” இஞ்சேரு தேரு கோலம் போடுறவொ தெறமசாலின்னு ஒங்க ஆயா சொன்னானு நம்புறபாரு…ஒன்ன சொல்லணும்”. எதை நோக்கி அக்கா அம்பு தொடுக்கிறாள் என்பதே தெரியாமல் அப்புராணியாக முறுக்கு பிழிந்துகொண்டிருந்தாள் சின்னபாப்பா. வீட்டில் சின்னவளாகப் பிறந்து சின்னாபின்னப் படுவதைப்பற்றியே அவளுக்கு இன்னும் முழுசாகத் தெரியாது. இதுவா தெரிந்துவிடப் போகிறது. ஒங்க ஆயா என்று இளக்காரமாகச் சொல்கிறாளே அக்காவுக்கும் அவள்தானே பெற்றவள் என்றெல்லாம் குறுக்குமறுக்காக யோசிக்கத் தெரியாமலே இதோ மகள் சடங்கு வரை வந்தாகிவிட்டது.

அம்மாவும் ஊரிலிருந்து வந்துவிட்டாள்தான். சடங்கான பேத்திக்கு மாமன் சீர் புடவை எடுக்க என்று தன் மகன், மருமகள் இவர்களோடு சின்னபாப்பாவின் ஓரகத்தியை அழைத்துக்கொண்டு போயிருக்கிறாள். சின்னபாப்பாவுக்கு பார்த்து எடுக்க அவ்வளவு விவரம் பத்தாது என்பதை தெரு முழுக்க டமுக்கு அடிக்காத குறையாகச் சொல்லிவிட்டு கொண்டுவந்த முறுக்கு மாவைப் பிழிந்து வைக்கும்படி இவளுக்கு உத்தரவு வேறு!

இவ்வளவு பேசும் அக்கா காலையில் வெள்ளன வந்திருந்தா இது நடந்திருக்காதாம்…கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறாளே ஒழிய, ஒருவாய்க் காப்பி தானே கலந்து குடிப்போம் என்று இல்லாமல், ”கொடியடுப்புல பால வெக்கிறியா” என்று ஏவுகிறாள். வாணலுக்குத் தீயைத் தணிக்க விறகை இழுத்துவிட்டு அதையும் போட்டுக் கொடுக்கிறாள். என்னவோ வேலை வெட்டி முறிக்கப் போகிறவள் மாதிரி வந்தவுடன் இடுப்புப் புடவையை அவிழ்த்துவிட்டு ஒரு வாயில் சேலைக்கு மாறியிருந்தாள். அதைக் கொசுவிக் கொடியில் போட்டுவிட்டு எழும்பின கையோடு இவளையும் ஒரு எட்டு பார்த்துவிடுவோம் என உலக்கையைக் குறுக்கே போட்டு பின் வராந்தாவில் படுத்துக்கிடந்த மகளை எட்டி நின்றபடியே அழைத்தாள். தூக்கத்தைக் கலைத்ததற்காக முறைத்த அவளுக்கு சமாதானம் சொல்லியபடி..
” இஞ்சரு..பெரியம்மா வந்துருக்கு அதுக்கு காப்பி போட்டேன். ஒரு வா குடி”. எரிச்சலோடு தனக்கு தரப்பட்டிருந்த தம்ளரை அவள் ணங்கென நிமிர்த்தி வைத்தாள்.

நேற்று காலை வயிற்றை வலிக்கிறது என மாலை மாலையாகக் கண்ணீர் விடத்தொடங்கியதுமே என்னவோ தோன்றியது. அம்மா சொல்லி வைத்திருந்தது நினைவுக்கு ..”ஏட்டீ ரேணுவுக்கு பதினொண்ணாச்சு…இன்னிக்கோ நாளக்கோ ஒக்காந்துருவா…எதாச்சும் சொன்னான்னா குகுடுன்னு நீ போயி பாக்காத…மொத குறி ஆத்தாகாரி பாக்கவேணா. ஒம் மாமியா நல்ல வாவரசி…அவ்வொ பாக்கட்டும்…” நல்லநாளில் சூனியக்காரி என்று வராந்தோறும் திட்டிக்கொட்டும் அம்மாவுக்கு திடீரென சம்மந்தி வாவரசியாக மாறியதன் சூட்சுமம் பற்றி யோசிக்கவுமில்லை. ‘ சின்னபாப்பா மொவ ஒக்காந்துட்டா…ஒடந்தண்ணி சாயுந்தரம் ஊத்தறதாம்…மாம வூட்டுல மூணா நாளு தண்ணி ஊத்தி புட்டு சுட்டு போடப்போறாவொளாம்’, வாவரசியே முடிவெடுத்து சொல்லிவிட்டு நேற்று மாலையே நடுங்க நடுங்க மஞ்சள் நீர் ஊற்றியாச்சு.

தண்ணீர் ஊற்றிய மூன்று சுமங்கலிகளுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம் கொடுத்து அனுப்பிவிட்டு குறிகண்ட பாவாடை சட்டையை வண்ணாத்தியிடம் கொடுத்தனுப்பி சின்ன திமிலோகத்தை முடித்து வைத்திருந்தாள் மாமியார். இன்று காலை மகன், மருமகள் சகிதம் வந்திறங்கிய அம்மாவைக் கண்டதும் ஒருபக்கம் அப்பாடா என்றும், இன்னொரு பக்கம் அய்யோடா என்றும் சின்னபாப்பாவின் நெஞ்சு அடித்துக் கொண்டது. இந்த மாதிரி விஷயங்களில் அம்மா ஒரு திருவிழாவுக்கான உற்சாகத்தோடு இறங்குவாள். ஆனால், அக்காவுக்கு ஒரே ஆண்பிள்ளையாகப் போனதால் அதிகாரபூர்வமாக இப்போதுதான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தன் அண்ணன் தம்பி வீடுகளுக்கு அத்தை முறை செய்த கதை, தன் பெண்களுக்கு மாமன் முறை வந்த கதை என்று எதையெதையோ வந்த நொடியிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தாள். தன் பெண்ணுக்காகதான் இதெல்லாம் நடக்கிறது என்று பெருமை ஒருபக்கம் இருந்தாலும், மருமகப்பிள்ளை தன் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்று நினைத்தான் போல. எல்லோர் முன்னிலையிலும் வெற்றிலை தாம்பாளத்தில் வதங்கிய வெற்றிலை கிடக்கிறதென்று சொல்லி சின்னபாப்பாவை மணக்க மணக்க வைதுவிட்டுப் போனான். வாவரசிக்கு சற்று குளுகுளுவென்றிருந்தது. எல்லா நாளும் இப்படித்தான் என்பதாலும் அவன் கெப்புறுக்குத் தானும் விதிவிலக்கில்லை என்பதாலும் எச்சரிக்கையாக அடுத்த தெருவில் மூன்றாவது மகன் வீட்டில்தான் கிழத்தம்பதி வாசம். ஆனாலும்…

எல்லா கூத்துக்கும் நடுவில் எப்போதும் கொஞ்சித் தீர்க்கும் மாமன்காரன் எட்ட நின்று லேசான முறுவலுடன், “என்ன ஆயி.. சாப்பிட்டியா…அல்வா வாங்கியாந்து அம்மாட்ட குடுத்துருக்கேன். வாய்ங்கிக்க’, என்று ஏதோ சொல்லிப்போனான். அத்தாச்சி அது என்னாச்சு அத்தாச்சி இது என்னாச்சு என்று நாத்தனாரை நூறு கேள்விகள் போட்டு தன் மாமன்பொண்டாட்டி உரிமையைக் கோடிகாட்டிவிட்டு வந்த வசந்தி மாமி, “என்ன ரேணு…அரப்பரிச்ச லீவுல கரெட்டா ஒக்காந்திட்டியா..”, என்று உரக்க கேட்டபடி வந்தாள்.

சுற்றிலும் யாருமில்லை என்பதைப் பார்த்ததும் சற்றே தாழ்ந்த குரலில், “ஏண்டீ படிக்கிற புள்ளதான நீ…இவ்வொதான் அறிவில்லாம டமுக்கு அடிக்கிறாவொன்னா ஒனக்காச்சும் தெரிய வேணா…நாளக்கி பள்ளியோடம் போம்போது எல்லா பயலும் சிரிச்சி வெக்க மாட்டானுவ…இதெல்லாங்கூட சொல்லத் தெரியாமெ என்னாதான் படிக்கிறியோ…?”, கடுகடுத்துவிட்டுப் போய்விட்டாள்.

ShakthiOnline

ரேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. தலைக்கு ஊற்றிய ஈரத்தைக்கூடத் தானே துவட்டிக்கொள்ளும்படி உட்காரவிட்டார்கள். தனிதட்டு, தம்ளர்..அவளே கழுவிக்கொண்டு இந்த வராண்டா குளிரில் கிடக்க விட்டுவிட்டார்கள். எதிர் முனையில் இவளுக்குத் துணையிருப்பதாக காலோடு தலை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குகிறாள் ஆத்தா. இதில் சண்டை வேறு போட வேண்டுமாமே…எதற்கு? போன மாதம் அடுத்த தெரு முத்துலட்சுமி பெரியவளானபோது இப்படித்தான் இருந்தாளாம். பழைய பழக்கம் என்று கிடைத்தவர்களையெல்லாம் கூப்பிட்டு தினம் அவளைச்சுற்றி கும்மி கொட்டச்சொல்லி, சோவனமடி சோவனம் என்று பாட்டெல்லாம் பாடினார்கள். எத்தனை வித சடை அலங்காரம்.. போகும்போதெல்லாம் யாராவது முறைகாரர்கள் புட்டு சுத்திப்போட்டதாக கூப்பிட்டுக்கூப்பிட்டு இவர்களுக்கெல்லாம் தீனி கொடுத்தார்கள். சடங்கு மண்டபத்தில் வைத்து அவ்வளவு தடபுடல்.. அவ்வளவு பெருமை..

இந்த வசந்தி மாமி தன் தலையில் செலவு விழுமென்று யோசிக்கிறாள் என்று அடித்துச்சொல்கிறாள் பெரியம்மா. இந்த அம்மா ஒரு மங்குனி.. ஒண்ணும் தெரியாது… உளுந்தங்களியும் நல்லெண்ணெயும் விழுங்கச்சொல்லி ஆத்தா செய்த கொடுமையால் சீரற்றுப் போயிருந்தது வாய். கொஞ்சம் அல்வாவும் முறுக்கும் தின்றுவிட்டு பெரியம்மாவின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தூங்கத் தொடங்கினாள் ரேணு.

ஆனால், திமுதிமுவென்று வருவார் போவார் நடுவே சின்னபாப்பாவுக்கு உபதேசிக்கும் வாய்ப்பு அக்காவுக்கு குறைந்துவிட்டது. வந்தவர்களுக்கு சந்தனம் கொடுக்க, காப்பி போட என்று சின்ன மருமகளையும் களத்தில் இறக்கிவிட்டாள் வாவரசி.

கடைத்தெருவிலிருந்து வந்தவர்கள் பை மூட்டைகளையெல்லாம் நடுவீட்டில் வைத்துவிட்டு உறவு விசாரணைகளோடு சின்னபாப்பாவின் பந்தி உபசரிப்பை ஏற்றுக் கொண்டார்கள். “அரச்சுவுட்ட சாம்பாருன்னா சின்னத்தாச்சி கையாலதா சாப்பிடணும்”, சப்புக்கொட்டிக்கொண்டு வசந்தி இரண்டாவது முறையும் சாம்பாரே ஊற்ற வேண்டினாள். ஆசையினால் ஓடிக்கொண்டிருந்தாலும், வயோதிகம் அம்மாவை இழுப்பதைக் கை கழுவியவுடன் ஒரு ஓரம் தேடி ஒடுங்கிவிட்ட காட்சி உணர்த்தியது. சின்னபாப்பா மாமனார் வேறு அங்குமிங்கும் நடமாடுவதால் அவர் கண்ணில் படாதமாதிரி சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

‘ யெத்தாச்சி…சேதி வந்தவொடனே போட்டது போட்டவடி கெளம்ப வேண்டியதாயிருச்சி… புட்டுமாவு இடிக்க நேரமில்ல..இங்ஙனக்குள்ள ஆளு கெடைக்கும் அதெல்லாம் பாத்துக்கலாம்னாவொ ஒங்கம்மா.. இஞ்சேருங்க… கொறட்ட வுடுறத….நீங்க மொத்தமா மாவு ரெடி பண்ணியிருக்கீங்கனு ஒங்க ஓப்படியா சொன்னாப்பல..” .”நம்ம மொறைக்கு உண்டானதுக்கு ஆளு கூலி அரிசி காசு கணக்கு பண்ணி குடுத்துற வேண்டியது”, யாரிடமோ சொல்வது போலக் குறுக்கிட்டு நியாயம் தீர்த்தாள் அக்கா. பெரிய நாத்தனாரின் குறுக்கீடு ரசிக்கவில்லை வசந்தா. சட்டென எழுந்து ஏதோ வேலையிருப்பதுபோல நகர்ந்தாள்.

” ஏ சின்னபாப்பா…ஒன் வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு…ஊராமூட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையேன்னு வேலை பாக்குறாளுவொ மாமியாளும் மருமவளும்…நீ பெக்கே பெக்கேன்னு நின்னா….வாயால வட சுட்டுட்டு போயிருவாளுவ…செய்யட்டுமே….இவ ஒத்தக்கி ஒரு பேத்திதான”, எதுவுமே தன் சம்பந்தப்பட விஷயமில்லை என்பதுபோல மௌனமாக உளுந்து மாவைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாள் சின்னபாப்பா.

சின்னபாப்பாவை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. பெரியவள் கல்யாணத்துக்கு இருபத்தைந்து பவுன் போட்டுத் தடபுடலாக நடந்தது. அப்பா இருந்தார். கண்டிப்பாக பெருமைக்கு எருமை மேய்ப்பார். அக்கா கல்யாணத்துக்கும் சின்னபாப்பா கல்யாணத்துக்குமான நான்கு வருட இடைவெளியில் அப்பா பாயும் படுக்கையும் ஆகிவிட்டார். பெண்கேட்டு வந்த தூரத்து உறவினர் அவ்வளவு கண்டிப்பாக எதுவும் கேட்கவில்லை. ஒன்றும் வறட்சியாகப் போய்விடாவிட்டாலும் எல்லாவற்றையும் அவிழ்த்து உதறிவிடக்கூடாது என்ற சாமர்த்திய எண்ணம் வந்திருந்தது அம்மாவுக்கு.

Painting: S Elaiyaraja, pic: Google

” இரவது பவென் போட்டு பண்டபாத்திரம் வாங்கிக்குடுத்தர்ரோம்”, என்று பதமாக அம்மா சொன்னபோது மூத்தவள்தான் தலையைத் தூக்கிப் பார்த்தாள். ” பெரியவ கல்யாணம் இந்த மனுசன் காலு கையோட ஓட்டத்துல இருந்து செஞ்சாரு…இப்ப இப்பிடி நெலம…இன்னமே. இந்தப்புள்ள தலயெடுக்கற வரக்கிம் நானும் நல்லதுகெட்டது பாத்து வண்டிய ஓட்டணும்”, கேட்பவர்களுக்காகச் சொன்னாளோ தன் மனசாட்சிக்குச் சொன்னாளோ….சொல்லிவிட்டாள். வந்தவர்களும் குடும்ப நிலைமையை அனுசரித்து நடந்துகொள்வோம் என்ற பெருந்தன்மையில் இருந்தார்கள்.

” சின்னபாப்பா…ஒம் மனசுக்கு நீ தங்கமா கட்டி ஆளுவ. நேரம் கூடி வர்ரப்ப ஒனக்கு ஒரு அஞ்சு பவன் போட்டுற மாட்டனா”, ரகசியமாக சொன்னதையே அம்மா மறந்துவிட்டாலும் இவள் எப்படி மறக்கலாம்? வீட்டின் நிதிநிலைமையில் ஏற்றம்தானே தவிர இறங்குமுகம் என்று ஊகிக்க முடியாத அளவு இருக்கிறாளா என்ன இந்த சின்னபாப்பா… ஆனாலும் வாயைத்திறந்து இன்றுவரை கேட்கவில்லை என்பதை அறிவாள் பெரியவள். பேச்சு வார்த்தையில் இருந்தபோது ரேணு பிறந்தசமயம், காதுகுத்தும்போதெல்லாம் தானே கூட நினைவூட்டினாள் அம்மாவுக்கு. ஒன்றும் பெயரவில்லை.

” ஏட்டீ …இப்ப உள்ள செலவப் பாக்கவே லோன் எடுத்தேன்…தவணை வாங்கினேன்”, என்று மழுப்பிவிடுவாள். நாளைக்காலை மூன்றாம்நாள் தண்ணீர் ஊற்றுவது, மாமன்வீட்டில் புட்டுசுட்டுப் போடுகிறார்கள் என்பதால் சாப்பாடும் இங்கேயே வந்துவிடலாம் எனச் சொல்லிவிடுமாறு சின்ன மருமகளுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டிருந்தாள் மாமியார். அவள் சொல்லும் அழைப்பு பெறும் வீட்டுப் பட்டியலைக் கேட்டால் அரிசி உளுந்து போட்டிருக்கும் அளவு போதாது. உப்புமாவோ பொங்கலோ போட்டுக்கொள்ளலாமா என்று அக்காவிடம் கேட்டாள்.

” இப்பலாம் சாப்பாடு மொத்தமா வாய்ண்ட்டு வந்துர்ராவோ எங்கூர்ல…அந்தந்த விசேசத்துக்குள்ள வேலய மட்டும் பாத்தா போறும். நீங்கள்ளா இன்னும் சட்டியப்புடிச்சியிட்டே இருவத்துநாலு மணி நேரமும் நிப்பிய போலருக்கே”, எப்படியும் கடுமையான உழைப்பு தலையில் விழும் அபாயத்தின் எரிச்சலோடு அக்கா புலம்பினாள். ”யாருக்கும் இஞ்ச அதெல்லாம் புடிக்காது தொண்டைல எறங்காது”, சலனமின்றி சொன்னபடி ஏனம் விளக்க ஆயத்தமானாள். அக்காவீடு, தம்பிவீடு, அம்மாவீடு, தன் சின்ன மாமி, நாத்தனார்,கொழுந்தனார் என எந்த உறவு வீட்டு நல்லது கெட்டதுகளிலும் எச்சிலை எடுப்பது வரை அலுத்துக் கொள்ளாமல் வேலை பார்க்கும் தன் வீட்டில் எல்லோரும் ஒதுங்கி நிற்பதைக் கணக்குப் பார்த்து புலம்பக்கூடத் தெரியவில்லையே இந்த சின்னபாப்பாவுக்கு.

இட்டிலி, உப்புமாவோடு தலை சுற்றுவதற்கு வைக்கும் புட்டு, கல்யாணப்பொங்கல் வகையறாவைச் சற்றுக் கூடுதலாக செய்து இலைக்குப் போட்டுக் கொள்ளலாம் என்றாள் அம்மா. எல்லோரும் வழிமொழிந்தாயிற்று. ” இதென்ன சடங்கா…ஊரயே கூட்டுறாவொ…’, கணவனிடம் ரகசியமாக முணுமுணுத்தவாறு ஒரு பட்டியலை நீட்டினாள் வசந்தா. அக்கா மகள்மேல் கொண்ட ஆசை பாசத்துக்காக செய்வதா, முறையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற கௌரவத்துக்காக செய்வதா, இல்லை மனைவியைப்போல எரிச்சல்படுவதா என்ற குழப்பத்தில் இருந்தான் அவன்.

யாரோ வாங்கிவந்த பக்கோடா பொட்டலத்தை எல்லோருக்குமாகப் பங்கு வைத்து அளித்தபடி அக்கா போக ஒவ்வொருவருக்கும் காப்பியை நீட்டியபடி சுற்றிக் கொண்டிருந்தாள் சின்னபாப்பா. தானும் ஒரு தம்ளரோடு கட்டைப்பைகளின் அருகே உட்கார்ந்த போதுதான் வாங்கிவந்தது என்னவென்றே பையைப் பிரிக்கவில்லையே அம்மா என்ற யோசனை வந்தது. இயல்பாகப் பையை எடுத்துப் பிரித்தாள். மாம்பழ நிறமும் பச்சை பார்டருமாக கம்பிச் சரிகை தெரிந்தது.

வெளியே எடுத்தபோதுதான் புடவையல்ல, பாவாடை தாவணி என்பது புரிந்தது. யாரும் எதுவும் பேச ஆரம்பிக்குமுன் வசந்தா முந்திக்கொண்டாள். “ரேணு தீவாளிப் பாவாடைலதான் தீட்டு பாத்ததுன்னு தூக்கிக்குடுத்துட்டோம்…அவளுக்கு ரொம்ப புடிச்ச பாவாடயாம் அழுதுயிட்டிருந்தான்னு ஒங்க ஓப்படியா சொன்னுச்சு அத்தாச்சி…அதான் பட்டுப்பொடவ அப்பறம் சடங்கு வெச்சா எடுத்துக்கலாம்ணு பாவாட தாவணியே எடுத்துட்டோம்…” மருமகளை விட்டுக்கொடுக்க முடியாத அம்மா ” ஆமா…இப்ப பொடவ எடுத்தாலும் அவ எங்க கட்டப்போறா…நீதான் கட்டி கிழிப்ப”, ரசக்குறைவு போல முகத்தைச் சுளித்துக்கொண்டு மிச்சமிருந்த காப்பியை நிதானமாகக் குடித்து முடித்தாள் சின்னபாப்பா.

” எக்கா…ஒல போட்டிருக்கேன் சோறு வடிச்சிட்டு ஒரு வத்தக்கொழம்பு வெச்சிரு..ராத்திரி சாப்பாட்டுக்கு…நா கடத்தெரு வரக்கிம் போயிட்டு வரேன்” என்றாள். ” என்னடி இது…வூடான வூட்டுல கடைக்குப் போயி சாமான் வாங்க ஆளா இல்ல…” தன் அதிகாரக்குரலில் தொடங்கிய அம்மாவை இடைமறித்தாள். ” இஞ்சேரும்மா…எம்பொண்ணுக்கு நாளக்கி காலைல பட்டுப்பொடவ வெச்சிதான் புட்டு சுத்தணும்….நீ எடுக்குறியா நா எடுக்கவா…” தம்பிகாரன் ஆத்திரத்தோடு குறுக்கிட்டான், ” நீ எதுக்கு எடுக்குற…நா என்ன செத்தா போயிட்டன்” ” அதாண்டா, எம்பொண்ணுக்கு பாவாட சட்ட எடுத்தப்ப நா செத்துப் போயிட்டேன்னு எடுத்தியா”, ஒருநாளும் உரக்க ஒலிக்காத மனைவியின் குரலை அடையாளம் காண முடியாது அவசரமாக நுழைந்து சற்றே உயரம் குறைவான நிலைவாசலில் தலையை இடித்துக்கொண்டுவிட்டான் போலும் ரேணுவின் அப்பன்.

” அடுத்த மாசம் சடங்கு வெக்கிம்போது நல்ல பட்டுப்பொடவயோட எனக்குப் போடறேன்னு சொல்லி இன்னும் தொக்குல நிக்கிதே அந்த அஞ்சுபவுனு அதயும் சீருல வெச்சிரு. பொடவய நா கட்டுறனா நகைய எம் பொண்ணு போடறாளாங்குறதெல்லாம் ஒனக்குப் பேச்சில்ல… இல்ல…இஸ்டமில்லனா இப்பயே கெளம்புங்க… செறப்பா எம்பொண்ணுக்கு செய்ய எனக்கு தெரியும்… பாவாட எடுக்குறாவொளாம் பாவாட…” தூக்கிப்போட்டுவிட்டு உள்ளே விரைகிறாள். சின்னபாப்பாவின் கணவன் இன்னும் தலையைத் தடவிக்கொண்டே நிற்கிறான். அம்மா அவமானம் பொங்க ” எல்லா இந்த பெரிய நாயி வேலயாத்தா இருக்கும்”, என முனகிக் கொள்கிறாள்.
அக்காவுக்கோ அதிசயமாக இருந்தது.

மஞ்சள் பொங்கல் அல்லது துவரம்பருப்பு பொங்கல்

கல்யாணப் பொங்கல், வடகத் துவையல்

கல்யாணப்பொங்கல் என்றும் அழைக்கப்படும் இந்தப் பொங்கல் கீழத்தஞ்சை பகுதிகளில் பருவமடைந்த பெண் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் சில பண்டங்களில் ஒன்று. விருந்தினர்களுக்கும் பரிமாறுவர்.

அரிசி 200 கிராம், துவரம்பருப்பு 75 கிராம்( சிலர் குறைத்தும் போடுவர். ருசி குறையும்) இரண்டையும் கழுவி ஒன்றுக்கு நான்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து சிறிது மஞ்சள்பொடி, பெருங்காயம், உப்பு, ஒரு முட்டைக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து குக்கரில் வைத்துவிடவும். நான்கு விசிலுக்குப்பிறகு பத்துநிமிடம் சிம்மில் வைக்கவும். பிறகு மீண்டும் இரண்டு விசில். குழைய வெந்து விடும்( வெண்பொங்கலுக்கும் இதே மாதிரி வைத்தால் நன்கு குழையும்)

திறந்த பிறகு நன்கு மசித்துவிடவும். ஐம்பது மிலி நல்லெண்ணெயில் கடுகு, பட்டமிளகாய், கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும். ஓரிரு கரண்டி பச்சை நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறினால் வாசனை தூக்கும். இதற்கு இணை வடகத்துவையல்.
இந்த ருசி பிடித்தவர்கள் காலை உணவாகவும் எப்போதாவது இந்த கல்யாணப்பொங்கலைச் செய்வதுண்டு.

தொடரின் முந்தைய கதைகள்

படைப்பு:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.