வெயிலோடு வெளையாடி…வெயிலோடு உறவாடி…வெயிலோடு மல்லுக்கட்டி!!!

விஜய் டிவி சூப்பர் சிங்கர்ல கூட இருக்குது அஞ்சு சீசனு! ஆனா துபாயில இருக்குறது ரெண்டே சீசனு. வெய்ய்ய்ய்ய்ய்யியியியியில்ல்ல்ல்ல்ல்ல் ஆறு மாசம்… குளிளிளிளிளிளிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆறு மாசம். அழகு தமிழ்ல இன்னும் டீட்டெயிலா இளவேனில், முதுவேனில் ,கோடைக்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம்ன்னு வேணா சொல்லிக்கலாம். அதுசரி பாலைவனத்துக்குள்ள வந்து உக்காந்துட்டு வசந்தகாலம் எல்லாம் கேட்டா கதைக்கு ஆகாது.

நான் கோயம்புத்தூர்க்காரிங்கறதால எங்க போனாலும், “உங்க ஊரு கிளைமேட் ரொம்ப நல்லா இருக்குமாமே”ன்னு நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க. அப்படி கேளுங்கன்னு சொல்லிட்டு அந்த கேள்விக்காகவே காத்திருந்த மாதிரி, “இப்போ எங்க ஊர பாத்தீங்கன்னா பாடிகாட் முனீஸ்வரன் மாதிரி சுத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை எங்களை எப்போதுமே குளுகுளுன்னு வெச்சிருக்கும் தெரியுமா”ன்னு சொற்பொழிவுக்குத் தயாராகிருவேன். நானெல்லாம் புயலு, வெள்ளம், சுனாமின்னு பேரழிவு ஒண்ணுத்தையும் கண்கூடா கண்டதில்லை (இதுக்கு நான் நியாயமா சந்தோசப்படோணுமாக்கும்).

‘அங்கெல்லாம் சேந்தாப்போல நாலு நாள் வெயில் கொளுத்துச்சுன்னா, அஞ்சாவது நாள் கட்டாயம் ஒரு மழை வருமுன்னு நாள் எண்ணிக்கிட்டே இருப்போமாக்கும்’…. கூடவே மானே தேனே பொன்மானேன்னு ஏதாச்சும் போட்டு கோவையோட பெருமைகளை மூச்சு விடாம பேசுவேன். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஊருல இருந்து வந்த எனக்கு துபாயோட கோடைக்காலம் நெருங்க நெருங்க கொஞ்சம் பயம் வந்திருச்சு.

என்னதான் காலேஜுக்குப் போய் படிச்ச்ச்சு…. டிகிரி வாங்கியிருந்தாலும் வெப்ப நிலையை அளக்குற டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும்(°F), டிகிரி செல்சியஸுக்கும் (°C) என்ன வித்தியாசம்ன்னு நம்ம கூகிள் ஆண்டவர்கிட்ட தான் கேக்க வேண்டி இருக்கு. அவரும் அவருக்கு தெரிஞ்ச எல்லா லாங்க்குவேஜுலயும் சொன்னாலும் ரெண்டுத்துக்கும் பெருசா ஒரு வித்தியாசமும் இல்லேன்னு தான் என் மண்டைக்குத் தோணுது.

சரி எதுவும் புரியலேன்னா விடுவோம், ஏன்னா நம்மகிட்டத்தான் ஸ்மார்ட் போன் இருக்கே. சாப்பிடறது தூங்குறத தவிர மத்த எல்லாத்தையும் அதுவே பாத்துக்கும். இப்படி ரெண்டு அளவீடுகள் இருந்தாலும் எல்லா நாடும் இதே அளவீடுதான் பயன்படுத்துதான்னா அதுதான் இல்ல. கொஞ்சம் எளிமையா இருக்குறதால துபாய் உட்பட பெரும்பாலான நாடுகள் டிகிரி செல்ஸியஸ்(°C) தான் பயன்படுத்துது.

உலகமே ஒரு பக்கமா போனாலும், நான் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நாத்தனார் மாதிரி வேற பக்கமாத்தான் போவேன்னு அமெரிக்காவும், உலக மேப்புல பூதகண்ணாடி வெச்சு தேடுனாக்கூட கிடைக்காத ஒரு நாலு நாடும் டிகிரி ஃபாரன்ஹீட்ட (°F) தான் பயன்படுத்துது. சரி ஏன் இந்த அமெரிக்கா மட்டும் இப்படி விட்டேத்தியா இருக்குன்னு அதையும் கூகிள் ஆண்டவர்கிட்ட கேட்டேனே. அதுக்கு அவரு “ஹ்ம்ம்ம் .. அவன் எதத்தான் சரியா சொல்றான். உலகமே கால்பந்துன்னு சொன்னாலும் அவன் மட்டும் சாக்கர் (Soccer)ன்னு சொல்லுவான். பிஸ்கட்டுன்னு சொல்லாம குக்கீஸ்ன்னு சொல்லுவான். அதோட லிஸ்ட்டு ரொம்ப பெரிசு. நீ போய் வேற வேலை இருந்தா பாரு”ன்னு சொல்லிட்டார். அது அவனுக்கே உள்ள ஆணவம் மன்னா. சரி அதுக்கு இப்போ என்னான்னு தான கேக்குறீங்க. அமெரிக்காகாரன வம்பிழுக்காம நம்மால இருக்க முடியாதுல்ல அதான்!

சரி வாங்க நாம மறுபடியும் டிகிரி செல்ஸியசுக்கு (°C) வருவோம். நீங்க எந்த அளவுகோல் வெச்சு வேணாலும் அளந்துக்கோங்க, தெர்மாமீட்டருக்குள்ள இருக்குற பாதரசமே (ஏன் பாதரசம்ன்னு இன்னோர் அயிட்டம் இருக்கு; ஆனா இது அறிவியல் கட்டுரை இல்லாததால விட்டுருவோம்) வெடிக்குற அளவுக்கு பீக் சம்மர்(Peak Summer)ன்னு ஒண்ணு வருமே அதுதான் அந்த அக்கினி பகவானோட ஆனந்த தாண்டவம். இளவேனில் முதுவேனில் எல்லாம் முடிஞ்ச பின்னாடி, ஜூன் மாசம் ஆரம்பிக்குற தீவிர கோடை காலத்தில் சாதாரணமாக (50°C) வெப்பம் கூட பதிவாகும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு முடிஞ்சதும் கொஞ்சம் கொஞ்சமா வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும்.

இங்க சம்மர் ஆரம்பிக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே சம்மர் ஆரம்பிச்சிரும். புரியலயா. மறுபடியும் படிச்சு பாருங்க. அதாவது, “இதனால சகல சனத்துக்கும் தெரிவிக்குறது என்னன்னா நாளையில இருந்து சம்மர் ஆரம்பிக்க போகுது. எல்லாரும் உங்களை நீங்களே கவனமா பாத்துக்கோங்க சாமியோவ்”ன்னு அரசாங்கத்துகிட்ட இருந்து ஒரு தண்டோரா வரும். ஆனா பாருங்க நாம ஆல்ரெடி சம்மர்ல தான் வெந்துட்டு இருப்போம்.

ஏசி எப்போதுமே ஆன்ல வெச்சுக்கணும். உங்களுக்கு சில்லென்ற ஏசியினால ஜலதோசம், தும்மல், இருமல், சளி, அலர்ஜின்னு எது வந்தாலும் எல்லா பழியையும், பழைய ஏசிய மாத்தாம இருக்குற ஹவுஸ் ஓனர் மேல போட்டுட்டு பேசாம இருந்துடணும். அதுபோக ஹீட் ஸ்ட்ரோக், சன் பர்ன், டிஹைட்ரேஷன், தலைசுற்றல், ஃபுட் பாய்ஸன், டைபாய்டு, சிக்கன் பாக்ஸ்ன்னு இன்னும் நிறைய வியாதிக்கான வாய்ப்பெல்லாம் (கொரோனாவுக்கு முன்) இருக்கு. ஸோ கவனமா தண்ணி நிறைய குடிச்சு டிஹைட்ரேட் ஆகாம பாத்துக்கணும்.

குழந்தைகளுக்கு யூரின் கொஞ்சம் மஞ்ச கலரா வந்திருச்சுன்னா போதும் ஒரே டென்சன் ஆகிரும். தண்ணியக்குடி தண்ணியக்குடின்னு அதுகள வேற பாடாப்படுத்தணும். உலகத்துல விளையுற எல்லா வகையான பழமும் வாங்கிட்டு வந்து ஃப்ரிட்ஜில நாலு நாள், வெளிய நாலு நாள்ன்னு வெச்சிருந்து அது அழுகிப்போனதும் தூக்கி வேற போடணும். எப்பவாச்சும் ஜூஸும் போடப்படும். அப்புறம் சம்மர்ல எனக்கு புடிச்ச ஒரு விசயம் காலையில துவைச்ச துணிய பால்கனியில் கொண்டு போய் காயப்போட்டுட்டு உள்ள வந்து ஒரு டீய(எல்லா சீசனுக்கும் டீ குடிப்போர் சங்கம்) போட்டு குடிச்சு முடிச்சுட்டு போய் பார்த்தா எல்லாமே காய்ஞ்சிருக்கும். துணியெல்லாம் எடுத்துட்டு வந்து மடிச்சு வெச்சுடலாம். சீ ஹௌ சிம்பிள் அண்ட் டைம் சேவிங்…..!!!

மத்தபடி அப்பப்போ ரோட்ல போய்க்கிட்டு இருக்கும்போதே கார் ஃபயர் ஆகுறது மாதிரியான சம்பவங்களும் நடந்துட்டே தான் இருக்கும். காரை வெளிய நிறுத்திட்டு போகும்போது லைட்டர், ஸ்ஃப்ரே மாதிரி எளிதா தீப்பிடிக்குற பொருளெல்லாம் அதுல வெச்சுட்டு போனீங்கன்னா திரும்பி வந்து பாத்தா காரோட எலும்புக்கூடு தான் கிடைக்கும். பீ கேர் புல்…..கண்ணு முன்னாடி ஒரு கார் தானா தீப்பிடிச்சு எறியுறத நானே பாத்திருக்கேன். தீ அணைப்பான (Fire Extinguisher) எப்போதும் வண்டியில் வெச்சிருப்பது நமக்கும் காருக்கும் நலம் பயக்கும்.

சிவில் வொர்க்கர்ஸ், சாலைப் பணியாளர்கள் உட்பட நேரடி வெய்யிலுக்கு கீழ் வேலை செய்யுறவங்களுக்கு “Midday Break” என்ற திட்டம் இருக்கு. அவர்களுக்கு மதியம் 12.30 மணியில் இருந்து மாலை 3.30 மணி வரை மூன்று மாதங்களுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்குது. “இன்னும் ஏண்டா முழிச்சுட்டு இருக்க. தூங்குடா கைப்புள்ள……..” ன்னு பாய விரிச்சுப் படுத்துக்கலாம்.

இந்த திட்டத்தை மீறும் நிறுவனங்களும், இதற்காக ஓவர் டைம் பணியில் சரியான கூலி தராமல் இருக்கும் நிறுவனங்களுக்கும் அதிக அளவில் ஃபைன், ஃபைன், ஃபைனோ ஃபைன்….. பணி ஓய்வு மட்டுமல்லாது அவர்களின் ஊட்டச்சத்தான உணவு , நீரிழப்பு முதலான சமயங்களில் அவர்களின் முதலுதவி மற்ற இத்யாதி இத்யாதி சமாச்சாரங்களெல்லாம் அரசு உன்னிப்பா கவனிச்சுட்டு இருக்கும். நம்மூர் அரசியல்வாதிங்க கணக்கா தண்ணீர்ப் பந்தலெல்லாம் அமைக்கலாம் தான்… நம்மகிட்ட யாரு ஐடியா கேக்குறாங்க?

அப்புறம் வீட்டுக்குள்ளயே இருக்குற எங்கள மாதிரி குடும்ப இஸ்திரீகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லேன்னு நினைக்க வேணாம். சூரிய பகவான ஆறு மாசம் அதிகமா பாக்காம இருக்குறதால அவரு பெருசா சாபம் விட்டுருவாரு. கை வலி, முதுகு வலின்னு டாக்டர்ட்ட போனா, “விட்டமின் டி பத்தலம்மா பத்தல. மார்னிங் அண்ட் ஈவ்னிங் ஒரு அரை மணி நேரம் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ”ன்னு சொல்லுவாரு. அதென்ன சூர்யாவா சைட் அடிக்க? அதெல்லாம் பண்ண மாட்டோம்ன்னு நம்ம மூஞ்சிய பாத்தே கண்டுபுடிச்சிருவாரு.

டப்பா டப்பாவா மாத்திரைய எழுதித் தள்ளிருவாரு. அதுனால அவரு எழுதிக் கொடுத்த மாத்திரைய (பதினைஞ்சு மாத்திரை ஆயிரம் ரூவா! ) இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி புண்ணியத்துல வாங்கிட்டு வந்து அப்பப்போ சாப்பிடுவோம். பின்ன அக்கினி பகவான் சாபம் என்ன சும்மாவா? பரிகாரம் பண்ணியே ஆகணும்.

“சும்மா வெயிலு வெயிலுன்னு சீனப் போடாத அதான் பாத்ரூமில இருந்து பஸ் ஸ்டாப்பு வரைக்கும் அப்படியே ஸ்விட்சர்லாந்து பனிமலையாட்டமா சிலுசிலுன்னு தான இருக்கு”ன்னு நினைப்பீங்க. ஆனா பாலைவன வெய்யில் எல்லாம் காலை எட்டு மணிக்கே ஆரம்பிச்சிருதே. இரவு எட்டு மணி வரை வெப்பம் வெப்பம் வெப்பம் மட்டும் தான். காலையில குளிச்சுட்டு வேலைக்கு வெளிய போறவங்களுக்கு வீட்டுல இருந்து பஸ் ஸ்டாப்புக்கு வர்றதுக்குள்ள மறுபடியும் ஒரு வியர்வைக் குளியலே போட்டாகணும். “இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ”ன்னு சூரியன் தாத்தா (அரசியல் இல்லங்க!!!) கெக்கேபிக்கேன்னு சிரிப்பாரு.

அதுக்குத்தான் இங்க விதவிதமா சென்ட்டு பாட்டில் விக்குறாங்க. அதுல நாலு அஞ்சு வாங்கி உபயோகப்படுத்தினது போக மிச்சம் ஆகுறதத்தான் ஊருக்கு வந்து நண்பர்களை பாக்கும் போது, “உனக்காகத் தாண்டி தேடித் தேடி வாங்கினே”ன்னு ஒரு பில்டப்போட தள்ளி விட்டுடறது. சரி இந்த சீக்ரெட் எல்லாம் வெளிய சொல்லிறாதீங்க.

கோடைக்காலத்துல ஆடைகளை தேர்வு செய்து உடுத்தறது தான் அடுத்த பெரிய டாஸ்க். அப்போ பார்த்து ஏதாவது பர்த்டே பார்ட்டிக்கு போக அழைப்பு வரும். பீரோவ திறந்தா, ஊர்ல தம்பி கல்யாணத்துக்கு வாங்கின புடவை நம்மை பார்த்து, ‘ஒத்தைக்கு ஒத்தை வர்றியா’ன்னு கேக்கும். போன சம்மர்ல இதே மாதிரி ஒரு ஜிகுஜிகு பொடவைய தெரியாத்தனமா கட்டிக்கிட்டு அவஸ்த்தைப்பட்டதெல்லாம் கண்ணு முன்னால வந்து போகும். அதுனால அதுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுட்டு, ‘கதர் தந்த காந்தியே வாழ்க வாழ்க’ன்னு சொல்லி ஒரு காட்டன் சுடிதார மாட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

சம்மர்ல அதிகமா வெளிய போக முடியாததால நம்ம மக்களுக்கு போரடிச்சு போயிருமே? அப்படின்னா நாங்க சம்மர்ல வின்டரயே கொண்டு வாரோம்ன்னு சில மால்கள் முழுக்க முழுக்க பனிமலையயே உருவாக்கி வெச்சிருப்பாங்க. அதுல ரொம்ப ஃபேமஸான இடம் தான் SkiDubai. அங்க ஸ்கேட்டிங் மாதிரியான பனிச்சறுக்கு விளையாட்டெல்லாம் வெச்சிருப்பாங்க. நிசமான பென்குயின் பார்க், பனிமனிதன்னு கண்ணுக்கு குளிர்ச்சியான விசயங்களெல்லாம் பார்த்து ஒரு நாள் சந்தோசப்பட்டுக்கலாம். அது போக நிறைய மால்கள்ல குழந்தைகள் விளையாடுற இண்டோர் கேம்ஸ் இருக்கும்.

கர்நாடக இசைக் கச்சேரிகள் நடக்குற சபாக்கள் மாதிரி Dubai Opera வுக்கு கூட போய் நேரத்தை கழிக்கலாம். எந்த சீசனுக்கு எது வருதோ இல்லயோ ஆஃபர் கரெக்ட்டா வந்திரும். சம்மர் கலெக்சன்ஸ் வின்டர் கலெக்சன்ஸ்ன்னு அதுக்கு ஒரு குறைச்சலும் இல்ல. அப்படிக்கா பையை தூக்கிட்டு போய் கொஞ்சம் பர்ச்சேஸ் கூட பண்ணலாம். என்ன ஒரே விசயம் பர்ஸ்ஸு கொஞ்சம் வெயிட்டா இருக்கணும்.

பீக் சம்மர்ல்ல அடிக்கடி தீ விபத்துகள் நடந்தவண்ணமே தான் இருக்கும். சமைக்கும்போது தெரியாம தீப்பிடிச்சா, கிச்சன்ல ஒரு கருப்பு/சிவப்பு நிற வஸ்து ஒண்ணு (Fire Extingiusher) தொங்கிட்டு இருக்கும் . அத யூஸ் பண்ணி தீயை அணைச்சுடலாம். ஆனா அத யூஸ் பண்ண தெரியணுமே? அதெல்லாம் எங்க பள்ளிக்கூடத்துல சொல்லித்தரலேன்னு சால்சாப்பு எல்லாம் சொல்லக்கூடாது. டிவிட்டர், பேஸ்புக்கு, கிளப்புஹவுசுன்னு பொழுதுக்கும் அங்கயே கிடக்காம, இது மாதிரி முக்கியமான விசயமெல்லாம் தெரிஞ்சிருக்கணும் (என்னைச் சொன்னேன்).

சப்போஸ் தீயை அணைக்க முடியலேன்னா “In case of Emergency- call “ அப்படின்னு திரும்பின இடமெல்லாம் ஒரு நம்பர ஒட்டி வெச்சிருப்பாங்க. அந்த நம்பருக்கு போன் பண்ணனும் . ஆனா அது என்ன நம்பர்ன்னு சத்தியமா ஞாபகம் வராது. இல்லேன்னா வீட்டுக்கு வெளிய இருக்குற ஃப்யர் அலாரத்த அடிக்கலாம். நான் இருக்குற பில்டிங் தவிர இந்த நாடு முழுக்க இருக்குற எல்லா பில்டிங்க்லயுமே ஃபயர் அலாரம் வேலை செய்யுதாம். நான் வெரிபை பண்ணிட்டேன்!

வானுசரத்துக்கு இருக்குற அப்பார்ட்மெண்ட்ல தீப்பிடிக்குறதெல்லாம் இங்க அசால்ட்டா நடக்கும். ஒருவேளை நம்ம பில்டிங்கல தீப்பிடிச்சிருந்தா மொதல்ல அது நமக்கு தெரிய வரணும். ஏன்னா நாம தான் சாத்துன கதவ தொறக்குறதே இல்லயே? அப்புறம் வெளிய என்ன நடக்குதுன்னு எப்படித் தெரியும்? அப்படியே தெரிய வந்தாலும், முக்கியமான பொருளெல்லாம் தூக்கிட்டு வெளிய ஓடி வந்திடணும். அதுனால முக்கியமான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் அதான் பாஸ்போர்ட், நம்மூர் ஆதார் மாதிரி இல்லாம பிரயோசனமான ஒரு எமிரேட்ஸ் ஐடி கார்டு, காரணமே இல்லாம தூக்கிட்டு வந்த சர்ட்டிபிகேட்ஸ்ன்னு எல்லாத்தையும் ஒரு ஃபயர் ரெசிஸ்டன்ஸ் (Fire Resistance) பையில போட்டு கட்டி வெச்சிக்கணும். ஏதாச்சும் அசம்பாவிதம் ஆச்சுன்னா அத மட்டும் தூக்கிட்டு ஓடிறலாம். அப்புறம் வீட்டுல குழந்தைங்க இருந்தா மறக்காம அவங்களையும் தூக்கிட்டு ஓடுங்க.

லிஃப்டுக்கிட்ட வந்ததும் கேஸ் ஆஃப் பண்ணமா, வீடு சரியா பூட்டினோமான்னு வழக்கமா வர்ற கேனத்தனமான சிந்தனை எல்லாம் வரக்கூடாது. கட்டாயமா லிப்ட் உபயோகப்படுத்தவே கூடாது. முப்பது மாடியா இருந்தாலும் படிக்கட்டு வழியா வந்தா, உயிர் தப்பலாம். கீழ இறங்கும்போது புகை மூட்டமா இருந்தா ஒரு ஈரத்துணிய வாயையும் மூக்கையும் கட்டிட்டு இறங்கணும்.

பெரிய விபத்து ஏதாச்சும்னா, தகவல் கிடைச்ச அஞ்சாவது நிமிசம் ஒரு தீயணைப்பு வண்டி நம்ம வீட்டு முன்னால வந்து நின்னுரும். நிலைமையோட தீவிரத்தைப் பொருத்து, அதிக வண்டிகள் பின்னாடி வரும். இந்த அரசாங்கத்த பொருத்தமட்டுல ஒரு சில மேஜர் இன்சிடன்ட்ஸ் தவிர எல்லாமே கட்டுப்பாட்டுக்குள்ள தான் வெச்சிருக்காங்க. பெரும்பாலும் எல்லா அப்பார்ட்மெண்ட்லயும் ஃபயர் அலார்ம், ஸ்மோக் அலார்ம் எல்லாம் பொருத்தப்பட்டு இருக்கும். எந்த அப்பார்ட்மெண்ட் ஜன்னல்லயும் கிரில் கம்பி கிடையாது. ஆபத்து காலத்துல எந்திரன் ரோபோ மாதிரி எதுனா வந்து காப்பாத்த வசதியா இருக்கும்ல? வீணா ஜன்னலெல்லாம் உடைக்க வேணாம் பாருங்க.

இருநூறு மீட்டருக்கும் (கிட்டத்தட்ட நம்ம பட்டேல் அய்யா சிலை உசரம்ன்னு வெச்சுக்கோங்க) அதிகமான உயரமுள்ள கட்டிடங்கள் எல்லாத்துலயும் ஹெலிபேட் வசதி பொருத்தப்பட்டிருக்கும். பெரும்பாலான கட்டிடங்கள் விபத்து காலங்கள்ல உடனடியா வெளியேறுற மாதிரி தான் வடிவமைச்சிருக்காங்க. அரசு இந்த விசயத்தையெல்லாம் அழகா லெஃப்ட் ஹேண்ல டீல் பண்ணிடறாங்கன்றது ஒரு ஆறுதலான விசயம்.

கடைசி கடைசியா ஒரு விசயம். சம்மர் வந்தா குழந்தைகளுக்கு, இல்ல இல்ல பெத்தவங்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஹைய்யா!!! லீவு விட்டாச்சுன்னு பொட்டிய கட்டிக்கிட்டு ஊருக்கு போயிடலாம். ஆனா இந்த கொரோனா என்ற கொடிய பூச்சி வந்த பின்னாடி இங்க இருக்குற நம்ம மக்கள் எல்லாரும், “சம்மரே வீட்டுப்பக்கம் வாயேன் நாம ஜாலியா பழகலாம்”ன்னு கூப்பிடுற அளவுக்கு நிலைமை மாறிடுச்சு.

போன வருசம் ஷார்ஜாவில ஒரு பெரிய கட்டிடத்துல நடந்த தீ விபத்தப்போ மக்கள் எல்லாம் வீட்ட விட்டு வெளிய ஓடி வரும்போது எல்லாரும் மாஸ்க்க மறக்காம எடுத்துட்டு ஓடி வந்ததா தலைப்புச் செய்திகள் வந்ததுச்சுன்னா பாத்துகோங்க மாஸ்க்கு எவ்வளவு முக்கியம்ன்னு. இன்னோர் தடவ அழுத்தி சொல்றேன், ”மாஸ்க்கு முக்கியம் பிகிலுலுலுலுலு…………” அடுத்ததா புயலொண்ணும் புதுசில்லை நமக்கு. ஆனாலும் புழுதிப் புயலை பார்த்திருக்கோமா?

அடுத்த வாரம் பார்க்கலாம்…….

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.