மே மாத வெயில் படுத்திஎடுத்தது. கால்களைக் கீழே வைக்க முடியாமல் தரையில் பதித்திருந்த கருங்கற்கள் பதம் பார்த்தன. ஆங்காங்கே கால்களை நனைக்க தண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தாலும் இரண்டொரு நிமிடங்கள்தாம் தாக்குப்பிடிக்கிறது. நீண்டிருந்த வரிசையில், வெயிலுக்குக் கால்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாடிக்கொண்டே சுற்றிச் சுற்றிப் பராக்கு பார்த்தேன். மிகப்பெரிய வளாகம். வளாகமெங்கும் புத்த பிக்குகளின் நடமாட்டம். (அவர்களுக்குச் சமமாக ராணுவத்தினரின் நடமாட்டமும்). நீண்ட வரிசையில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுவாசிகள். ஏதேதோ புரியாத மொழியில் கோயிலைப் பற்றிப் பல நூறு கதைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. தமிழ்க் குரல்களைக் கேட்க முடியவில்லை. அவ்வப்போது கேட்கும் ஆங்கிலம் மட்டுமே புரிந்த மொழியாக இருந்தது. தூரத்தில் வெண்ணிறத்தில் பல்வேறு கலைநயமிக்க அழகிய கட்டிடங்கள் தெரிந்தன. சின்ன வயதிலிருந்து வரலாற்றுப் புத்தகத்திலிருந்த ‘புத்தரின் புனிதப்பல் இருக்குமிடம் கண்டி’ என்பதை மனப்பாடம் செய்து வைத்திருந்த தலத்தைப் பார்க்கும் அரிய வாய்ப்பு. இதைப் பார்க்காமல் இந்தியா திரும்பினால், ‘சாமி கண்ணைக்குத்தும், இலங்கைச் சுற்றுலா முழுமையடையாது’ என்று அடம்பிடித்ததால், உடன் வந்த இலங்கை தோழிகள் எங்களை மட்டும் உள்ளே அனுப்பிவிட்டு, கடைத் தெருவிற்குச் சென்றுவிட்டனர். உலகிலுள்ள முக்கிய பௌத்த கோயில்களுள் ஒன்றான புத்தரின் புனிதப்பல் உள்ள ‘தலதா மாளிகை’ என்று அழைக்கப்படும் Temple of the Tooth Relic பார்க்கும் நீண்ட வரிசையில் நின்றபடிதான் இத்தனை பராக்கு.

சுற்றிலும் மலைகள் சூழ அமைந்துள்ளது அழகிய கண்டி நகரம். ஐந்து மலை நகரம் என்று அழைக்கப்படும் கண்டி இலங்கையின் சர்வதேச சுற்றுலாத்தலம். இலங்கையின் புராதன நகரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. நகரின் எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் கண்ணைக் கவர்கிறது மலையின் நடுவே அமையப் பெற்றுள்ள வெண்மை நிறத்திலுள்ள மிகப் பிரம்மாண்டமான புத்தர் சிலை. நகரின் மையப் பகுதியில் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரந்து விரிந்திருக்கிறது 1807இல் உருவாக்கப்பட்ட Giri Muhuda அல்லது Milk of Sea என்று அழைக்கப்படும் செயற்கை ஏரி. படகு சவாரியின் போது, சவாரியை அனுபவிக்கவா, சுற்றிலுமுள்ள மலையழகை ரசிக்கவா, ஏரியின் பிரம்மாண்டத்தை ருசிக்கவா, புத்தர் சிலையை வணங்கவா, ஏரிவாழ் விதவிதமான பறவைகளைப் பார்த்துப் பரவசம் அடைவதா என்று மதி மயங்குகிறது. அந்த அழகிய ஏரிக்கரையில் தான் அமைந்துள்ளது புத்தரின் பல் பாதுகாக்கப்படும் கோயில். ஸ்ரீ லங்காவின் தலைநகராக கண்டி இருந்தபோது, இந்த இடம் கோட்டையாக இருந்திருக்கிறது. கோயிலைச் சுற்றிலுமுள்ள கட்டிடங்கள் 1592 லிருந்து 1603 வரை விமல தர்ம சூர்ய மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளன. ஸ்ரீ விக்ரம் ராஜா சிங்க மன்னர் இந்தக் கோயிலைக் கட்டியதாகவும் வேறுபட்ட செய்திகள் உண்டு. 1687 – 1707 மற்றும் 1747 – 1482 காலப்பகுதிகளிலும் இக்கோயிலில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில காலம் சிறைச்சாலையாகவும் இருந்திருக்கிறது. இதைச் சுற்றி, மன்னரின் மாளிகை மற்றும் பற்பல மாளிகைகளுடன் இணைந்து இன்று மிகப்பிரமாண்டமாக விரிவடைந்து காணப்படுகிறது. எங்கு ஆரம்பித்து எங்கு முடிக்க என்று தெரியாததால், எங்களுக்கு முன்னால் சென்றவர்களைக் ‘கண்மூடித்தனமாகப்’ பின்பற்றிக்கொண்டிருந்தோம். வழிகாட்டிகள் என்று எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு புத்தபிக்கு வெளிநாட்டுப் பயணி ஒருவருக்கு கோயில் குறித்த வரலாறுகளை உடைந்த ஆங்கிலத்தில் கூறிக்கொண்டு செல்ல, ஒட்டுக் கேட்டுக்கொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தோம்.

கண்டி கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் இம்மாளிகை, மரத்தில் செதுக்கப்பட்ட சித்திரங்கள், சுவர் ஓவியங்கள், கலைநயம் மிகுந்த அலங்காரப்பொருள்கள் என அருங்காட்சியகம் போல அற்புதமாக காட்சியளிக்கிறது. ஓர் அறையில் உலகின் பல நாடுகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட விதவிதமான புத்தர் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மற்றோர் அறையில் புத்தர் பிறந்ததிலிருந்து அவரது பல் இங்கு கொண்டுவரப்பட்டது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இந்தியாவில் கி.மு. 543இல் புத்தரின் இறப்பிற்குப்பின் அவரது உடலைத் தகனம் செய்யும்போது ஒரு பௌத்த பிக்குணி அவ்விடத்திற்கு வந்து புத்தரின் இடது பல்லை சேகரித்து எடுத்துக்கொண்டாராம். அவர் கலிங்கப் பேரரசின் மன்னரிடம் அதைக் கொடுத்தாராம். நெடுங்காலம் வரை, கலிங்க நாட்டில் (தற்போதைய ஒடிஸாவில்) இந்தப் புனிதப்பல் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. பின்னர் இளவரசி ஹேமமாலாவும் அவரது கணவர் தத்தா குமாரன் இருவரும் குஷி நகரத்திலிருந்து அதை கடத்திக்கொண்டு இலங்கைக்கு வந்தார்கள். ஹேமமாலா அந்தப் பல்லை தனது தலைமுடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு வந்திருக்கிறார். அப்போதைய இலங்கை அரசனான மேகவர்ணனிடம் ஒப்படைத்தனர். மன்னர் எழுந்து நின்று இருகை நீட்டி மரியாதையுடன் மலர்கள் சொரிந்து ஒரு பேழையில் அந்தப் புனிதப் பல்லைப் பெற்றுக்கொள்கிறார்.

‘புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது. பல் இருக்கும் முதல் தளத்திற்கு வந்துவிட்டோம். “எங்கே அந்தப் பல்? எங்கே அந்தப் பல்?” மனசு பரபரக்க சுற்றுமுற்றும் பார்த்தோம். எல்லாரும் ஒரு திசையை நோக்கி வணங்கி ஏதோ மந்திரம் போல முணுமுணுக்க, தூரத்தில் அந்த அறை மட்டும்தான் தெரிந்தது. உற்றுப் பார்த்தோம். ஒன்றும் தெரிய வில்லை. அருகில் அமைதியே உருவாக நின்றிருந்த பிக்குவிடம் ஆங்கிலத்தில் கேட்க, அதோ என்று கைகாட்டினார். தூரத்தில் பெருமாள் கோயிலில் பக்தர்களின் தலையில் வைக்கும் சடாரி போல ஒரு பொருள் தெரிந்தது. வாங்கிச் சென்றிருந்த பூக்களைச் செலுத்திவிட்டு, அனைவரும் திருப்தியுடன் திரும்ப, பெரும் குழப்பத்தில் நாங்கள். பிறகுதான் தெரிந்துகொண்டோம், சடாரி போலிருந்ததுதான் பேழை, ரத்தினக் கற்களால் பொறிக்கப்பட்ட அந்தச் தங்கப் பேழையில்தான் புத்தரின் பல் பொதிந்துள்ளதாம். பல் வைக்கப்பட்டுள்ள பேழை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமாம். ஐந்து வருடத்திற்கு ஒருமுறைதான் அந்தப் பேழை திறக்கப்படுமாம். ரொம்ப ஏமாற்றமாக போய்விட்டது. (இந்த டப்பாவைப் பார்க்கவா இவ்வளவு நேரம் செலவழித்தோம்…) புனிதப்பல் வைக்கப்பட்டுள்ள அந்த அறையை ‘ஹந்துன் குணமா’ என்று அழைக்கிறார்கள்.

ஏமாற்றத்துடன் நகர்ந்தோம். உற்சாகம் வடிந்துவிட்டிருந்தது. ஒரு பெரிய அறையின் நடுவிலிருந்த ஸ்தூபி போன்ற அமைப்பிற்குள் புத்தரின் தலைமுடி இருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படி வந்தது எனக் கேட்டால், தெரியவில்லை. “இந்தக் கோயிலைப் பற்றி நிறைய கதைகள் சொல்கிறார்கள். எதற்கும் காரணமோ விளக்கமோ தெரியவில்லை” என்கிறார் ஓர் உள்ளூர்வாசி. ஹந்துன் குணமாவிற்கு (மூலகிரகத்திற்கு) முன்னால், இரண்டு யானைத் தந்தங்கள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. ராயல் பேலஸ், மியூசியம் என்று கட்டிடங்கள் கோயிலுக்குப் பின்னால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், பாதுகாப்பு மிகவும் பலமாக இருக்கிறது. யுத்த காலத்தில் இரண்டுமுறை கோயில் தாக்கப்பட்டுள்ளதால் இப்போதுவரை ராணுவப்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் உலகின் மிகப்பெரிய புத்த கொண்டாட்டம் பத்து நாள்கள் இங்கு நடைபெறுகிறது. திருவிழாவின் பத்தாவது நாள் புத்தரின் பல் யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. புத்தரின் பல் ஊர்வலத்தில் உலகெங்கிலுமிருந்து வந்த பௌத்தர்கள் பங்கு பெறுகின்றனர். பாரம்பரிய நடனம், ஊர்வலங்கள், இசைக் கலைஞர்கள், தீப்பந்தங்கள் ஏந்திய மனிதர்கள், 500 யானைகள், 2000 நடனக் கலைஞர்கள் எனப் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெறும். 500 யானைகளா என வாய்பிளந்தோம். இலங்கையிலுள்ள அனைத்து யானைகளும் அங்கு கொண்டுவரப்படுமாம். பல்லை ஊர்வலம் எடுத்துச் சென்றால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் உண்டு.

“தலதா மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல் உண்மையில் ஆச்சரியமே. ஒரு சுட்டுவிரல் அளவு நீளமான ராட்சசப் பல்லை, புத்தரின் உடலுடன் இணைத்துப் பார்க்க முடியவில்லை. உண்மையில் அது ஒரு கற்கால மனிதன் அல்லது விலங்கின் பல்லாக இருந்திருக்கலாம். அந்தத் தந்தத்தை வைத்திருந்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை பரப்பப்பட்டிருக்கலாம். அந்த நம்பிக்கைகளை மதம் என்ற பெயரில் தொடர்ந்து, சிங்கள மன்னர்களும் தமிழ் மன்னர்களும் அந்தப் பல்லை கைப்பற்றுவதற்காகப் போராடியிருக்கலாம்” என்றும் அனுமானிக்கப்படுகிறது. அதன் பின்னான வரலாற்றில், தமிழ் மன்னர்களை புத்தரின் புனிதப்பல்லை கொள்ளையிட்ட மத துவேஷிகளாக சிங்களர்கள் சித்தரிக்க, சிங்களர்களை அடக்கி புத்தரின் புனிதப்பல்லை கைப்பற்றிய வீரர்களாகத் தமிழ் மன்னர்களைச் சித்தரித்து பெருமைகொள்கின்றனர்.

அது உண்மையில் என்ன? புத்தரின் பல் என்றால், எப்படி இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது? அந்தப் பிக்குணி ஏன் புத்தரின் இடது பல்லை மட்டும் எடுக்க வேண்டும்? எரியும் உடலிலிருந்து எப்படிப் பல்லை மட்டும் எடுக்க முடிந்தது? அப்படி எடுத்திருந்தால், மீதமுள்ள பற்கள் என்னவாயின? புத்தரின் முடி இருப்பதாகச் சொல்லப்பட்டால் அது எப்படி வந்தது? இப்படி விடையில்லாத கேள்விகள் தொடர்கின்றன. உலகின் துலங்காத மர்மங்களுள் ஒன்றாக நிற்கிறது, உலகே நம்பிக்கை கொண்டுள்ள தலதா மாளிகை.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இந்தத் தொடர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகமாக வெளிவந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இலங்கை இவருக்கு இதில் இரண்டாவது தொடர்.