2021இல் மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் இறுதி ஆண்டு பயின்று கொண்டிருந்தபோது ப்ராஜெக்ட்காக அகமதாபாத்தில் நான்கு மாதங்கள் தங்கியிருந்தேன். என் வாழ்வின் ஆக சிறந்த நாட்கள் அவை. முதல் நாள் நான் அந்த வளாகத்திற்குள் நுழைந்ததுமே எனக்கு முன்னாள் அங்கு வந்து குழந்தைகளுடன் காத்திருந்த பெற்றோரை என் கண்கள் நோட்டமிட்டன. வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு எனக்கான அறையில் சென்று அமர்ந்தேன். அந்த அறையில் மின்விசிறி சுழலும் சத்தத்தைத் தவிர வேறு எந்தந் சத்தத்தையும் என்னால் உணர முடியவில்லை. அங்கு என்னோடு சேர்த்து 12 பேர் பயிற்சிக்காக வந்திருந்தனர். மணி பத்தைத் தொட்டிருந்தது.

“ஹலோ மை டியர் ஸ்டூடண்ட்ஸ்” என்றபடி எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் நாங்கள் இருந்த அறைக்குள் நுழைந்தார். அவர்தான் அந்த இன்ஸ்டிடியூட்டின் நிறுவனர். 1983இல் முனைவர் பட்டம் பெற்று, கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிவிட்டு, மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களுக்கென்றே தனியாக ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார். அதில் அவரது துணைவியாரின் பங்கு அளப்பரியது. அவரும் 1990இல் முனைவர் பட்டம் பெற்று, இந்த நிறுவனத்திற்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இருவரும் மரபணு மாற்றங்களால் ஏற்படும் நோய்களைப் பற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நான் உள்ளே நுழைந்ததும் என் கண்கள் நோட்டமிட்டது மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத்தான். அவர் வந்து பேசிவிட்டுச் சென்ற சில நிமிடங்களில் முப்பது வயதில் ஒருவர் எங்கள் அறைக்குள் நுழைந்தார். அவரின் மேற்பார்வையில்தான் என் இறுதியாண்டு ப்ராஜெக்ட் அமைந்தது. மேரி கியூரிக்குப் பிறகு ஒரே துறையில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் பணியாற்றுவதை அங்குதான் பார்த்தேன். ஆம் அவர்தான் நான் முன்பு குறிப்பிட்ட மரபணு ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஜெயேஷ் ஷேத், டாக்டர் ஃப்ரென்னி ஷேத்தின் மகன் டாக்டர் ஹர்ஷ் ஷேத். அவர்களிடம் மரபியல் பயின்ற ஆர்வம்தான் ஒருவகையில் நான் இந்தத் தொடர் எழுதக் காரணம்.

தாயனைக்களைப் பற்றியும் மரபணுக்களைப் பற்றியும் அவர் கொடுத்த நீண்ட உரையைப் பாதியிலேயே நிறுத்தியது ஜன்னல் வழியாக வந்த குரல். “டெய்லி இதே வேலை. ஒழுங்காகப் பாலைக் குடி. இல்ல ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்.”

“மா வேணாம்மா. ப்ளீஸ் மா, பால் பிடிக்கல. இதைக் குடிச்சா என்னமோ பண்ணுது.”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. பால் நல்லது. இதைக் குடிச்சா ஹெல்தியா இருக்கலாம்” என்று நீண்டு கொண்டே போன அம்மா மகன் வாக்குவாதத்தில் அம்மா ஜெயித்தார், குழந்தை குமட்டியது. இதை அத்தனையும் கவனித்தவாறு, “இந்தியால எழுபது சதவீத மக்களுக்கு மேல் லாக்டோஸ் இண்டாலரண்ட். அதாவது அவர்களால் பாலைச் செரிமானம் செய்ய முடியாது. சுருக்கமா சொல்லணும்னா, அவர்களுக்கு பால் ஒவ்வாது” என்றார் டாக்டர் ஹர்ஷ். அவர் சொன்ன புள்ளி விவரத்தில் நாங்கள் திடுக்கிட்டுப் போனோம். அவர் அமைதியாகத் தொடர்ந்தார்.

“ஆதி மனிதன் தோன்றின காலத்தில், மனிதர்களால் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பால் செரிமானம் பண்ண முடியாது. அதுக்குக் காரணம் அவன் உடம்பில் பால் செரிமானம் ஆவதற்குப் உற்பத்தி ஆகுற லாக்டேஸ்னு சொல்லக்கூடிய நொதியின் அளவு குறையுறதுதான். இந்த லாக்டேஸ் பாலூட்டும் வயது முடியும் வரை சுரக்கும். அதுக்கப்புறம் அதோட அளவு குறைஞ்சிரும். அதனால பால்ல இருக்க லாக்டேஸ் எனப்படும் மூலப்பொருள் மனிதர்களால் செரிமானம் பண்ண முடியாது.”

“சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி, மனிதன் காடுகளில் இருந்து சமநிலங்களுக்கு இடம்பெயர்ந்து. விவசாயம் செய்யக் கற்றுக்கொண்டான். கூடவே வீட்டு விலங்குகளை வளர்க்கவும் ஆரம்பிச்சான். அது வரைக்கும் மிருகங்களை வேட்டையாடி உணவா சாப்பிட்டுக்கிட்டிருந்தவன், வீட்டு விலங்குகளின் பாலைக் குடிக்க நினைச்சான். ஆனா, அது அவனுக்கு அவ்வளவு எளிதா அமையல. பாலைக் குடிச்சவங்களுக்குக் கடும் பக்க விளைவுகள் ஏற்பட்டது. சிலர் இறந்தும் போனாங்க.”

”வெகு சிலருக்குத்தான் குறைவான பக்க விளைவுகள் இருந்தது. அதுக்குக் காரணம் அவங்க மரபணுவுல இயற்கையா ஏற்பட்ட மாற்றங்கள்தாம். இதைத்தான் ‘சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட்’ என்று சொல்றாங்க. காலப்போக்குல சுற்றுசூழலுக்கு ஏத்தமாதிரி ஏற்பட்ட மரபணு மாற்றத்துனால லாக்டோஸ் ஒவ்வாமையாக இருந்தவங்க லாக்டோஸ் ஏற்றுக்கிறவர்களா மாறுனாங்க. இது ஐரோப்பியர்களிடம் பரவலா காணப்பட்டது. ஆனா, அந்த மரபணு மாற்றங்கள் ஆசியர்களிடமும் ஆப்பிரிக்கர்களிடமும் முழுமையா நடைபெறாததால இன்னும் அவங்களால பாலை முழுமையா செரிமானம் பண்ண முடியல. இதுக்குக் காரணம் அவங்களோட உணவு முறையாகூட இருக்கலாம். அவங்க பெரும்பாலும் பாலை நொதிக்க வச்சு தயிராவோ மோராவோ அல்லது யோகர்ட்டாவோ சாப்பிடுறாங்க. அப்படி நொதிக்க வச்சு சாப்பிடுற உணவுல லாக்டோஸோட அளவு குறைவா இருக்கும். அதனால அதைச் செரிமானம் செய்றது சுலபம். இருந்தும்கூடப் பாலை நேரடியா உட்கொள்ளும்போது பெரும்பாலான இந்தியர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, செரிமானப் பிரச்னைகள் எல்லாம் இருக்கதான் செய்யுது. இவை அனைத்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய நிகழ்வுகள்” என்று அவர் முடித்ததும் நாங்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனோம்.

இங்கு பக்கவிளைவுகள் என்று சொல்லப்பட்டவை எல்லாம் பெரிதாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறு சிறு உபாதைகள்கூட ஏதோ ஒரு காரணத்தினால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள்தாம். அந்தக் காரணத்தை அறிவது மிக முக்கியம். மனிதனின் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் பற்றித் தெரிந்துகொள்ள மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் படிப்பது மிகவும் அவசியம். இங்கு பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படுகின்ற எல்லா விஷயங்களுமே நல்லது என்கிற கண்ணோட்டம் அனைவரிடமும் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், அது யாருக்கு நல்லது என்கிற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதில் இல்லை. அதற்குப் பின்னால் இருக்கும் அறிவியலையும் விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் இதற்கு காரணம். நம் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். கொஞ்சம் அறிவியல் ரீதியாகவும் பார்க்கப் பழகுவோம்.

அன்று பயிற்சி முடிந்து செல்லும் வழியில் மீண்டும் ஒரு குழந்தை, மீண்டும் ஓர் அம்மா, மீண்டும் அதே ‘பால் நல்லது’ என்கிற வசனம், மீண்டும் ஒரு குமட்டல்…

(தொடரும்)

படைப்பாளர்:

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார்.