடு வளர்ப்பதற்கு வழியில்லை. பெண்கள், வீடுகளில் ஒன்றிரண்டு மாடு; பெரும்பாலும் பசு மாடு வளர்ப்பார்கள். அவற்றிற்கான பள்ளிக்கூடம் போல இந்த மாட்டு மந்தையை வைத்துக் கொள்ளலாம். மாடு வளர்ப்பவர்கள் காலையில் மாடுகளுக்கு தண்ணீர், தீவனம் கொடுத்து, 8-9 மணியளவில் ஊருக்கு வட கிழக்கே இருக்கும் மந்தையில் கொண்டு வந்து விட்டு விட்டுப் போவார்கள். பள்ளியின் ஆசிரியர் போல அங்கு ஒருவர், இந்த மாடுகளை கண்காணிக்க அங்கு இருப்பார்.

குறிப்பிட்ட நேரத்தில் அவர் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவார். அவருடன் அனைத்து மாடுகளும் செல்லும். எங்கே புல் இருக்கிறதோ, அங்கே அவர் அமர்ந்து கொள்வார். மாடுகள் மேயத் தொடங்கும். குறிப்பிட்ட இடைவெளியில் குளத்திற்குத் தண்ணீர் குடிக்க ஓட்டிச்செல்வார். குளத்தில் தண்ணீர் இல்லை என்றால், ஏதாவது ஒரு தோட்டக்காரருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அங்கே ஓட்டிச் செல்வார். குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் திருப்ப ஓட்டி வருவார். மாடுகள் அவரவர் வீடுகளைத் தேடி போய் விடும். சாலை ஊரின் வடக்கு ஓரத்தில் இருக்கிறது. அங்கிருந்து, தெற்கு ஓரத்தில் இருக்கும் வீடுகள் வரை அவை சரியாக சென்று
விடும். மாலை அவை வீடு திரும்பும்போது பள்ளி மாணவர்கள் போலவே குதித்துக் கொண்டு செல்லும்.

சில மாடுகள் நேரடியாக வீடு செல்லாமல், எங்காவது சுற்றும். அவற்றால் பாதிக்கப்படுபவர்கள், பவுண்டி எனப்படும் கால்நடை சிறையில் கொண்டு அடைத்து விடுவார்கள். அவரவர் வளர்க்கும் மாடுகள் சரியான நேரத்தில் வருகின்றனவா என கண்காணிப்பது வளர்ப்பவர்களின் கடமை. அதனால், மாட்டின் உரிமையாளர், மாடு ஏற்படுத்திய சேதத்திற்கு இணையான பணத்தைக் கட்டிவிட்டு மாட்டை ஓட்டிச்செல்லவேண்டும். இன்றும் இந்த கட்டடம் உள்ளது.

கழனியூரன், படம்: samayam tamil

இந்த பவுண்டி குறித்து ‘செவக்காட்டுச் சேதிகள்’ தொடரில் ’14 பவுண்டுத் தொழு – மாடுகளின் சிறைச்சாலை’ என சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் கழனியூரன் மிகவும் விரிவாக எழுதியிருக்கிறார். ‘பவுண்டு தொழுக்கள் நவாப்புகள் காலத்தில் கட்டப்பட்டவை. வெள்ளைக்காரர்களின் ஆட்சி நடந்த போது, அவர்கள், பவுண்டுத் தொழுக்களைத் தங்கள் கட்டுப்பாட்டில், வைத்திருந்தார்கள். நாட்டை விட்டுப் போகும்போது, மத்திய அரசின் பராமரிப்பில் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்கள். இன்று பராமரிக்கப்படாமல் தமிழகம் எங்கும் உள்ள இந்த மாட்டு ஜெயில்களை மாநில அரசுகள் பயன்படுத்த முடியாது’, என்கிறார்.

ஆட்டு உரல்/ அம்மி கொத்துதல்

அம்மி, படம்: அமேசான்

அம்மி, ஆட்டு உரல் கொத்த வருபவர்கள் ‘ஆட்டு உரல், அம்மி கொத்தரது’ என்று கூவிக் கொண்டே வருவார்கள். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். உளி சுத்தியல் கொண்டு ஆட்டு உரல், அம்மியில் நெருக்கமாக அடிப்பார்கள்.

அடிக்க அடிக்க அம்மை தழும்பு இருக்கும் முகம் போல புள்ளி புள்ளியாகத் தெரியும். அதன் பிறகு நன்கு கழுவிவிட்டு பயன்படுத்த வேண்டும். பொதுவாக சிறிது உமியை வைத்து அரைத்துக் கழுவுவார்கள். அவ்வாறு செய்யும் போது உடைந்த கல் துகள்கள் வெளியே வந்து விடும். வீட்டினுள், சமையல் அறை வரை வரும் அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக குடும்ப நண்பர்களாக மாறியிருப்பார்கள். அதனால் பெரும்பாலும் வீடுகளில் உணவு கொடுத்தே அனுப்புவார்கள். பிற்காலத்தில், சிலர் கிரைண்டர் கூட கொத்துவது உண்டு. ஆனாலும் ஆட்டு உரல்/ அம்மி பயன்பாடு இல்லாததால், இந்த தொழில் வழக்கொழிந்து போய்விட்டது.

சுண்ணா களவாசல்

சுண்ணா களவாசல் என்பது சுண்ணாம்பு உற்பத்தி செய்யும் இடம். சுண்ணாம்பு பாறை, கடல் சங்கு/ சிப்பி போன்றவற்றை மிக உயர்ந்த வெப்பநிலையில் சூடேற்றும் போது, அவை சுண்ணாம்பாக மாறும். இதற்காக அமைக்கப்படும் ஏறக்குறைய 15 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அடுப்பு தான் காளவாய் எனப்படும் களவாசல். ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் சூட்டில் இருக்க வேண்டும். அதனால், மிகப்பெரிய விறகுகள் குறிப்பாக பனை மரங்களை போட்டு எரிப்பார்கள். முதல் இரண்டு மூன்று மணி நேரம் புகை மூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும். நாங்கள் பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு களவாசல் உண்டு. அதனால் எங்களுக்கு அந்த அனுபவம் உண்டு.

சுண்ணாம்புச் சூளை, wikipedia

பொங்கலுக்கு பொங்கல், திருவிழாவிற்கு திருவிழா, கொடைக்கு கொடை என ஆண்டுக்கு ஒருமுறை வெள்ளையடிக்கும் வழக்கம் அனைவருக்கும் இருந்தது. இவ்வாறு வெள்ளை அடிப்பதற்கு சங்கு/ சிப்பி சுண்ணாம்பு பயன்படுத்துவர். கடற்கரை ஊர்களில் மீனவர்கள் தங்கள் வலையில் கிடைக்கும் சிப்பி/ சங்குகளை கடற்கரையில் சேர்த்து வைத்து விற்பார்கள். வயதான பெண்கள் சிப்பி/ சங்குகளை கடற்கரையில் பொறுக்கி சேர்த்து வைத்து விற்பார்கள். சிப்பி சுண்ணாம்பை முதல் நாளே தொட்டி அல்லது பெரிய பானையில் தண்ணீர் சேர்த்து கலக்கி வைப்பார்கள். இது தான் வெற்றிலையில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பு. மறுநாள் வெள்ளை அடிக்கும் போது நீலம் சேர்த்து அடிப்பார்கள். நீலம் போடுவதற்கு முன் அருகில் இருக்கும் வெற்றிலை போடுபவர்கள் சிறிது எடுத்துச் செல்வார்கள்.

பாறை சுண்ணாம்பு, கட்டடம் கட்ட பயன்படும். சுண்ணாம்பும் மணலும் சேர்ந்த கலவை காரை எனப்படும். காரையை, குழைத்த பின் ஓரிரு வாரங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு மிகவும் கெட்டியாகி விடும். நுட்பமான கட்டட வேலை என்றால், சுண்ணாம்புடன் மணல், கடுக்காய் தண்ணீர், பதநீர்/கருப்பட்டி கலந்து அரைப்பர். எனக்குத் தெரிய எங்கள் வீட்டில் ஒரு அறை அவ்வாறு கட்டப்பட்டது. கட்டை குத்துவதற்கென சிறு செங்கல் உண்டு. அந்த செங்கலில் காரையைப் பூசி, கட்டைகளுக்கு இடையில் ஒட்டுவர். உடனே ஒட்டிக் கொள்ளும். கட்டடத்தின் மேல் பகுதியில் செங்கல் கப்பியுடன் (துண்டு செங்கல்) காரையைப் பயன்படுத்தித் தளம் அமைப்பர். அத்தளத்தின் மேற்பரப்பில் ஓடுகளைப் சுண்ணாம்பால் ஒட்டுவர். இந்த முறையினால் கட்டத்தின் உட்பகுதி குளிர்ச்சியாக இருக்கும். இப்போது சுவற்றிற்கு டிஸ்டம்பர் போன்றவை அடிப்பதாலும், வீடு கட்ட சிமெண்ட் பயன்படுத்துவதாலும், இந்தத் தொழில் வழக்கொழிந்து போய்விட்டது.

சாணை பிடிப்பவர்

சாணை பிடிக்கும் கருவி, Wikipedia

கத்தியைத் தீட்டி கூர்மையாக்கும் கலையே சாணை பிடித்தல். சைக்கிள் போன்ற அந்தக் கருவியில் கத்தியை வைத்து பெடலை சுற்றினால், சக்கரம் சுழலும். சக்கரம் சுழல சுழல, கத்தி கூர்மையாகும். சாணை பிடிக்கும் கருவியை உருட்டிக்கொண்டும், தூக்கிக் கொண்டும், ‘கத்தி அருவா சாணை’ என குரல் கொடுத்துக் கொண்டே அவர் வருவார்.பொதுவாக மரம் வெட்டும் வேலை செய்பவர்கள், தங்கள் அரிவாள், கோடரியை சாணை பிடிப்பார்கள். தோட்ட வேலை செய்பவர்கள், அவர்கள் பொருட்களை சாணை பிடிப்பார்கள். தையல் வேலை செய்பவர்கள், பீடி சுற்றும் பெண்கள், தங்கள் கத்திரிக்கோலை சாணை பிடிப்பார்கள். இப்போது அவர்கள் நகரங்களில் கடை போட்டிருக்கிறார்கள்; சந்தைகளுக்கு வருகிறார்கள். ஆனால் ஊருக்குள் வருவது குறைந்து விட்டது. இப்போது ஊருக்குள் இவர்கள் வந்து நான் பார்த்ததில்லை.

மர குளை/ உரம் வாங்குபவர்கள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், தனிநபா் உரக்குழி அமைத்தல் என்னும் திட்டம் உள்ளது. ஆனால் முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் உரக்குழி இருக்கும். அவ்வாறு உரக்குழி போடுவதற்கு வீட்டில் இடம் இல்லாதவர்கள், சாலை ஓரத்தில், உரக்குழி போட்டிருப்பார்கள். சாலை ஓரத்தில் பொதுவாக மாடு வைத்திருப்பவர்கள், சாணத்தைக் கொட்டி சேகரித்து வைப்பார்கள். உரக்குழி போட்டிருப்பவர்கள், சமையலறைக் கழிவுகள் மற்றும் வீடுகளில் நிற்கும் மரங்களில் இருந்து விழும் காய்ந்த இலைகளை சேகரிப்பார்கள்.

இதை வாங்குவதற்கு என்றே குறிப்பிட்ட கால இடைவெளியில் உரம் வாங்குபவர்கள் வருவார்கள். அவர்கள் ஒரு நீண்ட கம்பு வைத்து குத்திப் பார்த்து ஒரு வண்டி தேறும்; அரை வண்டி தான் தேறும் என பேரம் பேசி வாங்குவார்கள். சாணி உரத்திற்கு விலை அதிகம். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்கள் வருவதால், மிகவும் நாள்பட்டு, அழுகி தங்கும் நிலை உருவாகாது. ஊரும் தூய்மையாக இருக்கும். இப்போது போல பஞ்சாயத்து வண்டி வந்து வீடு வீடாக சேகரித்து ஒரு இடத்தில் கொட்டி, அந்த பகுதி முழுவதையும் குப்பை மேடாக்கும் அவலம் இல்லை.

அவர்களே மழைக் காலத்திற்கு முன், நெல் பயிரிடுவதற்கு நிலத்தை ஆயத்தம் செய்ய வேண்டும் என வீடுகளில் நிற்கும், வேம்பு, பூவரசு மரங்களின் குளை (இலை தழை) வாங்க வருவர். அதற்கு உள்ளூர் முகவர்கள் வேறு வருவார்கள். முகவர்கள் வீடு வீடாக சென்று விலை பேசி வாங்கி கொடுப்பர். உடனே குளை இறக்குவதற்கு (வெட்டுவதற்கு) ஆள்கள் வந்து விடுவார்கள். மாலையே எடுத்தும் போய் விடுவார்கள். மழைக்கு முன் இவ்வாறு செய்வதால், புதிய துளிர் துளிர்க்கும். பழைய இலை மழையில் குப்பையாக கீழே விழுவது குறையும். நமக்கு பெருக்குவதற்கு எளிதாக இருக்கும். புதிதாக துளிர்க்கும் இலைகள் ஏப்ரல், மே மாதங்களில் நல்ல அடர்த்தியான நிழலைக் கொடுக்கும்.

குளை இறக்கும் போது கை பருமன் கொண்ட கம்புகள் வரை வெட்டுவார்கள். ஆனால் எடுத்துக் கொண்டு போகமாட்டார்கள். அதனால், பத்து மரம் இருந்தால், ஒரு நடுத்தர குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான விறகு கிடைத்து விடும். இப்போதெல்லாம் வீடுகளில் மரம் இருப்பது செலவாகவே உள்ளது. எங்கள் வீட்டில், 4-5 மரங்கள் உள்ளன. அவற்றிக்கு காசு கொடுத்து தான் குளை இறக்கவேண்டி உள்ளது. காசு கொடுத்து தான் எங்காவது கொண்டு போட வேண்டி உள்ளது.

“முடி கட்றதே கொண்டை முடி கட்றதே”

சவுரி முடி விற்பனை, குலசை, படம் நன்றி: தினகரன்

பெரும்பாலும் வீட்டில் வயதானவர்கள், கொண்டை தான் போடுவார்கள். ஆனால் அதற்குப் போதுமான அளவிற்கு முடி இருக்காது. அதனால் கொண்டை முடி (சவுரி முடி) பயன்படுத்துவார்கள். தினமும் பயன்படுத்துவதால் அந்த கொண்டை முடியில் கட்டி இருக்கும் முடி கழன்று வரும். அதை சரி செய்வதே இவர்களின் வேலை. இதற்காக இவர்கள் சிறிது முடி கொண்டு வருவார்கள். இதற்காக சிலர் தங்கள் தலையில் இருந்து கழிந்து வரும் முடியை சேர்த்து வைத்துக் கொடுத்து கொண்டை முடி செய்வார்கள்; அல்லது சரி செய்து கொள்வார்கள். புதிய சவுரிகொண்டு வந்து விற்பனையும் செய்வார்கள். இப்போது முடி குறைவாக இருப்பவர்கள் கூட கொண்டை முடி அதிகம் பயன்படுத்துவது இல்லை. இதனால் இவர்கள் வருவது இல்லை.

குடை ரிப்பர்

அரபு நாடுகளில் இருந்து மடக்கு குடை வரும் வரை வீடுகளில் ஆளுக்கொரு குடை எல்லாம் கிடையாது. ஏதோ ஒன்றிரெண்டு இருக்கும். சில வீடுகளில் ஒன்று கூட இருக்காது. ஆனால் இருக்கும் குடை நல்ல தரமானதாக இருக்கும். விலையும் அதிகம். குடையில் ஏதாவது கம்பி உடைவது/ துணி கிழிவது போன்ற பிரச்சனை இருந்தால் இவர்கள் வந்து சரி செய்து கொடுப்பார்கள். இப்போது இவர்கள் வருகிறார்களா எனத்தெரியவில்லை.

கட்டில் / சொளவு பொத்துறது

பொத்தல் என்பது, துணி, பெட்டி போன்றவற்றில் ஏற்படும் துளை; பொத்துதல் என்பது அவ்வாறு ஏற்படும் துளையை மடக்கி மூடுதல் என்னும் செயல். கட்டில் / சொளவு பொத்துறது என வருபவர்கள், வீடுகளில் இருக்கும் கட்டில், சொளவு (முறம்), பெட்டி, போன்றவற்றில் இருக்கும் பொத்தலைப் பொத்திக் கொடுப்பார்கள். கடவாய் பெட்டி, (கொட்டான்) எனப்படும் மிகப் பெரிய பெட்டிகளில் வாய் பகுதியில் கட்டி இருக்கும் மட்டை அதிகமான பயன்பாட்டால் சேதமாகி விடும். அதையெல்லாம் அவர்கள் சரி செய்து கொடுப்பார்கள். இதற்காக அவர்கள், நார், குருத்தோலை, மட்டை எல்லாம் சரியான அளவில் வகிர்ந்து கொண்டு வருவார்கள். இவ்வாறு வருபவர்களுக்குப் புதிய பொருட்கள் செய்து கொடுப்பதற்கான
வாய்ப்பும் கிடைக்கும். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். இவர்களுக்குப் பெரும்பாலும் வீடுகளில் உணவு கொடுத்தே அனுப்புவார்கள்.

மிட்டாய் பெட்டி முடைதல்

மிட்டாய் பெட்டி, படம்: india mart

பனை ஓலையில் பெட்டிகள், பாய், பட்டை முறம், கடவாய் பெட்டி, (கொட்டான்) போன்ற பல கைவினைப் பொருட்கள் செய்யலாம். இன்றும் அவை செய்யப் படுகின்றன. அவற்றில் பெருமளவில் இல்லாது போனது மிட்டாய் பெட்டி முடைதல். மிட்டாய் கடைகளில் தின்பண்டம் பனை ஓலைப்பெட்டிகளில் வைத்து விற்கப் பட்டது. திருவிழாக் காலங்களில் உறவினர்களுக்கு மிட்டாய் பெட்டி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இதனால் பனை ஓலைப் பெட்டிகள் இல்லாத மிட்டாய் கடைகளையே இருக்காது. மிட்டாய் வைக்க பயன்படுத்தும் பனை ஓலைப்பெட்டிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டன.

இவர்களிடம் இருந்து மிட்டாய் கடைகளில் வேலை செய்பவர்கள் வாங்கி, தங்களது சைக்கிளில் அம்பாரமாக கட்டி வைத்து கடைகளுக்குக் கொண்டு போய் சேர்ப்பார்கள். நாளடைவில் ஓலைப் பெட்டிகளின் பயன்பாடானது குறையத் தொடங்கியது. இதனால் இத்தொழில் நலிவடைந்து இப்போது மீண்டும் புத்துயிர் பெறுவது போலத்தெரிகிறது.

சைக்கிள் சுத்துபவர்

சைக்கிள் வித்தை, படம்: athirai.blogspot.com

சாட்டைக்காரர்கள், சர்க்கஸ் போன்ற பல சாகச வித்தைகள் இப்போது பெரிய அளவில் நடப்பதில்லை. அவ்வாறான சாகச நிகழ்ச்சிகளில் நான் பல காலம் பார்க்காத ஒரு சாகசக்காரர் சைக்கிள் சுத்துபவர். ஊரின் பொதுவான இடத்தில் இவர் சைக்கிளில் இருந்து கீழே இறங்காமலேயே ஓரிரு நாட்கள் சுத்துவார். குளியல் சாப்பாடு எல்லாமே சைக்கிளில் வைத்து தான் நடைபெறும். சிலசமயம் பெண்களும் அவ்வாறு செய்வார்கள். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் அவர் ஊருக்குள் வந்து நன்கொடை வசூலிப்பார். மிகவும் சொற்பமான தொகைக்காக அவர்கள் செய்த அந்த சாகசத்தை நினைத்தால் இப்போது வேதனை தான் மிஞ்சுகிறது.

செருப்பு தைப்பது; ஸ்டாவ் / கடிகாரம், ரிப்பேர் செய்வது போன்ற தொழில்கள் நலிவடைந்துள்ளன. திருமணங்கள் மண்டபங்களில் நடைபெறுவதால் பந்தல் அலங்காரம், ஒளி ஒலி அமைப்பு தொழில்கள் நலிவடைந்துள்ளன. அதற்கு மாறாக காஸ் அடுப்பு/ ஏசி ரிப்பேர் செய்வது போன்ற பல புதிய தொழில்கள் வந்துள்ளன. வாழ்வில் மாற்றம் என்றுமே நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது.

தொடரும்…

கட்டுரையாளரின் மற்ற கட்டுரை:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.