நமக்குத் தலைவலியோ காய்ச்சலோ ஏற்பட்டால் என்ன செய்வோம்? அதான் இருக்கவே இருக்கே பாராசிட்டமாலும் குரோசினும். இதில் ஒன்றை விழுங்கிவிட்டால் சரி ஆகிவிடும். அப்படியும் சரி ஆகவில்லை என்றால்தான் இங்கு பெரும்பாலானோர் மருத்துவரை அணுகுவோம். இதற்கு என்ன காரணம்? எடுத்த எடுப்பிலேயே மருத்துவரிடம் சென்றால் கூட இதைத்தானே அவர்களும் பரிந்துரைக்கப் போகிறார்கள் என்கிற மன பிம்பம் நம்மில் பலருக்கு உண்டு. அந்தப் பிம்பம்தான் நாம் மருத்துவப் பரிந்துரையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள காரணம். ஆனால், அது உண்மையல்ல மருத்துவர்களுக்கு அறிகுறிகளைத் தாண்டி நோய்க்கான காரணம் தெரியும், அதனால் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் துல்லியமானவை‌. சரி, எப்படி இந்த நோய்க்கு இதுதான் மருந்து என்று உறுதியாகக் கூற முடிகிறது? இதை முதன்முதலில் யார் கண்டுபிடித்தது? இதற்குப் பரிணாம வளர்ச்சியின் மைல்கற்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

உயிர்கள் தோன்றுவதும் உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகச் சூழலுக்கேற்ப பரிணமித்துக் கொள்வதும் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இதற்கிடைப்பட்ட நிலைகளில் ஏற்படும் மாற்றங்களில் மிக முக்கியமான ஒன்று நோய். இது தாவரங்கள் தொடங்கி மனிதர்கள் வரை அத்தனை உயிர்களுக்கும் பொது. பூச்சியோ அல்லது பூச்சிகளால் கடத்தப்படும் நுண்ணுயிரியோ தாவரங்களைத் தாக்கும்போது ஏற்படும் தொற்று, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பரவி பல ஆயிரக்கணக்கான தாவரங்களை அழித்துவிடும். தொற்று என்று வந்துவிட்டால் விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல. 

நோயைக் கண்டறிந்து அதற்கான தீர்வைச் சிகிச்சைகள் வழியாகவோ அல்லது வாழ்க்கைமுறை மாற்றம் மூலமாகவோ கண்டறிவதுதான் நோய் மேலாண்மை‌. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நோய் மேலாண்மை பெரும்பங்கு வகிக்கிறது. இது மனிதர்களோடு மட்டும் நின்றுவிடாமல், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உயிர்களுக்கும் பொருந்தும். மனிதன் தாவரங்களையும் விலங்குகளையும் உணவிற்காகச்‌ சார்ந்து வாழத் தொடங்கிய நாள் தொட்டே இந்த நோய் மேலாண்மை ஒரு வாழ்வியல் அடிப்படையாக மாறிவிட்டது. 

எல்லா நோய்களும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. அதே போல எல்லா நோய்களையும் தீர்க்கும் ஒரு மருந்தும் இதுவரை கண்டறியப்படவில்லை. நோயின் தன்மை எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நோய்க்கான காரணம். இதைத் தான் வள்ளுவர், 

’நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்’ 

எனும் குறளில் கூறியிருப்பார். அதுமட்டுமன்றி, நோய் மேலாண்மை பற்றிப் பேசுவதற்காக ’மருந்து’ எனும் ஓர் அதிகாரத்தையே இயற்றியிருப்பார். அன்றைய மருத்துவமுறை உணவு பழக்கவழக்கங்களோடும் வாழ்வியலோடும் ஒன்றி இருந்ததை மருந்து அதிகாரத்திலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இன்றைக்கு இருக்கும் மருத்துவ முறைகள் புரிந்துகொள்வதற்கு மிகச் சிக்கலாக இருக்கிறதல்லவா? அதற்குக் காரணம் உயிர்களைப் போலவே நோய்களும் சூழலுக்கேற்ப, வாழ்வியல் முறைகளுக்கேற்ப பரிணமிக்கின்றன. 

இதற்கு எடுத்துக்காட்டாகப் புற்றுநோயை எடுத்துக் கொள்ளலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் ஏதோ ஓர் அரியவகை கொடிய நோயாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால், இன்று அதன் அரிய தன்மை விலகி அனைவருக்கும் பரிட்சையமான ஒரு நோயாக மாறிவிட்டது.‌ அதேபோல்தான் நீரிழிவு நோயும். இரண்டு தலைமுறைகளுக்கு முன்புவரை அது நாட்டில் எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ ஒருவருக்கு ஏற்பட்ட கொடிய நோய். ஆனால், இன்று நம் வீட்டிலுள்ளவர்களுக்கே இருக்கக்கூடிய ஓர் உடல்நலக் குறைபாடாக மாறிப் போய்விட்டது. 

நோயின் வீரியம் என்னவோ அன்றைக்கும் இன்றைக்கும் ஒன்றுதான் ஆனால், நோய் மேலாண்மை வேறு. இதற்கு மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சிதான் காரணம். மருத்துவத் தொழில்நுட்பங்கள் வளர்வதால் நோய் பெருகுகிறதா, இல்லை நோய்‌ பெருகுவதால் மருந்துவத் தொழில்நுட்பம் வளர்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. நோய் மேலாண்மையில் மனித இனம் ஒரு நீண்ட நெடிய வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. அந்தப் பயணம் இன்னும் தனது இலக்கை அடையவில்லை.‌

மருத்துவத்தில், அலோபதி, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி என எந்த முறையாக இருந்தாலும் அதன் இலக்கு என்னவோ நோய்த் தீர்வு. ’அலக்கண்’ என்னும் சொல்லுக்குத் துன்பம்/துயரம் என்பது பொருள். நோயால் ஏற்படும் துன்பத்தைக் களைவதையே உலகிலுள்ள அத்தனை மருத்துவ முறைகளும் இலக்காகக் கொண்டுள்ளன. இது மனிதர்களுக்கான இலக்காக மட்டுமல்லாமல் விலங்குகள் மற்றும்‌ தாவரங்களுக்கான ஒரு பொது நிலைப்பாடாகவும் சொல்லலாம். கால்நடை மருத்துவமும் பூச்சிக் கொல்லிகளுமே இதற்குச் சான்று. 

நோய்க்கான தீர்வைக் கண்டறிவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதுவும் குறிப்பாக மருந்து கண்டறியும் முறை பல சிக்கலான நிலைகளைக் கொண்டது. அதற்கு எடுத்துக்காட்டாக, 

’உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்’

எனும் குறள் இருக்கிறது.‌ சாதாரண தலைவலி, காய்ச்சலுக்குக்கூட விதவிதமான மருந்துகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் வண்ணமும் அளவும் வடிவமும் வெவ்வேறாக இருக்கின்றன. இது ஏன் என்று யோசித்ததுண்டா? ஒரு மருந்தைச் சாப்பாட்டிற்கு முன்பும் மற்றொன்றைச் சாப்பாட்டிற்குப் பின்னும் ஏன் சாப்பிட வேண்டும்? ஏன் சில மாத்திரைகள் திடமாகவும், சில மாத்திரைகள் குருணை குருணையாக கேப்சியூல் வடிவிலும் இருக்க வேண்டும்? சில மாத்திரைகள் அப்படியே விழுங்காமல் சப்பிச்  சாப்பிடும் வகையில்கூட இருக்கிறதே? மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் நோய் தீரும் என்றால், ஊசிகள் எதற்கு?

அதுவும் சில ஊசிகள் கையிலும், சில இடுப்புத் தசையிலும் செலுத்திக் கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதே? இதில் நரம்பு ஊசிகள் தனி வகை. டானிக், சொட்டு மருந்து என ஏன் இத்தனை வகைகள்? வகைவகையாக மருந்துகள் இருந்தாலும் பக்கவிளைவுகள் என்னவோ இனாமாக வருகிறதே? அது ஏன்? கல்லீரல் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பிற்கு மருந்து மாத்திரைகள்தான் காரணமென்றால் எதற்காக அவை? ஒரு நோயைக் குணப்படுத்தி மற்றொன்றை உருவாக்கும் மருந்துகள் எப்படி நோய்த் தீர்வுகள் ஆகும்?

இவை ஒருவரியில் பதிலளிக்கும் கேள்விகளல்ல. இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டறிய, மருந்துக் கண்டறியும் முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். மருந்துக் கண்டறிவதற்கு நோயைப் பற்றிய ஆழமான புரிதல் அவசியம். நவீன மருத்துவம் கடந்து வந்த பாதையையும் மனித இனம் கற்றுக் கொண்ட நோய் மேலாண்மை நுட்பத்தையும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்தத் தொடரின் நோக்கம். 

இதெல்லாம் சரி, இத்தனை நவீனத் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஏன் ஒரு மருந்து கண்டுபிடிக்க பத்தாண்டுகள் ஆகின்றன? இதுதான் முதல் கேள்வி. இதற்கான விடை அடுத்த அத்தியாயத்தில்.

படைப்பாளர்

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகுக்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech, Genetic Engineering) பயின்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech, Computational Biology) பயின்று, தற்போது சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’, ‘அறிவதுவே’ ஆகிய தொடர்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பெண்ணெழுத்துப் போட்டியில் வென்ற ‘வாகை சூடிய விஞ்ஞானிகள்’ நூலாக வந்திருக்கிறது.