எட்கர் தர்ஸ்டன் என்ற ஐரோப்பிய ஆய்வாளர் தென்னிந்தியாவின் குலங்களும் குடிகளும் என ஏழு தொகுதிகள் கொண்ட ஒரு நூல் எழுதியுள்ளார். தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள இந்நூலில் தென்னிந்தியாவின் அனைத்து சாதிகளையும் பற்றி ஏறக்குறைய மிக விரிவாக எழுதியுள்ளார். அந்நிய தேசத்தில் இருந்து வந்த ஒருவர் சிக்கலான பல முடிச்சுகளைக் கொண்ட நம்முடைய சாதிகளைப் பற்றி, அவற்றின் வரலாறு பற்றி ஏறக்குறைய சரியான புரிதலுடன் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது.

அந்நூலில் தேவரடியார்களைப் பற்றி ஆய்வில், ‘இசை வேளாளர் சமூகத்தைச் சார்ந்த பெண்களும், கைக்கோளர் சமூகத்தைச் சார்ந்த பெண்களுமே தேவரடியார்களாக கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் குடும்பத்திற்கு ஒருவராவது கட்டாயம் கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கிறார்கள். இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள், கோயில்களில் அப்பெண்களுக்கு உதவியாக இருந்ததோடு நட்டுவனார்களாகவும், நாதஸ்வரக் கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்’, எனக் குறிப்பிடுகிறார்.
அவர் அப்புத்தகத்தை எழுதி வெளியிட்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம். அப்பொழுது தேவரடியார் மரபு நடைமுறையில் இருந்த சமயம். தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு நேரில் சென்று பார்த்தும், பல தேவரடியார்களுடன் சந்தித்து உரையாடிய பிறகும் அவர் இம்முடிவை கூறியுள்ளார்.

எட்கர் தர்ஸ்டன், Wikipedia

அதன் பிறகு இருபதாம் நூற்றாண்டு முழுக்க நடைபெற்ற ஆய்வுகளின் மூலமாகவும், தமிழகத்தில் கிடைத்த செப்பேடு, கல்வெட்டுகளின் மூலமாகவும் கிடைத்துள்ள செய்திகளின் அடிப்படையில், தேவரடியார்கள் ஒரு குறிப்பிட்ட குலத்தில் இருந்து நேர்ந்துவிடப்பட்டவர்களாக எண்ண முடியவில்லை. எவ்வாறு பறையர் முதல் பார்ப்பனர் குலத்தைச் சேர்ந்தவர்கள் வரை நாயன்மார்களாகவும், ஆழ்வார்களாகவும் தமிழகத்தில் உருவானார்களோ அப்படியே தேவரடியார்களும் எல்லா சாதியிலும் இருந்து வந்திருக்கிறார்கள்.

குலோத்துங்கச் சோழனின் மனைவி ஏழிசை வல்லபி தேவரடியாராக இருந்தவள். ஆய்குல இளவரசி முருகன்சேந்தியை, பாண்டிய நாட்டின் சிற்றரசன் ஒருவன் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு நிலதானம் செய்துள்ளான். முருகன்சேந்தி பார்த்திபசேகரபுரம் கோயிலின் தேவரடியாராக இருந்தவள். அவளை மணம் செய்து கொண்ட சிற்றரசன் யாதவ குலத்தைச் சேர்ந்தவன். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் மணம் செய்து கொண்டது பரவை நாச்சியார் என்ற திருவாரூர் பதியிலார் மரபில் வந்த தேவரடியாரை. கோழிக்கோட்டின் அரசனான குலசேகர ஆழ்வார் தன் மகள் நீலாதேவியை ஸ்ரீரங்கத்து இறைவனுக்குச் சேவை செய்வதற்காக நேர்ந்துவிட்டிருக்கிறார்.

திருபூவனம் அழகிய பிரான் கோயில் தேவரடியாராக இருந்த பொன்னனையாள் தன்னுடைய கடவுளுக்காக தங்க விக்ரகம் செய்து வழிபட்டதை திருவிளையாடல் புராணம் புகழ்கிறது. ராஜராஜ சோழன் தான் கட்டிய பிரகதீஸ்வரர் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நானூறு தேவரடியார்களை பணியமர்த்தியுள்ளான். விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயரின் மனைவிகளுள் ஒருத்தி சின்னதேவி பதியிலார் குலத்தைச் சேர்ந்தவள்தான்.
தேவரடியார்கள் தமிழகத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட சாதியை சார்ந்தவர்கள் இல்லை என்பதை மேற்கூறிய உதாரணங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

சாதீய பாகுபாடின்றி பலவேறு குலப் பெண்களும் கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கிறார்கள். மாத்தம்மாக்களைப் பற்றி இந்த நூற்றாண்டில்தான் வெளியுலகத்திற்குத் தெரிய வருகிறது. அவர்கள் அருந்ததியர் சமூக மக்கள். இமையம் எழுதிய செடல் நாவலில் வரும் செடல் என்ற பெண் தலித் இனத்தைச் சார்ந்த தேவரடியார்தான். பார்ப்பன, வேளாளர் இனப் பெண்களும் தேவரடியாக்கப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.

எட்கர் தர்ஸ்டன் ஆய்வு செய்த தேவரடியார்களின் இறுதி இருநூறு, முன்னூறு ஆண்டு வரலாற்றில் பெரும்பான்மையோர்கள் இசைவேளாளர் குடும்பத்தில் இருந்து வந்த பெண்களே என்பது வெளிப்படையான உண்மை. தேவரடியார்கள் ஆன்மீக நெறியில் உயர்ந்தவர்களாக அன்று அறியப்பட்டிருந்ததால்தான், சிவாச்சாரியார்களும், அரசர்களும் அப்பெண்களைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள். சமூகத்தில் பக்தி நெறியில் ஈடுபட்டிருந்த அடிகளாருக்கு இருந்த மரியாதையும், சமூக அந்தஸ்தும் தேவரடியார் பெண்களுக்கும் கிடைத்திருக்கிறது. சைவர்களின் தமிழ்வேதம் என போற்றப்படும் தேவாரத்தைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, திருமுறைகளை தொகுக்கும் பணியில் தனக்குப் பெரும் உதவி செய்த ஒரு தேவரடியாரைப் பற்றி, பெயர் சொல்லாமல் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

சாதிய கலப்பில் பிறந்த குழந்தைகளும், சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகளும்கூட தேவரடியார்களாக்கப்பட்டார்கள் என்ற செய்தி இருந்தாலும், இவை போன்று நிராதரவான பெண்களே எப்பொழுதும் நேர்ந்துவிடப்பட்டதில்லை. தேவரடியார்களாக விரும்பும் பெண்கள் இசையிலும் நடனத்திலும் தேர்ந்தவர்களாகவும், மிகப் பெரிய ஆளுமை கொண்டவர்களாகவும் தான் பிற்காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஆன்மீக நெறியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இறைவனுக்கு அருகே இருந்து அவரின் மனைவியாக சேவை செய்வதை பிறவிப் பலனாக கருதியிருக்கிறார்கள்.

பெரிய புராணத்தில் வரும் தேவரடியார்களை பற்றிய வரிகளைப் படிக்கும்போது நம்மால் நிச்சயம் இவ்வுணர்வை பெற முடியும். அரசனே விரும்பி தேவரடியார் பெண் ஒருத்தியை மணக்க விரும்பிக் கேட்டபோது, அவள் கடவுளுக்கு நேர்ந்துவிடப்பட்டவள், அரசனை மணக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் அப்பெண்ணை அனுப்ப மறுக்கிறது. எனவே மிக உயர்ந்த அந்தஸ்து கொண்ட பெண்களும் கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொள்வதை விரும்பி இருக்கிறார்கள்.

Gentoo dancing girls from Madras, displaying jewellery,” a photo by Nicholas and Curths, 1870, sangeethas.wordpress.com

சமூகத்தின் அதிகாரமிக்க அமைப்புகளான சாதியும், பொருளாதார நிலையும் தேவரடியார்களை நேர்ந்து விடுவதில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சாதியைவிடவும், பொருளாதார செல்வாக்கை விடவும் தமிழகத்தின் இடைக்காலத்தில் சைவ, வைணவ நெறிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததை இதன்மூலம் உணரலாம். அரசன், அடிகளார்கள், சாமான்யர்கள் அனைவரும் கோயிலுக்கும் கடவுளுக்கும் முன்னால் ஒரே நிலையில் நிறுத்தப்பட்டிருந்தார்கள். மதத்தை வளர்க்கவும், பிற மதங்கள் தமிழகத்தை அண்டாமல் இருக்கவும், கோயில் வழிபாடுகளை மேம்படுத்தவும் மத நிறுவனங்கள் அரசனையும் அடிகளாரையும், சாமானிய மக்களையும் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கின.

கோயில் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதில் அரசர்கள் மிக ஆர்வம் கொண்டனர். அவர்களின் ஆர்வத்திற்கு ஆகமங்களும், பக்தி இயக்க அடியார்களின் சமயக் கருத்துக்களும் பின்னணியாக அமைந்தன. இறைவனின் எல்லையற்ற ஆற்றல், பேரழகு, திருவிளையாடல்களின் மீது ஆர்வமும், பெரும் நம்பிக்கையும் கொண்டவர்களாக பக்தர்களை அன்றைய சமூகம் உருவாக்கியது. இறைவனின் எல்லையில்லா பேராற்றலால்தான், தங்களால் உண்ணவும், உடுத்தவும், சிந்திக்கவும், நோயின்றி வாழவும், பேரின்பங்களைக் கொண்ட இவ்வுலகின் இன்பங்களை அனுபவிக்கவும் முடிகிறது என்று மக்கள் நம்பினர். தன்னுடைய எல்லையில்லா கருணையினால் ரட்சிக்கும் கடவுளை, தாங்களும் மகிழ்வுறச் செய்ய வேண்டும், அவனின் சிறப்புகளைப் புகழ வேண்டும் என்று பேரவா அக்காலச் சமூகத்தில் பேரெழுச்சியாக உருவாகியது.

அரசர்களுக்குக் கொண்டாடப்பட்ட பிறந்த நாள் மங்கலங்கள், விசேச நாட்கள் அனைத்தும் கடவுளுக்குக் கொண்டாடப்பட்டன. கடவுள்களின் பிறந்த நாள் மங்கலங்கள், உற்சவங்கள், திருவிழாக்கள், விதவிதமான சடங்குகள் கோயில்களில் நடைபெறத் தொடங்கின. அரசனை மகிழ்ச்சிப் படுத்த எவ்வாறு ஆடலும் பாடலும் பயன்பட்டனவோ, அவ்வாறு கடவுளை மகிழ்விக்கவும் கோயிலில் ஆடற்,பாடற் கலைகள் இணைக்கப்பட்டன. பெண்கள் அப்பணிகளைச் செய்ய நேர்ந்துவிடப்பட்டார்கள். சைவமும், வைணவமும் தழைக்க கோயில்கள் வலுப்படுத்தப்பட்ட காலத்தில், தேவரடியார்களே அவற்றின் மூல நாயகிகளாக இருந்தார்கள்.

ஆகம நெறிகள் விக்ரகங்களில் உறையும் கடவுளை இசையாலும், நடனத்தாலும் மகிழ்ச்சியடையச் செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றன. எனவே ஆலய வழிபாட்டில் நடனம் என்பது முக்கிய அம்சமானது. ஒவ்வோர் ஆலயத்திலும் தினசரி வழிபாட்டிற்குப் பின்னர் உடனடியாக துதிப்பாடல்கள் இசைப்பதும், தூய நடனமான நிருத்தியம் நிகழ்த்துதலும் நடைமுறைகளாயின.

Studio portrait of a dancing girl, Madras, c.1890, sangeethas.wordpress.com

அரசன் முதல் ஆண்டி வரை கோயிலை தம் உயிராகக் கருதியதால் கோயில் பணிகள் எல்லாவற்றையும் ஏற்ற இறக்கமின்றி செய்தனர். இறைவனே இசை வடிவமாக இருக்கிறான் என்பது சைவ சமயக் கொள்கை. எனவே கோயிலில் சென்று இசையோடு தோத்திரங்களைப் பாடுவதால் இறைவன் மகிழ்வான் என்று சம்பந்தர் மக்களை ஆற்றுப்படுத்தி உள்ளார். கோயிலில் சென்று அலகிடல், விளக்குப் போடுதல், மலர் தொடுத்து இறைவனுக்குச் சாத்துதல் முதலியவற்றால் உண்டாகும் புண்ணியத்தைவிட, இசையுடன் தோத்திரம் பாடுவது மிக்க புண்ணியத்தைத் தரும் என்று அப்பர் குறிப்பிட்டுள்ளார். கோயில்களில் இசையும் நடனமும் இணைக்கப்பட்டதின் பின்னணியை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இறைவனை மகிழ்விக்க எண்ணிய அடிகளாரின் ஏற்பாட்டினால் பெண்கள் கோயில்களுக்கு தேவரடியார்களாக நேர்ந்துவிடப்படுவது அதிக அளவில் நடக்கத் தொடங்கியது. அரசர்களும் கோயிலின் அங்கமாய் இருந்ததுடன், தங்களின் மதநெறியை வளர்க்க விரும்பியதால் அரசு ஆதரவுடன் இம்முறை நாடு முழுவதும் வீச்சுடன் நடந்திருக்கிறது. தமிழகத்தின் பெரும் கோயில்களுக்கும், சிறு கோயில்களுக்கும் ஏராளமான தேவரடியார்கள் நேர்ந்துவிடப்பட்டார்கள்.

கோயிலுக்கு இருந்த சொத்துக்களில் முதன்மையான சொத்தாக தேவரடியார்களே இருந்துள்ளார்கள். கோயிலில் உள்ள தங்க, வைர, வெள்ளிப் பாத்திரங்கள், ஆபரணங்களைப் போலவே தேவரடியாரும் அக்கோயிலின் உடைமையாகக் கருதப்பட்டுள்ளாள். கோயிலில் உள்ள பாத்திரங்களுக்கு குறியிட்டு பாதுகாப்பதைப் போல, தேவரடியார்களுக்கும் குறியிடப்பட்டிருக்கிறது. சிவன் கோயில் தேவரடியார்களுக்கும் சூலக் குறியும், வைணவக் கோயில் தேவரடியார்களுக்கு சங்கு அல்லது சக்ராயுத முத்திரையும் இடப் பட்டிருக்கிறது. கோயிலின் உடைமையாக அப்பெண் நேர்ந்துவிடப்பட்டவள் என்பதற்கு இம்முத்திரைகளே ஆதாரம்.

ஒரு பெண் கோயிலுக்கு எவ்வாறு நேர்ந்துவிடப்பட்டாள்…அப்பொழுது என்னென்ன சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன…எந்த வயதில் தேவரடியாக்கப்பட்டாள்…என்பதை இனி பார்ப்போம்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதிகளை இங்கே வாசிக்கலாம்:

கட்டுரையாளர்

அ. வெண்ணிலா

கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல், தொகுப்பாக்கம் எனப் பரந்துவிரிந்த இலக்கியப் பயணம் இவருடையது. ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.