‘தமிழ்ப் பொண்ணுதான் நிறைய இருக்கு, துபாய் மண்ணையே காணோமே’ என்று கிடைத்த சில கமெண்டுகளினால் மனம் திருந்திய கட்டுரையாளர் இனி வரும் காலங்களில் துபாயின் வரலாறு பெருமளவு தோண்டப்படும் என்ற உத்தரவாதத்தோடு இந்த வாரக் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.

‘India is my country. All Indians are my brothers and sisters’ ன்னு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுல இருந்து கிட்டத்தட்ட பன்னெண்டு வருசம் விடாம சொல்லியும் காலேஜு முடிச்சு ‘வெளி உலகம் வெளி உலகம்’ன்னு ஒரு விசயத்துக்குள்ள வந்ததும் தமிழனுக்கு பிளட் டெஸ்ட்டு பண்ண ஆரம்பிச்சிடறோம். ‘தமிழ் நாட்டைத் தமிழன்தான் ஆளணும், ஆளப் போறான் தமிழன், ஒரு தமிழனாய் இருந்தால் ஷேர் செய்யுங்கள்’ அப்படின்னு அரைகுறை புரிதலோட ‘யார் தமிழர்’ என்ற ஆராச்சியில் வானத்துக்கும் பூமிக்கும் தையத்தக்கான்னு குதித்துக்கொண்டிருக்கிறோம். ஒரே நாட்டைச் சேர்ந்த மக்களை வைத்துக்கொண்டே ஒருமைப்பாட்டைக் காக்கப் படாதபாடு படுகிறோமே, இங்கே ஏறக்குறைய எழுபத்தைந்து சதவிகிதத்துக்கும் மேல் வெளிநாட்டினரை வெச்சிருக்குற இவங்க நிலைமை கொஞ்சம் பரிதாபமானதா இருப்பது நியாயம் தானே?

வழக்கமான ஒரு மாலை நேரப் பயணத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நான், ‘ஊரே தொடச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கு’ன்னு சொன்னதுக்கான காரணத்தைக் கண்டுபிடிச்சேன்! இங்கெல்லாம் பக்கத்துத் தெரு, பாலத்து சுவரு, பப்ளிக் டாய்லெட்டுன்னு எங்கேயுமே ’வாழும் சேகுவேராவே’, ’இயக்கத்தின் போர்வாளே’ என்பது போன்ற வரலாற்று எழுத்துகளால் ஆன ஃப்ளக்ஸ் போர்டு, போஸ்டர்ன்னு ஒண்ணுமே கிடையாது. விசாரிச்சுப் பார்த்ததுல அதெல்லாம் வைப்பதற்கு இங்கே அனுமதி இல்லயாமா! (கேட்டயாடி கதைய?). சில சப்வேகள் , பாலங்கள், தெருக்கள்ல மார்டன் ஆர்ட் மாதிரி (Mural Art) வரைஞ்சு வெச்சிருப்பாங்க. பக்கத்து தெரு மாரியம்மன் பண்டிகைன்னாக்கூட தெருவுக்குள்ள நுழையவே முடியாத அளவுக்கு பிரம்மாண்டமான ஃப்ளக்ஸு வைக்குற பழக்கமெல்லாம் இங்க இல்லை. நாடே கொண்டாடுற ரம்ஜான் பண்டிகைக்குக்கூட தெருவுல ஆள் அரவமே இருக்காது. இப்படி வழியெல்லாம் ‘பளிச் பளிச்’ கோலமாவே இருந்தாலும் நான் அடிக்கடி பயணம் பண்ற வழியில் ஒரு ஷேக் முகமும் கூடவே ‘Year of Tolerance’ என்ற வாசகமும் சுவர் ஓவியமா வரைஞ்சு வெச்சிருந்தாங்க. இதுக்கு முன்னாடி ஒரு முறை விசா ரெனியூவலுக்காக இம்மிகிரேஷன் அலுவலகம் சென்றபோது அங்கேயும் இதே போல் ஒரு ஷேக் முகமும் கூடவே ‘Year of Zayed’ என்ற வாசகமும் எழுதியிருந்தது நியாபகம் வந்தது. ஒவ்வொரு வருசத்தின் பேர்லயும் ஒரு பெரிய டேக் லைன் வெச்சிருக்காங்கன்னு புரிஞ்சது. பெரிய பூட்டுப்போட்ட சந்திரமுகி அறை மாதிரி இருக்கு, இதுக்குள்ள ஏதோ ஒரு மர்மம் இருக்கு’ன்னு அது குறித்த தடயவியல் ஆய்வில் இறங்கினேன்.

உலகம் என்கிற பெரும் வெளியில் மனிதன் மட்டுமல்ல பெரும் நிலப்பரப்பும்கூட அதன் தன்மையை அவ்வப்போது மாற்றிக்கொண்டேதான் இருக்க நேரிடும். அப்படித்தான் உலகிற்கு எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்துக்கொண்டிருந்த வளைகுடா நாடுகளின் உற்பத்தி இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெருமளவில் குறையத் தொடங்கியது. எண்ணெய்த் தேவைக்காக அரபு நாடுகளை மட்டுமே கையேந்தும் நிலை உலக நாடுகளிடம் குறைந்து வந்த நிலையில், தொழில் வளர்ச்சி மற்றும் டூரிசம் ஆகியவற்றை மாற்றாக கையில் எடுக்கிறது அமீரக அரசு. சுற்றுலாத் தலங்களை அசுர வேகத்தில் நிறுவி விட்டு ‘எல்லாரும் ஊர சுத்திப் பார்க்க வாங்கோ’ன்னு தொண்டைத் தண்ணி கிழிய கூப்பிட்டாலும் உலகத்தின் பார்வையில் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தது அமீரகம். சுற்றுலாத் தலங்களை அதிகரிப்பதால் மட்டுமே உலக மக்களின் கவனம் பெற்றுவிட முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம். பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றும் மதம் சார்பான தனது சகிப்புத்தன்மையை உலகிற்கு உணர்த்தவும், மத்திய கிழக்கு நாடுகளின் மேல் இருந்த உலகத்தின் பார்வையை மாற்றும் விதமாகவும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கியது. அதன் செயல் வடிவம் தான் தீம் ஆஃப் த இயர் (Theme of the Year). 2015 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்முறை 2015இல் இயர் ஆஃப் இன்னொவேஷன் (Year of Innovation), 2016இல் இயர் ஆஃப் ரீடிங்க் (Year of Reading), 2017இல் இயர் ஆஃப் கிவ்விங் (Year of Giving), 2018 ல் இயர் ஆஃப் சையத்(Year of Sayed – Founding father of UAE), 2019இல் இயர் ஆஃப் டாலரன்ஸ் (Year of Tolerance), 2020இல் அடுத்த ஐம்பதாண்டுகளை நோக்கி (Towards the Next 50), தற்போது 2021ஆம் ஆண்டில் பொன்விழா ஆண்டு (Year of the 50 th- UAE உருவாகி ஐம்பது ஆண்டுகள் ஆயிற்று) என்று கொண்டாடிவருகின்றனர்.

இதில் இயர் ஆஃப் டாலெரன்ஸ் (Year of Tolerance) என்ற டேக் லைன் என்னை மிகவும் பாதித்தது. ஏனென்றால் சகிப்புத்தன்மையை மனிதர்களிடத்தில் புகுத்துவது அவ்வளவு சுலபம் இல்லையே. நம்மோட சகிப்புத்தன்மையோட அளவு நமக்குத் தெரியாதா என்ன? ஒரு சின்ன டெஸ்ட் பண்ணிப் பார்த்துடலாமா? பக்கத்து வீட்டுல பாயசம் வெச்சாலே சகிச்சுக்க முடியாம, ‘எங்களுக்கும் பாயசம் வைக்கத் தெரியும்’ன்னு அடுத்த நாளே நம்ம வீட்டுலயும் பாயசம் வெக்குறோமா? வைக்கிறீர்களென்றால் உங்களுக்கு ஒரு ‘கொட்டு’. நடுத்தர வயதுப் பெண் அழகாக முடியை வெட்டிக் கொண்டு இருப்பதைப் பார்க்கையில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்ள முடிகிறதா? முடிகிறதென்றால் உங்களுக்கு ஒரு ‘ஷொட்டு’. இப்படியாகத் தனிமனித சகிப்புத்தன்மையே கேள்விக்குறியாகும் பொழுது தேசம் முழுமையும் ஏற்றுக்கொள்ளும் விதமான முடிவுகளை ஒரு மதச்சார்புடைய நாடாக இருந்து முன்னெடுப்பது பெரும் சவால்தானே!

சக மனிதர்களுடனான சகிப்புத்தன்மை, சமத்துவம், இனவெறுப்புக்கு எதிரான மனநிலை போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சிறப்பு ஃபெடரல் சட்டங்கள் 2015ஆம் ஆண்டிலேயே இயற்றப்பட்டது. 2016ஆம் ஆண்டு இதற்கென தனியாக அமைச்சகம் மற்றும் அமைச்சரவை அமைத்து தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத்திற்கு எதிரான நாடு தழுவிய அறிவிப்பை வெளியிட்டது. பெரிய செயல்கள் செய்யும்போது அதை உலகம் நம்பணும். அப்படி நம்பணும்னா ரோட்டுக்கு, இல்லேன்னா பாலத்துக்கு அதன் வடிவமா ஒரு பேர வெச்சுடணும்ங்கறது மரபு. அப்படித்தான் இச்செயலுக்கான அங்கீகாரம் மற்றும் அடையாளமாக துபாயில் உள்ள ஒரு நடைபாதை மேம்பாலத்திற்கு ’ஃபிரிட்ஜ் ஆஃப் டாலெரன்ஸ்’ (Bridge of Tolerance) என்று துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்டும் (Sheikh Mohamed Bin Rashid al Maktoum) மூலம் அளிக்கப்பட்டது. பேர் வெச்சுட்டு சும்மா போகக் கூடாதுன்னு ’Bridges connect people, cultures and Hearts’ என்ற பொன் எழுத்துகளையும் அதனுடன் சேர்ந்து பதிச்சுடறார். இதைப் பார்த்த அபுதாபி ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் (Sheikh Mohamed bin Sayed al Nahyan) நான் மட்டும் என்ன சும்மாவா, இப்போ பாருங்க என்னோட பங்கு என்று அவரும் 2017ஆம் ஆண்டு அவர் பெயரில் இருந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதிக்கு ’மேரி மதர் ஆஃப் ஜீசஸ்’ (Mary – Mother of Jesus Mosque) என்று பெயர் மாற்றம் செய்தார். மசூதிக்கு அருகிலேயே செயின்ட் ஆன்டனி (Church of Saint Antony), செயின்ட் ஆன்ட்ரூ (Church of Saint Andrew), செயின்ட் ஜோசப் (Church of Saint Joseph) தேவாலயங்கள் (வழிபாட்டு தலமாக) இருப்பதும் ஒரு சிறப்பே.

‘உன் மகுடத்தில் மேலும் ஓர் இறகு கூடியது’ என்னும் விதமாக அமீரகத்தைச் சேர்ந்த ஹூசைன் அல் ஜஸ்மி (Hussain al Jassmi) என்ற பிரபல பாடகருக்கு 2018 டிசம்பர் மாதம் வாடிகனில் நடக்கும் கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு நிகழ்வான கான்செர்ட்டோ டி நட்டேலியில் (Concerto di Natale) கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. வாடிகனின் கிறிஸ்துமஸ் தினச் சிறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த முதல் பாடகர் என்ற பெருமையைப் பெற்றார் ஹுஸைன். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த அரசு அவரின் குரல் வாடிகனில் ஒலித்த சில தினங்களில் 2019ஆம் ஆண்டை அமீரகத்தின் இயர் ஆஃப் டாலெரன்ஸ் (Year of Tolerance) ஆண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் அமீரகம் அனைத்துப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளுக்கான பொதுவெளியாக உலக மக்களின் பார்வையில் தனது முதல் அடியை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

‘துபாய் வாசிகளே! அனைவரும் சகிப்புத்தன்மையோடு இருங்கள். நாம் கடக்க வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது’ என்று வாரத்திற்கு ஒரு முறை தொலைக்காட்சியில் தோன்றிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து புறாவிற்குத் தானியங்களைத் தூவிவிடும் டெக்னிக்கெல்லாம் இவர்களுக்குத் தெரியவில்லை போலும். நிஜமாகவே களத்துக்குள் குதித்துவிடுகிறார்கள். அமீரகத்தின் தேசிய மரமான கஃப் மரம் (Ghaf Tree) சகிப்புத்தன்மையின் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடிகளாக வாழ்ந்த இவர்களின் முன்னோர்கள் உணவுக்காகப் பாலைவனங்களைக் கடக்கும் நாட்களில் இதன் நிழலிலே சிறிது நேரம் இளைப்பாற்றிக்கொள்வார்களாம். சுட்டெரிக்கும் வெப்பத்திலும் தன் இலைகளில் பசுமை தாங்கி நிற்கும் கஃப் மரம் இம்மண்ணின் சின்னமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.

சகிப்புத்தன்மைக்கான முன்னெடுப்பில் ‘மொத பாலே சிக்ஸரு’ங்கற மாதிரி பத்து பர்செண்ட் கிறிஸ்தவர்களைக் கொண்டிருந்தாலும், இந்தத் தேசம் அனைவருக்குமான இடம் என்பதை உணர்த்த, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வாடிகனில் இருந்து போப் ஃப்ரான்சிஸ் அவர்களை வரவைத்து ஆச்சர்யப்படுத்தியது துபாய் அரசு. வேறென்ன அதேதான். இதுவும் வரலாற்றில் தடம் பதித்த நிகழ்வுதான். போப்பாண்டவர் விசிட் செய்யும் முதல் வளைகுடா நாடு துபாய் என்பதில் துபாய் அரசு பெருமைகொள்கிறது என்பதே தலைப்புச் செய்தி! 2005ஆம் வருடம் போப் இரண்டாம் ஜான் பால் இறந்தபோது என் நெருங்கிய ஆர்த்தோடாக்ஸ் பெந்தேகோஸ்த் தோழியிடம் ‘உங்கள் சர்ச்சில் போப் மறைவிற்கு அஞ்சலி செலுத்தவில்லையா?’ என்று கேட்ட எனக்கு ‘அவர் கத்தோலிக்கத் தலைவர் எங்களுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை’ என்று அவள் சொன்னது வேறு இந்த நேரத்தில் நியாபகம் வருகிறதே! சரி, பிரச்னை வேண்டாம் ஆல்ரெடி சபைக்குள் நிறைய குழப்பங்கள் இருக்கு. நாம் அமைதியாகச் செல்வோம் உறவுகளே!

2019 பிப்ரவரி மூன்றாம் தேதி மூன்று நாள் பயணமாகத் துபாய் வந்த போப் ஃப்ரான்சிஸ், தலைநகர் அபுதாபியில் ’Papal Mass’ என்று அழைக்கப்படும் தனது பெரிய பிரசங்கத்தைப் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தினார். சையத் ஸ்போர்ட்ஸ் சிட்டி (Sayed Sports City) என்று அழைக்கப்பட்ட பெரிய விளையாட்டு மைதானத்தில் நடந்த அந்த நிகழ்விற்கு வயது, மதம், இனம் என்ற பாகுபாடின்றி சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்வு உலகம் முழுவதும் தொடர் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. துபாயில் நாற்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சபைகளும் ஒரு சீக்கிய குருத்துவாராவும் சில இந்து கோயில்களும் இருக்கின்றன என்பது அடியேனின் உபதகவல்.

பள்ளிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் அவரவர் பங்கிற்குக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரியம் சார்ந்த பல முன்னெடுப்புகளை அரசுடன் இணைந்து செய்தனர். எமிரேட்ஸ் விமான நிறுவனம் இருநூறுருக்கும் மேற்ப்பட்ட வெளிநாட்டினருடன் விழிப்புணர்வு பயணமாக பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்றது. பல்வேறு நிலையிலிருக்கும் ஊழியர்களும், தன்னார்வலர்களும் மனித சங்கிலி மற்றும் டாலெரன்ஸ் வாக் (Tolerance Walk) போன்றவற்றை ஒருங்கிணைத்தனர். ஆர்ட் கேலரிகளில் பல்வேறு கலாச்சாரத்தைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான படங்கள் வரையப்பட்டு ஏலத்திற்கு விடப்பட்டன. துபாய் காவல் துறையில் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் பெண்களுக்கென தனியாக உம்ரா என்று அழைக்கப்படும் மெக்கா, மெதினா புனிதப் பயணத்திற்கு முழு ஸ்பான்சர் தரப்பட்டு அவர்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைத்தது துபாய் அரசு. தனியார் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் கூட்டமைப்பின் சார்பில் 3500க்கும் அதிகமான நபர்கள் இணைந்து உருவாக்கிய தேசியக்கொடி அமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இன்னும் பல உலக சாதனைகளும் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டே இருந்தன.

இஸ்லாத்தின் வழக்கப்படி முஸ்ஸீம் பெண் இந்து ஆணை மணப்பதைச் சட்டப்படி அங்கீகரிப்பதில்லை. மாறாக முஸ்ஸீம் ஆண் இந்து பெண்ணை மணப்பது சட்டத்தின் பால் அங்க்கீகரிக்கப்பட்ட வழக்கமாகும். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த இன்டெர் ஃபயித் தம்பதிக்கு ( முஸ்லீம் தாய், இந்து தந்தை) துபாயில் குழந்தை பிறந்தது. இவர்களின் குழந்தைக்குச் சட்டப்படி பிறப்புச்சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் உருவானது. பல மாதங்களாக இமிகிரேஷன் கிளியரன்ஸ் இல்லாததால் இந்தியாவிற்குக் குழந்தையை எடுத்துச் செல்ல முடியாமல் பெற்றோர் கோர்ட்டில் வழக்கு பதிந்து அது நிலுவையில் இருந்தது. அந்த வழக்கு 2019 இயர் ஆஃப் டாலெரன்ஸ் வருடத்தில் முடிக்கப்பட்டு அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்கி வரலாற்றில் மற்றுமொரு மைல்கலைப் பதித்தது அமீரக அரசு.

துபாயில் பத்து சதவிகிதம் உள்ள மைனாரிட்டி இந்துக்கள் வழிபட சில கோயில்கள் (வழிபாட்டு இடங்கள் மட்டுமே) இருக்கின்றன. இந்துக் கோயில்கள் சில இடங்களில் இருந்தாலும் ஆகம விதிப்படி இல்லை என்று புலம்பி வந்த நம் சொந்தங்களுக்கு அபுதாபியில் புதிய இந்துக் கோயில் ஒன்றை நிறுவ அமீரக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட இந்தக் கோயிலின் மாதிரி வரைபடத்தில் ஏழு கோபுரங்களும் ஐந்து குவிமாடங்களும் கொண்டு பார்ப்பதற்கே கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது. இந்த நேரத்தில் வேறு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில் பணிகளும், அதன் வரைபடமும் உங்களுக்கு நினைவில் வந்தால் அதற்கு என்னால் பொறுப்பாக முடியாது.

ABU DHABI, UNITED ARAB EMIRATES – February 4, 2019: Day two of the UAE Papal visit – HH Sheikh Mohamed bin Rashid Al Maktoum, Vice-President, Prime Minister of the UAE, Ruler of Dubai and Minister of Defence (L), and HH Sheikh Mohamed bin Zayed Al Nahyan, Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces (R), meet with His Holiness Pope Francis, Head of the Catholic Church (C), during an official reception at the Presidential Palace. ( Mohamed Al Hammadi / Ministry of Presidential Affairs ) —

கோயிலுக்கு மேலும் அழகூட்டும் விதமாக இத்தாலியிலிருந்து மார்பிள் கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கற்சிலைகள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் செதுக்கப்படுகின்றன. முழுவீச்சில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை இங்குள்ள இந்து மந்திர் குழுக்களின் தலைவர் ஸ்வாமி ஃப்ரஹ்ம்மவிகாரி கண்காணித்து வருகிறார். அதன் பரப்பளவு முழுவதும் வழிபாட்டு மண்டபங்கள், நூலகம், மஜ்லிஸ் என்று சொல்லப்படும் மக்கள் கூடுமிடம், குழந்தைகளுக்கான பூங்கா, கடைத்தெருக்கள், மிக முக்கியமாக ஃபுட் கோர்ட் என்று சகல வசதிகளுடன் தயாராகி வருகிறது என்ற தகவலை கூகிளாண்டவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘ஏன் எல்லாவற்றையும் கூகிளிடமே கேட்கிறாய் நீ கோயிலுக்குச் சென்றதில்லையா’ என்றால் என் பதில் கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் கூகிள் வடிவத்திலும் இருக்கிறார்!

சகிப்புத்தன்மை தொடரும்…

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.