கோபமாக உள்ளே வந்த சிவாவுக்கு ஆறுதல் சொல்ல முயற்சி செய்தார் சுகுமாரன். ஆனால் அவன் கோபம் தீர்ந்த பாடில்லை.
“விடுங்கப்பா, பெரிய ஆபிசர்ங்கன்னா…”
என்று தொடங்கியவர் மறுமுனையில் நின்று ஸ்டேஷன் மாஸ்டர் யாரிடமோ போனில் பேசியதைப் பார்த்துச் சற்றுக் குரலைத் தாழ்த்தினார். ஆனால் அவர் அதை உணர்ந்தவராக உள்ளிருந்த அறைக்குள் சென்றுவிட்டார்.
“அப்புறம் என்ன சார்? அவர் இஷ்டத்துக்குப் பேசுவாரு. அதெல்லாம் கேட்டுக்கிட்டு நிக்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா?”
“அவரே கிளம்பிப் போயிட்டாரு. நீங்க ஏன் இன்னும் அவரு சொன்னத நினைச்சுக்கிட்டு. விடுங்கப்பா. “
“நான் சொன்ன வார்த்தைய நம்பி இவ்வளவு நேரமா பாசஞ்சர்ஸ் கிட்ட திட்டு வாங்கின அந்த யங்ஸ்ட்ர்சுக்கு எல்லாம் என்ன தலையெழுத்தா சார்? ஊர்ல உள்ளவன் வாயிலல்லாம் போய் உழணும்னு? நம்மளும் போய் பேச மாட்டோம். ஊர்ல உள்ளவனையும் குறை சொல்லுவோம். என்ன சார் நியாயம் இது? நல்லா இருக்குது சார் இவங்க பண்ணுறது” என்று பொரிந்து தள்ளினான். உள்ளிருந்த இஸ்மாயிலின் காதில் இவை அனைத்தும் விழுந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் அவர் பதில் எதுவும் சொல்லாமல் உள்ளிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தார்.
“ஏதாவது சொல்லணும்ல சார். பாசஞ்சர்சும் பாவம். அவங்களும் புள்ள குட்டி வயசானவங்கன்னு சோறு தண்ணி இல்லாம தவிச்சிகிட்டு இருக்காங்க. ஆனா, அதைவிட பெரிய தவிப்பு, தன்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம நடுராத்திரில நடுவழியில நிக்கிறது. அவங்களுக்கு எதுவும் சொல்லணும்னா நமக்கு அதுக்கு ஏதாவது தெரியணுமே!”
“இதுல கொஞ்சம் பேர அனுப்பிட்டு இப்ப மீதி பேர இங்கயே இருக்கச் சொல்லுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம். அவங்கள கூட்டிட்டுப் போறாங்களா, இல்லயா?”
”எதுவும் அவங்களுக்கும் தெரியாது!”
”நம்மளுக்கும் தெரியாது!”
”அப்புறம் எப்படி சார் அவங்கள நூறாவது முறையா மறுபடியும் சமாளிச்சு அனுப்புறது? அவங்க எக்கேடோ கெட்டுப் போட்டும். உசுர குடுத்து ஓட இனியும் எனக்குத் தெம்பில்ல . முடியல சார் என்னால” என்று மனதின் குமுறலைக் கொட்டித் தீர்த்தவனை வற்புறுத்தி அருகிலிருந்த பெஞ்சில் அமர வைத்தார். அவர் பெண் நிச்சயத்திலிருந்து பாதியில் வந்தார் என்பது சரிதான்.
”அதற்காகக் கத்திவிட்டு செல்வாரா? அவருக்கு மட்டும்தான் வீடு, குடும்பம் இருக்குதா? ஏன் மத்தவங்களுக்கெல்லாம் இல்லயாமா?” என்று பொறுமியவன் அப்போதுதான் நினைவுக்கு வந்தவனாகத் தலையில் கையை வைத்தபடி,
“ஐயோ ” என்று சற்றுக் கலவரமான குரலில் சொன்னான்.
“வைஃப் வீட்ல தனியா இருக்காங்க. நான் வரேன்னு சொல்லி அஞ்சு மணிநேரத்துக்கு மேல ஆகுது. இங்க உள்ள பிரச்னைல அவள மறந்துட்டேனே!” என்று சற்று வருத்தம் தொனித்த குரலில் எதிரில் இருந்த சுவரில் மாட்டப்பட்ட கடிகாரத்தைப் பார்த்தபடி சொன்னான்.
“நினச்சதும் கிளம்புறதுக்கு நம்ம என்ன பெரிய ஆபிசரா” என்று முணுமுணுத்தபடி வெளியே எடுத்த செல்போனில் சிக்னல் இல்லை. வெளியே போய்ப் பேசவும் மனமில்லாமல் அமர்ந்திருந்தான். மனம் கொதித்தது.
தன்னை நம்பி தன் பெற்றோர் சொந்தபந்தம் எல்லாம் விட்டுவிட்டு வந்தவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவன்தானே.
முன்பின் தெரியாத ஊருக்கு வந்து ஒரு வாரம்கூட முழுமையாக ஆகாத நிலையில் எந்தத் தகவலும் சொல்லாமல் இப்படித் தனியே இருக்க வைத்துவிட்டு வந்துவிட்டானே என்று குற்ற உணர்ச்சியில் மனம் சுட்டது.
என்ன நினைத்திருப்பாள் அவள்? அவனுக்கு என்ன ஆனதோ என்று எப்படி எல்லாம் பயந்தாளோ என்று யோசித்து யோசித்து மனம் கலங்கினான்.
தன்னை இங்கு இருக்கச் சொல்லிவிட்டு தன் குடும்பத்தினர் அமர்ந்திருந்த இடத்துக்குப் போய்ப் பேசிக்கொண்டு இருந்த சுகுமாரனைப் பார்த்து ஒரு நொடி பொறாமைகூடத் தலை தூக்கியது.
சற்று நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்த சுகுமாரன் ஓர் ஆறுதல் புன்னகையுடன் அவனருகில் அமர்ந்து கொண்டார்.
“நீங்க போன் எடுக்கலன்னதும் உங்க மிசஸ் நேரத்தோடயே நம்ம பாப்பாவுக்கு கால் பண்ணினாங்க போல, எனக்கு எதுவும் தெரியுமான்னு கேக்குறதுக்கு, அவ நிலமைய சொல்லியிருக்கா. இங்க உள்ள பிரச்னை சரியானதும் டைம் கிடைக்கும் போது போன் பண்ணி பேசச் சொன்னாங்க போல. அவங்கள நினைச்சு கவலைப் பட வேண்டாம் சமாளிச்சுக்குவேன்னு சொல்லச் சொன்னாங்களாம்” என்றதைக் கேட்ட போது ஆறுதலடைவதற்குப் பதிலாக மேலும் மனம் குற்ற உணர்ச்சியில் குறுகியது. ஒருவேளை கோபப்பட்டிருந்தால்கூட மனம் ஆறியிருக்கும், ஆனால் அவள் புரிந்து கொண்டாள் என்ற போதுதான் அதிகமாக வலித்தது.
வெளியே அதுவரை ஆரவாரம் செய்த கூட்டம் நேரம் ஆக ஆக காத்திருந்து ஏமாந்து, அழைத்துச் செல்ல வண்டிகள் திரும்பி வரவில்லை என்பதை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து சென்றது.
பலர் பெட்டிகளிலும் சிலர் ஆங்காங்கே இருந்த சிமெண்ட் பெஞ்சுகளிலும் அமர்ந்தவாறும் படுத்து தூங்கியும் தூங்காமலும் அமர்ந்திருந்தார்கள்.
வண்டி இந்நேரம் தஞ்சாவூர் கடந்திருக்க வேண்டும். இதற்கிடையில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள் வராமலும் அழைத்து தொடர்பு கிடைக்காமலும் எத்தனை பேரோ கலக்கமுற்றிருப்பார்களே என்றெல்லாம் நினைத்தவனுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் என்று பரபரத்தது.
உறக்கம் தீண்ட மறுத்தது. அவன் போலவே உறக்கம் இல்லாமல் யார்யாருக்கோ தொடர்பு கொண்டு பேசிக் கொண்டு இருக்கும் ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்து உண்மையில் இப்போதுதான் முதல் முறையாகப் பாவமாக இருந்தது.
உண்மையில் அவர் போல் பிறர் நலனில் அக்கறை கொண்டவரை அவன் பார்த்ததில்லை. அவர் அமைதி காக்கிறார் என்றால் என்ன பிரச்னை என்று அவர் சொல்ல முடிந்த சூழலில் இருந்தால் சொல்லியிருக்க மாட்டாரா? தன் புத்தியை உணர்ச்சிகள் முந்திக் கொண்டது. போனது போகட்டும்.
எழுந்து அவர் அறை நோக்கிச் சென்ற போது மணி அதிகாலை நான்கு . ‘கொஞ்சம் ஏதாவது டிரை பண்ணுங்க சார் ப்ளீஸ். பாசஞ்சர்ஸ்லாம் நம்பி நம்பி ஏமாறுறத பாக்க முடியல சார்’ என்றவர் குரல் தளுதளுத்தது. ஏதோ பேசிவிட்டு வைத்தவரின் உறக்கமின்றி சிவந்து சோர்ந்திருந்த கண்களைப் பார்த்தவனுக்கு மனம் கஷ்டமாக இருந்தது.
ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அனுமதி பெற்றுக் கொண்டு உள்ளே சென்று நீட்டினான்.
“வண்டி சரியாகி,எல்லாரும் வீட்டுக்கு போறதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார். செய்றேன்” என்று வரவழைத்துக் கொண்ட உற்சாகத்தில் கேட்டவனைப் பார்த்தவர் முகம் வெளியே இருந்த கரிய வானத்தைப் போல இருண்டது. அவர் சொன்னதைக் கேட்டு வெளியே விழுந்த இடி அவன் மனதில் இறங்கியது.
சற்று நேரத்தில் விடிந்துவிடும் என்கிற அவன் நம்பிக்கை பொய்க்காது. ஆனால் அந்த விடியல் அவர்களுக்கு எப்படியானதாக இருக்கும்?
அவனால் யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. கண்களை மூடிக்கொள்ள முயன்றான்.
அந்த நாள் நீண்டதாக இருக்கப் போகிறது.
எல்லோருக்கும்!
(தொடரும்)
படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.