திரைப்படங்களிலும் பத்திரிகை நகைச்சுவை (?) துணுக்குகளிலும் மோசமாக அதிகம் சித்தரிக்கப்பட்டவர்களில் செவிலியர்களும் அடக்கம்.  மருத்துவர்களுடனும் நோயாளிகளுடனும் இணைத்து திரைக்காட்சிகளும் அவல ஜோக்குகளும் கீழ்த்தரமான மலின நகைச்சுவையை மக்கள் விரும்புவார்கள் என்ற போர்வையில் பரப்பின. அதன் தாக்கமோ என்னவோ இன்றும் நர்ஸ் என்றாலே இகழ்ச்சியான பார்வையும் கேலிச் சிரிப்பும் பெரும்பாலானவர்களுக்கு நிரம்பி வழியும். அவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதுகூடக் கடினமாகத்தான் இருக்கிறது.         

ஆனால், உண்மையில் அவர்கள் வெள்ளுடை தரித்த தேவதைகள். ஒரு மருத்துவரைவிட நோயாளிகளுக்கு அதிகம் தேவைப்படுபவர்கள் அவர்கள்தாம். இன்னும் சொல்லப் போனால் மருத்துவரைவிடச் சில செவிலியர்கள் அனுபவ அறிவை அதிகம் பெற்றிருப்பார்கள். எங்கும் எப்போதும் அவர்களுக்கான தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. செவிலியர் செய்வது வேலை அல்ல. உன்னதமான சேவை. முழு அர்ப்பணிப்புடன் செய்யும் தொண்டு இது. நலமில்லாதவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்கள் அவர்கள்தாம்.

நெருக்கமான உறவுகளின் கழிவுகளைக்கூட அகற்ற நாம் சிரமப்படுகிறோம். ஆனால், எந்தவிதமான ரத்த பந்தமுமின்றி அவர்கள் நமது கழிவுகளை அகற்றுகிறார்கள். அருவருப்பின்றி சுத்தம் செய்துவிடுகிறார்கள். அவர்களும் அதே கைகளால் தானே சாப்பிட வேண்டும்? ஆனால், அதைச் சுலபமாகப் பெரும்பாலானவர்கள் மறந்துவிடுவதுதான் துயரம்.

செவிலியர் பணி அங்கீகாரம் இல்லாமல்தான் இருந்துவந்தது. அதுவும் பழைய காலங்களில் அவர்கள் இந்தப் பணியோடு வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையை மாற்றி அவர்களுக்கென்று ஓர் அங்கீகாரத்தை ஏற்படுத்தியவர் ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று சிறப்பிக்கப்பட்ட ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார்தான். செவிலியர் தினம் என்று கொண்டாடப்படுவதற்குக் காரணமாக அமைந்தவர். இதுநாள் வரை செவிலியர் தினத்துக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே நிலவியது. ஆனால், கொரோனா சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து நமக்குச் சேவை செய்த செவிலியர்கள் தெய்வத்திற்குச் சமமல்லவா?           

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத என் அம்மாவுடன் பத்து நாள்கள் மருத்துவமனையில் தங்க நேரிட்டது. அவர்களது சேவையை அருகிலிருந்து கவனிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. தேனீக்களைப் போல சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். எப்போது அழைத்தாலும் முகம் சுளிக்காது வந்து உதவினார்கள். சிரித்த முகமாகவே இருந்தார்கள். தினமும் தவறாமல் நலம் விசாரித்தார்கள். ஆனால், நோயாளிகளுடன் வந்த சிலர் அவர்களைத் துச்சமாக நடத்திய விதம் வருத்தத்தையே அளித்தது. ஒரு பெரியவர் அவரது மனைவிக்கு  குளுக்கோஸ் செலுத்த வந்த ஒரு செவிலியரைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தார். விசாரித்ததில் அவரது மனைவி ஊசி குத்திய வலி தாளாமல் கொஞ்சம் அழுதுவிட்டாராம். அந்தச் செவிலியரின் முகம் வாடிவிட்டது. 

அந்தப் பெரியவர் வலியில் அழும் தனது மனைவியை இதமாகப் பிடித்துக்கொண்டு இந்தப் பெண்ணையும் மெதுவாகக் குத்தச் சொல்லியிருக்கலாம். யோசிக்காது பேசியதில் வருத்தம்தான் மிஞ்சியது. அதேபோல் ஒரு சிறுவன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். தனக்கு ஊசி போட வந்த செவிலியைக் கண்டபடி திட்டி  அடித்தும் விட்டான். அந்தச் சிறுவனின் தாய் அதைத் துளிக்கூடக் கண்டிக்காமல், “நீ வலிக்காமல் போட வேண்டியது தானே?” என்று ஆங்கார முகம் காட்டினார். நாங்கள் மருத்துவமனையில் இருந்து வரும்போது எல்லா செவிலியருக்கும் மனமார நன்றி கூறினோம். அந்த வார்த்தை மட்டும் போதாது. அவர்களையும் நாம் மதிப்பதே அவர்களுக்கு நாம் செய்யும் சிறப்பு.      

 எல்லாருக்குமே வலியில் துடிக்கும்போது செவிலியர் தேவைப்படுகிறார்கள். நன்றாக இருக்கும்போது அவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்கு. செவிலியர் என்பவர் தியாகச் சுடர்கள், அன்பின் இருப்பிடம், பொறுமையின் பிறப்பிடம், சேவைத் திலகங்கள், மனித உருவில் வந்த தேவதைகள் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். தாய்மையின் அத்தனை குணங்களையும் அதற்கு மேலான பண்புகளையும் கொண்ட செவிலியர் நமக்கு இன்னோர் அன்னையர் தானே?

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.