‘மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது’ என்கிற கதைபோலத்தான், இந்த நினைவுகளும். எதை நினைக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையே இன்னும் அதிகமாக நினைக்கும்.

‘நல்லதை நினைக்க வேண்டும், கெட்டதை நினைக்கக் கூடாது’ என்பது practical கிடையாது. மனதில் எல்லாவித எண்ணங்களும் வரத்தான் வரும். அதை எப்படி handle பண்ணுகிறோம் என்பதுதான் முக்கியம்.

நேர்மறை எண்ணங்கள் என்றால் நாம் என்ன நினைக்கிறோம்? நல்லது மட்டுமே நினைப்பது. ஏன் நல்லது மட்டுமே நினைக்க வேண்டும்? நமக்கு கெட்டது எதுவும் நடந்து விடக் கூடாது; நல்லது மட்டுமே நடக்க வேண்டும். உண்மையில், இது நமது விருப்பமே தவிர, நேர்மறை எண்ணம் கிடையாது.

நல்லது நினைத்தால், நல்லது நடக்க வேண்டும் என்றால், நாம் புராணங்களில் வாசித்த, வீரதீர பராக்கிரமசாலிகளான மிகச் சிறந்த நல்லவர்களுக்கும் ஏன் தீமைகள் நடந்தன? ஏன் நல்லவரான தருமர் கஷ்டப்பட வேண்டும்? இது நான் சிறுமியாக இருந்த காலத்தில் என் பாட்டியிடம் கேட்டதிலிருந்து, இப்போது வரை முடிவுறாக் கேள்வி.

சில காலம் முன்பு இதே போல எனக்கும் மகளுக்குமான சிறிய உரையாடல் நிகழ்ந்தது.

‘அறம்’, ‘தீரன்’ மற்றும் அதற்கு முன்பும் பார்த்திருந்த படங்களின் பாதிப்பில் மகள் கேட்டார், ‘‘நேர்மையாக இருக்கச் சொல்றாங்க ; ஆனால், அப்படி இருந்தால் கஷ்டப்படணும்னு காட்றாங்க. ஏழையா இருக்கணும்னு காட்றாங்க. என்னம்மா இது?”


‘‘அந்தக் கஷ்டப்படுத்துகிறவர்கள் போல உங்களால இருக்க முடியுமா?”

‘‘முடியாது.”

‘‘நாம் நல்லவர்களாக வாழ்வது என்பது மற்றவர்கள் நமக்கு ‘க்ரெடிட்’ கொடுக்கவோ பணக்காரங்களாக வாழவோ இல்லை; நாம் நல்லவர்களாக இருப்பது என்பது நமக்கு மற்றவர்கள் மேல் இருக்கிற அன்பு! மரியாதை! பணம் சம்பாதிப்பது, மற்றவர்கள் நம்மைக் கஷ்டப்படுத்தி விடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கிறது இதெல்லாம் அவரவருக்கான திறமை!”

திறமையையும் தன்மையையும் இப்படிப் பிரித்துப் பார்க்காமல், ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பார்ப்பதால்தான் சில விஷயங்கள் புரியாமல் கனத்து கஷ்டமாக ஆகிவிடுகின்றன.

நேர்மறை எண்ணம் என்பது, நமது மனதில் எவ்வகையான எப்படிப்பட்ட எண்ணங்கள் வந்தாலும் அவற்றைச் சிறு குழந்தைகள் போல பாவித்து, உள்ளது உள்ளபடியே ஏற்று அவற்றை நல்வழிப்படுத்துவது; அவற்றின் ஆற்றலை முறைப்படுத்துவது.

நாம் நமக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று நினைப்பது அல்லது வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என நினைப்பது ஆரோக்கியமா? தோல்வி அடைந்து விடக் கூடாது என்கிற நமது பயம்தானே, வெற்றி மட்டுமே வேண்டும் என யோசிக்க வைக்கிறது. இது சரிதானா?

ஒரு நீச்சல் குளத்தைச் சுற்றிச் சுற்றி வருவதுபோல, நாம் நமது பயத்தை நோக்கிச் சென்று அதன் விளிம்பிலேயே நின்றுகொள்கிறோம். ‘நடந்து விடுமோ நடந்து விடுமோ’ என அந்த விளிம்பில் நின்று, நாம் நினைப்பதெல்லாம் நிஜமாகவே நடந்துவிடும் என்றால், நாம் நினைக்கிற எதிர்மறை எண்ணங்களின் அளவிற்கு, இந்த உலகம் இதுவரை பல்லாயிரம் தடவை அழிந்து போயிருக்க வேண்டும். இல்லையா? ஆனால், அது அப்படி அல்ல.

நமது வாழ்வில் தினமும் நாம் சிந்திக்கிற ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நேர்மறை எண்ணங்களும் எதிர்மறை எண்ணங்களும் கலந்தேயிருக்கின்றன.

உதாரணமாக, பால், குழம்பு போன்ற உணவுப் பொருட்கள் கெட்டுப் போய்விடுமோ என்று ஃப்ரிட்ஜில் வைப்பது போன்றவை முன் ஜாக்கிரதைத் தனமான விஷயங்கள். எதிர்கால வாழ்விற்காகச் சேமிப்பது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது போன்ற பெரிய நீண்ட கால முன்னேற்பாடுகள்,
தினமும் சத்தான உணவை உண்பது, நடப்பது, உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்றவை ஆரோக்கியத்திற்கானச் செயல்பாடுகள்.

மேலும் நாம் நமது மற்றும் வீட்டினரின், நாட்டின் பாதுகாப்பு கருதிச் செய்கிற எல்லாவற்றிலுமே எதிர்மறை எண்ணங்களே உள்ளன. இவை எல்லாமே, நாம் நமது எதிர்மறை எண்ணங்களை, முறைப்படுத்தி நேர்மறையாகச் செயலாற்றுவதால் பெறுகிற நன்மைகள்தானே?

நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் வரத்தான் வரும். அதை நாம் handle பண்ணும் விதத்தில் அது நேர்மறையாக மாறுகிறது. உதாரணமாக, கோபம் பற்றிப் பார்ப்போம்.

சிலர் சிறிய விஷயங்களுக்கும் கோபப்படுவார்கள். பெருமையாக ‘நான் கோபக்காரானாக்கும் / கோபக்காரியாக்கும் (short temper) என்று வேறு சொல்லிக்கொள்வார்கள். ஆனால், அவர்கள் தனது கோபத்தால் வாழ்வின் எத்தனையோ நல்ல தருணங்களை இழந்திருப்பார்கள். நல்ல மனிதர்களை இழந்திருப்பார்கள். சபையினர் முன் மறுபடி விழிக்க சங்கடப்பட்டிருப்பார்கள். ஆனாலும் தனது கோபத்தைவிட முடியாமல் தவிப்பார்கள்.

பொதுவாகக் கோபத்தை எப்படி வெளிப்படுத்துகிறோம்? கத்துவது, தவறான வார்த்தைகள் சொல்வது, திட்டுவது, கதவை ஓங்கிச் சாத்துவது, பொருள்களைப் போட்டு உடைப்பது, யார் மேல் கோபமோ அவர்களைத் தண்டிப்பது, அடிப்பது, தாக்குவது, அவமானப்படுத்துவது, கேவலப்படுத்துவது, சிறுமைப்படுத்துவது, சாபமிடுவது, பின்னாடி புறம் பேசித்திரிவது, தகுந்த தருணம் வாய்க்கும்போதெல்லாம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தாக்குவது, அவரை உண்டு இல்லை எனக் காலி’ பண்ணிவிடுவது இப்படி.

இது மிகச் சிறிய வாழ்வு. இன்று இருப்பவர், நாளையில்லை. மற்றவர்களுக்காக இல்லை என்றாலும், தனக்காகவாவது தனது வாழ்வைச் சிறப்பாக மகிழ்வாக வாழ வேண்டும் என்பதற்காகவாவது, தனது மனதை நல்ல எண்ணங்கள் வாழும் இடமாக வைத்துக்கொள்வதா, அல்லது இந்த வாழ்வில் இப்படியான பகையுணர்வுடன்தான் மனம் அழுகிப் போய் வாழ்வதா என்பது அவரவர் தனக்குள்ளாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

கோபம் ஓர் எதிர்மறை எண்ணம். அதை எப்படி handle பண்ணுவது?

எந்த ஒரு துறையிலும் தோல்வியை நோக்கிச் செல்கிற பிராஜக்டைச் சரிப்படுத்த, அதை நோக்கி, ‘5ஏன்’களைக் ( 5 Why) கேட்கச் சொல்வார்கள். முதல், இரண்டாவது, மூன்றாவது ‘ஏன்’ கேட்கும்போதே, நமக்கு அதற்கான காரணம் தென்பட்டுவிடும். காரணத்தைக் கண்டடைவதே பாதித் தீர்வுக்குச் சமம்.

இதையே நாம், நமது தன்னறிதலாக, நமது எதிர்மறை குணாதிசயங்களுக்குச் செய்து பார்த்தோமானால், யாரும் சொல்லாமலே நமது குறைபாடுகளை அறியத் தொடங்குவோம். விரும்பினால், சரிசெய்யவும் ஆரம்பிப்போம்.

முதலில் நமக்கு எதற்கெல்லாம் கோபம் வருகிறது என்பதை வகைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு கோபத்துக்கான செயல்பாடுகளுக்கும் முன்பாக, 5 ஏன்’களைக் கேட்டுப் பாருங்கள். தாமாகவே விடை கிடைக்கும்; தீர்வும் நிகழும்.

உதாரணமாக, ஒரு குழந்தை பால் டம்ளரைச் சாய்த்து விடுகிறது. அம்மா கோபப்பட்டு அடித்துவிடுகிறார்.

1. அம்மா ஏன் அடித்தார் – பாலைக் கொட்டியதால், உணவுப் பொருளான பால் வீணாகி விட்டதே என்கிற காரணத்திற்காக, கொட்டிய பாலைத் துடைக்க வேண்டுமே என்பதற்காக, பள்ளிக்கு அனுப்ப வேண்டும் அதற்குள் சாப்பிட வைக்க வேண்டும் இந்த நேரத்தில் இப்படி நடந்ததற்காக, இருக்கிற 86 வேலைகளில் எதிர்பாராத ஒன்றாக இதுவும் சேர்ந்துவிட்டதற்காக, கணவர் இது எதிலுமே பொறுப்பெடுத்துக்கொள்ளாமல் டிவியோ பேப்பரோ பார்த்துக்கொண்டிருப்பதற்காக – இப்படிப் போய்க்கொண்டே இருக்கும்.

2. குழந்தை ஏன் பாலைக் கொட்டியது – தெரியாமல் ஏதோ நினைவில், தினமும் பால் என்கிற சலிப்பில், சீக்கிரம் குடித்துக் கிளம்பி பள்ளி போக வேண்டுமே என்கிற பதற்றத்தில், பள்ளி போக வேண்டியிருக்கிறதே என்கிற வெறுப்பில், ஏன் பள்ளி போக வேண்டும் என்பது புரியாத நிர்ப்பந்தத்தில் – இது இப்படியே நீளும்.

நேர்மறைச் செயல்பாடு: குழந்தை தெரிந்தோ தெரியாமலோ வேண்டுமென்றேவோ பாலைக் கொட்டியிருக்கலாம். நிகழ்வு – பால் கொட்டியிருப்பது. சரி செய்யப்பட வேண்டியது – இடத்தைச் சுத்தம் செய்வது. அவ்வளவுதான். கொட்டிய பாலை எப்படித் துடைத்து எடுக்க வேண்டும் எனத் தன்மையாகக் குழந்தைக்குக் கற்றுக்கொடுத்தல்தான் நேர்மறைச் செயல்பாடு.

இதே போல, பெரியவர்களின் ஒவ்வொரு கோப நிகழ்வையும்கூட மெல்ல சரிப்படுத்த இயலும். அதற்குச் சம்பந்தபட்டவர்களுக்குள் -நிஜமாவவே தனது தவறுகளுக்கு வருந்துகிற, அதைச் சரிப்படுத்த முயல்கிற பெரிய, பெருந்தன்மையான மனம் வேண்டும்.

இந்த வாழ்வில், நம்மால் மாற்ற முடியாதது மரணம் மட்டுமே. நம்மால் எது முடியும் எது முடியாது என்பதை வகைப்படுத்த வேண்டும்; நம்மை மீறிய விஷயங்களுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டு கவலைப்படுவது அல்லது கோபப்படுவது, நம்மால் முடிந்தவற்றைச் செய்யாமலிருப்பது இரண்டுமே தேவையற்றது.

அடுத்தது, கோபம் எதற்கு ஏன் யாரிடம் எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ, அதற்கு அதனால் அவர்களிடம் அப்படி வெளிப்படுத்த வேண்டும். அதுவும் நேர்மறையாக எப்படி வெளிப்படுத்தலாமோ அப்படி வெளிப்படுத்த வேண்டும்.

மேலாளர் திட்டுகிறார். அதை மனைவியிடம் /கணவரிடம் குழந்தையிடம் அக்கம்பாக்கத்தாரிடம் இப்படிக் கோபத்தை தொடர்வது.

பள்ளியில் ஆசிரியர் திட்டியதற்கு, வீட்டில் அம்மா அப்பாவிடம் சண்டை பிடிப்பது நண்பர்களிடம் காண்பிப்பது… இப்படி.

சில முகங்கள் சில குரல்கள் சொன்னால் நாம் அப்படியே ஏற்றுக்கொள்வோம். அதே வார்த்தைகளை, விஷயத்தை வேறு குரல் வேறு முகம் சொன்னால் ஏற்க மாட்டோம். முதலாளி சொன்னால் ஏற்போம்; அம்மா, அப்பா சொன்னால் ஏற்போம்; ஆனால் மனைவியோ கணவனோ சொன்னால் ஏற்க மாட்டோம்; பிரச்னை சொல்பவரிடமா, கேட்கும் நம்மிடமா?

அன்றன்றைக்குப் பிரச்னைகளை அன்றன்றைக்கே முடிப்பது நல்லது. மறுபடி அதே பிரச்னைகளைப் பற்றிப் பேசும்போதும் விவாதிக்கும் போதும் தானே ரூலர் மற்றும் சர்வாதிகாரியாக இருக்காமல், மற்றவர்களின் கருத்திற்கும் மதிப்பளித்து கேட்பது, பிறகு அதை எப்போதும் குத்தி காட்டாமல் இருப்பது, இவை எல்லாமே கோபத்தைக் கைவிட உதவும்.

சிலர் சில நிகழ்வுகளை நினைக்கும் போதெல்லாம் பெரும் ஆத்திரம் கொள்வார்கள். உதாரணமாகப் பங்காளி பகை, இப்படியானவர்கள் எதையும் மன்னிக்கவும் மறக்கவும் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். வீடோ அல்லது அலுவலகமோ கோபத்தில் தனக்குக் கீழ் உள்ளவர்களைத் தண்டித்திருப்பார்கள். காலமும் கடந்திருக்கும். ஆனால், அப்போதும் கோபம் தீராமல் அந்த நிகழ்வை நினைக்கும்போதெல்லாம் வைத்து வைத்துச் செய்வார்கள். ஒரே தவறுக்கு, பலமுறை தண்டனை தருவார்கள்; பலவிதமான முறைகளில் தருவார்கள். நிகழ்ந்த தவறையும் விட, தண்டனை பெரிய தவறாக நீண்டுகொண்டிருக்கும்.

கோபம் என்பது சிறு தீப்பொறி போல், தான் பற்றித் தொடங்கியவற்றிலிருந்து யாவருக்கும் தொற்றி எல்லோரையும் அழிக்க வல்லது மட்டுமல்ல, தன்னையே எரிக்கும் பெரும் தீ. அதைச் சுடராக வைத்துக்கொள்வது சம்பந்தப்பட்ட நமது கைகளில்தாம் உள்ளது.

(தொடரும்)

படைப்பாளர்

பிருந்தா சேதுExample Ad #2 (only visible for logged-in visitors)

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.