சாப்பாடு என்று நினைக்கும் போது என் அப்பம்மா சொன்ன கதை ஓன்று நினைவிற்கு வருகிறது.

கிராமத்தில் ஒரு குடிசை வீடு. அதில் நடுத்தர வயது கணவன் மனைவி வாழ்ந்து கொண்டிருந்தனர். காலமோ பஞ்ச காலம். ஊரே, சாப்பிட எதுவுமில்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் நள்ளிரவில் திருடன் ஒருவன் அந்த வீட்டினுள் நுழைந்தது விட்டான். திருடன் என்றால் அவன் ஏதோ கத்தி வைத்துக் கொண்டு ஊரையே மிரட்டும் திருடன் என்று நினைக்க வேண்டாம். அவன் ஒரு பஞ்சத்துத் திருடன். வீட்டின் வறுமை தாங்காமல் திருட வந்தவன். திருடன் உள்ளே நுழைந்ததை அப்பெண் பார்த்து விட்டார். அவர் வீட்டிலும் திருடுபோகும் அளவிற்கு எதுவும் இல்லை. அதனால் திருடன் என்ன செய்கிறான் என்பதை பார்த்துக் கொண்டிருந்தார். திருடன், ஒவ்வொரு இடமாக தேடிக்கொண்டிருந்தான். அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒரு பானையில் கொஞ்சம் கூரவு (கேழ்வரகு) இருந்தது. அந்த கூரவை எடுத்துச் சென்றால் மறுநாள் தன் குடும்பம் பசியாறலாம் என நினைத்தான்.

கூரவை தன் இடுப்பில் இருந்த நான்கு முழம் வேட்டியில் கட்டிக்கொண்டு போகலாம் என நினைத்தான். வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டே கூரவை அவனால் கட்ட முடியவில்லை. அதனால், இருள் தானே என நினைத்து வேட்டியை கீழே விரித்து கூரவைக் கட்டிக் கொண்டு வேட்டியைத் தன் இடுப்பில் கட்டிக்கொள்ளலாம் என நினைத்து, வேட்டியை கீழே விரித்தான், வீட்டுக்காரப் பெண் அவ்வேட்டியை இழுத்து எடுத்துக் கொண்டார். திருடன் ஏற்கனவே வேட்டியை விரித்திருந்த இடத்தில் கூரவைக் கொட்டிவிட்டு வேட்டியைத் தேடினான். வேட்டி அவனுக்குக் கிடைக்கவில்லை. இனி நிர்வாணமாக வெளியே செல்லமுடியாது.

கேழ்வரகு, wikipedia

துணி ஏதாவது கிடைக்குமா எனது யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டுக்காரர் விழித்து விட்டார். விழித்த வீட்டுக்காரருக்கு மீண்டும் உறக்கம் வரவில்லை. எனவே பாட ஆரம்பித்தார்.

மனைவி அவரிடம், “நடு ராத்திரியில் ஏன் கத்துகிறீர்கள்” என்றார்.

கணவனோ, “தூக்கம் வரவில்லை என்றார்.”

மனைவி, “தூக்கம் வரவில்லை என்றால் அந்த தம்பியைப் போல சும்மா இருக்க வேண்டியது தானே” என்றார்.

அப்போது தான் திருடனுக்கு, அவர் ஏற்கனவே விழித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பது தெரிய வந்தது. தான் ஆடையின்றி இருப்பதையும் மறந்து ஓடினான். இந்த கதை என் சிறு வயதில் நகைச்சுவை கதையாகத் தெரிந்தது. இப்போது யோசித்துப் பார்க்கும் போது அக்காலத்து வறுமை நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாகத் தெரிகிறது.

கஞ்சி குடித்து வாழ்ந்த காலம்

எங்கள் அப்பா அம்மா காலத்தில், காலை உணவு என்பது பெரும்பாலும் பழைய கஞ்சி அல்லது அருந்தானிய காடியாகவே இருந்திருக்கிறது. பொங்கிய சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு மறுநாள் குடித்தால் அது பழைய கஞ்சி. எல்லா அரிசி கஞ்சியும் சுவையாக இருக்காது. சம்பா, மட்டச் சம்பா எனும் கேரளா அரிசி போன்றவற்றின் கஞ்சி சுவையாக இருக்கும். எங்கள் ஊரில் கேரளா அரிசியை கொட்டாரஞ் சம்பா என்றே அழைப்பார்கள். இட்லி அரிசி கஞ்சி சுமாராக இருக்கும்.

வீடுகளில் சோற்றுப் பானையை இரவில் கழுவ மாட்டார்கள். இரவில் பானையில் சோறு இல்லை என்றால் மறுநாள் காலை உணவிற்கு உணவு இல்லாத அளவிற்கு வறுமை தாண்டவமாடுவதாக பொருள். ஆனால் பிற்காலத்தில், இட்லி தோசை பரவலாக சாப்பிடத் தொடங்கியதும், காலையில் கஞ்சி குடிப்பது மட்டரகமாக பார்க்கப்பட்டது. அதுவரை வசதியானவர்கள் உணவாக கருதப் பட்ட கஞ்சி, ஏழைகளின் உணவாக
பார்க்கப்பட்டது. இப்போது காலை கஞ்சி குடிப்பது உடலுக்கு நல்லது என்கிறார்கள். என்ன சொல்வது?

இதைச் சொல்லும் போது ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது. விமான பயணத்தின் போது, ஓரிரு வகையான உணவுகள் கொடுப்பார்கள். நமக்குத் தேவையான வகையை பயணத்திற்கு முன்பே, நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். Hindu Meal என்பார்கள், Vegetarian Meal என்பார்கள், எதுவுமே நன்றாக இருக்காது. ஆனால், அவர்களாக கொடுக்கும் உணவில் Dinner Roll எனப்படும் Bun பொதுவாக இருக்கும். அதனால் அதை சாப்பிட்டு காலத்தைக் கடத்தி விடலாம் என்ற நோக்கத்தில், இந்த தடவை நான் முன்கூட்டியே எதையும் தெரிவு செய்யவில்லை.

காலை உணவு நேரம் வந்தது. விமானப் பணிப்பெண், ” முட்டை காஞ்சியும், சிக்கன் காஞ்சியும் இருக்கிறது. உனக்கு என்ன வேண்டும்?”, எனக் கேட்டாள்.

மேற்கத்திய காலை உணவுகளில், பொதுவாக ஆம்லெட் மற்றும் ஏதாவது ஒரு வகை பிரட் இருக்கும். காஞ்சி என்பது குபூஸ் மாதிரி ஏதோ ஒரு வகை பிரட் என நினைத்து முட்டையைத் தெரிவு செய்தேன்.

முட்டைக் காஞ்சி, Huffpost

உணவு ஒரு அழகிய கிண்ணத்தில் நன்கு மூடி வைத்து வந்தது. திறந்த பிறகு தான் தெரிந்தது, காஞ்சி, காஞ்சி என அவள் சொன்னது நமது ஊர் கஞ்சி. அதில் முட்டையைக் கிளறிப்போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். சிக்கன் கஞ்சி என்றால் கூட நமது நோன்பு கஞ்சி போல இருந்திருக்கும். இது வாயில் வைக்கமுடியவில்லை. வழக்கம் போல கையில் இருந்த பிஸ்கட்டை டீயில் முக்கி சாப்பிட்டேன். வேறு வழி? இவ்வாறாக கஞ்சி இன்று அனைத்துலக உணவாக மாறியிருக்கிறது என்ற பாடம் படித்துக் கொண்டேன்.

இனி நமது கஞ்சி கதைக்கு வருவோம். கஞ்சிக்கு கூட்டு என பெரிதாக ஒன்றும் இருக்காது. மிளகாய், பொடி, உள்ளி, சுட்ட கருவாடு, துவையல் போன்றவையே இருந்திருக்கின்றன. நேரம் இருக்கும் நாட்களில் அருந்தானிய தோசை சுடுவது உண்டு. முந்தைய நாளின் குழம்பு சேர்த்து பெரியவர்கள் சாப்பிடுவர். குழந்தைகள் கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவர். குழந்தைகளுக்கு கருப்பட்டி சேர்த்து இனிப்பு தோசை சுடுவது உண்டு.

அதேபோல கார இனிப்பு பணியாரமும் செய்வதுண்டு. வெளி ஊர்களில், குழிப்பணியாரம் என அழைக்கப்படும் பணியாரம் ஊரில் தடவு பணியாரம். ஏனெனில் எண்ணையை பணியார சட்டியில் தடவதான் செய்வார்கள். நன்கு பழகிய மண்சட்டி என்பதால், சுலபமாக எடுக்க வரும். பண்டிகை நாள்களில், மட்டும் எங்கள் பாட்டிமார் விடியற்காலையில் எழுந்து தோசை சுடுவார்கள்.

அரிசி குத்திய காலம்

அரிசி என்பது ஒரு பொதுப் பெயர். உமி மூடியுள்ள தானியத்தின் உமியை, நீக்கிய பின் உள்ளிருப்பது அரிசி. நெல்லை அவித்து காய வைத்து அரைத்து அரிசி ஆக்கினால் அது புழுங்கல் அரிசி. சாப்பாட்டு அரிசி, இட்லி அரிசி என தனியாக இல்லாமல், ஒரே அரிசியைப் பயன்படுத்திய காலகட்டம் அது. அதனால், அரிசி அரைக்கும் போது சிறிதளவு ஆமணக்கு விதை சேர்த்து அரைப்பார்களாம். தோசை சுடும் வாசனை வந்ததும் குழந்தைகள் அனைவரும் எழுந்து விடுவார்கள். தோசை சுட்டு நார்பெட்டியில் அடுக்கி வைப்பார்கள். இடையிடையே சுடசுட தின்பதும் உண்டு. சுட்டு முடித்ததும் கூடி இருந்து சாப்பிடுவார்கள்.

தோசை தான் சுடுவார்கள். ஏனென்றால் இட்லி கொப்பரை வாங்கும் வசதி அவர்களுக்கு இல்லை. இட்லி பொதுவாக கல்யாண வீடுகளில் மட்டும் தான். ஆனால், காலங்காலமாகவே இட்லி தான் தமிழர்களின் அன்றாட உணவு என்பது போன்ற கற்பிதங்கள், வெளி மாநிலங்களில் உள்ளன. பச்சரிசி விலை அதிகம். அதனால், ஆப்பம் சுடுவது, புட்டு இடியாப்பம் அவிப்பது மிகவும் குறைவாக இருந்திருக்கிறது.

இட்லி, ஆப்பம் சுட்டு விற்பவர்கள் ஊருக்கு ஊர் உண்டு. அந்த இட்லி, ஆப்பம் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் மட்டுமே வாங்கிக் கொடுப்பார்கள். அதாவது காய்ச்சல் வந்தால் இட்லி, ஆப்பம் கிடைக்கும் என்ற நிலை தான் இருந்தது. அதே போல காப்பி வீட்டில் போடுவதும் அரிதாகவே இருந்திருக்கிறது.

காபி என்றால் கருப்பட்டி காபி தான்!

கருப்பட்டி காபி, MammasClub

எங்களின் இளமைக் காலத்தில், காலை காபி குடிப்பது பலரது வழக்கம் ஆகிவிட்டது. தேநீர் எல்லாம் கடைகளில் மட்டும் தான். என் அம்மா டீ போட்டு நான் குடித்ததே இல்லை. காபி என்றால் இன்றைய காபி போல் இன்ஸ்டன்ட் காபி எல்லாம் கிடையாது. கருப்பட்டி காபி தான். அப்போது கருப்பட்டி சீனியை விட மிகவும் விலை மலிவு. நியாய விலைக் கடையில் ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ என சொல்லி 800 கிராம் சீனி கிடைக்கும். அச்சீனியைக் காபி போடுவதற்குப் பயன்படுத்துவது இல்லை. அதைத்தான் சேமித்து வைத்து ஏதாவது சீனி பண்டம் செய்வார்கள்.

பெரும்பாலான வீடுகளில் பெரிய பெரிய மண் பானைகளில் கருப்பட்டி சேமித்து வைத்திருப்பார்கள். கடையில் கருப்பட்டி வாங்குபவர்கள் கருப்பட்டியை உடைத்து பானையில் போட்டுவைப்பார்கள். வீட்டில் கருப்பட்டி இருப்பவர்கள் கூப்பயினியைச் சரியான பதத்தில் பானையில் ஊற்றி விடுவார்கள். கூப்பயினி என்பது கூழ் பதநீர் என்பதன் வழக்குச் சொல்.

காபித்தூள், சுக்குப் பொடி, மல்லிப் பொடி கலந்து வைத்துக் கொள்வார்கள். அந்தக் கலவைப் பொடி தான் காப்பிப் பொடியாகப் பயன்படும். எல்லாம் சிக்கன நடவடிக்கை தான். இது உடலுக்கு நல்லது; அது உடலுக்கு நல்லது என யாரும் சொல்லி கேட்டதே இல்லை. தனியாக காப்பித்தூள் காபி போட்டால் அதன் நிறம் அடர்ந்ததாக இருக்கும். அதனால் பால் அதிகம் சேர்க்க வேண்டும். அப்போது பால் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது. அதனால் அவர்கள் செய்த சிக்கன நடவடிக்கை தான் அது.

பெரும்பாலான வீடுகளில் நூறு, இருநூறு மில்லி பால் தான் வாங்குவார்கள். வீடுகளில் மாடு வளர்ப்பவர்களிடம் பால் வாங்குவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவு பால் வாங்க முடியாது. யாராவது விருந்தினர் வந்தால் பெரும்பாலும் பாலில்லா கடுங்காப்பி தான். அல்லது கடையில் காப்பி வாங்கவேண்டும். பால் எந்த கடையிலும் கிடைக்காது. பால் குடிக்கும் குழந்தைகள் வந்தால் பக்கத்து வீட்டார்கள் தாங்கள் தங்கள் தேவைக்கென வாங்கும் பாலைக்கொடுப்பார்கள்.

இன்றும் இரவில் பால் பிறருக்கு கொடுக்கவோ வாங்கவோ கூடாது என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஏன் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பவர்கள், தேவையான பால் வைத்துக் கொள்ளவில்லை என்றால், அது பொறுப்பற்ற செயல். அதே போல குழந்தைகளுக்காக வைத்துள்ள பாலை போய்க்கேட்பதும் பொறுப்பற்ற செயல். அதைத் தான் இன்றும் பின்பற்றுகிறார்கள்.

காலை உணவு

காலை உணவு என்று எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் எளிதாக விரைவாக செய்யக்கூடிய உணவுகளே செய்யப்பட்டன. வகை வகையான சமையல் எதுவும் கிடையாது. ஏனென்றால் சமையலில் செலவிட அவர்களுக்கு நேரம், பணம் இருந்ததில்லை.

பெரும்பாலும் பயறு வகைகள், மரச்சீனி கிழங்கு, சீனிக்கிழங்கு போன்றவற்றை அவித்து சாப்பிடுவது வழக்கம். அதற்கும் நேரம் இல்லை என்றால் பழங்கள் வெட்டி சாப்பிடுவது, பொரி கடலையையும் முருக்கையும் சேர்த்த சாப்பிடுவது போன்ற வழக்கமும் உண்டு.

நகரத்தில் வாழ்பவர்களுக்கு இவை புரியாது. நகரத்தில் வாழ்ந்து வந்த என் உறவினர் ஒருவர், காலை உணவாக நாங்கள் பழங்கள் பொரி (பொட்டு) கடலை சாப்பிடுவதைக் கேலி செய்வார்கள். ஆனால் இப்போது நகரவாசிகள் பலர், காலை உணவாக பழச் சாறு, சீரியல் சாப்பிடுகிறார்கள். இரண்டிற்கும் என்ன வேறுபாடு எனது தெரியவில்லை.

உப்புமா

சில நாட்களில், ரவை (உப்புமா) கிண்டுவார்கள். அனைத்து உப்புமா வகைகளும் ஊரில் பொதுவாக ரவை என்றே அழைக்கப் படும். ரவை என பிற ஊர்களில் குறிப்பிடப்படும் ரவைக்கு வெள்ளை ரவை, பம்பாய் ரவை எனப் பெயர். அப்போது அமெரிக்காவின் கேர் (Care) நிறுவனம் கோதுமை ரவை இலவசமாக அனுப்பியது. அது பள்ளியில் மதிய உணவாக, ஒரு நாள் உளுந்தங்கஞ்சியும் மறுநாள் ரவையும் என மாறி மாறி வழங்கப்பட்டது.

குடி மராமத்து என்னும் குளம் வெட்டுதல், ஊர் கிணறை ஆழப் படுத்துதல் போன்ற வேலைகளுக்கு சம்பளமாகவும் அந்த கோதுமை ரவை கொடுக்கப் பட்டது. அந்த ரவையை, வேலைக்கு போகும் மக்கள் எங்களுக்கு விற்பார்கள். அதிலும் ரவை (உப்புமா) கிண்டுவார்கள்.

மாவு அரைத்தல்

எங்கள் காலத்தில், ஞாயிற்றுக் கிழமைகளில் இட்லி, தோசை கிடைத்தன. நாங்கள் வீட்டிலேயே மாவை ஆட்டிக் கொள்வோம். சிறிது காலத்திற்குப் பின் ஊரில் கிரைண்டர் வைத்து மாவு அரைத்துக் கொடுக்கும் தொழில் அறிமுகமானது. அதன் பிறகு வீட்டில் மாவு அரைப்பது நின்று போனது. இன்று வீட்டுக்கு வீடு கிரைண்டர் வந்து விட்டது. ஆனால் மாவு வாங்குவது என்னவோ கடையில் தான். முதலில் இட்லி கொப்பரை வாங்க வசதியில்லாத மக்கள் தோசை மட்டுமே சுட்டுக் கொண்டிருந்தார்கள்.

இட்லிக் கொப்பரை, amazon.in

பின் இட்லி கொப்பரை வாங்கும் வசதி வந்தது. வீடுகளிலும் இட்லி அவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த இரண்டு தட்டுகள் கொண்ட வெண்கல இட்லி கொப்பரையில் ஒரே நேரத்தில் ஆறு பெரிய இட்லிகள் வைக்கலாம். நெல்லை அவித்து காய வைத்து அரைத்து அரிசி ஆக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்கும் போது சிறிது குறைவான நேரம் வேக வைத்தால், அது இட்லி அரிசி . அரிசியின் உட்பகுதி (வயிற்று வெள்ளை) வெண்மையாக இருக்கும்.

உளுந்தம் பருப்பு என எடுத்துக் கொண்டால், வீடுகளில், முழு உளுந்தை வாங்கி திரியலில் போட்டு இரண்டு இரண்டாக உடைப்பார்கள். அதை மண் பானைகளில் ஒரு வருடத்திற்கு சேமித்து வைப்பார்கள். இந்த பருப்பில் வடை சுட்டால் எண்ணெய் அதிகம் குடிக்கும். ஏனென்றால் இந்த பருப்பிலிருந்து தோலை நீக்க சிறிது அதிக நேரம் ஊற வைக்க வேண்டும். அதிக நேரம் ஊறவைத்த பருப்பு அதிக எண்ணெய் குடிக்கும். உளுந்தை நல்லெண்ணையில் பிரட்டி சிலகாலம் வைத்துவிட்டு உரலில் இட்டுக் குத்தினால் தோல் நீங்கிவிடும். அதனால் தோல் எடுத்த உளுந்தை, குத்துப் பருப்பு என்பார்கள். அதை வடை சுடப் பயன்படுத்தலாம். நல்லெண்ணையில் பிரட்டி வைத்தால் பூச்சியும் வராது. ஆனால் மாவு பொங்கி வருவது குறையும். அதனால், இட்லி தோசைக்கு தோல் உள்ள உளுந்து தான்.

தோல் உளுந்து

தோலுடன் இருக்கும் உளுந்தம் பருப்பை பிசைந்தால், ஏறக்குறைய நான்கு மணிநேரத்திற்குப் பின் தோல் தனியாக வர ஆரம்பிக்கும். அதைக் களைந்தது எடுக்க, எடுக்க வெள்ளை உளுந்தம் பருப்பு தனியாக வரும். வெள்ளை உளுந்தை விட இந்த உளுந்தில் மாவு மிக அதிகமாக சுவையாக இருக்கும். முழுமையாக தோலை எடுக்காமல், அரைகுறையாக எடுத்தால், இட்லி தோசை நிறம் சிறிது கருப்பாக இருக்கும். ஆனால் சுவை அபாரமாக இருக்கும். அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஆட்ட வேண்டும். ஆட்டிய பின் உளுந்து மாவை அதிக நேரம் தனியாக வைத்தால் அதன் பொங்கி வரும் தன்மை குறையும். அதனால் முதலில் அரிசியை ஆட்டுவது நல்லது.

கிரைண்டரில் கொண்டு போய் கொடுத்து அறைக்கும் போது குறைந்தது கட்டணமே 1/2 பக்கா அளவிலிருந்து தான் ஆரம்பித்தது. அதனால் 1/2 பக்கா மாவு அரைத்து விடுவார்கள். பல வீடுகளில் இரண்டு நாட்களுக்கு வைத்துக் கொள்வார்கள். சிலர் முதல் நாள், இட்லி அவிப்பார்கள், மீதி மாவை தண்ணீரினுள் வைத்துவிட்டு மறுநாள் தோசை சுடுவார்கள். தண்ணீரினுள் வைத்தால் மாவின் புளிக்கும் தன்மை குறையும். ஆனாலும் புளிப்பு சிறிது அதிகமாகவே இருக்கும்.

என் அம்மா முதல் நாள் தோசை சுட்டுத் தருவார்கள் மீதி மாவை அன்றே இட்லியாக அவித்து வைத்துவிடுவார்கள். மறுநாள் சிறிது நேரம் ஆவியில் வேக வைத்தால் ஏறக்குறைய புதிய இட்லி போன்றே இருக்கும். மீதி மாவு இருந்தால் அன்று இரவே வெங்காயம், கறிவேப்பிலை, மிளகாய் கலந்து சுட்டு சாப்பிட்டு விடுவோம். பெரும்பாலான வீடுகளில் தேங்காய் பொரிகடலை சேர்த்து சட்னி வைத்து சாப்பிடுவது தான் வழக்கம். சில வீடுகளில் காரமாக சாப்பிட நினைப்பவர்கள் இட்லி பொடி தொட்டும், இனிப்பாக சாப்பிட நினைப்பவர்கள் சீனி தொட்டும் சாப்பிடுவதுண்டு.

சாம்பார்

சாம்பார் எல்லாம் அரிது தான். சாம்பாருக்குப் போடும் காய்கறி வைத்து அவியல் செய்து விடலாம் என நினைப்பார்கள். அதனால் வீட்டில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானால் தான் சாம்பார். நான் பம்பாயில் இருக்கும் போது கிண்டலாக இட்லி சாம்பார் என என்னைக் கூப்பிடுவார்கள். அப்போது எனக்குத் தெரியாது சாம்பார் என்பது ஒரு மராட்டிய குழம்பு வகை என்று. அங்கு சாம்பாரை ‘அம்டி’ என அழைக்கிறார்கள்.

சங்க காலத்திலிருந்தே பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து சமைக்கும் வழக்கம் இருந்தாலும், மராட்டியர்கள் தஞ்சையை ஆண்ட போதுதான் இன்றைய சாம்பார் வடிவம் தமிழகத்திற்கு அறிமுகமானது. மன்னர் சாம்பாஜியின் பெயரைக் கொண்டே சாம்பார் எனப் பெயர் பெற்றது.

ஆப்பம்

pinterest

சில நாட்கள் ஆப்பம் சுடுவார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ஊருக்கு வெளியே கள்ளுக்கடை இருந்தது. அவர்களிடம் போய் கேட்டால் ஆப்பத்திற்கு என கால் கப் கள் தருவார்கள். கள் சேர்த்தால் ஆப்பம் நன்றாக இருக்கும். பதநீர், கள் சேர்த்தால் சோடா உப்பு சேர்க்கத் தேவையில்லை. அக்காலத்தில் பச்சரிசி விலை அதிகம். அதனால், ஆப்பம் சுடுவது, புட்டு இடியாப்பம் அவிப்பது மிகவும் குறைவு. ஆப்பம் மாவு ஆட்டி சுடுவதும் உண்டு. மாவு இடித்து கஞ்சி காய்த்து செய்வதும் உண்டு. ஆப்பம் சுடுவதற்கு என இரும்புச் சட்டி வைத்திருப்பார்கள். அதில் வேறு எதுவும் சமைக்க மாட்டார்கள். அப்படி சமைத்தால் ஆப்பம் சரிவர வராது.

மாவு இடித்தல், wiktionary

மாவு இடிப்பது ஆட்டுவதை விட சிரமமானது. புதிதாக இடிப்பவர்கள், இடிக்கும் போது இரண்டு கையை சேர்த்துப் பூட்டி பிடிப்பார்கள். உலக்கை அழுத்தமாக அரிசிக்கு உள்ளே போகும். அதனால், அரிசி உரலுக்குள் சக்கென்று பிடித்துக்கொள்ளும். அதனால், இடையிடையே கிளறி விட்டுக் கொள்வார்கள். நன்கு பழகியவர்கள் இரு கைகளையும் மாற்றி மாற்றி ஒரே தாளத்தில் இடிப்பார்கள். உலக்கை ஒரே சீராக, உரலுக்குள், அவர்கள் நினைத்த இடத்தில், நினைத்த வேகத்தில், விழும்.

மாவு வெளியே தெறிக்காமல் இருப்பதற்காக மேலே உறைப் பெட்டி என ஒன்று வைப்பார்கள். சில இடங்களில் இதன் பெயர் குந்தாணி என சொல்லுவார்கள் என நினைக்கிறேன். ஆனால், உறைப் பெட்டி என்பது அழகான வார்த்தை. உறை கிணறுகளில், மணல் சரிந்து விழாதிருக்க பயன்படுத்தும் வளையங்கள் போல, மாவு வெளியே சிதறாமல் இருப்பதற்கு நார் வைத்து செய்யப்படும் வளையம் உறைப்பெட்டி. பொதுவாக மாவு இடிப்பதற்கு நார் வைத்தும் அரிசி குத்துவதற்கு நாகத்தகடு எனப்படும் துத்தநாகத் தகட்டிலும் உறைப் பெட்டி இருக்கும்.

80 களில் நியாய விலைக் கடைகளில் பச்சரிசி கொடுத்தார்கள். இந்த காலகட்டத்தில், ஈர அரிசியை மாவாக்கும் இயந்திரங்களும் அரிசி ஆலைகளில் வந்து விட்டன. அதன்பின் புட்டு, தினசரி உணவுகளில் ஒன்றாக மாறியது. சப்பாத்தி பூரி போன்றவை மும்பைவாசிகளால் ஊருக்கு அறிமுகமானது. குருமா வைக்கும் வழக்கம் எல்லாம் மிகவும் பிற்காலத்தில் தான் வந்தது. பட்டாணி பித்தம் என்பதால், பட்டாணி குருமாவில் மல்லி அதிகம் சேர்ப்பார்கள். இப்படி காலைச் சிற்றுண்டி காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே தான் வருகிறது.

***

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.