“சரசு மவதான… “

அப்படிச்சொல்ல வேண்டாமென்றுதான் இங்கு வந்து நிற்கிறேன் ..இன்னும் என்ன என்ற சலிப்போடு அந்தக் கிழவிக்கு பதில் சொல்லாமல் நகர்ந்து உட்கார்ந்தாள்.
”வேதா..இந்தா ஒருவா காப்பி குடி…”
சாந்தா பெரியம்மா நீட்டிய தம்ளரை மவுனமாக வாங்கிக் கொண்டாள். காய்த்துப் போயிருந்த உள்ளங்கை மேடுகளை சூடான தம்ளரை வைத்து ஒத்திக் கொண்டாள். நெஞ்சுக்கு ஒன்றும் செய்ய முடியாது..
ஊறப்போட்ட நெல்லின் நினைவு வந்தது.

ஈச்சம்பாயை முத்து திருப்பிக் கொடுத்த மாதிரி தெரியவில்லை. காலையில் வெள்ளென அவன் யாவாரத்துக்குக் கிளம்பமின்ன கேட்டு வாங்கணும். பெரியப்பா வந்து உட்காருவதற்குள், அம்மா வர வேண்டும். இல்லாவிடில் அதற்குள் ஏதாவது வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்று அவர் கிளம்பி விடுவார்.

காப்பியைக் குடித்து முடிக்கும்போது அம்மா வந்து விட்டாள். “வா சரசு..”

உள்ளிருந்து சாந்தா பெரியம்மாவின் குரல் கேட்டது.
இப்போதும் அம்மாவைப் பார்க்கும்போது அவசரமாக மனம் திடுக்கிடத்தான்
செய்கிறது. பயமா..மரியாதையா..பரிதாபமா..ஏதோ ஒரு கலவை… இருபத்து ஆறு வயதில் நான்கு பெண் குழந்தைகளும், வயிற்றுப் பிள்ளையுமாக ஊர்த் தகராறில் புருஷன் உயிர் விட, தாய் வீட்டுக்கு வந்தவள். இரண்டு மா நிலத்தை எழுதி வைத்து ஆதரித்துக் கொண்டிருந்த அண்ணன் தன் மகனுக்கே மூத்த பெண் வேதாவைக் கட்டி வைத்தார். அதோடு கடமை முடிந்த உணர்வில் போய்ச் சேர்ந்தார். மீண்டும் துயர நாட்களா.. வேதாவின் மனசுக்குப் புரிந்து விட்டது.

அம்மா கடுமையான விஷயங்களை எதிர்கொள்ளப்போகிறாள்…….நான் என்ன செய்யப் போகிறேன்…. கால் காசுன்னாலும் கவுருமெண்டு காசு வாங்கணும் என மகனை ஆசிரியராக்கி விட்டிருந்தார் மாமா. ஆனாலும் அந்த ஒற்றை வருமானத்தில் எல்லாம் சமாளிக்க முடியாது. மாமாவின் நிலமோ குத்தகையில்…தங்கைகளின் திருமணம், தம்பி படிப்பு…இத்தனைபேர் வயிற்றுப்பாடு. பொறுமையாக சேகரிடம் பேசினாள், ”ஏந்த்தான்…நம்ப பாட்டுக்கு நிலம் நீச்ச போட்டுட்டு போறது அவ்ளோ செரிவராது…இவுளுவோ கல்யாணம் மொதக்கொண்டு நமக்கு தலக்கிமேல சொம இருக்கு…நா இங்ஙனயே இருந்து இதயெல்லா கொஞ்சம் பாத்து பீராஞ்சாதான் நாலு காசு சேக்க முடியும்.”

என்னைத் தொந்தரவு செய்யாவிட்டால் எதுவும் சரி என்ற கட்சிக்காரன் அவன். வேலைபார்க்கும் ஊரிலேயே அறை எடுத்துத் தங்கிக் கொண்டு வாராவாரம் வந்து போனான். “நெற மாசத்துக்காரி இப்பிடி வேவாத வெய்யில்ல களத்துல வந்து நிக்கிறியே”, வருவார் போவாரெல்லாம் உருகினாலும் வேதாவுக்கு அது ஒன்றும் சங்கடமாகத் தெரியவில்லை. பார்த்துப் பார்த்து ஆடு,மாடு,கோழி என்று என்னவெல்லாம் பாடு உண்டோ அத்தனையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடுவாள். அப்படியும் வேதாவுக்கு நேர் இளையவள் அரசிக்குத் திருமணம் முடித்து நிமிர்ந்தபோது இணுக்கி இணுக்கிச் சேர்த்ததெல்லாம் கரைந்து போய் விட்டிருந்தது. ஆக இன்னும் கூடுதல் ஓட்டம்தான் வேண்டும்! இன்னும் இரண்டு கல்யாணம், தம்பி படிப்பு என்று கணக்கு இருபத்துநாலு மணி நேரமும் அவள் மண்டைக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும் ….தன் பிள்ளைகள் இருவரும் அதற்குள் எனக்கு என்ன செய்யப் போகிறாய் என வளர்ந்து விடுவார்கள்.

சேகருக்குக் கடை சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை….வயிறு வலிக்கிறது என்று சிணுங்கலானான். எந்தப் பிரச்சினைக்கும் அரை மணி நேரத்துக்கு மேல் யோசிப்பதில்லை வேதா. வீடுபார்த்து அம்மாவைக் கொண்டுபோய் விட்டுவிட்டாள்.சில மாதங்களில் நடுவுளவள் கங்கா கல்லூரிக்கும், சின்னதுகள் இரண்டும் பள்ளிக்குமாக நகரத்து வீடு பெருகியது. வேதாவின் பேய் உழைப்பு பார்க்கிறவர்களையெல்லாம் ஆச்சர்யப்பட வைக்கும். ஊர்ப்பெருசுகளே இவளிடம் ஒருவார்த்தை கேட்டுக் கொள்ளலாம் என நினைக்குமளவு அக்கறையாகத் தேடித் தேடிக் கற்று செய்வாள். சேகர் இங்கு வந்தாலும் சரி, இவர்கள் அங்கு போனாலும் சரி, யார்யார் என்ன செய்ய வேண்டுமென்று வேதா ஒரு பட்டியல் போட்டு வைத்திருப்பாள்.

என்ன..எப்போது..எதற்கு…எவருக்கு…கொடுக்கலோ வாங்கலோ…சீட்டு போடுவதிலிருந்து சமையல் வரை…. சரசு வேடிக்கையாகச் சொல்வாள், “இரு இரு..எதுக்கும் எம் மாமியா வந்தப்பறம் ஒரு வார்த்த கேட்டுட்டு செய்யலாம்”.
உத்தரவிட வேண்டும் என்று குறிப்பாக நினைக்காவிட்டாலும், தன்னைப்போல அவள்தோரணையும், வார்த்தையும் அப்படியே ஆகிவிட்டது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அல்லது வேதாவுக்குத்தான் கண்ணை மறைத்துவிட்டதா….. சேகர் வீட்டுக்கு வந்தே ஒரு மாதத்துக்கு மேலாயிற்றே என்று கூட்டுறவு சொசைட்டி நகை மீட்கவேண்டுமே எனக் கணக்கிட்டபோதுதான் தோன்றியது…

ஏதோ பயிற்சி வகுப்பு இருக்கிறது காலையில் வருகிறேன் என நேராக சொசைட்டியில் வந்து இறங்கினான். கையெழுத்தைப்போட்டு நகையை வாங்கி மனைவியிடம் நீட்டியவன் உடனே கிளம்பினான். “என்னத்தான்..இவ்ளோ தூரம் வந்துட்டு வீட்டுக்கு வந்து ஒரு வா சாப்பிடாம கூட போவணுமா…ஒங்களுக்குப் புடிக்கிமேன்னு அவுத்திக்கீர
தண்ணிச்சாறு வெச்சிருக்கெ..”

“இல்ல..மத்தியானம் இன்ஸ்பெக்சன் இருக்கு…நா இப்ப பஸ்புடிச்சாதான் செரிவரும்…அர நாளுதா லீவு போட்டென்..”, சரியாக முகம் பார்த்துக்கூட சொல்லாமல் சொசைட்டி வாசலிலேயே ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் தொற்றிக்கொண்டவனைப் பார்த்தபோது என்னவோ பிசிறு தட்டியது. ஆனாலும் அடுத்தடுத்த வாரங்கள் வேலை நெட்டித் தள்ளியது. எல்லாவற்றுக்கு நடுவிலும் ஒரு சனி ஞாயிறு தானே போய் வந்து விடலாம் என குட்டிப்படையை இழுத்துக்கொண்டு போய் இறங்கினாள்.

பிள்ளைகளுக்கு இங்கு வருவதென்றால் தனி கொண்டாட்டம். ஆட்ட இழுத்துட்டு வா…கோழியப்புடி என்றெல்லாம் அதிகாரம் இருக்காது. டிவி பார்க்கலாம். விளையாடலாம். ஐஸ்க்ரீம் சாப்பிடலாம். சறுக்குமரம் உள்ள பூங்காவுக்கு சித்தி அழைத்துப் போவாள். வெள்ளென கிளம்பியபோதும் சேகர் வீட்டில் இல்லை. கொண்டுவந்த பையைப் பிரித்து எடுத்து வைத்தபடியே “எம்மா…நாய்க்கி வேலயிம் இல்ல நிக்க நேரமும் இல்லங்கிறது சரியாத்தாம்மா இருக்கு….போன வாரமே அறுப்பு முடிஞ்சிருச்சி…ஆனாக்கூட பாரு…இன்னிக்கி பஸ் ஏறுர வரக்கிம் வேல ஆளக் கொடயிது…”, சரசு உம் கூடக் கொட்டாமல் பாத்திரங்களை அள்ளிக் கொண்டு கொல்லைப்புறம் சென்றாள்.

“நீ ஏம்மா ஜாமா வெளக்கிட்டுக் கெடக்குறா…அவுளுவதான வெளக்குவாளுவொ… ”, “இருக்கட்டும்”, என்று முனகிக்கொண்டே சரசு பலகைக்கட்டையை இழுத்துப் போட்டு உட்கார்ந்து பாத்திரங்களைத் தேய்க்கலானாள். குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்து வேலை செய்ய வேண்டியது..பிறகு முட்டிவலின்னு புலம்ப வேண்டியது …
“வூடான வூட்டில மணி பத்தாவப்போவுது…இன்னும் வெளக்கமாத்தப்போட்டு கூட்டி வுடக்கூட முடியாம படிச்சிக் கிளிக்குறாளுவொ….தங்கைமாரைத் தான் வந்து கண்டிக்காமல் ரொம்பத்தா துளுத்துப் போச்சு”, பொரிந்தவாறே கூடத்தை ஒதுங்க வைத்துவிட்டு சேகரின் அறைக்கதவைத் திறந்தாள்.

momentsjournal.com, painting: S. Ilaiyaraja

அங்கு கங்கா படுத்திருந்த கோலத்தில் எரிச்சலடைந்து முதுகில் ஒரு தட்டு தட்டினாள். “என்ன எரும…அத்தான் ரூமுல ஒனக்கு என்ன வேல…?”, தூக்கிவாரிப்போட்டுத் திரும்பிய கங்காவின் ஆடைக்குள்ளிருந்து வெளியே வந்து விழுந்தது மஞ்சள் கோர்த்த தாலிக்கயிறு….

*

பெரியப்பா திண்ணைக்கு வந்துவிடப்போவதன் அடையாளமாக நடையில் நிழல் தெரிந்ததும் அதுவரை கன்னத்தில் கைவைத்தபடியே இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஆத்தா எழுந்து போனாள். மருமகனுக்கு முன்னே வர மாட்டாள். மேல்துண்டைஎடுத்து திண்ணையைஒரு தட்டு தட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டார் ராமச்சந்திரன். பங்காளி வகையறாவில் மூத்தவர் என்பதால் குடும்ப பிணக்குகளுக்கு ஆலோசனை சொல்வது வழக்கம்.
” என்னா ஆயி…காப்பி கீப்பி குடிச்சியா?”, தணிவாக விசாரித்தார்.
“ஆச்சி பெரியப்பா”
” சாந்தா… வேதாம்மாவுக்கு எதுவும் குடுத்தியா”, உள்பக்கம் குரல் கொடுத்தார்.
“அவ்வொ இப்பொதா வந்தாவொ….எடுத்துட்டு வாரன்”
“அப்பிடியே எனக்குங் கொண்டா”, மைத்துனர் முறையுள்ள அவர்முன் உட்காராது எழுந்து நின்றுகொண்டிருந்த சரசுவிடம், “எவ்ள நாழி நிக்கிறது….நெலப்படிக்கி அந்தாண்டயாவது ஒக்காரலாம்ல”, என்றார்.
” சொல்லு ஆயி…இப்ப என்ன செய்யணும்?”

” ஒண்ணும்ல பெரியப்பா… நடந்த களேவரம்லா ஒங்களுக்கே தெரியும்…எனக்கும் அந்தா இந்தானு நுப்பது வயசாவுது…சடங்காயி வூட்ல இருந்தப்ப ஒழச்ச ஒழப்ப வுடுங்க….கழுத்துல ஒரு மஞ்சக்கயிறக் கட்டி மனுசின்னு ஆனதுலருந்து ராப்பகல் சோறுதண்ணி பாக்காம காடுகர சுத்தி ஒழச்ச ஒழப்புலதான் எல்லாம் நடக்குது…இதல்லாம் ஒத்தருக்கும் நெனப்பு இல்ல…”

” இவ பாடுபட்டத ஆரு இல்லன்னு சொல்வா….அப்பிடி சொன்னா தவிச்ச வாய்க்கி தண்ணி கெடைக்காது..போற வழியில புல்லு மொளைக்காது..”, தாயின் விம்மல் ஒன்றும் வேதாவிடம் மாற்றம் தரவில்லை. இறுக்கம் குறையாது பேசலானாள். ” சும்மா பசப்பலா பேசுனாப்பல ஆச்சா. எம்பாடு எம்பொழப்புன்னு எனக்கு அடுத்தவந்தா இடுப்ப தட்டிட்டு எந்திரிச்சி போயி வாழல…பதினெட்டு வயசுல கல்யாணம் ஆனப்ப நானும் சின்னஞ்சிறுசுதா… இவ்வொ பெத்துவெச்ச அத்தினியும் எம்பொறுப்புன்னு நானா தலையில ஏத்திகிட்டு ஓடுன…ஐயோ…ஒரு மொடைன்னா கையக்கால நீட்டி இளுத்து வுட்டுகிட்டு இருந்த மாமாவும் போய்ட்டாரே…நம்ம அம்மா என்ன பண்ணும் எப்படி கரையேறும்னுதா யோசிச்சேன்.”

” ஞ்சேரு …இப்ப ஆருடா இதெல்லாம் இல்லன்னு சொன்னது…நீதான் அந்த வூட்ல பொண்ணுக்குப் பொண்ணு, ஆணுக்கு ஆணு… ..ஒங்கம்மா வெச்சிருந்த ரெண்டு மா…ஒம்மாமனார் வெச்சிருந்த மூணு மா…இதுல அவ்வொ நடத்துனது சேத்தது எங்களுக்கெல்லாந் தெரியாதா…தோடு மூக்குத்தியோட ஒன்ன அனுப்புச்சி ஒங்கம்மா….அரசிக்கு இரவது பவுனு போட்டு அனுப்பியிருக்க… பாத்துட்டுதான இருக்கோம்…அதெல்லாம் வுடு….இப்ப நா என்ன செய்யணும்னு சொல்ற…”

” இவ்வொ யாரோடயும் எனக்கு இன்னமெ எந்த சம்மந்தமும் இல்லனு தீத்து வுட்ருங்க… இவ்வொளோட செத்தா வாழ்ந்தா மொகமுழி கூட எனக்கு வேணாம்….”, உள்ளே சரசு குரலெடுத்து விம்மலானாள். ” ஏ ஆயி…புருசன் பொண்டாட்டி சமாசாரமா இது…பெத்த கொடி இல்லனு போவுமா…அடுத்தடுத்து உள்ளத யாரு எடுத்துக்கட்டி பாப்பாவோ” ” அதெல்லாம் அவ்வொளாச்சு…அவ்வொ புது மருமொவனாச்சி…” ” ஞ்சேரு…நானா சட்டம்போட்டு ஒந்தம்பி தங்கச்சியல்லாம் நீதான் தலையெடுக்க வெக்கணும்னு சொன்னன்…நீயா குடும்பத்த கையில எடுத்துயிட்டு ரவ்வாப் பகலா பாடுபட்ட…ஒங்கம்மாவுக்கு என்ன தெரியும்…ஏதோ பசி பட்டினியில வாடாம சோத்தப் பொங்கிப்போட்டு வளத்துச்சி அவ்வளவுதான”. “அப்பிடி நெனச்சிதான் நானும் ஏமாந்தன்….எப்பிடியாபட்ட விசயத்த எங்கிட்ட சொல்லாம மூடிமூடி செய்யத் தெரியிது.. இதெல்லாம் என்ன..எல்லாம் பாத்துக்குவாங்க…”

மாலை மாலையாகக் கண்ணீர் உகுத்தபடி உட்கார்ந்திருந்த சரசுவின் அருகே வந்து உட்கார்ந்த சாந்தா பெரியம்மா, ” ந்தா காப்பிய ஒரு வா குடி…அளுவய நிறுத்து”, என்று தோளைத் தட்டியது… தனக்கு வைக்கப்பட்ட காப்பியைக் குடிக்கும் இடைவெளியில் யாராவது இறங்கி எதுவும் சொல்கிறார்களா பார்ப்போம் என்பது போல மெல்லக் குடித்துக் கொண்டிருந்தார் ராமச்சந்திரன். திண்ணைக்கு அந்தப்பக்கமாக மருமகன் கண்படாமல் உட்கார்ந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கிழவியின்மேல் விழுந்து தாண்டி ஓடிய ஆட்டுக்குட்டியை, ” சை..வந்தன்னா கால ஒடிச்சிப்புடுவன் பாத்துக்க…”, என்று உரக்க வைது தீர்த்தாள். ” செரி…ஒங்கம்மாவும் திட்டம் போட்டா செஞ்சிது…ஒண்ணும் பண்ண முடியாத கட்டந்தான நடத்தி வுட்டுருக்காவொ …ந்த கெங்காவும் வயித்த தள்ளியிட்டு வந்து நின்னா யாருக்கு மானக்கேடு சொல்லு”, சாந்தா பெரியம்மா விஷயத்தை எடுத்துக் கொடுத்தாள். பூடகமாகவே பேசிக்கொண்டிருந்தால், ராச் சமையல் வேலையைத் தொடங்கணுமே என்ற கவலை அவளுக்கு…

” அதான் கேக்குறன் பெரியம்மா…அந்த நாயி அப்படி சுத்திட்டு வர வரக்கிம் இவ்வொ என்ன பூப்பறிச்சிட்டு இருந்தாவொளா…செரி…சொன்னாளோ…கண்டுபிடிச்சாவொளோ, நா என்ன செத்தா போயிட்டன்…இன்னின்னது பெரச்சின்னனு என்னகூப்புட்டு சொல்லக்கூடாதுன்னு ஆராச்சும் கையப் புடிச்சிட்டாவொளா?” . “அவ…ஓங்காரிச்சிட்டுக் கெடக்கா…வெளக்கமாத்தால நாலு சாத்துனா அந்தப்பயல கொணாந்து நிறுத்துறா..அவென் கையில தாலிக்கயித்தோட வந்து நின்னுகிட்டு இப்பவே கட்றேங்கிறான். என்ன செய்வ சாந்தா..செரி கட்றான்னு சொல்லிட்டன்.. இவ புருசன் கூட வூட்டுல இல்ல… வந்த பின்னாடிதான் சொன்னன்.”

” அந்த மண்ணாங்கட்டிக்கி வெவரம் இருந்திருந்தா இப்பிடி பொண்டாட்டிய யாருக்கோ ஒழப்பெடுக்க வுட்டுட்டு வயத்து வலிய வாங்கிட்டு இருக்குமா….வந்தப்பறம் சொன்னாவளாம்…என்னா நாடகம்…மங்குமங்கு மங்குன்னு ஒழச்சிப்போட ஒருத்தி இருந்தா ஆயாளுக்கும் மவளுக்கும் எல்லா கெப்புறும் வரும் …” ” ஏ ஆயி…இஞ்சேரு ..அந்த கெங்கா குட்டி பண்ணுனது தப்புதான்… இல்லேங்கல…அதுக்கு ஒங்க அம்மா மேல ஏம் பாயுற… ” “எதுவாருந்தாலும் அவகிட்ட ஒரு வார்த்த கேக்கணும்னு என்னப்பத்தி தோணலல்ல பெரியப்பா…அப்பறம் என்னாத்துக்கு எனக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு….நம்ப பொண்ணு நம்ப முடிவுன்னு யோசிக்கத் தெரிஞ்சவோ அவ்வொவ பாட்ட அவ்வொவளே பாத்துக்கட்டும்… ”

“அவளெக் கேக்காம செஞ்சது தப்புதான்…இப்ப என்ன…கெழக்க பாக்க நிக்க சொல்லுங்க கால்ல வேணும்னா வுழுந்துர்ரன்…”, சீறலும் அழுகையுமாய்க் கூவினாள் சரசு. ” எதுக்கு வீண்பேச்சு…நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா…இந்த பாவம் பரிதாபத்துக்கெல்லா இன்னம எடம் இல்ல…நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன்…அங்க இருக்குற வூடும் அத்தான் எடுத்ததுதான். மாத்திருவேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”, தன் தீர்ப்பையெல்லாம் எதிர்பார்க்காமல் தானே முடிவை அறிவித்துவிட்டுக் கிளம்புகிற வேதாவிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை ராமச்சந்திரனுக்கு.

தண்ணிசாறு

தண்ணி சாறு, Kadaaisamayal Youtube Channel

அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரைகளில் வைப்பது வழக்கம். வாய்ப்புண், வயிற்றுப்புண்ணுக்கு நல்லது என்று செய்வார்கள். அரிசி களைந்த முதல் நீரை ஊற்றிவிட்டு இரண்டாவது மூன்றாவது தண்ணீர் எடுத்துக்கொள்வார்கள். கழுநீர்ச்சாறு என்று பெயருக்கே ஒரு பாடபேதம் உண்டு. விரும்பாவிட்டால் வெறும் நீரிலும் செய்யலாம். கீரையைச் சுத்தம் செய்து வைக்கவும். தேங்காய்ப்பால் பிழிந்து எடுக்கவும். இதற்குப்பதிலாக தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம் அரைத்து விடுவதும் உண்டு.
தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு தாளித்து கீரையை நன்கு வதக்கிக்கொள்ளவும். எடுத்துவைத்த அரிசி களைந்த நீர் அல்லது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். உப்பு சேர்க்கவும். கீரை சீக்கிரம் வெந்துவிடும். கூடவே நிற்க வேண்டும். அரைத்த தேங்காய்க்கலவை விட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கிவிடலாம். அல்லது தேங்காய்ப்பாலை சேர்த்து இறக்கவும்.
அசல் தண்ணிசாறில் இஞ்சி பூண்டு என மணப்பொருள் எதுவும் சேர்ப்பதில்லை.

தொடரின் முந்தைய கதை:

படைப்பு

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.