“ஹேப்பி பெர்த் டே டூ யூ” என்ற ஆங்கில வார்த்தைகளைக் கேட்கும்போதெல்லாம், டார்டாய்ஸ் சுழன்று… “பிறந்த நாள்… இன்று பிறந்த நாள்… நாம் பிள்ளைகள் போலே… தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் – இவரை வாழ்த்துவது அப்பா, அப்பப்பா, அம்மா, அம்மம்மா” என்ற குரல் இன்னும் உங்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறதா? அப்போ நீங்கள் சந்தேகமில்லாமல் செவன்ட்டீஸ் கிட்ஸ் தான்.

18 கடல் நாட்டிகல் தொலைவிலுள்ள இலங்கையை, நம் மனதுக்கு நெருக்கமாகக்கொண்டு வந்ததில் இலங்கை வானொலிக்குப் பெரும் பங்கு இருந்தது. ஒரு தகவலை மற்றவர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்வதற்கு அறிவியல் தொழில் நுட்பத்தால் இந்த உலகிற்குக் கிடைத்த முதல் ஊடகமான வானொலி தான் நவீன உலகின் முதல் பொழுதுபோக்கு சாதனம். அந்தச் சாதனமே ‘சிலோன் ரேடியோ’ என்ற பெயரில் தமிழ்ப் பேசும் மக்களை ஒரே நேர்கோட்டில் இணைத்தது.

எழுபதுகள்… எந்தப் புறகேளிக்கைகளாலும் மனசு மாசுபடாத காலம். வானொலி என்பது வாழ்க்கையோடு ஒன்றி வாழ்வின் அங்கமாக மாறியிருந்த, ‘ஓர் அழகிய வானொலிக்காலம் அது’. டீக்கடைகள், சலூன்கள், நூலகங்கள் தவிர, பத்திரிகைகளைப் பெரிதாக வீடுகளில் வாங்கிப் படிக்கும் வழக்கம் இல்லை. ஆனால், வீட்டுக்கு வீடு வானொலிப்பெட்டிகள் தவறாமல் இருந்தன. வான் அலைகளின் துணைகொண்டு அந்தப் பெட்டிகளின் வழியே தமிழ்ச் செவிகளில் விழுந்து இதயங்களில் நுழைந்தன இலங்கை வானொலிச் சேவையின் விதவிதமான நிகழ்ச்சிகள்.

‘பொங்கும் பூம்புனல்’ நிகழ்ச்சியைக் கேட்டே தமிழர்களின் நாள்கள் புத்துணர்ச்சியுடன் விடிந்தன. செய்திகளைக் கேட்டுக்கொண்டே எம்மாணவர்கள் பள்ளிக்குத் தயாரானார்கள். ‘நேயர் விருப்பத்தின்’ மூலம் வீட்டில் அடைபட்டுக்கிடந்த பெண்களுக்கு வெளியுலகம் அறிவதற்கான முதல் சிறகுகள் முளைத்தன. “இந்தப் பொன்னந்தி மாலையை மறக்க முடியாததாக்க வருகிறார் கவிஞர் வைரமுத்து” என்ற முன்னுரையுடன் கே.எஸ் ராஜா, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடலை ஓடவிட, காதலர்களின் மாலைப்பொழுது இனிதாகியது. காடுகளிலும் மேடுகளிலும் உழைத்துக் களைத்துத் திரும்பிய உழைப்பாளிகளுக்கான நோவு தீர்க்கும் களிம்புகளாக மாறித் தாலாட்டியது ‘இரவின் மடியில்’. இப்படி, வானலைகளில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை இலங்கை வானொலிச் சேவை அமைத்துக்கொண்டதற்குக் காரணம் நிகழ்ச்சிகளின் புதுமையும் அறிவிப்பாளர்களின் தனித்துவமும் மட்டுமே.

ஆசியாவின் முதல் வானொலி நிலையம், உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பழம்பெருமைகளைக் கொண்டது இலங்கை வானொலி ஒலிபரப்பு நிலையம். உலகின் முதல் வானொலிச் சேவையான பி.பி.சி வானொலி, 1922இல் லண்டனில் நிறுவப்பட்டு, மூன்றாண்டுகள் மட்டுமே கடந்திருந்த நிலையில் இலங்கை வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்துவிட்டது. 1921இல் தந்தி அலுவலகத்துக்குத் தலைமைப் பொறியாளராகப் பதவியேற்று இலங்கை வந்த எட்வர்ட் ஹாப்பர் (இலங்கை ஒலிபரப்புத்துறையின் தந்தை) என்பவரே இலங்கையில் ஒலிபரப்புச் சேவையை மின்னலென முன்னெடுத்தவர். 1922 ஆம் ஆண்டு தந்தி திணைக்களத்தால் இலங்கையில் சோதனை முறையில் ஒலிபரப்பு தொடங்கப்பட்டது. சிலோன் தந்தி அலுவலகத்திலிருந்து கிராமபோன் மூலமாக வெளிப்பட்ட இசை, அந்த அலுவலகப் பொறியாளர்களால் உருவாக்கப்பட்ட டிரான்ஸ்மீட்டர் மூலம் ஒலிபரப்பப்பட்டது. முதல் உலகப் போரில் பிரிட்டனால் கைப்பற்றப்பட்ட ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து பெறப்பட்ட ஒலிபரப்புக் கருவியை மேம்படுத்தியே அந்த டிரான்ஸ்மீட்டர் உருவாக்கப்பட்டதாகச் சுவையான செய்தி ஒன்றும் உண்டு. 1925ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் அன்றைய பிரிட்டானிய இலங்கை ஆளுநர் சர் ஹப் கிளிஃப்ர்டு என்பவரால் ‘கொழும்பு ரேடியோ’ என்ற பெயரால் வானொலிச் சேவை பயன்பாட்டுக்கு வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கக் கூட்டணிப்படைகள் வசம் சென்ற இந்த ஒலிபரப்புப் பணிகள், போருக்குப் பின்னர் மீண்டும் இலங்கை ஆட்சியாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட சமயத்தில் தான் ‘ரேடியோ சிலோன்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. 1950 செப்டம்பர் 30இல் வர்த்தக சேவை ஆரம்பிக்கப்பட்டு, இந்திய துணைக்கண்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1972, மே, 22 ஆம் நாள் இலங்கை குடியரசாக மாற்றம் பெற்றதைத் தொடர்ந்து இந்நிறுவனம் ‘இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்’ என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.

அகில இந்திய வானொலி நிலையம் திரைப்பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று இந்தியத் தகவல் ஒலிபரப்புத் துறை தடை விதிக்க, தமிழ்த் திரைப்பட உலகம் விளம்பரத்திற்கு இலங்கை வானொலியைத்தான் நம்பி இருந்தது. பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசைத் தேர்தல், பாட்டுக்குப் பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் எனத் தூயத் தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்ததன் மூலம், அறிவிப்பாளர்கள் தங்களது தேமதுரக் குரலால், தமிழ் ரசிகர்களை இலங்கை வானொலிக்காகத் தவம் கிடக்கச் செய்தனர்.

அனுசுஜா ஆனந்த், ரூபன் ஜி, நடேச சர்மா, புவனலோசினி, ராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சிவராஜா, கலையழகி வரதராணி, மயில் வாகனம் சர்வானந்தா, ஜோக்கிம் ஃபெர்னாண்டோ என வகை வகையான குரல்கள், ஒவ்வொன்றும் முத்துப் பரல்கள் தான். இந்தக் குரல் வேந்தர்களின் ராஜாதி ராஜாவாக வலம் வந்தார்கள் கே.எஸ்.ராஜாவும், பி ஹெச் அப்துல் ஹமீதுவும். “நாளை வரை உங்களிடமிருந்து நன்றி கூறி விடை பெறுவது உங்கள் கே.எஸ். ராஜா” என்ற வேகமான காந்தக் குரலும், “நான் குறிப்பிட்டது கா நெடில் அல்ல க குறில்” என்ற அழுத்தமான உச்சரிப்புடன் கூடிய கம்பீரமான குரலும் தமிழ் நெஞ்சங்களை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டன.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் பொழுது போக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்ல என்பதற்கு ஓர் உதாரணம் ‘பொதிகைத் தென்றல்’ என்றோர் இலக்கியத் தரம் வாய்ந்த நிகழ்ச்சி. தொகுப்பாளர் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், சங்க இலக்கிய வரிகள், சினிமா பாடல்களில் மாற்றம் பெற்று மறைந்து கிடப்பதைத் தோண்டியெடுத்து வழங்கும் சுரங்கமாக இருந்தார். ‘செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்ற வரிகள், ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு பாடலில் ‘செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது’ என்று மறு உரு எடுத்ததையும், ஞாயும் ஞாயும் ஆயர் ஆகியரோ? என்ற வரிகள் “யாரோ நீயும் நானும் யாரோ?” என்று மாறியதையும், “தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க” என்ற குமரகுருபரரின் பாடல் – மயக்கமா கலக்கமா பாடலில் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்று நகலெடுக்கப்பட்டதையும், ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற கம்பராமாயண வரிகள் – ‘நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை என்று மாறியதையும், வெளிச்சமிட்டுத் திரைப்பாடல்கள் மூலம் இலக்கியச் சிந்தனையை வளர்த்தார்.

ஞாயிறு மாலை ‘உமாவின் விநோத வேளை’ நிகழ்ச்சி (உமா ஜுவல் ஹவுஸ்) ‘வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கருகில் ஆவலோடு கூடியிருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு இனிய தமிழ் வணக்கம்’ என்று வீட்டுக்கு வீடு வந்து பார்த்ததைப் போலவே தொடங்கும் கே.எஸ் ராஜாவின் குரலில் தான் எத்தனை தன்னம்பிக்கை, உற்சாகம்! “தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும், ஆம், இல்லை, முடியாது எனப் பதில் அளிக்கக் கூடாது, ஒரு வார்த்தையில் பதில் அளிக்கக் கூடாது, வார்த்தைகளுக்கு இடையே ஐந்து விநாடிகளுக்கு மேல் அமைதி காக்கக் கூடாது, ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக் கூடாது, சுற்றி வளைத்து பேசக் கூடாது, சைகை முறையில் பதில் அளிக்கக் கூடாது” என்ற நிபந்தனைகளைக்கூடக் கவிதை போல வாசிக்கக்கூடிய மின்னல்வேகப் பேச்சாளரின் (ராஜாவின்) நிகழ்ச்சியைக் கேட்பதற்குத் தான் எவ்வளவு ரசிகர்கள்?

‘நுழம்புத் தொல்லையா… நிம்மதியாக நித்திரை செய்ய ஷெல்டாக்ஸ் நுழம்புத் துகள்கள்’… ‘கோபால் நேரம் 7 மணி 34 நிமிடம்’, ‘பற்களை வெண்மையாக வைத்திருக்க கோபால் பல்பொடி பாவியுங்கள்’, ‘அழகுக்கு அழகூட்ட நியூ முத்துமீனாட்சி ஜுவல்லரி, புத்தம் புதிய டிசைன்களில் 22 கேரட் தங்கத்தில் (பஞ்ச வண்ணக் கழுத்துக்கு தங்கமாலை என்ற பாட்டு வேறு) போன்ற விளம்பரங்களைக் கேட்கக்கூட மக்கள் காத்திருந்த அதிசயம் நடந்தது.

ஊராட்சி மன்றம், சலூன்கடைகள், டீக்கடைகள் வயல் வரப்புகள், எங்கெங்கும் வானொலிப்பெட்டிகள் அத்தனையிலும் ஒலித்துக் கொண்டிருந்தது இலங்கையின் சேவையே. சென்னை வானொலி நிலையம் ‘கரகர கர் கர்ர்’ எனக் கர்ஜித்துக்கொண்டிருக்க, இலங்கை வானொலியோ மிகத் தெளிவான ஒலிபரப்பைத் துல்லியமாக வழங்கிக்கொண்டிருக்கும். டென்சிங், ஹிலாரி இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தபோது அவர்களால் கேட்க முடிந்த ஒரே வானொலி சேவை இலங்கை வானொலி சேவை தானாம். ( இருவரும் தமிழ் நிகழ்ச்சி கேட்டார்களா?)

தமிழ் தெரிந்த அத்தனை பேரின் வாயிலும் முணுமுணுக்கப்பட்ட ஈழத்து துள்ளிசைப் பாடல்களைக் கேட்கும்போதே மனசு துள்ளும். பாப் இசை (இலங்கைத் தமிழில் பொப்பிசை) பிதாமகன் நித்தி கனகரத்தினம் எழுபதுகளில் இலங்கை மேடைகளைத் தன் துள்ளிசையால் வசப்படுத்தியவர். “சின்ன மாமியே… உன் சின்ன மகளெங்கே… எனப் பாடிக்கலக்கியவர், எம்ஜியார் முதல்வராகி, மதுவிலக்கு அமலுக்கு வந்த போது, “கள்ளுக்கடை பக்கம் போகாதே. காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்” என்ற சமூக சீர்திருத்த துள்ளிசைப் பாடலால் தமிழகத்துப் பட்டித்தொட்டியெங்கும் அறிமுகமானார்.

சனிக்கிழமை மாலை 3 மணிக்கு ஒலிபரப்பாகும் ஈழத்துப் பொப்பிசை நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பாட்டி வடை சுட்ட கதையைக்கூட, “வடை வடையென விற்று வந்தாள் வாயாடிக் கிழவி” எனத் துள்ளல் நடையில் கதை சொன்ன பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E. மனோகரன், ‘சுராங்கனி’ பாடல் மூலம் ஒரே நாளில் தென்னிந்தியா முழுவதையும் தன் பாட்டுக்கு வசப்படுத்தினார். “சுராங்கனி, சுராங்கனி, சுராங்கனிக்க மாலுக்கென்ன வா”… இலங்கை வானொலியில் தினமும் இரண்டு முறையாவது ஒலித்த இப்பாடல் மாணவர்களின் கல்லூரி கீதமாகியிருந்தது. (அப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் சமத்துப் புள்ளைங்களா இருந்தாங்க… ம்ம்ம்…)

இப்படி அனைத்து வயதினரையும் பாரபட்சமின்றி தன் சேவையால் கட்டிப்போட்டிருந்த இலங்கை வானொலி சேவை, உள்நாட்டுப் போரினால் தனது சர்வதேச ஒலிபரப்பை 31.05.2008 அன்று நிறுத்திக்கொண்டது பெருஞ்சோகம். இலங்கை வானொலிச் சேவையில்லாத இருண்ட, நெடிய 13 ஆண்டு காலத்திற்குப் பின் 20.01.2022 அன்று மீண்டும் தனது ஒலிபரப்பைத் தொடங்கி ரசிகர்களின் காதுகளில் தேன் வார்த்துள்ளது மகிழ்ச்சி. இலங்கைத் தமிழைக் கேட்பதே ஆனந்தம். அதுவும் மனதைக் கொள்ளைகொண்ட இலங்கை வானொலி நிகழ்ச்சிகளில் திளைப்பது பேரானந்தம்.

உறவுகளைப் பிரிந்து, வாழ்ந்த மண்ணைப்பிரிந்து உலகெங்கும் சிதறிக்கிடக்கும் ஈழத்தமிழர்கள், காலம் தனக்குள் புதைத்துக்கொண்ட வாழ்வின் மிச்சங்களில்… மனதில் உறைந்திருக்கும் இதுபோன்ற நினைவுகளில் தான் தாயகத்தை தங்கள் நெஞ்சினில் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது.