கல்லூரிக் கல்வி என்பது கிராம மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த காலகட்டத்தில், 60களின் இறுதியிலேயே கள்ளிகுளம் (நெல்லை மாவட்டம்) ஊர் மக்கள் இணைந்து கல்லூரி தொடங்க வேண்டும் என முயற்சி செய்தார்கள். இதற்காக 40 ஏக்கர் நிலத்தை மக்களிடமிருந்து இலவசமாக அவ்வூர்தேவாலய நிர்வாகம் பெற்றது. நிலம் கொடுத்தவர்கள் அனைவரும் ஏழைகள். பலர் தங்களது வாழ்வாதாரமாக இருந்த ஒரே நிலத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

நிலத்தைக் கையகப்படுத்திய ஆலய நிர்வாகம், பணத்தை சேகரிக்க ஆரம்பித்தது. பிச்சை எடுக்காத குறை தான். வெளியூரில் வாழ்ந்தவர்கள் தாராளமாக பணம் கொடுத்தனர். நாம் தான் வெளியூரில் வந்து வாழ்கிறோம். அடுத்த தலைமுறையாவது ஊரில் நன்றாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அப்போது மும்பையில் இருந்த, ஊரின் முன்னோடிகள் பலரும் எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவர்கள், அங்கு இருந்த மில்களில் வேலை செய்தார்கள். ஏனென்றால் அப்போது கள்ளிகுளத்தில் உயர்நிலைப் பள்ளி கிடையாது.

உயர்நிலைப் பள்ளி வந்த பின், SSLC படித்த சிலர் மும்பை, சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து தட்டெழுத்து, சுருக்கெழுத்து படித்து (அந்த காலத்தில் வெளியே படிக்க முடியாது. அலுவலகத்தில் மேலதிகாரி மனம் வைத்தால் தட்டெழுத்து இயந்திரத்தைப் பயன்படுத்த முடியும். அப்போது காகிதம், மை வீணாகும் என பல மேலதிகாரிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்) படிப்படியாக முன்னேறினர். அவர்களது வருமானத்திற்கு, குடும்பத்தை நிரந்தரமாக தங்களுடன் வைத்துக்கொள்ள முடியாது. அதனால் பெரும்பாலும் குடும்பம் ஊரில் தான் இருக்கும். அவர்கள் ₹ 50 – 100 வரை ஊருக்கு அனுப்பினர். அது அப்போது மிகப் பெரிய பணமாகக் கருதப்பட்டது.

ஒரு சிலர் மட்டும் மலேசியாவில் இருந்தனர். அவர்கள் குடும்பங்கள் கொஞ்சம் வசதியான நிலையில் இருந்தன. மற்றபடி ஊரில் ஆசிரியர்களாக இருந்தவர்களும் கொஞ்சம் வசதியான நிலையில் இருந்தார்கள். இவ்வாறு இருந்த சூழ்நிலையில்தான் தங்களால் இயன்ற அளவிற்கு மக்கள் நன்கொடை கொடுத்தனர்.

‘ கௌசானல் கல்லூரி’ என்ற பெயரில் கல்லூரி தொடங்கப் பட்டது.

யார் இந்த கௌசானல்? நெல்லையில் 100 ஆண்டுகளுக்கு முன்பே பல எதிர்ப்புகளையும் தாண்டி கல்விக்கு வித்திட்டவர் கௌசானல் அடிகள். பிரான்சு நாட்டில் 1850 ம் ஆண்டு பிறந்தவர் இவர், தமிழகத்திற்கு சமயப்பணியாற்ற வந்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வை அகற்றி, சமத்துவம் நிலவ தொடர்ச்சியாக பாடுபட்டார். வடக்கன்குளம் தேவாலயத்தின் தீண்டாமைச் சுவரை இடித்ததில் கௌசானல் அடிகளின் பங்கு அளப்பரியது. கௌசானல் அடிகளார் 1910ம் ஆண்டுவாக்கில் கள்ளிகுளத்திலும் பங்குத் தந்தையாகப் பணியாற்றினார். இன்றும் கள்ளிகுளத்தில், கௌசானல் அடிகளார் பெயரில் ஒரு மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. 1930ம் ஆண்டு கௌசானல் அடிகளார் இறந்தார்.

கௌசானல் பெயரால் தொடங்கப்பட்ட கல்லூரியைத் தொடர்ந்து நடத்தும் அளவிற்கு ஊர் மக்களின் நிதி நிலைமை இடமளிக்கவில்லை. அதனால், கல்லூரி திருநெல்வேலி தக்ஷண மாற நாடார் சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அதுவரை திரட்டியிருந்த பணம், நிலம், கட்டடம் அனைத்தும், சங்கத்திற்கு, ஊர் மக்களால் நன்கொடையாக வழங்கப் பட்டது. இன்று, கல்லூரி, திருநெல்வேலி தக்ஷண மாற நாடார் சங்க கல்லூரி (TDMNS) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. நான் படிக்கும் போதுகூட, ஏர்வாடி, நாங்குநேரி, மன்னார்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, பணகுடி என மிகப் பெரிய வட்டாரத்திற்கு இருந்த ஒரே கல்லூரி அது தான். இதனால் மட்டுமே கல்லூரியில் கால் வைத்த அருகாமை ஊர் ஏழைகள் ஏராளம்.

TDMNS

நாங்கள் படித்த காலத்தில், கல்லூரி, ஊரின் மேற்கு எல்லையில் ஏறக்குறைய காட்டில் தான் இருந்தது. இப்போது இடையிடையே வீடுகள் வந்துவிட்டன. ஊரின் தொடக்கத்தில் கல்லூரி, சிறிது இடைவெளியில் சர்வோதயம், சிறிது இடைவெளியில் மேல்நிலைப் பள்ளி, கன்னியர் மடம் என ஊரின் குடியிருப்பு பகுதி தொடங்கும் வரை சில கட்டடங்களே இருந்தன. சாலையின் தெற்குப்பக்கம் கல்லூரி இருக்கிறது. சாலையை ஒட்டி மிகப்பெரிய வளாகம் இருக்கும். கல்லூரியின் முன்பக்க சுற்று சுவரின் ஏறக்குறைய மேற்குப் பக்கம், மிகப்பெரிய இரும்புக் கதவு; கதவில் இருந்து தொடங்கும் நடைபாதையின் இருபுறமும் வரிசையாக யூகலிப்டஸ் மரங்கள் கல்லூரி கட்டடம் தொடங்கும் இடம் வரை நிற்பதைப் பார்த்தால் ஏதோ பள்ளிக் குழந்தைகள் கைகோத்து அணிவகுப்பில் நிற்பது போல இருக்கும்.

கல்லூரி வளாகத்தில் மரங்கள், collegesignal.com

கட்டடத் தொகுப்பின் அமைப்பு, ஏறக்குறைய ‘ஈ’ எழுத்தை கிழக்கு நோக்கி எழுதியது போல இருக்கும். பொதுவாக வகுப்புகள் வாசலை நோக்கியே இருக்கும். அதனால், வராண்டாவில் வருவோர் போவோர்; அவ்வளவு ஏன் எதிர் வகுப்பறையில் என்ன நடக்கிறது என்பதைக் கூட வேடிக்கை பார்க்கும் விதமாகத்தான் வகுப்பறை இருக்கும். கல்லூரியின் பின் பக்கம் உடை மரங்கள் நிறைந்த உடங்காடு. கல்லூரியின் கிழக்குப் பக்கம் மாணவர் விடுதி. மாணவிகளுக்கு விடுதி கிடையாது. ஆனால், மிகவும் தேவையானவர்கள் சிலருக்கு கன்னியர் மடத்தில் தங்க இடம் கொடுப்பார்கள். ஆண்டுக்கு ஏழெட்டு மாணவிகள் அவ்வாறு படிப்பார்கள்.

நாங்கள் படித்த காலத்தில், BCom, MCom, BSc Maths, MSc Maths, BSc Botany, BA History, BA Economics வகுப்புகள் இருந்தன. நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான், BSc Chemistry வகுப்பு புதிதாக தொடங்கப்
பட்டது. இப்போது போல சீருடை எல்லாம் எங்களுக்கு கிடையாது. அப்போது, கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமாக இருந்தது. கல்விக் கட்டணம் வசூலித்ததாக நினைவில்லை. தேர்வுக் கட்டணம் மட்டும் உண்டு.

நாங்கள் முதலாம் ஆண்டு படிக்கும் போது, ஒரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் ரூபாய் எட்டாக இருந்தது. அதன் பிறகு ரூபாய் பதினொன்றாக உயர்ந்தது. அதற்குக் கூட நாங்கள் ஸ்ட்ரைக் செய்ததாக நினைவு. புத்தகங்கள் என எடுத்துக் கொண்டால், நூலகத்தில் நான்கு புத்தகங்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். பாடப்புத்தகம் என்றால், ஆண்டின் இறுதி வரை கூட வைத்துக்கொள்ளலாம். அதனால், பலர் புத்தகங்கள் விலைக்கு வாங்காமலேயே சமாளித்து விடுவார்கள்.

இது போக, கல்லூரியில் படித்த ஏழைகள் பலருக்கு, அரசு ஊக்கத்தொகை என சிறு தொகையும் கிடைத்தது. அதை வைத்து நோட்டுக்கள் வாங்கி விடலாம். இதைப் பெறுவதற்கு கல்லூரி அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்கள் கூப்பிட்டு, கூப்பிட்டு உதவுவார்கள். அதனால், நடந்து வந்து BCom, BA படித்தவர்கள் பலரும் இலவசமாகப் படித்தார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். BSc படித்தவர்களுக்கு ஆய்வகக் கட்டணம் உண்டு.

மாணவியர் விடுதி, புதுவரவு!, collegesignal.com

பேருந்தில் வருபவர்கள் தான் பேருந்திற்காக செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த காலகட்டத்திற்கு அது பெரிய தொகை. மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள் தான். அதனால் மாணவர்கள் முடிந்தவரை மிதிவண்டி வைத்திருப்பார்கள். அப்போதெல்லாம், பைக் அதிகம் கிடையாது. பேராசிரியர்கள் பெரும்பாலும் ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள். மாணவர்கள் சைக்கிள் அல்லது பேருந்தில் தான்
வருவார்கள். மாணவிகள், நடந்து அல்லது பேருந்தில் தான் வருவார்கள்.

கல்லூரி கள்ளிகுளத்தில் இருந்தாலும் அதில் படித்தோரில் பெரும்பான்மையானோர் வள்ளியூர் மாணவர்களே. தினமும் இரண்டு பேருந்து முழுவதும் பொங்கி வழியும் அளவிற்கு அவர்கள் வருவார்கள். ஆசிரியர்களும் பெரும்பான்மையோர் அங்கு தான் வீடு வாங்கிக் குடியிருக்கிறார்கள். கல்லூரிக்கு துலுக்கர்பட்டியில் இருந்து ஒரு பேருந்து வரும். அது முழுக்க முழுக்க கல்லூரிக்கான பேருந்து அல்ல. அதனால் கல்லூரி நேரத்தை ஒட்டி அது இயக்கப்படாது. அதில் வரும் மாணவர்கள், காலை மாலை இரு வேளையும் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் கல்லூரியில் காத்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் சிற்றுந்துகள் கிராமத்திற்கு கிராமம் கிடையாது. பல ஊர்களுக்கு காலை ஒருமுறை, மாலை ஒருமுறை தான் பேருந்து செல்லும். அதைக்கணக்கிட்டு தான் அனைவரின் பயணமும் இருக்கும்.

இவ்வாறு கல்லூரியில் மணிக்கணக்கில் காத்திருக்கும் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் தகுந்த பாதுகாப்பு வழங்கும். அவர்கள் வருவதற்கு முன்பே இரண்டு அக்காக்கள் வந்துவிடுவார்கள். அவர்கள், மாணவிகள் அனைவரும் பத்திரமாக கல்லூரியில் இருந்துவெளியேறிய பின் தான் வீடு போவார்கள்.

எங்கள் வணிகவியல் துறை தான் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கொண்ட துறை. கல்லூரி மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு நாங்கள்தான். பட்டம் வாங்கிய உடன் வங்கியில் வேலை கிடைக்கும்; பல்வேறு அலுவலகங்களில் வேலை கிடைக்கும் என கனவுகளுடன் படித்தவர்களுடன், வாழ்க்கையை விளையாட்டாக எடுத்துக் கொண்டவர்களும் படித்தார்கள். விளைவு, எந்தப் பிரச்னை என்றாலும் வேலை நிறுத்தத்தை முதலில் தொடங்குவது, எங்கள் வணிகவியல் துறை தான். இலங்கைத் தமிழர் பிரச்னை தொடங்கி பல பிரச்னைகளுக்காக வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம்.

ஆசிரியர்களில் பெரும்பான்மையானோர், முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகவோ, எளிய பின்புலத்தில் இருந்தோ வந்தவர்கள். அதனால், அவர்கள், அவர்களுக்கு மாணவர்களின் சிரமம் புரியும். அதனால், தங்களால் முடிந்த வரை மிகச்சரியாகவே மாணவர்களை வழிநடத்தினார்கள். விலைக்கு புத்தகங்கள் வாங்கத் தேவையில்லாத அளவிற்கு அவர்கள் குறிப்புகள் கொடுத்து விடுவார்கள். ஆசிரியர்கள் முயற்சி எடுத்து, மாணவர்கள் முயற்சி செய்யவில்லை என்றால், என்ன பயன்? விளைவு, எங்கள் வணிகவியல் துறையில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனாலும் பலரும் இன்று நல்ல பதவிகளில் இருக்கிறார்கள்.

NSS இல் அனைவரும் முதல் இரண்டு ஆண்டுகள் சேர வேண்டும். பொதுவாக களப்பணியாளர்களாக, அருகில் இருக்கும் கோவில் விழாக்களுக்குக் கூட்டிச்செல்வார்கள். கல்லூரி அருகில் இருக்கும் ஒரு கோவில் கட்டும் போது கட்டட வேலை செய்து இருக்கிறோம்.

ஆண்களும் பெண்களும் பேசக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. ஆனாலும் அவ்வளவு அதிகமாக பெண்கள் ஆண்களுடன் பேசியதில்லை. தேவைக்கு பேசுவதோடு சரி. மாணவிகளின் எண்ணிக்கை எந்த வகுப்பில் மிகவும் குறைவாக இருக்கிறதோ அந்த வகுப்பு மாணவிகள், மாணவர்களுடன் நன்கு பழகுவார்கள். அவர்களது தேவைக்கு மாணவர்கள் நன்கு உதவுவார்கள். சினிமாக்களில் காட்டுவது போன்ற காதல் ஜோடிகள் எல்லாம் இருந்ததாகத் தெரியவில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ஈர்ப்புகள் இருந்து இருக்கலாம்.

collegesignal.com

மாணவிகள் ஒய்வு எடுக்க என Waiting Hall இரண்டு இருந்தன. முதலில் ஓன்றுதான் இருந்தது. நாங்கள் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது தான் இரண்டாவதைக் கட்டினார்கள். Waiting Hall முன்னால் மரங்கள் உண்டு. எங்களது ஓய்வு நேரம் மர நிழலில் தான் செலவாகும். மிக இனிமையான இடம். Waiting Hall என்பது முன்பக்கம் வராண்டாவுடன் கூடிய மிகப்பெரிய அறை. உள்ளேயே இரண்டு கழிவறைகள். இந்தியா முழுவதும் இருக்கும் பிரச்னை கழிவறைதான். எங்களுக்கு அந்த பிரச்னையே கிடையாது. கழிவறை மிக சுத்தமாக இருக்கும். தினமும் மாலையும், மதியமும் தூய்மை செய்து விடுவார்கள். தண்ணீர் வசதி இருந்ததால், நாங்களும் நல்ல முறையில் அதைப் பயன்படுத்தினோம்.

கல்லூரிக்குள் நுழைந்தால், வகுப்பு முடிந்து வீட்டிற்குப் போகும் போதுதான் மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே செல்லலாம். கான்டீன் எதுவும் கிடையாது. நாங்கள் ஏதாவது கேட்டால், வேலை செய்யும் அண்ணன்கள், ஊருக்குள் சென்று வாங்கித் தந்து விடுவார்கள். இடையில் ஆசிரியர் வரவில்லை எனவோ வேறு எதற்காகவோ வகுப்பு இல்லையென்றாலும் Waiting Hall இல் தான் இருக்க வேண்டும். அதனால் அங்கு நாங்கள் செலவளித்த நேரம் மிக அதிகம். எங்களுக்குள் மிக நல்ல நட்பு இருந்தது. ஊர்க் கதை, உலகக் கதை, சினிமா, பாடல்கள், அரசியல், பத்திரிகை என பலதரப்பட்ட காரசாரமான விவாதங்கள் அங்கு நடைபெறும். எங்களில் பெரும்பான்மையானோர் வள்ளியூரில் இருந்து வந்ததால், ஊர்க் கதை என்று வரும்போது, வள்ளியூர் நிகழ்வுகள் தான் பெரிதும் பேசப்படும். அதனால், நாங்கள் போகாத தெருக்களின் நிகழ்வுகள், வரைபடங்கள் கூட எங்கள் மனதில் பதிந்துள்ளது; காற்றின் மொழி கதாநாயகியின் ஹரித்துவார் மாதிரி.

அப்போது எம் ஜி ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். மிக நீண்ட நெடுங்காலத்திற்குப்பின் அப்போது தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நமக்கு அறிமுகம் ஆனவர்களும் தெரிந்தவர்களும் தேர்தலில் நின்றதை முதலில் அனுபவித்தபோது, ஒவ்வொருவரைப் பற்றியும் எங்களுக்குள் நடைபெற்ற உரையாடல்கள் எல்லாம் காவியம் தான். வள்ளியூர், ராதாபுரம் இரு தொகுதிகளின் அ தி மு க வேட்பாளர்களின் மகள்களும் எங்களுடன் படித்தார்கள். அவர்களிடம் நாங்கள் பல அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தர்க்கம் செய்து இருக்கிறோம். சில நாட்கள் அந்த தர்க்கம் விரிவடைந்து Waiting Hall முழுவதும் சேர்ந்து விவாதிப்போம். எம் ஜி ஆர் அவர்கள் இறந்ததும் அந்த காலகட்டத்தில் தான். அப்போது கருணாநிதி அவர்கள், இலக்கியவாதியாகவே எங்களால் விவாதிக்கப்பட்டார்கள். பாலைவன ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களும், பொன்னர் சங்கர்
போன்ற தொடர்களும் பரவலாக விவாதிக்கப்பட்டன.

கல்லூரி நூலகத்தில் இலக்கியங்கள் முதல், பாக்கெட் நாவல் வரை அனைத்துப் புத்தகங்களும் உண்டு. பாடப் புத்தகங்களும் பல உண்டு. பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்வுகளின் வினாத் தாள்களை மொத்தமாகத் தொகுத்து வைத்திருப்பார்கள். அது தவிர நாங்கள் வேறு எந்த பாடம் தொடர்பான புத்தகங்களும் எடுத்ததே இல்லை. முழுக்க முழுக்க கதைப் புத்தகம்தான் எடுத்துப் படிப்போம். லட்சுமி, சிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், விமலா ரமணன், இந்துமதி போன்ற பெண்கள் எழுதிய குடும்பக் கதைகளைப் போலவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ரவீந்தர், தேவிபாலா போன்றவர்கள் எழுதிய கிரைம் நாவல்களும், பரபரப்பாக பேசப்பட்டன. சுஜாதா அப்போதுதான், அறிவியல் தொடர்பான கதைகள் எழுதத் தொடங்கினார் என நினைக்கிறேன். சிலர் அவரது அறிவியல் தொடர்பான கதைகளில் ஆர்வம் காட்டினாலும் பலர் அவரது கணேஷ்/ வசந்த் கதாபாத்திரத்திலேயே மூழ்கிக் கிடந்தனர். அகிலன், சாண்டில்யன், நா. பா, கல்கி என பல எழுத்தாளர்களின் தலையணை அளவில் இருந்த புத்தகங்களை எல்லாம் விடிய விடிய விழித்திருந்து படித்திருக்கிறோம்.

திரைப்படம் பற்றிய விவாதங்கள் கல்லூரியில் சூடுபிடிக்கும். திரைப்படம் வெளிவந்து ஒரு சில மாதங்கள் கழித்து, வள்ளியூர் திரையரங்கில் திரையிடப் படும். அதற்கு முன்பே, அனைத்துப் பத்திரிகைகளில் வரும் திரை விமரிசனங்கள் கொண்டு நாங்கள், திரைப்படம் குறித்து ஒரு பார்வை வைத்திருப்போம். சிலர் படம் பார்த்து வருவார்கள். அதை வைத்துக் கொண்டு விவாதம் நடக்கும். எங்கள் மத்தியில், நதியா, ரேவதி போன்றவர்கள் மிகவும் பிரபலம். ஆண்பாவம், உதயகீதம், ஒரு கைதியின் டைரி, பூவே பூச்சூடவா, உயிரே உனக்காக, ஊமை விழிகள், நிலவே மலரே, பாலைவன ரோஜாக்கள், புன்னகை மன்னன் மைதிலி என்னை காதலி, நீதிக்குத் தண்டனை, வேதம் புதிது, காக்கி சட்டை போன்ற படங்கள் மிகவும் விவாதிக்கப்பட்ட படங்கள். வில்லன் சத்யராஜ் குறிப்பாக காக்கி சட்டை சத்யராஜ் மிகவும் பேசப்பட்டவர்.

‘ வாழ்வது ஒருமுறை உனக்கென வாழ்வது முழுமை என்பேன், சாவதில் ஒருமுறை உனக்கென சாவதே பெருமை என்பேன்’ (நானும் உந்தன் உறவை எனத் தொடங்கும் பாடல்) என்னும் வரிகள், டி. ராஜேந்தர் என்னும் கவிஞரின் புலமை குறித்துப் பேசவைத்தது.

கல்லூரி ஆண்டு விழா, NSS ஆண்டு விழா போன்ற ஒருசில விழாக்கள் மட்டுமே நடைபெறும். எங்களின் பங்களிப்பு என பெரிய அளவில் ஒன்றும் இருக்காது. ஏதோ ஒரு சில மாணவிகள் பாடுவார்கள். ஒரே ஒரு முறை எங்கள் தோழி ஒருத்தியின் நடனம் இருந்தது. மற்றபடி நாங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துவந்து ஒரு குடும்ப விழா போலதான் அவற்றைக் கொண்டாடுவோம்.

அது ஒரு காலம்…

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.