இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான தொடர்பு விஜயனோடு தொடங்கியதல்ல. ‘இருபத்து மூன்று நூற்றாண்டு கால சிங்கள – பௌத்த கலாச்சாரம்’ என்கிற நூலின் முதல் பகுதியின் முதல் பக்கத்தில், ‘பூர்வீகக் குடியேற்றங்கள்’ என்கிற கட்டுரை, ‘இந்தியாவில் மக்கள் வாழ்ந்து வருவதாகச் சொல்லப்படும் இந்தப் பத்து லட்சம் ஆண்டுகளில் பல காலம் இலங்கையும் இந்தியாவும் இணைந்திருந்தன. கடைசியாக இடம்பெற்ற பிரிவு கிமு 5000 ஆண்டளவில் நிகழ்ந்தது. இந்தியாவிலிருந்து பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வந்திருக்கவேண்டும்; ஆனாலும் இதுவரை ஆதாரங்கள் கிடைக்கவில்லை’ என்கிறது.

எனவே மனிதக் குடியேற்ற வரலாறு விஜயனுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், எழுத்து வடிவிலான இலங்கை வரலாறு விஜயனிடமிருந்தே தொடங்குகிறது என்பதே இன்றளவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்றுப் பார்வையாகும்.

அதற்கு ஆதாரமாகக் கருதப்படுவது மகாவம்சம் (Mahavamsa). பாலி மொழியில் கிபி ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் அனுராதபுர மகாவிகாரையைச் சேர்ந்த புத்த துறவி மகாநாமரால் இயற்றப்பட்ட இந்த நூல், அதுவரையிலான இலங்கை வரலாற்றைத் தொகுத்து வழங்குகிறது. அதற்கு முன்பிருந்த தீபவம்சம் (Dipavamsa) மற்றும் பழைய சிங்கள உரைநடை விளக்கங்களான அட்டகதைகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு, நிகழ்வுகளை காலவரிசைப்படி தொகுத்ததே மகாவம்சம்.

வரலாறு என்பது வெறும் ஆண்டுகளாலும் போர்களாலும் மட்டும் ஆனதல்ல; அது இடப்பெயர்வுகள், கலப்புகள், பிரிவுகள், புதிய அடையாளங்கள் ஆகியவற்றால் பின்னப்பட்ட ஒரு பெரிய வலை.

மகாவம்சத்தின்படி, விஜயனும் அவனது எழுநூறு தோழர்களும் மன்னார் அருகிலுள்ள மாதோட்டம் (மாந்தை) துறைமுகத்தில் கரையிறங்கி, பின்னர் தம்பபண்ணி என்கிற இடத்தை வந்தடைந்தனர். நீண்ட கடற்பயணத்திற்குப் பிறகு கரையில் இறங்கி, கைகளைத் தரையில் ஊன்றியபோது, செம்மண் அவர்களது உள்ளங்கைகளில் ஒட்டிக்கொண்டதாம். அந்தச் செம்புநிற மண்ணால் அந்த இடத்திற்கு பாலி மொழியில் ‘தம்பபண்ணி’ (செம்புநிற உள்ளங்கைகள்) என்று பெயர் ஏற்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.

பின்னர் கிரேக்கர்கள் இந்தப் பெயரை Taprobane என்று உச்சரித்தனர். பல நூற்றாண்டுகளாக மேற்கத்திய உலகின் வரைபடங்களில் இலங்கை அதே பெயரிலேயே குறிக்கப்பட்டது. இன்றும் வட இலங்கையில் தம்பபண்ணி என்கிற பெயருடைய பகுதி இருக்கிறது.

மகாவம்சம் மேலும் ஒரு குறியீட்டுத் தகவலையும் தருகிறது. விஜயன் இலங்கையில் கால்பதித்த அதே நாளில் இந்தியாவில் புத்தர் மகாபரிநிர்வாணம் அடைந்தார் என்று அது குறிப்பிடுகிறது. வரலாற்று உண்மையைவிட, புத்த மத வரலாற்றையும் இலங்கை அரச மரபையும் ஒன்றோடொன்று இணைக்க முயலும் இலக்கியக் குறியீடாகவே இதை பல ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

மகாவம்சத்தின் கதைப்படி, கொடுமைமிகுந்த இளவரசனாக இருந்த விஜயன், தனது தந்தையால் லால நாடு (Lala) எனப்படும் பகுதியிலிருந்து நாடுகடத்தப்படுகிறார். அவரும் அவரது எழுநூறு தோழர்களும் கடலைக் கடந்து இலங்கையை அடைகின்றனர். 

‘சிங்களர்’ என்கிற பெயரின் தோற்றம் குறித்து பல கருத்துகள் உள்ளன. வடமொழியின் சிம்ஹ (சிங்கம்) என்ற சொல்லிலிருந்தே ‘சிங்கள’ என்கிற பெயர் உருவானது என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருத்தாக இருந்தாலும், இதுகுறித்து வேறு மொழியியல் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Kuveni and Vijaya’s first encounter. Image courtesy sinhalamag.com

தம்பபண்ணியின் காடுகளில் விஜயனின் தோழர்கள், நாயொன்றைப் பின்தொடர்ந்து சென்றபோது, அது அவர்களை குவேணி என்ற இயக்கர் (Yakkha) குலப் பெண்ணிடம் அழைத்துச்செல்கிறது. ஒரு மரத்தின் அடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்த அவர், விஜயனின் நண்பர்களைக் குகையில் சிறைபிடிக்கிறார். அவர்களைத் தேடி வந்த விஜயன், தனது வாளை உருவி மிரட்டியதும் குவேணி அவர்களை விடுவித்து, உணவும் தங்குமிடமும் அளித்து உதவுகிறார் என்று மகாவம்சம் விவரிக்கிறது.

இந்தக் கதை முழுவதும் வரலாற்று நிகழ்வா, இலக்கியப் புனைவா அல்லது இரண்டின் கலவையாகப் பார்க்க வேண்டுமா என்பது ஆய்வாளர்களிடையே இன்னமும் விவாதத்திற்குரிய ஒன்றாகவே உள்ளது. குறிப்பாக, தன் இனத்தின் தலைவியாகச் சித்தரிக்கப்படும் குவேணி, ஒரே சந்திப்பில் விஜயனுக்கு ஆதரவாளராக மாறுவது ஒரு காவியக் கூறாகவே தோன்றுகிறது. அதன் பின்னணியில் காதலா, அரசியல் கூட்டணியா, உள்நாட்டு அதிகாரப் போட்டியா என்பது மகாவம்சம் விரிவாக விளக்காத கேள்வியாகவே உள்ளது.

பின்னர் இயக்கர் குலத்தின் திருவிழா இரவில், குவேணியின் உதவியுடன் விஜயனின் வீரர்கள் திடீர் தாக்குதல் நடத்துகின்றனர். இயக்கர் தலைவர்கள் வீழ்த்தப்படுகிறார்கள். அதன் பின்னர் விஜயன் தம்பபண்ணியின் அரசனாக முடிசூடுகிறார். தொடர்ந்து தனது அமைச்சர்களின் உதவியுடன் நீர்நிலைகளை மையமாகக் கொண்டு புதிய குடியேற்றங்களை அமைத்து ஆட்சியை விரிவுபடுத்தினார் என்று மகாவம்சம் பதிவு செய்கிறது.

அனுராதகாமம் என்ற நகரம், அமைச்சர் அனுராதனால் மல்வத்து ஆற்றங்கரையில் நிறுவப்பட்டது. பின்னர் அதுவே இன்று நாம் அறியும் அனுராதபுரமாக வளர்ந்தது. உபதிச்சகாமம், அமைச்சர் உபதிச்சனால் வடக்குப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிர்வாக மையமாகக் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல் விஜிதபுரம், உருவெல போன்ற நகரங்களும் விஜயனின் ஆட்சிக் காலத்தில் உருவானதாக மகாவம்சம் பதிவு செய்கிறது. இவற்றின் துல்லியமான இருப்பிடம் குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இலங்கையின் வடமேற்குப் பகுதிகளிலும் வடமத்தியப் பகுதிகளிலும் அவை அமைந்திருந்ததாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.

இதற்கிடையில் விஜயன், இயக்கர் குலத் தலைவியான குவேணியை மணந்தார் என்றும் அவர்களுக்கு ஜீவஹத்தன், திஸாலா என்ற இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக மகாவம்சம் கூறுகிறது. ஆனால் ஆட்சி உறுதிப்பெற்ற பிறகு விஜயனின் உள்ளம் மாறுகிறது. தனது அரசிக்கு அரசக் குடும்பப் பின்னணி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், குவேணியைத் துறந்துவிட்டு மதுரைப் பாண்டிய மன்னரின் மகளை மணக்க விரும்புகிறார். பாண்டிய நாட்டிலிருந்து இளவரசியும், விஜயனின் தோழர்களுக்கான மணமகள்களும், அவர்களுடன் ஏராளமான பணியாளர்களும் இலங்கைக்கு வருகிறார்கள்.

பாண்டிய இளவரசி மூலம் குழந்தை இல்லாத விஜயன், தனது குடும்பத்திற்குக் கடிதம் எழுத, அங்கிருந்து (வங்கம்) குடும்ப உறுப்பினரொருவர் வந்து நாட்டை ஆண்டுள்ளார் எனக்  கதை போகிறது. பெற்றோரால் துறப்பட்ட நாம் யாரால் அரசு பெற்றோம் என்று நினைக்கவில்லை என்றாலும், நாம் பெற்ற குழந்தைகள்தானே என்ற சிந்தனையும் அவருக்கு எழவில்லை. மாறாகத் தான் பிறந்த இனம் என்று சிந்தனை போயிருக்கிறது. அவரது தந்தை அவரை விரட்டியது போன்றே அவரும் தன் குழந்தைகளை விரட்டியிருக்கிறார் என்பது காலத்தின் முரண்தான். 

குவேணியின் கண்ணீர்

இப்போது குவேணி என்ன ஆனார் எனப் பார்க்கலாம். காதலுக்காகத் தன் இனத்தையே காட்டிக்கொடுத்த அவர், தன் குழந்தைகளை நகரத்திற்கு வெளியே ஒரு பாதுகாப்பான இடத்தில் ஒருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு, உதவி கேட்க மீண்டும் காடுகளுக்குள்ளேயே நடந்தார். மகாவம்சத்தின் குறிப்பின்படி, அங்கிருந்த ஒரு இயக்கன் குவேணியைத் தாக்கி, அந்த இடத்திலேயே அவரைக் கொன்றார். குவேணியின் குழந்தைகள் உயிர் தப்பி மலைநாட்டுக் காடுகளுக்குள் சென்று வளர்ந்தனர் என்றும், அவர்களின் வழித்தோன்றல்களே பின்னாளில் வேடர் (Veddha) சமூகமாக உருவாகினர் என்றும் மகாவம்ச மரபுக் கதை கூறுகிறது. மேலும், குவேணியின் சாபத்தால் பாண்டிய இளவரசிக்கு குழந்தை பிறக்கவில்லை என்றும், அந்தச் சாபத்தைப் போக்குவதற்காகவே இன்றளவும் கொஹம்ப கங்காரிய என்ற சடங்கு நடைபெறுகிறது என்றும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மகாவம்சத்தின் காலக் கணக்கின்படி, விஜயன் கி.மு. 543 முதல் கி.மு. 505 வரை ஆட்சி செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கதைகளை வாசித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம் வேறொன்றாக இருந்தது. இலங்கையின் வரலாறு என்பது ஒரே இனத்தின் வரலாறு அல்ல. மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர், இந்தியாவிலிருந்து பல காலகட்டங்களில் குடிபெயர்ந்த மக்கள், கடல்வழி வணிகர்கள், தென்னிந்திய அரச வம்சங்கள், பின்னர் வந்த ஐரோப்பிய ஆட்சியாளர்கள், இவர்கள் அனைவரின் சந்திப்பும் கலப்பும்தான் இன்றைய இலங்கையை உருவாக்கியிருக்கிறது. அப்படியிருக்க, இன்று இனம், மொழி, மதம் என்று பிரிந்து ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்வதில் என்ன பொருள் இருக்கிறது? இந்தப் பயணத்தின் முடிவில் என் உள்ளத்தில் ஒலித்தது 

‘நாடென்ன? மொழியென்ன? உள்ளங்கள் உறவாட…
ஏடென்ன? எழுத்தென்ன? எண்ணங்கள் பறிமாற…’

என்கிற பாடல்தான்!

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.