போஸ்ட் மாஸ்டர் திரும்பவும் அவளைப் பார்த்தார். பதினைந்து இல்லை பதினாறு வயதிருக்கும். தாவணியில் இருந்தாள். அழுதழுது அவள் கண்கள் சிவந்திருந்தன. இரவெல்லாம் கூட அழுதிருப்பாள் போல. கண்ணுக்குக் கீழ் பெரிய பை தொங்கியது. அவள் சிறிதும் வெட்கமே படாமல் மறுபடியும் அழத்தொடங்கினாள். அனுப்பப் பட்டு, பட்டுவாடாவுக்குத் தயாரான ஒரு கடிதத்தைக் கேட்டு வந்திருந்தாள். பெரிய கதை சொன்னாள்.

‘சார்! இது தப்புதான் சார்! எனக்குத் தெரியும். ஏதோ கோபத்துல ரொம்ப திட்டி, பர்சனலா ரொம்பத் திட்டி லெட்டர் எழுதிட்டேன் சார். முந்தா நேத்து நைட் போஸ்ட் பண்ணிட்டேன். நேத்து காலைலதான் தெரியும். அவளோட பாட்டி இறந்துட்டாங்க சார். அவளுக்கு அவ பாட்டிதான் சார் எல்லாம். அவ… அவளுக்கு….. அவ பாவம் சார்‘, அழுதாள்.

‘அவ அம்மா அப்பாவோட இல்ல சார். பாட்டிதான் அவள வளத்தாங்க. எனக்கும் அவளுக்கும் ஸ்கூல்ல சண்டை. எனக்கு அப்ப உடனே பதிலுக்கு பேசத் தெரிலை. வீட்டுக்கு வந்து கோவத்ல திட்டி லெட்டர் எழுதி போட்டுட்டேன். அந்த லெட்டர் அவ கையில இப்ப கெடைச்சா, கொடுமையா இருக்கும் சார். நா அவளோட பெஸ்ட் ஃப்ரெண்ட் சார். ரொம்ப நொந்து போய்டுவா சார்…’

அவள் ஆயிரத்தெட்டு ப்ளீஸ் போட்டு, சார் போட்டு கெஞ்சிக் கொண்டிருந்தாள். காலையில் ஆஃபிஸைத் திறக்கும்போதே வந்து விட்டாளாம். போஸ்ட் மேன் ரத்தினமும் ஆஃபிஸ் பாயும் சொன்னார்கள்.

அவர்களும் எவ்வளவோ சொல்லியிருக்கிறார்கள். ‘போயிடு பாப்பா. கடிதாசிய அனுப்பிட்டா நேரா பட்டுவாடாதான். போஸ்ட் மாஸ்டர் ரொம்ப ஸ்ட்ரிக்டு. ரூல்ஸ்படி கொடுக்க மாட்டாரு. கொடுக்கக் கூடாது. இந்நேரம் டெலிவரிக்கு போயிருக்கும்.’

அவள் சொன்னாளாம், ‘இல்ல, நா ஹெட் போஸ்ட் ஆஃபிஸ்ல கேட்டுட்டேன். ஒரு ரிக்வெஸ்ட் லெட்டர் எழுதிக் கொடுத்தா, சார் அதை அக்ஸெப்ட் பண்ணிக்கிட்டாங்கன்னா லெட்டர என் கிட்ட கொடுத்துடலாமாம். நா சார் வர்ற வரைக்கும் வெய்ட் பண்றேன்’.

அது ஒரு கிளை அஞ்சலகம். சிறிய கட்டடத்தின் மொட்டை மாடியில் இயங்கி வந்தது. ஒரு பெரிய ஹால். அதில் மக்கள் உள்ளே வராமல் தடுக்கப்பட்ட நீண்ட நீள்வட்ட மரமேஜை தடுப்பு. வெளியே ஒரு ரெஸ்ட் ரூம். வெய்ட் பண்ண ஒரு மர பெஞ்ச். எல்லாரையும் மேய்க்க ஒரு போஸ்ட் மாஸ்டர், தபால் பட்டுவாடாவுக்கு இரண்டு போஸ்ட்மென். தண்ணீர் பிடிக்க கொள்ள, டீ வாங்கி வர, மேஜை துடைக்க, பெருக்க, எடுபிடிக்கு ஒரு ஆஃபிஸ் பாய். அவ்வளவுதான்.

போஸ்ட் மாஸ்டருடைய பத்து வருட சர்வீஸில் இப்படி ஒரு கேஸ் இதுவரை வந்ததில்லை. அவள் கெஞ்சுவதைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ஆனால் இதுகளை எந்தளவு நம்புவது? போய் அப்பாவைக் கூட்டிட்டு வா. தர்றேன் என்று சொல்லலாம். அதுக்கே இதுங்க திரும்ப வராதுகள். இவ்வளவு அழுகையும் கெஞ்சலும் பொய் என்றும் நினைக்க முடியவில்லை.

‘சரி, ஃப்ரம் அட்ரசும் டு அட்ரசும் சொல்லு.’

அவள் கண்கள் மின்ன, சொன்னாள். அழுகையை நிறுத்தியிருந்தாள்.

சேலம் செகண்ட் அக்ரஹாரத்திலிருந்து, அரிசிபாளையம் முகவரிக்கு அனுப்பியிருந்தாள்.

Hipstamp

‘ஒரு பிங்க் கலர் இன்லேண்ட் லெட்டர் சார். பெறுநர், ‘ஈஸ்வரி’ ன்னு போட்டிருக்கும்.’

‘சரி எனக்கு வேல இருக்கு. வெளில வெய்ட் பண்ணு.’
அவர் தனது அன்றைய முக்கிய அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினார்.

அவள் பள்ளி, பெண்கள் மட்டுமே படிக்கும் அரசினர் மேநிலைப் பள்ளி. ஈஸ்வரி அவள் பள்ளிக்கு பதினொன்றாவது படிக்க வந்து சேர்ந்தாள். அம்மா வேறு பள்ளியில் ஆசிரியை. அப்பா நகைத் தொழில் செய்பவர். அப்பா எப்போதாவதுதான் வேலைக்கு செல்வார். குடிக்க காசு தேவைப்படும் போதுதான் வேலை செய்வார். குடித்துவிட்டு அம்மாவை அடித்த அடியில் அம்மா முகம் எப்போதுமே கொஞ்சம் கோணலாகத்தான்
இருக்கும். இந்த பர்சனல் தகவல்கள் எல்லாம் இரண்டு பேரும் நெருங்கின ஸ்நேகிதிகளாக ஆன பிறகு ரொம்பத் தயங்கித் தயங்கிதான் சொன்னாள்.

செப்டம்பர் 21. ஈஸ்வரியின் பிறந்தநாள். இவள் அதிகாலை 5.30 மணிக்கே சைக்கிள் எடுத்துக் கொண்டு அவள் வீடு போய்விட்டாள். இவள் வீட்டிலிருந்து சைக்கிள் மிதிக்க எப்படியும் அரை மணி ஆகும். ஆறுமணிக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்ல விரும்பினாள். வாசலில் ஈஸ்வரிதான் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு தாள முடியாத ஆச்சர்யம். குதி குதியென்று குதித்தாள். சந்தோசப்பட்டாள். இந்த பிறந்த நாளை ஆயுசுக்கும் மறக்க முடியாது என்றாள். அவள் வீட்டிலே கூட என்னைக்குப் பிறந்தநாள்னு யாருக்கும் தெரியாது. இவளுக்கு எப்படித் தெரியும்? ஸ்கூல் ரெக்கார்ட்டிலே கூட மாத்திதான் கொடுத்திருக்கு. இவளுக்கு எப்படித் தெரியும்? யார் சொன்னா? என்று துளைத்தெடுத்தாள்.

இவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். ‘நீதான் ஈஸ்வரி சொன்ன. மொதோ மொதோ அறிமுகப்படுத்திக்கிட்ட நாள எல்லாரும் மறந்துருவாங்க. அப்பா என்ன செய்றாங்க. அம்மா என்ன செய்றாங்க. அக்கா தம்பி இருக்காங்களா? எல்லாம் கேப்பம். ஆனா மறந்துருவம். பிறகு நல்லா ஃப்ரெண்ட்ஸான பிறகு மறுபடியும் கேட்டுத் தெரிஞ்சுப்பம். நா மொதோ நாள் கேப்பதை எப்பவும் மறக்காம வச்சுக்குவேன்.’

முதன் முதலில் இவள் ஈஸ்வரி வீடு தேடிப் போனது பெரிய கதை. இவள் பெரிய தத்துவவாதி மாதிரி என்னவோ நிறைய வாழ்க்கையைப் பார்த்துவிட்ட மாதிரி பேசிக் கொண்டிருப்பாள். ஈஸ்வரி ஒருநாள் கேட்டாள், ‘பாலகுமாரன் படிச்சிருக்கயா?’

இவள் அதுவரைக்கும் கோகுலம், பூந்தளிர், அப்புறம் இரும்புக்கை மாயாவி மாயாஜாலக் கதைகள் இதெல்லாம் தாண்டினதில்லை. சுபா கதையை வாரமலரில் படித்ததைப் பார்த்து ஒருதடவை அம்மா பயங்கரமாகத் திட்டினார். ‘ இதையெல்லாம் படிப்பது இவ்ளோ அசிங்கமெனில், தப்பு எனில் எப்படி இவ்ளோ பப்ளிக்கா இதை புக்குல போட்றாங்க?’ என்று யோசித்துவிட்டு இவள் மறந்து விட்டாள்.

‘ இங்க ஸ்கூல்ல வச்சு வேணாம். டீச்சர் எதாவது சொல்லுவாங்க. நீ லீவ் நாள்ல வீட்டுக்கு வா’, என்று ஈஸ்வரி முகவரி கொடுத்தாள். எப்படி வரவேண்டுமென்று வழியும் சொன்னாள்.

இவள் சனிக்கிழமை மதியத்தைத் தேர்ந்தெடுத்தாள். இதோ அவள் வீட்டு எண்ணை அடைந்தாயிற்று. அவள் வீட்டுக்கெதிரே சைக்கிளை நிறுத்திப் பூட்டினாள். தெரு மொத்தமும் மதியத் தூக்கத்திலிருந்தது. திடீரென இவள் தனக்கு மிக அருகே கொலைவெறியோடு நின்று கொண்டிருந்த நாயை அப்பொழுதுதான் கவனித்தாள். பயத்தில் வேர்த்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. அனிச்சை செயலாய் அசுர பலத்தில்
அப்படியே தப தபவென ஓட ஆரம்பித்தாள். நாலு தெரு, பத்து தெரு…… அந்த நாய்க்கு இவள்மேல் எத்தனை ஜென்மப் பகையோ விடாமல் துரத்தியது. கடைசியாக ஒரு முட்டுச் சந்து. இவள் என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்தாள். அப்போதும் விடாமல் வாசலில் நின்று நாய் குரைத்துக் கொண்டிருந்தது.

Freepik

அந்த வீட்டில் மதியச் சாப்பாடு இவள் அதிரடி வருகையில் ஸ்தம்பித்தது. அந்த வீட்டு அங்கிள் கதையைப் பூரா கேட்டு விட்டு, இவளைத் தன் வண்டியிலேயே கொண்டுபோய் ஈஸ்வரி வீட்டில் விட்டார். சைக்கிளில் வந்து, நாயை ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்து, யாரோ புண்ணியத்தில் டூ வீலரில் ஈஸ்வரி வீட்டுக்கு இவள் வந்திறங்கிய கதை பள்ளி முழுவதும் நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலம்.


‘இந்தாம்மா பொண்ணு’ , போஸ்ட் மாஸ்டர் அழைத்ததும் உள்ளே வந்தாள்.

‘நீ ஸ்கூல் போலையா இன்னிக்கு?’

‘இல்ல சார். ஈஸ்வரியோட பாட்டிய இன்னிக்கு அடக்கம் பண்றாங்க. அதுக்கு எங்க க்ளாஸ்ல எல்லாரும் போறோம். அதான் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் போயிடுவாங்க. நானும் போகணும் சார்.’

‘சரி நீ வேணா கௌம்பிடு. நா லெட்டர எடுத்து வைக்கிறேன்.’

அவள் அவரை நம்பாமல் பார்த்தாள்.

‘இல்லமா. இன்னொரு போஸ்ட்மேன்தான் அந்த ஏரியா. அவர் வந்ததும் எடுத்து வைக்கச் சொல்றேன். சரியா?’

அவள் நம்பமுடியாமலும் நம்பியும் அவரையே பார்த்தபடி சென்றாள். அவர் மறுபடியும் தனது அலுவல்களில் மூழ்கினார்.


கொரியர் சர்வீஸ் அப்போதுதான் கால் பதித்திருந்த காலம். ப்ரொஃபஷனல் கொரியர் அப்புறம் டிடிடிசி. இவைகளுக்குப் போட்டியாக அல்லது இவற்றோடு தாக்குப் பிடிக்க கவர்மெண்ட்டும் ‘ஸ்பீடு போஸ்ட்டை’ அறிமுகப்படுத்தியது. தனியே அதற்கென்று ஆட்களைச் சேர்க்காமல், இருப்பவர்களையே வைத்து சமாளிக்கப் பார்த்தது. அதனால் அவரைப் போன்ற நன்றாக வேலை செய்பவர்களுக்கு இன்னும் வேலை அதிகரித்தது.

அவர் எல்லா வேலையும் முடித்து நிமிர்ந்த போது மதியம் சாப்பாட்டு வேளை வந்திருந்தது.

ரொம்பவும் பசித்தது. காலையில் சாப்பிட்டோமா என்று யோசித்தார். சாப்பிட்டிருந்தார். வேலை காரணமாக மிகவும் பசித்தது. அதுவுமில்லாமல் காலங்காத்தால அந்தப் பொண்ணோட பேசிப் பேசியே அவர் மிகவும் களைத்திருந்தார். அந்தப் பொண்ணு என்ன கண்ணுக்குள்ள தண்ணி டாங்க் வச்சிருக்கற மாதிரி என்னா ஒரு அழுகை. அப்பா!

ஹையோ! கையை உதறிக் கொண்டார். அந்தப் பொண்ணுக்கு லெட்டரை எடுத்து வைக்கிறோம்னு சொன்னமே! வேலையில் சுத்தமாக மறந்து போய்விட்டார்.

கடவுளே! தலையைப் பிடித்துக் கொண்டார்.

ரத்தினமும் இன்னொரு போஸ்ட் மேன் சுப்புவும் சிரித்தபடியே வந்தனர்.

ரத்தினம் கேட்டார், ‘என்ன சார் தலையை வலிக்குதா?’

‘இல்லப்பா. உனக்குத்தான் தெரியுமே. காலைல வந்துச்சே அந்தப் பொண்ணு. லெட்டரை எடுத்து வைக்கிறேன். போ – ன்னு அனுப்பி வச்சுட்டேன். வேலைல சுத்தமா மறந்துட்டேன்பா. பாவம்!’, நிஜமாகவே கவலையோடு சொன்னார்.

ரத்தினம் சக போஸ்ட்மேனுக்கு காலையில் நடந்ததை விளக்கியவாறே இவரிடம்,
‘அட விடுங்க சார்! அந்தப் பொண்ணு சொல்ற கதையெல்லாம் நம்பற மாதிரியா இருக்குது. டெய்லி ஸ்கூல்ல பாத்துக்குவாங்களாம். வாரம் ஒருதடவை லெட்டர் போட்டுக்குவாங்களாம். என்ன லவ்வர்ஸா. லெட்டர் போட்டு லவ்வ சொல்றதுக்கு? இப்புடி பதறித் துடிச்சு இந்த லெட்டர வாங்கப் பாக்குதுன்னா, இது வேற ஏதோ. எவனாவது பசங்களுக்கு அசிங்கமா எதுனாச்சும் எழுதிருக்கும். இப்பதான் புள்ளைங்க எப்டி
யெல்லாம் இருக்குதுங்க. எட்டாவது படிக்கும் போது தாவணி போடணும்னு ஸ்கூல் ரூல்ஸ். இதுங்க சட்டை மேல தாவணிய சுத்திட்டு வந்துருதுங்க. மத்தியானத்துக்கு மேல வேற கலர் பாவாடைய மாட்டிகிட்டு, பசங்களோட சுத்துதுங்க.’

‘இல்லப்பா. அவ்ளோ தூரம் சொல்லுச்சு. அழுதுகிட்டே வேற இருந்துச்சு. அநியாயமா இப்படி மறந்துட்டேனே. டூ அட்ரஸ் கூட என்னவோ ஈஸ்வரின்னுட்டு பொண்ணு பேர்தாம்பா சொல்லுச்சு.’

சுப்புவும் ரத்தினத்தோடு சேர்ந்து கொண்டார்.
‘சார் இதுங்க எல்லாம் சரியான தில்லாலங்கடிங்க சார். நேரா பையனுக்கா லெட்டர் போட முடியும். நாம என்ன அமெரிக்காவுலயா இருக்கோம். தங்கச்சிய கரெக்ட் பண்ணி, அண்ணனுக்கு அனுப்புவாளுக சார். வுடுங்க சார். தலைவலி புடிக்காம போய் சாப்பிடுங்க சார்.’

அவர் கையைக் கழுவிவிட்டு சாப்பிட அமர்ந்தார்.