இரண்டாயிரம் மைல்கள் கடந்து நான் உன்னை பார்க்க வந்திருப்பது சாதாரண விசயமல்ல. ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சில நூறு மைல்களையே கடக்காதவள் நான். என் கனவிலும் ஒரு நாள் வெளிச்சம் பிறந்து, அது நனவாகும் மணித்துளியும் நெருங்கிக்கொண்டேயிருந்தது. பல எண்ணங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்த நேரம் நாங்கள் ஆக்ரா கோட்டையின் உள்ளே நடந்து கொண்டிருந்தோம்.

ஏழு வயதில் அம்மாவுடன் ஒரு மாநாட்டுக்கு சென்ற போது தஞ்சாவூர் கோட்டையின் அருகில் மணிக்கணக்கில் நின்று கொண்டிருந்த ஞாபகம் ஏனோ வந்து போனது. அப்போது எங்களால் கோட்டைக்குள் செல்ல முடியவில்லை. அதன் பிரம்மாண்டத்தை பார்த்து என்றாவது ஒரு நாள் எனக்காக ஏதாவது ஒரு கோட்டை வாயில் திறந்திருக்கும் என்று மனக்கோட்டை கட்டியவள் நான். முகலாயப் பேரரசுகளை தன்னுள் தாங்கிய அப்படி ஒரு கோட்டை வாயிலின் முன்பு தான் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

கோட்டை என்றாலே அதன் வாயிலும் அதன் சுற்றுச்சுவரும் தான் பல கதைகள் பேசும். மன்னர் பலரின் போர் திறமைகள் எல்லாம் அதன் கோட்டை வலிமையை வைத்தே அளக்கப்படும். மன்னர்களும் தங்கள் கோட்டையை வலிமையாக்குவதை அனுதினமும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். முன்னால் இருக்கும் நீண்ட அகழி சொல்லிவிடும் மன்னனின் வலிமையை. பெருத்த முதலைகளும் கொடிய விஷமுள்ள பாம்புகளும் நீந்திக் கொண்டிருந்த அகழி இன்று சிமெண்ட் பூசப்பட்டு பார்வையாளர்கள் வரும் வழியாக மாறிப்போயிருந்தது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வீராதி வீரர்கள் கடக்க சிரமப்பட்ட வழி இன்று இந்த சிறிய பெண்ணுக்காய் கைகள் நீட்டி என்னை வரவேற்றது.

உயர்ந்து நிற்கும் செங்கற்கோட்டை மதில் சுவர்கள் வாயில் காவலர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றன. வாயிலின் அருகில் வைக்கப்பட்டிருந்த வரலாற்று குறிப்பை சிறிது நேரம் பார்த்துவிட்டு உள்ளே நுழையவிருந்த எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சியையும், ஆனந்தத்தையும் கொடுத்தது கோட்டையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த வானுயர்ந்த கதவு. அண்ணார்ந்து அதன் உயரத்தைப் பார்ப்பதற்கே கழுத்து எலும்பு வலித்தது. இப்படி ஒரு பிரம்மாண்டமான கதவை திறப்பதற்கும் மூடுவதற்குமே ஒரு சிறிய படை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் அழகில் லயித்திருந்த எனக்கு மிக அருகில் பறந்து வந்த புறா என்னை கடந்து மதிலின் மேல் இருந்த ஒரு சிறிய மாடத்தில் அமர்ந்தது. ஏதேதோ எண்ணங்களில் மூழ்கியிருந்த நான் அப்போது தான் நிகழ்காலத்திற்கு வந்ததாய் உணர்ந்தேன்.

புறாக்களின் சத்தமும் பழைய கோட்டையின் வாசமும் ஒரு புது அனுபவமாய் இருந்தது. உள்ளே நுழையும் வழி எங்கும் என் மாணவர்கள் அங்கும் இங்கும் சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். “மேடம் உள்ளே பார்க்க நிறைய இடங்கள் இருக்கு சீக்கிரமாய் போகலாம்”, என்று எங்கள் டூரிஸ்ட் கைடு சத்தமாகக் கூப்பிட்டார். ஒரே ஒரு மாணவனைத் தவிர வேறு யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் சிறிது தமிழ் தெரிந்த ஒருவர் தான் வேண்டும் என்று கேட்டு முன்னரே அவரை ஏற்பாடு செய்திருந்தோம். அளவான உயரம், கண்களில் உற்சாகம், நடையில் வேகம், சுறுசுறுப்பான பேச்சு என்று எங்களிடம் எளிதாக ஒட்டிக் கொண்டார். அவரின் தமிழ் உச்சரிப்பும், எப்போதும் அவர் கண்களில் மாட்டியிருந்த கண்ணாடியும் ஒரு கைடுக்கே உரிய பாங்கில் இருந்தது.

வாசல் கடந்து உள்ளே சென்று கொண்டிருந்த நாங்கள் எதிரில் கண்டது மிகப்பெரிய மண்டபம். அங்கு தான் மன்னர் தம் மக்களுடன் உரையாடுவார். பல்வேறு திசைகளில் இருந்து வரும் மக்கள் மன்னரிடம் அறிமுகமாவது, விழாக்கள் , நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்த தீர்ப்புகள் என்று எல்லாம் நடப்பது இங்கே தான். மன்னர் அமரும் இடமும், நாட்டியங்கள் நடைபெறும் இடமும் பார்த்த போது அவர்கள் அங்கே இருப்பது போன்ற பிம்பமே என் கண்முன் வந்து போனது. மண்டபத்தை கடந்து உள்ளே சென்று கொண்டிருந்தோம். மன்னர் வருகையை கட்டியங்கூறி அறிவிக்கும் வீரர்கள் நின்ற இடமெல்லாம் இன்று ஒரு பூ மேசை அலங்கரித்தது. மன்னரின் பாதத்தை வருடிய கம்பளங்கள் இருந்த இடமெல்லாம் இன்று தூசி படிந்து இருந்தது. சுற்றிலும் அழகிய மாடங்களும் சிறு மண்டபங்களும் இருந்தன.

பிரம்மாண்டத்தின் மேலான முகலாயர்களின் காதலுக்கும், அவர்களது நுணுக்கமான கட்டிடக்கலைத் திறனுக்கும் ஈடு இணையே இல்லை. அதன் வரலாறும் மிகப் பெரியது. மனிதர்கள் வாழ்வும் , அவர்களின் மூச்சுக் காற்றும், போர் முரசுகள் ஒலியும், ராணியரின் அலங்காரமும், அவர்கள் கூடி கதை பேசி குழந்தைகளுடன் மகிழ்ந்திருந்த தருணமும் இங்கேதான். அதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது மனம் வியந்தது. தாஜ்மகால் என்றில்லை மனிதனால் படைக்கப்பட்ட எல்லாமே ஒரு அதிசயம் தான்.

சரி வாருங்கள் ராணிகளின் அறைக்குச் செல்லலாம். பல மகாராணிகளின் கதைகளை படித்திருக்கிறேன். அரச குமாரிகள் என்றாலே அவர்களின் உடையும் , அலங்காரமும் தான் அதிகம் பேசப்படும். பல சரித்திரகால படங்களும் உடைகளுக்காகவே நிறைய விருதுகள் வாங்கியிருக்கின்றன. ஜோதா அக்பர் படம் கூட ஐஸ்வர்யாவின் உடை அலங்காரத்திற்காகவே நான் பல முறை பார்த்திருக்கிறேன். அப்படி இருக்க அவர்களின் அறை மட்டும் சாதாரணமாய் இருந்து விடாது. மாடங்களில் கண்ணாடி பதிக்கப்பட்டு அறை எங்கும் ஒளி வீசியது. மாடங்களும் அழகிய வேலைப்பாடுடன் இருந்தன.

Photo by Mohd Aram on Unsplash

அவர்கள் உபயோகப்படுத்திய அலமாரிகள் , சீப்புகள், வேலைப்பாடுடன் கூடிய சில உடைகள் என்று அந்த அறை இப்போது பார்த்தாலுமே பிரம்மிப்பாய் இருந்தது. உலக புகழ் வாய்ந்த வைரங்களும், மாணிக்கங்களும் , நவரத்தினங்களும் , உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த பட்டு துணிகளும் இந்த அறையை எவ்வளவு ரம்மியமாய் வைத்திருந்திருக்கும். அந்த அறையை விட்டு வெளியே வரும் போது அரச குமாரிகளும் அவர்களின் பணிப் பெண்களின் குரலும் ஒலிப்பது போலவே இருந்தது.

மாணவர்கள் பலரும் ஆங்காங்கே கலைந்து விட்டிருந்தார்கள். என்னுடன் என் தோழியும் , ஒரு சில மாணவர்களும் இருந்தனர். அப்போது ஒரு வெளிநாட்டுப் பெண் அருகில் என் மாணவர்கள் சென்றனர். நமக்கு வெளிநாட்டவர் என்றாலே ஒருவித ஈர்ப்பு வந்து விடுகிறது. அவர் அருகில் சென்று தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கூட நினைப்பதுண்டு, நாம் எங்காவது வெளிநாடு சென்றால் இதே போல் அந்த நாட்டு மக்கள் நம்மிடம் வந்து பேசுவார்களா என்று. ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லை.

அவர்கள் ஏதோ பேசி விட்டு என்னிடம் வந்தனர். அந்த பெண்ணிடம் என்னை அவர்களின் பேராசிரியை என்று அறிமுகம் வேறு செய்து வைத்தார்கள். அப்புறம் என்ன எல்லோரும் சேர்ந்து போட்டோவும் எடுத்தாயிற்று. நல்ல வேளை அப்போதெல்லாம் செல்ஃபி என்ற ஒன்று இல்லை. நாம் எதற்கு வெளிநாட்டவரை கண்டால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறோம்? அவர்களும் நம்மை போன்றவர்கள் தானே. ஆனாலும் ஏனோ ஒரு ஈர்ப்பு வந்து விடுகிறது இல்லையா? ஆனாலும் நான் ஒரு போதும் அது போல் செய்வதை விரும்பவில்லை.

நான் பதினோரு மாத குழந்தையாக இருந்தபோது அம்மா , அப்பா எனக்கு வேளாங்கன்னி ஆலயத்தில் மொட்டை போட்டார்கள். அப்போது கடற்கரையில் ஒரு ரஷ்ய பெண் அம்மாவையும் என்னையும் சேர்த்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர்கள் இந்திய மக்கள் என்ற தலைப்பில் படங்கள் எடுப்பதாகவும் அதற்கு வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். அம்மாவும் சரி என்று சொல்லி என்னை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்திருக்கிறார். அப்போது அந்த பெண் மிகவும் ரசித்ததாகவும் , ‘க்யூட் பேபி’, என்று கொஞ்சி விட்டு, இந்திய ரூபாய் இருபதை என் கையில் கொடுத்து சென்றார்கள் என்றும் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

நான் பெரியவளானதும் அந்த அந்த இருபது ரூபாயை என்னிடம் கொடுக்க வேண்டும் என்று பல வருடங்கள் அவர்கள் பத்திரமாய் வைத்திருந்தார்கள். ஆனால் அதையும் ஒரு நாள் எடுக்க வேண்டிய அளவு வறுமை இருந்ததால் அந்த பணத்தை செலவு செய்து விட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் என் அம்மா. ஆம் இன்று அற்பமாய் கிடைக்கும் பல விசயங்கள் ஒரு காலத்தில் நமக்கு கிடைக்காதா என்று பல முறை ஏங்கி இருப்போம். இன்று தாஜ்மஹாலை காணப்போகும் பரவசத்தில் இருக்கும் நானும் ஒரு நாள் இதை சாதாரண நினைவுகளாய் கடந்து செல்வேன் என்று நினைத்தேன்.

கோட்டையின் பல இடங்களை சுற்றிப் பார்த்தோம். இந்து, முஸ்லீம் என்று இன்றும் கூட பாகுபாடும் , பல குழப்பங்களும் நிகழும் சூழலில் அன்றே ஒரு இந்து பெண்ணை காதலித்து மணந்த அக்பர், அவர் மனைவிக்காய் கோட்டையின் உள்ளே கட்டியிருந்த கோவில் ஆயிரம் காதல் கதைகளை சொல்லியது. அதே போல் பல மசூதிகளும் உள்ளிருந்தது. ஜகாங்கீர் மன்னரின் நீராடும் குளியல் அறை, அரச குமாரிகளின் உடை மாற்றும் அறை, பொது மக்களுக்காய் இருந்த கிணறு என்று எல்லாமே மனிதர்களின் இருப்பை உணர்த்துவதாய் பட்டது. அங்கிருந்த ஒரு மண்டபத்தின் மாடிப் படிக்கட்டுகளில் ஏறி மேல்மாடத்திற்கு வந்தோம். மாடத்தின் அருகில் சென்று வெளியில் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் தெரிந்த அகழியில் ஏதேனும் முதலை தென்படுகிறதா என்று நான் தேடிக்கொண்டிருந்த தருணம் எங்கள் கைடு அருகில் வந்து அதோ தூரத்தில் என்ன தெரிகிறது பாருங்கள் என்று சொன்னார்.

அடுத்த கணம் என் கண்கள் என்னவென்று ஆர்வத்தில் சுழன்றன. பளிங்கு கல்லால் இழைத்து, தன் காதல் மனைவிக்காக ஷாஜகானால் கட்டப்பட்ட அதிசயம் மாடத்தின் வழியே தூரத்தில் காட்சி தந்து கொண்டிருந்தது. என் கண்கள் கண்ட அற்புத காட்சி அது. ஜென்ம சாபல்யம் அடைந்த நிமிடம். இந்த நிமிடத்திற்காக எத்தனை நாட்களை கடந்திருக்கிறேன். எத்தனை இரவுகளாய் உறக்கம் இன்றி தவித்திருக்கிறேன். ஒரு இரண்டரை கிலோமீட்டர் தொலைவு தான் ஆக்ரா கோட்டைக்கும் தாஜ்மாகாலுக்கும் உள்ள தொலைவு.

எனக்கு இறகுகள் இருந்தால் அடுத்த நொடியே பறந்து போயிருப்பேனே. மனிதப் பிறவியாய் இருந்து நடந்து சென்று, எப்போது என் கால்கள் உன்னை முத்தமிடுவது? கடவுளே எனக்கு ஒரு மணி நேரம் மட்டும் இறக்கைகள் கொடு என்று மனது கெஞ்சியது. கண்களை அகற்றாமல் மாடத்தின் ஓரத்தில் அமர்ந்து கொண்டேன். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பேன் என்று தெரியவில்லை. என் தோழி வந்து கீழே செல்லலாம் என்று அழைத்தாள். இனி பொறுமை காக்க முடியாது. சீக்கிரமாய் கிளம்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

எல்லோரும் கீழே இறங்கி வந்தோம். அப்போது தான் நினைவு வந்தவராய் கைடு எங்களை வேறொரு இடத்திற்கு கூட்டிச்சென்றார். வழியெங்கும் கொஞ்சம் இருள் சூழ்ந்து இருந்தது. அதிகம் மக்கள் வந்து போகும் இடம் போல தெரியவில்லை. சிறிது தூரம் நடந்த பிறகு கம்பிகள் வைத்த சிறு அறைகள் இருந்தது. ஒரு மயான அமைதி அந்த இடத்தில் இருந்தது. அது கைதிகளை அடைக்கும் சிறை. கண்ணீரும், ஓலங்களும் ஒரு காலத்தில் நிறைந்து இருந்த இடம். எங்கே அந்த மனிதர்கள் எல்லாம்? இங்கு இருந்த அனைவரும் தவறிழைத்தவர்களா? செய்யாத தப்புக்கு தண்டனை பெற்றவர்கள் எத்தனை பேர். பல ஒற்றர்கள் தங்கள் நாட்டிற்காய் இங்கே வந்து இறந்திருக்கலாம்.

Photo by Mohd Aram on Unsplash

மாணவர்கள் சிலரின் சலசலப்பு அருகில் கேட்டது. அனைவரும் கூட்டாக ஒரு சிறைக்கு அருகில் நின்று கொண்டிருந்தனர். ஆர்வத்தில் நானும் அவர்கள் அருகில் சென்று என்ன என்று பார்த்தேன். அது தன் மகன் ஔரங்கசீப்பால் கைது செய்யப்பட்ட ஷாஜகான் இருந்த சிறை. அங்கு இருந்த ஒரு துளை வழியாக சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலை பார்த்தவாறு தன் இறுதி நாட்களை ஷாஜகான் கழித்த வரலாறு என் மனக் கண்ணில் தோன்றியது. கோடிக்கணக்கானவர்களின் மனதை கொள்ளை கொண்ட உலக அதிசயம் ஒன்று அதை உருவாக்கியவனை சிறையில் இருந்து ஒரு துளை வழியே காண வைத்த விதியை என்னவென்று சொல்வது. அரசனே ஆனாலும் அவன் விதியை யாரால் மாற்ற இயலும் .

தாஜ்மஹால் ஒரு பேரதிசயம்

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. நெருப்பை அள்ளி கொட்டியது போல் ஒரு சூடு. வெட்ட வெளியில் நிழல் தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஒரு சிறிய மரம் இருந்தால் கூட அதனடியில் சிறிது நேரம் இளைப்பாறலாம் என்று தோன்றியது. ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதுவும் தென்படவில்லை. தண்ணீர் குடித்து வெகு நேரமாகி விட்டது. தாகம் தொண்டையை அடைத்தது. கோவையை விட்டு அதிகம் வெளியில் பயணப்பட்டதில்லை. ஆக்ரா வெப்பம் என்னை சுட்டெரித்தது. ஆக்ரா கோட்டையில் இருந்து வெளியேறிய நாங்கள் ஏதோ தண்ணீர் இல்லாத காட்டில் மாட்டிக் கொண்டோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் இருப்பது பல வருடங்களாக நான் கனவில் நினைத்துப் பார்த்து என்றேனும் ஒரு நாளாவது இந்த அற்புத இடத்தை காண மாட்டோமா என்று ஏங்கிய இடம். நான் நடந்து கொண்டிருப்பது தாஜ்மஹாலின் பிரதான வாயிலின் முன்பு. மேகம் கொஞ்சம் இறங்கி வந்து பெரிய கூடாரம் அமைத்துக் கொண்டதோ என்று நினைக்கும் வண்ணம் என் கண் முன்னே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவில் பரந்து விரிந்து கிடந்தது அந்த ஒப்பில்லாத அதிசயம்.

எல்லோரும் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்டு உள்ளே வந்தோம். நாங்கள் சென்றது ஆகஸ்ட்டு மாத ஆரம்பத்தில் என்பதால் செக்யூரிட்டி மிகவும் அதிகமாய் இருந்தது. ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது. மெட்டல் டிடெக்டர் வைத்து பெண் காவலர் சோதனை செய்த போது அதில் பீப் சத்தம் வந்திடக் கூடாதென்று மனம் வேண்டியது. சாதாரண சோதனை தான் என்றாலும் முதல் முறை என்பதால் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. எங்கள் பைகள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டது. தின்பண்டங்கள் எதுவும் அனுமதி இல்லை என்று நாங்கள் வைத்திருந்த பிஸ்கட், முறுக்கு எல்லாவற்றையும் எடுத்து விட்டார்கள். குடிப்பதற்காக வைத்திருந்த தன்ணீர் பாட்டில்களில் கூட பாதி தண்ணீர் தான் அனுமதித்தார்கள். எங்கள் பைகள் முழுவதும் இன்ச் இன்ச் ஆக அளக்கப்பட்டது. பின்னர் செருப்பும் அணிய கூடாது என்று அதற்கென இருந்த இடத்தில் கழட்டி விட சொன்னார்கள்.

அனைத்தையும் முடித்த பிறகு நுழைவுவாயில் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். தாஜ்மஹாலின் அழகு அதன் நுழைவு வாயிலில் நாம் அடியெடுத்து வைக்கும் போதே தெரிந்து விடும். அங்கிருந்து பார்க்கும்போது அந்த வாயிலில் பொருந்தும் வண்ணம் முழு கட்டிடமும் தெரியும். முன்னோக்கி செல்லச் செல்ல அதன் தோற்றம் பிரம்மாண்டமாய் விரியும். தாஜ்மஹாலை அடைவதற்கு முன்பாய் நின்று பார்த்து ரசிக்க சில இடங்கள் உண்டு. ஒவ்வொரு இடமாய் நின்று ரசிக்க வேண்டுமென்று நினைத்து வைத்திருந்தேன். ஆனால் இந்த சூடும், மதிய வேளையும் ஒரு மாதிரி கண்களைக் கட்டிக்கொண்டது. நான் பார்த்து அனுபவிக்க நினைத்த தருணம் இது. மனம் அமைதியோடு ரசிக்க நினைத்த நொடி இது. ஆனால் என்ன ஆயிற்று எனக்கு? என்னை அறியாமல் பக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். கண்களைக் கட்டிக்கொண்டு வந்தது.

கனவு விரியும்…

கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே:

கட்டுரையாளர்

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.