தனிமை வீசை என்ன விலைன்னு கேக்குற ஆளுதான் நீலா.
அந்தத் தெருவில் மாடிவைத்துக் கட்டிய முதல் வீடு.
கணவனும் மனைவியுமாக இரண்டே பேர்.

குழந்தை பிறப்பை நினைக்கும் வயதெல்லாம் தாண்டியாகிவிட்டது. நேரடியாக அக்கா தங்கை என்று யாருமில்லாவிட்டாலும் தூரத்து உறவு வகையறாவாக யாரேனும் எப்போதும் அவர்களுடன் இருப்பதே வழக்கம். சுத்தமான வாயில் புடவை. மஞ்சள், வெள்ளை, கறுப்பு கூட்டணித்தலையை எண்ணெய் தடவி இறுக்கி முடிந்த பிச்சோடா கொண்டை. அதிர வைக்கும் பேச்சோடுதான் நீலாவை யாரும் பார்க்கலாம். வெள்ளிக்கிழமையானால் தலைக்குக் குளித்து நீண்ட நரை கூந்தலைத் தட்டித்தட்டி உலர்த்திக் கொண்டிருக்கும் போது மட்டுமே சற்று வித்தியாச தோற்றத்தில் பார்க்கலாம்.

ரயில்வேயில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய கணவரின் வருமானத்தைத் திட்டமிட்டு சேமித்து வீடுகட்டி இப்போது கிழவனை உட்கார வைத்து சோறு போடும் திறமைசாலி. வீடுகட்டும்போதே வருமானத்துக்கு வழியாக இருக்கட்டும் என்று ஒரு பக்கம் ஓட்டு சார்ப்பு, இன்னொரு பக்கம் சந்துவிட்டு வீட்டின் பின்னால் இரண்டு கூரை வீடுகள் என்று திட்டமிட்ட மகராசி.

சமையல் வேலை முடிந்தால் முன்வாசலில் உட்கார்ந்தபடி தெருநியாயம் நடக்கும். யாருக்காவது வைத்தியம் பார்க்க வந்து தங்கியிருக்கும் உறவுப்பெண் சமையலில் உதவி, மேல்வேலை பார்த்து விடுவாள். ஆள் அவ்வப்போது மாறினாலும் நீலாவின் சட்டதிட்டங்கள் பிரசித்தமென்பதால், வரும் உறவுகளுக்கும் இது பழக்கம்தான்.

” ஏ ..கோவிந்து…என்ன பாக்காத மாதிரி போற….உம் பொண்டாட்டி ஊர்லருந்து வந்துட்டாளா…”,

என்று உரத்த குரலில் கேட்டால் எதிர்ப்பக்கம் சைக்கிளை உருட்டிக்கொண்டு போகிறவன் இங்கு வந்து பதில் சொல்லிவிட்டுத்தான் போவான். அவனுக்குத் தெரியும் வீட்டில் தட்டுமுட்டு ஏற்பட்டால் மனைவி நீலாவிடம் வந்து நிற்பாள் என்று.

‘நீலா, நீலா’ என்று சொல்லிக்கொண்டிருந்தால் யாருக்குப் புரியப்போகிறது. தெலுங்கு ,கன்னடமெல்லாம் இல்லாவிட்டாலும் எப்படியோ நைனா, அவ்வா என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். வீட்டில் தன் வசதிக்காக உள்முற்றத்தில் அடிபம்பு இறக்கி வைத்திருந்தாலும், இந்த நாலு குடித்தனக்காரர்களும் தண்ணீருக்கு உள்ளே வரக்கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டாள். எவ்வளவு சின்ன ஊராக இருந்தாலும் குறைந்த வாடகைக்கு வீடு தேடும் குடும்பங்கள் எங்கிருந்தோ வந்து விடுவதால் அவ்வாவின் வீடுகள் காலியாக இருப்பதேயில்லை.

நைனா இருக்குமிடம் தெரியாது. முன் வராந்தாவில் அவருக்கென்று ஒரு நாற்காலி உண்டு. குளியல், சாப்பாடு, தூக்கம் போக மற்ற நேரமெல்லாம் அதில்தான் உட்கார்ந்திருப்பார். மரச்சட்ட தடுப்பின் இடுக்குகளைத் தாண்டி தெருவின் நடமாட்டங்களை ஊடுருவிப் பார்த்தபடி அவர் பொழுது போகும்.
நாற்காலியில் அவரைத்தவிர யாரும் அமர முடியாது. அவ்வாவும் அமர்வதில்லை.

தெருவில் ஏதாவது சாவு என்றால் பிணத்தைச் சார்த்தி வைக்க மர பெஞ்சு அவ்வாவிடம்தான் வாங்கிச் செல்வார்கள். நாற்காலியில் உட்கார்த்தி வைக்க என்றால், கப்பகார வீட்டில் வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். ஒருமுறை அவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள் என்பதால் ” இந்த ஒருநட குடுங்க அவ்வா” என்ற கெஞ்சலை அவ்வா பொருட்படுத்தவேயில்லை.

வேறு வழியின்றி பெஞ்சில் கிடந்த நெல்மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு வழக்கம்போல எடுத்துப்போகலாம் என்று உள்ளே போனபோதுதான் ஆறடி உயரத்தில் ஒரு இளைஞன் கூடத்துக் கண்ணாடியில் குனிந்து தலைவாரிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். வழக்கமாக அவ்வா வீட்டில் நடமாடும் மனிதர்கள் உதிர் இலை முதிர் இலையாகத்தான் இருப்பார்கள்.
கரு கருமீசையும் ஆளுமாக ஒருத்தனா…
யோசித்தபடியே ” நீ ஒரு கை பிடி ” என்று சகாவுக்குக் குரல் கொடுத்தான் ஒருவன்.

திரும்பிப் பார்த்த இளைஞனிடம் சூழலை விளக்கினாள் அவ்வா.
” செத்த நவுருங்கணே” என்று வந்தவர்களை விலக்கிவிட்டு மூட்டைகளை அலேக்காக இறக்கி வைத்தான். பெஞ்சைத் தன் தோளில் சார்த்தியபடி வாசலுக்கு வெளியே வைத்தான்.

பிறகு என்ன நினைத்தானோ ” எந்த வீடுண்ணே”, என்று கேட்டபடி பெஞ்சைத் தானே தூக்கிக்கொண்டு நடக்கலானான். அங்கும் போய் பிணத்தை உட்காரவைக்கும் அவர்கள் வழக்கத்தை மாற்றாமல் பெஞ்சிலேயே தக்க பாதுகாப்புகளோடு உட்கார்த்திக் கட்டி வைத்துவிட்டு வீடு திரும்பினான்.

அவ்வாவுக்குப் பெருமையாகவும் இருந்தது. தன் வீட்டிலிருந்து ஒரு ஆள் இப்படி முன்னே நின்று கிடுகிடுவென்று பொது வேலை செய்வது கம்பீரம்தான். அவள் எல்லோரிடமும் வாயைக் கொடுத்துக் கிளறிக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் என்ன குறை இருக்கிறது என்று நைனாவுக்குக் கூடத் தெரிந்திருக்காது.

மாடிவீடு என்று பெயர்தானேயொழிய அறைத் தடுப்பு என்று எதுவும் கிடையாது. உயர்ந்த வாசலில் இரண்டு மூன்று படிக்கட்டு ஏறி நுழைந்தால் நீளமாக இருபக்கமும் வராந்தா. மரக்கிராதித் தடுப்பு வராந்தா ரகசியம் காக்கும். அங்குதான் நைனாவின் இருப்பிடம். அவ்வா வாயில்படியில் உட்கார்ந்து கொண்டால் ஓரிருவர் மேல் கீழாகப் படியில் உட்கார்ந்து கதையடிக்கலாம். சிலர் சுவரோரம் நின்றவாறே மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. அந்த சிற்றூரின் நாற்பது வீட்டுக் கதையும் அந்தப் படிகளுக்கும் சுவருக்கும் தெரியும்.

credit: quora

பேசியவாறே கீரை, வாழைப்பூ ஆய,புளி அரிய, உளுந்து,பயறு உடைக்க, திரிகையில் மாவு திரிக்க என்று ஏதாவது வேலையை ஆரம்பிப்பாள் அவ்வா.
நீ நவுரு…என்றோ, ஒரு கை இப்படிப்போடு என்றோ வருவார் போவார் வேலையை முடித்து விடுவார்கள்.
வாசல் நடை தாண்டினால் ஒரு கூடம்.
அதே போன்ற அடுத்த கூடத்தின் ஒரு பக்கம் அடுப்படியாகவும் இன்னொருபக்கம் உள்முற்றமாகவும் இருக்கும்.
பின்வாசலில் இறங்கி கழுநீரை ஊற்றுவாள். அங்கே கட்டிவிடப்பட்டிருக்கும் கூரை வீட்டுக் குடித்தனக்காரர்கள் ஒன்றும் சொல்ல முடியாது.
நடுக்கூடத்தின் ஒரு பக்கம் அவ்வாவின் மர அலமாரியும் ஒரு பெஞ்சும் கிடக்கும். பாய் படுக்கை விரித்து அவள் படுப்பதில்லை. பகலில் சற்று தலை சாய்த்தால் நிலைப்படியே தலையணையாகக் கூடத்தில் படுத்து எழுவாள். நைனாவின் படுக்கை கூடத்தின் ஓரத்தில் மேலேறும் மாடியில். மதிய உணவுக்குப்பின் சற்றுநேரம் படுத்திருந்து விட்டு மீண்டும் நாற்காலிக்கு வந்து விடுவார். திருவாரூர் மருத்துவமனைக்கோ, சந்தைக்கோ, அரசு வேலையாகவோ வரும் உறவு யாராக இருப்பினும் மாடிக்கு அனுமதியில்லை. அவ்வாவின் மேற்பார்வையில் முன்வராந்தாவோ, கூடமோ, அடுப்படியோ- விருப்பம்போல் படுத்துக்கொள்ளலாம்.

கல்யாணம் வைத்தால் மட்டும் தம்பதி சமேதராகப் போவார்கள்.
வேறெந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கும் போவதில்லை.
” எனக்கு தீட்டு தொடக்கு ஆவுறதில்ல”, என்று எப்போதாவது சொல்லுவாள். யார் வீட்டிலிருந்தும் சமைத்த பொருள் வாங்கிக் கொள்வதில்லை. விளைபொருளுக்குத் தடையில்லை. போனமுறை கோவிந்து மனைவி வாங்கிய கடனை புது உளுந்தும், பழைய புளியும் கொடுத்து கழித்தாள்.

சாவு வீட்டுக்கு பெஞ்சு போட்டுவிட்டு வந்த சங்கரை மறித்து ஊர்க்குளத்தில் குளித்துவிட்டு வருமாறு விரட்டினாள்.
இந்நேரம் எருமைகள் உழப்பிக்கொண்டிருக்கும்…நான் பின்வாசல் வழி வந்து பைப்படியில் குளித்துக் கொள்கிறேன் என்று கெஞ்சாத குறையாக சொல்லிப் பார்த்தான். பிடிவாதமாக மறுத்துக் கொண்டிருந்தாள்.

” இஞ்சேருங்க தம்பி…எங்கூடவாங்க …” பின்பக்கம் வாடகைக்குக் குடியிருக்கும் சிகப்பி ஆச்சி கூப்பிட்டாள். அது காரணப்பெயர்தான். ஊரில் வாழ்ந்து கெட்ட குடும்பம். கீற்று வேய்ந்த இரண்டு வீடுகளில் ஒன்றில் இருப்பு. பெண் தையல் வேலை செய்ய, ஆச்சி யாருக்காவது உதவியென்றால் செய்யப் போவாள். இதோ இன்றும் அந்த துக்க வீட்டுக்கு சம்பந்தி சமையல் செய்ய இவளைத்தான் கூப்பிடுவார்கள். சற்றே நெளிந்தபடி சங்கர் சந்துவழியாகப் போனான். பழைய சிமெண்டு தொட்டி ஒன்றில் தண்ணீர் நிரப்பியிருந்தது. “சிக்கனமா குளிச்சிருங்க… ‘, என்றபடி நகர்ந்தாள். கூச்சமும், எரிச்சலுமாக ஈரத்துணியைப் பிழிந்துவிட்டபடி நிமிர்ந்தபோது, அவ்வா துண்டைக் கொண்டுவந்து நீட்டினாள். ஒன்றும் சொல்லாமல் ஈரக்காலில் படிந்திருந்த மண்ணை அடுப்படி வாசலில் கிடந்த பழைய சாக்கில் தட்டித்தட்டி உதறிக்கொண்டு உள்ளே போனான்.

சில நாட்களுக்குப்பின் இந்த சங்கரை அவ்வா தத்து எடுக்கப் போகிறாள். அவன் ஒருவகையில் நைனாவுக்கு தம்பி மகன் முறை என்றார்கள். அதெப்படி இந்த செய்தி தெரிய வந்திருக்கும்? அவ்வாவே வேண்டுமென்று பரப்பி விட்டிருப்பாள் என்று ஒரு தரப்பு கருதியது. சங்கரும் அடிக்கடி வந்து ஒருவாரம் பத்துநாள் தங்கிவிட்டுப் போகலானான். இடிந்த படியைச் சரி செய்வது, வெள்ளையடிப்பது, கடன் வாங்கியவனிடமிருந்து நெல் மூட்டைகளை வசூல் செய்து வருவது என அந்த நாட்கள் திமிலோகப்படும். இப்படித்தான் தெருவில் ஊர்ப்பொதுக்குழாய் போடும் வேலையும் நடந்தது. ஒரு அடிபம்பு. சுற்றிலும் சதுரமாக சிமிண்டு மேடை. அரும்பாடுபட்டு இந்த தெருவுக்கான குழாய் தன் வீட்டின் அருகே அமையும்படி பார்த்துக்கொண்டாள் அவ்வா. வேலை நடக்கும்போது வருமாறு சங்கரைப் பணித்திருந்தாள். கருமித்தனம் மறந்து அந்த வேலை செய்த ஆட்களுக்கு டீ வடை விநியோகமெல்லாம் நடந்தது.

அப்பாடா…என்ன கச்சிதமான ஏற்பாடு…தெருக்குழாயின் வடிகால் இவர்கள் வீட்டுப்பக்கம் வராமல் பக்கத்து கருவத்தோப்புக்குள் ஓடிவிடும். இப்போது அவ்வா வீட்டின் மதிப்பும் கூடிவிட்டது. வீட்டு வாசலில் அடிபம்பு…தண்ணீருக்கு அலைய வேண்டாம் என்றால் சும்மாவா… அன்று அப்படிதான் தன் வீட்டு காப்பரிசியைக் கொஞ்சம் முந்தானையில் போட்டுக்கொண்டு தின்றபடியே அவ்வாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி. திடீரென்று எதையோ எடுத்து உற்று நோக்கிவிட்டு பின் சிரித்தபடி வாயில் போட்டுக் கொண்டாள். அவ்வாவுக்கு ஒரு கை வாங்கி தின்னும் பழக்கம் இல்லையென்றாலும் அவள் ரசிக்கிறாளா வியக்கிறாளா என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது.

credit: Jeyashri’s kitchen

“என்னா..”, என்றாள் சுவாரசியத்தை வெளிக்காட்டாமல்…
“ல்ல….புதுப்பணக்காரிவோ….காப்பரிசில முந்திரிப்பருப்ப போட்டுருக்காளுவளாக்கும்னு பாத்தேன்….தேங்காப்பல்லு…”, சொல்லிவிட்டு இன்னும் ஒரு குத்து அள்ளிப்போட்டுக் குதப்பியவாறே…. ” கட்டுகழுத்தியா இருந்தா நானே போயிருப்பேன்…நானே கெளறியிருப்பேன்… இப்பதா இந்த மனுசன் செத்ததுலருந்து ஒண்ணுத்துக்கும் தலயக் காட்டுறதுல்ல…”

அவ்வாவுக்கு காப்பரிசியில் முந்திரி போடுவதுண்டா இல்லையா என்றே சரியாக நினைவில்லை… அதெல்லாம் எந்தக்காலத்திலோ தொடர்பற்றுப் போயிற்று… இதைக் கேட்டால் நிச்சயம் இவள் கெக்கேபிக்கேவென்று இளிப்பாள். ஒரு குஞ்சு குளுவான் பாக்கியில்லாமல் தெரிந்தும் போகும்…கிடக்குது சனியன்…எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும்… தன் நாற்காலியில் அமர்ந்து வழக்கம்போலத் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தார் நைனா…யாரும் பக்கத்தில் இல்லையென்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ” காப்பரிசி தின்னுருக்கீங்களா”, என்றாள் சற்று உரக்க. காது மந்தமாகிவிட்டாலும், கிழவியின் சத்தம் அவருக்குப் பிடிக்கவில்லை. திரும்பி சற்றே அண்ணாந்து பார்த்துவிட்டு வழக்கம் போலாகிவிட்டார்.

அவள் வைவாளே என்பதற்காக சொன்னது காதில் விழுந்த அடையாளம் அந்த ஏறிடல் அவ்வளவுதான். மறுநாள் சங்கரும் அவன் அம்மாவும் வந்தார்கள். அவளுக்கு ஏதோ கால்வலியாம். சங்கர் சைக்கிளில் உட்காரவைத்து மருத்துவமனைக்கு அழைத்துப் போனான். சங்கர் அம்மாவை எடுபிடி வேலை எதுவும் அவ்வா சொல்லவில்லை. தானே சமைத்து பரிமாறினாள். உணவு முடிந்தபின் நைனா வழக்கம்போலப் படியேறப் போனார். “எங்க போறீங்க…நா என்ன சொன்னேன்”, என்று அதட்டலாக அவ்வாவின் குரல் அடுப்படியிலிருந்து வந்தது. சோறு குழம்பு கரண்டிகளைக்கூட வெளியே எடுக்காமல் தட்டைப்போட்டு மூடிவிட்டு அவசரமாகக் கூடத்துக்கு வந்தாள். மைத்துனர் நகர்ந்தாயிற்று எனக் காலை நீட்டிக்கொள்ள விரும்பிய சங்கர் அம்மா வேறு வழியின்றி மடித்துக்கொண்டாள். நைனாவோ மேற்கொண்டு அவ்வா பேசப்போவதற்கான பார்வையாளர் தோரணையில் நின்றார்.
அதைப் புரிந்துகொண்டு தானே அறிவித்தாள்.

“பார்வதி்…இந்த மாசமே ஒரு நாளு ஐயர வெச்சு வீட்லயே செஞ்சிரலாம்.”
சங்கர் குறுக்கிட்டு ” என்னா”, என்றான். அவன் அம்மா மெள்ள “அதான் ஒன்ன தத்து குடுக்குறதுக்கு…”, என்று முனகினாள்.
” என்னா மொணவுற….சங்கரு இன்னும நீ எங்க வூட்டுப்புள்ள . இஞ்சயே இரு..நானே ஒனக்கு கலியாணம் காச்சி பண்ணி வுடறேன்…நைனாவுக்குத் தெரிஞ்சவுங்க மூலியமா வேல கூட வாங்கிறலாம்…”, சொல்லிக்கொண்டே போன விஷயங்கள் நியாயமாக இனிமையாகத்தான் இருந்திருக்க வேண்டும் அவனுக்கு.ஆனால், யார் நேரமோ ….முணுக்கென்று ஒரு கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது. “நா அப்பவே சொன்னேன்லம்மா…நீ சொல்லலியா இவங்க கிட்ட …இஞ்சேருங்க பெரியம்மா..நா வர்ரேன், போறேன், நல்லது கெட்டது பாத்துக்கறேன்…ஆனா தத்து குடுக்குறது, இஞ்சயே காவ காக்குறதெல்லாம் முடியாது…” அவ்வளவு உறுதியாக இதுவரை யாரும் நீலாவிடம் பேசியதில்லை. சற்று தடுமாறிப் போனாள். பின்னர் அவன் அம்மாவைப் பார்த்து, ” என்னாடியம்மா….பொண்ணு கலியாண வேலயெல்லாம் முடிஞ்சிருச்சேன்னு மவன வுட்டு தாயம் போடுறியா”, என்று உறுமினாள். உண்மையில் அவள் உறுமியதாக நினைத்துக் கொண்டாளே தவிர குரல் பரிதாபமாகி விட்டது.

அவன் அம்மா ஏதோ சொல்ல முற்பட சங்கர் எழுந்து கொண்டான்.

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.

அதிசயமாக அன்று மாரியம்மன் கோயிலுக்குப் போயிருந்தாள் நீலா. மனச்சங்கடத்தை எப்போதும் வெளிக்காட்டும் வழக்கமோ புலம்பும் வழக்கமோ இல்லாத அவள் அன்று இருபத்தியோரு விளக்கு ஏற்றியது மிக ஆச்சர்யமாக இருந்தது உடன் வந்திருந்த சாலாச்சிக்கு. அதனால் கேட்டுவிட முடிகிற சென்மமா…மனசுக்குள் கேள்விகளோடு திரியைத் திரித்துக்கொடுத்து உதவி செய்தாள்.
வீடுவரும்போது தெருவிளக்குகள் கூட இல்லாத இருட்டு..
சாலாச்சி வீடு முன்னாடியே இருப்பதால் அவள் போய்விட்டாள்.
வீட்டுப் படியேறுமுன் யாரோ சந்தில் நிற்பது மாதிரி இருந்தது.
“ஆரு …”, அதிகார தோரணையில் கேள்வியெழுப்ப, கொஞ்ச நேரம் கழித்து சிகப்பி ஆச்சி மகள், ” நாந்தா அவ்வா “, என வீட்டு வெளிச்சம் கசிந்த இடத்துக்கு நகர்ந்து வந்தாள்.
“என்ன பண்ற இஞ்ச இருட்டுக்குள்ள?”
“அம்மா வருதான்னு பாக்க வந்தேன்..”
“அம்மா வந்தா வூட்டுக்கு வரப்போறா…நேரங்கெட்ட நேரத்துல எதுக்கு இங்ஙனக்குள்ள வந்து நிக்கிறது…பூச்சி பொட்டு தண்டி வெச்சா…”
ஏதேதோ கண்டிக்கும் குரலில் பேசிக்கொண்டே படியேறினாலும், அவ்வாவின் மனசுக்குள், அவள் தனியா நிக்கலியே என்னதான் இருட்டா இருந்தாலும் ஒண்ணா ரெண்டான்னு உருவந் தட்டுப்படாத அளவுக்கா நம்ம கண்ணவிஞ்சு போச்சு….என்ற கேள்வி உருண்டு கொண்டிருந்தது.

சரியாக உணவு நேரத்துக்கு வந்து உட்கார்ந்து விடுவார் நைனா. அவசரமாக ஒரு சட்டினியை நகர்த்தியெடுத்து தோசை ஊற்றலானாள்.
அவளும் இரண்டை ஊற்றிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தபோது வாசலில் நிழலாடியது.

காலையில் திறந்தால் இரவு படுக்கும்போது மட்டுமே தாழிடும் வழக்கம்.
சங்கர் உள்ளே வந்து சட்டையைக் கழற்றிக் கொடியில் போட்டான். உள்முற்றத்தில் இறங்கி தண்ணீரை அள்ளி ஊற்றி முகம், உடல், கை, காலெனக் கழுவிக் கொண்டிருந்தான். அன்று முகத்திலடித்தாற் போலப் பேசிவிட்டுப் போன பிறகு இன்றுதான் வந்திருக்கிறான். சற்று அமைதியாக இருந்தபின் மனசு கேட்கவில்லை போல…
“தோச ஊத்தட்டா?”, என்றாள்.
“இல்ல வேணாம்.”
ஒன்றும் பேசாமல் போய்ப் பாயை உதறி வராந்தாவில் போட்டுப் படுத்துக்கொண்டான்.
தோசை படலம் முடிந்தவுடன் மாடியேறிவிட்ட நைனா நிம்மதியாகத் தூங்கியிருக்கக்கூடும்.
எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு முன்வாசல் கிராதியைத் தாழிட்டுக்கொண்டு விளக்கை அணைத்து தன் பெஞ்சுக்கு வந்த அவ்வா, நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். எதை முன்னிட்டு தாம் எல்லாவற்றையும் கட்டி சேர்த்தோம்…இதோ ஒரு கேள்வி கூடக் கேட்க முடியாத சின்னப்பையனிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் யோசித்திருக்கலாம். எழுந்து வாசல் தெளித்து உள்ளே வந்தபோது சங்கர் கொடியில் மாட்டியிருந்த சட்டையிலிருந்து பணச்சுருள் ஒன்றை எடுத்து அவ்வா படுக்கும் பெஞ்சு மேல் வைத்தான்.

“காவேரி கல்யாணத்துக்கு வாங்கினது.”
பெரியம்மா என்று கூட சொல்லாமல் மொட்டையாகப் பேசுகிறானே…ஏது இவனுக்குப் பணம் என்று யோசித்து முடிக்குமுன், நைனாவின் நாள் தொடங்கி அவர் இறங்கி வருமுன்னரே வெளியேறி விட்டான். அந்தப்பணம் நாள்முழுவதும் அப்படியே கிடந்தது. நைனா அதைக் கவனித்தாரா என்றுகூடத் தெரியவில்லை. இரவு படுக்கும்போது அதை ஏதோ நேற்று தலையில் சூடி வாடிச்சுருண்ட பூச்சரத்தை தள்ளிவிடுவதுபோல் தள்ளிவிட்டுச் சுருண்டு கொண்டாள்.

ஓரிரு நாட்களில் சிகப்பி ஆச்சியையும் அவள் பெண்ணையும் அவ்வாவின் கண்முன்னாடியே சங்கர் அழைத்துப்போனான். அதற்கு மறு நாளிலிருந்துதான் அவ்வா வீடு பூட்டிக்கிடக்கிறது.
” இதென்ன..சொந்தப்புள்ளயா யாரையோ கட்டிகிட்டான்னு மான ரோசம் பாக்குறது…” என்று எதிர்வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசி வியந்து கொண்டார்கள் தெருப்பெண்கள்.

காப்பரிசி: தாலி பிரித்துக் கோத்தல், வளைகாப்பு, பதினாறு எனப்படும் குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா,காதணிவிழா சந்தர்ப்பங்களில் செய்யப்படுவது. தாய் வீட்டு சீர். பச்சரிசியைக் கழுவிக் காய வைத்து. உப்புமா நொய் பதத்தில் உடைத்துக்கொள்ள வேண்டும். தேங்காயைப் பல்லாகக் கீறி சற்றே உலரவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். பொட்டுக்கடலையையும் வறுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய், நெய் சேர்க்காமல் வெறும் வாணலியில்தான் ஒவ்வொன்றையும் வதக்க வேண்டும். ஒரு கிலோ அரிசிக்கு அரை கிலோ அல்லது அறுநூறு கிராம் வெல்லத்தைப் பாகு காய்ச்சவும். கம்பிப்பதம் வருமுன் சற்று நீர்க்க இருக்கும் போதே (அப்போதுதான் அரிசி ஊறி மெல்லும் பதத்தில் வரும்) யாவற்றையும் கொட்டிக் கிளற வேண்டும். ஏலக்காய்ப்பொடி கிளறுகையில் சேர்க்கலாம்.
தூளாக அப்படியே பாத்திரத்தில் வைத்து படைப்பதுண்டு. காகிதத்தில் சுருள் செய்து கிளறியதைச் சூட்டோடு நிரப்பி கூம்பாக எடுத்து வைப்பார்கள்.கூம்பு செய்வதென்றால் அரிசி கலக்காமல் பொட்டுக்கடலை தேங்காய் போட்ட கூம்பும் ஒன்று வைக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு.

படைப்பாளர்:

உமா மோகன்

கவிஞர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், வலைப்பூ பதிவர் என பன்முகம் கொண்ட ஆளுமை உமா மோகன். புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணிபுரியும் இவர், நேர்முகங்கள் காண்பதில் தேர்ந்தவர். கவியரங்கம், பட்டிமன்றம் போன்றவற்றில் ஆர்வமுண்டு. ‘டார்வின் படிக்காத குருவி’, ‘ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம்’, துஅரங்களின் பின்வாசல்’, ‘நீங்கள் உங்களைப் போலில்லை’, ‘தழையுணர்த்தும் சிறுவாழ்வு’, உள்ளிட்ட ஒன்பது கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். ‘ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது’ என்ற சிறுகதைத் தொகுப்பும், ‘வெயில் புராணம்’ என்ற பயணக் கட்டுரைத்தொகுப்பையும் எழுதியிருக்கிறார். வார, மாத இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.