தமிழ் பாடவேளையில் “ சங்ககாலத்தில் பெண் புலவர்கள்” பற்றி ஆசிரியர் லட்சமி ஏற்ற இறக்கத்துடன் தேர்ந்த கவிஞர் போல பாடம் கற்பித்துக் கொண்டு இருந்தார். சங்ககாலத்திற்கு கால இயந்திரத்தின் உதவியுடன் பயணம் சென்றது போல் வகுப்புக் குழந்தைகளும் ஒன்றி கவனித்துக் கொண்டிருந்தனர். எப்போது மணி அடிக்குமென்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்கள்கூட அன்று வேறெதையும் பார்க்காமல் காலச்சக்கரத்தில் சுழன்று கொண்டிருந்தன.

இடைவேளைக்கான மணி அடித்தது. ஒருமித்தமாக அனைவரின் மனக்குரலும், ” ச்ச. . .இந்த மணி வேற நேரம் காலம் தெரியாம ஏன் அடிக்குது? “ என ஒற்றுமையாய் ஒலித்தது. ஆசிரியரும் ” இடைவேளைக்குப் போங்க. குறிப்பா பெண் குழந்தைகள் சிறுநீர் போய்ட்டு, தண்ணீர் குடிச்சிட்டுதான் வரணும்”, என்று அன்பு கலந்த கண்டிப்புடன் சொல்லிட்டுச் சென்றார்.
அனன்யா எழுந்து, “ வாங்க, கழிவறைக்குப் போய்ட்டு வருவோம்” என வகுப்பு சக தோழிகளை அழைத்தாள். “ ம்கூம். ..நீ போய்ட்டு வா. நாங்க வர்ல”, என்று மற்ற தோழிகள் வர மறுத்தனர். “ என்னவோ போங்க, இப்படி சிறுநீர் கழிக்காம அடக்குவது தவறு”, என தோழிகள் செயல் குறித்து நொந்து கொண்டே அனன்யா சென்றாள். தோழிகளுக்குச் சிறுநீரை அடக்கக்கூடாது என எப்படி புரியவைப்பது என யோசனையாகவே இருந்தது.

ஒரு முறை மருத்துவரான தனது அம்மா அனுவிடம் தன் தோழிகள் குறித்து அனன்யா உரையாடினாள். ” எப்படியாவது நீதாம்மா அவர்கள்கிட்ட பேசணும். எப்படின்னு சொல்லு “, என தன் அம்மாவிடம் ஆலோசனை கேட்டாள் அனன்யா. “ வகுப்புல கூட படிக்கிறவங்கள வீட்டுக்குக் கூப்பிடு. நம் வீட்டு நூலகத்துல நீதான் நிறைய சிறுவர் நூல்கள் சேகரித்து வைச்சிருக்கயே, அதில் அவங்களுக்குப் பிடிச்ச நூல்கள் படிச்சிட்டு அனைவரும் உரையாடலாம். இதை ஒரு விடுமுறை நாளில் வைச்சுக்குவோம். அப்பதான் அனைவருக்கும் வசதியாக இருக்கும். யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ வரட்டும். ஆண் நண்பர்களையும் கூப்பிடு. இதில ஏதாவது மாற்றம் இருக்குதுன்னா சொல்லு “, என்றார் அனு.

“ அது சரிம்மா. ஆண் நண்பர்களையும் கூப்பிடச் சொல்லிருக்கிங்க. அதான் புரியலம்மா. அதைத்தாண்டி அருமையான யோசனையா இருக்குமா “, என்றார் அனன்யா. “ இரு பாலரும் சேர்ந்து புரிஞ்சுக்க வேண்டிய விசயம் இது. காரணமாத்தான் சொல்றேன். நான் சொன்னபடி அனைவரையும் கூப்பிடுமா. பால்பேதம் வேண்டாம்”, என்றார் அம்மா தீர்க்கமாக.
அம்மாவின் வாசித்து உரையாடும் யோசனையை அனன்யா நண்பர்களிடம் சொன்னவுடன், நண்பர்கள் மிக உற்சாகமாய் வர ஒப்புக் கொண்டனர். அனன்யா அம்மாவைச் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருந்தது. இந்த விடயத்தை நண்பர்கள் அவரவர் வீட்டில் பெற்றோர்களிடம் சொன்னதும், அனைத்து நண்பர்களின் பெற்றோரும் நிகழ்வுக்கு பெருமகிழ்வாய் இசைவு கொடுத்தனர்.

திட்டமிட்டபடி விடுமுறை நாளில் அனன்யா வீட்டில் அனைவரும் கூடினர். அனன்யாவும் நண்பர்கள் வருகைக்காக வீட்டைத் தயார் செய்து காத்திருந்தாள். வந்திருந்த நண்பர்களுக்கு அனன்யாவும் அவள் அம்மாவும் தேநீரும், சிற்றுண்டியும் வழங்கினார்கள். இரு தரப்பினரும் அறிமுகம் செய்துகொண்டார்கள். இயல்பாய் அனைவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவரவருக்குப் பிடித்த நூல்களை எடுத்து, பிடித்த இடத்தில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். வாசித்த நூல் சார்ந்த தனது கருத்துகளை ஒவ்வொருவராகப் பகிர்ந்து கொண்டனர். உரையாடலை அம்மாவும் கவனித்தே வந்தார்.

உரையாடல் முடிந்த பிறகு அம்மா, “ நேற்று என்னிடம் மருத்துவம் பார்க்க வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணுக்குச் சிறுநீர் சேகரமாகி வயிறு வீங்கி இருந்தது. ஆனா சிறுநீர் கழிக்கணும்னு அவுங்களுக்கு உணர்வே வரல. கழிவறைக்குப் போனா சிறுநீரும் வரல. வலியால உயிர்போகற அளவுக்குத் துடிக்கறாங்க, “ என்றார் அம்மா உருக்கமாக. “ அச்சசோ… கேட்கவே இவ்வளவு கொடுமையா இருக்கே. எப்படித்தான் இந்தப் பிரச்சனையை எதிர்கொண்டாங்களோ! சிரமம்தான் பெண்களுக்கு “, என்று கார்த்திகா மனம் நொந்து பேசினாள்.

“ ஏன் அவங்களுக்கு அப்படி ஆச்சு?” என்று சமியுல்லா கேட்டான். “ ஏன் அப்படி ஆச்சுன்னு குறிப்பாகச் சொல்ல முடியல. பெண்கள் இது போன்ற சிக்கல்களைச் சந்திக்கிறாங்க. பரிசோதனை முடிவுகள் சிறுநீர்ப்பை சுவரே தடிமனா ஆயிருக்குன்னும், சிறுநீர்க்குழாயைச் சுற்றி இருக்குற சுரப்பிகள் வீங்கி, கிருமித்தொற்று ஆகிருக்குன்னும் தெரிய வந்திருக்கு. பல காலமா வெளில சொல்ல முடியாம, இறுதிக்கட்டத்துலதான் என்னைப் பார்க்க வந்தாங்க,” என்றார் அம்மா.

கூடவே ” நீங்க இடைவேளையின்போது , தேவையான தண்ணீர் குடிச்சிட்டு, சிறுநீர் கழிக்கவும் செய்யறிங்கதானே? ” என்றார் அம்மா. ஆண் குழந்தைகள் எல்லாம் ‘நாங்க முறையா செய்திடறோம்’ என உரத்த குரலில் சொல்ல, பெண் குழந்தைகளிடம் மெளனமே பதிலாய் வந்தது. அப்பொழுது அனன்யா, “ அம்மா, இவுங்க இடைவேளையின்போது சிறுநீரே கழிக்க மாட்டாங்க. காலைல வீட்லருந்து வந்தா, திரும்ப வீட்டுக்குப் போயிதான் கழிக்கறாங்க. பள்ளில சிறுநீர் கழிக்க நேருமேன்னு தண்ணிகூட அவ்வளவா குடிக்க மாட்டாங்கம்மா. பள்ளிக் கழிவறை சுத்தமாய்தான் இருக்கும். எங்க டீச்சர்கூட பல முறை சொல்லிட்டாங்க. பெண்கள் ஏன் இப்படி சிறுநீரைக்கூட கழிக்க மாட்டேங்கறாங்க. அது கழிக்காம அடக்கி வைச்சிருந்தா என்னென்ன உடல், மனப் பிரச்சனைகள் வரும்ன்னு கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்கம்மா, உதவியா இருக்கும்”, என்று பொறுப்போடும் அன்போடும் சொன்னாள்.

“ ஓ அப்படியா அனன்யா, நீ தவறாம சிறுநீர் கழிக்கறது, தண்ணீர் குடிச்சிடுவ சரிதான?” என்றார் அம்மா. ” அய்யய்யோ நானெல்லாம் தோணும்போதும், தேவையான போதும் முறையா முடிச்சிடுவேன்மா”, என்றாள் அனன்யா கம்பீரமாக.

” மிக்க மகிழ்ச்சி பாப்பா. முதல்ல நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். உயிருள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு உண்றதும், அதனால வெளிப்படும் கழிவுகளைக் கழிப்பதும் இயற்கைதான். இது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயல்பு. ஆனா மனிதர்களாகிய நாம் பல கற்பிதங்களுக்கு ஆளாக்கப்பட்டு வளர்க்கப்படறோம்”, என்று அம்மா முடிக்கும் முன்பே லெனின், “ கற்பிதம்ன்னா இயல்பா இல்லாம செயற்கையா ஏதோ ஒரு கருத்தின்படின்னு புரிஞ்சுக்கலாமா அத்தை” என கேட்டான்.

“ ஆமா. அது இயற்கை இல்லைன்னு சொல்றேன். ஆண் தன் அந்தரங்கங்களை வெளிப்படையா பேச, பழக இந்தச் சமூகம் அனுமதிச்சிருக்கு. அதுவும் இயல்பாக இல்லை. ‘ஆண் நின்னுகிட்டு சிறுநீர் போறான், அது கெத்து. பெண் நீ உக்கார்ந்து போற’ ன்னெல்லாம் அற்பமா பேசப்படுது. ஆனா ஒரு பெண் தன் அந்தரங்க விடயமான கழிவறையைப் பயன்படுத்துதல், மாதவிடாய் இன்னும் பல விடயங்களைப் பொதுவில் சொல்வதோ கேட்பதோ கூடாதுன்னு சிறுவயது முதலே தன் குடும்பங்களில் சொல்லி சொல்லி வளர்க்கப்படறா. சிறு வயதிலிருந்து பழகறதால எளிதில் மாற்றிக் கொள்ள முடியல. அப்புறம் அதுவே ஏன், எதுக்குன்னு தெரியாம பழகிடுது.”

” அதனால பொதுவெளில கழிவறை எங்க இருக்குன்னு தெரியாத இடத்தில், தெரியாத நபர்கள்கிட்ட கேட்பதில் இருந்து தொடங்கி கழிவறைப் பயன்படுத்துதல் என்பதை அந்தரங்க விசயமாக, யாருக்கும் தெரியாம இரகசியமாய் வைத்திருக்க பழக்கப்பட்டிருக்காங்க பெண்கள். அடையாள உறுப்புகளில் சிக்கல்னாகூட, வெளில சொன்னா அசிங்கம்ன்னு வெளில சொல்ல மாட்டாங்க. பல பெண்கள் சந்திக்கும் சிக்கல்களை எங்க அனுபவத்தில் பார்த்துக்கிட்டுதான் இருக்கோம்”, என்று பெருமூச்சுவிட்டார் அம்மா.

“ ஆண் இயல்பா எங்கயும் போறாங்க. பெண் ஏன் அப்படி கேட்கத் தயங்குறாங்க?” மது கேட்டாள்.

“ நல்ல கேள்விமா. இந்தத் தயக்கம் பதின்ம வயதில் அதிகமாகி, கூச்சப்பட்டு, இயல்பான இயற்கைக் கழிவை கழிக்கவே தயங்கும்படி ஆகுது. இதுக்கு அந்தரங்க விசயத்தை வெளியில் சொல்லக்கூடாதுன்னும் வளர்க்கப்படறது பெரிய சிக்கல். நாம் போய் கேட்கும்போது நம் அந்தரங்கத்தை ஆண்கள் கற்பனை செய்து பார்த்துவிடுவார்களோ என்றும், சில பெண்கள் வேறு யாரும் பொதுவில் கேட்காத போது தான் மட்டும் கேட்டா, ஆண்களால் தனக்கு பாதுகாப்பு சிக்கல் வருமோ எனவும் ஐயுறுறாங்க. இது போன்ற காரணங்களால் கேட்பதில்லை “, என்றார் அம்மா.

“ இப்படி பெண்கள் இருக்கறது சரியா? எந்த மாதிரியான பிரச்சனைகள் வருது? நாங்க ஏதாவது சொன்னாக்கூட ஆண்கள் கிண்டல் பண்ணி சிரிக்கறாங்க அத்தை”, என்றாள் பாரதி.

“ ஒரு பெண் இதை இயற்கை, இயல்புன்னு உணர்ந்து வெளிப்படுத்த முன்வரணும். விளிம்புநிலை பெண்கள் இயல்பாய் உணருறாங்க. இதை ஆண்களும் கிண்டல் பண்ணாம, வகுப்பு தோழிகளுடன் வெளி இடங்களுக்குச் செல்லும்போது கழிவறையைப் பயன்படுத்த பெண்கள் நிலையில் நின்று யோசித்து உதவி தேவைப்பட்டா செய்யணும். சூழல் இயல்பானதாய் மாறணும்.”

Photo by Giorgio Trovato on Unsplash

” கழிவுநீர்த்தொட்டி நிறைஞ்சா எவ்ளோ பிரச்சனை வருது. அது போல உடம்புக்கு சரியான அளவுல நீர் தேவை. அவை எடுத்துக்கிட்டு வளர்சிதை மாற்றம் நடந்து, கழிவு முறையா வெளியேற்றப்படணும். இல்லன்னா உடம்புல இருக்குற பாகங்களின் செயல்திறன் குறையும், நோய் வரும். சிறுநீரகத்துல கற்கள் வர வாய்ப்பிருக்கு. இந்தப் பிரச்சனைனால மனநலனும் சேர்ந்து பாதிக்கப்பட்டு, மனச்சிக்கலும் உருவாக வாய்ப்பிருக்கு. இயல்பான வேலைகள்கூட செய்ய முடியாம எரிச்சல், கோபம், பயம், பதட்டம் இதெல்லாம் தவிர்க்க முடியாது. இதனால தினமும் செய்யும் பணிலயும் செயல்திறன் இழப்பாங்க.”

” இதுல பொது கழிவறைகளில் சுத்தமில்லாததும் பலருக்கு சிறுநீர் கழிக்க பிடிக்கறதில்லை. சில பேர்க்கு சுத்தமில்லாத கழிவறைல தொற்று ஏற்பட்டுவிடுமோன்னு பயமும் இருக்கு. அப்போ பொது இடங்களில் தேவையான அளவு கழிவறை ஏற்படுத்தறதும், அதைச் சுத்தமா பராமரிக்கறதும் சமூகம், அரசாங்கம் என நம் அனைவரின் கடமையும் பொறுப்பும்தான். சிறுநீர் போன பின்பு ஆணோ, பெண்ணோ தன்னோட அடையாள உறுப்புகளை நீர் கொண்டு கழுவி சுத்தமா வைச்சுக்கணும்.” என்றார் அம்மா.

“ ரொம்ப அருமையாச் சொன்னிங்க அத்தை. இனி கழிவறையை முறையாப் பயன்படுத்துவோம். கழிவறை தேவைங்கிறதும், சுத்தமானதாய் இருப்பதும் எங்கள் உரிமைதான்னு தைரியமாகக் கேட்போம்”, என்றாள் பாரதி.
” உடம்பிலுள்ள கழிவை அடக்கி, கழிப்பதைத் தள்ளிப்போட்டா இவ்ளோ பின்விளைவுகள் வரும்ன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டோம். இனி தோணும்போது கேட்டு சிறுநீர் கழிக்கக் கழிவறையைப் பயன்படுத்துவோம்,” என்றாள் கார்த்திகா.

“ இப்போதான் பெண்களை கிண்டல் பண்ணாம அவங்களுக்கு உதவி செய்யணும்னு புரியுது”, என்றான் லெனின். அனைவரும் தங்களுக்குப் பல விசயங்களைப் புரிய வைத்ததற்காக, அனு அத்தை மற்றும் அனன்யா மீது பேரன்பை நெஞ்சில் ஏந்தி அவரவர் வீடுகளுக்குப் புறப்படத் தயாரானார்கள். அனு அத்தை அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பினார். வந்தவர்களில் பலர் அனன்யாவின் நூலகம் போல தங்கள் வீட்டிலும் நூலகம் வைக்கத் திட்டமிட்டனர். அனு அத்தை கொடுத்த ஒற்றை நூலே நூலகத்தின் முதல் தொடக்கப் புத்தகமாகப் போவது கண்டு அவரவர் பெற்றோருக்கும், அனு அத்தைக்கும் பெருமகிழ்ச்சி!

பள்ளி ப் பக்கங்கள் தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.