“டேய்… கிறுக்குப்பயலே… பள்ளியோடத்துக்கு நேரமாயிட்டு இன்னும் அந்த கிளி கூண்டையே நோண்டிட்டு இருக்க?”

“வாய மூட்றி கெயவி… இந்தா போறேன்…”

தொட்டித்தண்ணிக்குள் தலையை முக்கி எடுத்தான் மூர்த்தி. தலையை சிலுப்பி தண்ணீரையெல்லாம் விசிறி அடித்தான். சீப்பை எடுத்து சீவினான். இரண்டு பற்கள் அடுத்தடுத்து போயிருந்த சீப்பால் முன்பக்க முடி அவ்வளவு ஒழுங்காக அமரவில்லை. மொத்தம் ஐந்து பட்டன்கள் இருக்க வெண்டிய சட்டையில் இரண்டே மிச்சம். தொப்புள் தெரிந்த சட்டை இடுக்கின் வழியே கால்சட்டையை சுருட்டிப்பிடித்திருந்தது அந்த கருப்புக்கயிறு.

எல்லா பிள்ளைகளையும் அவரவர் அப்பன் அல்லது ஆயி பெயரை அடையாளப்படுத்தியே அழைப்பான் மூர்த்தி.

“எலே ராமு மவனே மாட்டுக்கு தண்ணி வச்சிட்டு வந்தியா??? உங்கப்பன் ஊரை கூட்டுவான்டா…” 
“அதெல்லாம் வச்சிட்டேன் டா… நீ அமுக்கு…”
நேரே தலைமை ஆசிரியர் அலுவலகம் சென்றான்.

“சார்… வணக்கம். பீரோ சாவியைக் கொடுங்க. எல்லாத்தையும் எடுத்து வெளில வைக்கிறேன்”, என்று வாங்கினான்.
பள்ளியில் எந்த சாவி எதோடு சேரும், எந்த பதிவேடு எந்த தட்டில் இருக்கும் என்பதெல்லாம் மூர்த்திக்குத்தான் அத்துபடி.
‘எட்டாவதுக்கு மொதோ வகுப்பு எப்பவுமே கணக்கு தானா!!? அதை மாத்த மாட்டேன்றாய்ங்க.. காலைலயே மொதோ அந்தாளு மூஞ்சில முழிக்கனும்.. வஞ்சிட்டே இருப்பான்.. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன்.. சனியன் மண்டைல ஏற மாட்டுது…’
பீப்…பீப்…. பீப்… மூன்று முறை தொடந்து ஒலிக்கும் அந்த வாகன ஒலி கேட்டவுடனேயே போட்டதைப் போட்டபடியே ஓடுவான் மூர்த்தி.
“எப்டி ஓட்றான் பாரு பய… பொம்பள டீச்சர்னா பயலுகளுக்கு அம்புட்டு குஷி”, என்று சத்தமாக சிரித்தார் தலைமை ஆசிரியர்.

வண்டி நின்ற நொடியில் அருகில் மூர்த்தி மூச்சு வாங்கி நிற்பதைத்தான் தினமும் பார்ப்பாள் தேவி. 
“டேய்.. எத்தனை தடவை சொல்லியிருக்கேன் இப்படி கண்ணு முன்னு தெரியாம ஓடி வராதன்னு. அப்படி என்னடா அவசரம்? இந்த ஆறாப்பு புள்ளைக நிக்குது. அதுக வாங்கிக்க போவுது பைய…”

“அதெல்லாம் முடியாது. நான் யார்கிட்டையும் உங்க பையை தர மாட்டேன். நான் பள்ளியோடத்துக்கு வாரதே உங்களைப்பார்க்கத்தான்… நீங்க வந்து கூட்டியாரலன்னா நான் கல்லறுத்துட்டு இருந்துருப்பேன்.”

“வந்து என்னடா புண்ணியம்? ஒரு  அனா ஆவன்னா கூட எழுத மாட்ற… எல்லாரும் என்னையத்தான் பேசுறாங்க. நீ படிச்சாதானடா உனக்கும் பயனா இருக்கும்?”
“அதெல்லாம் எனக்கு வராது டீச்சர்.. நீங்க மெதுவா வாங்க.. அந்த கட்டை செவுரு வயித்துக்கு நேரா படும்.. தள்ளி நடங்க.. வயித்துல பாப்பா இருக்குல்ல…?”

ஏழு மாத வயிற்றுடன் கால்களை அகட்டி நடந்தாள் தேவி. கைகளில் கண்ணாடி வளையல்கள் அவள் தலைமுடி சரிசெய்யும் போதெல்லாம் குலுங்கி குலுங்கி சத்தம் பெருக்கியே திரிந்தன.

தேவி எந்த வகுப்பில் இருக்கிறாளோ, அந்த வகுப்புத்தான் மூர்த்திக்கும். அவன் பெயர் மட்டும் எட்டாம் வகுப்பில் இருந்தது. மற்ற ஆசிரியர்கள் எல்லோரும் மூர்த்தியை தேவியின் பி.ஏ என்றுதான் அழைப்பார்கள்.
தேவிக்கு மட்டுமே மூர்த்தியை நன்றாக தெரியும். பள்ளியிலும் வீட்டிலும் எல்லாரும் அழைப்பதுபோல் அவன் கிறுக்கன் இல்லை. அவன் நற்குணம் கொண்டவன். பொய் பேசமாட்டான். திருடமாட்டான். 

ஆனால் அவனிடம் குறையாக அனைவரும் குறிப்பிடுவது – ‘தெளிவாக பேச மாட்டான்’, ‘வாயில் எச்சில் வைத்துக்கொண்டே உதட்டோரம் உமிழ்குமிழ்களைக் கொண்டவாறே பேசுவான்’, ‘கிறுக்கன்’, ‘எழுத படிக்க தெரியாது’, ‘பெண் பிள்ளைகளை வாடி, போடி என்றுதான் அழைப்பான்’, ‘வீட்டுப்பக்கம் இருக்கும் பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் அருகருகே அமர்ந்து டிவி பார்க்க விடமாட்டான்’ ‘புறணி பேசுவான்’.

“நான் போன வாரம் நடத்துன ஒரு பாடத்துல கேள்வி கேட்கப்போறேன். வூட்ஸ் என்றால் என்ன?”

மூர்த்தி முதல் ஆளாய் பதில் சொன்னான். “காடு டீச்சர்.”
“டேய்.. உன் கிளாஸ்க்கு போடா.. இது ஆறாவதுடா.. நீ எட்டாவதுதான!??”
“நான் எந்த வகுப்போ… ஆனால் நீங்க இங்கதான இருக்கீங்க?” 
“என்னமோ பண்ணு… பத்தாவது எப்படி பாஸ் பண்ண போறியோ?”, என்று அலுத்துக்கொண்டாள் தேவி. இவன் தொல்லை இல்லாமல் இருந்தால் சரி என்று மற்ற ஆசிரியர்களும் இவனைத் தேடுவதே இல்லை.

பள்ளி ஆண்டுவிழா நெருங்கியது. மாறுவேடப்போட்டிக்கான அறிவிப்பு வந்தது. 
“நான் மனநிலை சரியில்லாதவன் போல் நடிக்கிறேன் டீச்சர்”, என்றான் மூர்த்தி. 
“நல்லா நடிப்பியாடா??”
“அதெல்லாம் வெளுத்து வாங்குவேன். இப்ப பாருங்க”, என்று ஐந்து நிமிட இடைவேளைக்குப்பின் சிறிய மரக்கிளையுடன் வந்தான். அந்த கிளையை சட்டையில் பின்பக்கமாக முதுகிற்குள் சொருகினான்..
கிளை அவன் தலைக்கு மேலே குடையாக நின்றது.

“நான் தான் மரம்.. நான் தான் காத்தா வருவேன்.. என்னைய வெட்டினா காட்டேரியா மாறுவேன்.. ஊ…. ஆ… ஊ.. ஆ…”
வகுப்பே சிரித்து. தேவியும் சேர்ந்துதான்.
 “டேய்… நல்லா இருக்குடா… நான் உன் பெயரை சேர்த்துட்றேன்”, என்று முடித்தாள் தேவி.
விழாவுக்கான முன்னேற்பாட்டில் மாறுவேடப்போட்டிக்கான ஒத்திகை நடந்தது. அதில் காந்தியும் பாரதியுமாக பிள்ளைகள் ஒரு கூட்டமாக ஒருவர் சொன்னதையே மற்றவரும் சொல்லி அயர்ச்சியூட்டிக்கொண்டு இருந்தார்கள். அதில் களைப்படைந்திருந்த தலைமை ஆசிரியர் கூட்டத்தில் மூர்த்தியைப் பார்த்தார்.
“இவன் என்ன.. இங்க??!!!”
“இவனும் போட்டியில் கலந்துருக்கான் சார்”, என்றாள் தேவி..
“எது… இவனா?? என்ன வேஷம் கட்டுறான்??”
“மனநிலை பாதிக்கப்பட்டவன் போல் நடிக்கிறான் சார்.”
“ஆகா… ஆகா…”, என்று விழுந்து விழுந்து சிரித்தார் தலைமை ஆசிரியர்.
“இவன் அதுக்கு தனியா நடிக்க என்ன இருக்குது? இவன் அப்படியே மேடை ஏறி நின்னாலே போதுமே?”, என்றார்.
கூடியிருந்த அத்தனை பேரும் அதைக்கேட்டுச் சிரித்தனர்.
தேவியும் மூர்த்தியும் சிரிக்கவில்லை.
இவனையெல்லாம் மேடை ஏத்தி பள்ளிக்கூட மானத்தை வாங்க போறீங்களா தேவி?”
(சற்று மூர்த்தியிடமிருந்து  தள்ளி…)

Photo by Rob Hobson on Unsplash

“சார்! நீங்க நினைக்குற மாதிரி இல்லை. அவன் நல்லா நடிக்குறான். அவனுக்கு எல்லாமே தெரியுது சார். எழுதவும் படிக்கவும் தான் வரல.
அவன் ஒரு டிஸ்லெக்சிக். அவனை குணப்படுத்தலாம். அவன் மெல்ல மாறிடுவான்… இப்பத்தான நம்மக்கிட்ட வந்துருக்கான்?”

“இவனையெல்லாம் இன்னும் ரெண்டு வருசத்துல பத்தாவதுல  வச்சி என்னா பண்றதுன்னு தலையை பிச்சிக்கிட்டு இருக்கேன். ஏதோ எடுபிடிக்குன்னு விட்டு வச்சிருக்கோம் அவ்ளோதான். எதாச்சும் படத்தை பார்த்துட்டு வந்து இந்த சீர்திருத்தம்லாம் செய்யாதீங்க தேவி. என் அனுபவத்துல சொல்றேன். இவனை மாதிரி ஆளுங்க காலை வாரி விட்ருவானுக.”
தேவிக்கு இது போன்ற அறிவுரைகள் மூர்த்தியால் மூட்டைக்கணக்கில் கிடைத்துக்கொண்டே இருந்தது.

அறையைவிட்டு வெளியேறினாள் தேவி. கண்களைக் கசக்கினாள். மூர்த்தி பின்னாடியே ஓடி வந்து, “டீச்சர் அழாதீங்க… என்னாலதான் உங்களுக்கு இந்த வம்பெல்லாம்? நான் இனி பள்ளியோடத்து பக்கமே வரல. போய்ட்றேன்”, என்றான்.
“இதைச் சொல்ல முடியுற உன்னால ரெண்டெழுத்து சேர்த்து படிக்க முடியாது. அப்டித்தான!? இவங்க முன்னடி நீ படிச்சாதான் எனக்கு பெருமை. எனக்காக வேண்டாம் உனக்காகவாச்சும் படி.”
“டீச்சர்.. எனக்காக இல்லேன்னாலும் உங்களுக்காகத்தான் படிக்க நினைக்கிறேன். இந்த பாழாப் போன மணடைல ஓரெழுத்து ஏற மாட்டுது.”

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் வயிற்றை தாங்கிப் பிடித்தவாறு நடந்து சென்றாள் தேவி.
அடுத்த நாள் முதல் தலைமை ஆசிரியர் அறை பக்கமே மூர்த்தி செல்வதில்லை. அவருக்கு வணக்கம் வைப்பதும் இல்லை.

“என்னது…! லைப்ரரி சாவியைக்காணோமா? எங்க போய்ருக்கும் ஒரு வாரமாச்சு அந்தப்பக்கம் போயி… நல்லா தேடுங்க சார்”, என்று அறிவியல் வாத்தியாரைக் கடிந்துகொண்டிருந்தார் தலைமை ஆசிரியர்.
“சார்… எங்க தேடியும் கிடைக்கல… அந்த மூர்த்தி பையன்னா சரியா வச்சிருப்பான். அவனை ஒரு வார்த்தை கேட்டு பார்க்கட்டுமா??”
“அவனை மூளை இல்லாதவன்னு சொல்றோம்… ஆனால் ஒரு பொருளை காணோம்னா அவனைத்தான் தேட்றோம்.. ஒரு ஆசிரியர் சொல்ற பதிலா இது?”
“இல்ல சார்… அது வந்து…”
“சரி… அவன்கிட்டயே கேட்டுத்தொலைங்க.”
“டேய் … மூர்த்தி உன்னைய எச்.எம் சார் ரூம்க்கு கூப்ட்றாங்க…”
எட்டாவதில் இருந்த மூர்த்தி எழுந்து நின்றான். அந்த வகுப்பு தேவியுடையதுதான். போ என்றாள் தேவி.

“வாடா டேய் மூர்த்தி.. லைப்ரரி சாவி எங்கடா?”, அறிவியல் வாத்தியார் கேட்டார்.
“என்னை கேட்டா? எனக்கு எப்டி தெரியும்?”
“டேய் சொல்டா… எங்க தேடியும் கிடைக்கல…”
“எப்படி கிடைக்காமப் போகும்…?”
“டேய்.. அதுல கூட சிவப்பு பெயிண்ட் வச்சிருப்போமே?’ 
“ஆமா…” 
“அதைத்தான் காணோம்…” 
“இங்க கொடுங்க…”, சாவிக்கொத்தை வாங்கி குலுக்கி குலுக்கிப் பார்த்தான்.
“இந்தாங்க இதுதான்”, என்றான்.
“என்னடா இதுல சிவப்பு பெயிண்ட் இல்லையே…!”
“பெயிண்ட் இல்லேன்னா அது இல்லன்னு ஆகாது சார்… பெயிண்ட் உரிச்சிக்கிட்டு போய்ட்டு…”

தலைமை ஆசிரியர் தலையை நிமிர்த்தி அறிவியல் வாத்தியாரைப் பார்த்தார். மூர்த்தி நகர்ந்ததும் தலையில் அடித்துக்கொண்டார்.
அன்று மாலை நான்கு மணியளவில் அனைவரும் மைதானத்தில் கூடி இருந்தனர். குடியரசு தினத்திற்கான தயாரிப்பில் மூழ்கி இருந்தனர். பள்ளி முடியும் நேரத்தையும் தாண்டிச்சென்றது தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தல்கள்.

வகுப்பறைகளை சுத்தம் செய்யச் சென்ற தூய்மைப்பணியாளர், “சார்… ஓடியாங்க ஓடியாங்க…”, என்று கூச்சலிட்டார்.
ஆசிரியர்கள் மட்டும் ஓடினர். ஏழாம் வகுப்பு மூலையில் ஒரு சிறுமியுடன் நின்று கொண்டிருந்தான் மூர்த்தி.
“இவன் செஞ்சுருக்குற வேலையைப் பார்த்தீங்களா??!! எப்படி நிக்குறான் பாருங்க… புள்ளைய என்னவோ பண்ணிட்டு இருந்தான். நான் பார்த்துட்டேன்.”
மூர்த்தி வியர்க்க விறுவிறுக்க நின்று கொண்டிருந்தான். நுழைந்த வேகத்திற்கு கணக்கு வாத்தியார் கன்னம் மாற்றி கன்னம் அறைந்தார்.
தலை முடியை பிடித்து ஆட்டினார் தலைமை ஆசிரியர்.

“அடேய் காலிப்பயலே… இதுக்குத்தான் பள்ளியோடம் வாரியா…? அந்த சின்னப்புள்ளய என்னடா பண்ண??”
“அம்மாடி.. அழாத… சொல்லு சொல்லு… உன்னை என்ன செஞ்சான் இவன்? பயப்படாம சொல்லுடா…”, என்றார் தலைமை ஆசிரியர்.

அவள் விசும்பிக்கொண்டே நின்றாள். மேல் சட்டையை இழுத்து இழுத்து கழுத்து வரை மூடினாள்.
“புள்ள பயந்துருக்கு சார்… அதை இனி கேட்க வேண்டாம்”, என்றார் தமிழ் ஆசிரியை.
“எங்க இவனை வளர்க்குற தேவி? கூப்பிடுங்க அதை… இவன் லட்சணத்தை பார்க்கட்டும்.”

தேவி மெல்ல படியேறி வந்து மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
“என்ன தேவி. பார்த்தியா கூத்தை…?
ஒன்றும் சொல்லத் தெரியாமல் தொண்டைக்குள் உமிழ் இறக்கிக்கொண்டிருந்தாள். அந்த சிறுமியைக்கண்டு பெரும் பதட்டத்தில்தான் இருந்தாள் தேவி.

“என்னடா பண்ண அந்த புள்ளய…?”
அதுவரை உலக்கைப் போல் நின்றவன், மெல்ல மூக்கை உறிஞ்சினான். கண்ணீர்தான் மூக்கின் நுனிவரை சென்று அவனை மூக்குறிய செய்திருந்தது.

அந்த சிறுமி மெல்ல ஏதோ சொன்னாள். 
“இந்தண்ணந்தான்…”, என்று முடித்தாள்.
அதைக்கேட்ட நொடிக்கு பளார் என்று உள்ளங்கையை அந்த உலக்கையின் கன்னத்தில் பதித்தாள் தேவி.
“நாயே… உன்னை குளிப்பாட்டி நடுவீட்ல வச்சேன் பாரு”, என்று முடிப்பதற்குள் அவள் நிலை தப்பினாள்.
“டீச்சர்…”என்று தாங்க முயன்றான் மூர்த்தி. அதற்குள் தமிழ் ஆசிரியை பிடித்துவிட்டார். 

ஒரே மங்கலான வெளிச்சம். மெல்ல ஒட்டிக்கொண்டிருந்த இமைகளைப் பிரித்தாள் தேவி. பக்கத்தில் அவளுடைய கணவன் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு…?”
“ஒன்னுமில்ல… சின்ன மயக்கந்தான். பயப்படாத தேவி…”
“என் புள்ள…”, என்று அவசரமாக வயிற்றைத் தடவினாள் தேவி.. வயிறு அதே மேட்டுடன் மேம்பட்டு இருந்தது. “குழந்தைக்கு ஒன்றுமில்லை. ரெண்டு பேரும் நல்லாதான் இருக்கிங்க.”
பெருமூச்சுடன் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள் தேவி.
கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“தேவி… உங்க தலைமை ஆசிரியர் வந்துருக்காரு பாரு…”
படக்கென்று கண் திறந்து, “சார்… வாங்க”, என்று எழ முயன்றாள் தேவி.
“அம்மா… நீ படுத்துக்கம்மா… நீயே வயித்து புள்ளக்காரி. உடம்பையும் மனசையும் கவனமா வச்சிக்கணும்…”
“நேத்தே வந்துருப்பேன்… ஒரு சின்ன வேலையா இருந்துட்டேன்.”
“பரவால்ல சார்…”
ஒரு அமைதி.

“அம்மாடி… நான் ஒன்னு சொல்லுறேன். உனக்கு இப்ப ஆறுதலா இருக்கும்னு சொல்றேன்…”
“சொல்லுங்க சார்…”
“அந்த மூர்த்தி…”
“அவனைப்பத்தி பேசாதீங்க சார்…”
“இல்லம்மா… அவசரப்பாடாத… நாங்கதான் அரைகுறையா இருந்துருக்கோம். நீ தெளிவான பொண்ணு. நீ இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு பண்ணிடாத.”
“அவன் கதை வேணாம் சார்…”

“அம்மா.. நீ சொன்ன மாதிரியே அவன் ரொம்ப நல்லவன்மா.”
“என்ன சொல்றீங்க…?”
“அவன் அந்த புள்ளய ஒன்னுமே பண்ணல. அந்த புள்ளையையும் நம்ம பள்ளிக்கூடத்து மானத்தையும் அவன்தான் காப்பாத்திருக்கான்.”

“என்ன சார் சொல்றீங்க…?”
“இந்த ஒன்பதாவது திலகனும் மாறனுமா சேர்ந்து அந்த புள்ள சட்டையை கழட்ட பார்த்துருக்கானுக…”
“யாரு…!!! தமிழ் டீச்சர் பையன் மாறனா?”
“ஆமா… அந்த ஊமைப்பயதான். நல்லவனாட்டம் மூஞ்சை வச்சிக்கிட்டு, வாயைத் தொறக்காமலேயே இருப்பானே அவன்தான். நீ மயங்கி விழுந்து உன்னை தூக்கிக்கிட்டு தமிழ் டீச்சர் போனதும் அந்த பொண்ணு சொன்னுச்சு.
இந்தண்ணந்தான் அவனுகளை அடிச்சி துரத்தி விட்டாங்க.. இந்த அண்ணன் பாவம்னு அழுதுச்சு.”

“‘தமிழ் டீச்சர் பாவம் சார்… அவங்க மனசு வருத்தப்படும். அவனை அவங்கள்ட காட்டிக்கொடுக்காம கண்டிச்சி உடுங்க சார்னு மூர்த்தி சொன்னான்.”

தேவிக்கு வயிறும் நெஞ்சும் பிதுங்கியது. தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
“என்னம்மா நீ… இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவன்னு தெரிஞ்சா சொல்லியிருக்கவே மாட்டேனே… உன் மனசு செத்த ஆறுதலாகனுதான் இதை சொன்னேன். நீ என்னன்னா…!”
“தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்”, என்று கத்தினாள் தேவி.
தலைமை ஆசிரியர் எழுந்துவிட்டார்.

தேவியின் கணவன் நர்சுகளை அழைத்துவிட்டான்.
“அமைதியா இரும்மா. வயித்து புள்ளக்காரி கத்தாத இப்படி”, என்று சொல்லிக்கொண்டே ஒரு ஊசியை இறக்கினார் அந்தச் செவிலி.
மேலுதட்டில் தன் மூச்சை தானே உணர்ந்தவளாய் நான்கு மணி நேரத்திற்கு பிறகு கண்விழிக்க முயன்றாள் தேவி. அவள் பாதத்தின் ஓரம் ஏதோ ஒன்று காற்றில் அசைந்தது. அவள் பாதத்திலும் பட்டது. கண்களை அகல விரித்தாள் தேவி.

“டீச்சர்… எப்படி இருக்கிங்க? நான் வந்துட்டேன் பார்த்த்தீங்களா…?! நீங்க எங்க போனாலும் நான் வந்துடுவேன்…”
“என்னை மன்னிச்சிடுடா மூர்த்தி.”
“என்ன டீச்சர்… இந்த கிறுக்குப்பயல்ட போய் மன்னிப்பு கேக்குறீங்க…?”
“டேய்… நீயாடா கிறுக்கு?”
“அப்ப நம்ம எச்.எம்.. சாரா…?”, என்றதும் இருவரும் சிரித்த சத்தம் அறைக்குள் எதிரொலித்தது.

***

படைப்பாளர்:

அருணா சிற்றரசு

ஆங்கிலமொழி ஆசிரியர் . அரசு உயர்நிலைப்பள்ளி எடகீழையூர், திருவாரூர் மாவட்டம். மன்னார்குடியைச் சேர்ந்தவர். 2012 ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்று அரசு பணி பெற்றவர். நாவல்கள் படிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். தமிழ் புதினங்கள் படித்து கருத்துக்களை தன் நடைக்கு வளைத்துக்கொள்பவர்.பாவ்லோ கோலோ , கொலம்பிய எழுத்தாளர் மார்க்கீஸ் மீது தீராக் காதல் கொண்டவர். தன்னுடைய யூட்யூப் சேனலில் மாணவர்களுகள் மற்றும் போட்டித் தேர்வாளர்களுக்கான காணொலிகளை வழங்கி வருகிறார்.