என் வீட்டருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் அருகில் இருந்த கம்பியைக் கவனிக்காமல் ஓடிவந்தான். சற்று நேரத்தில் அந்தக் கம்பி அவன் கால்களைப் பதம் பார்த்தது. கால்களில் ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்குச் சென்றவனுக்கு டிடி ஊசி போடப்பட்டது. இரும்பு, தகரம், கண்ணாடி போன்றவற்றால் ஏற்படக்கூடிய காயங்களுக்கு டிடி ஊசிதான் முதல் சிகிச்சை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், இந்த டிடி ஊசி எதற்காகப் போடப்படுகிறது? இது ஒரு வகையான தடுப்பூசி. டெட்டனஸ் டாக்ஸைட் என்பதுதான் டிடியின் விரிவாக்கம். இரும்பு, தகரம், கண்ணாடி போன்றவற்றால் ஏற்படக்கூடிய காயங்களின் வழியாக பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் நுழைந்து பல வகையான நோய்களை உருவாக்கும். இதைத் தவிர்ப்பதற்காகப் போடப்படுவதுதான் டிடி.

கரோனா பெருந்தொற்றின் போது தடுப்பூசியைப் பற்றிய விழிப்புணர்வும் தகவல்களும் மக்களிடையே பரவலாகக் காணப்பட்டது. அரசாங்கமும்கூட கரோனாக்கான தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கி இருந்தது. குழந்தை பிறந்ததில் இருந்தே தடுப்பூசியின் தேவை தொடங்கிவிடுகிறது. இயற்கையாக உடலில் மரபணுக்கள் வழியாக வரக்கூடிய நோய் எதிர்ப்பு சக்திக்கு அப்பாற்பட்டு, வெளியில் இருந்து உள்நுழையக்கூடிய குறிப்பிட்ட நுண்ணுயிரிகளுக்காகவோ அதனால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு எதிராகவோ வெளியில் இருந்து செலுத்தப்படக்கூடிய ஒன்றுதான் தடுப்பூசி.

குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நோய்க்கான எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே அந்த நோய் பாதிப்பின்போது உடலில் உருவாகும். மனிதனுக்குச் சில குறிப்பிட்ட நோய்கள் இருமுறை வராமல் இருப்பதற்கும் இதுதான் காரணம். ஆனால், அந்த நோயின் தாக்கம் உடலில் பலவகையான வலிகளையும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும்.

நோய் வந்த பிறகு சிகிச்சை எடுப்பதைவிட அந்த நோய் வராமல் பாதுகாப்பதுதான் சாமர்த்தியம். இதற்கு மருத்துவ உலகில் ஏற்பட்ட புரட்சிதான் தடுப்பூசிகள். 1796இல் எட்வர்ட் ஜென்னர் மாட்டம்மை என்று சொல்லக்கூடிய ‘cowpox’ வைரஸால் ஏற்பட்ட புண்ணில் இருந்து தயாரித்த ஒருவகையான கலவையை எட்டு வயது சிறுவனின் உடலில் செலுத்தி ஆராய்ந்ததில் அந்தச் சிறுவனின் உடல் சின்னம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருந்தது தெரியவந்தது. இதுதான் உலகின் முதல் தடுப்பூசி. உலகின் முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவன் என்கிற அங்கீகாரத்தையும் அந்தச் சிறுவன் பெற்றான். சின்னம்மை என்று சொல்லக்கூடிய ‘small pox’ இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அகற்றப்பட, அந்தத் தடுப்பூசிதான் முதல் காரணம். போலியோ போன்ற நோய்கள் இன்று இல்லாமல் போனதுக்கும் தடுப்பூசிகள்தான் காரணம்.

ஊசி வடிவிலும், சொட்டு மருந்து வடிவிலும் தடுப்பூசிகள் உடலில் செலுத்தப்படுகின்றன. போலியோ போன்ற நோய்களுக்குச் சொட்டு மருந்து வடிவில்தான் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தடுப்பூசி தயாரிக்கும் முறைகளில் பல விதங்கள் உள்ளன. பொதுவாக, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை எதிர்ப்பதற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசி மருந்துகளில், உயிரற்ற வைரஸை நம் உடலுக்குள் ஊசி வடிவில் செலுத்தி, அதனால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப்படுகிறது. பிற்காலத்தில் அதே வடிவில் உள்ள ஓர் உயிருள்ள வைரஸ் உடலை அணுகும் போது, முன்பு இதே வடிவில் உள்நுழைந்த உயிரற்ற வைரஸை எதிர்த்துச் செயல்பட்ட நோய் எதிர்ப்பு செல்கள் மீண்டும் அதே பழைய முறையில் இப்போது நுழைந்திருக்கும் உயிருள்ள வைரஸைத் தாக்கும். இதனால் அந்த வைரஸால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஏதும் இருக்காது.

தடுப்பூசி தயாரிக்கும் முறைகளில் மற்றுமொரு முறை, உயிருள்ள வைரஸின் நோய் உண்டாக்கும் பகுதியை மட்டும் செயலிழக்கச் செய்துவிட்டு, அதை உடலுக்குள் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுவது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டிவிடுவதால்தான் தடுப்பூசிப் போடப்பட்ட பிறகு உடல் சூடு அதிகமாகி காய்ச்சல் ஏற்படுகிறது. தடுப்பூசி வேலை செய்கிறது என்பதற்கான சான்றுதான் காய்ச்சல்.

கரோனா பெருந்தொற்றின் போது தடுப்பூசிக் குறித்து பல்வேறு வகையான கருத்துகள் எழுந்தன. தடுப்பூசி போட்டப் பிறகும் சிலருக்குத் தொற்று உறுதியானதும், சிலர் மாரடைப்பால் இறந்துப் போனதும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கும் மரபியலுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மரபணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் உயிரினங்களுக்கு மரபணு பிறழ்வு விகிதம் அதிகமாக இருக்கும். வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளுக்கு மரபணு பிறழ்வு என்பது வெகு வேகமாக நடப்பதற்கு அதன் குறைவான மரபணு எண்ணிக்கைதான் காரணம். அப்படி மரபணு பிறழ்வுகள் நடக்கும்போது நோயை உண்டாக்கும் முக்கியமான மரபணுக்களின் வீரியம் அதிகரிக்கும். அதனால் தடுப்பூசி போடப்பட்ட பிறகு மரபணு பிறழ்வு ஏற்பட்ட வைரஸ் தாக்கும்போது நோய்த் தொற்று உண்டாகும். வெவ்வேறு மரபணு பிறழ்வுகளுடைய வைரஸ் தாக்கும்போது பொதுவாக ஆராய்ச்சி செய்து, செலுத்தப்பட்ட தடுப்பூசிகளை அந்த மரபணு பிறழ்வுகளுடைய வைரஸ்கள் எளிதாக முறியடித்துவிடுகின்றன.

முறையான பரிசோதனைகளோடு ஒரு தடுப்பூசி தயாரிக்க குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது ஆகும். ஆனால், கரோனா மாதிரியான அதிவேகமாகப் பரவக்கூடிய பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி சில பரிசோதனைகளைத் தவிர்த்து மக்களின் அவசரப் பயன்பாட்டிற்கு வந்தது. அதனால் அந்தத் தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வும் தகவல்களும் மக்களிடையே இல்லை என்பதும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ஏற்கெனவே சர்க்கரை, ரத்தழுத்தம் போன்ற நோய்கள் இருந்ததும், தடுப்பூசிப் போட்டுக்கொண்ட சிலர் மாரடைப்பால் மரணம் அடைந்ததற்கான காரணம்.

HPV வைரஸால் கருப்பை வாயில் உருவாகக்கூடிய புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் இருக்கின்றன. தடுப்பூசியைப் பொருத்தவரை வயதும், எத்தனை முறை அந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம். இரண்டு முறை போடப்படும் தடுப்பூசிகளில் முதல் முறைக்கும் இரண்டாவது முறைக்கும் இடையே இருக்கும் கால அவகாசம் மிகவும் அவசியம். கோவிட் தடுப்பூசியில்கூட முதல் முறைக்கும் இரண்டாவது முறைக்கும் கிட்டத்தட்ட தொண்ணூறு நாட்கள் இடைவெளி இருந்தது.

பொதுவாகவே குழந்தைகளுக்குத் தடுப்பூசி தொடை வழியாகச் செலுத்தப்படுகிறது. காரணம் குழந்தைகளுக்குக் கைகளின் தசை வலுப்பெற்றிருக்காது. பெரும்பாலான தடுப்பூசிகள் கை அதாவது தோள்பட்டைக்குக் கீழ் இருக்கும் தசைகள் வழியாகத்தான் செலுத்தப்படுகின்றன. இதனால் தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்வினை பாதிப்புகள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன. இப்போது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியால் பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மூக்கு வழியாக ஸ்ப்ரே வடிவில் செலுத்தக்கூடிய தடுப்பூசிகளும் தயாரிக்கப்படுகின்றன.

தடுப்பூசிகளால் இவ்வுலகின் ஜனத்தொகை மீது ஆதிக்கம் செலுத்திய சில நோய்கள் அறவே நீக்கப்பட்டன. மக்களின் அவசரப் பயன்பாட்டிற்காகத் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் சில பக்கவிளைவுகள் உள்ளன. அதன் பின்னால் இருக்கும் அறிவியலைப் புரிந்துகொண்டு, யார் அந்தத் தடுப்பூசிகளைப் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். கேன்சர், எச்ஐவி போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காகப் பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இந்த ஆராய்ச்சிகள் வெற்றி பெற்றால் மருத்துவ உலகில் மற்றும் ஒரு புரட்சி ஏற்படும்.

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.