காலம் : கி.மு. 247

இடம் : பாடலிபுத்திரம் நகரம்

நிகழ்வு : மூன்றாம் பௌத்த மாநாடு

தெருவெங்கும் அலங்காரங்களும் தோரணங்களுமாக நகரம் விழாக்கோலத்திற்குரிய சர்வ லட்சணங்களுடன் பரபரப்பாக இருந்தது. கடைவீதிகள் கலகலத்தன. எங்கெங்கும் பௌத்தபிக்குகளின் நடமாட்டம். கடந்த ஒன்பது மாதங்களாக இந்தப் பரபரப்பிற்கு மக்கள் பழகியிருந்தனர். எதிர்பட்ட புத்தபிக்குகளைப் பயபக்தியுடன் வணங்கிச் சென்றனர். பிக்குகளின் முகத்தில் அமைதியும் கண்களில் ஞானத்தின் ஒளியும் படர்ந்திருந்தது. பெரும்பாலானோரின் முகவெட்டும் உருவமைப்பும் அவர்களை இந்தியர்களிடமிருந்து பிரித்துக் காட்டியது. மைசூர், சௌராஷ்டிரம், மகாராஷ்டிரம், காஷ்மீர் போன்ற பகுதிகளிலிருந்தும் சிந்து, காந்தாரம், பாக்திரியா, சுவத், இமயமலை, இலங்கை, சீனா, மியான்மர், தாய்லாந்து, கிரேக்கம் எனப் பல்வேறு நாடுகளிலிருந்து அசோகச் சக்கரவர்த்தியின் ஆதரவில், மொகாலி புத்த தீசர் என்னும் தேரரின் தலைமையில் பாடலிபுத்திரத்தில் நடைபெற்ற மூன்றாவது பௌத்த மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தனர்.

பண்டிதர்களும் பெரும் விற்பன்னர்களும் கூடியிருந்த அந்த மாநாட்டில் சலசலப்பிற்கும் பஞ்சமில்லை. காரசாரமான விவாதங்கள் நடந்தன. கருத்து மோதல்கள் அனல் பறந்தன. மக்களின் முன்னால் சாந்த சொரூபிகளாகத் தெரிந்த புத்த பிக்குகளின் கடுமையான இன்னொரு முகம் அந்த மன்றத்தில் வெளிப்பட்டது. முதலாம் மாநாட்டின் போதே தொடங்கியிருந்த பௌத்த சடங்குகள் குறித்த குழப்பங்களும் கருத்து வேற்றுமையும் குருமார்களிடையே இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் காரணமாகக் கருத்தியல் பிளவுகள் தோன்ற, இந்திய அரசியல் கட்சிகள் போல பௌத்தத்திலிருந்த பல்வேறு பிரிவுகள் தோன்றியிருந்தன. மாநாட்டில் பௌத்த மதம் குறித்த ஆராய்ச்சிகள் நடந்தன. உபசோதா என்னும் தியானச் சடங்கில் மாற்றங்கள் கொண்டுவர பௌத்த அறிஞர்களிடையே ஒப்புதல் பெற முடியவில்லை. தேரவாத புத்தபிக்குகள் தமிழக எதிர்கட்சிகள் போல மாநாட்டிலிருந்து அவ்வப்போது வெளிநடப்பு செய்து கொண்டிருந்தனர். ஒன்பது திங்களாக (மாதங்கள்) நடந்துகொண்டிருந்த அந்த மாநாடு ஒரு வழியாக நிறைவுற்றது.

மாநாட்டில் எடுத்த தீர்மானங்களின்படி பௌத்தபிக்குகள் பௌத்தமதத்தைப் பரப்புவதற்காகப் பல்வேறு இடங்களுக்கும் வெவ்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவர்களுள் முக்கியமானவராகக் கருதப்பட்டார், அசோகரின் மகனாராகிய மகேந்திரர் (பாலி மொழியில் மகிந்தர்). அசோகர் பௌத்தத்தில் இவ்வளவு ஈடுபாடு கொண்டு தனது வாரிசுகளை (அரசியல் வாரிசுச் சண்டைகள் ஏதும் இல்லாமல்) பௌத்தவழியில் செலுத்தியதற்குப் பின்னால் ஒரு வலுவான காரணம் இருந்தது. நமக்குச் சொல்லிக்கொடுத்த பாடப்புத்தகங்கள் அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்றே சொல்லிக்கொடுக்க, அவர், ‘அசோகாவின் நரகம்’ என்ற சித்தரவதைக்கூடம் வைத்திருந்தது குறித்தும், தனது 99 சகோதரர்களைக் கொன்றது குறித்தும் கூறுகின்றன பௌத்த தரவுகள். கலிங்கப் போர் நிகழ்ந்த நேரத்தில், அசோகரால் சித்தரவதைக்கூடத்திற்கு அனுப்பப்பட்ட சமுத்ரா என்ற புத்த துறவி, அசோகரின் மனதை மாற்றி, புத்த தர்மத்தை கடைப்பிடிக்கும்படியும், புத்தரின் தீர்க்க தரிசனத்தின்படி 84,000 ஸ்தூபிகளைக் கட்டும்படியும், அனைத்து உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்படியும் அசோகரை மனமாற்றம் செய்ய, அசோகரும் சித்திரவதை அரண்மனையை இடித்து பௌத்ததிற்கு மாறியதாக அசோகவதனம் (திவ்விய வதனத்தின் ஒரு பகுதியாகிய ‘அசோகரின் கதை’) விவரிக்கிறது. பௌத்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அசோகரின் மனைவியே புத்தபிக்குகள் வழியாக அசோகர் மனதை மாற்றினார் என்றும் சொல்லப்படுகிறது. (அட, ஆண்களின் எல்லாப் புகழுக்கும் பின்னால் பெண்கள் தானா எல்லாக் காலத்திலும்!)

கலிங்கத்தில் அழிவை ஏற்படுத்திய அசோகர் வன்முறைக்கு முடிவுரை எழுதி புதிய பாதை அமைத்துக்கொண்டார். ரத்தத்தின் கறை இல்லாத, மரணத்தின் ஓலம் இல்லாத புதிய பாதை அது. ஆம், அவர் தேடல் தம்மத்தில் நிறைவடைந்தது. அந்தப் புதிய தம்மத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தார். புத்தம் பரப்புதலே தன் வாழ்நாள் கடனென்று ஏற்றுக்கொண்டார். அதற்காகத் திட்டமிட்டு, நாடுவிட்டு நாடு கிரேக்கம் வரை பௌத்தத்தைப் பரப்பிய மனுசன் பக்கத்திலிருக்கும் குட்டித்தீவை விடுவாரா? பௌத்தம் பரப்பும் கணக்கை, தனது வீட்டிலிருந்தே துவங்கி வைத்தார். மகிந்தர் தன்னுடன் இந்திரியர், உத்தியர், சம்பவர், பத்திரசாரர், சாமனர சுமணர் (இவர் அசோகரின் பெண் வயிற்றுப் பேரர்) போன்ற பிக்குகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டார். இந்திய நூல்கள் அவரை அசோகரின் தம்பி எனக்கூற, இலங்கை நூல்கள் மகன் எனக் கூறுகின்றன. உறவுகள் எவ்வாறாயினும் மகிந்தரே இலங்கையில் பௌத்த விதையிட்டார் என்பது வரலாறு. கடல்வழியாக இலங்கை நோக்கிச் சென்ற அந்தக் கப்பலில், இருந்த புத்தபிக்குகள் அறிந்திருக்க மாட்டார்கள், ஒரு நாட்டின் எதிர்காலத் தலையெழுத்து தங்களால் தான் மாற்றியெழுதப்படப் போகிறதென்று. இப்படித்தான் பௌத்தமதம் கடல்கடந்து இலங்கை சென்றது. போகும் வழியில் நெல்லுக்கு இறைத்தநீர்… புல்லுக்குமாக ‘செவனே’ (சிவனே) என்று இருந்த தமிழகத்தையும் பௌத்தமதம் ஆட்கொண்டது தனிக்கதை.

அசோகரின் மகன் மகேந்திரன் புத்தம் பரப்ப இலங்கை வந்த போது, அனுராதாபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தமிழ் மன்னன் திசையன் புத்தமதத்தைத் தழுவ, அவனுக்குத் ‘தேவ நம்பி’ என்ற பட்டத்தை அசோகர் வழங்கினார் என்கிறது தீபவம்சம். அரசனின் மாமனார் அரிட்டரும் புத்தமதம் தழுவி, இலங்கை முழுவதும் புத்தமதத்தைப் பரப்ப உதவி செய்கிறார். அடுத்து, தனது 32வது வயதில் அசோகரின் மகள் புத்தபிக்குணி சங்கமித்திரை, கௌதம புத்தர் ஞானம் பெற்ற வெள்ளரசு மரத்தின் வேரூன்றிய வலக்கிளை ஒன்றைத் தங்கக் கலசத்தில் ஏந்தி, இலங்கையின் டம்புகோலபடுனா துறைமுகத்தில் கி.மு. 245இல் டிசம்பர் மாதத்து பௌர்ணமியன்று வந்து இறங்குகிறார். பௌத்தம் ஆண், பெண் என்ற பேதமின்றி இன்னும் அதிவேகமாகப் பரவியது. உதுவப் மாதத்து பௌர்ணமியில் அரசன் தேவனம்பிய தீசன் என்பவரால் நடப்பட்ட அந்த மரம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பௌத்தத்தின் ஆணி வேராக, மக்களின் நம்பிக்கைச் சின்னமாக விளங்குகிறது. இலங்கையில் பௌத்தம் நிறுவப்பட்ட நாளை ஜூலை மாதத்து பௌர்ணமியில் பொசன்போயா (POSON POYYA) விழா எடுத்து கொண்டாடுகின்றனர். அனுராதாபுரத்திலுள்ள புனித வெள்ளரசு மரமே வரலாற்று ஆதாரங்களின்படி உலகில் மனிதரால் நடப்பட்ட முதல் மரமாகவும், அப்படி நடப்பட்ட காலம் அறியப்பட்ட மரங்களில் மிகப் பழமையான மரமாகவும் கருதப்படுகிறது. (போதி வம்சம்)

Selective focus Buddha face background – vintage effect style pictures

அசோகர் முயற்சியால் இலங்கை வந்த புத்தமதம், இன்று இலங்கையின் மொத்த ஜனத்தொகையில் 82.2 சதமானோரைத் தன்னை நோக்கி இழுத்திருக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 9வது பிரிவின் கீழ் பௌத்தம் அரசமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பௌத்த மதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்களே. போர்த்துகீசியர் வந்தபோது, சிலர் கத்தோலிக்க மதத்தைத் தழுவியிருக்கின்றனர். இன்று சிறுபான்மை அளவிற்குக் கிறுஸ்துவ சிங்களர்களும் இஸ்லாமிய சிங்களர்களும் உண்டு.

இந்திய மன்னர்களின் சாம்ராஜ்ஜிய விரிவாக்கலில் இருந்து இலங்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே பௌத்தத்தை உள்வாங்கியது. வரலாற்று ரீதியாக மொழிப் பிரச்னைகளோ, மதப்பிரச்சினைகளோ பெரிதாக இல்லாதிருந்த இலங்கை மக்களிடையே பிரித்தானிய காலனி ஆதிக்கவாதிகளின் நலனுக்காக பௌத்த அடிப்படைவாதம் ஊக்குவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டு இந்துக் கோயில்கள் கட்டுவதும், இந்துக் கோயில்கள் நொறுக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுவதுமான ஆலயக் கட்டுமான சர்ச்சைகள் இந்தியாவிற்குக் குறைவில்லாமல் அங்கும் நடந்தேறியது.

சமத்துவத்தையும் சமாதானத்தையும் விரும்பி போருக்கு எதிராக அசோகரால் பரப்பப்பட்ட புத்தமதம் வன்முறையின் பக்கம் திரும்பியதும் நாம் அறிந்ததே. இலங்கையில் பௌத்தக் குழுக்களால் வன்முறை நிகழ்த்தப்படுவதை ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம் சுட்டிக்காட்டி கவலைகொள்கிறது. இந்த அழகிய தீவு ரத்தத்துளியாக உலகின் கண்களில் காட்சிமைப் படுத்தப்பட்டதில் பௌத்த பேரினவாதத்திற்குப் பெரும்பங்குண்டு.

இரண்டு பிரதான பௌத்த பீடங்கள் அஸ்கிரிய, மல்வத்த என்பவையே இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் மறைமுக சக்திகளாக இருக்கின்றன. 1943இல் பௌத்த பிக்கு ஒருவர் கொழும்பு முனிசிபல்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டதே பிக்குகளின் முதல் அரசியல் பிரவேசம். 2004இல் ‘ஜாதிக ஹெல உறுமய’ என்ற சிங்கள பௌத்த அரசியல் கட்சி புத்தபிக்குகளின் கட்சியாக உருவாகி, 200 வேட்பாளர்களை நிறுத்தி 9 புத்தபிக்குகள் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தனர். இன்று புத்தபிக்குகள் இல்லாமல் இலங்கை அரசியல் இல்லை.

பிக்குகள் அரசியலில் ஈடுபடுவது பௌத்த தர்மத்துக்கு எதிரானது என்றும், அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை என்றும் வாதங்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, ஆசிரியராகவும் மழலையர் பள்ளிகளின் பொறுப்பாளராகவும் முதலீட்டுத்துறை நிபுணர்களாகவும், மோட்டார் வாகனத் திருத்தம் செய்யும் கராஜ் உரிமையாளர்களாகவும், இன்று அவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவது பிக்குகள் குறித்து நம் மனதிலுள்ள பிம்பத்தை மாற்றியமைத்துள்ளது.

அரண்மனை வாழ்வைத் துறந்து, அரசைத் துறந்து பிக்குணியான புத்தரின் மதம் கடல்கடந்து தன்னை நிலைநிறுத்தி, மீண்டும் பொருளாதார அரசியல் பிரவேசம் பெற்று வரலாற்றைத் திருப்பியெழுதிக்கொண்டிருக்கிறது. அமைதியைத் போதிக்கும் மதம், 2014 அளுத்கம கலவரத்திற்குக் காரணமாக இருந்ததும், பல்வேறு திட்டமிட்ட மதக் கலவரங்களுக்குத் தலைமை தாங்குவதும், பௌத்த மதத்தைத் தழுவிய பண்டாரநாயக்காவைச் சுட்டுக்கொள்வதுமாகத் தனது பாதையை மாற்றியுள்ளதை உலகம் கவனிக்கத் தவறவில்லை.

“தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையைத் தவறான விதத்தில் முன்னெடுக்கும்போது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது” என்ற தம்மபதம் (நிராய வக்க) தெரியாதவர்களா இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் புத்தபிக்குகள்?

புத்தம் சரணம் கச்சாமி…

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!