பணத்திற்காகத் தெரிந்தவரிடமெல்லாம் கேட்டுப் பார்த்தாள். இவளை நம்பி பணம் கொடுப்பவர் எவருமில்லை. ஒரு சிறு தொகை கொடுக்கவும் மனமில்லாமல் ஆஷா அக்காகூடக் கைவிரித்துவிட்டார்.

“என்ன டிசைட் பண்ணீங்க” என ரஞ்சனா மீண்டும் மீண்டும் கால் செய்து கேட்டுக்கொண்டே இருந்தாள்.

ஒரு கட்டத்தில், “என்னால பணம் அரேஞ் பண்ண முடியல” என்று சொல்லிவிட்டாள். அத்துடன் அவள் காணாமல் போய்விடுவாள் என்றுதான் நினைத்தாள். ஆனால் அவளோ, “நானே வேணா அரேன்ஜ் பண்ண முடியுமா பாக்கறேன்” என்றாள்.

“என்னக்கா சொல்றீங்க”

“ஆமாம்ப்பா, தெரிஞ்ச ஒரு ஃபைனான்ஷியர் இருக்காரு. அவர் கிட்ட கேட்டுப் பாக்கறேன்”

“நிஜமாவா?”

“உண்மையாத்தான்” என்று அழைப்பிலிருந்து விலக்கியவள் சில நிமிடங்களில் மீண்டும் அழைத்தாள். 

“சொல்லுங்கக்கா”

“ஹை மா.. நான் அவர்கிட்ட பேசினேன். பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டாரு.”

“நிஜமாவா?”

“ஆமாம்… மொத்தமா அம்பதாயிரம் கையில கொடுத்துருவாரு. மாசம் செவன்  தவுசண்ட் ஃபைவ் ஹண்ட்ரட்ன்னு, பத்து மாசமா திருப்பிக் கொடுக்கணும்.” 

சர்வ சாதாரணமாக ரஞ்சனி சொல்லவும், அதிர்ச்சியில் கோலவிழிக்குத் தலைசுற்றியது

“என்னக்கா சொல்றீங்க , அம்பதாயிரம் வாங்கிட்டு எழுப்பத்தஞ்சாயிரமா திரும்பக் கொடுக்கணுமா?”

“வேற வழி இல்ல அமுதா, பேங்க் லோன் மாதிரி போகலாம்னா உங்களுக்கு பேசிக் சோர்ஸ் எதுவுமே கிடையாது. எத நம்பி பணம் கொடுப்பாங்க. எந்த செக்யூரிட்டியும் கேக்காம சொந்த ரிஸ்க்ல குடுக்கறவங்க இப்படித்தான் குடுப்பாங்க.”

“அதில்லக்கா, நான் முழுக்க முழுக்க என் சேனலதான் நம்பி இருக்கேன். இப்படிக் கடன வாங்கிட்டா, அத திரும்ப குடுக்க எனக்குச் சரியான வருமானம் இல்ல. அதான் பயமா இருக்கு.”

”நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி இது ஒரு இன்வெஸ்ட்மென்ட் அவ்வளவுதான். முதல் போட்டாதான் லாபம் பார்க்க முடியும். இப்படி நான் ஹெல்ப் பண்ணி மேல வந்த சேனல்ஸ் நிறைய இருக்கு. ‘ஹெல்த் டிப்ஸ்’ ரஞ்சனா, ‘நேஹாஸ் மாம்’ சேனல் வனிதா இவங்கல்லாம் நம்ம கிளையண்ட்ஸ்தான். எதுவா இருந்தாலும் வேணும் வேணடாம்ன்னு டிசைட் பண்றது உங்க இஷ்டம்தான். ஒண்ணு ரெண்டு நாள் யோசிச்சு பதில் சொல்லுங்க” என இலகுவாக முடித்துக்கொண்டாள் ரஞ்சனா.

ஆனால் கோலவிழிக்குத்தான் உறக்கம் பறிபோனது. என்ன யோசித்தும் இந்தப் பணத்தை வாங்குவது தவிர அவளுக்கு வேறு வழி புலப்படவில்லை. கடன் வாங்கவும் பயம், கனவைக் கைக்கழுவவும் பயம். இருந்தாலும் கண்மூடித்தனமான கனவு முன்னே வந்து நின்றது. ரஞ்சனாவை அழைத்து, “நீங்க சொன்னதுதான் சரின்னு படுதுக்கா. வட்டி அதிகமா இருந்தாகூடப் பரவால்ல. நீங்க சொன்னவங்க கிட்டயே பணம் வாங்கிக் குடுங்க” என்று சொல்லிவிட்டாள்.

“தென் ஃபைன், அவர் பேரு தங்கராஜ். அவரும் ஒரு யூடியூபர்தான். நான் அவர்கிட்ட பேசிட்டு உங்களுக்கு லொகேஷன் ஷேர் பண்றேன். நேர்ல போய் மீட் பண்ணி பணத்த வாங்கிக்கோங்க” என்று ரஞ்சனா சொல்லவும் அவளுக்குக் கிலி பிடித்துக் கொண்டது.

“நேர்ல போகணுமாக்கா?” எனத் தயங்கினாள்.

“பெரிய அமவுண்ட் இல்லையா? முகத்தைப் பாக்காம எப்படிக் கொடுப்பாங்க? பயப்பட ஒண்ணும் இல்ல போய் பாருங்க” என்று அவளுக்குத் தைரியம் கொடுத்துவிட்டுச் சில நிமிடங்களில் அவள் செல்ல வேண்டிய இடத்தின் லொகேஷனையும் நேரத்தையும் அவளுக்கு வாட்ஸாப்பில் பகிர்ந்தாள்.

கிட்டத்தட்ட மகாபலிபுரத்தின் அருகாமையில் இருக்கும் ஒரு கடற்கரை விடுதி அது. மீண்டும் ரஞ்சனாவை அழைத்து, “என்னக்கா இது ஏதோ கிரிஸ்டல் பபிள் ரிசார்ட்னு காமிக்குது. அங்கல்லாம் எப்படிக்கா போறது? பயமா இருக்குக்கா” என்றாள். 

“பயப்பட ஒண்ணும் இல்ல. அந்த ரிசார்ட் தங்கராஜ் அண்ணனுக்குச் சொந்தமானதுதான். அதோட ரிஷப்ஷன ஒட்டி அவரோட ஆபிஸ் ரூம் இருக்கு. அங்க வெச்சுதான் எல்லாரையும் மீட் பண்ணுவாரு. ஸோ, ரிலாக்ஸ்டா போய்ப் பாருங்க. கரெக்ட்டா லவன் ஓ கிளாக் அங்க இருக்கற மாதிரி போங்க, நான் கொஞ்சம் கன்டென்ட் கிரியேட்டிங் டிஸ்கஷன்ல பிசியா இருக்கேன். மெசேஜ் போட்டா கூட ரிப்ளை பண்ண முடியாது. நாளைக்கு முடிச்சிட்டு கால் பண்ணுங்க” என இனிமேல் என்னைத் தொந்தரவு செய்யாதே என்பதைச் சொல்லாமல் சொல்லி அழைப்பிலிருந்து விலகினாள்.

‘நான் கேட்டது,  வியூஸ், கமெண்ட்ஸ், பேர், புகழ். ஆனா இவங்க எனக்குக் கொடுத்தது, பண நெருக்கடி, பயம், டென்ஷன், தலைவலி’ என இரவு முழுவதும் உறக்கமின்றி புலம்பினாள்.  

இவள் இப்படி முன்பின் தெரியாத யாரோ ஒரு கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்குகிறாள் என்கிற விஷயம் துளி அளவு வெளியில் கசிந்தால்கூட அக்கம் பக்கத்தில் பெயர் கெட்டுப் போகும். இவள் இப்படி டான்ஸ் வீடியோ போடுவதற்கே கூடை கூடையாக அறிவுரையைத் தூக்கிக் கொண்டு வருகிறார்கள். சரசுவே முகத்துக்கு நேராக வசை பாடுகிறார். அவர், வீட்டு உரிமையாளர் மட்டுமல்ல வேலை போட்டுக் கொடுத்து மாதாமாதம் படி அளப்பவர் வேறு. சூடு சொரணை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர் பேசுவதைக் கேட்டுக்கொள்வாள். மற்றபடி யார் பேசினாலும் பதிலுக்குப் பதில் கொடுத்து அனுப்பிவிடுவாள். இந்த விஷயம், ஏற்கெனவே  வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி ஆகிப்போகும். அதனால் ஆஷா அக்காவுக்குக்கூடத் தெரியாமல் காலை சீக்கிரமே வீட்டிலிருந்து கிளம்பினாள். நல்லவேளையாக அதிக நேரம் காக்க வைக்காமல் பேருந்து கிடைத்தது. அடித்து பிடித்து இவள் அங்கு வந்து சேர்ந்தபோது மணி பத்துதான் ஆகியிருந்தது. 

ரிசப்ஷன் பணியிலிருந்த பெண்ணிடம் போய், “எக்ஸ்கியூஸ் மீ” என்றாள்.

“எஸ், ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ” எனப் புன்னகையுடன் கேட்டவரிடம், “என் பேர் அமுதா, தங்கராஜ் சார பாக்கணும். ரஞ்சனா மேடம் சொல்லிதான் வந்திருக்கேன்” என்றாள்.

“ஓ அமுதா! ஓகே… ரைட்… சார் பதினோரு மணிக்கு மேலதான் வருவாரு. வெயிட் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையில் மூழ்கினார் அந்தப் பெண். 

அங்கே ஓரமாகப் போடப்பட்டிருந்த சோபாவில் போய் அமர்ந்தாள். திறன்பேசியில் எதையாவது பார்க்கலாம் என்றாலும் மனம் லயிக்கவில்லை. 

அந்தப் பகுதியைத் தாண்டித்தான் விடுதிக்குள் செல்ல முடியும் என்பதால் யாராவது வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்கள். ஏதோ முள்மேல் அமர்ந்திருப்பது போல அவ்வளவு சங்கடமாக இருந்தது கோலவிழிக்கு. 

வந்த வேலை முடிந்து எப்போது இங்கிருந்து கிளம்புவோம் என்று அவள் தவியாகத் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான், “ஏய் தூது புறா, நீ என்ன இங்க?” என வியந்தபடி அவளுக்கு அருகில் வந்து நின்றான் கஜபதி, அஞ்சலியின் தம்பி அவளின் சிறு வயது தோழன்.

வீட்டை விட்டு வெளியேறி அஞ்சலி ராஜாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு இவனும் இவனுடைய அம்மாவும் அந்த ஊரை விட்டே போய்விட்டார்கள். பல வருடங்கள் கழித்து இப்போதுதான் அவனைத் திரும்பப் பார்க்கிறாள்.

அஞ்சலி வேறு வீட்டுக்கு மாறிய பிறகு, பழைய கசப்பையெல்லாம் மறந்து இவனும் இவனுடைய அம்மாவும் அங்கே வந்து அஞ்சலியையும் குழந்தைகளையும் சந்தித்து விட்டு, ராஜாவுடனும் சுமுகமாகப் பேசிப் போனதாக அவள் மகிழ்ச்சியுடன் சொல்லியிருந்தாள். கஜா இவளை அதிகம் விசாரித்ததாகவும் சொன்னாள்.

வேறு ஒரு சந்தர்ப்பமாக இருந்திருந்தால் அவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் இப்பொழுது அவனைப் பார்த்ததில் திருடனுக்குத் தேள் கொட்டியது போல அவளுடைய கை கால்கள் வெடவெடத்தன.

தன்னைச் சமாளித்துக் கொண்டு, “அஞ்சலி அக்கா உன்னப் பத்தி சொல்லுச்சு. நீ எப்படி இருக்க கஜா?” என்று விசாரித்தாள்.

“நான் நல்லாத்தான் இருக்கேன். நீ என்ன இந்த மாதிரி ஏரியாவுக்கெல்லாம் வந்திருக்க?” என்று மீண்டும் கேட்டான்.

“என்ன மட்டும் கேக்குற, நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”  என்று பதில் கேள்வி கேட்டாள்.

“நான் இங்க இருக்கற பார்லதான் பவுன்சரா இருக்கேன்” என அவன் சொன்னதும்தான் அந்த விடுதியில் வேலை செய்பவர்கள் அணிந்திருக்கும் சீருடையை அவனும் அணிந்திருப்பதையே கவனித்தாள்.

தொடர்ந்து, “உனக்கு இங்க என்ன வேலன்னு கேட்டேன்” என்று அவன் கேட்ட விதமே வயிற்றில் புளியைக் கரைத்தது.

என்ன சொன்னாலும், அஞ்சலி, ராஜா வரைக்கும் தகவல் போய்ச் சிக்கல் ஆகிப்போகும். அவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினாள் கோலவிழி.

“நீ என்ன செஞ்சுட்டு இருக்க, ஏது செஞ்சிட்டு இருக்கன்னு எல்லாமே எனக்குத் தெரியும். என்ன காரணமா இருந்தாலும், நீ இங்க வந்து ஒக்காந்துட்டு இருக்கறது சேஃப் இல்ல. நீ மொதல்ல என்கூட வா” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்தபடி அந்த விடுதியை விட்டு வெளியேறினான் கஜா. பயத்தில் உறைந்துபோய் அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றாள் கோலவிழி. 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.