Second innings தொடங்கியது……

ஐ.நா சென்று திரும்பியதிலிருந்து, ‘நிலா அது என் காலுக்கு கீழே’ னு நிரூபிச்ச நீல் ஆம்ஸ்ட்ராங் போல என்னையும் நினைச்சு அழைச்சு, பாராட்டி, சீராட்டி, விருது குடுத்து, ‘ஆஆஆன்னு’ பாக்குற அத்தனை பேரோட மனசிலயும் , உதட்டிலும் வந்த முதல் கேள்வி- எப்புடி இந்தம்மாவுக்கு ஜாக்பாட் அடிச்சுது?

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 5,65,639 என்கிறது அரசு புள்ளி விபரம். இது தவிர தனியார் பள்ளி ஆசிரியர்கள் இரு மடங்கு அதிகம். “இத்தனை ஆசிரியர்கள் இருக்கும் போது உங்களுக்கு மட்டும் எப்படி ஐநா வாய்ப்பு? எது உங்களை ஐ.நா. ஹெவியா லைக் பண்ண வெச்சுது? அரசியலா? பணமா? குடும்பமா? யாரோட சப்போர்ட்ல உங்களை தேர்ந்தெடுத்தாங்க? என்ன பின்புலம்?”, ஐந்தாண்டுகளாக தொடரும் கேள்விக் கணைகள். ஆனா ஒரு புலமும் இல்லை என்பது தான் நிஜம்.

கொஞ்சம் கடின உழைப்பு, தம்மாத்துண்டு தெகிரியம், கிடைக்கிற வாய்ப்புகளை டகால்னு உடும்ப விட டைட்டா பிடிச்சுக்கறது அம்புட்டுதேங் என் ‘பின்’ புலம். இந்த ‘வாய்ப்பு, வாய்ப்பு’ ங்கறோமே அதப் பத்தி கொஞ்சம் சொன்னாலே அஞ்சு வருசமா என்னை துரத்திக்கிட்டு இருக்கிற கேள்விகளுக்கு பதில் சொன்னா மாதிரி இருக்கும். “கண்ணா லட்டு தின்ன ஆசையா”? னு எடுத்த உடனே டாப்கியர்ல ஐ நா போற வாய்ப்பு வந்திடல. இதற்குப் பின்னால் 15 வருட உழைப்பையும் , நேரத்தையும் , கொஞ்சூண்டு ஒட்டிட்டு இருக்கிற மூளையையும் செலவழிச்சிருக்கேன் என்பது தான் உண்மை. இதுதவிர மன உளைச்சல்கள், பிரச்சினைகள் , போராட்டங்கள் , கைதுகள் போனஸாக.

வழக்கம்போல, அடுக்களையையே என் ராஜ்ஜியமாக நினைத்து ‘மாதம் ஒரு கேஸ் சிலிண்டர் தான் செலவாகிறாதா?’ என்று பார்த்துப் பார்த்து ஆண்டுகொண்டிருந்தேன். ‘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி’யிலிருந்து மதுரையில் நடைபெறும் ஒரு பயிற்சியில் கலந்து கொள்ளச் சொல்லி ஓலை வந்து என் இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர் கார்டைத் திறந்தது. உலகக் கல்வி அமைப்பின் பயிற்சிக்கான அழைப்பு அது. “Women’s Round Table Conference” அட, பெயரே கெத்தாகத்தான் இருந்தது.

ஆனாலும், வழக்கம் போல அரசு நிதியைக் காலி பண்ண, அரைச்ச மாவையே புதுப்புது பெயர்களில் மிக்ஸி, கிரைண்டர், ஆட்டுரல்னு மாத்தி மாத்தி போட்டு அரைக்கறது போலத் தானே இருக்கும்னு நினைச்சி தூக்கம் கலைக்க ஃபிளாஸ்கில டீ எடுத்துட்டு போனா…. தொடக்கநாள் பயிற்சியே ‘அட’ போட வைச்சுது! டீயை எதிர்பார்த்த நமக்கு தேர்தல் நாளைய ‘குடிமகன்’ அளவுக்கு சும்மாவே உற்சாகம் கிடைத்தது. டில்லி மற்றும் மலேசியா, பிலிப்பைன்ஸ் , கனடா நாடுகளிலிருந்து வந்த பயிற்சியாளர்களால் நாலு நாட்களில் உடம்பு, மூளை, மனசு அத்தனையும் ரீசார்ஜ் பண்ணி விட்டது போல இருந்தது.

“உலகம் முழுக்க பொம்பளக எவ்ளோ கஷ்டப் படறாங்க, நீ வீட்டுக்குள்ள உட்கார்ந்து டி.வி பார்த்துட்டு உன் உழைப்பையும் , மூளையையும் வீணாக்கிகிட்டு இருக்க பக்கி” னு சொல்லி, ஐநா, யுனெஸ்கோ, யூனிசெப் புள்ளிவிபரத்தையும் கொடுத்து, அவுங்க நம்மளைப் புரட்டிப் போட்டு பொளக்க, நம்ம மரமண்டையிலயும் லேசா பல்பு எரிய ஆரம்பித்தது.

“அட ஆமாம்ல, இப்படியே விட்டா தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசி………வேடிக்கை மனிதரைப் போல் வீழப் போறேனோ” னு இல்லாத மூளையை கசக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுக்காரங்க அடிச்ச அடி போதாதுனு , பெரிய பெரிய பெண் அதிகாரிகளான உள்ளூர் தலைகள் பூரா தங்கள் பங்குக்கு இந்தியாவில், ஆணாதிக்கத்தால் பெண்கள் படற கஷ்டத்த உப்பு, புளி போட்டு தேய்த்து விளக்கி, அத்தோட விடாம, அவர்களுக்கான உரிமைகளையும், சட்டப் பாதுகாப்பையும் எடுத்துச்சொல்லி, பொளீர் பொளீர் னு மூஞ்சிலேயே குத்த, கொஞ்சகாலமா உள்ளுக்குள்ள தூங்கிகிட்டு இருந்த மிருகம் மறுபடியும் முழிச்சிகிச்சு.

அந்த நாள்……என் டைரில குறிச்சு வைச்சுக்கும்படியான முக்கிய நாளாக மாறிப் போச்சு. ஒரு தென்றல்ல்ல்ல்ல்ல் புயலாக……னு பேக்கிரவுண்டில் பாட்டு கேட்டுக்கிட்டே இருந்திச்சு. குடும்பத்திலும், சமூகத்திலும், பணிபுரியும் இடங்களிலும், ஆணாதிக்கத்தால் , பாலினப் பாகுபாட்டால், சமனற்ற சமூகச் சூழலால் பெண்கள் சின்னாபின்னமாகி நொந்து நூடுல்ஸ் ஆகுற பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் ஐநா-வோட வழிகாட்டலின்படி உலக கல்வி அமைப்பு, ஆசிரியர் சங்கங்களோட உதவியோடு முன்னெடுக்குது – இது தான் பயிற்சியின் கான்செப்ட்டு.

இது நம்ம ஏரியாவாச்சேன்னு ஒரே சந்தோசம். “சரியான இடத்துக்குத் தான் வந்திருக்க , வாய்ப்பை கெட்டியா பிடிச்சுக்கோ” னு இந்த முறை பட்சியும் ஆசிர்வாதம் பண்ணிடிச்சு. ’எங்கே செல்லும் இந்தப் பாதை….’ னு தெரியாமலே அதுவரை குண்டுச்சட்டியில வாழ்க்கையை ஓட்டிட்டு இருந்த எனக்கு, இந்த ஹை வேல தான் போகனும்னு கூகுள் அண்ணே மேப் போட்டு காட்டிட்டா மாதிரி இருந்திச்சு. இனி என்ன, பாதை தெரிஞ்சிடிச்சு, ஹைவேல 120ல பறக்க வேண்டியது தான்னு நானும் மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிட்டேன்.

ஆனா ஹைவேல போனாலும் , டோல்கேட்டும், பேரிகேடும் வந்துட்டேதான் இருக்கும்னு பிறகு தான் வாழ்க்கை கத்துக் கொடுத்தது. பதினைந்து நாளில் டில்லியில் நடைபெறவிருக்கும் தேசிய மகளிர் கருத்தரங்குக்கு மதுரை பயிற்சியின் முடிவிலேயே தேர்வு செய்யப்பட்டேன். முதன்முதலா டில்லிக்கு போறதுக்கு, மொத்தக் குடும்பமும் ஊரைக் காலிபண்ணிட்டு சென்னை வந்து வழியனுப்ப, விண்வெளிக்கு போற கல்பனா சாவ்லா ரேஞ்சுக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ நான் அலற விட்டது தனிக் கதை!

டில்லியைத் தொடர்ந்து, கிடைத்த எந்த வாய்ப்புகளையும் விடாம உடும்புப் பிடியாய் பிடிச்சுகிட்டு, இஷ்டப்பட்டு கஷ்டப்பட….. நிறைய பயணங்கள், நிறைய நிறைய அனுபவங்கள். கூடவே ஆசிரியர் சங்க வேலைகளில் தீவிரமாகி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம்னு இன்னொரு பக்கம் கிளம்பியாச்சு. பஸ் மறியல் , கலெக்டர் ஆபிஸ் முன்னால் ஆர்ப்பாட்டம், சென்னை ராஜ்பவன் வாசலில் தொடர் முழக்கப் போராட்டம், டில்லி பார்லிமென்ட் நோக்கி எதிர்ப்பு ஊர்வலம்னு, க்ரைம் ரேட் பிபி பேஷன்ட் பல்ஸ் போல எகிறிக் கொண்டிருக்க, ஒரு அழகான காலைப் பொழுதில், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் கால்பதிக்க, முதன்முறையாக கைதுசெய்யப்பட்டேன்.

ஜேக்டோ-ஜியோ போராட்டம். PC: Edex, Representation image only

“கண்டிப்பா சாயந்தரம் அனுப்பிடுவாங்க” அப்டின்னு தான் சார் முதல்ல அனுபவப்பட்ட மகராசர்கள் சொன்னாங்க. அவுக குடுத்த மன டானிக்கில் மகளையும் மடியில் வைத்துக் கொண்டு மண்டபத்தில் தெம்பாக உட்கார்ந்திருந்தேன். தோழிகளோட பிக்னிக் போனது மாதிரி ஒரே ஜாலி தான்! “ரஜினி இந்த வருசம் அரசியலுக்கு வந்திடுவாருப்பா”, என சென்னை வானிலை அறிக்கையை நம்பி, குடை எடுத்துச் செல்லும் அம்மாஞ்சி போல தோழிகளிடம் பந்தயம் கட்டிக் கொண்டிருந்தேன்.

மாலை 5 மணிக்கு உள்ளே வந்தார் போலீஸ்காரர். பகலெல்லாம் எங்களோட சிரிச்சு பேசி, தின்பண்டம் எல்லாம் ‘ஷேரிங்’ பண்ணி, அரசியல் வம்பு பேசி, எங்களுக்கு பிரியாணி கொடுத்த அந்த சிரிப்பு போலீஸ், ‘இப்ப நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு…ஸ்ட்ரிக்ட்டு…ஸ்ட்ரிக்ட்டு’ அப்டின்னு டெரர் பீஸா முறைச்சிட்டு நின்னார். “எல்லாரையும் ரிமாண்ட் பண்ணி மதுரைக்கு கொண்டு போகச் சொல்லிட்டாங்க, 15 நாளைக்கு பெயில் கிடைக்காது” என்று சத்தமாக அவர் சொல்ல, இங்கே பல பேருக்கு மூச்சு விடவே மறந்து போச்சு. ‘ஏட்டையா…என் பிரியாணிய தின்னுட்டு என் கிட்டயேவா?’ன்ற என் மைண்டு வாய்ஸ் கேட்டுச்சு போல. கிட்ட வந்து , “கைக்குழந்தையை வச்சிருக்கீங்க….நீங்க வீட்டுக்குப் போங்க, உங்க பெயரை நாங்க எடுத்திடறோம்”, அப்டின்னு அக்கறையோட சொன்னார்.

அப்பதான் பக்கத்தில இருந்த ஒரு சதிகார தோழி குரூப் கொலைவெறியுடன், “போராடுவோம் போராடுவோம்….இறுதி வரை போராடுவோம்..இறுதி வெற்றி நமதே” அப்டின்னு கோஷம் போட்டுச்சு. தெலுங்குப் பட ஹீரோ கணக்கா நாடி நரம்பெல்லாம் துடிச்சு, கண்ணு செவந்து, கன்னம் பன்னு மாதிரி வீங்க, நமக்குள்ள வீரம் பெருக்கெடுத்து, ஆகஸ்டு மாச குத்தாலமா பொங்கிருச்சு. ‘முன்வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன், உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மாட்டேன்…..சக்தி கொடு இறைவா சக்தி கொடுனு’ மனசுக்குள்ள பாடிக்கிட்டே , பிள்ளையை வெளியே அம்மாவிடம் கொடுத்து விட்டு, “நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்” என வான்ட்டடாக காவல்துறை வண்டியில் ஏறினேன். என் பெண்ணுக்கு அப்போது வயது இரண்டரை.

அதற்குப்பிறகு ஆறு முறை மாமியார் வீட்டுக்கு விசிட் அடிச்சாச்சு. பக்கத்து தெரு மளிகை கடைக்கு ‘காலு கிலோ உப்பு புளி’ன்னு பாடிட்டே போறது மாதிரி ‘போல்டேசன்’ சகஜமாயிடிச்சி! ‘காவல்துறை உங்கள் நண்பன்னு’ சொன்னத மனசார நம்பி, கண்ணால பார்த்தாச்சு. போராட்டங்களும், கைதுகளும் தான் இயக்கவாதிகளின் தரத்தை பறைசாற்றும் ரேங்க் கார்டு போல.

அதன் பின் ஒரு வாரத்தில் தான், ஒரே கையெழுத்தில் (2003 ஜூலை 4) ‘ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்’ என்ற உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் முடிவை எடுத்தார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. அதிலிருந்து குட்டிக்கரணம் அடிச்சு தப்பி, அதைவிடத் தீவிரமாக இயக்கப் பணிகளில் குதிச்சு, நீந்தத் தெரியாம நீந்தி, எக்கச்சக்க பன்னாட்டு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறைகள்…ஒவ்வொரு அனுபவமும் புத்தியை, சிந்தனையை பாலீஷ் போட்டது; பட்டை தீட்டியது .

ஒரு பொண்ணு பொதுவேலைக்கு வெளியே வந்திட்டா அவ்வளவு ஈசியா இந்த சம்முவம் விட்ருமா, என்ன? அவளை எப்படி பேக் பண்ணி மறுக்கா சேஃபா வீட்டுக்குள்ள அனுப்பறது அப்டின்னு தான பார்க்கும்? அப்படி போடப்பட்ட சில பல ஸ்கெட்ச்ச எல்லாம் தண்ணி ஊத்தி அழிச்சிட்டு , பேஜாரான ஆணரசியல்களைக் கண்டு அசராமல் கடந்து, பல நாடுகளுக்கும் பயணமாகி, அங்கு பெற்ற அனுபவங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு சென்று, ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து, அத்தோடு ஆசிரியர் சங்கத்தின் முழுநேர இயக்கவாதியாய் நீண்ட போராட்டங்களை சந்தித்து பிறகு இதோ…..உலகிற்கே நாட்டாமையான ஐக்கிய நாடுகள் சபையில் நுழையும் வாய்ப்பு .

அடுக்களை சட்டிக்குள் குதிரைஓட்டிக்கொண்டிருந்த வாழ்க்கை ஐ.நா நோக்கி பாயும்னு சாமி மேல சத்தியமா எதிர்பார்க்கல. அப்படி எதிர்பாராத ஒரு நாளில்தான் உலகக் கல்வி அமைப்பிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. உலகக் கல்வி அமைப்பு என்பது 172 நாடுகளைச் சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் இயக்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கக்கூடிய ஓர் அமைப்பு. தலைமையிடம் பெல்ஜியம். பொதுவான ஆசிரியர் பிரச்சினைகளுடன், கல்வி, மற்றும் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்காக UN , UNICEF, UNESCO, WORLD BANK, EUROPEAN UNION இவர்களுடன் உலகக் கல்வி அமைப்பும் (EI) இணைந்து செயல்படுகிறது.

அதன்மூலம் தான் தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் a for apple சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த எனக்கு பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அழைப்பு வந்திருந்தது. ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் ஐ.நாவின் பொது அவை கூடுகிறது. 2014 செப்டம்பரில் கூடும் அவையிலும், அதைத் தொடர்ந்து ஏழு பேர் உரையாடும் பேனலிலும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.

அப்பாஆஆ… நம்பவே முடியல…’மெய்யாலுமா’ ?னு பலமுறை கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். டில்லியில் இருக்கும் எங்கள் ஆசிரியர் சங்க தலைமையகத்திலிருந்து ( அகில இந்திய ஆசிரியர் கூட்டணி) அடுத்தடுத்த போன்கால்கள். பல நாடுகளுக்கும் பயணப்பட்டிருந்ததால் பாஸ்போர்ட் இருந்தது. ஆனால் விசா வாங்கணுமே…..”அமெரிக்க விசாவா… மோடிக்கே விசா கொடுக்காமல் அல்வா கொடுத்த நாடாச்சே அது”ன்னு மனசுக்குள்ள ஜிலீர்.

ஆனாலும் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல டிராவல் ஏஜென்ஸி கேட்ட ( எங்க வீட்டு பூனைக்குட்டியோட பெர்த் சர்டிபிகேட் தவிர ) அத்தனை பேப்பர்சும் ரெடி பண்ணியாச்சு. இன்னொருபுறம் NOC-ங்கற பெரிய பூதம் . அரசு ஊழியர்கள் வெளிநாடு போக NOC வாங்கனும்னு எந்த மகராசன் எங்க ரூம் போட்டு யோசிச்சான்னு தெரியல. தலைமை ஆசிரியர் வழியாகத்தான் ப்ரோபசலை அனுப்பி வைக்கணும். அதுல கூட வேலை செய்ற ரெண்டு ஆசிரியர்கள், “சம்பந்தப்பட்டவர் திரும்பி வரும் வரை நாங்கள் வெளிநாடு போக மாட்டோம்”’ னு சூடம் அணைச்சி சத்தியம் பண்ணி கூப்ல போய் உக்காரணும். பாண்டு பேப்பர்ல அக்ரீமென்ட் எல்லாம் போட்டுக் கொடுக்கணும். ( நல்லவேளை சொத்தை எழுதிக் கேட்காமப் போயிட்டாங்க).

போலீஸ் ஸ்டேஷன்ல, “ ஐயா சாமி…என்ற பேர்ல கொலைக்கேசு, கொள்ளைக்கேசு ஏதும் இல்லீங் சாமி” னு நிரூபிச்சு, No Crime Certificate , பாஸ்போர்ட் நகலில் ஒரு டாக்டரிடம் அட்டஸ்டேஷன், கிட்டத்தட்ட ஒரு 40 பக்கத்துக்கு ‘மானே தேனே பொன்மானே’ போட்டு லெட்டரு, அத்தனையும் ரெடி பண்ணி அதில் அஞ்சு காபி எடுத்து , வட்டாரக்கல்வி அலுவலகத்தில சில பல மேசைகள் அது நகரணும். தப்பு..தப்பு..அதை நம்ம நகர்த்தணும். அப்புறம் மாவட்டக் கல்வி அலுவலகம் அங்கும் சில பல….அதன்பின் முதன்மைக் கல்வி அலுவலகம் மீண்டும் சில பல…. அதன்பின் சென்னையில் இயக்குநர் அலுவலகம்…இங்கு பல பல பல பல… மேசைகள்.

அங்கிருந்து விஜிலென்ஸ்க்கு என்கொயரிக்கு அனுப்ப, விஜிலென்ஸ், என் ஹிஸ்டரி, ஜியாக்ரபி, பிலாசபி எல்லாம் விசாரிச்சு, ‘போலாம்..போலாம் …ரைட் ‘னு கடிதம் கொடுத்த பிறகு இயக்குநர் கையழுத்தாகி அந்த NOC நம்மிடம் வரும்போது, நாம் அல்லாடி, அல்லாடி ஒரு ஜென் நிலைக்குப் போயிருப்போம். அத்தனை சாங்கியங்களும் முடிந்து, NOC நம் கைக்கு வந்தால் தான் இந்திய எல்லையைத் தாண்ட முடியும். எனது தோழி ஒருவர் மகள் டெலிவரிக்கு US போக அனுமதி கேட்ட கடிதம் சுற்றியலைந்து பேரன் பள்ளிக்கு போகும் வயதில் தான் NOC கிடைத்தது. இதைப்படிக்கும் போது மல்லையாக்களும், நீரவ்களும் உங்கள் மனதில் வந்து போனால் நீங்களும் என் இனமே….

இத்தனை களேபரங்களும் போய்க்கொண்டிருக்கும் போதே ஒருநாள் போன்….” Ms. Ramadevi, we are from American consulate….”

கட்டுரையின் முந்தைய பகுதி இங்கே:

கட்டுரையாளர்

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!