உழவர் சந்தையில் கத்தரிக்காய் வாங்கிக் கொண்டிருந்த செண்பகத்தின் தோளைத் தட்டியது ஒரு கரம். திரும்பிப் பார்த்தால் ஐம்பது வயதில் நின்று கொண்டிருந்த பெண்மணியின் தலையில் சரி பாதிக்கு மேல் வெள்ளை. உயர் ரக மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். நீலவண்ண சுங்கிடிச் சேலை அணிந்திருந்தவரின் கைகளில் பெரிய கட்டைப்பை. புடலைங்காயும், அகத்திக் கீரையும் பைக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. வேக வேகமாய் மனதைத் தோண்டி பார்த்தும், செண்பகத்துக்கு அவர் யார் எனத் தெரியவில்லை. அசட்டுச் சிரிப்பை உதிர்த்தபடி, யார் எனக் கேட்டே விட்டாள்.

“ உங்க கிட்ட ட்யூசன் படிச்ச சுவாதியோட அம்மா நான். “

பதினைந்து வருடங்களுக்கு முன் இதே பாரதி நகர் பகுதியில் அம்மாவின் வீட்டில் மாலை வேளையில் ட்யூசன் எடுத்துக் கொண்டிருந்தாள் செண்பகம். எப்படியும் அந்த நான்கைந்து வருடங்களில் நூறு குழந்தைகளாவது வந்து படித்திருப்பர். அதில் சுவாதியும் ஒருத்தி. நன்கு படிக்கக் கூடியவள் என்பதால் அந்த பெயரும், முகமும் மனத்தில் அச்சுப்பிசகாமல் இருந்தது.

சிவப்பாய், தலையில் இரட்டைக் குதிரை வால் ஆட, பொதுக்கு பொதுக்கு கன்னங்களுடன் இருக்கும் சுவாதியின் ஓட்டைப் பல் சிரிப்பு நினைவில் வெளிச்சமாய் பளீரிட்டது.

“ ஆமாமா… ரெண்டு வருஷம் படிச்சால. எப்படி இருக்கீங்க? சுவாதி என்ன செய்றா?”

“ அதான, அவளை எப்படி மறக்க முடியும் உங்களால? டாக்டருக்கு படிச்சு முடிச்சிட்டு வீட்டிலேயே முன்னால கிளீனிக் வச்சு இருக்காப்பா. சொந்தமா வீடு வாங்கி இப்போ புதூர்ல இருக்கோம். உங்களைப் பார்த்தேன்னு சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா. நீங்க அவசியம் ஒரு நாள் வாங்கப்பா.. “

ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினார். அவரின் முகத்தில் பெருமிதமும் மகிழ்ச்சியும் நிரம்பி இருந்தன. ஐம்பதுகளில் தன்னம்பிக்கையும் ஆரோக்கியமும் நிறைந்தவரைக் காண, தன் நிலைக் குறித்து இலேசாய் வெட்கம் வந்தது.

செண்பகத்துக்கு இருப்பு கொள்ளவில்லை. தன்னிடம் படித்தவள் மருத்துவராக இருக்கிறாள் என்கிற செய்தி சொல்ல முடியாத ஆனந்தத்தைக் கொடுத்தது. அதுவும் அவளது அம்மா தன்னை மறக்காமல் இருப்பதோடு, அவர்களின் மருத்துவமனைக்கு அழைப்பது பெரிய கௌரவம். முகமெல்லாம் சிரிப்போடு அவசியம் வருவதாகச் சொன்னாள். விடை பெற்று வண்டியில் வீட்டுக்குத் திரும்புகையில் மனசெல்லாம் இறகாக மிதந்தது.

சமீபத்தில் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறாள் செண்பகம். நாற்பதைத் தொடும் போது இப்படி தினமும் மாத்திரை சாப்பிடும் வாழ்வா என உக்கிப் போவாள். இந்த இரண்டு மாத காலமாக அரை உப்புப் போட்டு சமைத்து வாய்க்கு விளங்காததை தின்றதால், மனம் விரக்தி நிலையில் நட்டமாய் நின்றது. கணவரின் ஆறுதல் வேலை செய்யவே இல்லை. ஏன் அம்மா சோகமாய் இருக்கிறாள் என்பதை பார்க்க நேரமில்லாமல் மொபைலிலும், டேபிலும் அமிழ்ந்து கிடந்தன செண்பகம் பெற்ற பிள்ளைகள்.

pic: The Hindu

சத்துள்ள காய்கறிகளை வாங்கி சமைக்க வேண்டும் என தோன்றினால் உழவர் சந்தைக்கு வந்துவிடுவாள். தேடும் அத்தனைக் காய்கறிகளும் ஓரிடத்தில் குவிந்துக் கிடக்கும். விலை சற்று முன் பின் இருந்தாலும், சகலமும் கிடைப்பதில் அவளுக்கு திருப்தி. இந்த காய் இரத்தக் கொதிப்புக்கு நல்லதா, இந்த பயறு நல்லதா என்றெல்லாம் விசாரித்துக் கேட்டு வாங்கிக் கொண்டிருந்தவளின் சோகம் சில நிமிடங்களுக்கு முன் காணாமல் போய் விட்டது. ஒரே ஒரு செய்தி, ஒரு தகவல்… முழு நாளும் பரவசத்துடன் இருப்பதற்கான ஆற்றலை சமயங்களில் வழங்கி விடுகிறது.

வீட்டிற்கு வந்தவுடன் கணவனைத் தொடர்பு கொண்டு விஷயத்தை உடனடியாக சொன்னாள். உன்னிடம் ஒரு காலத்தில் படித்தவள் என்றாலும், எப்படி மருத்துவர் ஆகி இருக்க முடியும்? இது மெடிக்கல் மிராக்கில் என ஓட்டித் தள்ளியவனிடம் செல்லமாய் சிணுங்கினாள். அவன் வம்பு செய்து இப்படி எதையாவது சொல்வான் எனத் தெரியும். அவள் அதை ரசிப்பாள். அவளுக்குப் பிடிக்கும் என்பதாலே இவனும் கூட கிண்டல் செய்து பேசுவான்.

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.

நன்றாகவே படிக்கக் கூடிய சுவாதி, நிறைய சேட்டைகளும் செய்யக் கூடியவள் தான். அதே மாதிரி பிடிவாதமும் நிறைய இருக்கும். ஒவ்வொன்றாய் நினைவுக்கு கொண்டு வந்து மீட்டிக் கொண்டிருந்தாள்.

கடந்த வருடம் படித்த பள்ளி, கல்லூரி, ஆசிரியர்களையே முற்றிலும் மறந்து விடும் உலகமாக மாறிக் கொண்டிருக்கிறது. அதற்கடுத்த எதேச்சையான சந்திப்புகளில் தெரிந்தது போல கூட முகம் காட்டிக் கொள்வதில்லை. பலன்களை கணக்குப் போட்டு, வாயிலிருந்து கிளம்பும் முத்துகளை உதிர்க்கும் கூட்டம் பெருகி விட்டது.

செண்பகம் கற்றுக் கொடுத்தது வீட்டில் இரண்டு மணி நேர சிறப்புப் பயிற்சி வகுப்புகள் மட்டுமே. கல்லூரியில் படித்துக் கொண்டு எடுத்த அந்த வகுப்புகளின் மூலம் கிடைத்த பணம், அவளுடைய பொழுது போக்கு செலவிற்கு உதவின. திருமணமாகும் வரை ட்யூசன் எடுத்துக் கொண்டு தான் இருந்தாள். ஐந்தாம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அவளின் மாணவர்கள். கற்பிப்பது விருப்பமாக இருப்பதால் எளிதாய் அதை செய்தாள். அதில் ஒருத்தி மருத்துவராய் பணியில் இருப்பது பெரும் உவகை. ஆனால் அதையும் விட அவளது அம்மா செண்பகத்தை நினைவில் வைத்துப் பேசி, வீட்டுக்கு அழைப்பதை என்ன சொல்வது. நன்றி வேறு சொன்னதும் நினைவில் வந்தது. இப்படி ஆத்மாக்களும் இருக்கின்றன.

என்று போய் சந்திக்கலாம் என யோசித்தால், உடனே போக வேண்டாம் என மனம் சொன்னது. இப்போது அனுபவிக்கும் இந்த புது மகிழ்ச்சியைத் திகட்ட திகட்ட சில நாட்கள் அனுபவிக்கலாம். உறவுகள், நட்புகள் என ஒருவர் விடாமல் பகிரலாம். மெதுவாக அடுத்த வாரத்தில் ஒரு நாள் நேரில் சென்று அதிர்ச்சி தரலாம் என முடிவு செய்தாள்.

மதிய உணவு எடுத்துக் கொண்ட பின் வாட்ஸப் குழுவில் உள்ள உறவு, நட்புகளுக்கு மகிழ்ச்சியாய் விஷயத்தைப் பகிர்ந்தாள். விரைவில் தன் மாணவியுடன் எடுத்தப் புகைப்படமும் வரும் என சொன்னாள். இவள் புதூர் என சொல்லி இருந்ததைப் பார்த்து அந்தப் பகுதியை சேர்ந்த அத்தை மகள் மல்லிகா, தனக்கு அந்த மருத்துவரைத் தெரியும் என்றும், சமீபமாய் அவரிடம் தான் உடலுக்குத் தொந்தரவு ஏற்படும் சமயங்களில் செல்வதாயும் சொன்னாள். இது போதும், வேறென்ன வேண்டும் என்கிற மனநிலை வாய்ப்பது அரிது. அப்படியே செல்பேசியை அணைத்து விட்டு சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள் செண்பகம்.

பள்ளிவிட்டு வீடு திரும்பிய பிள்ளைகள் விளையாடிவிட்டு வீட்டுப் பாடங்கள் செய்ய ஆரம்பித்தனர். இரவு ஒன்பது மணிக்கு வந்த கணவனுக்கு இரவு உணவைத் தயாரித்து வைத்துவிட்டு தூங்கப் போனாள். மாத்திரை எடுத்துக் கொள்ள நினைவு படுத்தினான் அவளது கணவன்.

“ உன்னோட ஸ்டூடன்ட் கிட்ட பேசினியா? “

“ இல்ல, நாம நேர்ல அடுத்த வாரம் போவோம் “

மாத்திரை சாப்பிட்டு விட்டு செல்பேசியை நோண்ட ஆரம்பித்தாள்.

ஞாயிற்றுக் கிழமை. சுவாதி அம்மாவை சந்தித்து பத்து நாட்கள் இருக்கும். சுவாதியும் விடுப்பில் இருப்பதால் பேச நிறைய நேரம் கிடைக்கும். என்ன வாங்குவது என தெரியாமல் ஒரு கிலோ ஆப்பிளை வாங்கிக் கொண்டு கணவனுடன் கிளம்பினாள் செண்பகம். பிள்ளைகளிடம் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாகவும், சண்டை போடாமல் விளையாடும்படி சொல்லி உள்ளே தாழ்ப்பாள் போடச் சொல்லி கிளம்பினர்.

ராயல் என்ஃபீல்ட் வண்டியின் பின்னால் செண்பகம் அமர, வண்டி புதூரை நோக்கி சென்றது. வழியெங்கும் தூசி. எப்போதுமே சாலை வேலை நடந்து கொண்டிருக்கும் பகுதி அது. சாலை அமைக்கும் பணி முடிந்ததும், ஒரு சின்ன மழை போதும், சொல்லாமல் கொள்ளாமல் அங்கங்கே பெயர்ந்து, பள்ளம் விழுந்து விடும். சாதாரணமாய் தூசி பறக்கும். குளித்து முடித்து சுத்தமாய் போக வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால், முழு உடலுக்கும் கவசத்தை அணிந்தே செல்ல வேண்டும், அல்லது நான்கு சக்கர வாகனத்தில் போக வேண்டும்.

Photo by Artur Tumasjan on Unsplash

புதூரில் மல்லிகா சொன்னதை வைத்து இன்னும் எளிதாய் வீட்டைக் கண்டு பிடித்தாள் செண்பகம். எஸ்எஸ் கிளினிக் என்கிற பலகைக்குக் கீழே இருந்த அறை ஐந்து படிக்கட்டுகளைத் தாண்டி இருந்தது. அடைக்கப்பட்டிருந்த இரும்பு ஷட்டரின் மேலே அழகாய் தெரிந்தது பூங்கொத்து ஓவியம். அதை ஒட்டி தனியாக இருந்தது பெரிய கதவை உடைய வீடு. வெளியே கார் நின்று கொண்டு இருந்தது. எப்படி அழைப்பது என செண்பகத்துக்கு தெரியவில்லை. உள்ளே நாய் இருக்குமோ என்கிற அச்சம் வேறு. பக்கத்து வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தவர் இன்று கிளினிக் விடுமுறை என்றார். விருந்தினர் என சொல்லவும் சுவரின் உள் புறமாய் இருந்த அழைப்பு மணியை சுட்டிக் காட்டினார். அதைத் தடவிக் கண்டு பிடித்து அழுத்தினாள் செண்பகம்.

இருபது வயதுகளில் இருந்த ஒரு பெண் கதவைத் திறந்தார். சுவாதியைப் பார்க்க வேண்டும் என்றதும் உள்ளே போனார். இரண்டு நிமிடங்கள் கழித்து வந்த சுவாதியின் அம்மா வெளிக் கதவைத் திறந்து உள்ளே அழைத்து சென்றார். அவரது முகத்தில் பெரும் அயர்ச்சி. சில நொடிகளில் செண்பகத்தின் முகத்தில் படிந்திருந்த பார்வையைத் தவிர்த்து, தரையைப் பார்த்தபடி உள்ளே அழைத்துச் சென்றார்.

“ வாங்கப்பா… டீ சாப்பிடுவீங்க இல்லையா?, கமலா ரெண்டு டீ போடு “

தொண்டைக் கட்டிப் போன குரலில் பேசியவரை ஆச்சரியத்தோடு பார்த்தாள் செண்பகம். கையில் கொண்டு வந்திருந்த பழங்களைக் கொடுத்து விட்டு சோபாவில் அமர்ந்தனர் இருவரும். உட்கார்ந்ததும் அரையடிக்கு உள்ளே போனதும், செண்பகத்துக்கு சிரிப்பு வந்தது. குதித்து உட்கார வந்த ஆசையை பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டாள். எல்லா சாளரங்களும் அடைத்திருந்தன. அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க போகிறது. உள்ளே ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி புழுக்கத்தைத் தணிக்கவில்லை.

உழவர் சந்தையில் பார்த்ததை விட சுவாதி அம்மாவின் முகம் உப்பி இருந்தது. கண் இமைகள் வீங்கி இருந்தன. பழைய நைட்டி ஒன்றை அணிந்திருந்தார். நெற்றியில் ஒட்டுப் பொட்டு வைத்து இருந்த தடம் மட்டும் இருந்தது.

“ ஏதோ இவளே டாக்டராயிட்ட மாதிரி ஓவர் குஷில திரியறாங்க “

சொன்ன கணவரை முறைத்தபடி வலது முழங்கையால் இலேசாய் ஒரு இடி இடித்தாள்.

“ சுவாதி எங்கங்க ? “

“ அவ மாப்பிள்ளை வீட்டில இருக்காப்பா “

“ என்னது கல்யாணம் ஆயிடுச்சா, சொல்லவே இல்லை? “

“ இன்னைக்குத் தான் ஆச்சு. அவ கிளினிக் காட்டுறேன் வாங்க “

எழுந்து வசிப்பறையிலிருந்து பிரிந்த பாதையில் இருந்தக் கதவைத் திறந்தார். வீட்டுக்குள்ளேயே வழி இருந்தது. இருபதுக்கு பத்து என்ற அளவில் அளவாய் அழகாய் இருந்தது அறை. சுவரில் அவள் மருத்துவப் பட்டம் பெற்ற சான்றிதழ், பரிசு பெற்ற புகைப்படங்களுடன், அன்னைத் தெரசா படமும் தொங்கிக் கொண்டிருந்தன. மேஜையின் பின்புறம் உள்ள உள்ள நாற்காலிகளில் அமரச் சொல்லி குளிர் சாதனத்தை இயக்கினார். எதிரில் சுவாதி அமரும் சுழல் நாற்காலியில் அவர் அமர்ந்து கொண்டார்.

“ ரொம்ப சந்தோஷங்க, எங்கிட்ட படிச்சப் பொண்ணு டாக்டர்ன்றதில “

“ உங்க கிட்ட ட்யூசன் விடறப்போ நான் தனியா கவனிச்சுக்க வேண்டியதே இல்லப்பா, அவ்ளோ நல்லா சொல்லிக் கொடுப்பீங்க. ரெண்டு வருஷம் தான் படிச்சாலும் அப்பப்போ எதுக்காவது உங்களை நாங்க வீட்டில பேசிட்டே இருப்போம். மார்கெட்ல பார்த்ததும் வீட்டுக்கு வந்து சொன்னேன். சுவாதிக்கு ரொம்ப சந்தோசம். அவளுமே உங்களைப் பார்க்கணும்னு சொன்னா. வருவீங்கன்னு சொல்லிட்டு இருந்தேன் “

கரகரத்தக் குரலில் சிரமப்பட்டு சொல்லிக் கொண்டிருந்தார். இலேசாக மூச்சு வாங்கியது.

“ நல்லா படிப்பா, என்ன பிடிவாதம் தான் ரொம்ப ஜாஸ்தி “

“ ஆமா, நீங்க சொல்றது ரொம்ப சரி… ரொம்பப் பிடிவாதம், முரண்டு “

இதை சொன்ன அழுத்தம் திருத்தமான அவரின் குரலில் கடுமை கலந்து இருந்தது. வினாடிகளில் கண்ணில் தேங்க ஆரம்பித்த நீரை தோளில் கிடந்த துண்டால் ஒற்றியபடி முகத்தையும் சேர்த்து துடைத்தார். பல நிமிடங்கள் கடிகார முள் ஓடும் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

“ சுவாதி அப்பா எங்கங்க? “

“ அவர் கல்ஃப் ல வேலை செய்றார், போன மாசம் தான் வந்திட்டுப் போனார். இனி அடுத்த வருஷம் தான் “

“ சரி, அப்போ நாங்க கிளம்பறோம் “

வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்த சுவாதியின் அம்மா முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை.

படைப்பாளர்:

தீபா நாகராணி

மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் தீபா. அவரது சிறுகதைகள் அதிக கவனம் பெற்றவை.