உணவு, உடை, உறைவிடம் இம்மூன்றும் மனிதர்களுக்கு மிகவும் அவசியம். அத்துடன் சுகாதாரமான கழிப்பறையும் மிக மிக அவசியம். கழிப்பறைகளைப் பற்றிப் பேசினாலே நிறையப் பேர் முகம் சுளிக்கிறார்கள். உண்மையில் பூஜையறைகளைவிடப் போற்றுதலுக்குரியது கழிப்பறைகள் தாம். மனிதன் எப்போது உணவு உண்ணத் தொடங்கினானோ அப்போதே கழிப்பறைகளுக்கான தேவையும் ஆரம்பித்துவிட்டது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில்கூடக் கழிவறை இல்லாத ஊர்களும் வீடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. கற்காலத்தில் மனிதர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்கள் சமைக்காத இயற்கை உணவுகளை உண்டார்கள். பழங்கள், காய்கறிகள், விதைகள், கொட்டைகள் என்றிருந்த உணவாக அது அமைந்தது. திறந்தவெளியை அவர்கள் கழிவறையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பின்னான காலங்களில் நெருப்பைப் கண்டறிந்து சமைத்து உண்ணத் தொடங்கினார்கள். அப்போதே நாகரிகத்தில் சிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் முறையாகக் கழிப்பறை அமைத்திருந்தார்கள். கேரளாவில் முசிறி அல்லது முசிறிப்பட்டினம் என்றழைக்கப்படும் இடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பானைகளைக் கொண்டு கழிவறை அமைத்துப் பயன்படுத்தியிருந்தனர் என்பதைத் தொல்லியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பாமா (PAMA) என்ற தனியார் அமைப்பினர் நடத்திய தொல்லியல் ஆய்வில் இங்கு கழிவறைக்குப் பயன்படுத்திய பானைகளைக் கண்டறிந்துள்ளனர். பண்டைய தமிழகம் என்பது இன்றைய கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளை உள்ளடக்கியது என்று ஊகிக்கப்படுகிறது. அதில் இன்றைய கேரளப் பகுதியில் அமைந்துள்ள முசிறிப்பட்டினத்தில் தான் பண்டைய நாகரிகத்தின் எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர்.

”ஆறு பானைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து கடைசியாக வைக்கப்பட்ட பானை கூம்பு வடிவில் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கழிவறை வெஸ்டர்ன் டாய்லெட் என்று அறியப்படும் கழிவறையை ஒத்திருந்தது. இதே அமைப்பில் ஆறு கழிவறைகளை இதே இடத்தில் கண்டறிந்தோம்” என்று கூறியிருக்கிறார் பாமா அமைப்பின் இயக்குநர் செரியன். மொகஞ்சதாரோ – ஹரப்பா காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த நகரமைப்பில் இந்தியர்கள் நீர் ஊற்றிக் கழுவப்படும் கழிவறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே உலகில் முதல்ஃப்ளஷ் கழிவறைகள். சுமேரிய நாகரிகத்திலும் அன்றைய அரசன் ஆறு கழிவறைகளைக் கட்டினான் என்கிறது வரலாறு.

தற்போதைய ஃபிளஷ் டாய்லெட்கள் கி.மு. மக்களின் கண்டுபிடிப்பு என்றால் நம்புவீர்களா? மினோவன் (Minoans) நாகரிகத்தில், 1,400 அறைகள், ஓவியங்கள், படிக்கட்டுகள் என்று அமர்களமாக நோசொஸ் அரண்மனையைக் கட்டிய மினோவன் ராஜா கூடவே ஃபிளஷ் டாய்லெட்டையும் கட்டினான்! மழைத் தண்ணீரை அரண்மனைக் கூரை மீது ஒரு தட்டில் சேகரித்து அதைக் கூம்பு போல இருக்கும் டெராகோட்டா பானையில் செலுத்தி இந்த ஃபிளஷுக்குத் தண்ணீர் வரவழைத்தான். கூம்பு போல இருப்பதால் தண்ணீர் மெதுவாக வரும். வீணாகாது. ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? அதன் பின்னான காலகட்டங்களில் பெரிய கூடைகளில் கழிவுகளை அகற்றும் விதமான கழிவறைகள் இருந்தன. அதற்கென குறிப்பிட்ட மக்கள் அவற்றைத் தலையில் சுமந்து சென்ற அவலமும் நடந்தேறியது. ஐரோப்பா போன்ற நாடுகளில் குழாய்களில் வரும் தண்ணீர் பனி காரணமாக உறைந்து விடுவதால் வெட் டிஷ்யூ கொண்டுதான் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

இந்தியாவில் டெல்லியில் 1992இல் இருந்து கழிவறைகளுக்கான ஒரு மியூசியம் இருக்கிறது! இதில் கிட்டத்தட்ட 50 நாடுகளில் கி.மு. 3000இல் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை புழக்கத்தில் இருந்த இன்னும் இருக்கும், கழிவறை அமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.


ஒடிஸாவில் இந்தியக் கிராமப்புறங்களில் மிக அதிகமாக 50.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகவும், தமிழக கிராமங்களில் கழிப்பறை இன்றி இருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 37.2 % என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் 60 சதவீத வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது என்றும், அதுவே கிராமங்களில் 75 சதவீதமாக உள்ளதாகவும் ‘டிரான்ஸ்பரன்ட் சென்னை’ அமைப்பு கூறுகிறது. சென்ற நூற்றாண்டுகளில் காலரா, மலேரியா உள்ளிட்ட கொள்ளை நோய்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் மூலமாகவே அதிகளவு ஏற்பட்டன. இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள் தான் உலகளவில் மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பிடங்கள் என்ற ஒரு கூற்று வெகுகாலமாக நிலவிவருகிறது. இத்தகைய திறந்தவெளி கழிப்பிடங்களை அழிக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ‘ஸ்வச் பாரத்’ என்னும் தூய்மை இந்தியா திட்டம் ஆகும். ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் (எஸ்பிஎம்ஜி) – தூய்மையான இந்தியக் கிராமங்கள் என்ற திட்டத்தின் படி 27 மாநிலங்கள், 601 மாவட்டங்கள், ஐந்தரை லட்சம் கிராமங்களில் ஒன்பது கோடியே பதினாறு லட்சம் கழிவறைகள் கட்டவேண்டும் என 2014 அக்டோபர் 2இல் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இது வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். போதுமான தண்ணீர் வசதி இல்லாமை, பராமரிப்பு செய்யாதது, மின்சார வசதியின்மை போன்ற பல காரணங்களால் இத்திட்டம் அவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. இப்போதிருக்கக்கூடிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, பெண்களுக்கு, குறிப்பாக மாதவிலக்கு நேரத்தில் உகந்ததாக இல்லை என்பதை ஹெல்லர் அறிக்கை குறிப்பிடுகிறது. 62% பள்ளிகளில் மட்டுமே சிறுமிகளுக்கான கழிவறைகள் பயன்படுத்தத்தக்க நிலையில் இருக்கின்றன என்று ஏஸர் மையம் (ASER Centre) 2016ல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நமது நாட்டில் பக்திக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கழிப்பறைகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது வேதனையான ஒன்று. இன்றும் பெரும்பாலான பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதிகள் இல்லாமல் தான் இருக்கின்றன. வளரிளம் பருவக் குழந்தைகளுக்குச் சரியான பராமரிப்புள்ள கழிவறைகள் இல்லாததால் அவர்கள் சிறுநீரை அடக்கி வைத்து நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் அமைத்து, நாப்கின்களை எரிக்கும் மெஷின்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். மட்டுமின்றி சிறுவயது முதலே கழிப்பிடங்களைச் சுத்தமாகப் பராமரிக்கவும், அவற்றைப் பயன்படுத்திய பிறகான சுத்தத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு துக்க நிகழ்வுக்காக வெளியூர் செல்ல நேரிட்டது. அது கிராமப்புறம். நான் சென்ற வீட்டில் கழிப்பறை வசதி எதுவுமே இல்லை. விசாரித்ததற்கு அருகில் பொதுக் கழிப்பறை இருப்பதால் அதைத்தான் பயன்படுத்துவார்கள் என்று தெரியவந்தது. அதன் சுத்தம், சுகாதாரம் குறித்துப் பெரிய கேள்விக்குறி எழுந்ததால் அதை நான் பயன்படுத்த விரும்பவில்லை. அங்கிருந்த நேரத்தில் அங்கு வசித்த பெண்களின் கழிவறைப் பிரச்னைதான் மண்டையைக் குடைந்துகொண்டிருந்தது. இரவு நேரத்தில், மாதவிடாய் நேரத்தில், மழைக்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களின் ஆரோக்கியம் குறித்துக் கவலைப்படத்தான் முடிந்தது. பயணங்களில் கழிப்பிட வசதியின்றி பெண்கள்தாம் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். ஓட்டல்களில் உள்ள எல்லாக் கழிப்பறைகளும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இது குறித்த அலட்சியம் நம் நாட்டு மக்களின் இயல்பாகவே அமைந்துவிட்டது. ஆண்கள் தெருவோரங்களில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல், கூச்சமின்றி ‘ஒதுங்கி’ வேலையை முடித்துக்கொள்வது இங்கே அநாகரிகமான விஷயமாகவே பார்க்கப்படுவதில்லை. அவர்கள் அப்படி இயற்கை உபாதையைக் கழித்துக் கொண்டு விடுவதால் பெண்களின் சிரமங்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.

Illustration of a girl using a toilet

பொதுவாக நம் இந்தியப் பெண்களின் உடல்நிலை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவர்களால் சிறுநீரை அடக்க முடியாமல் போகிறது. நீரிழிவு, சிறுநீர் பாதைத் தொற்று, கர்ப்பிணிப் பெண்களுக்குக் கர்ப்பக் காலத்தில், புரோஸ்டேட் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். ரத்தத்தில் கால்சியம் அதிகமாக இருந்தாலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஒரு நாளுக்கு நான்கு முதல் எட்டு முறை வரை சிறுநீர் கழிப்பது இயல்பு. பயணங்களில் இது அறவே சாத்தியம் இல்லை. ஈஸ்ட்ரோஜன் என்ற பெண்களுக்கான பாலியல் ஹார்மோன் சிறுநீரகங்களை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொள்கிறது. இதனால் மாதவிடாய் நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொல்லைக்குப் பெண்கள் ஆளாகின்றனர். அந்த நேரத்தில் சிறுநீர்ப் பையின் அழுத்தம் அதிகரித்து இருப்பதால் இது நிகழ்கிறது.


பெண்களுக்கான சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்று என்பது இப்போது அதிகரித்து உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவது தான். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சுகாதாரமான கழிப்பறைகள் அமைத்துக் கொடுப்பது தான். அரசாங்க அலுவலகங்களில்கூட கழிவறைகள் முறையாக அமைக்கப்படுவதில்லை. அப்படியே இருந்தாலும் அது பராமரிப்பின்றித்தான் இருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடங்களில் இது குறித்து யாரும் கேள்வி கேட்கக்கூட முன்வருவதில்லை என்பது வேதனையான ஒன்று. வீடுகளில் கழிவறை அமைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் நடைபாதையில் வசிக்கும் பெண்களின் நிலைமைதான் மிகவும் கொடுமை. வசிப்பிடமே இல்லாத சூழலில் அவர்கள் கழிப்பிட வசதிக்கு என்ன செய்வார்கள்? அத்தகைய பெண்களின் இந்த அவலநிலை குறித்து இதுவரை எந்த அரசும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அந்தப் பெண்கள் இருட்டிய பிறகோ அல்லது விடிகாலையிலோ தங்களது இயற்கை உபாதைகளைக் கழிக்க நேரிடுவது எத்தனை சிரமமான காரியம். கழிப்பிடங்கள் இன்றி பகலில் அவர்கள் படும் சிரமங்களை ஏன் எந்த அமைப்புகளும் கண்டுகொள்வதே இல்லை?

கழிவை அகற்றுவதென்பது இந்த டிஜிட்டல் யுகத்திலும் நம்முன் நிற்கும் ஒரு பெரிய சவால் . எல்லாம் கணினி மயமாக மாறிவரும் இந்தச் சூழலில் இன்னும் கழிவறை இல்லாத நிலை குறித்து யாரும் வெட்கப்படவும் இல்லை. அவமானப்படவும் இல்லை. செல்போன் பயன்பாடு பெருகியிருக்கும் அளவுக்கு கழிவறைப் பயன்பாடுகள் இல்லை. கழிப்பறைகள் இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும் இருக்கும் கழிவறைகளை முறையாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வு யாருக்கும் இல்லை என்பதே கசப்பான உண்மை. இந்தியாவில் அதிகமாக டயரியா, நிமோனியாவால் தான் குழந்தைகள் இறக்கிறார்கள் என்பது வருத்தமான ஒன்று. மஞ்சள் காமாலை, டைபாயிட், காலரா, வயிற்றுப் போக்கு போன்ற நீரால் பரவும் நோய்கள் அனைத்தும் கழிவறை இல்லாத பிரச்னைகளால்தாம் ஏற்படுகின்றன. மனித ஆரோக்கியத்திற்குத் தேவை சுகாதாரமான கழிப்பறைதான். அதற்கு அரசும் மக்களும் ஆவன செய்ய முன்வர வேண்டும்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.